சிற்றிதழ்களை ஏன் படிக்க வேண்டும்..? மே 7, 2009
Posted by மு.வி.நந்தினி in உன்னதம், சிற்றிதழ் அறிமுகம், புதுவிசை.Tags: இந்துத்துவம், உன்னதம், சாதியின் அரசியல், சிற்றிதழ், சிற்றிதழ் அறிமுகம், தலித்தியம், நடராசா சுசீந்திரன், புதுவிசை, பெண்ணியம்
10 comments
வெகுஜன பத்திரிகைகள் மூலமாகத்தான் எனக்கு சிற்றிதழ்கள் அறிமுகமானது. கல்லூரி படிப்பை முடிக்கும் வரையில் பெயர்களை மட்டுமே அறிந்து வைத்திருந்தேன். தினமணி இதழில் சில நாள் பயிற்சியின் நண்பனாகிப்போன தனபால் சிங், புக்லேண்ட்டுக்கு அழைத்துப்போய் சிற்றிதழ் உலகத்தை காண்பித்தவன். தொடக்க காலங்களில் சிற்றிதழ்கள் படிக்கும்போது என்ன இப்படியெல்லாம் எழுதுகிறார்கள் என்று தோன்றியதுண்டு. (ஆரம்பகால சிற்றிதழ் வாசகர் அத்தனை பேருக்கும் இந்த அனுபவம் இருக்கும் என நினைக்கிறேன்) பிறகு படிக்கப்படிக்க எண்ணத்தில் தெளிவு வந்தது. நான் பத்திரிகை பணியை ஆரம்பித்தது பெண்கள் பத்திரிகை நிருபராகத்தான். அப்போது என்னுடைய சிற்றிதழ் படிக்கும் பழக்கம் சக ஊழியர்களிடையே கேலிக்குரிய விஷயமாக இருந்தது. சமையல் குறிப்பு எழுதுவதற்கு எதற்கு இலக்கியம் படிக்க வேண்டும்? மற்றவர்கள் குறித்து எனக்குத் தெரியாது… என்னுடைய எழுத்தும் சிந்தனையும் மேம்பட்டதற்கு சிற்றிதழ்களின் பங்கு கணிசமானது.
சில வருடங்களுக்கு முன்பு பல நல்ல படைப்புகளைத் தாங்கி வந்த சிறுபத்திரிகைகள், இன்று இடைநிலை பத்திரிகைகளாக வளர்ந்துள்ளன. வரவேற்கத் தகுந்த மாற்றம்தான் எனினும் இந்த பத்திரிகைகள் சில சமயம், ஆங்கில பதிப்பகங்கள் மாதந்தோறும் வெளியிடும் புக்லெட்டுகளைப் போல இருக்கின்றன். இந்த பத்திரிகையில் இன்னின்னார்தான் எழுதுவார் என ஆரம்ப கட்ட வாசகனுக்கும் புரிந்துவிடும் அளவுக்கு, திரும்பதிரும்ப ஒருசிலரே எழுதுகிறார். பத்திரிகைகளே பதிப்பகம் நடத்துவது காரணமாக இருந்தாலும் ஒரே வகையான எழுத்துகளைப் படிக்க அலுப்புத் தட்டுகிறது. சில இதழ்களை படிப்பதையே நிறுத்திவிட்டேன்.
இடைநிலை விட்ட இடத்தை நிரப்பும் விதமாக புதுவிசை, உன்னதம் போன்ற இதழ்கள் காத்திரமான பொருட்செறிவுடன் வருகின்றன. தலித்தியம், பெண்ணியம், மொழிபெயர்ப்பு, புதிய எழுத்தாளர்களின் படைப்புகள் என எதிர்பார்ப்புகள் வீண்போகாத அளவுக்கு விஷயங்களைத் தாங்கி வருகின்றன. இதுபோன்ற இதழ்களுக்கு பொருளாதார பின்புலம் என்று சொல்லிக்கொள்ள பெரிதாக ஒன்றுமில்லை என்பது குறிப்பிடத்தகுந்தது. உன்னதம் இதழைக் கொண்டுவர கெளதமசித்தார்த்தன் நிலங்களை விற்றுவிட்டதாக கேள்வி. ஆதவன்தீட்சண்யாவும் தன் கைகாசிலேயே செய்கிறார், சில சமயம் நண்பர்கள் உதவக்கூடும். புதுவிசை காலாண்டு இதழாக வந்து கொண்டிருக்கிறது. உன்னதம் பண இருப்பைப் பொறுத்து…
இந்த இதழ் உன்னதம் (ஏப்ரல் 09) சாதியும் அரசியலும் சிறப்பு இதழாக வந்திருக்கிறது. சாதி குறித்த தற்கால இருப்பை அறிந்து கொள்ள படித்தாகவேண்டிய இதழ்.
உன்னதம்ஆலந்தூர் அஞ்சல்
கவுந்தப்பாடி-638455
ஈரோடு மாவட்டம்
புதுவிசை (ஏப்ரல் – ஜூன் 09) நடராசா சுசீந்திரனின் விரிவான நேர்காணலும் கோ.ரகுபதி எழுதிய தலித் மீதான வன்முறையில் இந்துத்துவம் என்ற கட்டுரையும் முக்கியமானவை.
புதுவிசை
பி-2 டெலிகாம் குடியிருப்பு
ஓசூர்-635109
தொலைபேசி: 04344 244933
நண்பர் ஜூலியனுக்கும் தமிழ்மணத்திற்கும் மே 3, 2009
Posted by மு.வி.நந்தினி in Uncategorized.8 comments
நண்பர் ஜூலியன், உங்களுக்கு என்மேல் அப்படியன்ன பகையோ தெரியவில்லை…தொடர்ந்து நான் செய்ததற்கு, செய்யாததற்கு நீங்களாக அர்த்தம் கற்பித்து எழுதிக்கொண்டிருக்கிறீர்கள். நேற்று உங்களுடைய பதிவிற்கு ஒரு பின்னூட்டம் இட்டேன்.
“நண்பரே, என்னுடைய பதிவு நீக்கப்பட்டிருக்கிறது. பின்னூட்டம் போடவும் முடியவில்லை. இதற்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை. நடுவில் இரண்டு நாட்களாக இணைய இணைப்பு வேறு இல்லை. பின்னூட்டத்தை அனுமதிப்பதில் தாமதம் ஏற்பட்டிருக்கலாம். ஒரே ஒரு பின்னூட்டத்தை தவிர எனக்கு வந்த எல்லா பின்னூட்டங்களையும் தான் அனுமதித்திருக்கிறேன். உங்களுடைய கருத்திலிருந்து வேறுபடுகிறேன் என்பதற்காக என்னை தனிப்பட்ட முறையில் ஏன் தாக்குகிறீர்கள்?”
இந்த பின்னூட்டத்தை நீங்கள் அனுமதிக்கவில்லையா? அல்லது நான் பின்னூட்டமிட்ட முறை சரியில்லையா? (பிளாக்கரில் பின்னூட்டமிடுவது சற்றே புரியாமல் இருக்கிறது) இன்னொன்றும் தெளிவுபடுத்துகிறேன் என் பெயரில்தான் பின்னூட்டம் இட்டேன். அனானி, புனைபெயரில் எழுதுவது எனக்கு உவப்பாகாத விஷயம். அதனாலேயே என் பெயரில் எழுதுகிறேன். யாரோ ஒருவர் பின்னூட்டமிட்டதற்கு நான் பொறுப்பாக முடியாது. என்னுடைய புறச்சூழல் காரணமாகவே என்னால் எல்லா பின்னூட்டங்களுக்கும் பதிலளிக்க முடியவில்லை. எனக்கும் ஆனந்த விகடனுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை. அவர்களுடைய பெயரை தேவையில்லாமல் இழுக்க வேண்டாம். என்னைத்தான் தாக்குகிறீர்கள் என்றால் தொடர்புள்ளதாகக் கூறிக்கொண்டு அவர்களை ஏன் தாக்குகிறீர்கள்? என்னுடைய பதிவுக்கான எதிர்வினை என்பது போய் முழுக்க முழுக்க என்னைப்பற்றிய தனிப்பட்ட தாக்குதலில் நீங்களும் உங்கள் பதிவுக்கு பின்னூட்டமிடும் சிலரும் இறங்கியிருக்கிறீர்கள். நண்பர்களே நீங்கள் நினைப்பதுபோல் எவ்வித பக்கபலமும் எனக்கில்லை. தயவு செய்து உங்களுடைய அர்த்தமற்ற தாக்குதல்களை நிறுத்துங்கள். மாற்றுக்கருத்துக்களை நான் விரும்புகிறேன், வரவேற்கிறேன்.
தமிழ்மணத்திற்கு,உங்களுடைய கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டே என்னுடைய பதிவை நீக்கியிருக்கிறீர்கள் என்று நினைத்துத்தான் அப்படி எழுதினேன். கோபத்துடனோ வருத்தத்துடனோ எழுதவில்லை. உங்களுடைய முடிவுகளுக்கு கட்டுப்படுகிறேன் என்ற அடிப்படையில் எழுதப்பட்டது. நீங்கள் நீக்கவில்லை எனில் ‘தமிழ்மணம் நீக்கியது‘ என்று எழுதியதற்காக மன்னிப்புக்கேட்பதில் எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை. நட்சத்திர அழைப்பை ஏற்றுக்கொள்ளும் எல்லாவற்றுக்கும் நானேதான் பொறுப்பாக முடியும். உங்கள் மீது எந்த அவதூறையும் எழுதும் எண்ணம் இல்லை. ஏனெனில் தமிழ்மணத்தின் மூலம் அடைந்த அறிதல் ரீதியாக பலன்கள் நிறைய. பின்னூட்டமிடும் அனானி நண்பர்களுக்கு,
‘நீ எனக்கு இதை செய்துவிட்டாயா.. உன்னை எழுதிக்கிழிக்கிறேன் பார்!’ என்று மிரட்டிப் பிழைக்கும் பத்திரிகையாளர் அல்ல நான். அது என்னை அறிந்த அனைவருக்கும் தெரியும். குற்றம் சொல்வதனாலும் பொருத்தமாக சொல்லுங்கள்.
இறுதியாக… நன்றி! மே 2, 2009
Posted by மு.வி.நந்தினி in ஊடகம்.Tags: ஊடகம்
10 comments
நான் வலைத்தளத்தில் எழுத ஆரம்பித்தது எனக்காக மட்டுமே. எந்வொரு ஊடகத்திலும் குறிப்பிட்ட அந்த ஊடகத்தின் கருத்துக்கும் சட்ட திட்டங்களுக்கும் கட்டுப்பட்டே எழுத வேண்டி இருக்கிறது. அது இங்கே இருக்காது என்பதாலேயே தொடர்ந்தேன். தமிழ்மணமும் ஒரு ஊடக நிறுவனமே என்பது எனக்கு இப்போதுதான் தெரிந்தது. குறைந்தபட்சம் முன் அறிவிப்பை கொடுத்துவிட்டாவது என்னுடைய பதிவை நீக்கியிருக்கலாம். எனினும் என்னை நட்சத்திர பதிவராக தேர்ந்தெடுத்தமைக்கு நான் நிறைவான நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மன்னிப்பு கோருகிறேன்… மே 1, 2009
Posted by மு.வி.நந்தினி in மன்னிப்பு.Tags: மன்னிப்பு
9 comments
நட்சத்திர பதிவராக குறைந்தபட்சம் தினம் ஒரு பதிவாவது எழுத வேண்டும் திட்டமிட்டிருந்தேன். புறச்சூழல் பிரச்சினைகள் ஒன்று மாற்றி ஒன்றாகக்கூடிக்கொண்டே இருக்கின்றன. நான் குடியிருக்கும் வீட்டு உரிமையாளருக்கும் இந்த நேரத்தில்தான் வீட்டுக்கு வண்ணம் பூச தோன்றியிருக்கிறது. குப்பைகளுக்கு நடுவே வாழ்வதுபோல இருக்கிறது இரண்டு வாரங்களாக. வீட்டில் உள்ள நாங்கள் சீக்காலிகளாகியும் உரிமையாளர் மனமிறங்கி வேலைகளை தூரிதப்படுத்தாமல் இருக்கிறார். நடுவே தோழியின் திருமணத்திற்காக சுற்றியது… எல்லாவற்றுக்கும் மேலாக இரண்டு நாட்களாக இணைய இணைப்பு தூண்டிக்கப்பட்டிருக்கிறது.நாளைக்காவது பிரச்சினையை சரிசெய்து விடுவார்கள் என நினைத்து,இப்போது இன்டர் நெட் சென்டரிலிருந்து எழுதிக்கொண்டிருக்கிறேன். என்னிடமிருந்து புதிய பதிவுகளை எதிர்பார்த்திருந்த, எதிர்பார்க்கும் நண்பர்களிடம் மன்னிப்பு கோருகிறேன்.
இலங்கை தமிழர் பிரச்சினையில் இந்திய தமிழர்களின் சாகச மனோநிலை மே 1, 2009
Posted by மு.வி.நந்தினி in ஆயுதப் போராட்டம், இன உணர்வு, இலங்கை தமிழர், ஊடகம், போர்ச்சூழல், விடுதலைப் புலிகள்.Tags: இன உணர்வு, இலங்கை தமிழர், ஊடகம்
add a comment
“குடிக்கத் தண்ணி வேணும்“ என்று இறைஞ்சிய அந்தப் பெரியவரின் முகம் இன்னும் எனக்கு நினைவிலிருக்கிறது. வேகு நேரம் முன்வாசல் கதவுகளைத் தட்டிக்கொண்டிருந்தவருக்கு அந்த வீட்டினர் வேண்டா வெறுப்பாக தண்ணீர் கொடுத்ததற்கும் அவர் சென்று பின் ‘வீட்டை நோட்டம் வீட்டுப்போய் திருட வருவார்கள்‘ என தகவல் சொன்னதற்கும் காரணம் இருந்தது. அவர் இலங்கை தமிழர் என்பதுதான் அந்தக்காரணம். சணல் பையை தோல்களில் மாட்டி நிராதரவாதிக்கான அத்தனை தகுதியோடும் முகாமில் அரசாங்கம் தரும் அரிசியை வாங்கக் கிளம்பிக்கொண்டிருந்த இலங்கை தமிழனை ‘திருடன்‘ என முத்திரையிட்டது இந்திய(?) தமிழன்..100 சதவீதம் சுத்த தமிழ் ரத்தத்தில் பிறந்த தமிழன்! இது நானே நேரில் கண்டது. இலங்கை அகதிகளாக இங்கே தஞ்சம் புகுந்திருக்கும் தமிழர்கள் குறித்தான கண்ணோட்டம் இப்படித்தான் இருக்கிறது. பல்வேறு ஊடகங்களில் தாங்கள் இம்மண்ணில் பட்ட அவமானங்களை அவமதிப்புகளை அகதி முகாமில் இருக்கும் தமிழர்கள் பதிவு செய்திருக்கிறார்கள். அகதி முகாம்களில் இல்லாது தனியாக வீடு எடுத்து தங்கியிருக்கும் சற்றே வசதி படைத்த இலங்கை தமிழர்கள் மீது இந்த கண்ணோட்டம் இல்லை. இலங்கை போரால் மாய்பவர்களும், மாய்வதை மறுத்து அகதியாகவாவது பிழைத்துக் கொள்ளலாம் என திருட்டுப் படகு ஏறுபவர்களும் யார்? விமானத்தில் பறக்க காசில்லாதவர்கள், வறியவர்கள். பொருளாதார பின்புலம் மிக்கவர்கள் வெளிநாடுகளுக்குப் பயணப்பட்டு கடைநிலை மக்களாகவேனும் வாழ்க்கையை நடத்துகிற சூழல் வாய்த்திருக்கிறது, சில ஆண்டுகள் உழைத்தால் வசதிகள், மதிப்புகளும் தேடிவருகின்றன. ஆனால் வறியவர்களின் நிலை என்ன? உறவுகளையும் உடைமைகளையும் இழந்து ஏதுமற்றமற்றவர்களாக இறுதிவரை போரிட்டு உங்களுக்கு தனி ஈழம் பெற்றுத்தருவார்கள் நீங்கள் தமிழர் என்று சொல்லிக்கொண்டு, இந்தியாவிலும் புலம் பெயர்ந்த இடங்களிலும் கேக் வெட்டிக் கொண்டாடுவீர்கள்? இலங்கை தமிழருக்கு ஆதரவு என்ற பெயரில் விடுதலைப் புலிகளுக்கு புழக்கடை வழியாக பண உதவி செய்துகொண்டு புலம்பெயர் நாடுகளில் வாழம் எத்தனைப் பேர் தங்கள் வாரிசுகளை ஆயுதம் தூக்கிப் போராட அனுப்பி வைப்பீர்கள்? வாய்க்கிழிய வீர வசனம் பேசுகிற இந்திய தமிழர்களாகிய நீங்கள், திருட்டுப் படகு ஏறிப்போய் இலங்கை ராணுவத்துடன் நேருக்கு நேர் போரிட வேண்டியதுதானே? இவ்வளவு பேசுகிற நீங்கள் அகதிகளாக இந்தியாவுக்கு வரும் இலங்கைத் தமிழரை எப்படி நடத்துகிறீர்கள்? போர்ச்சூழலில் கணவனை இழந்து கைம்பெண்களாகவும் பெற்றோரை இழந்து அநாதைகளாய் நிற்கும் குழந்தைகளை நீங்கள் நினைத்துப்பார்த்ததுண்டா? குறைந்தபட்சம் அகதி முகாம்களுக்காவது சென்றதுண்டா? இலங்கையில் நடந்துகொண்டிருக்கும் போர் நூற்றாண்டை எட்டினாலும்கூட பரவாயில்லை என்னும் தோணியில் வெளிப்படும் சிலரின் கருத்துகள் ஆழ்மன வன்மைத்தான் காட்டுகின்றன. இதற்கு தமிழ் இன உணர்வு என முலாம் பூசுவது வறியர்களை சுரண்டிப் பிழைக்கும் ஈனச் செயலன்றி வேறில்லை. 37 முத்துக்குமாரர்களின் தற்கொலைக்கு காரணமானதும் இதுதான்.
? அப்பாவித் தமிழர்களை கேடயமாகப் பயன்படுத்துவதும், மீறிச் செல்பவர்களை இரக்கமில்லாமல் சுட்டுக்கொல்வதும் இன சுத்திகரிப்புச் செயலா? இதையெல்லாம் மறைத்துவிட்டு நீங்கள் யாருக்காக போரை நிறுத்து என்று கூவிக்கொண்டிருக்கிறீர்கள்? தமிழ் ஊடகங்களில் இத்தகைய வமர்சனங்கள் வெளிவற வாய்ப்பே இல்லை. புலிகள் ஆதரவு இணைய தளங்கள் கொடுக்கும் செய்திதான் இவர்களுடைய செய்தி மூலங்கள். பிறகு எப்படி நியாயமான செய்திகள் தெரிய வரும்? ‘நேற்று நடந்த சண்டையில் 50 புலிகள் இறந்துவிட்டனர்‘ என்கிற செய்தி பலரை தூக்கி வாரிப்போடுகிறது. உடனே செய்தி வெளியிட்ட ஊடகத்திடம் எப்படி நீங்கள் இந்த செய்தியை வெளியிடலாம் என்கிறார்கள். சமீபத்தில் புலிகள் ஆயுதங்களை கீழே போட்டு அமைதிப்பேச்சுக்கு வரவேண்டும் என்று அமெரிக்கா விட்டிருந்த அறிக்கையை வெளியிட்டதற்காக குறிப்பிட்ட அந்த ஊடகத்திற்கு தமிழகத்தின் மூத்த புலிகள் ஆதரவாளரிடமிருந்து தொலைபேசி அழைப்பு போயிருக்கிறது. இந்த ஆதரவாளர்களின் நிலையெல்லாம் புலிகள் பலியாகிறார்களே என்கிற கரிசனம் அல்ல.. புலிகள் இல்லையென்றால் ஒட்டுமொத்த போராட்டமே இல்லை, புலிகள் எந்த நிலையிலும் தங்கள் நிலையை விட்டு கீழிறங்கி வரக்கூடாது என்று இவர்களாக கட்டமைக்கும் ஹீரோயிசம்தான் பின்னணி காரணங்கள். இலங்கையில் ஆயுதம் தாங்கிய போராட்டம் 1970க்கு முன்பிருந்தே நடந்துகொண்டிருக்கிறது. 1970களுக்குப் பிறகு பெரிய அளவில் பரவியது என ஈழப்போராட்த்தின் முன்னோடிகளில் ஒருவரான, மறைந்த சி.புஷ்பராஜா பதிவு செய்திருக்கிறார். சக போராளிக்குழுக்களை எப்படி திட்டமிட்டு விடுதலைப் புலிகள் அழித்தார்கள் என்பதையும் சி.புஷ்பராஜா தன்னுடைய ஈழப்போராட்டத்தில் எனது சாட்சியம் என்ற நூலில் விரிவாகவே பேசியிருக்கிறார்.
என்னுடைய நோக்கம் விடுதலைப் புலிகளை விமர்சிப்பதல்ல, அதற்கான நேரமும் இதுவல்ல என்று எனக்குத் தெரியும். வெறுமனே போர் நிறுத்தத்தை மட்டுமே எத்தனை காலத்துக்கு பேசுவீர்கள் என்ற ஆதங்கத்தின் அடிப்படையிலே நிரந்தர அமைதிக்கான வழிகள் குறித்து பேசுங்கள் என எழுதினேன். உலகில் நடக்கும் எந்தவொரு போராட்டத்தையும் மற்றொரு போராட்டத்துடன் ஒப்பிட முடியாது. நேளாப சூழலுடன் இலங்கை சூழலை ஒப்பிடவில்லை. அதிலிருந்து கற்க விஷயங்கள் உண்டு என்பதையே வலியுறுத்துகிறேன். புதிய புத்தகம் பேசுது இதழுக்கு அளித்த நேர்காணலில் அ.மார்க்ஸ் இதை தெளிவாக சொல்லியிருக்கிறார். கீற்றுவில் வெளியான அவருடைய நேர்காணலைப் படிக்க இங்கே சொடுக்கவும்.
. உங்கள் சாகச மனோநிலைக்கு இன்னும் பல அப்பாவிகளை பலியாக்க விரும்புகிறீர்கள். ஈழத்தமிழர்களின் அடிப்படை மனிதாபிமான பிரச்சினைகளை ஏன் பார்க்க மறுக்கிறீர்கள்? இனப்படுகொலையைவிட இதுதான் கொடியது!
இறுதியாக…எனக்கும் போதாமைகள் இருக்கலாம். ஆனால் அடிப்படைக்கூட தெரியாமல் எழுத எப்போதும் நான் முயற்சித்தது கிடையாது. தெரியாத விஷயங்களை எழுதுவதும் கிடையாது. தமிழனாக அல்லது இலங்கை தமிழனாக பிறந்து வாழந்தால் மட்டுமே இலங்கை தமிழர் பிரச்சினை குறித்து பேச தகுதியாக நீங்கள் வரையறுத்து வைத்திருக்கலாம். ஆனால் பேசுவது மனிதாபிமான அடிப்படையில். அதற்கு மனிதன் என்பதைவிட வேறு எந்த தகுதிகளும் தேவையில்லை!