jump to navigation

“ஆங்கிலத்தில் எழுதியிருந்தால் நோபல் பரிசு கிடைத்திருக்கும்!” – அசோகமித்திரன் மே 21, 2010

Posted by மு.வி.நந்தினி in அசோகமித்திரன், இந்துத்துவம், ஊடகம், சாதி.
Tags:
25 comments

அப்போது எனக்கு இலக்கியத்தின் மீது பேரார்வம். தேடித்தேடி இலக்கியங்களை வாசித்துக்கொண்டிருந்தேன். பத்திரிகை தொழில் காரணமாக இலக்கியத்தின் மீது ஆர்வம் வந்ததா? அல்லது இலக்கிய ஆர்வத்தை என் தொழிலுக்கு பயன்படுத்திக் கொண்டேனா? எனத் தெரியவில்லை. ஆனால் இலக்கியம் படிப்பதையும், அதைப் பற்றி எழுதுவதையும் மிகவும் விரும்பியே செய்தேன். ஆரம்ப நிலை வாசகி என்பதால் எழுத்தாளர்களைத் தேடிப் போவதும் விருப்பமாய் இருந்தது. எழுத்துக்கும் நிஜத்துக்கும் நிறைய வித்தியாசங்களை பலரிடம் கண்டேன். உடைந்த பிம்பங்கள் குறித்து எனக்கு வருத்தமும் இல்லை, வியப்பும் இல்லை! நானும் என்னுடன் வந்திருந்த புகைப்படக்காரரும் என்ன ஜாதி என்று அசோகமித்திரன் கேட்டதையும் அதே மனநிலையில் தான் எதிர்கொண்டேன். சில கட்டுரைகள், சில சிறுகதைகள் தவிர அசோகமித்திரனை அதிகம் படித்ததில்லை. கட்டாயம் படிக்கவேண்டும் என்று வாங்கி வைத்திருக்கும் அவருடைய நாவல்கள், சிறுகதைகள் தொகுப்புகள் புரட்டப்படாமல் கிடக்கின்றன. அந்த புத்தகங்களைப் பார்க்கும்போதெல்லாம் நான் பிறந்த கிராமத்தில் வீட்டுக்குள் எங்களை அனுமதிக்காத லிங்காயத்து ‘சாமி’களை, அசோகமித்திரன் நினைவு படுத்திக்கொண்டே இருக்கிறார். பிரபல பத்திரிகை ஒன்றில் பணியாற்றியபோது எடுத்த பேட்டி இது. சுவாரஸ்ய குறைவு காரணமாக பேட்டி பிரசுரமாகவில்லை. பேட்டியில் சுவாரஸ்யத்தைக் கூட்டச் சொல்லி ஆசிரியர் குழு பலமுறை சொல்லியும் அதை செயல்படுத்த முடியாமைக்கான காரணங்களில் என் ஜாதி குறித்த அசோகமித்திரனின் கேள்விக்கு நிச்சயம் இடம் உண்டு. பழைய காகிதங்களுக்கு நடுவே இருந்த இந்த பேட்டியை கீழித்துப் போட மனம் வரவில்லை. பிரசுரிக்கிறேன்…

”முதுமையை என்னால் கொண்டாட முடியவில்லை. இறக்கி வைக்க முடியாத மாபெரும் சுமையாக இருக்கிறது. அதை இறக்கி வைக்கும் காலத்தைத்தான் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்” என்கிறார் அசோகமித்திரன். அறிமுகம் தேவையில்லாத தமிழ் இலக்கிய உலகின் மூத்த ஆளுமை.

”என்னுடைய இளமை பருவத்தில் செகந்திராபாத்திலிருந்து சென்னை வந்தேன். ஜெமினி ஸ்டுடியோவில் மக்கள் தொடர்பு அதிகாரியாக வேலை. அப்போதிருந்தே எழுதிக்கொண்டிருக்கிறேன். நாடகத்தின் முடிவு நான் எழுதிய முதல் சிறுகதை. அந்த வேலையிலிருந்து விலகி முழு நேர எழுத்தாளனாகி அரை நூற்றாண்டுக்கும் மேலாகிவிட்டது. இடையே இருபத்தி மூன்று ஆண்டுகள் கணையாழி ஆசிரியராக இருந்தேன். எல்லாமே அனுபவம்தான். வாழ்க்கையில் எல்லாவிதமான அனுபவங்களையும் கடந்துவர வேண்டியிருக்கிறது. அந்த அனுபவங்களே படைப்புகளாகின்றன”

”தமிழ் இலக்கிய சூழல் தற்போது எப்படியுள்ளது?”

”தமிழ் ஜொலிக்கிற காலம் இது. நிறைய படைப்பாளிகள் எழுத வந்திருக்கிறார்கள். நிறைய புத்தகங்கள் வெளிவருகின்றன. என்னால் முடிந்தவரை எல்லா படைப்பாளிகளையும் படைப்புகளையும் வாசிக்கிறேன். ஒரு காலத்தில் தீவிர எழுத்தை சிற்றிதழ்களில்தான் பார்க்க முடியும். இன்று வெகுஜன பத்திரிகைளே தீவிர எழுத்துக்களை தேடிப்பிடித்து பிரசுரிக்கின்றன. சிற்றிதழ்களின் தேவையும் குறைந்துவிட்டதாகவே தோன்றுகிறது. நிறைய படைப்புகள் வெளிவந்தாலும் சமகாலத்தில் ஒரு படைப்பு சிறந்தது என்று சொல்லிவிட முடியாது. அப்படி கொண்டாடப்பட்ட எத்தனையோ படைப்புகள் காலப்போக்கில் காணாமல் போயிருக்கின்றன. கல்கி எழுதிய போது இதெல்லாம் எழுத்தா என்ற கடுமையான விமர்சனம் வைக்கப்பட்டிருக்கிறது. இன்று அவருடைய எழுத்து கொண்டாடப்படுகிறது. அதனால் ஒரு படைப்பு சிறந்ததா? இல்லையா? என்பதை பத்து, இருபது வருடங்கள் கழித்துதான் தெரிந்துகொள்ள முடியும்”

”சமீப காலங்களில் நீங்கள் எதைப்பற்றி பேசினாலும் அது சர்ச்சைக்குரியதாகிறதே?”

”நிஜத்தை பதிவு செய்வதில் எனக்கு விருப்பம் அதிகம். எழுத்தைப் போலவே தான் நானும் நிஜமாகவே இருக்க விரும்புகிறேன். எனக்கு இறை நம்பிக்கை உண்டு. மனிதர்களிடம் பகிர்ந்துகொள்ள முடியாத மனக்கஷ்டங்களை கடவுளிடம் மட்டுமே பகிர்ந்துகொள்ள முடியும் என்று திடமாக நம்புகிறேன். இதில் எந்தவித போலித்தனத்தையும் காட்டவில்லை. அதுபோலவே சில சமயம் எதார்த்தமாக சொல்லிப்போகிற வார்த்தைகள் சர்ச்சைகள் ஆகிவிடுகின்றன. ஒரு கலைஞன் மீது சொல்லப்படுகிற இப்படிப்பட்ட அவதூறுகள் எவ்வளவு தூரம் அந்த கலைஞனையும் அவனுடைய குடும்பத்தையும் பாதிக்கிறது என்பது பற்றி யாரும் கவலைப்படுவதில்லை. ஆனாலும் இந்த அவதூறுகள் எல்லாம் உண்மையான வாசகனையோ, படைப்பையோ ஒருபோதும் பாதிப்பதில்லை.”

”ஆங்கிலத்தில் எழுத ஆரம்பித்தவர் நீங்கள். அதை விட்டுவிட்டு தமிழிலேயே தொடர்ந்து இயங்குவது பற்றி வருத்தம் உண்டா?”

”தமிழின் வசீகரம் என்னை ஆட்கொண்டதால் ஆங்கிலத்தில் எழுதுவதை விட்டுவிட்டேன். ஒரு முறை வி.எஸ்.நைபால் என்னிடம் பேசிக்கொண்டிருந்தபோது ஆங்கிலத்தில் தொடர்ந்து எழுதியிருந்தீர்களானால் நிச்சயமாக உங்களுக்கும் நோபல் பரிசு கிடைத்திருக்கும் என்றார். ஆனால் எனக்கு தமிழில் எழுதுவதில் வருத்தம் ஒன்றும் இல்லை. எழுத்தை மட்டுமே பார்த்துக்கொண்டிருந்ததால் குடும்பத்தை சரியாக கவனிக்க முடியவில்லை என்கிற மனக்குறை இப்போது அழுத்துகிறது. சில தீர்க்கமான முடிவுகளை நான் எந்தவித பலாபலன்களையும் எதிர்பார்க்காமல்தான் எடுக்கிறேன்.”

படங்கள் நன்றி : அவுட்லுக்

“நாங்கள் (பார்ப்பனர்கள்) யூதர்களைப் போல் வாழ்கிறோம்” என்கிற அசோகமித்திரனின் அவுட்லுக் கட்டுரைக்காக போடப்பட்ட சித்திரங்கள் இவை.

சோதனை எலிகளாக்கப்படும் பழங்குடியினப் பெண்கள் மார்ச் 31, 2010

Posted by மு.வி.நந்தினி in அரசியல், கர்ப்பப்பை வாய் புற்றுநோய், சமூகம், டாக்டர் டயானா ஹார்ப்பர், பழங்குடிகள், பழங்குடியினப் பெண்கள், மருத்துவ மோசடி.
Tags: , , ,
7 comments

‘உங்கள் வீட்டு 14 வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகளுக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் வராமல் இருக்க தடுப்பு மருந்து கொடுங்கள்’ என சில மாதங்களுக்கு முன் ரேவதி உள்ளிட்ட முன்னாள் நடிகைகள் ஒரு தொண்டு நிறுவனம் தயாரித்த விளம்பரத்தில் பிரச்சாரம் செய்தது நினைவில் இருக்கலாம். கர்ப்பப்பை வாய் புற்றுநோய் போன்ற ஆட்கொல்லி நோய்கள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த இத்தகைய பிரச்சாரங்கள் உதவலாம். ஆனால் இவற்றுக்கு இன்னொரு புறம் இருப்பதையும் நாம் கருத்தில் கொள்ளத்தான் வேண்டும்.

‘நோய் வருவதற்கு உண்டான காரணங்களை கண்டறிந்து அவற்றை களைவதற்கு நடவடிக்கை எடுக்காமல், தடுப்பு மருந்துகளை பயன்படுத்துங்கள் என்கிற பிரச்சாரங்கள் மருந்து நிறுவனங்களின் பணப்பையை நிரப்புவதற்காக செய்யப்படுபவை’ என்பது மக்கள் நலனில் அக்கறை கொண்ட மருத்துவர்களின் கருத்தாக இருக்கிறது. இந்த கருத்துக்கு வலு சேர்க்கும் வகையில் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பு மருந்து பற்றி ஒரு பகீர் சர்ச்சை கிளம்பியிருக்கிறது. ஆந்திராவில் சோதனைக்காக கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பு மருந்தை உட்கொண்ட மூன்று இளம்பெண்கள் உயிரிழந்திருக்கிறார். உயிரிழந்த இந்த மூவரும் பழங்குடி இன பெண்கள். இன்னொரு தகவல் என்னவென்றால் ஆந்திரா மற்றும் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த 30 ஆயிரம் பழங்குடி பெண்களுக்கு சோதனை ரீதியில் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பு மருந்து கொடுத்திருக்கிறார்கள். இந்த பெண்கள் இறந்ததற்கான காரணம் தடுப்பு மருந்தை உட்கொண்டதுதான் என்று தெள்ளத்தெளிவாக போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட் சொல்லியிருக்கிறது. வழக்கம் போல ஆந்திர காவல் மற்றும் சுகாதாரத்துறை மூன்று பெண்களும் தற்கொலை செய்துகொண்டார் என அறிக்கை (டெக்கான் கிரானிக்கல் செய்தி) விட்டு, சம்பவத்தை மூடிமறைத்துவிட்டார்கள்.

இந்திய அரசு, பழங்குடி மக்கள் மேல் ஆபரேஷன் கிரீன் ஹண்டில் இறங்கியிருக்க, மற்றொரு புறம் பன்னாட்டு மருந்து நிறுவனங்கள் பழங்குடி பெண்களை சோதனை எலிகளாக்கி இருக்கின்றன. இந்த மருத்துவ அத்துமீறலை எமக்கு தெரியப்படுத்தியவர் மருத்துவர் வீ. புகழேந்தி. கல்பாக்கம் அணுமின் நிலையத்தால் ஏற்படுத் கதிர்வீச்சு அபாயம் குறித்து தொடர்ந்து குறல் எழுப்பி வருபவர். சர்ச்சை குறித்தும் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் குறித்தும் இவரிடம் கேட்டோம்…

“இந்தியாவில் அதிக பெண்கள் பாதிப்புக்கும் உயிரிழப்புக்கும் உள்ளாவது சர்விக்கிள் கேன்சர் என்று சொல்லப்படும் கர்ப்பப்பை வாய் புற்றுநோய்க்குத்தான். வருடத்திற்கு கிட்டத்தட்ட 75 ஆயிரம் பெண்கள் இறப்பதாகவும், ஒன்றரை லட்சம் பெண்களுக்கு இந்த புற்றுநோய் அறிகுறி கண்டறியப்படுவதாகவும் அரசு புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

சிறு வயதிலேயே பாலியல் தொடர்பு (பால்ய திருமணங்கள் மூலமாக) ஏற்படுவது, ஒன்றுக்கு மேற்பட்ட நபர்களுடன் பாலியல் உறவு கொள்வது, பால் உறுப்புகளை சுத்தமாக பராமரிக்காமல் இருப்பது, கர்ப்பத்தடை சாதனங்கள் பயன்படுத்துதல் போன்றவையே கர்ப்பப்பை வாய் புற்றுநோய் ஏற்படக் காரணங்கள். இந்தக் காரணங்களை ஒதுக்கிவிட்டு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பு மருந்து குறித்துதான் இப்போது அதிகமாக பேசிக்கொண்டிருக்கிறார்கள்” என்கிறார் டாக்டர் வீ. புகழேந்தி. தொடர்ந்த அவர்,

“இந்த புற்றுநோய் தடுப்பு மருந்தின் விலை 10 ஆயிரம் ரூபாய். தடுப்பு மருந்துகளை இலவசமாகப் போடுகிறோம் என்று கூவிக்கூவி அழைக்கும்போதே அலட்சியம் காட்டுபவர்கள் இருக்க, பத்தாயிரம் ரூபாய் கொடுத்து எத்தனை பேர் போடுவார்கள் என்று தெரியவில்லை. தமிழகத்தின் பெரிய பெரிய கார்ப்பொரேட் மருத்துவமனைகளில் இந்த தடுப்பு மருந்தை போடுகிறார்கள். இது ஒருபுறம் இருக்க, இந்திய மருத்துவக் கழகத்தின் ஒப்புதலோடு ஒரு தனியார் தொண்டு நிறுவனம் Gardasil என்ற பெயர் கொண்ட கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பு மருந்தை, ஆந்திரா மற்றும் குஜராத்தில் வசிக்கும் 14 வயதுக்குக்கு உட்பட்ட (செக்ஸுவலாக ஆக்டிவ் ஆகும்முன் இந்தத் தடுப்பு மருந்து போடப்பட வேண்டும்) பழங்குடி பெண்கள் 30 ஆயிரம் பேருக்கு பரிசோதனை ரீதியில் அளித்திருக்கிறார்கள். மூன்று தவணைகளில் போடப்பட்ட இந்த மருந்தை மூன்றாவது தவணையாக உட்கொண்ட ஆந்திராவின் கம்மம் மாவட்டத்தைச் சேர்ந்த 3 பெண்கள் உயிரிழந்த சம்பவம் நடந்திருக்கிறது. தடுப்பு மருந்து கொடுக்கப்பட்டதால்தான் இந்தப் பெண்கள் உயிரிழந்தார்கள் என மருத்துவபரிசோதனை முடிவுகள் சொல்கின்றன.

தடுப்பு மருந்து எடுத்துக்கொள்ளும்போது மயக்கம், தலைவலி, நரம்பு மண்டலங்களில் பாதிப்பு, அஜீரணக்கோளாறு உள்ளிட்ட பக்க விளைவுகள் ஏற்படும் எனவும் உச்சபட்சமாக உயிரிழப்பும் நிகழலாம் எனவும் இந்த மருந்தை கண்டுபிடித்த டாக்டர் டயானா ஹார்ப்பர் தெரிவித்திருக்கிறார். லண்டனில் 14 வயது இளம் பெண் ஒருவருக்கு தடுப்பு மருந்து கொடுத்து உயிரிழந்த சம்பவத்தைத் தொடர்ந்து டயானா ஹார்ப்பரே ஒப்புக்கொண்ட உண்மை இது. அதோடு இந்தத் தடுப்பு மருந்து புற்றுநோய் வந்தால் அதனுடைய தாக்கத்தை குறைக்குமே தவிர, முற்றிலும் வராமல் தடுக்காது என்றும் அவர் சொல்லியிருக்கிறார்.

இந்திய மருத்துவக் கழகத்தின் ஒப்புதலோடுதான் பழங்குடியின இளம்பெண்கள் சோதனை மிருகங்களாக மாற்றப்பட்டிருக்கிறார்கள். இன்னும் எத்தனை அப்பாவிப் பெண்கள் விபரீத சோதனைகளுக்குப் பலியாவோர்களோ என்பதுதான் நம்முடைய கவலையாக இருக்கிறது.ஜெயந்தி நடராஜன் போன்றவர்கள் தடுப்பு மருந்தின் விலை அதிகமாக இருக்கிறது என்று கவலைப்படுகிறார்களே தவிர, தடுப்பு மருந்தின் பக்கவிளைவுகள் குறித்து அக்கறைப்படவில்லை” என்று காட்டமான டாக்டர் வீ. புகழேந்தி, கர்ப்ப்பை வாய் புற்றுநோய் வராமல் தடுப்பதற்கான வழிமுறைகளை பட்டியலிட்டார்.

“ஒருவனுக்கு ஒருத்தி என்கிற பிரச்சாரத்தை அதிகப்படுத்த வேண்டும். திருமணத்திற்கு முன் பாலியல் உறவு கொள்ளும் பழக்கம் கிராமப்புறங்களில்தான் அதிகமாக இருப்பதாக சமீபத்திய புள்ளிவிபரம் ஒன்று தெரிவிக்கிறது. இத்தகைய காலகட்டத்தில் பாலியல் குறித்த சரியான விழிப்புணர்வை கட்டாயம் செய்தாக வேண்டும். அடுத்து, நாப்கினை உபயோகப்படுத்துவதன் அவசியம் குறித்தும் பால் உறுப்புகளை தூய்மையாக பராமரிப்பது குறித்தும் எடுத்துச் சொல்ல வேண்டும். அரசு, இவற்றை முழுவீச்சோடு செய்தாலே கர்ப்ப்பை வாய் புற்றுநோய் இறப்பு விகிதம் தன்னால் கீழே இறங்கிவிடும்” என்று முடித்தார்.

கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பு மருந்து சர்ச்சை குறித்து தெஹல்கா இதழ் விரிவான கட்டுரையை வெளியிட்டுள்ளது. படிக்க…

குப்பை மேட்டில் ஓர் வேடந்தாங்கல்! மார்ச் 2, 2010

Posted by மு.வி.நந்தினி in அரசியல், சதுப்பு நிலம், சுற்றுச்சூழல், செங்கால் நாரை, பள்ளிக்கரணை, வெள்ளப்பெருக்கு.
Tags: , ,
1 comment so far

சென்னை, வேளச்சேரியிலிருந்து தாம்பரம் செல்லும் சாலையில் இருக்கிறது பள்ளிக்கரணை சதுப்பு நிலம் என்று சொல்லப்படும் பிரமாண்டமான குப்பைமேடு!  சென்னையின் குப்பைகளைக் கிண்டிப் பசியாற பல ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்திலிருந்து வந்திருக்கிறது பெலிக்கன் பறவை. விரையும் வாகன இரைச்சல்களுக்கு இடையே இன்னும் பல நூறு வெளிநாட்டுப் பறவைகள் திடுக்கிட்டுத் தவிக்கின்றன. காகத்தைத் தவிர, வேறு பறவையைப் பார்க்க முடியாதசென்னை நகரத்துக்குள் விதவிதமான வண்ணத்திலும் வடிவத்திலும் வித்தியாசமான பறவைகள் எப்படி வந்தன? குப்பைமேட்டில் இவற்றுக்கு என்ன வேலை?
”வேடந்தாங்கலைவிட இரண்டு மடங்கு முக்கியத்துவம் வாய்ந்தது பள்ளிக்கரணை!” என்கிறார் கடந்த பத்து ஆண்டுகளாக பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தின் பல்லுயிர் பெருக்கம் குறித்து ஆய்வுகளை மேற்கொண்டு வரும் டாக்டர் ஜெயஸ்ரீ வெங்கடேசன்.
”கோணமூக்கு உள்ளான், ஊசிவால் வாத்து, சாம்பல் தலை ஆள்காட்டி, மஞ்சள் வாலாட்டி, சோழக் குருவி, நீர் தாழைக் கோழி, நாமக் கோழி, தாமிர இலைக் கோழி, அரிவாள் மூக்கன், செந்நீலக் கொக்கு, கானான் கோழி, பவளக் கொத்தி என உள்நாட்டு, வெளிநாட்டுப் பறவைகள் வந்து போகும் இடம் இது. இங்கே வளர்ந்து நிற்கிற கோரைப் புல், இயற்கையான பயோஃபில்டர். வேண்டாததை உறிஞ்சிவிட்டு, நல்லதை அப்படியே அரணாகப் பாதுகாக்கும். பறவைகள் இதில்தான் கூடு கட்டி வாழும். ஆனால், குப்பைகளைக் கொட்டிக் கொட்டி நச்சு நிலமாக்கிவிட்டார்கள். ஆமை, மீன் போன்ற உயிரினங்கள் மாசுபட்ட நீரிலும் வாழப் பழகிவிட்டன. ஆனால், அதைப் பிடித்து உண்கிற ஏழை மனிதனுக்குத்தான் புதுப்புது வியாதிகள் வருகின்றன” என்கிறார் சூழலியல் ஆர்வலரான திருநாரணன்.
”1970-களின் தொடக்கத்தில், வேளச்சேரியில் இருக்கும் என் தாத்தா வீட்டுக்கு வருவேன். பேருந்தில் வரும்போது சைதாப்பேட்டை முடிகிற இடம்தான் கடைசி நிறுத்தம். அங்கே தொடங்கி நங்கநல்லூர் ஆஞ்சநேயர் கோயில் வரைக்கும் கண்ணுக்கு எட்டிய தூரம் மட்டும் தண்ணீர்தான் இருக்கும். ஏரிக் கரையில் நடந்தபடியே நீரில் மூழ்கி இரை தேடிக்கொண்டு இருக்கும் விதவிதமான பறவைகளை ரசித்தது இன்னும் நினைவில் இருக்கிறது.
தென்னிந்தியாவிலேயே பள்ளிக்கரணை சதுப்பு நிலம், ரொம்பவும் ஸ்பெஷலான பகுதி. சதுப்பு நிலமென்றால் ஆறு அடிக்கும் குறைவாகத் தண்ணீர் இருக்கும், உயிர் வளம் நிறைந்த குழைவான மண்ணுடன் இருக்கும். மற்ற இடங்களில் உள்ள சதுப்பு நிலத்தில் உப்புத்தன்மை இருக்கும். ஆனால், பள்ளிக்கரணை ஒரு பக்கம் நல்ல தண்ணீர் உள்ள சதுப்பு நிலமாகவும் இன்னொரு பக்கம் உப்புத்தன்மை கலந்த சதுப்பு நிலமுமாகவும் இருக்கிறது. 114 வகையான பறவைகள், 46 வகையான மீன்கள், 29 வகையான புல் வகைகள், ஆமை, தவளை வகைகள், பாம்புகள், பட்டாம்பூச்சிகள் என வளமான பல்லுயிர் சூழல் நிறைந்த பகுதி. 2002-ல் இருந்து இந்தப் பகுதியைப் பாதுகாக்கப்பட்ட வனப் பகுதியாக மாற்ற வேண்டுமெனப் பல போராட்டங்கள் நடத்தினோம். அதன் விளைவாக இப்போதுதான் சதுப்பு நிலத்தின் ஒரு பகுதியைப் பாதுகாக்கப்பட்ட வனப் பகுதியாக மாற்றியிருக்கிறார்கள்” என்றவர், இவ்வளவு வளமிக்க பள்ளிக்கரணை சதுப்பு நிலம் பாழான கதையைச் சொல்ல ஆரம்பித்தார்.


”சென்னை நகரம் விரிவடைந்துகொண்டே போனபோது, வட சென்னைப் பகுதி கிட்டத்தட்ட ஆந்திர எல்லையைத் தொட்டுவிட, தென் சென்னையின் மீது அனைவரின் கவனமும் திரும்பியது. வெள்ளைக்காரன் காலத்திலேயே ‘புறம்போக்கு மேய்ச்சல் நிலம்’ என அரசாங்க ஆவணங்களில் குறிப்பிடப்பட்ட பள்ளிக்கரணை சதுப்பு நிலத் தைச் சீரழிக்கும் பணி அப்போது மும்முரமாக ஆரம்பித்துவைக்கப்பட்டது. ‘புதுசா காலனி போடணுமா… பட்டா போடணுமா… பள்ளிக் கரணையில் போடலாம்’ என்கிற அளவுக்கு ஆக்கிரமிப்புகள் அதிவேகமாக நடந்தன. இது எல்லாமே அரசாங்கத்தின் ஆதரவோடுதான் நடந்தது. உண்மையில் பள்ளிக்கரணையைச் சீரழித்ததே அரசாங்கம்தான்.
பெருங்குடியில் குப்பை கொட்டுவதற்கு என்று ஒதுக்கப்பட்ட நிலத்தை தனியார் கல்லூரிகளுக்கும் அடுக்குமாடிக் குடியிருப்புகள் கட்டவும் கொடுத்துவிட்டு, வளமான தண்ணீர் உள்ள பகுதியில் எந்தவித ஒழுங்கும் இல்லாமல் இஷ்டப்படி குப்பை கொட்டிக்கொண்டு இருக்கிறது சென்னை மாநகராட்சி. ஏறக்குறைய 5 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் இருந்த சதுப்பு நிலத்தில், இப்போது உயிர்ப்போடு இருப்பது 420 ஹெக்டேர் மட்டும்தான். ஆக்கிரமிப்புகள் போக மீதியிருக்கிற 132 ஹெக்டேர் அளவுக்கு குப்பைகளைக் கொட்டிப் பாழடித்து வைத்திருக்கிறார்கள்.

சென்ற மாதம் ஏதோ ரசாயனத்தைக் கொட்டியதால் இந்தப் பகுதி தண்ணீர் முழுக்க சிவப்பு நிறமாக மாறிவிட்டது; கூடவே சகிக்க முடியாத நாற்றம் வேறு. மக்கும் குப்பை, மக்காத குப்பை என எல்லாமே ஒன்றாகக் கொட்டி அமுக்கிவைத்திருக்கிறார்கள். குப்பை பொறுக்குகிறவர்கள் டயர் போன்ற பொருட்களில் இருக்கும் இரும்பைப் பிரித்தெடுக்க நெருப்பு வைத்துக் கொளுத்திவிடுகிறார்கள். அந்த நெருப்பு எல்லா இடங்களுக்கும் பரவி, ஏரியாவே எப்போதும் புகை மண்டலமாகக் காட்சியளிக்கிறது. ஒரு லட்சம் பேர் ஒரே இடத்தில் அமர்ந்து புகை விடுவதற்குச் சமமான அளவு, புற்றுநோய் உண்டாக்கும் டயாக்சின் உள்பட நச்சு வாயுக்கள், இந்தக் குப்பைகள் எரிக்கப்படுவதால் வெளியாகிறது. அரசாங்கத்திடம் இந்தப் பிரச்னையை எத்தனையோ முறை எடுத்துச் சொல்லிவிட்டோம். இன்னும் நடவடிக்கைதான் இல்லை!” என்கிறார் டாக்டர் ஜெயஸ்ரீ.
தற்போது பள்ளிக்கரணையில் குப்பைமேட்டில் குப்பை பொறுக்குகிறவர்களுக்குத் தடை விதித்திருக்கிறது ஒக்கியம் நகராட்சி. ஆனாலும் நூறு சிறுவர்களுக்கு மேல் குப்பை பொறுக்க தினமும் வந்துகொண்டுதான் இருக்கிறார்கள் என்கிறார் குப்பை மேட்டில் காவல் காக்கும் அரசு ஊழியர் ஒருவர். அந்தப் பகுதி யைக் கடக்கும்போதே நுனி நாசிவரை நாற்றம் ஏறுகிறபோது, அதிலேயே உழலும் குப்பை பொறுக்குகிற சிறுவர்களின் உடல் நலனுக்கு யார் பொறுப்பாவார்கள் என்று தெரியவில்லை.
குண்டூசி குத்துமளவுக்குக்கூட இடம் தெரியாமல் மொய்த்துக்கொண்டு இருக்கும் ஈக்களோடு நாள் முழுக்கக் காவலில் இருக்கும் அரசாங்க ஊழியர்களின் நிலைமையும் பரிதாபம்தான்.
”மாநகராட்சி இப்போது கொடுங்கையூரிலும் பெருங்குடியிலும் மட்டுமே குப்பை கொட்டுகிறது. இந்தக் குப்பைகளிலிருந்து உரம், மின்சாரம் தயாரிக்கும் திட்டம் தொடங்கப்பட்டு இருக்கிறது. கூடிய விரைவில் பெருங்குடியில் நடைமுறைப் படுத்தப்பட உள்ளது” என்கிறார் சென்னை மாநகர மேயர் மா.சுப்பிரமணியன்.

சென்னையின் நீர்வளம் குறையவோ கூடவோ காரணம் பள்ளிக்கரணை சதுப்பு நிலம் பாதுகாக் கப்படுவதில்தான் இருக்கிறது என்கிறார்கள் சூழலியலாளர்கள். இன்னொரு அதிர்ச்சியானவிஷ யமும் தெரிய வந்தது. 2005-ல் சென்னையில் ஏற் பட்ட வெள்ளப்பெருக்குக்குக் காரணம்பள்ளிக்கரணைச் சதுப்பு நிலம் பாழடிக்கப்பட்டதுதான்!

”சென்னையின் ஒட்டுமொத்த மழைநீருக்கும் வடிகாலாக இருப்பது பள்ளிக்கரணைச் சதுப்பு நிலம்தான். ஒரு பக்கம் நீரைத் தேக்கிவைத்துக் கொண்டு, இன்னொரு பக்கம் சிறிது சிறிதாக மீதியிருக்கிற நீர் ஒக்கியம் மடுவுக்குச் செல்கிறது. அந்த மடுவிலிருந்து பக்கிங்காம் கால்வாய் வழியாகக் கடலுக்குள் செல்கிறது. அந்த வழியாகத் தான் கடல் தண்ணீரும் உள்ளே வரும். ஆனால், ஒக்கியம் மடுவு இருந்த இடத்தை முற்றிலுமாக அடைத்துவிட்டது ஒரு தனியார் பொறியியல் கல்லூரி. தண்ணீரைத் தேக்கிவைக்கும் இடத்திலும் குப்பைகளைக் கொட்டி சின்னச் சின்ன மலை களை உருவாக்கிவிட்டார்கள். பிறகு எப்படி வெள்ளம் வடியும்? வெள்ளப்பெருக்கு வராமல் இருக்கும்?
ஒட்டுமொத்தமாக எல்லாக் குற்றச்சாட்டுக்களையும் அரசாங்கத்தின் மீது மட்டுமே சொல்லி விட முடியாது. நம்முடைய வீட்டைச் சுத்தமாக வைத்திருந்தால் போதும் என்று அத்தனை குப்பைகளையும் வீதியில் சேர்க்கிற நாமும்தான் குற்றவாளிகள். எத்தனை பேர் மக்கும் குப்பை, மக்காத குப்பை என்று வீட்டிலேயே தரம் பிரித்து அனுப்புகிறோம்?! நாமே தவறுக்குப் பிள்ளையார் சுழி போட்டுவிட்டு, எல்லாம் பாழான பிறகு உச்சுக்கொட்டுவதில் என்ன பயன்?” – நாளைய சந்ததி கேட்கப்போகும் கேள்வியை இப்போதே கேட்கிறார் டாக்டர் ஜெயஸ்ரீ!

நன்றி : காட்டுயிர் புகைப்படக்கலைஞர் ஸ்ரீராம்

”கச்சத்தீவை மீட்போம் என்று கூச்சலிடும்போதெல்லாம் கடலில் இருக்கிறவனுக்கு மரண அடி விழுகிறது!” பெப்ரவரி 17, 2010

Posted by மு.வி.நந்தினி in அரசியல், ஆழி சூழ் உலகு, இன உணர்வு, இலங்கை தமிழர், கொற்கை, சமூகம், ஜோ டி குருஸ், போராட்டம், மீனவர்கள், விடுதலைப் புலிகள்.
Tags: , , ,
1 comment so far
  

இதுவரைக்கும் வந்த தமிழ் நாவல்களில் மீனவர்களின் வாழ்க்கை பின்னணியில் ஜோ டி குருஸ் எழுதிய ஆழி சூழ் உலகு நாவலுக்கு தனித்த இடம் உண்டு. மீனவ சமூகத்தின் சிக்கல்கள், அவலங்களை அவர்களுடைய மொழியிலேயே வெளிப்படுத்தியது இந்நாவலின் தனித்துவத்துக்கு காரணம் என்பது விமர்சகர்களின் கருத்து. கொற்கை என்கிற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த துறைமுகத்தின் பின்னணியில் அடுத்த நாவலை தந்திருக்கிறார் எழுத்தாளர் ஜோ டி குருஸ். புத்தக காட்சியை ஒட்டி வெளியான கொற்கை நாவல்(காலச்சுவடு பதிப்பக வெளியீடு) வாசகர்களிடம் வரவேற்பைப் பெற்றிருக்கிறது. கொற்கையை முன்வைத்து ஜோ டி குருஸுடன் இந்த நேர்காணல்..

கொற்கை நாவல் எதைப்பற்றி பேசுகிறது?

”ஆழிசூழ் உலகு நாவலில் அடித்தள மீனவ மக்களின் குறுக்கு வெட்டுத்தோற்றத்தை சொல்லியிருந்தேன். பரதவர்கள், மீன் பிடிக்கிறவர்கள் மட்டுமல்ல கடல்வழி வாணிபத்தின் முன்னோடிகள் என்பதை கொற்கை நாவலில் சொல்லியிருக்கிறேன். ஏழு மற்றும் எட்டாம் நூற்றாண்டில் கொற்கை செழித்து விளங்கிய துறைமுகம். பாண்டிய நாடு வளமுடைத்து என்ற வாக்கு உருவானதே கொற்கை துறைமுகத்தை வைத்துதான். கொற்கையில் கிடைத்த நன்முத்துக்கள் பாண்டிய நாட்டை வளமுள்ளதாக ஆக்கியிருந்தது. கொற்கையில் கிடைத்த முத்துக்கள் அந்நூற்றாண்டுகளிலேயே பல நாடுகளுக்கு ஏற்றுமதி ஆகியிருக்கிறது. இதனால் கடல்வழி வாணிபம் சிறந்திருக்கிறது. சில்க் ரூட், பெப்பர் ரூட் என்று சொல்வதைப்போல கொற்கைக்கு பெர்ல் ரூட் இருந்திருக்கிறது. முத்துக்களுக்காக கிரேக்கர்கள், அரேபியர்கள், போர்த்துக்கீசியர், டச்சுக்காரர்கள், வெள்ளையர்கள் கொற்கையைத் தேடி வந்திருக்கிறார்கள். ஆனால் இது எதுவுமே வரலாற்றில் சரியாக பதிவாகவில்லை. ஏராளமான கடல் வளமுடைய மிகப்பெரிய துறைமுகமான கொற்கை பரதவர்களால் ஆனது, ஆளப்பட்டது. வெள்ளையர்களின் வருகைக்குப் பிறகு அந்த சந்ததிகளுக்கு என்ன ஆனது என்பது குறித்து வரலாறு இல்லை. வணிகமும் கலாச்சாரமும் சிறந்து விளங்கிய கொற்கையை பார்த்து ரசித்து வெள்ளையன் உள்ளே வந்திருக்கிறான். இதுபற்றிய குறிப்புகள் நம்மிடம் இல்லை. வெள்ளையர்கள் பார்த்து, ரசித்து உள்ளே வருகிறான். இப்படி வளம்பெற்ற கொற்கை கடந்துவந்த நூறு ஆண்டுகளின் கதையைத்தான் கொற்கை நாவலில் சொல்லியிருக்கிறேன். கடந்த நூறு ஆண்டுகளில் நிகழ்ந்த சமூக, பொருளாதார கலாச்சார மாற்றங்களை பேசுகிறது நாவல். போர்த்துக்கீசியர்கள், வெள்ளையர்கள் வெளியேறி சுதேசி அரசாங்கம் வந்த பிறகு கொற்கையில் வாழ்ந்த பரதவர்கள் சமூகம் எப்படி மாறியது என்பதையும் பரதவர்களின் பல்வேறு பிரிவுகளுக்குக்கிடையேயான சமூக சிக்கல்கள், அதை அவர்கள் கையாண்ட விதம் இதெல்லாம் தான் நாவலாக்கியிருக்கிறேன். இதை வரலாற்று ஆவணம் என்று சொல்லமுடியாது. நாவலுக்குள் சொல்லப்பட்டிருக்கும் விஷயங்களால் இது வரலாற்று ஆவணமாகலாம்.”

மீண்டும் மீனவ சமூகத்தின் பின்னணியில் நாவல் எழுதக் காரணம்?

”சங்கப் பாடல்களில்கூட அம்மூவனார் போன்றவர்கள் நெய்தல் கரையைப் பற்றி பாடினார்களே தவிர, நெய்தல் நில மக்களின் சுக துக்கங்களை பாடவில்லை. நெய்தல் நிலத்தைச் சேர்ந்தவன் என்ற வகையில் இதுகுறித்து எனக்கு நிறையவே ஆதங்கம் உண்டு. நெய்தலின் மீதும் நெய்தல் மக்களின் மீதும் உள்ள பாசத்தின் வெளிப்பாடுதான் என் எழுத்து முயற்சி. வருமானத்துக்காக ஒரு வேலையில் இருக்கிறேன், ஆத்ம திருப்திக்காக எழுதுகிறேன்.

என் சமூகத்தில் உள்ள அவலங்களை கோளாறுகளை சுட்டிக்காட்ட வேண்டியது அவசியமாக படுகிறது. ஆழி சூழ் உலகு நாவல் வெளிவந்த பிறகு, ஊரில் நிறைய எதிர்ப்பு வந்தது, வந்துக்கொண்டிருக்கிறது. நிலைக்கண்ணாடி போல ஒரு சமூகத்தில் உள்ள குறைகளை சுட்டிக்காட்டினால் வெறுப்பையும் விரோதத்தையும் சம்பாதிக்க வேண்டியிருக்கும். மாற்றம் ஏற்பட வேண்டும் என்பதற்காகத்தான் சமூக குறைகளை சுட்டிக்காட்டுகிறேன். ஆடி போல சமூகத்தைக் காட்ட வேண்டும். அதனால் மேற்படியான எதிர்ப்புகள் பற்றி கவலைப்படுவதில்லை!

நாவலில் சொல்லவந்ததை ஒரு கட்டுரையிலேயே கூட சொல்லி முடித்திருக்கலாம். ஆனால் அதை அப்படி சொல்ல விரும்பவில்லை. வாழ்வாக சொல்ல விரும்பினேன். ஆழி சூழ் உலகு எழுதி முடித்த உடனே கொற்கையை எழுத உட்கார்ந்தேன். 2005 தொடங்கி 2009 ஆண்டு முடிய நாவலுக்காக உழைத்திருக்கிறேன். சின்ன வயதிலிருந்து எனக்குள் போன செய்திகளை மெருகுபடுத்தி சேர்த்திருக்கிறேன். வெவ்வேறு தலைமுறைகளைச் சேர்ந்த பெண்கள், ஆண்களை சந்தித்து பேசி தகவல்களை திரட்டினேன். நாவலை எழுதி முடித்தவுடன் ஒருவித அயற்சி ஏற்பட்டது. எழுதி முடித்த பக்கங்களை தூக்கி பரணில் போட்டதைப் பார்த்த என் மனைவி பதறிக்கொண்டு ஐந்து வருட உழைப்பை வீணாக்கலாமா? என்றார். பிறகுதான் எழுதியதை பதிப்பகத்திடம் கொடுக்கும் முடிவுக்கு வந்தேன். நாவல் எழுதி முடித்தபோது ஏற்பட்ட அயற்சிக்குக் காரணம், முன்னோடியாக இருக்க வேண்டிய சமூகம் இப்படி முடங்கிக் கிடக்கிறதே என்கிற ஆதங்கம் தான்! என் சமூகம் ஏன் இப்படி இருக்கிறது என்கிற கேள்வி என்னை சதா துளைத்துக்கொண்டே இருக்கிறது”

எழுதுவதைத் தாண்டி மீனவர்களின் இன்னல்களை ஆவணப்படுத்தும் முயற்சியிலும் இறங்கியிருக்கிறீர்கள். குறிப்பாக இலங்கை ராணுவத்தால் தொடர்ந்து தாக்குதலுக்கு உள்ளாக்கப்படும் தமிழக மீனவர்கள் பற்றி ஆவணப்படங்கள் எடுத்ததன் பின்னணி என்ன?

”காலம்காலமாக தமிழக மீனவர்கள், வடமேற்கு இலங்கை நோக்கி மீன் பிடிக்கப்போவதுதான் வழக்கம். 1983ல் இலங்கை யாழ்பாணத்தில் நூலகம் எரிப்பு என்கிற நிகழ்வுக்குப்பிறகு, விடுதலைப்புலிகளின் எழுச்சி தொடங்கியபோதுதான் தமிழக மீனவர்கள் மீது இலங்கை இராணுவத்தின் தாக்குதல் அரங்கேற்றம் பெற்றது. தமிழக மீனவர்கள் மூலமாக விடுதலைப்புலிகளுக்கு உதவிகள் கிடைப்பதாக கருதியே இலங்கை அரசு இத்தகைய தாக்குதல்களை ஊக்குவித்தது. இன்று ஈழம் தோற்கடிக்கப்பட்டுவிட்டது. ஈழப் போராட்டத்தின் பின்னணியில் தென் தமிழக மீனவர்களின் இரத்தமும் கலந்திருக்கிறது என்பது நிதர்சனமான உண்மை. தமிழினம் என்கிற காரணம் மட்டுமல்ல, தமிழக மீனவர்கள் மீதான தாக்குதலுக்கு இன்னும் ஏராளமான கோர முகங்கள் உண்டு. மீனவர்கள் பிடித்த மீன்கள் பிடிங்கிக் கொண்டு வளையை அறுத்துவிடுவதிலிருந்து காதில் இருக்கிற கடுக்கணை பிடிங்கிக் கொள்வது வரையான கடற்கொள்ளையர்களைப் போன்ற செயல்களையும் அவர்கள் செய்கிறார்கள். மீனை பச்சை திண்ணச் சொல்வது, ஐஸ்கட்டியில் நிர்வாணமாக படுக்கவைப்பது, கடலில் தள்ளிவிட்டு இரண்டு, மூன்று மணி நேரம் நீந்தவிட்டு களைத்துப்போகும்போது ஹெலிகாப்டரிலிருந்து சுட்டுப் பழகுவது, இதையெல்லாவற்றையும்விட அப்பன்-மகன் என்று தெரிந்த பின்னும் உறவு கொள்ள கட்டாயப்படுத்துவது கொடுமையின் உச்சம்! கச்சத்தீவை மீட்போம் என்று நாட்டில் கூச்சலிடும்போதெல்லாம் கடலில் இருக்கிறவனுக்கு மரண அடி விழுகிறது.

மீனவர்கள் நாதியில்லாதவர், அவர்களுக்கென்று அமைப்புகள் கிடையாது, ஒருங்கிணைந்த குரல் கிடையாது. இதுதான் காரணமேயில்லாமல் இத்தனை பேரின் இறப்புக்கும் பல இழப்புகளுக்கும் காரணம். நம்முடைய அரசியல்வாதிகளுக்கும் அதிகாரிகளுக்கும் எல்லைகளில் வாழ்கிறவர்கள் தானே என்கிற விட்டேத்தி மனோபாவம். இருபது வருடங்களுக்கும் மேலாக மீனவர்களிடையே பணியாற்றுவதாக சொல்லிக்கொள்ளும் தொண்டு நிறுவனங்களிடம்கூட மீனவர்களின் வாழ்வாதாரத்தை மாற்றுவதற்கான எந்தவித திட்டமும் இல்லை. குறைகளை கணக்கெடுத்திருப்பதுதான் தொண்டு நிறுவனங்கள் செய்திருக்கும் மிகப்பெரிய சேவை!

இதெல்லாம்தான் விடியாத பொழுதுகள் என்ற முதல் ஆவணப்படம் எடுக்க தூண்டுதலாக அமைந்தது. அவலங்களை மட்டும் சொன்னால் எனக்கும் தொண்டு நிறுவனங்களின் செயல்பாட்டுக்கும் வித்தியாசம் இல்லாமல் போய்விடும். அதனாலேயே பிழைப்புக்காக எல்லைத் தாண்ட நேரிடும் மீனவர்களுக்கு மாற்று வழியைச் சொல்லும் நோக்கில் விடியலை நோக்கி என்ற ஆவணப்படத்தை எடுத்தேன். மன்னார் வளைகுடா பகுதியில் அமைந்துள்ள மூக்கையூர் பகுதியில் மீன்பிடி துறைமுகம் அமைக்க வேண்டும் என்பதே அந்தத் தீர்வு. மூக்கையூர் பகுதியில் வீணாகிக்கொண்டிருக்கும் ஆழ் கடல் வளத்தை பயன்படுத்த வாய்ப்பாகவும் இந்தத் தீர்வு அமையும். பரவலாக கவனம் பெற்ற இந்த ஆவணப்படத்திற்கு தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் விருது கொடுத்திருக்கிறது. விருது பெறுவது, கவனம் பெறுவது என்பதைவிட என் மக்களின் துயரம் அறியப்படவேண்டும் என்பதுதான் என் நோக்கம். மீனவ சமூகத்திலிருந்து வந்த எனக்கு, என் சமூகத்தின் வலி நன்றாகவே தெரியும். ஆம்புலன்ஸ் சத்தம் கேட்டாலே அலறுகிறார்கள் எம் மக்கள். கைநிறைய சம்பளமும் வசதி குறைவில்லாத வாழ்க்கையும் எனக்கு நிறைவை தந்துவிடாது. எம் மக்களின் வாழ்வுக்காக எதையாவது நான் செய்துகொண்டே இருப்பேன். ஏனெனில் மூச்சு விடுவது மட்டுமே வாழ்க்கையில்லை!”

இலங்கை இப்போது… December 17, 2009

Posted by மு.வி.நந்தினி in அரசியல், இன உணர்வு, இலங்கை தமிழர், சமூகம், சூரியகதிர், தீட்சண்யா, புதுவிசை, போராட்டம்.
5 comments

தமிழ் இலக்கிய சூழலில் சமூகத்தின் மீது அக்கறையும் கரிசனமும் கொண்டு எழுதிவரும் படைப்பாளிகளில் முக்கியமானவர் ஆதவன் தீட்சண்யா. அதிகார வர்க்கத்தின் மீது தயங்காமல் விமர்சனம் வைக்கக்கூடியவர். சிறுகதை, கவிதை, கட்டுரை என இயங்கிவரும் ஆதவன், புதுவிசை என்கிற கலாச்சாரக் காலண்டிதழின் ஆசிரியராகவும் செயல்படுகிறார். இவர் எழுதி பூஜ்ஜியத்திலிருந்து துவங்கும் ஆட்டம், தந்துகி என இரு கவிதை நூல்களும் எழுதவேண்டிய நாட்குறிப்பின் கடைசிப் பக்கங்கள், இரவாகிவிடுவாதலேயே சூரியன் இல்லாமல் போய்விடுவதில்லை என இரு சிறுகதை நூல்களும் வெளியாகியுள்ளன. மலையக மற்றும் இலங்கை தமிழர்களின் வாழ்நிலை குறித்து அறிய சமீபத்தில் இலங்கை சென்று வந்திருக்கிறார் ஆதவன். சூரியகதிர் மாதமிருமுறை இதழுக்காக மின்னஞ்சலில் அனுப்பிய கேள்விகளுக்கு ஆதவனின் பதில்

 
# இலங்கை பயணத்தின் நோக்கம் என்ன?  
நமது நேரடிச் சொந்தங்களான மலையகத்தமிழரை சந்திப்பது, இலங்கைத் தமிழர்களின் வடபகுதிக்குச் செல்வது- விடுதலைப்புலிகளை ஒடுக்குவதாகச் சொல்லிக்கொண்டு அந்த அப்பாவித் தமிழர்கள் மீது இலங்கை ராணுவம் நிகழ்த்தி முடித்திருக்கும் அட்டூழியங்கள், அத்துமீறல்கள், படுகொலைகள் குறித்து நேரடியாக அறிவது, இன்றைய சூழலை விளங்கிக்கொள்வது, வாய்ப்பிருந்தால் தமிழர்கள் அடைத்துவைக்கப்பட்டுள்ள வவுனியா முகாம்களுக்கு சென்று நிலைமையை நேரில் அறிவது என்பவைதான் எனது பயணத்திட்டம். அக்டோபர் 8 முதல் 15 வரை கண்டி, மாத்தளை, ஹட்டன் ஆகிய மலையக நகரங்கள் மற்றும் அவற்றைச் சுற்றிய தோட்டங்கள். 16-18 கொழும்பு. 19-21 யாழ்ப்பாணம். 22 மாலை நாடுதிரும்பினேன். குழு விவாதங்கள். அந்தனி ஜீவா, ஜோதிகுமார், ரங்கன் போன்ற தோழர்கள் ஏற்பாட்டில் சிறியதும் பெரியதுமாக நடந்த 11 நிகழ்வுகளில் பங்கெடுத்தேன்.

 
# போருக்குப் பின் இலங்கை எப்படி இருக்கிறது? பாதுகாப்பு கெடுபிடிகள், மக்களின் அன்றாட வாழ்க்கை நிலை, அரசியல், ராணுவரீதியான போக்குகள்?
 நாட்டின் எந்த மூலையிலும் துண்டுத்துக்காணி இடத்திலும் மணல்மூட்டைகளுக்குப் பின்னால் தயார்நிலையில் குமிந்திருக்கிறது ராணுவம். போர் உக்கிரமாக நடந்துகொண்டிருப்பதான பீதியே நிலவுகிறது. குண்டுதுளைத்து பாழடைந்த கட்டிடங்கள், கைவிடப்பட்ட வீடுகள், அடர்ந்த புதர்கள் என்று எங்கு பார்த்தாலும் ஒரு துப்பாக்கிக்குழல் துருத்திக் கொண்டுள்ளது. எந்நேரமும் நம்மை கண்காணிக்கிறது ஒரு ராணுவக்கண். தினசரி ஒருமுறையாவது ராணுவச் சோதனைக்கு உட்படாமல் பொதுஇடங்களில் நடமாடும் சுதந்திரம் அங்கு ஒருவருக்கும் வாய்க்கவில்லை. கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் 40 நிமிட விமானப்பயணம். ஆனால் பறப்பதற்கு முன்னும் பின்னுமாக ஒருவர் 6 மணிநேரம் ஆர்மிக்காரர் முன் கைகளை பக்கவாட்டில் விரித்துக்கொண்டு சோதனைக்கு நின்றாக வேண்டும். -9 பாதைவழியே கொழும்பு திரும்புவதற்கும் இதே பாடுதான். பயணிகளை மூட்டை முடிச்சுகளோடு இறக்கி சோதனையிடுவதும், அரசாங்க கட்டிடங்களுக்குள் நுழைகிறவர்களை அங்குலம் அங்குலமாக சோதிப்பதுடன் அவர்களின் செல்போன் காமிரா போன்றவை பறித்துவைத்துக் கொள்ளப்படுவதும், உயர் பாதுகாப்பு வலயம் என்ற பெயரால் முள்வேலிகளால் தடுத்துவைக்கப்பட்ட பிரதேசங்களும் ஆட்சியாளர்களின் அச்சத்தையும் சந்தேகப்புத்தியையும் அம்பலப்படுத்துகின்றன. பிடிபடாமல் தப்பித்துவிட்ட புலிகள் என்ற சந்தேகத்துடனேயே பொதுமக்களை அரசாங்கமும் ராணுவமும் அணுகுகின்றன.
 முன்பேனும் ராணுவத்திற்கு புலிகள் என்ற திட்டவட்டமான கண்ணுக்குத் தெரிந்த எதிரிகள் இருந்தார்கள். இப்போது எதிரி யாரென்றே தெரியாத நிலை. ஆனால் எவரொருவராலும் எந்தநேரத்திலும் தன் நாட்டுக்கு ஆபத்து வரக்கூடும் என்கிற தன்முனைப்பை விரைத்துநிற்கிற ஒவ்வொரு ராணுவச்சிப்பாயிடமும் பார்க்கமுடிகிறது. இந்த தன்முனைப்பு, வெறுமனே ஒரு ராணுவத்தானுக்கு உரியதல்ல. அது, நீ சிங்களவன், இது உன்னுடைய- உனக்கே உனக்கான நாடு- அதை பத்திரமாக பார்த்துக் கொள்வது உனது பொறுப்பு என்று இனவெறியேற்றப்பட்டவனின் மனநிலையிலிருந்து பிறக்கிறது. எனவே தன்னை கடந்துபோகிற ஒருவரை உயிரோடு அனுப்புவதோ தன் நாட்டுக்கு ஆபத்தானவர் என்று சுட்டுத்தள்ளுவதோ அந்த கணத்திலான அந்த சிப்பாயின் கருணையின்பாற்பட்டதாக இருக்கிறது. அவ்வாறு சுட்டுத்தள்ளினாலும் அதற்காக அவர் யாரிடமும் பதில்சொல்ல வேண்டிய கடப்பாடு ஒன்றுமில்லை. அத்துமீறல்களை எதிர்க்கும் ஆற்றல்கொண்ட மக்களோ அமைப்புகளோ அங்கு இல்லை. மனிதசமூகத்தின் மேன்மைக்கு மகத்தான பங்களிப்பு செய்யவேண்டிய இளைஞர்சக்தி சீருடையணிந்த ஒரு இனவெறிப் பட்டாளமாக திசை மாற்றப்பட்டுள்ளது. எதிரியை வேட்டையாடும் வன்மத்தையும் கனத்த ஆயுதங்களையும் சுமந்துகொண்டு தினமும் விரைப்பாக தயாராகி குறுக்கும் நெடுக்கும் உலாத்திக் கொண்டிருக்கிற அந்த சிப்பாய்களின் மனநிலையில் ஏற்படும் சிதைவுகள் அந்த சமூகத்தை என்னவாக்கப் போகிறது என்பது வெறுமனே உளவியல் பிரச்னை அல்ல. நம்மூரில் நடிகர்களுக்கும் தலைவர்களுக்கும் ஊதாரித்தனமாக வைக்கப்படுவதை விடவும் பலமடங்குப் பெரியதான கட்அவுட்களில் ராணுவத்தினரின் மூர்க்கமான முகங்கள் அச்சமூட்டுகின்றன. ராஜபக்ஷே கட்அவுட்களில்கூட தனியாய் நிற்பதில்லை, ராணுவத்தினர் புடைசூழவே காட்சி தருகிறார். அரசாங்க விளம்பரங்களில்கூட ராணுவச் சிப்பாய்களின் படங்களே பெருமிதத்தோடு இடம் பெறுகின்றன. ராணுவத்தினரை கதாநாயகர்களாகக் கொண்டாடுவது அவர்களது வீரதீரச் செயல்களுக்காக அல்ல. அவர்கள் வெளிப்படுத்திய சிங்கள இனவாதத்திற்காகத்தான் என்பதை புரிந்துகொள்வது கடினமான விசயமல்ல. போரின் வெற்றியைக் கொண்டாடுவது என்ற பெயரால் ராணுவத்தை முன்னிறுத்தி சிங்களப் பெருமிதம் தொடர்ந்து விசிறிவிடப்படுகிறது. ராணுவத்தின் மீதான மக்களின் இந்த ஈர்ப்பை யார் அறுவடை செய்வது என்கிற போட்டியின் வெளிப்பாடுதான் இப்போது ராஜபக்ஷேவுக்கும் சரத் பொன்சேகாவுக்கும் இடையே முட்டித் தெறிக்கிறது. அந்த நாட்டில் இன்றுவரை நாடாளுமன்ற ஜனநாயகம் நீடித்திருப்பதாக அலட்டிக்கொண்டாலும் உண்மையில் அங்கு ராணுவம்தான் சமூகத்தை கட்டியாள்கிறது.
 யாழ்ப்பாணத்திற்குள் ஒருவர் நுழைவதோ அல்லது அங்கிருந்து வெளியேறுவதோ பாதுகாப்பு அமைச்சகத்தின் அனுமதியைப் பெற்றால் மட்டுமே சாத்தியம். ( இந்த நிபந்தனை கடந்தவாரம் தளர்த்தப்பட்டிருப்பதாக ஒரு அறிவிப்பு வெளியாகியுள்ளது) யாழ்ப்பாணத்திலிருந்து வவுனியாவுக்கு செல்கிற பேருந்துகளில் உங்களது இருக்கை எண்ணை ஒதுக்குவதும்கூட ஒரு சிப்பாய்தான் என்பதே நிலைமையை விளங்கிக்கொள்ளப் போதுமானது. வவுனியா செல்லும் பேருந்துகள் புறப்படும் இடம்கூட ராணுவத்திடம்தான் உள்ளது. 8.30க்கு புறப்படும் பேருந்தில் செல்கிறவர், அங்கு அதிகாலை 5.30 மணிக்கே சோதனைக்காக வரிசையில் நின்றாக வேண்டும். அங்குள்ள கழிப்பறைகளில்கூட தண்ணீர் கிடையாது. தமிழருக்கு தண்ணீர் ஒரு கேடா என்ற நினைப்பாயிருக்கும். ராணுவச் செலவுக்கான நிதிஒதுக்கீட்டை அதிகரிப்பது, ராணுவத்தினரின் எண்ணிக்கையை இப்போதுள்ளதுபோல் இரட்டிப்பாக்குவது என்ற ஆட்சியாளர்களின் முடிவுகள் தமிழர்களுக்கு மட்டுமல்ல, வாழ்வியல் நெருக்கடி தாளாமல் ஒருவேளை சிங்களவர்கள் போராடத் தொடங்கினால் அவர்களுக்கும் எதிரானதுதான். மக்களைப் பொறுத்தவரை, கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடிக்க சிலர் கொடிய விஷப்பாம்புகளுடன் கண்ணாடி கூண்டுக்குள் வாழ்கிற சாகசத்தைப் போல இந்த ராணுவ கெடுபிடிக்குள் வாழப்பழகிவிட்டார்கள். முதல் ராணுவத்தின் கட்டுப்பாட்டில்தான் யாழ்ப்பாணம் இருக்கிறது. இப்போது தமிழர்களின் முழுப்பகுதியையும் ராணுவம் கைப்பற்றியிருக்கிறது. 9 பாதையில் பயணிக்கிறபோது ஆனையிறவு தொடங்கி ஓமந்தைவரைக்கும் ஒரேயொரு சிவிலியனைக்கூட காணமுடியவில்லை. அந்த நெடுஞ்சாலையின் இருமருங்கிலும் இருந்த எல்லா சிற்றூர்களும் கிளிநொச்சி போன்ற நகரங்களும் இடித்து தரைமட்டமாக்கப்பட்டுள்ளன. கோயில்கள், தேவாலயங்கள், கல்விக்கூடங்கள், அரசு அலுவலகங்கள், நீதிமன்றங்கள், தண்ணீர் தொட்டி எதுவும் மிஞ்சவில்லை. எத்தனையோ தலைமுறை தாண்டி பலன் கொடுக்கும் பனைமரங்கள் தலைவெட்டப்பட்டு மொட்டைமொட்டையாக ஆயிரக்கணக்கில் நிற்பதும் மனித நடமாட்டமற்ற பகுதிகளில் மாடுகள் கேட்பாரற்று அநாதைகளாக சுற்றியலைவதும் நெஞ்சையறுக்கும் காட்சிகள். ஆளரவமற்ற அந்த பாதை நெடுகிலும் நிறுத்தப்பட்டிருக்கும் சிப்பாய்களுக்கு இன்னும் எதிரிகள் தேவைப்படுகிறார்கள். அதேவேளையில் மக்களின் நண்பர்கள் என்று காட்டிக்கொள்கிற பகட்டுக்கும் குறைவில்லை. இழவுவீட்டாருக்கு நெருங்கிய உறவினர்கள் சாப்பாடு செய்து பகிர்வதுபோல, பொன்னாலைக்கட்டியான் என்ற தமிழர்கிராமத்தில் ஒரு இழவுவீட்டிற்கு ராணுவமுகாமிலிருந்து சாப்பாடு செய்து அனுப்பட்டதாம். முகாமிலிருந்து விடுவிக்கப்படுபவர்களுக்காக கட்டப்படவிருக்கிற அடுக்குமாடி குடியிருப்புகளில் சிங்களவர்களும் குடியமர்த்தப்படலாம் என்கிற அச்சம் இப்போதே உலவுகிறது. -9 பாதையின் இருமருங்கும் காட்டை அழித்து உருவாக்கப்பட்டுள்ள வெற்றிடங்களில் ராணுவ முகாம்கள் அல்லது சிறப்பு பொருளாதார மண்டலங்கள் என்ற பெயரில் தமிழரல்லாதாரை குடியேற்றும் திட்டமும் அரசிடம் இருப்பதாக சந்தேகம் வலுத்துள்ளது. குண்டுசத்தமும் ஷெல்லடியும் ஓய்ந்திருக்கும் இன்றைய நிலை அமைதிக்கு பதிலாக ஒரு உறைந்த திகிலூட்டும் மௌனத்தையே கொண்டு வந்திருக்கிறது. மக்கள் இறுகிய மௌனத்தின் வழியாக எல்லாத்துயரங்களையும் கடக்க எத்தனிக்கிறார்கள். ஒவ்வொரு வீட்டிலும் எஞ்சியிருக்கும் விதவைகளையும் அங்கவீனர்களையும் மனநிலைப் பிறழ்ந்தவர்களையும் பார்த்துப் பார்த்து மருகிப் போய் உறைந்து நிற்கும் அவர்கள் மனம் திறந்து பேச இன்னும் கனகாலம் செல்லும். இந்தப் போரை உசுப்பேற்றி கொன்றதில் நமக்கும் பங்கிருக்கிறது என்ற குற்றவுணர்வில் நாம் காத்திருக்க வேண்டியதுதான். அங்கிருந்து தமிழர்கள் வெளியிடும் சஞ்சிகைகள் எதிலும் ஈழப்போராட்டம், அல்லது ராணுவத்தின் அட்டூழியங்கள், முகாம்களில் வதைபடும் மக்களின் துயரம் என்று எதையும் பேரளவில் காணமுடியவில்லை. தணிக்கையும் சுயதணிக்கையும் அவர்களின் எழுத்துச் சுதந்திரத்தை அந்தளவுக்கு கட்டுப்படுத்தியிருக்கிறது. நாளிதழ்களில் ஓரளவுக்கு இதுகுறித்த செய்திகளைப் பார்க்க முடிந்தது.

# முகாம்களுக்குச் செல்லும் வாய்ப்பு கிடைத்ததா?

 யாழ்ப்பாணம் செல்வதே எனக்கு பெரும்பாடாகிவிட்டது. யாழ்ப்பாணத்திற்கு முதல்முறையாக செல்பவர் விமானத்தில்தான் சென்றாக வேண்டும். விமான டிக்கெட் பெறவேண்டுமானால் பாதுகாப்புத்துறை அமைச்சகத்தின் அனுமதிக் கடிதம் இருந்தால் மட்டுமே சாத்தியம். இந்த ஏற்பாடுகளை தோழர்கள் ரங்கனும் அந்தனிஜீவாவும் செய்துகொடுத்தபோதும், எனக்கு 19ம் தேதிதான் டிக்கெட் கிடைத்தது. 22ம் தேதி நாடு திரும்பவேண்டிய நிலையிலிருந்ததால் முகாம் எதற்கும் செல்ல முடியவில்லை. ஆனால் முகாம்களில் இருந்து சமீபத்தில் விடுவிக்கப்பட்டவர்கள் சிலரை சந்தித்து அவர்களது துயரங்களை கேட்டறிய முடிந்தது. நான் தங்கியிருந்த விடுதியின் சமையல்காரரின் குடும்பம் 1996ல் யாழ்ப்பாணத்திலிருந்து வன்னிக்கு குடிபெயர்ந்திருக்கிறது. மீன்பிடித்தொழில் அவர்களுக்கு. போர் உக்கிரமடைந்த நிலையில் காடுகளுக்குப் போகிறார்கள் புலிகளோடு. நிலவறைகளில் பதுக்கம். ராணுவம் அழித்து நொறுக்கி வரவர இவர்கள் மூட்டைமுடிச்சுகளோடு பத்துக்கும் மேற்பட்ட இடங்களுக்கு ஓடியோடிப்போய் பதுங்க வேண்டியிருந்திருக்கிறது. நடந்துவர முடியாத நோயாளிகள் வயோதிகர்கள் அங்கவீனர்களை அப்படியப்படியே பங்கருக்குள் கைவிட்டுவிட்டு ஓடியுள்ளனர். கைவிடப்படப்பட்ட அந்த பங்கர்களுக்குள் ஒருவேளை யாராவது உயிர் பிழைத்திருந்தாலும் கூட ஒருவருக்கும் தெரியப்போவதில்லை. இனி புலிகளை நம்பி உயிரையும் போக்கிக்கொள்வதில் அர்த்தமில்லை. எனவே படகேறித் தப்பித்து நேவியிடம் சரண். பின் முகாமில் வதிந்து ஆகஸ்டில் விடுவிப்பு. இப்போது அவர்களின் பிரச்னை, வீடு. வன்னிக்குப் போன அவர்களின் ஒரு குடும்பம் இப்போது ஐந்தாக பெருகி யாழ்ப்பாணம் திரும்பி நடுத்தெருவில் நிற்கிறது. தொழிலுக்குச் செல்ல படகோ வலையோ இல்லை. பணம் நகை எதுவும் மிஞ்சவில்லை. அவற்றை விற்றுத்தான் கடைசிநாட்களில் சீவித்திருக்கிறார்கள். எல்லாமும் தோற்றாகிவிட்டது. தெரிந்த தொழிலுக்கு அவர்களால் திரும்ப முடியவில்லை. நீர்மேலிருந்தவர் நெருப்புக்குள் கரிபடுகிறார். முகாம்களிலிருந்து விடுவிக்கப்படுகிறவர்களுக்கு எந்த வாழ்வாதாரமும் இல்லை. முப்பது ரூபாய்கு ஒரு டீ விற்கிற நாட்டில், அரசு கொடுக்கிற சிறுதொகையை வைத்துக்கொண்டு அந்த மக்கள் எப்படி மீண்டெழ முடியும்?

 # இலங்கை தமிழர்களின் நிச்சயமான வாழ்வாதாரம் குறித்து பேசாதநிலை தமிழகத்தில் நிலவிக்கொண்டிருக்கிறது. தமிழர்களின் வாழ்வாதாரம் குறித்து ஏதேனும் முன்னெடுப்புகள் இலங்கையில் (அரசு அல்லாத) புலம்பெயர்ந்த இடங்களில் நடக்கிறதா?

 .) ஐரோப்பா அல்லது பிறநாடுகளில் அடைக்கலம் புகுந்த இலங்கைத் தமிழர்களில் பெரும்பாலோர் ஐந்தாறு ஆண்டுகளில் அங்கு பொதுசமூகத்தோடு இணைந்து வாழவும் குடியுரிமை பெறவும் முடிகிறது. ஆனால் கால்நூற்றாண்டு காலமாய் தமிழ்நாட்டின் அகதிகள் முகாமில் வதியும் இலங்கைத்தமிழர்கள் இன்றளவும் அகதிகள்தான் என்பதை எமது புதுவிசையில் தொடர்ந்து எழுப்பிவந்தோம். வவுனியா முகாமைப் பார்க்கப்போன நாடாளுமன்ற உறுப்பினர்களில் எத்தனைபேர் தமிழ்நாட்டிலுள்ள முகாம்களுக்கு சென்றிருப்பார்கள் என்பது தெரியவில்லை. அண்டி வந்தவர்களையே ஆதரிக்காத இந்த தமிழ்நாட்டு சமூகம் இலங்கைக்குப் போய் என்னத்த கிழிக்கப்போகிறது? கழுத்துநரம்பு புடைக்க ராஜபக்சேவையும் சிங்களவர்களையும் இங்கு வசைபாடித் திரிவதால் அங்குள்ள தமிழர்களுக்கு நன்மையேதும் விளையப் போவதில்லை.

) புலம்பெயர் நாடுகளின் புலி ஆதரவாளர்களைப் பொறுத்தவரை மாற்றுக்கருத்தாளர்கள் எல்லோரையும் சிறுமைப்படுத்துவதன் மூலம் இலங்கையில் அமைக்கமுடியாத தனி ஈழத்தை இணையத்திலாவது அமைத்தே தீர்வோம் என்று மும்முரமாய் பாடுபட்டுக் கொண்டுள்ளனர். ஒரு இருபதாண்டுகள் கழித்து தனிஈழப் போராட்டம் பற்றி அறிந்துகொள்ளும் தரவுகளை இணையத்தில் தேடும் ஒருவருக்கு அங்கு ஏற்பட்டுள்ள இழப்புகள், தோல்விகள் எதற்கும் புலிகள் அமைப்போ தலைமையோ பொறுப்பல்ல என்ற மாயத்தோற்றத்தை உருவாக்கும் அதிரடியான அறிக்கைகளையும் இட்டுக்கட்டப்பட்ட ஆவணங்களையும் இணையத்தில் உலவவிடுவதோடு இவர்கள் பணி நிறைவு பெறுகிறது. எனவே இவங்கையில் தமிழர்கள் படும் துயரங்கள் அவர்களுக்கு ஒரு பொருட்டல்ல. ஏனெனில் அவர்கள் ஒரு பாதுகாப்பான வாழ்க்கையை எட்டிவிட்டவர்களாக இருக்கிறார்கள்.

.) யாழ்ப்பாணத்தில் பெரியபெரிய பதாகைகளையும் கொடிகளையும் கட்டிக்கொண்டு தொண்டு நிறுவனங்கள் என்கிற ஃபண்டு நிறுவனங்களின் குளிரூட்டப்பட்ட வாகனங்கள் பறக்கின்றன. மாளிகை போன்ற பெரிய வீடுகள்தான் அவற்றின் அலுவலகங்கள். அரசியல்ரீதியான பிரச்னைகளை இந்த அமைப்புகள் கொடுக்கும் சோற்றுருண்டைகள் தீர்த்துவைக்க முடியாது. ஒருசில அமைப்புகளைத் தவிர மற்றவற்றுக்கு சுனாமி கொள்ளை போல இதுவும் ஈழமக்களின் பெயரால் கொள்ளையடிக்கும் வாய்ப்புதான்.

) புலம்பெயர்ந்து வெளிநாடுகளிலும் கொழும்பிலும் வாழக்கூடிய பொன்னாலைக்கட்டியான் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர்கள் தங்களுக்குள் ஒரு குழுவை அமைத்து நிதிதிரட்டி போரினால் முற்றிலும் அழிந்துபோன தங்கள் ஊரை மீள கட்டியெழுப்புவதாக அந்த குழுவின் நிர்வாகி மருத்துவர்.ஞானகுமரன் தெரிவித்தார். இம்மாதிரியான முயற்சிகளும் அங்கொன்றும் இங்கொன்றுமாக நடக்கின்றன.

) புலம்பெயர்ந்தவர்களில் ஒரு சிறுகுழு இப்போதைய சூழலைப் புரிந்துகொண்டு செயலாற்றவேண்டிய தளங்களை கண்டறிய முயற்சிக்கிறது. ராணுவரீதியில் பலவீனமாக இருந்த பல்வேறு நேரங்களில் அரசியல் தீர்வு, சமஸ்டிமுறை என்றெல்லாம் புலிகள் பேசியதைதான் இவர்களும் முன்வைக்கிறார்கள். அதற்காக துரோகிகள், அரசாங்கத்தின் கைக்கூலிகள் என்று தூற்றப்படுகிறார்கள். எனினும் அரசியல் உரிமைகளை அடையும் சக்திகள் இலங்கை தமிழ்ச் சமூகத்தின் மத்தியிலிருந்துதான் உருவாக முடியும் என்பதை உணர்ந்து அதற்கான தொடர்புகளை மேற்கொண்டுள்ள இந்த சிறுபகுதியினர் நம்பிக்கையளிக்கின்றனர்.

 # விடுதலைப் புலிகள் இனிவிடுதலைப் புலிகள் குறித்து இலங்கையில் வாழும் தமிழர்களின் நிலை என்ன-? அடுத்தக்கட்ட போருக்கு தயாராவோம் என்று இங்கிருந்து கிளம்பும் கோஷங்களுக்கு இலங்கை வாழ் தமிழர்களின் ரியாக்ஷன் எப்படி இருக்கு

 பிரபாகரன் மீண்டும் வருவாராமே என்று அங்குள்ளவர்களிடம் கேட்டால், வரட்டுமே.. வந்து என்ன செய்யப் போகிறார்இத்தனை ஆயிரம் போராளிகளையும் இவ்வளவு ஆயுதங்களையும் பெருந்தொகையான பணத்தையும் வைத்துக்கொண்டே ஒன்றும் செய்ய ஏலாதவர் இனி வந்து என்ன செய்யப் போகிறார் என்று எதிர் கேள்வி கேட்கிறார்கள். ஒருவேளை வந்தால் அவரும் ஒரு இணையதளத்தையோ பிளாக்கையோ அமைத்துக்கொண்டு அட்டைக்கத்திதான் வீசமுடியமேயன்றி ஆயுதத்தை தூக்கமுடியாது என்கிறார்கள்.யாழ்ப்பாணம் நாவலர் அரங்கில் நடைபெற்ற சந்திப்பின்போது ஒரு அன்பர் சொன்னார்- தமிழர்கள் மானஸ்தர்கள், ஆளப்பிறந்தவர்கள், அவர்கள் தனித்துவமானவர்கள், பிற இனத்தோடு சேர்ந்து வாழ முடியாதவர்கள், தனிநாட்டுக்கு குறைவான எதிலும் அவர்கள் திருப்தி கொள்ள முடியாது என்றெல்லாம் உங்கள் தமிழ்நாட்டுத் தலைவர்கள் பேசுவது உண்மையென்றால், தனி தமிழ்நாட்டுக்காக போராட வேண்டியதுதானே? அதை விட்டுவிட்டு இவர்களது வீராப்புக்கும் வெத்துச் சவடாலுக்கும் ஏன் எங்கள் உயிரையும் வாழ்வையும் பணயம் வைக்கிறார்கள்? என்று.வவுனியா முகாமிலிருந்து விடுவிக்கப்பட்டு வந்துகொண்டிருக்கும் 1280 பேரை அழைத்துப்போக யாழ்ப்பாண நூலகத்தினருகில் உள்ள துரையப்பா ஸ்டேடியத்தின் வாயிலில் காத்திருந்த ஒரு கூட்டத்திடம் உரையாடிக் கொண்டிருந்தோம். ஒரு மீனவப்பெண் சொன்னார்- எத்தனை இம்சைஇன்னொரு தடவை ஆயுதம் போராட்டம்னு எவனாச்சும் சொன்னா தும்புக்கட்டையாலயே ( துடைப்பம்) அடிச்சு சாத்திப்புடுவேன். போரை எதிர்கொண்ட எளிய மக்களின் மனநிலை இதுதான்.

 # இலங்கை தமிழர்கள் வாழ்வுரிமைக்காக நம்மைப் போன்ற வெளியில் இருக்கும் தமிழர்கள் என்ன செய்ய வேண்டும்? (அல்லது) இலங்கை தமிழர்கள் நம்மிடம் எதை எதிர்பார்க்கிறார்கள்?

வாயை மூடிக்கொண்டிருந்தால் போதும், அதுவே நீங்கள் செய்யும் பேருதவி என்பதுதான் அவர்கள் நமக்கு விடுக்கும் வேண்டுகோள். காடு அதிர்கிறது மீண்டும் எழுகிறது என்றெல்லாம் வீராவேசமாக இங்குள்ள பத்திரிகைகள் வெளியிடும் பரபரப்பு செய்திகள் கண்டு அவர்கள் பதறுகின்றனர். இப்படியான செய்திகள், தனது ராணுவ கெடுபிடிகளை நீட்டித்துக்கொள்ள அரசாங்கத்துக்கு உதவும் என்று கண்டிக்கின்றனர். ஒருவேளை அரசாங்கத்துக்கு இப்படி மறைமுகமாக உதவுவதுதான் இவர்களது உள்நோக்கமோ என்றும் சந்தேகிக்கிறார்கள். ஏற்கனவே இணையதளங்களிலும் யூடியூப்களிலும் வெளியிடப்பட்ட வீரதீர புகைப்படங்களையும் வீடியோக்காட்சிகளையும் வைத்துக்கொண்டு ஒவ்வொரு தமிழனையும் உற்றுஉற்று பார்த்து சந்தேகிக்கும் ராணுவத்தாருக்கு உதவும் பொறுப்பற்ற பேச்சுகளையும் அறிக்கைகளையும் நிறுத்தச் சொல்லுங்கள் என்ற அவர்களது வேண்டுகோள் நம் தமிழ்த்தேச தலைவர்களின் இதயங்களை தைக்கவேயில்லை. இந்திய அரசாங்கம் ஏன் தமிழர்களை ஆதரிக்கவில்லை? இலங்கையின் ஒடும் வாகனங்கள் டாடாவும் லேலண்டும். இருசக்கர வாகனமென்றால் பஜாஜ், ஹீரோ ஹோண்டா, டி.வி.எஸ். தொலைத்தொடர்பில் ரிலையன்சும் ஏர்டெல்லும். நாடு முழுதும் இந்தியன் ஆயில் கார்ப்பரேசனின் பெட்ரோல் நிலையங்கள். அங்கிருந்த பெரிய சிமெண்ட் ஆலை இப்போது பிர்லாவிடம். நாட்டின் பொருளாதாரத்தில் பிரதான பங்கு வகிக்கும் தேயிலைத் தோட்டங்கள் இந்தியருக்கு சொந்தம். இவையன்றி இலங்கையின் அன்றாடப் பயன்பாட்டில் புழங்கும் பொருட்களில் 90 சதமானவை இந்திய தயாரிப்புகள். தமிழர்கள் என்ற சிறுபான்மையினரை ஆதரித்து இலங்கை என்கிற இவ்வளவு பெரிய சந்தையை இழக்க இந்திய முதலாளிகளும் வர்த்தக நிறுவனங்களும் தயாரில்லை. இவர்களது சந்தை நலனுக்கு பாதிப்பில்லாத ஒரு அணுகுமுறையைதான் சோனியா, வாஜ்பாய், கருணாநிதி, ஜெயலலிதா என்று யார் ஆண்டாலும் கடைபிடிப்பார்கள்.

# மலையகத்தமிழர்கள் வாழ்நிலை என்னவாக உள்ளது?

இலங்கைக்குப் போய் திரும்பியிருக்கிறேன் என்றதும் எல்லோரும் யாழ்ப்பாண தமிழர்களைப் பற்றிதான் விசாரிக்கிறார்கள். ஆனால் இலங்கையில் ரயில்பாதை அமைக்கவும் பாலங்கள் கட்டவும் துறைமுகம் தோண்டவும் காப்பி தேயிலைப் போன்ற பெருந்தோட்டங்களில் வேலைசெய்யவும் 19 ம் நூற்றாண்டின் தொடக்கம் முதல் தமிழ்நாட்டிலிருந்து பிரிட்டிஷ்காரர்களால் பிடித்துச் செல்லப்பட்டு இன்று மலையகத்தமிழர் என்றழைக்கப்படும் நமது முன்னோர்களைப் பற்றி ஒருவரும் விசாரிப்பதேயில்லை. அவர்களும் தமிழர்கள். அவர்களது பூர்வீகம் என்ற இந்த தமிழ்நாட்டில் அவர்களுக்காக ஒரு கைப்பிடி மண்ணும் இல்லை. இருநூறாண்டுகளாக எஸ்டேட்டுகள் என்ற திறந்தவெளி சிறைச்சாலைக்குள்ளும் அனேக இடங்களில் முள்வேலிக்குள்ளும் அடைக்கப்பட்ட வாழ்க்கைதான் அவர்களுடையது. கடும் உழைப்புச் சுரண்டலுக்கு இன்றளவுக்கும் ஆளாகியிருப்பவர்கள். 83 வன்செயலின்போது சிங்களவர்களாலும் ராணுவத்தாலும் கடும் ஒடுக்குமுறைக்கு ஆளானவர்கள். பல்லாயிரக்கணக்கான அடி உயரத்திலுள்ள மலைகளுக்கு தாங்களே பாதையமைத்து மேலேறிப் போனவர்களில் பலர் இன்னும் சமதளத்திற்கு இறங்கவேயில்லை. உயரங்களிலும் சிகரங்களிலும் வசித்தாலும் அவர்களது வாழ்க்கை அதலபாதாளத்தில்தான். ஒருவேளை மலையகத்தமிழர்களில் 87 சதமானவர்கள் தலித்துகள் என்பதோ, டாலரும் பவுண்ட்சும் இல்லாத கூலித்தமிழர்கள் என்பதோ அல்லது பரபரப்பாக கவனிக்கப்படாது என்பதாலோ அவர்களைப் பற்றி தமிழ்த்தேசியவாதிகளோ, இனமானக் காவலர்களோ, ஊடகங்களோ பேசுவதேயில்லை. இலங்கையின் மலையகத்தமிழர் பற்றி மட்டுமல்ல, உலகம் முழுவதும் தமது காலனிகளாயிருந்த 40 நாடுகளுக்கு பிரிட்டிஷ், பிரான்ஸ் ஆட்சியாளர்கள் தமிழ்நாட்டு மக்களை பிடித்துப்போயிருக்கிறார்கள். தென்னாப்பிரிக்காவுக்கு இந்தியர் அழைத்துச் செல்லப்பட்டதன் (?) 150வது ஆண்டு விழாவை வெட்கங்கெட்டு கொண்டாடிக் கொண்டிருக்கிற இந்த நேரத்திலாவது 40 நாடுகளுக்கும் புலம் பெயர்த்து கொண்டுபோகப்பட்ட தமிழர் நலன் குறித்த விவாதம் தொடங்கப்பட வேண்டும். இல்லையானால் ஈழத்தமிழருக்காக வடிக்கப்படும் கண்ணீரை கபடம் நிறைந்ததென்றே வரலாறு குறித்துக் கொள்ளும்.

நன்றி : சூரியகதிர் 

”திருமணமாகாமல் ஆணும் பெண்ணும் சேர்ந்து வாழ்வதை வரவேற்கிறேன்!” நவம்பர் 21, 2009

Posted by மு.வி.நந்தினி in அரசியல், அலையன்ஸ் பிரான்சேஸ், இலங்கை தமிழர், கனிமொழி, குடும்பம், குட்டி ரேவதி, சமூகம், சாதி, சித்த மருத்துவர், சூரியகதிர், தமிழ், பெண்கள், லீனா மணிமேகலை.
Tags: , , , , , , ,
8 comments

 

photo : 'marakkanam' Bala

தமிழ் இலக்கியப் பரப்பில் அழுத்தமான பெண்ணிய கவிதைகளை எழுதி வருபவர் குட்டி ரேவதி! இவருடைய இரண்டாவது கவிதைத் தொகுப்புக்கு ‘முலைகள்’ என பெயரிட்டதாலேயே பெரும் சர்ச்சைகளுக்கு உள்ளானார். உள்ளடக்கம் காரணமாக அதே தொகுப்பு விமரிசகர்களால் பாராட்டவும்பட்டது. கவிதை, கட்டுரை என எழுத்து செயல்பாடுகளோடு பல்வேறு சமூகப் பிரச்சினைகள் குறித்து களஆய்வு செய்து ஆவணப்படுத்தியும் வருகிறார். சித்த மருத்துவர், புகைப்படக்காரர் என மேலும் பல முகங்கள் குட்டி ரேவதிக்கு…வெகுஜன பத்திரிகைகளில் இதுவரை பேசாத சில விஷயங்களை பேச வைக்க வேண்டும் என்ற முனைப்போடு குட்டி ரேவதியை அணுகியபோது ஆர்வத்தோடு ஒப்புக்கொண்டார். நன்பகல் வேளை ஒன்றில் சென்னை அலையன்ஸ் பிரான்சேஸ் வளாகத்தின் மர நிழல்களுக்கிடையே நடந்தது இந்தச் சந்திப்பு…

”படைப்பாளி என்பவர் சமூகத்தில் இருந்து எப்படி வேறுபடுகிறார்? பெண் கவிதைகள் மீதான விமரிசனம் இன்று எப்படி இருக்கிறது?”

எனக்குப் பிடிக்காததை இதுவரை வலிந்து செய்ததில்லை. தொலைதூரத்தில் தெரிகிற குறிப்பிட்ட ஒரு இலக்கை நோக்கிப் போக வேண்டும் என்ற திட்டமிடலும் இல்லை, எந்த அவசரமும் இல்லை. கவிதை எழுதுவது என் இயல்பு. கவிதையின் நீட்சியாக என்ன தோன்றுகிறதோ அதைச் செய்கிறேன். தடாகத்தில் தூக்கி எறியப்படுகிற கல்போல படைப்புகளைச் சமூகத்தின் முன் வைக்கிறோம். அதிர்வுகள் பெரிதாக இருக்கலாம், சிறியதாகவும் இருக்கலாம். ஆனால், சமீப காலமாக தமிழ் படைப்பாளிகளுக்கு அதிகாரத்தின் மீதான கவர்ச்சி அதிகமாகிக்கொண்டே வருகிறது. அதுவும் கடந்த இரண்டு வருடங்களாக ஈழம் சார்ந்து படைப்பாளிகளின் அணுகுமுறை கேள்விக்கு உட்படுத்தக்கூடியதாக இருக்கிறது. இங்கே போர் இல்லை. மூன்று வேளையும் சாப்பாடு கிடைக்கிறது. சவுகர்யமான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறோம். சமூகத்தைப் போல படைப்பாளிகளும் மந்தமாக மாறிக்கொண்டிருக்கிறார்கள். பெரிய எழுத்தாளர்கள் என… என் வாயால் அவர்கள் பேரைக்கூட உச்சரிக்க விரும்பவில்லை – பெண் கவிதைகள் குறித்து இதுவரை அவர்கள் நேர்மையான அணுகுமுறையோடு விமரிசனம் செய்ததில்லை. இதை திட்டமிட்ட சதி என்றுகூட சொல்லலாம். தொடர்ந்து இப்படிப்பட்ட புறக்கணிப்பு நிகழும்போது, பின்னால் வரும் சந்ததிக்குப் பெண் கவிதை குறித்த வரலாறே தெரியாமல் போகலாம்!

”இலங்கை பிரச்சினையில் அரசியல்வாதிகளைப்போல இலக்கியவாதிகள் நடந்துகொண்டார்கள் என்கிற விமரிசனம் எழுந்துள்ளது. இதில் உங்களுடைய கருத்து என்ன?”

சமீபகாலமாக ஈழ வரலாறு குறித்து அத்தனை நூல்களையும் தேடிப்பிடித்து படித்து வருகிறேன். நமக்கும் இலங்கைத் தமிழர்களுக்குமான பூகோள ரீதியான உறவுகள், சமூக, வரலாற்று, அரசியல் உறவுகள் நெகிழ்வைத் தருகின்றன. இப்படிப்பட்ட எந்த வகையான புரிதலும் இல்லாமல் ஆறேழு மாதங்களாக இலக்கியவாதிகளால் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டங்கள், கவியரங்கங்கள் கேலிக்கூத்தாகத்தான் இருந்தன. தொலைக்காட்சியில் காட்டப்படுகிற கொலைகளைப் பார்த்து உணர்ச்சிவசப்பட்டவர்களாகத்தான் இவர்கள் நடந்துகொண்டார்கள். நம்முடைய தம்பியோ, அண்ணனோ காயப்பட்டிருந்தால் உடல், மனம் என சகலமும் துடித்திருக்குமே! அந்தத் துடிப்பு நமக்கு வந்திருக்க வேண்டாமா? இதைவிட அபத்தம், தமிழக அரசின் உலகத் தமிழ் மாநாடு குறித்த அறிவிப்பு. ஆயிரம் ஆயிரமாக சொந்த உறவுகளைப் பறிகொடுத்துவிட்டு தமிழுக்கு விழா எடுத்து என்னவாகப்போகிறது? மொழியின் புளகாங்கிதத்தை பேசவா? தமிழ் மக்கள் குறித்தோ, பண்பாடு, இலக்கியம் குறித்தோ எந்தவித அறிதலும் அரசுக்குக் கிடையாது. நவீன இலக்கியத்தின் ஏஜென்சி போல கனிமொழியைச் செயல்பட வைப்பதுதான் இலக்கியம் குறித்து அரசுக்கு இருக்கிற அதிகபட்ச அக்கறை. 80,90 வயதுகளைக் கடந்த தமிழ் அறிஞர்களை வைத்து நடத்தப்படுகிற உலகத் தமிழ் மாநாட்டால் என்ன நடந்துவிடப்போகிறது? பசுமை நிறைந்த நினைவுகளே என பாடச்சொல்லியா கேட்கப்போகிறோம்?! வரலாற்றில் எங்கும் நிகழ்ந்திராத வன்முறை ஈழத்தில் நடந்திருக்கிறது. முப்பத்தைந்து ஆண்டுகாலமும் இதுவெறும் அரசியல் பிரச்சினையாக பார்க்கப்பட்டதாலேயே இன்று ஒட்டுமொத்த தமிழர்களும் கண்ணீரில் மிதந்து கொண்டிருக்கின்றனர். இந்தப் படுகொலைகளை நம்மால் தடுத்து நிறுத்தியிருக்க முடியும். நம் எல்லோருக்கும் இதில் பொறுப்பு இருக்கிறது.

 ”ஓரினச் சேர்க்கையை குற்றம் என சொல்லும் இந்தியக் குற்றவியல் சட்டம் 377வது பிரிவை நீக்குவது குறித்து உச்சநீதிமன்றம் பரிந்துரைத்துள்ள நிலையில் ஊடகங்களில் ஓரினச் சேர்க்கை குறித்து ஆரோக்கியமான விவாதம் எழுந்துள்ளது. கவிஞர் லீனா மணிமேகலை கூட தன்னுடைய ‘உலகின் முதல் அழகிய பெண்’ கவிதைத் தொகுப்பின் முன்னுரையில், தான் இருபால் விருப்பமுள்ளவர் என எழுதியுள்ளார். கட்டுப்பாடுகள் மிக்க இந்திய சமூகத்துக்குள் இத்தகைய வெளிப்படையான அறிவிப்புகள், விவாதங்கள் மாற்றங்களை ஏற்படுத்துமா?”

சட்டம் போட்ட பிறகுதான் ஊடகங்கள் ஒதுக்கப்பட்ட விஷயங்களைப் பேசவேண்டும் என்பதில்லை. அரசுக்குச் சொறிந்து கொடுக்கும் வேலையை விட்டுவிட்டு ஊடகங்கள் தன்னளவில் சுயமாக மக்களுக்காகச் செயல்பட முடியும். ஆனால், மனித மனங்களில் படிந்துபோயுள்ள வக்கிரமான பாலியல் ஆசைகளை நிறைவேற்றக்கூடியவையாகத்தான் பெரும்பாலான ஊடகங்கள் செய்தி வெளியிடுகின்றன. சமீபத்தில் நடிகை புவனேஸ்வரி கைது விவகாரத்திலும் அனந்தலட்சுமி கொலை சம்பவத்திலும் ஊடகங்கள் நடந்துகொண்ட விதத்தை உதாரணத்துக்கு எடுத்துக்கொள்ளுங்கள். அந்தந்த நேரத்தில் கிடைக்கும் செய்திகளின் தன்மைக்கு ஏற்றபடிதான் ஊடகங்கள் செயல்படுகின்றனவே தவிர சமூக மாற்றத்துக்காக அல்ல. சமூகம் குறித்த எந்தப் புரிதலும் இல்லாமல் ஒருவர், தன்னை இருபால் விருப்பமுள்ளவர் என சொல்லிக்கொள்வது மீடியாவின் கவனத்தை தன்பக்கம் ஈர்ப்பதற்கான முயற்சி. சமூகத்தின் மீது ஆழமான பார்வை வைத்திருக்கிறவர்களால் மேலோட்டமாக போகிற போக்கில் இப்படிப்பட்ட ஸ்டேட்மெண்டைக் கொடுக்க முடியாது.

”சமீப காலமாக ‘லிவிங் டுகெதர்’ என்று சொல்லப்படுகிற திருமணம் செய்யாமல் ஆணும் பெண்ணும் சேர்ந்து வாழ்வது அதிகரித்து வருகிறது. இது திருமணம் என்கிற நிறுவன அமைப்புக்கு மாற்றாக இருக்கும் என நம்புகிறீர்களா..?”

நானும் இப்படிப்பட்ட வாழ்க்கை முறையில் வாழ்ந்து கொண்டிருக்கிறேன் என்ற வகையில், ஆணும் பெண்ணும் சேர்ந்து வாழ்வது திருமண அமைப்புக்கு மாற்றாக இருக்கும் எனச் சொல்லமுடியும். ஆனால், முழுமையான மாற்றாக இருக்கும் என்று கூற முடியாது. பெண் மீதான பாலியல் ஒடுக்குமுறைகளுக்கும் திருமணம் என்கிற அதிகார அமைப்பின் முரண்பாடுகளுக்கும் இது தீர்வு தரும். ஆணும் பெண்ணும் சேர்ந்து வாழ்வதுதான் இயற்கையின் நியதி. ஆனால் திருமணம் என்பது காலில் போடப்பட்ட அடிமைச் சங்கிலி. அதனால், நல்ல ஆண்களுடன் சேர்ந்து வாழ்வதை நான் வரவேற்கிறேன். இந்த வாழ்க்கையில் பெண்களின் தனிப்பட்ட ஆளுமையைத் தக்கவைத்துக்கொள்ள முடியும். ஆண்களுக்கும்கூட இது இறுக்கம் தளர்ந்த வாழ்க்கையாக இருக்கும். இருவருடைய வாழ்க்கையும் லகுவாக அமையும். விவாகாரத்து பத்திரத்தில் கையெழுத்து போட்ட பிறகுதான் திருமண ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டும் என லெனின் சொன்னது போலத்தான் இன்றைய திருமண வாழ்க்கை இருக்கிறது. விவாகரத்தும் விவாகரத்துக்குப் பிறகான வாழ்க்கையும் நம் நாட்டில் கொடுமையான விஷயங்கள். ஆனால், திருமண அமைப்புக்குள் போகாமல் ஆணும் பெண்ணும் சேர்ந்து வாழும் வாழ்க்கையில் விடுதலைக்கான கனவுகள் திறந்திருக்கும். பெரியார் சொன்னதுபோல, ‘ஐந்து வருடம் சேர்ந்து வாழுங்க. அதுக்குப்பிறகு குழந்தை வேணும்னு நினைச்சா பெத்துக்குங்க..!’

 ”இறுதியாக…நாடாளுமன்ற தேர்தலின்போது பகுஜன் சமாஜ் கட்சியில் இணைந்து பணியாற்றினீர்கள். இப்போது கட்சியிலிலிருந்து விலகிவிட்டதாக தெரிகிறது. திடீர் அரசியல் பிரவேசத்துக்கும் விலகலுக்கும் என்ன காரணம்..?”

அரசியல் ரொம்ப அவசியம். ஆனால் அதற்கு இன்னும் நான் தயாராகவில்லை! மக்களோடு இன்னும் கீழே இறங்கி வேலை செய்ய வேண்டியது நிறைய இருக்கிறது. கூடவே தற்கால அரசியல் சூழலில் பெண்களுக்கான இடம் கேள்விக்குரியதாக இருக்கிறது. காலம் இருக்கிறது, மீண்டும் என்னுடைய அரசியல் பிரவேசம் எழுச்சியோடு நிகழும்!

நன்றி : சூரியகதிர்

பெண்களும் சாதி உணர்வும் நவம்பர் 2, 2009

Posted by மு.வி.நந்தினி in அரசியல், குடும்பம், சமூகம், சாதி, பெண்கள், முத்துராமலிங்க தேவர்.
Tags:
10 comments

FACES

டந்த பத்து ஆண்டுகளாக சென்னையில் வசிக்கிறேன். இந்த ஆண்டுதான் முத்துராமலிங்க தேவரின் பிறந்த நாள் விழாவை சென்னை எப்படி கொண்டாடுகிறது என்பதைக் காண முடிந்தது. சாதி வெறியின் அறுவறுப்பான கொண்டாட்டம்நீ முந்தி நான் முந்தி என ஓட்டுக் கட்சிகள் நடத்தும் ஆபாச கூத்துக்கள். முத்துராமலிங்க தேவரின் சிலை அமைக்கப்பட்டிருக்கும் நந்தனம் வழியே அலுவலகம் செல்ல வேண்டியிருந்ததால் இந்த கேவலங்களை நேரடியாக பார்க்க முடிந்தது.அப்பட்டமான சாதிவெறிக் கொண்டாட்டம்கோஷங்களை எழுப்பிக்கொண்டிருந்த அந்த சிறுவர்களின் முகத்தில் அப்படியொரு வெறித்தனம்சாலையில் பிதுங்கி வழிந்த நெரிசலில் சிக்கிக்கொண்டிருந்த அரை மணி நேரத்தில் ஒரு பெண் சாதி குறித்து சொன்ன அந்த பெருமித வார்த்தைகள் நினைவில் வந்து வந்து போயின.

திருமணம் ஆகி, குழந்தைக்கு தாயாகியும் பத்தாண்டு காலம் காதலித்தவனை மறக்க முடியாமல் கழுத்தில் கிடந்த தாலியை கழற்றி எறிந்து காதலித்தவனுடன் வாழ முடிவெடுத்தவர் அந்தப் பெண். புரட்சிகரமான இந்த முடிவுக்கேற்றபடி சில மாதங்கள் காதலனுடன் வாழவும் செய்தவர். பெற்றோருக்கு விஷயம் தெரியவர காதலனை விட்டு கணவருடன் மீண்டும் இணைந்தவர். சமூகத்துக்காக கணவருடன் வசித்தாலும் இன்னமும் மனதளவில் அவர் காதலனுடன் வாழ்வதாகவே நினைக்கிறவர்.

எல்லாவற்றையும் உதறிவிட்டு ஏன் நீங்கள் விரும்பியவருடனேயே வாழக்கூடாது என கேட்டதற்கு அவர் சொன்ன பதில்..நாங்க தேவர் ஜாதிஅவர் வேற ஜாதிநாங்க எப்படி காலம் முழுசும் சேர்ந்து வாழ முடியும்?

தான் எப்படி வாழ வேண்டும் தீர்மானித்துக் கொண்ட அந்தப் பெண்ணின் முடிவு குறித்து கருத்து சொல்ல எதுவும் இல்லை. அது அவருடைய தனிப்பட்ட விருப்பம் சார்ந்தது. இங்கு விவாதத்திற்கு உள்ளாக்கப்பட வேண்டிய விருப்பப்பட்டவருடன் சேர்ந்து வாழ அந்தப் பெண் சொன்ன காரணத்தைத்தான். சமூகத்துக்கு தெரியாமல் தன் சாதி அல்லாத தான் விரும்பிய ஆணுடன் வாழ முற்பட்டவருக்கு, நாலு பேருக்கு தெரிய வரும் சூழல் வரும்போது தான் பிறந்த சாதி முக்கியமாகப் படுகிறது. பொதுவாக ஆண்கள்தான் சாதியை ஆணித்தரமாக கடைப்பிடிப்பவர்களாக கண்டிருக்கிறோம், ஆண்களுக்குத்தான் சாதீய உணர்வு அதிகம் எனவும் பேசுகிறோம். நிதர்சனத்தில் ஆண்களுக்கு இருக்கும் அதே அளவில் பெண்களுக்கும் சாதி உணர்வு,பெருமிதம் இருக்கிறது. குடும்பம் என்னும் அமைப்பின் மூலம் ஒரு தலைமுறையிலிருந்து மற்றொரு தலைமுறைக்கு சாதி கருத்தாக்கங்களை கொண்டு செல்வதில் பெண்களுக்கு பெரும் பங்கு இருக்கிறது. ஆண் சட்டம் போடுபவனாக இருக்க, பெண் அதை செயலாற்றவும் கட்டிக்காப்பாற்றவும் செய்கிறார். பள்ளிக் காலங்களிலேயே சக தோழிகள் சாதி தொடர்புடைய விஷயங்களில் கவனமாக இருந்துவந்ததை அவதானித்திருக்கிறேன். என்ன சாதி என்பதைப் பொறுத்தே பேச்சும் பழக்கமும் இருக்கும். பொதுவெளியில் கிடைக்காத சுதந்திரம் பெண்களை சாதி உணர்வற்றவர்களாகக் காட்டிக்கொண்டிருக்கிறது. தன் சாதியைச் சேராதவர்கள் மீது நேரடியாக ஆண்களைப் போல வன்முறையை ஏவிவிடாதபோதும், சாதி தீயை அணைந்துவிடாமல் காப்பாற்றுவதை பெண்கள் தொடர்ந்து செய்துவருகிறார்கள். இது விரிவாகப் பதிவு செய்யப்பட வேண்டும். பெண்கள் தொடர்புடைய பிரச்சினைகள் குறித்து பேசும்போது பெண்களுக்கும் சாதிக்குமான உறவு குறித்தும் பேச வேண்டும்

நடைமுறை சார்ந்த அணுகுமுறை புலிகளிடம் இல்லை! April 27, 2009

Posted by மு.வி.நந்தினி in அரசியல், ஆயுதப் போராட்டம், இன உணர்வு, இலங்கை தமிழர், ஊடகம், சமூகம், செப்டம்பர் 11, நேபாள மாவோயிஸ்ட்கள், புதுவை சுகுமாறன், போராட்டம், போர்ச்சூழல், விடுதலைப் புலிகள்.
Tags: , , , , , ,
49 comments

nepal-maoist-postersற்போதுள்ள சூழ்நிலையில் இலங்கை தமிழர் பிரச்சினை குறித்து என்ன பேசினாலும் நம்முடைய சார்பு நிலையில் எல்லோருக்கும் சந்தேகம் வந்துவிடுகிறது. அதாவது புலிகளுக்கு ஆதரவு-இலங்கை தமிழருக்கு ஆதரவு அல்லது புலிகளுக்கு எதிர்ப்பு-இலங்கை அரசுக்கு ஆதரவு. இவை இரண்டைத்தவிர மற்றொரு நிலைப்பாடும் இருக்கக்கூடும், தேவையாக இருக்கிறது என்பதை பலரும் சிந்திக்கக்கூட மறுக்கிறார்கள். அரசியல் கட்சிகள் முதல்கொண்டு ஊடகங்கள் வரை தங்கள் ஆதாயத்துக்குகேற்றபடி நிலைப்பாட்டினை எடுக்கின்றன. பொதுபுத்தியில் படிந்துபோயுள்ள தமிழர் என்கிற இனவுணர்வைத் தூண்டி ஆதாயம் பெறப்பார்க்கின்றன. அறிவுஜீவிகள் என்று மார்தட்டிக் கொள்கிறவர்களின் செயல்பாடும் இப்படித்தான் உள்ளது. சாதி உணர்வு, மத உணர்வு எந்த அளவுக்கு பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்துமோ அதே அளவுக்கு கண்மூடித்தனமான இன உணர்வும் பக்க விளைவுகளை ஏற்படுத்தக்கூடியதே.

இலங்கை தமிழர் பிரச்சினையில் நாம் இப்போது செய்ய வேண்டியதெல்லாம் உணர்ச்சி வசப்படுவதை விட்டுவிட்டு அடுத்த நகர்வு குறித்து யோசிப்பதுதான். இன்னும் பல தசாப்தங்களுக்கு போரை நடத்திக்கொண்டிருப்பதா? போர் முடிவுக்கு வரும்பட்சத்தில் தமிழர், இலங்கையில் நிலையான அமைதியோடு வாழ வழிவகை என்ன? நம்முன் இருக்கும் கேள்விகள்

நேபாளத்தில் ஜனநாயகத்தை ஏற்படுத்தி ஆயுத ஏந்திய மாவோயிஸ்டுகளின் அணுகுமுறையை இலங்கை பிரச்சினையில் புலிகள் ஏன் ஆராய்ந்து பார்க்கக்கூடாது? நேபாளத்தில் மன்னராட்சியும் நிலப்பிரபுத்துவமும் பிரச்சினைகள் என்றால் இலங்கையில் இருப்பது இனப்பிரச்சினை என்று மேலோட்டமாகப்பார்த்து தள்ளிவைக்காமல் இது குறித்து சிந்தனையும் விவாதமும் செய்ய வேண்டியிருக்கிறது. கடந்த ஆண்டு நேபாள அரசியல் நிர்ணநய சபைக்கான தேர்தலுக்குப் பார்வையாளராக சென்று வந்திருந்த புதுவை சுகுமாறனிடம் நான் கண்ட நேர்காணலின் சுருக்கப்பட்ட வடிவம் இது. நான் பணியாற்றிய வார இதழில் வெளியானது . சூழ்நிலை கருதி மீள்பிரசுரம் செய்கிறேன்.

மக்கள் ஆட்சியா, மன்னர் ஆட்சியா என்று புயல் வீசிக்கொண்டு இருந்த நேபாளத்தில் இப்போது ஜனநாயகக் காற்று! பத்தாண்டுகளாக நடந்த ஆயுதப் போராட்டத்தின் முடிவில், மாவோயிஸ்ட்கள் தலைமையிலான ஆட்சி அமைந்திருக்கிறது. நேபாள அரசியல் நிர்ணய சபைத் தேர்தலின் பார்வையாளராகச் சென்று வந்த மனித உரிமை ஆர்வலர் புதுவை கோ.சுகுமாறனுடன் ஒரு சந்திப்பு

”ஆயுதம் தாங்கிய போராட்ட அமைப்பான மாவோயிஸ்ட்கள் நேபாளத் தேர்தலில் வெற்றி பெற்றிருக்கிறார்கள். எப்படி இது சாத்தியமாயிற்று?”

”நேபாள மக்களின் ஒரே வருமானம் சுற்றுலாதான். காட்மாண்டு நகரம், இரண்டு மலைகளுக்கு நடுவே கோடையிலும் கொப்பளிக்கும் நாராயணி ஆறு. இந்த இரண்டும் கொள்ளை அழகுடையவை. இருந்தாலும், ஏழ்மையும் வறுமையும்தான் நேபாளத்தின் உண்மையான முகம். விவசாயம் நொடித் துப்போன பல லட்சம் பேர் கூர்க்காக்களாக, இந்தியாவுக்கும் கொரியாவுக்கும் கிளம்பிவிடுகிறார்கள். கடந்த 240 ஆண்டுகளாக மன்னரைக் கடவுளாக நினைத்து, அவர் தங்களுக்கு நல்லது செய்வார் என்று நம்பிக்கொண்டு இருந்தவர்கள் நேபாள மக்கள். 1996ல் மன்னர் குடும்பத்துக்குள்ளேயே நடந்த படுகொலைகள் அந்த நம்பிக்கையை முதன்முறையாகத் தகர்த்தன. அதன் பிறகுதான் கட்சிகளின் மேல் மக்கள் நம்பிக்கை வைக்கத் தொடங்கினார்கள். மன்னராட்சிக்கு எதிரான போராட்டத்தை முன்னெடுத்துச் சென்றார்கள் மாவோயிஸ்ட்கள். கடந்த பத்தாண்டுகளாக நடந்த போராட்டத்தில் இரண்டு தரப்பிலும் சேர்த்து 12 ஆயிரம் பேர் உயிர் இழந்திருக்கிறார்கள். இரண்டு முறை தள்ளி வைக்கப்பட்டு, மூன்றாவது முறையாக அரசியல் நிர்ணய சபைக்கான தேர்தல் இப்போது நடந்தது. மாவோயிஸ்ட்கள் இதில் பெரும்பான்மையான இடங்களைப் பிடித்து வென்றதற்கு அரசியல்ரீதியாக நிறைய காரணங்கள் இருந்தாலும் அடித்தட்டு மக்களை ஒன்றிணைத்ததுதான் முக்கியமான காரணம்! தேர்தல் மிக அமைதியாக நடந்தது. கிட்டத்தட்ட 85 சதவிகித ஓட்டுப்பதிவு நடந்தது. ரொம்பவும் சாதாரணமாக மரத்தடியில் ஓட்டுப் பெட்டியை வைத்திருந்தார்கள். ஓட்டு எண்ணுவதும்கூட அதீத பாதுகாப்பு இல்லாமல் எளிமையாக, நேர்மையாக நடந்தது. இந்தத் தேர்தல் வெற்றி என்பது, நேபாள மக்களின் அமைதிக்குக் கிடைத்த வெற்றி!”

”ஆயுதங்களைத் தூக்கிப் போட்டுவிட்டு ஜனநாயகத்துக்குத் திரும்பியிருக்கும் மாவோயிஸ்ட்கள், இதே நிலையைத் தொடர்வார்களா?”

”செப்டம்பர் 11 சம்பவத்துக்குப் பிறகு, ஆயுதம் தாங்கிய போராட்டக் குழுக்கள் அனைத்தையும் தீவிரவாத அமைப்புகளாக அறிவித்தது அமெரிக்கா. இதனால், விடுதலைப் புலிகள் உள்பட பல போராட்டக் குழுக்கள் அந்தந்த நாடுகளுடன் அமைதிப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டன. பெரும்பாலும் அவை தோல்வியிலேயே முடிந்தன. நேபாள மாவோயிஸ்ட்கள் மட்டுமே இந்த வாய்ப்பைச் சரியாகப் பயன்படுத்திக்கொண்டார்கள். நேபாள மாவோயிஸ்ட் கட்சியின் தலைவர் பிரசண்டவிடம், ‘ஜனநாயகப் பாதையில் நீடிப்பீர்களா?’ என்று கேட்டோம். ”ஆயுதம் வைத்துக்கொள்ள வேண்டிய நிர்பந்தத்தில்தான் ஆயுதம் தூக்கினோம். இனி, அது தேவைப்படாது. ஆயுதம் ஏந்திய போராட்டங்களில் ஈடுபட்டிருக்கும் மூன்றாவது உலக நாடுகளைச் சேர்ந்த அமைப்புகளுக்கு நாங்கள் முன்னுதாரணமாக இருப்போம்” என்றார்.”

”நேபாளத்தில் ஜனநாயகம் மலர்ந்திருப்பதை இந்தியா எப்படிப் பார்க்கிறது?”

”ஒருவகையில் இது இந்தியாவுக்குக் கிடைத்த அடிதான். மாவோயிஸ்ட்கள் தலைமையில் ஆட்சி அமைவதை ஒருவித படபடப்புடன்தான் பார்க்கிறது இந்தியா. நேபாளத்தில் செல்வாக்கான கட்சியான மாதேஸி கட்சி, ஆரம்பத்தில் இந்தத் தேர்தலில் பங்கேற்க மறுத்து வந்தது. இதன் பின்னணியில் இந்திய உளவுத் துறை இருப்பதாகச் சொல்கிறார்கள். அரண்மனையிலிருந்து வெளியேறப்போகும் நேபாள மன்னரை இந்தியாவில் தங்கவைக்க இந்திய அரசு விரும்புவதாகச் சொல்கிறார்கள். அதை மாவோயிஸ்ட்கள் விரும்பவில்லை. இதுவரை சீனா வெளிப்படையாக ஆதரவு தெரிவிக்கவில்லை என்றாலும், அது மாவோயிஸ்ட்களுக்கு ஆதரவாகவே இருக்கும் என்கிறார்கள். இந்தியா என்ன செய்யப்போகிறது என்று பார்க்கலாம்!”

”நேபாள மாவோயிஸ்ட்களின் இந்த வெற்றி, மற்ற ஆயுதப் போராட்ட அமைப்புகளுக்கு வழிகாட்டுமா?”

”நிச்சயமாக! 1983லிருந்து ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் புலிகளால் இதுவரை அமைதியை எட்ட முடியவில்லை. காரணம், மாவோயிஸ்ட்களைப் போல நடைமுறை சார்ந்த அணுகுமுறை புலிகளிடம் இல்லை. விடுதலைப்புலிகள் இந்த முன்னுதாரணத்தைப் பரிசீலிக்கச் செய்ய வேண்டிய நேரம் இது!”

14-5-08

லக்ஷ்மணானந்தா கொலையை துப்பு துலக்கினார் குருசாமி! April 13, 2009

Posted by மு.வி.நந்தினி in அரசியல், இந்துத்துவம், ஒரிசா, கந்தமால், பழங்குடிகள், பா.ஜ.க. வேட்பாளர், லக்ஷ்மணானந்தா கொலை.
Tags: , , ,
8 comments

kandhamal violence

ஒரிசாவில் இந்துத்துவம் - பின்னணி

ஒரிசாவின் கந்தமால் மாவட்டம் இந்துத்துவதீவிரவாதத்திற்கு உதாரணமாகும் சிறப்புத் தகுதி உடையது. காலங்காலமாக சமூகத்தில் ஒடுக்கப்பட்டு வாழும் தலித்துகளும் பழங்குடிகளும் இம்மாவட்ட மக்கள். கிறித்துவ மிஷனரிகள் தலித், பழங்குடிகள் மத்தியில் பணியாற்றிவருகிறார்கள். விளைவாக மதமாற்றங்களும் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. பழங்குடிகள் கிறித்துவர்களாக மாறும்போது பழங்குடிகளுக்குண்டான அரசாங்க உரிமைகள் அத்தனையும் கிடைக்கும் என்பதும் தலித்துகள் கிறித்துவர்களாக மாறும் தலித்துகளுக்குரிய உரிமைகள் இல்லை, அதனால் மிஷனரிகள் பிரத்யேக உரிமைகளை தலித்துகளுக்குப் பெற்றுத்தர முயற்சித்தார்கள் என்பதும் இங்கு தலித்-பழங்குடிகளிடையே புகைச்சல் ஏற்பட்டதன் பின்னணி. இதை ஆர்.எஸ்.எஸ், விஷ்வ ஹிந்து பரிஷத், பா..க போன்ற இந்துத்துவ சக்திகள் பயன்படுத்திக் கொண்டன. இந்த புகைச்சலை ஊதிப்பெரிதாக்கிள எரிய விட்டு வேடிக்கைப் பார்க்க ஆரம்பித்தன். 1994 முதல் தலித்-பழங்குடி மோதல் கிறித்துவர்கள்-இந்துக்கள் இடையேயான மோதலாக உருவெடுத்தது. விஷ்வ ஹிந்து பரிஷத்,ஆஸ்ரமங்கள் என்ற பெயரில் கந்தாஸ் பழங்குடி இன மக்களை வன்முறையாளர்களாக இந்துத்துவ ரவடிகளாக மாற்றத் தொடங்கியது. இதில் முக்கியமானவர் லக்ஷ்மாணனந்தா சாமியார் 1960களிலே கர சேவை செய்வதற்காக கந்தமால் மாவட்டத்தில் ஆசிரமம் அமைத்தவர். கிறித்துவத்துக்கு மாறும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிராக பழங்குடி மக்களை இந்துத்துவ விஷத்தை ஊட்டி ஏவி விட்டுக்கொண்டிருந்தவர். கிறித்துவதுக்கு மதம் மாறிய தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி மக்களை தாய்மதத்திற்கு திருப்புவதுதான் பல பத்தாண்டுகளாக இவர் செய்து வந்த குறிப்பிடத்தகுந்த மற்றொரு வேலை!

கிறிஸ்துமசுக்கு முன் தினமான டிசம்பர் 24, 2007ல் சதாரணமாக இருதரப்பினருக்கிடையே ஆரம்பித்த வாய்ச்சண்டை கிறித்துவ தலித்துகளுக்கு எதிராக பெரும் கலவரமாக வெடித்தன் பின்னணியில் லக்ஷ்மணானந்தா சாமியார் இருந்ததாக கைகாட்டுகிறார்கள். சர்ச்சுகளுக்கு முன்பு தலித் கிறித்துவர்கள் உயிரேடு கொலுத்தப்பட்டது, கிராமம் கிராமமாக கிறித்துவர்களின் வீடுகள்,இருந்த சுவடே தெரியாமல் அடித்து நொறுக்கப்பட்டது, குழந்தை,பெண்கள் உள்பட பல கிறித்துவர்கள் தேடிக் கொல்லப்பட்டது என வன்முறைகள் இந்துத்துவதீவிரவாதிகளால் திட்டமிட்டு கட்டவிழ்க்கப்பட்டன. (தலையில் காவித்துணி கட்டி, இரண்டு கைகளும் வாள் ஏந்தி விண்ணை அதிரவைக்கும்படி கூவிக்கொண்டு வன்முறையை காட்டிய ஒரு காவித்தொண்டரின் புகைப்படம் அத்தனை நாளிதழ்களின் முதல் பக்கத்தில் வந்தது நினைவிருக்கலாம்!) பா..க ஆதரவோடு ஆட்சியை அலங்கரித்துக்கொண்டிருந்த நவீன் பட்நாயக் அரசு வன்முறையை தடுத்து நிறுத்தும் நோக்கில் எதுவும் செய்யவில்லை, கைகட்டி வேடிக்கைப் பார்த்தது. அந்த தாக்குதலின் போது சேதமான வீடுகள்கூட இன்னும் அங்கே சீரமைக்கப்படவில்லை.

 லக்ஷ்மணானந்தா கொலையை துப்பு துலக்கினார் குருசாமி!

கடந்த வாரம் என்னுடைய தோழியை சந்திப்பதற்காக எத்திராஜ் கல்லூரிக்குச் சென்றிருந்தேன். தோழியை பார்க்க நேரமெடுத்ததில் எதிரே இருந்த ஷாப்பிங் காம்ளக்ஸ்சுக்குள் நுழைந்து பராக்கு பார்த்துக்கொண்டிருந்தபோதுதான் அந்த அடுக்கி வைக்கப்பட்டிருந்த ஜெராக்ஸ் காப்பிகள் கண்ணில் பட்டன. ‘லக்ஷ்மணானந்த படுகொலை - யார் கொலையாளி?’ தலைப்பில் எஸ்.குருமூர்த்தி துக்ளத் பத்திரிகையில் எழுதிய கட்டுரையின் நகல்கள் அவை. அந்தக்கடைக்காரர் காவித்தொண்டர் போலும் இலவச விநியோகம் செய்துகொண்டிருந்தார்.

ஆகஸ்ட் 2008ல் லக்ஷ்மணானந்தா என்ற விஷ்வ ஹிந்து பரிஷத் சாமியார் சுட்டுக்கொலை செய்யப்பட்டதை ஆராய்ந்து எழுதியிருக்கிறார் குருசாமி. கட்டுரையின் சாரம் லக்ஷ்மணானந்தா, ஒரிசாவில் ஆற்றிய தொண்டுகள், அப்பாவியான அவரை கிறித்துவ தீவிரவாத அமைப்புகளும் மாவோயிஸ்டுகளும் சேர்ந்து தீர்த்துக்கட்டினர் என்பதே. அவர் துணைக்கு அழைத்திருந்தது ஒரிசா முன்னாள் டி.ஜி.பி. அசோக் சாகு என்பவரை.

” ‘இந்த(கந்தமால்) தாக்குதலில் ஈடுபட்டவர்கள் எல்லோரும் புதிதாக மதம்மாறிய கிறிஸ்தவர்கள்என்று ஒரிஸ்ஸாவின் முன்னாள் கூடுதல் டி.ஜி.பி. அசோக் சாகு என்பவர் தன்னுடைய கட்டுரையில் எழுதியிருக்கிறார்என்று தன் கட்டுரையில் குறிப்பிட்டு..

“மலைவாழ் மக்களிடையே நடக்கும் மத மாற்றங்கள் நாகாலாந்து, மிசோரம், மேகாலயா, திரிபுரா போன்ற மாநிலங்களில் கிறித்துவ தீவிரவாதமாகவும் பயங்கரவாதமாகவும் மாறி பிரிவினை சக்திகளை தூண்டி விட்டிருக்கிறது என்கிறார் அசோக் சாகுஎன்று தன்னுடைய துப்பு துலக்கலுக்கு ஆதாரம் காட்டுகிறார் குருசாமி. வடகிழக்கு மாநிலங்களில் தீவிரவாதம் தழைக்க நிதர்சனமான காரணங்களான அரசாங்க புறக்கணிப்பும் தொடரும் வறுமையும் வேலையின்மையும் வசதியாக மூடி மறைக்கப்பட்டு, கிறித்துவர்களாக மாறியதே காரணமென கண்டுபிடித்துச் சொல்கிறது காவிப்படை. அந்த காரணத்தை ஒரிசாவுக்கும் பொறுத்தப்பார்க்கிறது. இந்த காரணத்தை கண்டுபிடித்தமைக்காக குருசாமி சிபாரிசு செய்தாரோ என்னவோ.. அதே அசோக் சாகுதான், கந்தமால் தொகுதி பா... வேட்பாளர்.

 

sadhu violence

வேட்பாளரைக் காணவில்லை!

இந்துத்துவ தீவிரவாதிகளுக்கு பா..கவில் தனித்த இடம் உண்டு. நான்கு சிறுபான்மையினரை வெட்டிக்கொன்றால் அல்லது 40 சிறுபான்மையினர் வீடுகள் நாசமா போகக்காரணமாக இருந்தால் இந்தா புடி எம்.பி சீட்டு என்று வெளியே சொல்லப்படாத சட்டம் இருக்கும்போல. போன மாதம்தான் குஜராத் கலவரத்தில் தேடப்பட்டு வந்த மோடி அமைச்சரவையின் உயர் கல்வித்துறை அமைச்சர் போலீசில் சரணடைந்தார். இப்போது கந்தமால் தொகுதி வேட்பாளர் அசோக் சாகுவைத் தேடுகிறது மாநில போலீஸ். எம்.பி ஆகி அமைச்சர் ஆவதற்குள் விதி விளையாடிவிட்டது. முன்னாள் விஷ்வ ஹிந்து தொண்டரும் ஐபிஎஸ் படித்தவருமான அசோக் சாகு, ஒரிசாவின் குருசாமி! தேடித்தேடி கிறித்துவபயங்கரவாதம், ‘முஸ்லிம்தீவிரவாதம் என்றெல்லாம் கட்டுரை எழுதுவார். (சங்க் பரிவார் இணைய தளத்தில் இவருடைய கட்டுரைகள் படிக்கக் கிடைக்கும்) எழுதுவதோடு, காவித்தொண்டாற்றுவதோடு நிறுத்திக்கொண்டிருக்கலாம். எம்.பி.சீட்டுக்கு ஆசைப்பட்டு தேர்தல் களத்தில் இறங்கிவிட்டார். போதாத காலம்தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் இவர் பேசிய எழுச்சியூட்டும் பேச்சு‘(‘லக்ஷ்மணானந்தா சாமிகளை கொன்றது யார்? கொலை செய்தவனுக்குத் தெரியுமா இதற்கு பயங்கரமான பின்விளைவுகள் ஏற்படும் என்று?’) தேர்தல் ஆணைய விதிகளின்படி சர்ச்சைக்குரிய பேச்சாகிவிட்டது. மூன்று பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து கைது செய்ய காவல்துறை காத்திருக்க அப்ஸ்கான்ட் ஆகிவிட்டார் அசோக் சாகு!

இப்படிப்பட்ட மதிப்பிற்குரியவர் எழுதிய கட்டுரைகளைத் தோண்டித்துருவி ஆராய்ந்து கந்தமால் மக்களின் ரட்சகர்களாக காவித்தொண்டர்களை முன்னிறுத்த கட்டுரை எழுதியிருக்கிறார் குருசாமி. அப்பட்டமான மத படுகொலைகளுக்குப் பின்னணியில் இருக்கும் உண்மையை மூடிமறைக்கப் பார்க்கிறது காவித்துணி. இப்போதைக்கு அது கிழிந்து தொங்கிக்கொண்டிருக்கிறது!

“பெண்கள் சுயஉதவிக்குழு பணம் வட்டித்தொழில் செய்யத்தான் பயன்படுகிறது!” மார்ச் 30, 2009

Posted by மு.வி.நந்தினி in அண்ணி, அரசியல், இடஒதுக்கீடு, சுய உதவிக்குழு, திருநங்கைகள், தே.மு.தி.க, நரிக்குறவர் இனப் பெண்கள், பழங்குடி, பழங்குடிகள், பிரேமலதா விஜயகாந்த், பெண்கள், விருத்தாசலம் தொகுதி, ஸ்டாலின்.
6 comments
premalatha-vijaykant1

அரசியல்வாதிகளுடன் பேசுவதே ஒருவகையில் காமெடியான அனுபவம்தான். நிசர்சனத்தை அவர்கள் நன்றாகவே உணர்ந்திருந்தபோதும்,அதை மறைத்து வெளி அலங்காரம் பூசிக்கொண்டு நடிப்பில் கைத்தேர்ந்தவர்கள். சில சமயம் அவர்களை அறியாமலே உண்மையான முகத்தைக் காட்டிவிடுவார்கள். பிரேமலதாவும் நடித்தார். வெகுஜன இதழ்களில் எழுதும் அந்த நடிப்பையும் உண்மையென சொல்ல வேண்டிய கட்டாயம் இருக்கிறது. ஆனாலும் மற்ற அரசியல்வாதிகள் செய்யும் அரசியலைவிட, தேமுதிக-வின் அரசியல் கொஞ்சம் வித்தியாசமாகத்தான் இருக்கிறது.
ஒரு வருடத்திற்கு முன் பிரேமலதாவுடன் நடந்த சந்திப்பு. நிறைய பேசினார். நிறைய எழுதியதை உதவி ஆசிரியர் எடிட் செய்யப்பட்டு வெளியானது இந்த பேட்டி. அவர் பேசிய ஒரு முக்கியமான விஷயம் பெண்கள் சுயஉதவிக்குழுக்கள் பற்றியது. பெண்களின் சுய முன்னேற்றத்திற்காக தொடங்கப்பட்டது என்று சொல்லிக்கொண்டு அரசியல்வாதிகள் பெண்களை வட்டித்தொழிலுக்கு கொண்டுவந்து நிறுத்தியிருக்கிறார். இதுகுறித்து நிறையவே பேச வேண்டியிருக்கிறது… தேர்தல் அரசியல் சூடு பிடித்திருக்கும் வேளையில் தேமுதிக-வின் அரசியல் நிலைப்பாட்டை கணிக்கும் ஆர்வத்தோடு பிரேமலதா விஜயகாந்தின் பேட்டியை மறுபிரசுரம் செய்கிறேன். நண்பர்களின் கருத்துக்களை ஆவலோடு எதிர்ப்பார்க்கிறேன்.

பிரேமலதா விஜயகாந்த்சமீபத்தில், திருச்சியில் நடந்த தே.மு.தி.. மகளிர் மாநாட்டை முன்னின்று நடத்தியதிலிருந்து, அரசியல் வட்டாரத்தில்ஹாட் டாப்பிக்ஆகியிருக்கிறார். கடைசி கேள்வி வரை எந்தவிதப் பதற்றமோ முகச்சுளிப்போ இல்லாமல், பக்குவப்பட்ட ஓர் அரசியல்வாதி போன்று மிகத் தெளிவாகவும் நிதானமாகவும் பதில் சொல்கிறார்.

”எப்படி இருந்தது மகளிர் மாநாடு?”

”சூப்பர் ஹிட்! மாநாடு அறிவித்து இருபதே நாட்களில் கிட்டத்தட்ட 7 லட்சம் பெண்கள் கலந்துகொண்டு வரலாறுபடைத்து இருக்கிறார்கள். இதற்கு முன் வேறு எந்தக் கட்சியிலும் இவ்வளவு பெண்கள் ஒரே இடத்தில் கூடியது இல்லை. பணம் தரவில்லை; பிரியாணி போடவில்லை. ‘குடும்பத்தோடு கலந்துக்கணும்’ என்று கேப்டன் சொன்ன வார்த்தைகளுக்கு மதிப்புக் கொடுத்து, கூட்டத்துக்கு வந்து கலந்துகொண்டு தங்களுடைய உண்மையான பாசத்தை நிரூபித்துவிட்டார்கள் எங்கள் பெண்கள்!”

”உங்களை முன்னிலைப்படுத்துவதற்காகத்தான் இந்த மகளிர் மாநாடு நடத்தப்பட்டதா?”

”எந்தக் கட்சியிலும் இல்லாத பல பாஸிட்டிவான விஷயங்கள் எங்கள் கட்சியில் இருக்கின்றன. அதையெல்லாம் பார்க்கமறுக்கிறவர்கள்தான் ‘மனைவி, மச்சினன்’ என்று தேவை இல்லாத விஷயங்களைப் பற்றிப் பேசுகிறார்கள். கடந்த சட்டமன்றத் தேர்த லில் கேப்டன் நின்ற தொகுதியைத் தவிர்த்து மொத்தம் 233 தொகுதிகளில், ஒரே ஒரு தொகுதியில் மட்டுமே என் சகோதரர் நின்றார். மற்ற அனைத்துத் தொகுதிகளும் கேப்டனுக்கு ரசிகர்களாக இருந்து கட்சியில் இணைந்தவர்களுக்கும், புதிதாகக் கட்சியில் சேர்ந்தவர்களுக்கும் சமமாகப் பகிர்ந்து கொடுக்கப்பட்டன. அவர்கள் யாரும் ரத்த உறவு உள்ளவர்கள் இல்லை.

மாநாடு அறிவிப்பு செய்தபோது, ‘பிரேமலதாவுக்குக் கட்சியில் முக்கியமான பதவி தரப்போகிறார்கள். அதை அறிவிக்கத்தான் இந்த மாநாடுஎன்றார்கள். இதோ, மாநாடு நடந்து ஒரு வாரம் ஆகிவிட்டது. இதுவரை எனக்கு எந்தப் பதவியும் கொடுக்கப்படவில்லை. நான் தே.மு.தி.கவின் அடிப்படை உறுப்பினர் மட்டுமே! தலைவரின் மனைவி என்ற வகையில் என்னை மகளிர் மாநாட்டுக்குத் தலைமை ஏற்க வைத்தார்கள். அவ்வளவுதான்!

கட்சிப் பதவிகளுக்கு வரும் எண்ணமோ, தேர்தலில் போட்டியிடும் ஆர்வமோ எனக்கு இல்லை. இனிமேலும் வரப்போவது இல்லை. புரட்சிக்கலைஞரின் மனைவி என்பதே எனக்குக் கிடைத்த மிகப் பெரிய மரியாதை. தொண்டர்கள் என்னை அன்போடுஅண்ணிஎன்று அழைப்பதே எனக்குக் கிடைத்த மிகப் பெரிய பட்டம்!”

”சமீபகாலமாக உள்ளாட்சித் துறை அமைச்சர் ஸ்டாலின், சுய உதவிக் குழு பெண்களுக்கு நிறைய நலத் திட்டங்கள் வழங்குவதைப் பார்த்துதான், பெண்களை ஈர்க்கும் வகையில் உங்கள் மகளிர் மாநாட்டிலும் சுய உதவிக் குழுப் பெண்களுக்கு உதவிகள் வழங்கப்பட்டதாகச் சொல்லப்படுகிறதே?”

”எங்கள் தலைவர் பிறரைப் பார்த்து உதவி செய்யக்கூடியவர் அல்ல; உதவி செய்வது என்பது அவருடைய பிறவிக் குணம். நடிக்க வந்து, இந்த 30 வருடங்களாக ஏழை, எளியவர்களுக்கு ரசிகர் மன்றங்கள் மூலமாக நிறைய உதவிகள் செய்துகொண்டு இருக்கிறார். அவருடைய ஒவ்வொரு பிறந்த நாளின்போதும் எம்.ஜி.ஆர். காது கேளாதோர் பள்ளிக்கு 50 ஆயிரம் கொடுத்து வருகிறார். கிட்டத்தட்ட 15 வருடங்களாக, ஜானகி அம்மாள் உயிருடன் இருந்தபோதிலிருந்தே இதைச் செய்து வருகிறார். ஆனால், எம்.ஜி.ஆரைச் சொந்தம் கொண்டாடுபவர்களுக்கு இப்போதுதான் உதவி செய்ய மனசு வந்திருக்கிறது! அ.தி.மு.க., தி.மு.க. கட்சிகள் ஆட்சிக்கு வரும்போதெல்லாம், ஏதோ தாங்கள்தான் பெண்கள் சுய உதவிக் குழுக்களை எல்லாம் வளர்த்துவிட்டதாக மார்தட்டிக்கொள்வார்கள். உண்மையில், சுய உதவிக் குழுக்களில் என்ன நடக்கிறது என்பது பற்றி யாருக்கும் அக்கறை கிடையாது. பல கிராமங்களில் உள்ள பெண்கள் சுய உதவிக் குழுக்களுக்கு, கிடைக்கும் பணத்தை வைத்து என்ன பொருளைத் தயாரிப்பது, அதை எப்படி விற்பது என்று எதுவுமே தெரிய வில்லை. கிடைத்த பணத்தை வட்டிக்கு விடுவதுதான் நடக்கிறது. சுய உதவிக் குழுக்களில் உள்ள பல பெண்கள் இதை என்னிடமே தெரிவித்தார்கள். இந்த விஷயங்கள் எங்கள் காதுக்கு வந்த பிறகுதான், இவர்களுக்கு ஏதாவது செய்தே ஆக வேண்டும் என்ற முடிவுக்கு வந்தோம். அதன் முதல் கட்டம்தான், தலைவர் தன் சொந்தப் பணத்திலிருந்து 50 லட்ச ரூபாயை சுய உதவிக் குழுப் பெண்களுக்கு வழங்கியது. விருத்தாசலம் தொகுதியில் எம்.எல்.ஏ. நிதி முழுவதையும் பயன்படுத்தியது போக, தன் சொந்தப் பணத்தில் இலவச கம்ப்யூட்டர் மையங்களையும், தண்ணீர் டேங்க்குகளையும் கட்டிக் கொடுத்திருக்கிறார் எங்கள் தலைவர். அரசுப் பணத்தை எடுத்து யார் வேண்டுமானாலும் கொடுக்கலாம். ஆனால், தன் சொந்தப் பணத்தை எடுத்துக்கொடுக்கும் மனசு எத்தனை பேருக்கு இருக்கிறது? மக்களுக்கு யார் நல்லது செய்தாலும், அதை எங்கள் தலைவரும் எங்கள் கட்சியும் நிச்சயம் பாராட்டுவோம். ஆனால், அரசு திட்டங்கள் எல்லாம் இங்கே அடிக்கல் நாட்டு விழாவோடு முடிந்துவிடுகின்றனவே?”

”பெண்களுக்கு 33 சதவிகித இடஒதுக்கீடே இன்னும் எட்டாக் கனியாக இருக்கும்போது, உங்கள் தலைவரோ ‘நாங்கள் ஆட்சிக்கு வந்தால், 50 சதவிகித இடஒதுக்கீடு தருவோம்’ என்கி றார். இது சாத்தியமா?”

”கட்சி ஆரம்பித்து நடந்த முதல் தேர்தலிலேயே 33 சதவிகித இடஒதுக்கீட்டைப் பெண்களுக்குக் கொடுத்து, வேட்பாளர்களாக நிறுத்தியது எங்கள் கட்சி மட்டும்தான்! பெண்களுக்குத் திறமை போதவில்லை என்று சொல்லப்படுவதால்தானே 33 சதவிகித இடஒதுக்கீடு இன்னும் கிடைக்காமல் இருக்கிறது! நாங்கள் ஆட்சிக்கு வந்தால் செய்யப்போகும் முதல் பணியே எல்லோருக்கும் தரமான கல்வி கிடைக்கச் செய்வதுதான். கல்வி கிடைத்தால் திறமை தானாக வந்துவிடும். அப்போது 33 சதவிகிதம் மட்டுமல்ல, 50 சதவிகிதமும் சாத்தியம்தான்!”

”உங்கள் கட்சி ஆட்சிக்கு வந்தால், பெண்களுக்கு வேறு என்னவெல்லாம் நலத் திட்டங்கள் கொண்டுவருவீர்கள்?”

”மக்கள் தொகையில் பெண்கள், ஆண்களுக்குச் சமமாக இருக்கிறார்கள். தேர்தலில் ஆண்களைவிட அதிக அளவில் வாக்களிக்கிறார்கள். ஆனால், பெண்களுக்குக் கிடைக்க வேண்டிய அடிப்படை உரிமைகள்கூடத் தரப்படுவது இல்லை. வீடு, அலுவலகம் என்று எல்லா இடங்களிலும் பிரச்னையை எதிர்கொள்கிறார்கள் பெண்கள். தேர்தலில் மட்டுமல்லாது, மற்ற எல்லாத் துறைகளிலுமே பெண்களுக்கு 50 சதவிகித இட ஒதுக்கீட்டைக் கொண்டுவருவோம். தங்கள் காலில் நிற்க ஆரம்பித்தாலே, தடைகளை எதிர்கொள்ளும் பலம் பெண்களுக்கு வந்துவிடும். அடுத்து, மிக முக்கியமாகத் தீர்க்க வேண்டிய பிரச்னை வரதட்சணைக் கொடுமை! வரதட்சணை வாங்க மாட்டேன் என்று உறுதிமொழி எடுத்துக்கொண்டால்தான், எந்த ஆணும் எங்கள் கட்சியில் சேர முடியும். எங்கள் தலைவரும் வரதட்சணை வாங்கக்கூடாது என்பதைத் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். நாங்கள் ஆட்சிக்கு வரும்போது, வரதட்சணை என்பதே இல்லாதபடிக்குக் கடுமையான சட்டங்களைக் கொண்டுவருவோம். இதுவரை கண்டுகொள்ளப்படாத பழங்குடி, நரிக்குறவர் இனப் பெண்கள், திருநங்கைகள் என எல்லோரையும் உயர்த்தும் திட்டங்களைச் செயல்படுத்துவோம்!”

”பொறியியல் கல்லூரியை நிர்வகிக்கிறீர்கள்; தவறாமல் கட்சிக் கூட்டங்க ளுக்குச் செல்கிறீர்கள்; குடும்பத்தைக் கவனித்துக்கொள்ளும் பொறுப்பும்இருக்கிறது. எப்படிச் சமாளிக்கிறீர்கள்?”

”ஒரே நேரத்தில் பல விஷயங்களைக் கையாளக்கூடிய திறமை என்னைப் போல எல்லாப் பெண்களுக்குமே இருக்கிறது. நேரத்தைச் சரியாகத் திட்டமிட்டுப் பிரித்து வேலை செய்தால், இன்னும்கூட நிறையச் செய்ய முடியும்!”

26/03/08

Follow

Get every new post delivered to your Inbox.