“கோர்வையாக எழுதுகிறவர்களெல்லாம் பத்திரிகையாளர் ஆகிவிட முடியாது!” – ஜெயராணி மார்ச் 4, 2010
Posted by மு.வி.நந்தினி in ஆணாதிக்கம், ஊடக பெண்கள், ஊடகப்பெண்கள், குடும்பம், சமூகம், சினிமா, ஜர்னலிஸம், ஜெயராணி, தமிழ், பத்திரிகை அறம், பாலியல், பெண்கள், போராட்டம், விருது.Tags: ஊடக பெண்கள், ஜர்னலிஸம், ஜெயராணி, பத்திரிகை அறம்
10 comments
நான் ஜர்னலிஸம் மாணவி. திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் தொடர்பியல் படித்தேன். பேசுவதும் பழகுவதும் எழுதுவதும் பள்ளி நாட்களிலேயே எனக்கு இயல்பாகவே வந்தது. பட்டப்படிப்பு முடித்ததுமே நாளிதழ் ஒன்றில் பணிபுரிய வாய்ப்பு கிடைத்தது என்றாலும் ஜர்னலிஸம் படித்துவிட்டுதான் பத்திரிகையாளராக வேண்டும் என்று முடிவெடுத்தேன். வாழ்வில் இதுவரையிலும் எடுத்த மிகச் சரியான முடிவுகளில் அதுவும் ஒன்றென தோன்றுகிறது. எனக்கான எல்லா ஜன்னல்களையும் கதவுகளையும் திறந்துவிட்டது ஜர்னலிஸம் படிப்புதான். புகைப்படக்கலையையும் அங்குதான் கற்றுக் கொண்டேன்.
தூக்குவதற்கு சிரமமான நிக்கான் மெட்டல் பாடி கேமராவை வைத்துக் கொண்டு ஊர் ஊராக சுற்றிய நாட்கள் தான் என் எல்லா பயணங்களுக்கும் மூலம். உலகமென்றால் அது வீட்டின் நான்கு சுவர்தான் என்று கற்றுக்கொடுத்த மிக கட்டுப்பாடானக் குடும்பத்திலிருந்து கற்பிதத்திலிருந்து விடுபட்டு என் கால்களையும் சிந்தனையையும் சுதந்திரப்படுத்திக் கொண்டேன். நடந்து நடந்து இவ்வுலகைக் கடந்துவிடும் பேராவலில் சுற்றிய நாட்கள் அவை. பயணமும் அதில் கிடைத்த அனுபவங்களும்தான் என்னை செதுக்கியது.
கோர்வையாக எழுத வருகிறவர்கள் யாரும் செய்தியாளராகிவிட முடியும் என்றாலும்.. பத்திரிகை அறம், சுதந்திரம் போன்ற அடிப்படை விஷயங்களை கற்றுத் தேர்ந்தது ஜர்னலிஸம் படித்த அந்த இரண்டாண்டுகளில்தான். என்ன மாதிரியான செய்தியாளராக இயங்கப் போகிறோம் என்று புரிந்து கொள்வதற்கான வாய்ப்பாக என் கற்றல் காலம் அமைந்தது. அதற்காக, ஜர்னலிஸம் படித்தவர்கள் எல்லோருமே பத்திரிகை அறத்தை மீறாதவர்களாக இருப்பார்கள் என்றோ படிக்காதவர்கள் எல்லோரும் அறத்தை புறக்கணிக்கிறவர்கள் என்றோ சொல்ல வரவில்லை.
பத்திரிகைகளும் காட்சி ஊடகங்களும் இன்று இருக்கிற நிலையில், ஊடக அறம் பற்றின புரிதலோ விழிப்புணர்வோ இல்லையென்றால் நிச்சயம் சுரணையற்ற செய்தியாளராகிவிட வாய்ப்புகள் அதிகம். ஏனென்றால் புதியவர் ஒருவருக்கு செய்தி எழுத கற்றுத் தரும் ஊடகங்கள் ஒருபோதும் அறத்தை போதிப்பதில்லை. அதனால்தான் பெரும்பாலும் உரிமைகளை பாதிக்கிற செய்திகளாகவே நாம் படிக்கவும் பார்க்கவும் கிடைக்கின்றன. ஜர்னலிஸம் படிக்கிறவர்களுக்கு பத்திரிகை அறம் பற்றி அறிந்து கொள்ளும் வாய்ப்பு இயல்பாக அமைகிறது. பின்னர் பணி காலத்தில் அதை செயல் படுத்த வேண்டுமா வேண்டாமா என்ற முடிவு அவரவர் கைகளில். கற்றல் வழி நடத்தல் என்பது என் பிடிவாதம் என்பதால் இந்த பத்தாண்டுகளில் பத்திரிகை அறத்தை கேள்விக்குள்ளாக்குகிற எந்த செய்தியையுமே நான் எழுதவில்லை.
எழுத்து மீது தீராத ஆர்வம் கொண்டிருந்தேன் என்று சொல்வதற்கில்லை. அதனால்தான் பத்திரிகை துறையை தேர்ந்தெடுத்தேன் என்று சொன்னால் அது பொய். தனிப்பட்ட முறையில் என் எல்லா உணர்வுகளுக்கும் உகந்ததாக இந்த துறை அமைந்தது. ஒவ்வொருவருக்கும் அவரவரரின் திறமைக்கும் குணத்திற்கும் ஏற்ற வேலை என்று ஏதாவது இருக்குமில்லையா? என் குணத்திற்கு கனக்கச்சிதமாக பொருந்தியது பத்திரிகைத் துறை. காரணம் எழுத்து, புகைப்படம், பயணம் என்ற மூன்று அற்புதமான விஷயங்களையும் என்னால் இங்கு செயல்படுத்த முடிந்தது. விரும்பியதையே தொழிலாக, வேலையாக செய்வது எத்தனை சுகம்! எத்தனையோ இன்னல்களுக்கிடையில் அந்த சுகத்தை நான் அனுபவித்துக் கொண்டிருக்கிறேன்.
எல்லா நவீன துறைகளைப் போலவும், பெண்கள் ஊடகப் பணிக்கு வருவதற்கு குடும்பங்கள் தடை போடுகின்றன என்பது உண்மைதான். சில ஆயிரம் குடும்பங்கள் மட்டுமே வசிக்கக்கூடிய கிராமம் ஒன்றிலிருந்து சென்னை நோக்கிய என் பயணம் அத்தனை எளிதானதாக அமைந்துவிடவில்லை. பெரும்பாலான பெண்களுக்கு இந்த சவால் இருக்கிறது. இந்த சவால்களை ஏதாவது இயக்கங்கள் வந்துதான் எதிர்கொள்ள வேண்டும் என்றில்லை. தடைகளைத் தாண்டும் மனப் பக்குவத்தை தனிப்பட்ட முறையில் ஒவ்வொருவரும் வளர்த்துக் கொள்ள வேண்டிய காலகட்டம் இது. ஊடகத் துறையில் பெண்கள் முதல் தலைமுறையாக காலடி எடுத்து வைத்திருக்கிறார்கள். ஆனால் ஒரு நாற்பது ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பிருந்த கட்டுப்பாடுகளோ அடக்குமுறைகளோ இன்று பெருமளவில் தளர்த்தப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் இன்றும் ஒவ்வொரு துறையிலும் பெண்களின் பங்கு என்று பேசிக் கொண்டிருப்பது அபத்தம். இந்த மாதிரியான குறுகிய விவாதங்களை நாம் கடந்தாக வேண்டும்.
பெண்களுக்கிருக்கும் சவால் என்பது எல்லாத் துறைகளுக்கும் பொதுவான ஒன்று. கல்வியறிவு பெற்று பணிபுரியத் தொடங்கிய காலகட்டத்தில் பெண்களுக்கான பிரத்யேக வேலைகளில் ஒன்றாக ஒதுக்கப்பட்டது ஸ்டெனோகிராபர் பணி. அந்த காலக் கட்டத்தில் வந்த திரைப்படங்களில் பார்த்தால் ஸ்டெனோகிராஃபர்கள் எப்போதும் மேனேஜர்களின் மடியிலேயே உட்கார்ந்திருப்பதைப் போலவேதான் காட்சிகளை அமைத்தார்கள். அன்றைய தேதிக்கு நவீன துறையாக இருந்த ஸ்டெனோகிராஃபி பணிக்கு பெண்கள் அதிகளவில் வரத் தொடங்கினார்கள். திறமையால் வந்தார்கள் என்பதை விடவும் வயதையும் அழகையும் முன்னிறுத்தி பாலினத்தை தவறாக பயன்படுத்தியதாலே பெண்களுக்கு வேலை வாய்ப்புகள் கிடைப்பதாக அப்போது நம்பப்பட்டது. அதை தான் திரைப்படங்களில் காட்சிபடுத்தினார்கள்.
வெற்றிகரமான செயல்படும் ஒரு பெண் திறமையால் அதை சாதித்திருக்கமாட்டார் என்று நம்புவது இந்த சமூகத்தின் பொது புத்தி. இந்த பொது புத்திதான் இன்று ஊடகங்களிலும் நிலை கொண்டிருக்கிறது. பெண்களின் திறமையை புறக்கணிப்பதிலும் சாதனைகளை இழிவுபடுத்துவதிலும் ஆண்கள் அளவிற்கு (கூடுதலாகவே கூட) பெண்களும் ஈடுபடுகிறார்கள்.
ஊடகத் துறையில் பணிபுரியும் பெண்கள் சம அளவில் பெண்களாலும் பிரச்சனைகளை எதிர்கொள்கிறார்கள். போட்டியும் பொறாமைகளும் இருக்கிற வரை இந்த நிலை நிலையானது என்றே தோன்றுகிறது. அதனால் அதிகபட்ச மன உறுதியை வளர்த்துக் கொள்வதைத் தவிர வேறு வழியில்லை.
இன்று பெண்களுக்கிருக்கும் சவால்களுக்கு ஒத்த அளவிலான பிரச்சனைகள் ஆண்களுக்கும் இருக்கிறது. அதற்கு காரணம் ஊடகத்துறையில் மேலோங்கி இருக்கும் பண்ணையார்த்தனம். ஆண்களும் பாலியல் துன்புறுத்தல்களை எதிர்கொள்கிறார்களா என்று மிக உறுதியாகக் கூற முடியவில்லை. ஆனால் மன உளைச்சலை தரக் கூடிய மற்ற எல்லா துயரங்களையும் ஆண்களும் எதிர்கொள்கிறார்கள். பிரச்சனை ஆண் பெண் என்ற அடிப்படையில் வருகிற பாலின பாகுபாடு அல்ல. புரொபஷனலிஸம் என்று சொல்லக்கூடிய தொழில் நேர்த்திக்கு இருக்கும் தட்டுப்பாடு. ஒரு ஊழியரை எப்படி நடத்துவது அல்லது கையாள்வது என்ற அடிப்படை நாகரிகம் தெரியாத மேலதிகாரிகள் எல்லா துறையிலும் இருக்கிறார்கள். ஊடகத்துறையிலும் இருக்கிறார்கள். ஒரு அலுவலகத்தில் 10 பேர் பணிபுரிகிறார்கள் என்றால் அந்த 10 பேரும் ஒரே மாதிரியான அல்லது சம அளவிலான திறமைகளை கொண்டிருப்பார்கள் என்று எதிர்பார்ப்பது தவறு. யார் யாருக்கு என்னென்ன திறமை இருக்கிறது என்று கண்டறிவதும் அவரை குறிப்பிட்ட அந்த வேலைக்கு பயன்படுத்துவதும் தலைமைப் பண்பின் முக்கிய அம்சம். ஊழியர்களுக்கு திறமைக்கேற்ற வாய்ப்புகளை வழங்குவதால் மட்டுமே எந்த ஒரு நிறுவனமுமே அடுத்த கட்டத்துக்குப் போக முடியும்.
ஊடகங்களில் ஆண்களின் கை மேலோங்கி இருக்கிறது என்பதையும் மறுப்பதற்கில்லை. அதனால் செய்திகளில் மிக மோசமாக வெளிப்படும் ஆண் நெடி குமட்டலை உண்டாக்குவதாக இருக்கிறது!. தப்பித் தவறி கூட ஒரு பெண் செய்திகளில் அடிபட்டுவிடக் கூடாது. குற்றச்செய்திகள் என்றால் நிலைமை மிக மோசம். ஆண் நிருபர்களின் அதிகபட்ச கற்பனைத் திறனும் வக்கிரங்களும் வெளிப்படுவது பெண்கள் சம்பந்தப்பட்ட செய்திகளில்தான்.
பெரும்பாலான செய்திகள் இப்படி அந்த நேர கிளுகிளுப்பிற்கும் பரபரப்பிற்காக மட்டுமே எழுதப்படுகின்றன. பத்திரிகைகளில் நிலைகொண்டிருக்கும் ஆண் மொழியும், மேலோங்கியிருக்கும் ஆண் மனோபாவமும் மிகவும் மோசமான பாதிப்புகளை சமூகத்தில் உண்டாக்கிக் கொண்டிருக்கின்றன. எவ்வளவோ விமர்சனங்களுக்கு உள்ளான போதும் இன்னும் அந்த பிரபல நாளிதழ் செய்திகளில் அடிபடும் பெண்களை அழகி என்று குறிப்பிடுவதை நிறுத்திக் கொள்ளவில்லை. பெருமளவில் பெண்கள் ஊடகப்பணிக்கு வந்தால் இந்த அவலம் மாறுமா என்று கேட்டால் அதுவும் சந்தேகம்தான். ஏனென்றால் வருகிற எல்லோருமே ஆண் பெண் பாரபட்சமில்லாமல் கண்மூடித்தனமாக வழக்கமான இந்த எழுத்துமுறைக்கு பழக்கப்படுத்தப்படுகிறார்கள். இதனால் சில பத்திரிகைகளில் பெண்களும் ஆண் மொழியில் ஆண் மனோபாவத்துடன் எழுதுவதை பார்க்க முடிகிறது. தன்னளவில் மிக நேர்த்தியான மொழியாற்றலையும், சமூகப் பார்வையையும் செய்தி எழுதும் நுணுக்கத்தையும் கொண்டிருந்தாலே ஒழிய இதுபோன்ற வக்கிரங்களில் இருந்து தப்பிப்பது கடினம். ஜாதி, மத, பாலின அடையாளங்களைக் கடந்த சமத்துவ மொழி ஊடகங்களின் இன்றைய மிகப் பெரியத் தேவையாக இருக்கிறது. வேண்டும் க்ண்க்இன்னும் அந்த பிரபல நாளிதழ் செய்திக் பலரை ஏமாற்றி பணம் பறித்தார் அதனால் அவர் செத்துப் போக்
திரைப்படங்களில் சித்தரிக்கப்படுவது போலவோ அல்லது இந்த சமூகம் நம்பிக் கொண்டிருப்பதைப் போலவோ ஜர்னலிஸ்ட்கள் வானத்தில் இருந்து குதித்தவர்கள் அல்ல.
துப்புரவுப் பணியைப் போலத் தான் ஊடகத்துறையும். ஒரு துப்புரவுப் பணியாளருக்கு இருக்கும் பொறுப்பை விடவும் அதிகமாக ஜர்னலிஸ்ட்களுக்கு பொறுப்புணர்வு இருப்பதாக நான் நம்பவில்லை. முன்னவர் புற சுகாதாரத்திற்கும் பின்னவர் அக சுகாதாரத்திற்காகவும் பணி புரிகிறார்கள் அவ்வளவே வித்தியாசம். ஆனால் இங்கு நிறைய பேர் ஜர்னலிஸ்ட் என்று மார்தட்டிக் கொள்வதில் ஒரு வறட்டு கவுரவத்தைப் பார்க்க முடிகிறது. இது தேவையில்லாதது. வேறெந்தத் துறையில் வேலை செய்கிறவர்களைப் போல பத்திரிகையாளர்களும் தங்களை சாதாரண மனிதர்களாக முதலில் கருதத் துவங்க வேண்டும். யாரும் ஜர்னலிஸ்ட்டாகவே பிறப்பதில்லை. மருத்துவர்களையும் ஆசிரியர்களையும் போல பத்திரிகையாளர்களுக்கு கல்வி தகுதி கட்டாயமாகத் தேவைப்படாத நிலையில் எழுதத் தெரிகிறவர்களும் பேச முடிகிறவர்களும் பத்திரிகையாளராகிவிட முடிகிறது. கல்வித் தகுதி அவசியமில்லாத ஊடகத் துறைக்குத் தேவைப்படுவது மனித நேயமும், சமூக அறிவும் பொறுப்புணர்வும் மட்டுமே! செய்தி எழுதுதலின் நுணுக்கங்கள் அரசியல் நிகழ்வுகள், பொது அறிவு விஷயங்களை எல்லாம் களத்தில் இறங்கியவுடன் காலப் போக்கில் கற்றுக் கொள்ளலாம். ஆனால் அதற்கு மேலே குறிப்பிட்ட மூன்று விஷயங்களும் உள்ளார்ந்தவை. எல்லா தனி நபர்களுக்கும் அது இருக்க வேண்டும் என்றாலும் பல தரப்பினரையும் சென்று பறைசாற்றுகிற பணியைச் செய்கிற ஊடகவியலாளர்களுக்கு கூடுதலாக இருந்தாக வேண்டும்.
மனித நேயத்திற்கும், உரிமைகளுக்கும் சமத்துவத்திற்கு எதிரான வார்த்தைகளை இதுவரையும் நான் எழுதவில்லை. இனிமேலும் எழுதமாட்டேன். என் எழுத்துக்களும் கருத்துக்களும் நேரிடையாகவும் மறைமுகமாகவும் வலியுறுத்துவது ஒன்றே ஒன்றுதான். அது அன்பு. எல்லோருக்குமான அன்பு. குழந்தைகள், திருநங்கைகள் ஆண், பெண், இன்ன மொழி பேசுபவர், இந்த ஊர்க்காரர், நாட்டுக்காரர், சாதி, மதம் என எந்த பாகுபாடுமின்றி வரக்கூடிய இயல்பான அன்பு. இந்த உலகத்தின் அதிகபட்சத் தேவை அதுதான். கூட்டம் போட்டு, மேடையில் முழங்கினால்தான் என்றில்லை, தன்னளவில் எல்லோரும் அன்பானவர்களாக, உரிமை மீறல்களை அனுமதிக்காதவர்களாக இயங்கிக் கொண்டிருந்தாலே போதும். இவ்வுலகத்தின் அவலங்கள் முடிவுக்கு வந்துவிடும். சமூகப் பொறுப்புணர்வோடு பணிபுரியும் எல்லோருக்கும் என் வாழ்த்துகள்.
அன்பும் உண்மையும் நேர்மையும் நிச்சயம் வெற்றி பெறும். அவை அதற்கான நேரத்தை எடுத்துக் கொள்ளுமே தவிர ஒருபோதும் தோற்றுப்போவதில்லை.
ஜெயராணி…ஆறாம்திணை என்ற இணையதளப் பத்திரிகையில் பணியைத் தொடங்கி, குமுதம், விகடன், தினமலர் போன்ற பத்திரிகைகளில் புகைப்பட நிருபராகவும், உதவி ஆசிரியராகவும் சுமார் ஏழாண்டுகள் வேலை பார்த்தவர். தற்போது சன் செய்திப் பிரிவில் சிறப்பு செய்தியாளாராக பணியாற்றும் ஜெயராணி, நிஜம் நிகழ்ச்சியில் செய்தியாளராகவும் ஸ்கிரிப்ட் ரைட்டராகவும் இருக்கிறார். மெயின் ஸ்ட்ரீம் ஊடகத்தில் இயங்கினாலும் பெண்கள், குழந்தைகள் திருநங்கைகள், தலித் மக்கள், சிறுபான்மையினருக்காகத் தொடர்ந்து எழுதி வருகிறார். தலித் முரசு போன்ற மாற்று இதழ்களிலும் தொடர்ந்து எழுதுகிறார். ஆனந்த விகடன், அவள் விகடன், தீராநதி, புது விசை, முற்றுகை ஆகிய இதழ்களில் கவிதைகளும் சிறுகதைகளும் வெளிவந்திருக்கின்றன.
‘இன்டர்நேஷனல் ஃபெடரேஷன் ஆஃப் ஜர்னலிஸ்ட்’ அமைப்பு ‘ஆனந்த விகடனில் விகடனில’ வெளியான ”இளைப்பாற விரும்புகிறோம்” கட்டுரைக்காக சிறப்புப் பாராட்டுச் சான்றிதழை வழங்கியது. (2004 )
‘இந்தியா டுடே’ பத்திரிகை ‘இந்தியாவின் 38 முக்கியமான பெண்களில்’ ஒருவராக தேர்ந்தெடுத்தது (2005)
ஊடகத்துறையில் தொடர்ந்து ஆற்றி வரும் பங்கிற்காக ‘அன்னைத் தெரஸா பல்கலைக்கழக’த்தால் ‘சிறந்த பத்திரிகையாளரா’க கவுரவிக்கப்பட்டார். (2009)
பின்குறிப்பு : எனக்குப் பிடித்த பத்திரிகையாளர் என்ற வகையில் ஜெயராணியிடம் நேர்காணல் எடுக்க வேண்டும் என்பது என்னுடைய நீண்ட நாள் விருப்பம். அது நிறைவேற காலம் இன்னும் கணியவில்லை. பிடித்த பத்திரிகையாளர் என்பதற்கு நிறைய காரணங்கள் உண்டு. அது நேர்காணலை எழுதும்போது சொல்லுவேன்.
இங்கே பிரசுமாகியிருக்கும் கட்டுரை நான் எழுதியது அல்ல. பெண்ணே நீ மாத இதழுக்காக ஜெயராணி எழுதியது. மார்ச் பெண்ணே நீ இதழில் எடிட் செய்யப்பட்டு வெளியான கட்டுரையின் முழுவடிவத்தை இங்கே கொடுத்திருக்கிறேன்.
பெண்ணே நீ இதழுக்கு எழுதிய கட்டுரையை இங்கே பிரசுரித்தமைக்காக பெண்ணே நீ க்கு மிகுந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
கட்டுரையில் வெளியாகியிருக்கும் கருத்துக்களை ஒட்டி ஜெயராணி, சுகிதா, நான் மூவருமாக நிறைய பேசிக்கொண்டிருக்கிறோம். அதனாலே இந்தக் கட்டுரையை பிரசுரிப்பதில் ஆர்வம் கொண்டேன். ஜெயராணியும் அனுப்பித் தந்தார். விஷயமுள்ள கட்டுரை எல்லாதரப்பையும் சென்றடைய வேண்டும் என்பதே நோக்கம்.
இந்திய தமிழர்களின் சாகச மனோநிலை ஜனவரி 8, 2010
Posted by மு.வி.நந்தினி in ஆயுதப் போராட்டம், இன உணர்வு, இலங்கை தமிழர், ஊடகம், சமூகம், சிங்கள ராணுவம், தமிழ், நேபாள மாவோயிஸ்ட்கள், போராட்டம், போர்ச்சூழல்.Tags: இந்திய தமிழர், இலங்கை தமிழர் பிரச்சினை
add a comment
மே 1′ 2009ல் எழுதி காணாமல் போன ‘இலங்கை தமிழர் பிரச்சினையில் இந்திய தமிழர்களின் சாகச மனோநிலை’ கட்டுரையின் மறுபிரசுரம் இது…
”குடிக்கத் தண்ணி வேணும்” என்று இறைஞ்சிய அந்தப் பெரியவரின் முகம் இன்னும் எனக்கு நினைவிலிருக்கிறது. வேகு நேரம் முன்வாசல் கதவுகளைத் தட்டிக்கொண்டிருந்தவருக்கு அந்த வீட்டினர் வேண்டா வெறுப்பாக தண்ணீர் கொடுத்ததற்கும் அவர் சென்று பின் ‘வீட்டை நோட்டம் வீட்டுப்போய் திருட வருவார்கள்’ என தகவல் சொன்னதற்கும் காரணம் இருந்தது. அவர் இலங்கை தமிழர் என்பதுதான் அந்தக்காரணம். சணல் பையை தோல்களில் மாட்டி நிராதரவாதிக்கான அத்தனை தகுதியோடும் முகாமில் அரசாங்கம் தரும் அரிசியை வாங்கக் கிளம்பிக்கொண்டிருந்த இலங்கை தமிழனை ‘திருடன்’ என முத்திரையிட்டது இந்திய(?) தமிழன்..100 சதவீதம் சுத்த தமிழ் ரத்தத்தில் பிறந்த தமிழன்! இது நானே நேரில் கண்டது. இலங்கை அகதிகளாக இங்கே தஞ்சம் புகுந்திருக்கும் தமிழர்கள் குறித்தான கண்ணோட்டம் இப்படித்தான் இருக்கிறது. பல்வேறு ஊடகங்களில் தாங்கள் இம்மண்ணில் பட்ட அவமானங்களை அவமதிப்புகளை அகதி முகாமில் இருக்கும் தமிழர்கள் பதிவு செய்திருக்கிறார்கள். அகதி முகாம்களில் இல்லாது தனியாக வீடு எடுத்து தங்கியிருக்கும் சற்றே வசதி படைத்த இலங்கை தமிழர்கள் மீது இந்த கண்ணோட்டம் இல்லை. இலங்கை போரால் மாய்பவர்களும், மாய்வதை மறுத்து அகதியாகவாவது பிழைத்துக் கொள்ளலாம் என திருட்டுப் படகு ஏறுபவர்களும் யார்? விமானத்தில் பறக்க காசில்லாதவர்கள், வறியவர்கள். பொருளாதார பின்புலம் மிக்கவர்கள் வெளிநாடுகளுக்குப் பயணப்பட்டு கடைநிலை மக்களாகவேனும் வாழ்க்கையை நடத்துகிற சூழல் வாய்த்திருக்கிறது, சில ஆண்டுகள் உழைத்தால் வசதிகள், மதிப்புகளும் தேடிவருகின்றன. ஆனால் வறியவர்களின் நிலை என்ன? உறவுகளையும் உடைமைகளையும் இழந்து ஏதுமற்றமற்றவர்களாக இறுதிவரை போரிட்டு உங்களுக்கு தனி ஈழம் பெற்றுத்தருவார்கள் நீங்கள் தமிழர் என்று சொல்லிக்கொண்டு, இந்தியாவிலும் புலம் பெயர்ந்த இடங்களிலும் கேக் வெட்டிக் கொண்டாடுவீர்கள்? இலங்கை தமிழருக்கு ஆதரவு என்ற பெயரில் விடுதலைப் புலிகளுக்கு புழக்கடை வழியாக பண உதவி செய்துகொண்டு புலம்பெயர் நாடுகளில் வாழம் எத்தனைப் பேர் தங்கள் வாரிசுகளை ஆயுதம் தூக்கிப் போராட அனுப்பி வைப்பீர்கள்? வாய்க்கிழிய வீர வசனம் பேசுகிற இந்திய தமிழர்களாகிய நீங்கள், திருட்டுப் படகு ஏறிப்போய் இலங்கை ராணுவத்துடன் நேருக்கு நேர் போரிட வேண்டியதுதானே? இவ்வளவு பேசுகிற நீங்கள் அகதிகளாக இந்தியாவுக்கு வரும் இலங்கைத் தமிழரை எப்படி நடத்துகிறீர்கள்? போர்ச்சூழலில் கணவனை இழந்து கைம்பெண்களாகவும் பெற்றோரை இழந்து அநாதைகளாய் நிற்கும் குழந்தைகளை நீங்கள் நினைத்துப்பார்த்ததுண்டா? குறைந்தபட்சம் அகதி முகாம்களுக்காவது சென்றதுண்டா? இலங்கையில் நடந்துகொண்டிருக்கும் போர் நூற்றாண்டை எட்டினாலும்கூட பரவாயில்லை என்னும் தோணியில் வெளிப்படும் சிலரின் கருத்துகள் ஆழ்மன வன்மைத்தான் காட்டுகின்றன. இதற்கு தமிழ் இன உணர்வு என முலாம் பூசுவது வறியர்களை சுரண்டிப் பிழைக்கும் ஈனச் செயலன்றி வேறில்லை. 37 முத்துக்குமாரர்களின் தற்கொலைக்கு காரணமானதும் இதுதான். சிங்கள அரசியல்வாதிகள்தான் இனவெறியர்களாக தமிழர்களை கொன்று குவிக்கிறார்கள் எனில் தமிழன் இன்னொரு தமிழனை கொல்வதை எந்த வகையில் சேர்ப்பது? அப்பாவித் தமிழர்களை கேடயமாகப் பயன்படுத்துவதும், மீறிச் செல்பவர்களை இரக்கமில்லாமல் சுட்டுக்கொல்வதும் இன சுத்திகரிப்புச் செயலா? இதையெல்லாம் மறைத்துவிட்டு நீங்கள் யாருக்காக போரை நிறுத்து என்று கூவிக்கொண்டிருக்கிறீர்கள்? தமிழ் ஊடகங்களில் இத்தகைய வமர்சனங்கள் வெளிவற வாய்ப்பே இல்லை. புலிகள் ஆதரவு இணைய தளங்கள் கொடுக்கும் செய்திதான் இவர்களுடைய செய்தி மூலங்கள். பிறகு எப்படி நியாயமான செய்திகள் தெரிய வரும்? ‘நேற்று நடந்த சண்டையில் 50 புலிகள் இறந்துவிட்டனர்’ என்கிற செய்தி பலரை தூக்கி வாரிப்போடுகிறது. உடனே செய்தி வெளியிட்ட ஊடகத்திடம் எப்படி நீங்கள் இந்த செய்தியை வெளியிடலாம் என்கிறார்கள். சமீபத்தில் புலிகள் ஆயுதங்களை கீழே போட்டு அமைதிப்பேச்சுக்கு வரவேண்டும் என்று அமெரிக்கா விட்டிருந்த அறிக்கையை வெளியிட்டதற்காக குறிப்பிட்ட அந்த ஊடகத்திற்கு தமிழகத்தின் மூத்த புலிகள் ஆதரவாளரிடமிருந்து தொலைபேசி அழைப்பு போயிருக்கிறது. இந்த ஆதரவாளர்களின் நிலையெல்லாம் புலிகள் பலியாகிறார்களே என்கிற கரிசனம் அல்ல.. புலிகள் இல்லையென்றால் ஒட்டுமொத்த போராட்டமே இல்லை, புலிகள் எந்த நிலையிலும் தங்கள் நிலையை விட்டு கீழிறங்கி வரக்கூடாது என்று இவர்களாக கட்டமைக்கும் ஹீரோயிசம்தான் பின்னணி காரணங்கள். இலங்கையில் ஆயுதம் தாங்கிய போராட்டம் 1970க்கு முன்பிருந்தே நடந்துகொண்டிருக்கிறது. 1970களுக்குப் பிறகு பெரிய அளவில் பரவியது என ஈழப்போராட்த்தின் முன்னோடிகளில் ஒருவரான, மறைந்த சி.புஷ்பராஜா பதிவு செய்திருக்கிறார். சக போராளிக்குழுக்களை எப்படி திட்டமிட்டு விடுதலைப் புலிகள் அழித்தார்கள் என்பதையும் சி.புஷ்பராஜா தன்னுடைய ஈழப்போராட்டத்தில் எனது சாட்சியம் என்ற நூலில் விரிவாகவே பேசியிருக்கிறார். என்னுடைய நோக்கம் விடுதலைப் புலிகளை விமர்சிப்பதல்ல, அதற்கான நேரமும் இதுவல்ல என்று எனக்குத் தெரியும். வெறுமனே போர் நிறுத்தத்தை மட்டுமே எத்தனை காலத்துக்கு பேசுவீர்கள் என்ற ஆதங்கத்தின் அடிப்படையிலே நிரந்தர அமைதிக்கான வழிகள் குறித்து பேசுங்கள் என எழுதினேன். உலகில் நடக்கும் எந்தவொரு போராட்டத்தையும் மற்றொரு போராட்டத்துடன் ஒப்பிட முடியாது. நேளாப சூழலுடன் இலங்கை சூழலை ஒப்பிடவில்லை. அதிலிருந்து கற்க விஷயங்கள் உண்டு என்பதையே வலியுறுத்துகிறேன். புதிய புத்தகம் பேசுது இதழுக்கு அளித்த நேர்காணலில் அ.மார்க்ஸ் இதை தெளிவாக சொல்லியிருக்கிறார். கீற்றுவில் வெளியான அவருடைய நேர்காணலைப் படிக்க இங்கே சொடுக்கவும். ஈழத்தமிழர் போராட்டத்தையும் இன்னல்களையும் மலிவான அரசியலுக்காகப் பயன்படுத்தும் தமிழக அரசியல்வாதிகளைப்போல சாகச மனநிலையில் அணுகும் பெருங்கும்பல்கள் தமிழகத்திலும் புலம்பெயர்ந்த இடங்களில் இருக்கிறது என்ற ஷோபா சக்தியின் கூற்றை இங்கே நினைவுபடுத்துகிறேன் . உங்கள் சாகச மனோநிலைக்கு இன்னும் பல அப்பாவிகளை பலியாக்க விரும்புகிறீர்கள். ஈழத்தமிழர்களின் அடிப்படை மனிதாபிமான பிரச்சினைகளை ஏன் பார்க்க மறுக்கிறீர்கள்? இனப்படுகொலையைவிட இதுதான் கொடியது! இறுதியாக…எனக்கும் போதாமைகள் இருக்கலாம். ஆனால் அடிப்படைக்கூட தெரியாமல் எழுத எப்போதும் நான் முயற்சித்தது கிடையாது. தெரியாத விஷயங்களை எழுதுவதும் கிடையாது. தமிழனாக அல்லது இலங்கை தமிழனாக பிறந்து வாழந்தால் மட்டுமே இலங்கை தமிழர் பிரச்சினை குறித்து பேச தகுதியாக நீங்கள் வரையறுத்து வைத்திருக்கலாம். ஆனால் பேசுவது மனிதாபிமான அடிப்படையில். அதற்கு மனிதன் என்பதைவிட வேறு எந்த தகுதிகளும் தேவையில்லை!
”திருமணமாகாமல் ஆணும் பெண்ணும் சேர்ந்து வாழ்வதை வரவேற்கிறேன்!” நவம்பர் 21, 2009
Posted by மு.வி.நந்தினி in அரசியல், அலையன்ஸ் பிரான்சேஸ், இலங்கை தமிழர், கனிமொழி, குடும்பம், குட்டி ரேவதி, சமூகம், சாதி, சித்த மருத்துவர், சூரியகதிர், தமிழ், பெண்கள், லீனா மணிமேகலை.Tags: அலையன்ஸ் பிரான்சேஸ், கனிமொழி, கவிஞர், குட்டி ரேவதி, சூரியகதிர், பகுஜன் சமாஜ் கட்சி, பெரியார், லெனின்
8 comments
தமிழ் இலக்கியப் பரப்பில் அழுத்தமான பெண்ணிய கவிதைகளை எழுதி வருபவர் குட்டி ரேவதி! இவருடைய இரண்டாவது கவிதைத் தொகுப்புக்கு ‘முலைகள்’ என பெயரிட்டதாலேயே பெரும் சர்ச்சைகளுக்கு உள்ளானார். உள்ளடக்கம் காரணமாக அதே தொகுப்பு விமரிசகர்களால் பாராட்டவும்பட்டது. கவிதை, கட்டுரை என எழுத்து செயல்பாடுகளோடு பல்வேறு சமூகப் பிரச்சினைகள் குறித்து களஆய்வு செய்து ஆவணப்படுத்தியும் வருகிறார். சித்த மருத்துவர், புகைப்படக்காரர் என மேலும் பல முகங்கள் குட்டி ரேவதிக்கு…வெகுஜன பத்திரிகைகளில் இதுவரை பேசாத சில விஷயங்களை பேச வைக்க வேண்டும் என்ற முனைப்போடு குட்டி ரேவதியை அணுகியபோது ஆர்வத்தோடு ஒப்புக்கொண்டார். நன்பகல் வேளை ஒன்றில் சென்னை அலையன்ஸ் பிரான்சேஸ் வளாகத்தின் மர நிழல்களுக்கிடையே நடந்தது இந்தச் சந்திப்பு…
”படைப்பாளி என்பவர் சமூகத்தில் இருந்து எப்படி வேறுபடுகிறார்? பெண் கவிதைகள் மீதான விமரிசனம் இன்று எப்படி இருக்கிறது?”
எனக்குப் பிடிக்காததை இதுவரை வலிந்து செய்ததில்லை. தொலைதூரத்தில் தெரிகிற குறிப்பிட்ட ஒரு இலக்கை நோக்கிப் போக வேண்டும் என்ற திட்டமிடலும் இல்லை, எந்த அவசரமும் இல்லை. கவிதை எழுதுவது என் இயல்பு. கவிதையின் நீட்சியாக என்ன தோன்றுகிறதோ அதைச் செய்கிறேன். தடாகத்தில் தூக்கி எறியப்படுகிற கல்போல படைப்புகளைச் சமூகத்தின் முன் வைக்கிறோம். அதிர்வுகள் பெரிதாக இருக்கலாம், சிறியதாகவும் இருக்கலாம். ஆனால், சமீப காலமாக தமிழ் படைப்பாளிகளுக்கு அதிகாரத்தின் மீதான கவர்ச்சி அதிகமாகிக்கொண்டே வருகிறது. அதுவும் கடந்த இரண்டு வருடங்களாக ஈழம் சார்ந்து படைப்பாளிகளின் அணுகுமுறை கேள்விக்கு உட்படுத்தக்கூடியதாக இருக்கிறது. இங்கே போர் இல்லை. மூன்று வேளையும் சாப்பாடு கிடைக்கிறது. சவுகர்யமான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறோம். சமூகத்தைப் போல படைப்பாளிகளும் மந்தமாக மாறிக்கொண்டிருக்கிறார்கள். பெரிய எழுத்தாளர்கள் என… என் வாயால் அவர்கள் பேரைக்கூட உச்சரிக்க விரும்பவில்லை – பெண் கவிதைகள் குறித்து இதுவரை அவர்கள் நேர்மையான அணுகுமுறையோடு விமரிசனம் செய்ததில்லை. இதை திட்டமிட்ட சதி என்றுகூட சொல்லலாம். தொடர்ந்து இப்படிப்பட்ட புறக்கணிப்பு நிகழும்போது, பின்னால் வரும் சந்ததிக்குப் பெண் கவிதை குறித்த வரலாறே தெரியாமல் போகலாம்!
”இலங்கை பிரச்சினையில் அரசியல்வாதிகளைப்போல இலக்கியவாதிகள் நடந்துகொண்டார்கள் என்கிற விமரிசனம் எழுந்துள்ளது. இதில் உங்களுடைய கருத்து என்ன?”
சமீபகாலமாக ஈழ வரலாறு குறித்து அத்தனை நூல்களையும் தேடிப்பிடித்து படித்து வருகிறேன். நமக்கும் இலங்கைத் தமிழர்களுக்குமான பூகோள ரீதியான உறவுகள், சமூக, வரலாற்று, அரசியல் உறவுகள் நெகிழ்வைத் தருகின்றன. இப்படிப்பட்ட எந்த வகையான புரிதலும் இல்லாமல் ஆறேழு மாதங்களாக இலக்கியவாதிகளால் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டங்கள், கவியரங்கங்கள் கேலிக்கூத்தாகத்தான் இருந்தன. தொலைக்காட்சியில் காட்டப்படுகிற கொலைகளைப் பார்த்து உணர்ச்சிவசப்பட்டவர்களாகத்தான் இவர்கள் நடந்துகொண்டார்கள். நம்முடைய தம்பியோ, அண்ணனோ காயப்பட்டிருந்தால் உடல், மனம் என சகலமும் துடித்திருக்குமே! அந்தத் துடிப்பு நமக்கு வந்திருக்க வேண்டாமா? இதைவிட அபத்தம், தமிழக அரசின் உலகத் தமிழ் மாநாடு குறித்த அறிவிப்பு. ஆயிரம் ஆயிரமாக சொந்த உறவுகளைப் பறிகொடுத்துவிட்டு தமிழுக்கு விழா எடுத்து என்னவாகப்போகிறது? மொழியின் புளகாங்கிதத்தை பேசவா? தமிழ் மக்கள் குறித்தோ, பண்பாடு, இலக்கியம் குறித்தோ எந்தவித அறிதலும் அரசுக்குக் கிடையாது. நவீன இலக்கியத்தின் ஏஜென்சி போல கனிமொழியைச் செயல்பட வைப்பதுதான் இலக்கியம் குறித்து அரசுக்கு இருக்கிற அதிகபட்ச அக்கறை. 80,90 வயதுகளைக் கடந்த தமிழ் அறிஞர்களை வைத்து நடத்தப்படுகிற உலகத் தமிழ் மாநாட்டால் என்ன நடந்துவிடப்போகிறது? பசுமை நிறைந்த நினைவுகளே என பாடச்சொல்லியா கேட்கப்போகிறோம்?! வரலாற்றில் எங்கும் நிகழ்ந்திராத வன்முறை ஈழத்தில் நடந்திருக்கிறது. முப்பத்தைந்து ஆண்டுகாலமும் இதுவெறும் அரசியல் பிரச்சினையாக பார்க்கப்பட்டதாலேயே இன்று ஒட்டுமொத்த தமிழர்களும் கண்ணீரில் மிதந்து கொண்டிருக்கின்றனர். இந்தப் படுகொலைகளை நம்மால் தடுத்து நிறுத்தியிருக்க முடியும். நம் எல்லோருக்கும் இதில் பொறுப்பு இருக்கிறது.
”ஓரினச் சேர்க்கையை குற்றம் என சொல்லும் இந்தியக் குற்றவியல் சட்டம் 377வது பிரிவை நீக்குவது குறித்து உச்சநீதிமன்றம் பரிந்துரைத்துள்ள நிலையில் ஊடகங்களில் ஓரினச் சேர்க்கை குறித்து ஆரோக்கியமான விவாதம் எழுந்துள்ளது. கவிஞர் லீனா மணிமேகலை கூட தன்னுடைய ‘உலகின் முதல் அழகிய பெண்’ கவிதைத் தொகுப்பின் முன்னுரையில், தான் இருபால் விருப்பமுள்ளவர் என எழுதியுள்ளார். கட்டுப்பாடுகள் மிக்க இந்திய சமூகத்துக்குள் இத்தகைய வெளிப்படையான அறிவிப்புகள், விவாதங்கள் மாற்றங்களை ஏற்படுத்துமா?”
சட்டம் போட்ட பிறகுதான் ஊடகங்கள் ஒதுக்கப்பட்ட விஷயங்களைப் பேசவேண்டும் என்பதில்லை. அரசுக்குச் சொறிந்து கொடுக்கும் வேலையை விட்டுவிட்டு ஊடகங்கள் தன்னளவில் சுயமாக மக்களுக்காகச் செயல்பட முடியும். ஆனால், மனித மனங்களில் படிந்துபோயுள்ள வக்கிரமான பாலியல் ஆசைகளை நிறைவேற்றக்கூடியவையாகத்தான் பெரும்பாலான ஊடகங்கள் செய்தி வெளியிடுகின்றன. சமீபத்தில் நடிகை புவனேஸ்வரி கைது விவகாரத்திலும் அனந்தலட்சுமி கொலை சம்பவத்திலும் ஊடகங்கள் நடந்துகொண்ட விதத்தை உதாரணத்துக்கு எடுத்துக்கொள்ளுங்கள். அந்தந்த நேரத்தில் கிடைக்கும் செய்திகளின் தன்மைக்கு ஏற்றபடிதான் ஊடகங்கள் செயல்படுகின்றனவே தவிர சமூக மாற்றத்துக்காக அல்ல. சமூகம் குறித்த எந்தப் புரிதலும் இல்லாமல் ஒருவர், தன்னை இருபால் விருப்பமுள்ளவர் என சொல்லிக்கொள்வது மீடியாவின் கவனத்தை தன்பக்கம் ஈர்ப்பதற்கான முயற்சி. சமூகத்தின் மீது ஆழமான பார்வை வைத்திருக்கிறவர்களால் மேலோட்டமாக போகிற போக்கில் இப்படிப்பட்ட ஸ்டேட்மெண்டைக் கொடுக்க முடியாது.
”சமீப காலமாக ‘லிவிங் டுகெதர்’ என்று சொல்லப்படுகிற திருமணம் செய்யாமல் ஆணும் பெண்ணும் சேர்ந்து வாழ்வது அதிகரித்து வருகிறது. இது திருமணம் என்கிற நிறுவன அமைப்புக்கு மாற்றாக இருக்கும் என நம்புகிறீர்களா..?”
நானும் இப்படிப்பட்ட வாழ்க்கை முறையில் வாழ்ந்து கொண்டிருக்கிறேன் என்ற வகையில், ஆணும் பெண்ணும் சேர்ந்து வாழ்வது திருமண அமைப்புக்கு மாற்றாக இருக்கும் எனச் சொல்லமுடியும். ஆனால், முழுமையான மாற்றாக இருக்கும் என்று கூற முடியாது. பெண் மீதான பாலியல் ஒடுக்குமுறைகளுக்கும் திருமணம் என்கிற அதிகார அமைப்பின் முரண்பாடுகளுக்கும் இது தீர்வு தரும். ஆணும் பெண்ணும் சேர்ந்து வாழ்வதுதான் இயற்கையின் நியதி. ஆனால் திருமணம் என்பது காலில் போடப்பட்ட அடிமைச் சங்கிலி. அதனால், நல்ல ஆண்களுடன் சேர்ந்து வாழ்வதை நான் வரவேற்கிறேன். இந்த வாழ்க்கையில் பெண்களின் தனிப்பட்ட ஆளுமையைத் தக்கவைத்துக்கொள்ள முடியும். ஆண்களுக்கும்கூட இது இறுக்கம் தளர்ந்த வாழ்க்கையாக இருக்கும். இருவருடைய வாழ்க்கையும் லகுவாக அமையும். விவாகாரத்து பத்திரத்தில் கையெழுத்து போட்ட பிறகுதான் திருமண ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டும் என லெனின் சொன்னது போலத்தான் இன்றைய திருமண வாழ்க்கை இருக்கிறது. விவாகரத்தும் விவாகரத்துக்குப் பிறகான வாழ்க்கையும் நம் நாட்டில் கொடுமையான விஷயங்கள். ஆனால், திருமண அமைப்புக்குள் போகாமல் ஆணும் பெண்ணும் சேர்ந்து வாழும் வாழ்க்கையில் விடுதலைக்கான கனவுகள் திறந்திருக்கும். பெரியார் சொன்னதுபோல, ‘ஐந்து வருடம் சேர்ந்து வாழுங்க. அதுக்குப்பிறகு குழந்தை வேணும்னு நினைச்சா பெத்துக்குங்க..!’
”இறுதியாக…நாடாளுமன்ற தேர்தலின்போது பகுஜன் சமாஜ் கட்சியில் இணைந்து பணியாற்றினீர்கள். இப்போது கட்சியிலிலிருந்து விலகிவிட்டதாக தெரிகிறது. திடீர் அரசியல் பிரவேசத்துக்கும் விலகலுக்கும் என்ன காரணம்..?”
அரசியல் ரொம்ப அவசியம். ஆனால் அதற்கு இன்னும் நான் தயாராகவில்லை! மக்களோடு இன்னும் கீழே இறங்கி வேலை செய்ய வேண்டியது நிறைய இருக்கிறது. கூடவே தற்கால அரசியல் சூழலில் பெண்களுக்கான இடம் கேள்விக்குரியதாக இருக்கிறது. காலம் இருக்கிறது, மீண்டும் என்னுடைய அரசியல் பிரவேசம் எழுச்சியோடு நிகழும்!
நன்றி : சூரியகதிர்
இலங்கை தமிழர் பிரச்சினையும் சுரணையற்ற மனிதர்களை உற்பத்தி செய்யும் கல்விக்கூடங்களும்! மார்ச் 5, 2009
Posted by மு.வி.நந்தினி in அரசியல், இலங்கை தமிழர், கல்விக்கூடங்கள், குழந்தைகள், சமூகம், சுகிதா, தமிழ், தீட்சண்யா, மாறுவேடப்போட்டி.Tags: இலங்கை தமிழர், தமிழ்
7 comments
சக பத்திரிகையாளரும் என்னுடைய தோழியுமான சுகிதா,இரண்டு வாரங்களுக்கு முன் நண்பர்கள் எல்லோரையும் தன் மகள் தீட்சண்யாவின் பள்ளி ஆண்டுவிழாவைக் காண வருமாறு அழைத்திருந்தார். மழலையர் பள்ளியில் படித்துக்கொண்டிருக்கும் இரண்டரை வயது தீட்சண்யா மறுவேடப்போட்டியில் கலந்துகொள்ளப்போவதாகக் கூறி,நேரில் வந்து அவளை உற்சாகப்படுத்தும்படி சொல்லியிருந்தார். சுகிதா இது போன்ற போட்டிகளிலெல்லாம் விருப்பம் அற்றவர். மாறுவேடப்போட்டி என்று பெயரிருந்தாலும் கலந்துகொள்ளும் அனைத்து குழந்தைகளும் வெற்றிப்பெற்றவர்களாகவே கருதப்படுவர் என பள்ளியின் நிர்வாகத்தரப்பு உறுதியாகச் சொன்னதன் பேரில் தீட்சண்யாவின் பெயரை பதிவு செய்திருக்கிறார். மாறுவேடப்போட்டி என்றதும் தங்களுடைய குழந்தைகளை திருவள்ளுவர், விவேகானந்தர் போன்று வேடமிட்டு மழலைத் தத்துவங்களை உளற வைப்பதிலும் கடவுளர் வேடமிட்டு மத விஷத்தை பிஞ்சிலே ஆழப்பதிய வைக்கும் பெற்றோர்களுக்கு மத்தியில், சுகி ரொம்பே விலகி நின்று சிந்தித்து விட்டார். போர்ச்சூழல் குழந்தைகளை எவ்வகையில் பாதிக்கிறது என்பதை சக பெற்றோருக்கும் விழா பார்வையாளர்களுக்கும் உணர்த்த, தன் குழந்தையை இலங்கை போரில் பாதிக்கப்பட்ட குழந்தையைப்போன்று வேடமிடப்போவதாக எங்களிடன் சொல்லியிருந்தார். அவருடைய முயற்சிக்கு நேரில் வாழ்த்துக்கூற நண்பர்கள் கிளம்பினோம். சாலிக்கிராமத்தில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் ஆண்டுவிழா களைகட்டியிருந்தது. சரியாக நாங்கள் உள்ளே நுழைந்த நேரம் தீட்சண்யா மேடையை விட்டு இறங்கிக் கொண்டிருந்தார். எப்போதும் உற்சாகத்தோடு பார்த்து பழகிய சுகியின் முகத்தில் அன்றுதான் முதல்முறையாக சோர்வைக் கண்டேன். தீட்சண்யா மேடையேறியதைக் காணாவிட்டாலும் மற்ற குழந்தைகளின் மழலைப்பேச்சுக்களை சிறுது நேரம் கேட்டுக்கொண்டிருந்தோம். வழக்கம்போல ஓளவையார்,திருவள்ளுவர்,விவேகானந்தர்,முருகன்,சிவன்,கூடவே உலக அழகி வேடமிடப்பட்ட குழந்தைகள்…அதற்கு மேல் எங்களுக்கு பொறுமையில்லை. எல்லோருக்கும் பரிசு என்று சொல்லியிருந்த .பள்ளி நிர்வாகம் 6 குறளை ஒப்பித்த ஒரு குழுந்தைக்கு முதல் பரிசு என்று அறிவித்தது. அடுத்தடுத்த பரிசுகளும் இப்படியாக நீதிபோதனை,ஆன்மிக குப்பைகளை ஒப்பித்த குழந்தைகளுக்கு அறிவித்துக்கொண்டிருந்தபோது தோழியின் வீட்டுக்குப்போக நாங்கள் ஆட்டோ பிடித்துக்கொண்டிருந்தோம்.தோழியின் முக வாட்டத்திற்கான காரணமும் எங்களுக்கு புரிந்துபோனது.
நடந்ததை சொல்ல ஆரம்பித்தார் சுகி…விழா நிகழ்ச்சியை தொகுத்துக் கொண்டிருந்த தொகுப்பாளரிடம் இலங்கையில் நடக்கும் பிரச்சினை குறித்து இரண்டு வரி அறிமுகத்தை தமிழில் பேசுமாறு சொல்லியிருக்கிறார் தோழி. மீண்டும் மீண்டும் வலியுறுத்தியும் அவர் ஆங்கிலத்திலேயே பேசியிருக்கிறார். நிர்வாகத் தரப்பில் கூறப்பட்ட காரணம் ,அடுத்து இலங்கை தமிழர் மீதான தாக்குதலை,குழந்தைகள் மீதான தாக்குதலை நிறுத்துங்கள் என்று எழுதிக்கொண்டு போயிருந்த பதாகையை மேடையில் வைக்க அனுமதி மறுத்திருக்கிறது கல்விச் சான்றோர்கள் நிரம்பிய அந்த மேடை! இதுகுறித்து விழாவுக்கு வந்திருந்த “தமிழ்” பெற்றோர் எவருக்கும் எந்த புகாரும் இல்லை,வருத்தமுமில்லை. தோழி தனி ஒருவராக மன்றாடிவிட்டு எதுவும் நிகழாத சூழலில் குழந்தையோடு மேடையிலிருந்து இறங்கியிருக்கிறார்.
கல்விக்கூடங்கள் எனும் மூளை மழுங்கடிக்கப்பட்ட மனித உற்பத்தி சாலைகளில் இதுபோன்ற முற்போக்கான சிந்தனைகளுக்கு ஆதரவை எதிர்ப்பார்ப்பது நம் தவறுதான். ஒருபுறம் இலங்கை தமிழருக்காக இங்கிருந்து குரல்கொடுக்கும் தமிழர்களையும் இன்னொரு புறம் எங்கே எது நடந்தால் என்ன என் குழந்தை தங்கிலீஷ் படித்து அமெரிக்கா போனால் சரியென்று கிடக்கிற தமிழர்களையும் ஒருசேர பார்க்க முடிகிறது. இதில் யாரைக்குற்றம் சொல்லியும் பலனில்லை. ஏற்கனவே சமுதாயத்தில் ஊன்றப்பட்டு வேறோடியிருக்கிற ஒரு பிரச்சினைக்கு ஒருவரியில் தீர்ப்பு சொல்லிவி்ட முடியாது. ஆனாலும் குறைந்தபட்ச சமூக சிந்தனைகூட நம் கல்விக்கூடங்களுக்கு ஏன் இல்லாமல் போய்விட்டது என்கிற கேள்வியும் நம்முன் எழத்தான் செய்கிறது…

