jump to navigation

“கோர்வையாக எழுதுகிறவர்களெல்லாம் பத்திரிகையாளர் ஆகிவிட முடியாது!” – ஜெயராணி மார்ச் 4, 2010

Posted by மு.வி.நந்தினி in ஆணாதிக்கம், ஊடக பெண்கள், ஊடகப்பெண்கள், குடும்பம், சமூகம், சினிமா, ஜர்னலிஸம், ஜெயராணி, தமிழ், பத்திரிகை அறம், பாலியல், பெண்கள், போராட்டம், விருது.
Tags: , , ,
10 comments

நான் ஜர்னலிஸம் மாணவி. திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் தொடர்பியல் படித்தேன். பேசுவதும் பழகுவதும் எழுதுவதும் பள்ளி நாட்களிலேயே எனக்கு இயல்பாகவே வந்தது. பட்டப்படிப்பு முடித்ததுமே நாளிதழ் ஒன்றில் பணிபுரிய வாய்ப்பு கிடைத்தது என்றாலும் ஜர்னலிஸம் படித்துவிட்டுதான் பத்திரிகையாளராக வேண்டும் என்று முடிவெடுத்தேன். வாழ்வில் இதுவரையிலும் எடுத்த மிகச் சரியான முடிவுகளில் அதுவும் ஒன்றென தோன்றுகிறது. எனக்கான எல்லா ஜன்னல்களையும் கதவுகளையும் திறந்துவிட்டது ஜர்னலிஸம் படிப்புதான். புகைப்படக்கலையையும் அங்குதான் கற்றுக் கொண்டேன்.

தூக்குவதற்கு சிரமமான நிக்கான் மெட்டல் பாடி கேமராவை வைத்துக் கொண்டு ஊர் ஊராக சுற்றிய நாட்கள் தான் என் எல்லா பயணங்களுக்கும் மூலம். உலகமென்றால் அது வீட்டின் நான்கு சுவர்தான் என்று கற்றுக்கொடுத்த மிக கட்டுப்பாடானக் குடும்பத்திலிருந்து கற்பிதத்திலிருந்து விடுபட்டு என் கால்களையும் சிந்தனையையும் சுதந்திரப்படுத்திக் கொண்டேன். நடந்து நடந்து இவ்வுலகைக் கடந்துவிடும் பேராவலில் சுற்றிய நாட்கள் அவை.     பயணமும் அதில் கிடைத்த அனுபவங்களும்தான் என்னை செதுக்கியது.

கோர்வையாக எழுத வருகிறவர்கள் யாரும் செய்தியாளராகிவிட முடியும் என்றாலும்.. பத்திரிகை அறம், சுதந்திரம் போன்ற அடிப்படை விஷயங்களை கற்றுத் தேர்ந்தது ஜர்னலிஸம் படித்த அந்த இரண்டாண்டுகளில்தான். என்ன மாதிரியான செய்தியாளராக இயங்கப் போகிறோம் என்று புரிந்து கொள்வதற்கான வாய்ப்பாக என் கற்றல் காலம் அமைந்தது. அதற்காக, ஜர்னலிஸம் படித்தவர்கள் எல்லோருமே பத்திரிகை அறத்தை மீறாதவர்களாக இருப்பார்கள் என்றோ படிக்காதவர்கள் எல்லோரும் அறத்தை புறக்கணிக்கிறவர்கள் என்றோ சொல்ல வரவில்லை.

பத்திரிகைகளும் காட்சி ஊடகங்களும் இன்று இருக்கிற நிலையில், ஊடக அறம் பற்றின புரிதலோ விழிப்புணர்வோ இல்லையென்றால் நிச்சயம் சுரணையற்ற செய்தியாளராகிவிட வாய்ப்புகள் அதிகம். ஏனென்றால் புதியவர் ஒருவருக்கு செய்தி எழுத கற்றுத் தரும் ஊடகங்கள் ஒருபோதும் அறத்தை போதிப்பதில்லை. அதனால்தான் பெரும்பாலும் உரிமைகளை பாதிக்கிற செய்திகளாகவே நாம் படிக்கவும் பார்க்கவும் கிடைக்கின்றன. ஜர்னலிஸம் படிக்கிறவர்களுக்கு பத்திரிகை அறம் பற்றி அறிந்து கொள்ளும் வாய்ப்பு இயல்பாக அமைகிறது. பின்னர் பணி காலத்தில் அதை செயல் படுத்த வேண்டுமா வேண்டாமா என்ற முடிவு அவரவர் கைகளில். கற்றல் வழி நடத்தல் என்பது என் பிடிவாதம் என்பதால் இந்த பத்தாண்டுகளில் பத்திரிகை அறத்தை கேள்விக்குள்ளாக்குகிற எந்த செய்தியையுமே நான் எழுதவில்லை.

எழுத்து மீது தீராத ஆர்வம் கொண்டிருந்தேன் என்று சொல்வதற்கில்லை. அதனால்தான் பத்திரிகை துறையை தேர்ந்தெடுத்தேன் என்று சொன்னால் அது பொய். தனிப்பட்ட முறையில் என் எல்லா உணர்வுகளுக்கும் உகந்ததாக இந்த துறை அமைந்தது. ஒவ்வொருவருக்கும் அவரவரரின் திறமைக்கும் குணத்திற்கும் ஏற்ற வேலை என்று ஏதாவது இருக்குமில்லையா? என் குணத்திற்கு கனக்கச்சிதமாக பொருந்தியது பத்திரிகைத் துறை. காரணம் எழுத்து, புகைப்படம், பயணம் என்ற மூன்று அற்புதமான விஷயங்களையும் என்னால் இங்கு செயல்படுத்த முடிந்தது.  விரும்பியதையே தொழிலாக, வேலையாக செய்வது எத்தனை சுகம்! எத்தனையோ இன்னல்களுக்கிடையில் அந்த சுகத்தை நான் அனுபவித்துக் கொண்டிருக்கிறேன்.

எல்லா நவீன துறைகளைப் போலவும், பெண்கள் ஊடகப் பணிக்கு வருவதற்கு குடும்பங்கள் தடை போடுகின்றன என்பது உண்மைதான். சில ஆயிரம் குடும்பங்கள் மட்டுமே வசிக்கக்கூடிய கிராமம் ஒன்றிலிருந்து சென்னை நோக்கிய என் பயணம் அத்தனை எளிதானதாக அமைந்துவிடவில்லை. பெரும்பாலான பெண்களுக்கு இந்த சவால் இருக்கிறது. இந்த சவால்களை ஏதாவது இயக்கங்கள் வந்துதான் எதிர்கொள்ள வேண்டும் என்றில்லை. தடைகளைத் தாண்டும் மனப் பக்குவத்தை தனிப்பட்ட முறையில் ஒவ்வொருவரும் வளர்த்துக் கொள்ள வேண்டிய காலகட்டம் இது. ஊடகத் துறையில் பெண்கள் முதல் தலைமுறையாக காலடி எடுத்து வைத்திருக்கிறார்கள். ஆனால் ஒரு நாற்பது ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பிருந்த கட்டுப்பாடுகளோ அடக்குமுறைகளோ இன்று பெருமளவில் தளர்த்தப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் இன்றும் ஒவ்வொரு துறையிலும் பெண்களின் பங்கு என்று பேசிக் கொண்டிருப்பது அபத்தம். இந்த மாதிரியான குறுகிய விவாதங்களை நாம் கடந்தாக வேண்டும்.

பெண்களுக்கிருக்கும் சவால் என்பது எல்லாத் துறைகளுக்கும் பொதுவான ஒன்று. கல்வியறிவு பெற்று பணிபுரியத் தொடங்கிய காலகட்டத்தில் பெண்களுக்கான பிரத்யேக வேலைகளில் ஒன்றாக ஒதுக்கப்பட்டது ஸ்டெனோகிராபர் பணி. அந்த காலக் கட்டத்தில் வந்த திரைப்படங்களில் பார்த்தால் ஸ்டெனோகிராஃபர்கள் எப்போதும் மேனேஜர்களின் மடியிலேயே உட்கார்ந்திருப்பதைப் போலவேதான் காட்சிகளை அமைத்தார்கள். அன்றைய தேதிக்கு நவீன துறையாக இருந்த ஸ்டெனோகிராஃபி பணிக்கு பெண்கள் அதிகளவில் வரத் தொடங்கினார்கள். திறமையால் வந்தார்கள் என்பதை விடவும் வயதையும் அழகையும் முன்னிறுத்தி பாலினத்தை தவறாக பயன்படுத்தியதாலே பெண்களுக்கு வேலை வாய்ப்புகள் கிடைப்பதாக அப்போது நம்பப்பட்டது. அதை தான் திரைப்படங்களில் காட்சிபடுத்தினார்கள்.

வெற்றிகரமான செயல்படும் ஒரு பெண் திறமையால் அதை சாதித்திருக்கமாட்டார் என்று நம்புவது இந்த சமூகத்தின் பொது புத்தி. இந்த பொது புத்திதான் இன்று ஊடகங்களிலும் நிலை கொண்டிருக்கிறது. பெண்களின் திறமையை புறக்கணிப்பதிலும் சாதனைகளை இழிவுபடுத்துவதிலும் ஆண்கள் அளவிற்கு (கூடுதலாகவே கூட) பெண்களும் ஈடுபடுகிறார்கள்.
ஊடகத் துறையில் பணிபுரியும் பெண்கள் சம அளவில் பெண்களாலும் பிரச்சனைகளை எதிர்கொள்கிறார்கள். போட்டியும் பொறாமைகளும் இருக்கிற வரை இந்த நிலை நிலையானது என்றே தோன்றுகிறது. அதனால் அதிகபட்ச மன உறுதியை வளர்த்துக் கொள்வதைத் தவிர வேறு வழியில்லை.

இன்று பெண்களுக்கிருக்கும் சவால்களுக்கு ஒத்த அளவிலான பிரச்சனைகள் ஆண்களுக்கும் இருக்கிறது. அதற்கு காரணம் ஊடகத்துறையில் மேலோங்கி இருக்கும் பண்ணையார்த்தனம். ஆண்களும் பாலியல் துன்புறுத்தல்களை எதிர்கொள்கிறார்களா என்று  மிக உறுதியாகக் கூற முடியவில்லை. ஆனால் மன உளைச்சலை தரக் கூடிய மற்ற எல்லா துயரங்களையும் ஆண்களும் எதிர்கொள்கிறார்கள். பிரச்சனை ஆண் பெண் என்ற அடிப்படையில் வருகிற பாலின பாகுபாடு அல்ல. புரொபஷனலிஸம் என்று சொல்லக்கூடிய தொழில் நேர்த்திக்கு இருக்கும் தட்டுப்பாடு. ஒரு ஊழியரை எப்படி நடத்துவது அல்லது கையாள்வது என்ற அடிப்படை நாகரிகம் தெரியாத மேலதிகாரிகள் எல்லா துறையிலும் இருக்கிறார்கள். ஊடகத்துறையிலும் இருக்கிறார்கள். ஒரு அலுவலகத்தில் 10 பேர் பணிபுரிகிறார்கள் என்றால் அந்த 10 பேரும் ஒரே மாதிரியான அல்லது சம அளவிலான திறமைகளை கொண்டிருப்பார்கள் என்று எதிர்பார்ப்பது தவறு. யார் யாருக்கு என்னென்ன திறமை இருக்கிறது என்று கண்டறிவதும் அவரை குறிப்பிட்ட அந்த வேலைக்கு பயன்படுத்துவதும் தலைமைப் பண்பின் முக்கிய அம்சம். ஊழியர்களுக்கு திறமைக்கேற்ற வாய்ப்புகளை வழங்குவதால் மட்டுமே எந்த ஒரு நிறுவனமுமே அடுத்த கட்டத்துக்குப் போக முடியும்.

ஊடகங்களில் ஆண்களின் கை மேலோங்கி இருக்கிறது என்பதையும் மறுப்பதற்கில்லை. அதனால் செய்திகளில் மிக மோசமாக வெளிப்படும் ஆண் நெடி குமட்டலை உண்டாக்குவதாக இருக்கிறது!. தப்பித் தவறி கூட ஒரு பெண் செய்திகளில் அடிபட்டுவிடக் கூடாது. குற்றச்செய்திகள் என்றால் நிலைமை மிக மோசம். ஆண் நிருபர்களின் அதிகபட்ச கற்பனைத் திறனும் வக்கிரங்களும் வெளிப்படுவது பெண்கள் சம்பந்தப்பட்ட செய்திகளில்தான்.

பெரும்பாலான செய்திகள் இப்படி அந்த நேர கிளுகிளுப்பிற்கும் பரபரப்பிற்காக மட்டுமே எழுதப்படுகின்றன. பத்திரிகைகளில் நிலைகொண்டிருக்கும் ஆண் மொழியும், மேலோங்கியிருக்கும் ஆண் மனோபாவமும் மிகவும் மோசமான பாதிப்புகளை சமூகத்தில் உண்டாக்கிக் கொண்டிருக்கின்றன. எவ்வளவோ விமர்சனங்களுக்கு உள்ளான போதும் இன்னும் அந்த பிரபல நாளிதழ் செய்திகளில் அடிபடும் பெண்களை அழகி என்று குறிப்பிடுவதை நிறுத்திக் கொள்ளவில்லை. பெருமளவில் பெண்கள் ஊடகப்பணிக்கு வந்தால் இந்த அவலம் மாறுமா என்று கேட்டால் அதுவும் சந்தேகம்தான். ஏனென்றால் வருகிற எல்லோருமே ஆண் பெண் பாரபட்சமில்லாமல் கண்மூடித்தனமாக வழக்கமான இந்த எழுத்துமுறைக்கு பழக்கப்படுத்தப்படுகிறார்கள். இதனால் சில பத்திரிகைகளில் பெண்களும் ஆண் மொழியில் ஆண் மனோபாவத்துடன் எழுதுவதை பார்க்க முடிகிறது. தன்னளவில் மிக நேர்த்தியான மொழியாற்றலையும், சமூகப் பார்வையையும் செய்தி எழுதும் நுணுக்கத்தையும்  கொண்டிருந்தாலே ஒழிய இதுபோன்ற வக்கிரங்களில் இருந்து தப்பிப்பது கடினம். ஜாதி, மத, பாலின அடையாளங்களைக் கடந்த சமத்துவ மொழி ஊடகங்களின் இன்றைய மிகப் பெரியத் தேவையாக இருக்கிறது.   வேண்டும் க்ண்க்இன்னும் அந்த பிரபல நாளிதழ் செய்திக் பலரை ஏமாற்றி பணம் பறித்தார் அதனால் அவர் செத்துப் போக்

திரைப்படங்களில் சித்தரிக்கப்படுவது போலவோ அல்லது இந்த சமூகம் நம்பிக் கொண்டிருப்பதைப் போலவோ ஜர்னலிஸ்ட்கள் வானத்தில் இருந்து குதித்தவர்கள் அல்ல.
துப்புரவுப் பணியைப் போலத் தான் ஊடகத்துறையும். ஒரு துப்புரவுப் பணியாளருக்கு இருக்கும் பொறுப்பை விடவும் அதிகமாக ஜர்னலிஸ்ட்களுக்கு பொறுப்புணர்வு இருப்பதாக நான் நம்பவில்லை. முன்னவர் புற சுகாதாரத்திற்கும் பின்னவர் அக சுகாதாரத்திற்காகவும் பணி புரிகிறார்கள் அவ்வளவே வித்தியாசம். ஆனால் இங்கு நிறைய பேர் ஜர்னலிஸ்ட் என்று மார்தட்டிக் கொள்வதில் ஒரு வறட்டு கவுரவத்தைப் பார்க்க முடிகிறது. இது தேவையில்லாதது. வேறெந்தத் துறையில் வேலை செய்கிறவர்களைப் போல பத்திரிகையாளர்களும் தங்களை சாதாரண மனிதர்களாக முதலில் கருதத் துவங்க வேண்டும். யாரும் ஜர்னலிஸ்ட்டாகவே பிறப்பதில்லை. மருத்துவர்களையும் ஆசிரியர்களையும் போல பத்திரிகையாளர்களுக்கு கல்வி தகுதி கட்டாயமாகத் தேவைப்படாத நிலையில் எழுதத் தெரிகிறவர்களும் பேச முடிகிறவர்களும் பத்திரிகையாளராகிவிட முடிகிறது. கல்வித் தகுதி அவசியமில்லாத ஊடகத் துறைக்குத் தேவைப்படுவது மனித நேயமும், சமூக அறிவும் பொறுப்புணர்வும் மட்டுமே! செய்தி எழுதுதலின் நுணுக்கங்கள் அரசியல் நிகழ்வுகள், பொது அறிவு விஷயங்களை எல்லாம் களத்தில் இறங்கியவுடன் காலப் போக்கில் கற்றுக் கொள்ளலாம். ஆனால் அதற்கு மேலே குறிப்பிட்ட மூன்று விஷயங்களும் உள்ளார்ந்தவை. எல்லா தனி நபர்களுக்கும் அது இருக்க வேண்டும் என்றாலும் பல தரப்பினரையும் சென்று பறைசாற்றுகிற பணியைச் செய்கிற ஊடகவியலாளர்களுக்கு கூடுதலாக இருந்தாக வேண்டும்.

மனித நேயத்திற்கும், உரிமைகளுக்கும் சமத்துவத்திற்கு எதிரான வார்த்தைகளை இதுவரையும் நான் எழுதவில்லை. இனிமேலும் எழுதமாட்டேன்.  என் எழுத்துக்களும் கருத்துக்களும் நேரிடையாகவும் மறைமுகமாகவும் வலியுறுத்துவது ஒன்றே ஒன்றுதான். அது அன்பு. எல்லோருக்குமான அன்பு. குழந்தைகள், திருநங்கைகள் ஆண், பெண், இன்ன மொழி பேசுபவர், இந்த ஊர்க்காரர், நாட்டுக்காரர், சாதி, மதம் என எந்த பாகுபாடுமின்றி வரக்கூடிய இயல்பான அன்பு. இந்த உலகத்தின் அதிகபட்சத் தேவை அதுதான். கூட்டம் போட்டு, மேடையில் முழங்கினால்தான் என்றில்லை, தன்னளவில் எல்லோரும் அன்பானவர்களாக, உரிமை மீறல்களை அனுமதிக்காதவர்களாக இயங்கிக் கொண்டிருந்தாலே போதும். இவ்வுலகத்தின் அவலங்கள் முடிவுக்கு வந்துவிடும். சமூகப் பொறுப்புணர்வோடு பணிபுரியும் எல்லோருக்கும் என் வாழ்த்துகள்.
அன்பும் உண்மையும் நேர்மையும் நிச்சயம் வெற்றி பெறும். அவை அதற்கான நேரத்தை எடுத்துக் கொள்ளுமே தவிர ஒருபோதும் தோற்றுப்போவதில்லை.

ஜெயராணி…
ஆறாம்திணை என்ற இணையதளப் பத்திரிகையில் பணியைத் தொடங்கி, குமுதம், விகடன், தினமலர் போன்ற பத்திரிகைகளில் புகைப்பட நிருபராகவும், உதவி ஆசிரியராகவும் சுமார் ஏழாண்டுகள் வேலை பார்த்தவர். தற்போது சன் செய்திப் பிரிவில் சிறப்பு செய்தியாளாராக பணியாற்றும் ஜெயராணி, நிஜம் நிகழ்ச்சியில் செய்தியாளராகவும் ஸ்கிரிப்ட் ரைட்டராகவும் இருக்கிறார். மெயின் ஸ்ட்ரீம் ஊடகத்தில் இயங்கினாலும் பெண்கள், குழந்தைகள் திருநங்கைகள், தலித் மக்கள், சிறுபான்மையினருக்காகத் தொடர்ந்து எழுதி வருகிறார். தலித் முரசு போன்ற மாற்று இதழ்களிலும் தொடர்ந்து எழுதுகிறார். ஆனந்த விகடன், அவள் விகடன், தீராநதி, புது விசை, முற்றுகை ஆகிய இதழ்களில் கவிதைகளும் சிறுகதைகளும் வெளிவந்திருக்கின்றன.

‘இன்டர்நேஷனல் ஃபெடரேஷன் ஆஃப் ஜர்னலிஸ்ட்’ அமைப்பு ‘ஆனந்த விகடனில் விகடனில’ வெளியான ”இளைப்பாற விரும்புகிறோம்” கட்டுரைக்காக சிறப்புப் பாராட்டுச் சான்றிதழை வழங்கியது. (2004 )

‘இந்தியா டுடே’ பத்திரிகை ‘இந்தியாவின் 38 முக்கியமான பெண்களில்’ ஒருவராக தேர்ந்தெடுத்தது (2005)

ஊடகத்துறையில் தொடர்ந்து ஆற்றி வரும் பங்கிற்காக ‘அன்னைத் தெரஸா பல்கலைக்கழக’த்தால் ‘சிறந்த பத்திரிகையாளரா’க கவுரவிக்கப்பட்டார். (2009)

பின்குறிப்பு : எனக்குப் பிடித்த பத்திரிகையாளர் என்ற வகையில் ஜெயராணியிடம்  நேர்காணல் எடுக்க வேண்டும் என்பது என்னுடைய நீண்ட நாள் விருப்பம். அது நிறைவேற காலம் இன்னும் கணியவில்லை. பிடித்த பத்திரிகையாளர் என்பதற்கு நிறைய காரணங்கள் உண்டு. அது நேர்காணலை எழுதும்போது சொல்லுவேன்.
இங்கே பிரசுமாகியிருக்கும் கட்டுரை நான் எழுதியது அல்ல. பெண்ணே நீ மாத இதழுக்காக ஜெயராணி எழுதியது. மார்ச் பெண்ணே நீ இதழில் எடிட் செய்யப்பட்டு வெளியான கட்டுரையின் முழுவடிவத்தை இங்கே கொடுத்திருக்கிறேன்.
பெண்ணே நீ இதழுக்கு எழுதிய கட்டுரையை இங்கே பிரசுரித்தமைக்காக பெண்ணே நீ க்கு மிகுந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
கட்டுரையில் வெளியாகியிருக்கும் கருத்துக்களை ஒட்டி ஜெயராணி, சுகிதா, நான் மூவருமாக நிறைய பேசிக்கொண்டிருக்கிறோம்.   அதனாலே இந்தக் கட்டுரையை பிரசுரிப்பதில் ஆர்வம் கொண்டேன். ஜெயராணியும் அனுப்பித் தந்தார். விஷயமுள்ள கட்டுரை எல்லாதரப்பையும் சென்றடைய வேண்டும் என்பதே நோக்கம்.

ஆழ்கடலில் திசைமாறிய படகு… December 31, 2009

Posted by மு.வி.நந்தினி in குடும்பம், சமூகம், சினிமா, பார்டான்ஸர், பாலியல் தொழிலாளி, பெண்கள்.
Tags: ,
2 comments

பார்டான்ஸர்களின் மறுபக்கம்

 கோயில் திருவிழாக்களில், அரை இருள் சூழ்ந்த போதை நெடியடிக்கும் இரண்டாம் தர ஹோட்டல்களில் இந்தப் பெண்களை நீங்கள் பார்த்திருக்கக்கூடும்மிதமிஞ்சிய ஒப்பனையும் கிளர்ச்சி ஊட்டுவதற்கென்ற அணியப்பட்ட உடைகளுடனும் இவர்கள் ஆடும் நடனத்தை. கேபரே டான்சர், டிஸ்கோ டான்சர் இன்னும் சில பல பெயர்களில் இவர்களை அழைக்கிறோம். இந்த நடனம் பார்ப்பவர்களை ரசிக்க வைக்கிறதா அல்லது அறுவறுக்க வைக்கிறதா என்கிற தர்க்கம்தான் இவர்கள் குறித்து நாம் காட்டும் அதிகபட்ச அக்கறையாக இருக்கும்! நிதர்சனத்தில் இந்த நடனப்பெண்களின் வாழ்க்கை ஆழ்கடலில் திசைமாறிப்போன படகு போன்றது. கரை திரும்புவதற்கான வாய்ப்பு அரிதிலும் அரிது! இதோ அவர்களுடைய வாக்குமூலங்கள்தான் அதற்கு சாட்சி

என் பேரு ஜோதி(பெயர் மாற்றப்பட்டுள்ளது) பிறந்தது, வளர்ந்தது சென்னையிலதான். தினமும் சாப்பாட்டுக்கே கஷ்டப்படற குடும்பம். அப்பாவுக்கு சரியான சம்பாத்யம் கிடையாது. இதுலதான் அம்மா, நான், தம்பி, தங்கச்சிங்க வாழ்ந்தாவணும். ஏழாவதுக்கு மேல படிக்க இஷ்டமில்லாம போயிடுச்சி. அப்புறம் அக்கம் பக்கத்துல சின்ன சின்ன வேலைகளுக்கு போயிட்டு இருந்தேன். அப்படி வேலைக்குப் போன இடத்துலதான் அவரைப் பார்த்தது. அந்த வயசு நல்லது கெட்டதை யோசிக்கத் தெரியாது. நல்லா வச்சி காப்பாத்துவாருன்னு கல்யாணம் பண்ணிக்கிட்டேன். ஆனா அவர் சரி கிடையாது. பிறந்த வீட்டிலேயாவது ரெண்டு வேலை சாப்பாட்டுக்கு வழி இருந்துச்சி. இங்க ஒரு வேளை சாப்பாட்டுக்கே வழி இல்லாம, தினம் பட்டினியா கிடக்க வேண்டிய நிலை. அப்பதான் ஏரியாவுல தெரிஞ்ச ஒருத்தர்நீ ஏன் இப்படி கிடந்து கஷ்டப்படற? வெளிநாட்டுல டான்ஸ் ஆடப்போனா கைநிறைய பணம் கிடைக்கும். உன் செலவுக்குப் போக, தம்பி, தங்கச்சிங்களுக்கும் நல்ல வாழ்க்கையை ஏற்படுத்தி கொடுக்கலாம்னு. முதல்ல துபாய்க்கு அழைச்சுட்டு போனாங்க. ‘லட்சக்கணக்குல பணம் கிடைக்கும். சேட்டுங்க நகையெல்லாம் போடுவாங்கன்னு நிறைய சொன்னாங்க. ஆனா அங்க நிலைமையே வேற. மூணு நாளைக்குள்ள டான்ஸ் ஆடி நூறு டோக்கன் எடுக்கணும். ஒரு டோக்கனுக்கு இவ்வளவு ரூபாய்னு குறிப்பிட்ட தொகையை நிர்ணயிச்சுடுவாங்க. டான்ஸ் பார்க்க வர்றங்க. நம்ம டான்ஸ் புடிச்சிருந்தா காசு கொடுத்து டோக்கன் வாங்குவாங்க. எந்த அளவுக்கு டோக்கன் அதிகமா வாங்கறமோ அந்த அளவுக்கு நமக்கு மதிப்பும் மரியாதையும் கூடவே பணமும் கிடைக்கும். மூணு நாளைக்கு நூறு டோக்கன் எடுக்கணுங்கிறது முடியாத காரியம். அப்போதான் எங்களை அழைச்சிட்டு போன ஏஜெண்ட்டுகளோட நிஜ முகம் தெரிய ஆரம்பிக்கும். ‘டான்ஸ் ஆடி டோக்கன் எடுக்கலைன்னா என்ன? அதே காசை நாலு பேருக்கிட்ட படுத்து சம்பாதின்னு கட்டாயப்படுத்த ஆரம்பிப்பாங்க. எனக்கும் இதுதான் நடந்தது. நான் அதுக்கு சம்மதிக்கவே இல்லை. அடி-உதை, சூடுன்னு தினம் தினம் சித்திரவதை. ஒரு கட்டத்துக்கு மேல வந்தது வந்துட்டோம், நாம நிறைய சம்பாதிச்சு கொடுக்கப்போறதா நினைச்சுட்டு இருக்கிற குடும்பத்துக்கு நாம எதை செய்யப்போறோம்னு நினைச்சு நான் என் முடிவை மாத்திக்கிட்டேன் ஜோதியின் வார்த்தைகளில் வாழ்க்கையின் மீதான சலிப்பு தெரிக்கிறது.

” 12 மணி வரைக்கும் டான்ஸ் ஆடணும். அதுக்கு மேல 10, 20 பேருகிட்ட படுக்கச்சொல்வாங்க. துபாய்க்கு போறோம்னு தான் பேரு. ஏதோ ஒரு அபார்ட்மெண்ட்ல எங்களை தங்க வைப்பாங்க. 3 மாசம் இருந்தாலும் 3 வருஷம் இருந்தாலும் அந்த நாலு சுவத்தைதான் பார்த்துட்டு இருக்கணும். மெஷினைவிட கேவலமான வாழ்க்கை. இப்படியே தொடர்ந்தா பைத்தியம் பிடிச்சுடுமேங்கிற பயத்துல அங்கிருந்து வெளியேறணும்னு முடிவு செய்தேன். எவ்வளவோ கெஞ்சி கேட்டும் எங்களை அழைச்சுட்டு போன ஏஜெண்ட் விடலை. சென்னையில இருந்த நண்பர்கள் போலீசுக்குப் போயிடுவோம்னு மிரட்டியதால் என்னை பிளைட் ஏத்தி அனுப்பிவைச்சாங்க. இத்தனை கஷ்டத்துக்கும் பிறகு எனக்கு கிடைச்சது என்னவோ வெறும் ஐயாயிரம் ரூபாய்தான்!” என்கிற ஜோதி தற்சமயம் சென்னையில் உள்ள சில கிளப்புகளில் ஆடி வருகிறார். வெளிநாடுகளுக்கு போவதைவிட சென்னையிலேயே ஓரளவு பாலியல் ரீதியிலான தொல்லைகள் குறைவு என்பது ஜோதியின் கருத்து.

வெளிநாடுகள்ல டான்சுக்குன்னு கூப்பிட்டு போறதே மெயினா தொழில் செய்யறதுக்குதான். வடபழனி ஏரியாவுல இப்படி பெண்களை அனுப்பி வைக்கறதுக்கே ஏகப்பட்ட ஏஜெண்டுகள் இருக்காங்க. சினிமா ஆசையில ஜெயிக்கவும் முடியாம, வாழவும் வழியில்லாம தவிக்கிற பெண்கள்தான் இவங்களோட டார்கெட்!” என்கிற ஜோதியின் கூற்றுக்கு உதாரணம் காட்டுவதாக இருக்கிறது கவிதா(பெயர் மாற்றப்பட்டுள்ளது)வின் அனுபவம்.

திருச்சியை பூர்விகமாகக் கொண்ட கவிதாவுக்கு படிப்பு ஒன்பதாம் வகுப்பு. வாழ்வு தேடி குடும்பத்தோடு சென்னை வந்தவர். சினிமாவில் மேக்கப் அசிசிஸ்டெண்டாக வேலை. “இந்த வேலைக்கு காலம் முழுக்க நூறு ரூபாய்தான் கிடைக்கும். கேபரே டான்ஸ் ஆடினா மூணு மாசத்துல முப்பதாயிரம் சம்பாதிக்கலாம்என்ற ஆசை வார்த்தைகள் கவிதாவின் குடும்ப கஷ்டத்துக்கு வடிகாலாக இருக்க, கேபரே டான்ஸ் ஆடப்போனார்.

முதல்ல உள்ளூர்ல ஆடிட்டு இருந்தேன். வெளியூர் போன அதிகமா சம்பாதிக்கலாம்னு பாண்டிச்சேரிக்கு அனுப்பினாங்க. மூணு மாசம் அக்ரிமெண்ட். முன்னாடியே 10 ஆயிரம் ரூபாய் கொடுத்துட்டாங்க. நம்ம குடும்ப கஷ்டத்துக்கு விடிவு கிடைச்சுடுன்னு போனா.. கேபரே டான்சுக்கு இன்னொரு பக்கமும் இருக்குன்னு அப்புறம் தெரிய ஆரம்பிச்சது. வெறுமனே டான்ஸ் மட்டும் ஆடினா ஆயிரம் ஆயிரமா பணம் கொட்டிடாதுன்னு தொழில் செய்ய வற்புறுத்தினாங்க. வழக்கம்போல சித்ரவதை. வேற என்ன செய்ய முடியும்? அவங்க சொல்றமாதிரி கேட்க ஆரம்பிச்சேன். பெரும் போராட்டத்துக்குப் பிறகு அங்கேயிருந்து வெளியேறினேன்என்கிற கவிதா, தான் இப்படி பாலியல் தொழிலாளியாக மாறியது தன் வீட்டுக்கு தெரியாது என்கிறார்.

வெளியூருக்கு போகும்போது ஷூட்டிங் போறன்னு சொல்லிட்டு போவேன். இப்ப லோக்கல்லதான் ஆடிகிட்டு இருக்கேன். டான்ஸ் மட்டும் ஆடினா ரெண்டாயிரம், மூவாயிரம்தான் கிடைக்கும். தொழிலும் சேர்த்து செய்தா ஏழாயிரம் ரூபாய் வரைக்கும் எடுத்துட்டு வரலாம். திருவிழாவுலயும் ஆடப்போறேன். அங்கேயும் சில பேர் கேப்பாங்க. எனக்கு விருப்பம் இருந்தா போவேன். வேற வழியில்லாம இந்த வாழ்க்கைக்கு வந்துட்டோம்னு ஒவ்வொரு நாளும் வருத்தப்படறோம். இதுல இருந்து விடுபடணும்னு விரும்பறோம். ஆனா எங்களை மனுஷியாகூட சிலபேர் மதிக்கிறதில்லை. குடும்பத்தோடு கோயில், குளம்னு எங்காவது போயிருப்போம். புரோக்கருங்க அங்க வந்து வர்றீயான்னு கூப்பிடுவாங்க. புரோக்கருங்க மட்டும் இல்லை, வெளியூருக்கு போன இடத்துல யாருக்காவது நம்ம போன்நம்பர் கிடைச்சுட்டா போதும் சொல்ல முடியாத சித்ரவதைக்கு ஆளாக வேண்டியிருக்கும். அவங்க கூட போக விருப்பமில்லைனு சொல்லும்போது அவங்களால தாங்கிக்க முடியாது, அசிங்க அசிங்கமா பேச ஆரம்பிச்சுடுவாங்கஎன்கிறார் கவிதா.

பதினாறு வயதிலேயே வாழ்க்கையை தொலைத்திருக்கிறார் புஷ்பா(பெயர் மாற்றப்பட்டுள்ளது). சேலத்தை சேர்ந்த இவர், காதலின் பேரால் திருமணத்துக்கு முன்பே கர்ப்பமாகி, அதனாலேயே சமூகத்தால் நிராகரிக்கப்பட்டவர். வழி தேடி சென்னைக்கு வந்தவர், புரோக்கர்களின் ஆசை வார்த்தைகளால் படுகுழியில் விழுந்திருக்கிறார். திருவிழாவுக்கு நடனம் ஆடப்போன இடத்தில் பாலியல் தொழில் செய்ய வந்த அழைப்புக்கு மறுப்பு தெரிவிக்க, கொடுமையின் உச்சகட்டமாக நான்கு பேர் கொண்ட கும்பல் புஷ்பாவை கட்டி வைத்து பாலியல் வல்லுறவு செய்திருக்கிறது. அதன் பாதிப்புகள் புஷ்பாவின் கண்களில் இன்னமும் உணரமுடிகிறது. இப்போது கேபரே டான்ஸர் என்பதோடு பாலியல் தொழிலாளியாகவும் உருமாறியிருக்கிறார் புஷ்பா.குடும்பத்தில் பணப்பிரச்னை, கணவன் அல்லது காதலனால் ஏமாற்றப்படுதல், சினிமா கனவு இதில் ஏதாவது ஒன்றில் பாதிக்கப்பட்டவர்களாக இருக்கிறார்கள் கேபரே ஆடும் பெண்கள். இவர்களின் இந்த நிலைமைக்கு யார் காரணம் என துப்பறிந்தால் ஒட்டுமொத்த சமூகத்தின் மீதும் குற்றம் சொல்ல வேண்டியதிருக்கும். “மற்ற பெண்களைப் போல எங்கள் வாழ்க்கையும் மாறணும்என்கிற இந்தப் பெண்களின் அடிப்படை உரிமைக்கு மதிப்பளிப்பதே குற்றவுணர்ச்சியிலிருந்து நம்மை காப்பாற்றும்!

நன்றி : சூரியகதிர்

”திருமணமாகாமல் ஆணும் பெண்ணும் சேர்ந்து வாழ்வதை வரவேற்கிறேன்!” நவம்பர் 21, 2009

Posted by மு.வி.நந்தினி in அரசியல், அலையன்ஸ் பிரான்சேஸ், இலங்கை தமிழர், கனிமொழி, குடும்பம், குட்டி ரேவதி, சமூகம், சாதி, சித்த மருத்துவர், சூரியகதிர், தமிழ், பெண்கள், லீனா மணிமேகலை.
Tags: , , , , , , ,
8 comments

 

photo : 'marakkanam' Bala

தமிழ் இலக்கியப் பரப்பில் அழுத்தமான பெண்ணிய கவிதைகளை எழுதி வருபவர் குட்டி ரேவதி! இவருடைய இரண்டாவது கவிதைத் தொகுப்புக்கு ‘முலைகள்’ என பெயரிட்டதாலேயே பெரும் சர்ச்சைகளுக்கு உள்ளானார். உள்ளடக்கம் காரணமாக அதே தொகுப்பு விமரிசகர்களால் பாராட்டவும்பட்டது. கவிதை, கட்டுரை என எழுத்து செயல்பாடுகளோடு பல்வேறு சமூகப் பிரச்சினைகள் குறித்து களஆய்வு செய்து ஆவணப்படுத்தியும் வருகிறார். சித்த மருத்துவர், புகைப்படக்காரர் என மேலும் பல முகங்கள் குட்டி ரேவதிக்கு…வெகுஜன பத்திரிகைகளில் இதுவரை பேசாத சில விஷயங்களை பேச வைக்க வேண்டும் என்ற முனைப்போடு குட்டி ரேவதியை அணுகியபோது ஆர்வத்தோடு ஒப்புக்கொண்டார். நன்பகல் வேளை ஒன்றில் சென்னை அலையன்ஸ் பிரான்சேஸ் வளாகத்தின் மர நிழல்களுக்கிடையே நடந்தது இந்தச் சந்திப்பு…

”படைப்பாளி என்பவர் சமூகத்தில் இருந்து எப்படி வேறுபடுகிறார்? பெண் கவிதைகள் மீதான விமரிசனம் இன்று எப்படி இருக்கிறது?”

எனக்குப் பிடிக்காததை இதுவரை வலிந்து செய்ததில்லை. தொலைதூரத்தில் தெரிகிற குறிப்பிட்ட ஒரு இலக்கை நோக்கிப் போக வேண்டும் என்ற திட்டமிடலும் இல்லை, எந்த அவசரமும் இல்லை. கவிதை எழுதுவது என் இயல்பு. கவிதையின் நீட்சியாக என்ன தோன்றுகிறதோ அதைச் செய்கிறேன். தடாகத்தில் தூக்கி எறியப்படுகிற கல்போல படைப்புகளைச் சமூகத்தின் முன் வைக்கிறோம். அதிர்வுகள் பெரிதாக இருக்கலாம், சிறியதாகவும் இருக்கலாம். ஆனால், சமீப காலமாக தமிழ் படைப்பாளிகளுக்கு அதிகாரத்தின் மீதான கவர்ச்சி அதிகமாகிக்கொண்டே வருகிறது. அதுவும் கடந்த இரண்டு வருடங்களாக ஈழம் சார்ந்து படைப்பாளிகளின் அணுகுமுறை கேள்விக்கு உட்படுத்தக்கூடியதாக இருக்கிறது. இங்கே போர் இல்லை. மூன்று வேளையும் சாப்பாடு கிடைக்கிறது. சவுகர்யமான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறோம். சமூகத்தைப் போல படைப்பாளிகளும் மந்தமாக மாறிக்கொண்டிருக்கிறார்கள். பெரிய எழுத்தாளர்கள் என… என் வாயால் அவர்கள் பேரைக்கூட உச்சரிக்க விரும்பவில்லை – பெண் கவிதைகள் குறித்து இதுவரை அவர்கள் நேர்மையான அணுகுமுறையோடு விமரிசனம் செய்ததில்லை. இதை திட்டமிட்ட சதி என்றுகூட சொல்லலாம். தொடர்ந்து இப்படிப்பட்ட புறக்கணிப்பு நிகழும்போது, பின்னால் வரும் சந்ததிக்குப் பெண் கவிதை குறித்த வரலாறே தெரியாமல் போகலாம்!

”இலங்கை பிரச்சினையில் அரசியல்வாதிகளைப்போல இலக்கியவாதிகள் நடந்துகொண்டார்கள் என்கிற விமரிசனம் எழுந்துள்ளது. இதில் உங்களுடைய கருத்து என்ன?”

சமீபகாலமாக ஈழ வரலாறு குறித்து அத்தனை நூல்களையும் தேடிப்பிடித்து படித்து வருகிறேன். நமக்கும் இலங்கைத் தமிழர்களுக்குமான பூகோள ரீதியான உறவுகள், சமூக, வரலாற்று, அரசியல் உறவுகள் நெகிழ்வைத் தருகின்றன. இப்படிப்பட்ட எந்த வகையான புரிதலும் இல்லாமல் ஆறேழு மாதங்களாக இலக்கியவாதிகளால் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டங்கள், கவியரங்கங்கள் கேலிக்கூத்தாகத்தான் இருந்தன. தொலைக்காட்சியில் காட்டப்படுகிற கொலைகளைப் பார்த்து உணர்ச்சிவசப்பட்டவர்களாகத்தான் இவர்கள் நடந்துகொண்டார்கள். நம்முடைய தம்பியோ, அண்ணனோ காயப்பட்டிருந்தால் உடல், மனம் என சகலமும் துடித்திருக்குமே! அந்தத் துடிப்பு நமக்கு வந்திருக்க வேண்டாமா? இதைவிட அபத்தம், தமிழக அரசின் உலகத் தமிழ் மாநாடு குறித்த அறிவிப்பு. ஆயிரம் ஆயிரமாக சொந்த உறவுகளைப் பறிகொடுத்துவிட்டு தமிழுக்கு விழா எடுத்து என்னவாகப்போகிறது? மொழியின் புளகாங்கிதத்தை பேசவா? தமிழ் மக்கள் குறித்தோ, பண்பாடு, இலக்கியம் குறித்தோ எந்தவித அறிதலும் அரசுக்குக் கிடையாது. நவீன இலக்கியத்தின் ஏஜென்சி போல கனிமொழியைச் செயல்பட வைப்பதுதான் இலக்கியம் குறித்து அரசுக்கு இருக்கிற அதிகபட்ச அக்கறை. 80,90 வயதுகளைக் கடந்த தமிழ் அறிஞர்களை வைத்து நடத்தப்படுகிற உலகத் தமிழ் மாநாட்டால் என்ன நடந்துவிடப்போகிறது? பசுமை நிறைந்த நினைவுகளே என பாடச்சொல்லியா கேட்கப்போகிறோம்?! வரலாற்றில் எங்கும் நிகழ்ந்திராத வன்முறை ஈழத்தில் நடந்திருக்கிறது. முப்பத்தைந்து ஆண்டுகாலமும் இதுவெறும் அரசியல் பிரச்சினையாக பார்க்கப்பட்டதாலேயே இன்று ஒட்டுமொத்த தமிழர்களும் கண்ணீரில் மிதந்து கொண்டிருக்கின்றனர். இந்தப் படுகொலைகளை நம்மால் தடுத்து நிறுத்தியிருக்க முடியும். நம் எல்லோருக்கும் இதில் பொறுப்பு இருக்கிறது.

 ”ஓரினச் சேர்க்கையை குற்றம் என சொல்லும் இந்தியக் குற்றவியல் சட்டம் 377வது பிரிவை நீக்குவது குறித்து உச்சநீதிமன்றம் பரிந்துரைத்துள்ள நிலையில் ஊடகங்களில் ஓரினச் சேர்க்கை குறித்து ஆரோக்கியமான விவாதம் எழுந்துள்ளது. கவிஞர் லீனா மணிமேகலை கூட தன்னுடைய ‘உலகின் முதல் அழகிய பெண்’ கவிதைத் தொகுப்பின் முன்னுரையில், தான் இருபால் விருப்பமுள்ளவர் என எழுதியுள்ளார். கட்டுப்பாடுகள் மிக்க இந்திய சமூகத்துக்குள் இத்தகைய வெளிப்படையான அறிவிப்புகள், விவாதங்கள் மாற்றங்களை ஏற்படுத்துமா?”

சட்டம் போட்ட பிறகுதான் ஊடகங்கள் ஒதுக்கப்பட்ட விஷயங்களைப் பேசவேண்டும் என்பதில்லை. அரசுக்குச் சொறிந்து கொடுக்கும் வேலையை விட்டுவிட்டு ஊடகங்கள் தன்னளவில் சுயமாக மக்களுக்காகச் செயல்பட முடியும். ஆனால், மனித மனங்களில் படிந்துபோயுள்ள வக்கிரமான பாலியல் ஆசைகளை நிறைவேற்றக்கூடியவையாகத்தான் பெரும்பாலான ஊடகங்கள் செய்தி வெளியிடுகின்றன. சமீபத்தில் நடிகை புவனேஸ்வரி கைது விவகாரத்திலும் அனந்தலட்சுமி கொலை சம்பவத்திலும் ஊடகங்கள் நடந்துகொண்ட விதத்தை உதாரணத்துக்கு எடுத்துக்கொள்ளுங்கள். அந்தந்த நேரத்தில் கிடைக்கும் செய்திகளின் தன்மைக்கு ஏற்றபடிதான் ஊடகங்கள் செயல்படுகின்றனவே தவிர சமூக மாற்றத்துக்காக அல்ல. சமூகம் குறித்த எந்தப் புரிதலும் இல்லாமல் ஒருவர், தன்னை இருபால் விருப்பமுள்ளவர் என சொல்லிக்கொள்வது மீடியாவின் கவனத்தை தன்பக்கம் ஈர்ப்பதற்கான முயற்சி. சமூகத்தின் மீது ஆழமான பார்வை வைத்திருக்கிறவர்களால் மேலோட்டமாக போகிற போக்கில் இப்படிப்பட்ட ஸ்டேட்மெண்டைக் கொடுக்க முடியாது.

”சமீப காலமாக ‘லிவிங் டுகெதர்’ என்று சொல்லப்படுகிற திருமணம் செய்யாமல் ஆணும் பெண்ணும் சேர்ந்து வாழ்வது அதிகரித்து வருகிறது. இது திருமணம் என்கிற நிறுவன அமைப்புக்கு மாற்றாக இருக்கும் என நம்புகிறீர்களா..?”

நானும் இப்படிப்பட்ட வாழ்க்கை முறையில் வாழ்ந்து கொண்டிருக்கிறேன் என்ற வகையில், ஆணும் பெண்ணும் சேர்ந்து வாழ்வது திருமண அமைப்புக்கு மாற்றாக இருக்கும் எனச் சொல்லமுடியும். ஆனால், முழுமையான மாற்றாக இருக்கும் என்று கூற முடியாது. பெண் மீதான பாலியல் ஒடுக்குமுறைகளுக்கும் திருமணம் என்கிற அதிகார அமைப்பின் முரண்பாடுகளுக்கும் இது தீர்வு தரும். ஆணும் பெண்ணும் சேர்ந்து வாழ்வதுதான் இயற்கையின் நியதி. ஆனால் திருமணம் என்பது காலில் போடப்பட்ட அடிமைச் சங்கிலி. அதனால், நல்ல ஆண்களுடன் சேர்ந்து வாழ்வதை நான் வரவேற்கிறேன். இந்த வாழ்க்கையில் பெண்களின் தனிப்பட்ட ஆளுமையைத் தக்கவைத்துக்கொள்ள முடியும். ஆண்களுக்கும்கூட இது இறுக்கம் தளர்ந்த வாழ்க்கையாக இருக்கும். இருவருடைய வாழ்க்கையும் லகுவாக அமையும். விவாகாரத்து பத்திரத்தில் கையெழுத்து போட்ட பிறகுதான் திருமண ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டும் என லெனின் சொன்னது போலத்தான் இன்றைய திருமண வாழ்க்கை இருக்கிறது. விவாகரத்தும் விவாகரத்துக்குப் பிறகான வாழ்க்கையும் நம் நாட்டில் கொடுமையான விஷயங்கள். ஆனால், திருமண அமைப்புக்குள் போகாமல் ஆணும் பெண்ணும் சேர்ந்து வாழும் வாழ்க்கையில் விடுதலைக்கான கனவுகள் திறந்திருக்கும். பெரியார் சொன்னதுபோல, ‘ஐந்து வருடம் சேர்ந்து வாழுங்க. அதுக்குப்பிறகு குழந்தை வேணும்னு நினைச்சா பெத்துக்குங்க..!’

 ”இறுதியாக…நாடாளுமன்ற தேர்தலின்போது பகுஜன் சமாஜ் கட்சியில் இணைந்து பணியாற்றினீர்கள். இப்போது கட்சியிலிலிருந்து விலகிவிட்டதாக தெரிகிறது. திடீர் அரசியல் பிரவேசத்துக்கும் விலகலுக்கும் என்ன காரணம்..?”

அரசியல் ரொம்ப அவசியம். ஆனால் அதற்கு இன்னும் நான் தயாராகவில்லை! மக்களோடு இன்னும் கீழே இறங்கி வேலை செய்ய வேண்டியது நிறைய இருக்கிறது. கூடவே தற்கால அரசியல் சூழலில் பெண்களுக்கான இடம் கேள்விக்குரியதாக இருக்கிறது. காலம் இருக்கிறது, மீண்டும் என்னுடைய அரசியல் பிரவேசம் எழுச்சியோடு நிகழும்!

நன்றி : சூரியகதிர்

பெண்களும் சாதி உணர்வும் நவம்பர் 2, 2009

Posted by மு.வி.நந்தினி in அரசியல், குடும்பம், சமூகம், சாதி, பெண்கள், முத்துராமலிங்க தேவர்.
Tags:
10 comments

FACES

டந்த பத்து ஆண்டுகளாக சென்னையில் வசிக்கிறேன். இந்த ஆண்டுதான் முத்துராமலிங்க தேவரின் பிறந்த நாள் விழாவை சென்னை எப்படி கொண்டாடுகிறது என்பதைக் காண முடிந்தது. சாதி வெறியின் அறுவறுப்பான கொண்டாட்டம்நீ முந்தி நான் முந்தி என ஓட்டுக் கட்சிகள் நடத்தும் ஆபாச கூத்துக்கள். முத்துராமலிங்க தேவரின் சிலை அமைக்கப்பட்டிருக்கும் நந்தனம் வழியே அலுவலகம் செல்ல வேண்டியிருந்ததால் இந்த கேவலங்களை நேரடியாக பார்க்க முடிந்தது.அப்பட்டமான சாதிவெறிக் கொண்டாட்டம்கோஷங்களை எழுப்பிக்கொண்டிருந்த அந்த சிறுவர்களின் முகத்தில் அப்படியொரு வெறித்தனம்சாலையில் பிதுங்கி வழிந்த நெரிசலில் சிக்கிக்கொண்டிருந்த அரை மணி நேரத்தில் ஒரு பெண் சாதி குறித்து சொன்ன அந்த பெருமித வார்த்தைகள் நினைவில் வந்து வந்து போயின.

திருமணம் ஆகி, குழந்தைக்கு தாயாகியும் பத்தாண்டு காலம் காதலித்தவனை மறக்க முடியாமல் கழுத்தில் கிடந்த தாலியை கழற்றி எறிந்து காதலித்தவனுடன் வாழ முடிவெடுத்தவர் அந்தப் பெண். புரட்சிகரமான இந்த முடிவுக்கேற்றபடி சில மாதங்கள் காதலனுடன் வாழவும் செய்தவர். பெற்றோருக்கு விஷயம் தெரியவர காதலனை விட்டு கணவருடன் மீண்டும் இணைந்தவர். சமூகத்துக்காக கணவருடன் வசித்தாலும் இன்னமும் மனதளவில் அவர் காதலனுடன் வாழ்வதாகவே நினைக்கிறவர்.

எல்லாவற்றையும் உதறிவிட்டு ஏன் நீங்கள் விரும்பியவருடனேயே வாழக்கூடாது என கேட்டதற்கு அவர் சொன்ன பதில்..நாங்க தேவர் ஜாதிஅவர் வேற ஜாதிநாங்க எப்படி காலம் முழுசும் சேர்ந்து வாழ முடியும்?

தான் எப்படி வாழ வேண்டும் தீர்மானித்துக் கொண்ட அந்தப் பெண்ணின் முடிவு குறித்து கருத்து சொல்ல எதுவும் இல்லை. அது அவருடைய தனிப்பட்ட விருப்பம் சார்ந்தது. இங்கு விவாதத்திற்கு உள்ளாக்கப்பட வேண்டிய விருப்பப்பட்டவருடன் சேர்ந்து வாழ அந்தப் பெண் சொன்ன காரணத்தைத்தான். சமூகத்துக்கு தெரியாமல் தன் சாதி அல்லாத தான் விரும்பிய ஆணுடன் வாழ முற்பட்டவருக்கு, நாலு பேருக்கு தெரிய வரும் சூழல் வரும்போது தான் பிறந்த சாதி முக்கியமாகப் படுகிறது. பொதுவாக ஆண்கள்தான் சாதியை ஆணித்தரமாக கடைப்பிடிப்பவர்களாக கண்டிருக்கிறோம், ஆண்களுக்குத்தான் சாதீய உணர்வு அதிகம் எனவும் பேசுகிறோம். நிதர்சனத்தில் ஆண்களுக்கு இருக்கும் அதே அளவில் பெண்களுக்கும் சாதி உணர்வு,பெருமிதம் இருக்கிறது. குடும்பம் என்னும் அமைப்பின் மூலம் ஒரு தலைமுறையிலிருந்து மற்றொரு தலைமுறைக்கு சாதி கருத்தாக்கங்களை கொண்டு செல்வதில் பெண்களுக்கு பெரும் பங்கு இருக்கிறது. ஆண் சட்டம் போடுபவனாக இருக்க, பெண் அதை செயலாற்றவும் கட்டிக்காப்பாற்றவும் செய்கிறார். பள்ளிக் காலங்களிலேயே சக தோழிகள் சாதி தொடர்புடைய விஷயங்களில் கவனமாக இருந்துவந்ததை அவதானித்திருக்கிறேன். என்ன சாதி என்பதைப் பொறுத்தே பேச்சும் பழக்கமும் இருக்கும். பொதுவெளியில் கிடைக்காத சுதந்திரம் பெண்களை சாதி உணர்வற்றவர்களாகக் காட்டிக்கொண்டிருக்கிறது. தன் சாதியைச் சேராதவர்கள் மீது நேரடியாக ஆண்களைப் போல வன்முறையை ஏவிவிடாதபோதும், சாதி தீயை அணைந்துவிடாமல் காப்பாற்றுவதை பெண்கள் தொடர்ந்து செய்துவருகிறார்கள். இது விரிவாகப் பதிவு செய்யப்பட வேண்டும். பெண்கள் தொடர்புடைய பிரச்சினைகள் குறித்து பேசும்போது பெண்களுக்கும் சாதிக்குமான உறவு குறித்தும் பேச வேண்டும்

ஆண்வயப்பட்ட சமூகம் பெண்ணுடல் மீது திணிக்கும் வன்முறை April 27, 2009

Posted by மு.வி.நந்தினி in ஆணாதிக்கம், குடும்பம், சமூகம், பாலியல், பெண்கள், பெரியார்.
Tags: , , , , , ,
12 comments

muslimwomen

எந்த​வொரு பெண்ணும் குற்றவாளியாக இருக்க இயலாது. குற்றவாளியாக இருப்பதற்கு ஒருவர் ஆணாக இருந்தாக வேண்டியது அவசியம்!”

- ‘சூன்யப்புள்ளியில் பெண்’ நாவலில் இருந்து…

பெண்ணிய சொல்லாடல்களும் பெண்ணிய புரட்சியும் காலந்​தோறும் நடந்தபடி​யே உள்ளன. அ​வை அந்தந்த காலகட்டத்தில் தாக்கத்​தை ஏற்படுத்துகின்றன​​வே தவிர, தொடர்ந்து பேரியக்கமாக வளர்ந்து மா​பெரும் சமூக மாற்றத்​தை ஏற்படுத்த தவறிவிடுகின்றன. சாதி ஒழிப்பு, பிராமணீய எதிர்ப்பு, பெண் விடுத​லை உள்ளிட்ட புரட்சிக்கருத்தாக்கங்க​ளை ஏற்படுத்தியவர் பெரியார். அவர் வழிவந்த திராவிட இயக்கம் அ​மைப்பு ரீதியாக வலுவாக வளர்ந்தும், திராவிட கட்சிகள் தொடர்ந்து ஆட்சியில் இருந்து​கொண்டும் இருக்கின்றன. ஆனால் பேரியக்கமாக வளர​வேண்டிய பெரியாரின் கருத்துக்கள் நீர்த்துப்​போய் வெறும​​​னே பிராமணீய எதிர்ப்பு என்பது மட்டு​​மாக எஞ்சி நிற்கிறது. சாதி ரீதியிலான ஒடுக்குதல்களும் பெண்கள் மீதான சமூக வன்மு​​றைகளும் இன்று வடிவம் மாறி முன்​பைவிட கொடூர முகத்துடன் வ​ளைய வருகின்றன.

பெண்கள் கடல் தாண்டிப்போய் பணம் சம்பாதிக்கும் இக்காலக்கட்டத்திலும்கூட, ஒரு பெண்ணின் மறுமணம் என்பது கனவிலும் நி​னைத்துப்பார்க்கக்கூடாத விஷயம்தான்! எட்டு மாத கைக்குழந்தையானாலும் சரி, எண்பது வயது மூதாட்டியானாலும்சரி பெண்ணுடல் எப்போதும் இச்சைக்குரியதாகவே உள்ளது ஆண்களுக்கு. வீடு, பள்ளி,கல்லூரி, பணியிடம் என சமூகத்தின் ஒவ்வொரு கட்டத்திலும் பெண் சுரண்டலுக்கு உள்ளாகிறாள். பெண் ஒடுக்குமுறை குறித்து நாம் நிறைய பேச வேண்டியுள்ளது. பெரியார் கருத்துக்களை கொண்டு செல்ல அவருடைய நிறுவன வழிதோன்றல்களால் இனி முடியாது என்னும் உண்மையோடு சூன்யப்புள்ளியல் பெண் நாவல் குறித்து எனது பகிர்தல்களை உங்கள் முன் வைக்கிறேன். சூன்யப்புள்ளியில் பெண் நாவலில் வரும் ஃபிர்தவுஸின் வாழ்க்கைச் சூழல், அவள் எதிர்க்கொள்ளும் வன்முறைகள்ம் சூழலுக்கும் பொருந்திப்போவதாலேயே நாவல் குறித்து பேச விரும்புகிறேன் .

எகிப்தின் நைல் நதியோரம் வாழும் ஏழை விவசாயக் குடும்பத்தில் பிறந்த மூத்தவள் ஃபிர்தவுஸ். வறுமை சூழ்ந்த அந்த குடும்படும் அவளைச்சுற்றியுள்ள சமூகமும் சிறந்த அடிமையாக வாழ்வதற்கான அடிப்படையை குழந்தைப்பருவம் முதலே கற்றுக்கொடுக்கத் தொடங்குகின்றன. வீட்டு வேலைகளை செய்வதற்கும் உடன் பிறந்தவர்களை கவனிப்பதற்கும் தன் வீட்டிலேயே அடிமையாக பணிக்கப்படுகிறாள். எதிர்பாராத சூழ்நிலையில் அப்பாவும் தொடர்ந்து அம்மாவும் இறந்துவிட, உடன் பிறந்தவர்களும் வறுமை காரணமாக குழந்தைகளாகவே பலியாகிடும் போது மாமாவின் பராமரிப்பில் விடப்படுகிறாள் ஃபிர்தவுஸ். அவளின் குழந்தைமையை பாலியல் இச்சைக்கு பயன்படுத்திக்கொண்ட அதே மாமாவுடன் எகிப்துக்கு செல்ல வேண்டிய கட்டாயம். மாமா தன்னை வேலைக்காரியாக, பாலியல் அடிமையாக நடத்தினாலும் பள்ளிக்கு அனுப்பி வைப்பவனாகவும் இருக்கிறான். நடுநிலைப்பள்ளி வகுப்புகளை முடிக்கும் ஃபிர்தவுஸை, அவசரஅவரசமாக 60 வயது கிழவனுக்கு கணிசாமான வரதட்சணைத் தொகைக்கு திருமணம் செய்து வைக்கிறார்கள் மாமாவும் அவரது மனைவியும். குணத்திலும் உருவத்திலும் அருவருப்பை ஏற்படுத்தும் அந்தக்கிழவனின் அடிஉதைகளை தாங்கப்பொறுக்காமல் வீட்டை விட்டு ஓடிப்போகிறாள் ஃபிர்தவுஸ்.

மற்றவர்களை பசியில் விட்டு, தான் மட்டும் உண்டு ஏப்பம் விடும் அப்பா, அப்பாவுக்குரிய இடத்தில் இருந்துகொண்டு தன் உடலைச் சுரண்டிய மாமா, பேராசைப் பிடித்த கருமி கணவன் என அதுவரை எதிர்கொண்ட ஆண்களைவிட, வீட்டை விட்டு வெளிவந்த பிறகு ஃபிர்தவுஸ் எதிர்கொள்ளும் ஆண்கள் எந்த வகையிலும் வேறுபட்டவர்கள் அல்ல. வேலை வாங்கித்தருகிறேன் என்ற பெயரில் தானும் சுரண்டி, அவளை விற்பனை பொருளாக்குகிறான் ஒருவன். அவனிடமிருந்து தப்பித்துப்போனவள் முற்போக்கு பேசுபவனின் காதலில் விழுகிறாள். அவனுடைய முற்போக்குத்தனம் படுக்கை அறையை பகிர்ந்துகொண்டு, பணம் நிரம்பப் படைத்த இன்னொருத்தியுடன் செல்கிறது. சோர்ந்துபோகும் ஃபிர்தவுஸ், மேல்தட்டு வர்க்க பாலியல் தொழிலாளி ஒருத்தியின் மூலம் தன்னுடலுக்குரிய விலையை தானே நிர்ணயிப்பவளாக மாறுகிறாள். அன்பு, காதல் என்ற பெயரில் இலவசமாக தன்னைப் பயன்படுத்திக்கொள்ள இனி ஒருபோதும் எந்த ஆணையும் அனுமதிப்பதில்லை என முடிவெடுக்கிறாள். அரபு மன்னர்களையும் அரசு உயர்பதவியில் இருப்பவர்களையும் மகிழ்விக்கும் தேர்ந்த மேல்தட்டு பாலியல் ​தொழிலாளி ஆகிறாள் அவள். தனக்குரிய தானே நிர்ணயித்து வாழ்ந்து கொண்டிருப்பவளின் வாழ்க்கையில் அரசியல் செல்வாக்குமிக்க தரகனின் தலையீடு ஏற்படுகிறது. தனக்குரிய சுதந்திரத்தை விட்டுக்கொடுக்க முடியாதவளாய் சந்தர்ப்ப வசத்தில் தரகனை கத்தியில் குத்திக் கொல்கிறாள். ஃபிர்தவுஸை கைது செய்து குற்றவாளியாக்கி தூக்கு தண்டனை விதிக்கிறது அரசு. நீதி வலுபடைத்தவர்களுக்கானது என்பதற்கு மேலும் ஒரு உதாரணம்.

எகிப்து உளவியல் மருத்துவரும் பெண்ணிய எழுத்தாளருமான நவ்வல் எல் ஸதாவி சிறையில் இருந்தபோது சந்தித்த தூக்கு தண்டனைக் கைதி ஃபிர்தவுஸ். ஓர் எளிய விவசாயப் பின்னணியில் ஆரம்பிக்கும் ஃபிர்தவுஸின் வாழ்க்கை திசை மாறி இறுதியில் அசாதாரணமாக முடிகிறது என்பதை அழுத்தமாக கூறுகிறது இந்நாவல். ஆரம்பத்திலும் நாவல் முடியும்போது மட்டும் ஆசிரியர் வந்துபோகிறார். மற்றபடி நாவல் முழுக்க ஃபிர்தவுஸின் பார்வையிலேயே செல்கிறது, சுயசரிதைக்குரிய நடையுடன். ஃபிர்தவுஸின் மனஉணர்வுகளை அப்படியே பிரதிபலிப்பதாக இருக்கிறது நவ்வலின் எழுத்து.

ஃபிர்தவுஸின் வாழ்க்கையில் சற்றுநேர பூன்னகையைப் பூக்க வைத்தவர்கள் பால்ய வயது தோழனும் நடுநிலைப் பள்ளியில் வகுப்பு ஆசிரியை இக்பாலும்தான். தன் வாழ்க்கையை ஒவ்வொரு கட்டத்திலும் சூன்யமாக்கியது ஆண்களே என்பது ஃபிர்தவுஸின் நிலைப்பாட இறுதியில் நிற்கிறது. பெண்களின் ஒவ்வொரு செயலுக்கும் ஆண்தான் பின்னணி என்பது அவள் முன்வைக்கும் முடிவு. “நீங்கள்(ஆண்கள்) எல்லோரும் பயங்கர குற்றவாளிகள். நீங்களெல்லோருமே அப்பாக்கள், மாமாக்கள், கணவர்கள், தரகர்கள், வழக்கறிஞர்கள், மருத்துவர்கள், எல்லாவகையான தொழில்களை செய்யும் எல்லா ஆண்களும்…”

ஆண்வயப்பட்ட சமூகத்தில் பெண்ணுடல் மீது திணிக்கப்படும் வன்முறைக்கு ஆவணமாக இருக்கிறது இந்நாவல். இதுபோன்ற ஆயிரம் ஆவணங்களை நம் சமூகத்திலிருந்தும் எடுக்க முடியும் என்பதை சுட்டிக்காட்டுவதே இந்நாவல் குறித்த எனது இந்தப்பதிவின் நோக்கம். மறுக்கிறவர்கள் தினத்தந்தி கட்டம்கட்டி எழுதும் அழகி பிடிபட்டார்கதைகளைப் படிக்காமல் அழகிகளின் மறுபக்கத்தைப் படித்துப் பாருங்கள்!

சூன்யப் புள்ளியில் பெண்

நவ்வல் எல் சதாவி

தமிழில்  : லதா ராமகிருஷ்ணன்
வெளியீடு
உன்னதம்-638455

ஆலந்தூர் அஞ்சல்

கவுந்தப்பாடி

ஈரோடு மாவட்டம்

பேசி-9940786278

பெண் இருப்பு எப்போதும் சூன்யப் புள்ளியில்… மார்ச் 23, 2009

Posted by மு.வி.நந்தினி in அரசியல், ஆணாதிக்கம், குடும்பம், சமூகம், பாலியல், பெண்கள்.
5 comments

பகுதி-1

Nawal El Saadawiருவரின் ஒழுக்க மீறலை அல்லது ஒழுக்க சீலத்தை சுட்டும்போது, அவர் சார்ந்துள்ள மதத்தோடு பொறுத்தி பேசுவது இயல்பான விஷயமாக இங்கே இருக்கிறது. ‘இஸ்லாமியதீவிரவாதி என்ற சொல்லாடலும் பார்ப்பான் உயர்ந்தவன்என்கிற எண்ணமும் இதற்கு உதாரணங்களாகக் கொள்ளலாம். உயர்ந்த நல்லோழுக்கங்களையும் அன்பையும் சகோதரத்துவத்தையும் இன்னபிற நல்லனவற்றையும் வலியுறுத்துவதாக சொல்லப்படும் அனைத்து மதங்களைச் சேர்ந்த தீவிர பற்றாளர்களும்கூட அடிப்படையில் மனிதர்களே! மதங்களால் புனிதர்களாகப்படும் எல்லோருக்குமே புனிதத்திற்கு எதிரிடையான பக்கமும் இருக்கிறது என்பதற்கு வரலாற்றிலும் நிகழ்காலத்திலும் ஏராளமான உதாரணங்களை நாம் பார்த்துவருகிறோம். மதத்தால் புனிதராக்கப்பட்டவருக்குள் எப்படி சராசரியான மனித இயல்புகள் இருக்கிறதோ, அதுபோலவே இஸ்லாம், கிறித்துவம், இந்து என உலக மதங்கள் அத்தனையிலும் பெண் ஒடுக்குதலும் அவள் இரண்டாம் பாலினமாகக் கருதப்படுவதும் இருக்கிறது.

கருணையும் குரூரமும் மனித இயல்பானால், பெண் மீதான ஒடுக்குதல் என்பது ஆணாதிக்கச் சிந்தனை, இச்சமூகத்திற்கு இயல்பென செயற்கையாக உருவாக்கிக் கொடுத்திருக்கும் கொடை. அது வழிவழியாக இச்சமூகத்ததில் பெண் ஒடுக்கப்பட வேண்டியவள் என்பதை ஆணுக்கும் ஒடுக்கப்பட பிறந்தவர்கள் என்பதை பெண்ணுக்கும் போதிக்கிறது. இந்தியாவில், ஈரானில், அமெரிக்காவில் எங்கு பிறந்தாலும் காலச்சாரங்களும் நாடுகளும் வேறுபட்டிருந்தாலும் பெண், ஒடுக்குதலுக்கு ஆளாக வேண்டியவள் தான்! இது குறித்து பெண்ணிய சிந்தனையோடு கூடிய ஆய்வுகளும் கட்டுரைகளும் இலக்கிய பதிவுகளும் உலகம் முழுவதும் சொல்லிக்கொண்டிருக்கின்றன. அந்த வகையில் எகிப்து பெண்ணிய எழுத்தாளரான நவ்வல் எல் சதாவியின் எழுத்துகளை மதிப்பு மிக்க ஆவணங்களாக கருத முடியும்.

நீண்ட மாதங்களுக்கு முன் ஒரு இலக்கிய பத்திரிகையில் நவ்வல் எல் சதாவி குறித்த கட்டுரையை வாசித்தபோது, அவர் மீது ஒருவகை ஈர்ப்பு உண்டானது. நவ்வல் எல் சதாவி குறித்த மேலதிக விவரங்களை அவருடைய இணைய தளத்தில் படித்து அறிந்தேன். சில கட்டுரைகளையும் அங்கே படிக்க முடிந்தது. கட்டுரை, சிறுகதை, நாவல் என பன்முகத் தன்மையோடு ஏராளமாக எழுதியிருக்கும் அவருடைய எழுத்துகளைப் படிக்க ஆர்வம் மேலிட்டது. குறிப்பாக Women at point zero நாவலை படிக்க விரும்பினேன். புத்தகக் கடைகளில் விசாரித்தபோது அப்போதைக்கு இருப்பில் இல்லை என்று கூறி, வேண்டுமானால் தருவித்து தருவதாக பதில் வந்தது. அழைப்பு எண்ணை தந்துவிட்டு வந்த நேரம், எண்ணையே மாற்ற வேண்டியதாகிவிட்டது. நேரில் சென்றும் விசாரிக்கவில்லை. அதோடு வேறுவேறு வேலைகளில் கவனம் கொள்ள எதேச்சையாக தி.நகர் புக் லேண்டில் Women at point zero-ன் தமிழ் பெயர்ப்பாக சூன்யப் புள்ளியில் பெண்நாவலை புத்தகமாகப் பார்த்தேன். ஆங்கிலத்தில் படித்திருந்தால் ஒரே மூச்சில் படித்திருக்க முடியுமா என்று தெரியாது. தமிழில் கிடைத்ததால் விரைந்து முடித்தேன். லதா ராமகிருஷ்ணனின் மொழிபெயர்ப்பு இது. மூல மொழியில் படிக்காததால் மொழிபெயர்ப்பு குறித்து பேசுவது சரியாக இருக்காது.

1974 ல் நவ்வல் எல் சதாவி அரசியல் கைதியாக சிறையில் இருந்தபோது அங்கு சந்தித்த ஃபிர்தவுஸ் என்ற பெண்ணின் வாழ்க்கை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்ட நாவல் இது. நாவல் குறித்து பேசுவதற்கு முன் நவ்வல் எல் சதாவி குறித்து சில குறிப்புகளைத் தர விரும்புகிறேன். நவ்வல் எல் சதாவியின் அப்பா சுதந்திரப் போராட்ட வீரர். கல்வி அமைச்சகத்தில் பணியாற்றியவர். பெண் இரண்டாம் பட்சமாக ஒதுக்கப்படுவதை தன் குடும்பத்திலிருந்தே ஆரம்பிக்கும் அனுபவத்தின் வாயிலாக உணர்கிறார் நவ்வால். தன் சகோதரனைவிட தான் படிப்பிலும் இன்னபிற விஷயங்களிலும் முதன்மையானவராக இருந்தபோதும் சகோதரனுக்கு தன் குடும்பத்தினரிடம் கிடைக்கும் சலுகையும் அன்பும் (இந்த விஷயம் நம்முடைய குடும்பங்களுக்கு இப்போதும் பொருந்திப்போவதை கவனிக்க) இவருக்கு கிடைப்பதில்லை. அடிப்படையில் ஒரு பெண் எதிர்கொள்ளும் குடும்ப, சமூக பிரச்சினைகளை நவ்வால் எதிர்கொண்டபோதிலும் உளவியல் மருத்துவம் படிக்க வைக்கும் அளவுக்கு அவருடைய குடும்பத்தினர் கல்வியின் அவசியத்தை உணர்ந்தவர்களாக இருந்திருக்கிறார்கள்.

உளவியல் மருத்துவராக குடும்ப வன்முறைகளால் பாதிக்கப்பட்ட பலதரப்பட்ட பெண்களை சந்திக்கும்போது அவருக்குள் பெண்ணிய சிந்தனை கிளர்ந்து எழுந்துள்ளது, எழுதத் தொடங்கியிருக்கிறார். ஆய்வு நோக்கில் அவர் எழுதிய கட்டுரைகள், நாவல்கள் மத அடிப்படைவாதத்தை கேள்விக்குட்படுத்துவதாகவும் அரசுகளை விமர்சிப்பதாகவும் இருந்த காரணத்தினால் அரசியல் கைதியாக ஒரு வருடம் சிறையில் அடைக்கப்படுகிறார். அங்கே எழுதவதற்கு மறுக்கப்படுகிறது. கழிப்பறையில் பயன்படுத்தும் டிஷ்யூ பேப்பரில் ஐப்ரோ பென்சிலைக் கொண்டு எழுதுகிறார். சிறையிலிருந்து விடுதலையான பின்பும் அடிப்படைவாதிகளிடமிருந்தும் அரசிடமிருந்தும் தொடர்ந்துகொண்டிருந்த அச்சுறுத்தல் காரணமாக அமெரிக்காவில் குடியேறியிருக்கிறார் நவ்வால். அவருடைய எழுத்துப் பயணம் சற்றே அசுவாசத்தோடு தொடர்ந்து கொண்டிருக்கிறது.

ஊடகப்பெண்களை சமையலறைக்கு துரத்தும் அராஜக ஆணாதிக்க கும்பல்! ஜனவரி 29, 2009

Posted by மு.வி.நந்தினி in அரசியல், ஆணாதிக்கம், ஊடகப்பெண்கள், குடும்பம், சமூகம், பாலியல், பெண்கள்.
2 comments

சமீபத்தில் ஐந்தாண்டுகள் பத்திரிகையாளராக பணியாற்றிய அனுபவமுள்ள ஒரு பெண் பத்திரிகையாளர்,தன்னுடைய பணியினை ராஜினாமா செய்யும் பொருட்டு மும்முரமாக இருந்தார். இன்னொரு நிறுவனத்திலிருந்து தற்சமயம் பணியாற்றிக்கொண்டிருந்த நிறுவனத்தில் சேர்ந்து மூன்று மாதங்களே கழிந்திருந்த நிலையில்,அவருடைய ராஜினாமா சக ஊழியர்கள் மத்தியில் துப்பறிவதற்கும் விவாதிப்பதற்கும் உரிய விஷயமாக இருந்தது.
“என்னுடைய வருங்கால கணவருக்கு நான் வேலைக்குப் போவது பிடிக்கவில்லை” என்று தன்னுடைய நிலையை அவர் கூறியபோது ஆத்திரம் பொத்துக்கொண்டு வந்தது என்னவோ உண்மைதான். அதற்கு பின்னணியில் இருக்கும் நிதர்சனத்தை உணர்ந்தபோது அவர் எடுத்த முடிவும் சரி என்று தோன்றியது. தீர்க்கமான சிந்தனையோடு செயல்பட்டவராக இல்லாதபோதும், நேர்மையானவராகவும் பணியில் அக்கறை காட்டுபவராகவும் இருந்த அவருடைய இருப்பு முக்கியமானதாகவே கருதமுடியும். அவர் பத்திரிகையாளராக தொடர்ந்து இயங்கியிருக்கும் வேளையில், காலம் அவரது சிந்தனையையும் செயலையும் கூர்த்தீட்டியிருக்கலாம்.
ஆனால் அவர் ஒரு பெண் என்பதாலேயே பணியிடங்களில் அவருக்கு ஏற்பட்ட மோசமான அனுபவங்களும் நிலை குலையச் செய்த கிசுகிசுக்களும் அவரை திருமணத்தின் பெயரில் பத்திரிகை துறையிலிருந்தே வெளியேறும் முடிவை நோக்கி தள்ளியிருக்கின்றன. இன்று அவர் பத்திரிகை துறையிலிருந்தே ஒதுங்கிப்போய் விட்டார். இது ஏதோ தனிப்பட்ட ஒருவரைச் சார்ந்த நிகழ்வாக நினைத்து ஒதுக்கிவிட முடியாது. கனவுகளோடும் நம்பிக்கையோடும் ஊடகத்துறைக்குள் காலடி எடுத்து வைக்கும் பல பெண்கள் அவநம்பிக்கையோடு வெளியேறியதன் பின்னணியை விவாதத்திற்கு உட்படுத்துவதும் பதிவு செய்வதும் உடனடியாக செய்தாக வேண்டிய பணியாகும். பத்திரிகையாளராக ஐந்தாண்டு கால அனுபவத்திலும் தமிழ் ஊடகங்களில் சகபணியாளர்கள் எதிர்கொண்ட, எதிர்கொள்ளும் பாலியல் ரீதியான அவதூறுகளை அத்துமீறல்களை எழுதுவது மற்ற எல்லாவற்றையும்விட அவசியமானதாகவே கருதுகிறேன்.

ஒரு பெண் பத்திரிகையாளர் மாற்றுச் சிந்தனையும் அரசியல் ரீதியிலான புரிதலும் உள்ளவராக இருந்தாலும் தமிழ் ஊடகங்களில் சமையல் குறிப்பு எழுதுவதற்கும் நடிகைகளின் ஆடை,அணிகலங்களை சிலாகிப்பதற்கும்தான் பணிக்கப்படுவார். அதிகபட்சமாக அரசியல்வாதிகளின் மனைவிகளை பேட்டி காணும் வாய்ப்பு கிட்டலாம்! பெண்ணின் பணிகளாக ஆணாதிக்கத்தால் உருவான இச்சமூகம் ஆண்டாண்டு காலமாக சொல்லிவரும் சமையல், வீட்டப்பராமரிப்பு, குழந்தை வளர்ப்பு போன்றவற்றின் மெருகேற்றப்பட்ட வடிவங்கள் இவை. சமூகம் எப்படி இதையெல்லாம் மீறி வரக்கூடாது என்கிறதோ, அதையேதான் ஆணாதிக்க சிந்தனை பீடித்த ஊடகவாதிகளும் (அரசியல்-புலனாய்வு இதழ்களில் “பாதுகாப்பு” என்ற காரணம் காட்டி பெண்கள் அத்தகைய இதழ்களில் பணியாற்ற மறுக்கப்படுவதை இந்த பின்னணியில் வைத்துப்பார்க்க வேண்டும்) ஊடக பெண்களிடம் எதிர்ப்பார்க்கிறார்கள். இதை எதிர்க்கும் பெண் ஆசிரியர் குழுவால் திட்டமிட்டு ஒதுக்கப்படுவார். ஒருகட்டத்தில் மனஉளைச்சலுக்கு ஆளாகி பத்திரிகை துறையிலிருந்து ஒதுங்கிவிடுவார்.
கடந்த எட்டு ஆண்டுகளில் எதிர்ப்பார்ப்பும் நம்பிக்கையும் ஊட்டும்படியான மாற்றுச்சிந்தனையோடு ஒன்றிரண்டு கட்டுரைகளோடு காணாமல்போன பத்திரிகையாளர்கள் குடும்பம் என்னும் நான்கு சுவர்களுக்குள் முடங்கிப்போயிருப்பதை கண்கூடாகப்பார்க்க முடிகிறது.
இது ஒருபுறம் இருக்க சுயசிந்தனையும் ஊடகம் குறித்த புரிதலும் இல்லாத பெண்களுக்கு தமிழ் ஊடகங்களில் சிறப்பான வரவேற்பு கிடைப்பதையும் பார்க்க முடிகிறது. ஆண்களைப்போல சிந்திப்பதற்கும் ஆண்களின் ரசனைக்கேற்ப தங்களுடைய எழுத்தை வடிவமைத்துக்கொள்ளவும் இந்தப் பெண்கள் பழக்கப்படுத்தப்படுகிறார்கள். சராசரி வாசகனும்கூட எழுதியவர் ஒருபால் விருப்பம் கொண்டவரோ என்று நினைக்கும் அளவுக்கு பெண் உடல் குறித்த கிளர்ச்சியூட்டும் வர்ணனைகள் வரும்படி அவர்கள் பயிற்றுவிக்கப்படுவார்கள். தமிழ் மாத,வார,நாளிதழ்களைப் படிக்கும் எவருக்கும் இந்த முரண்பாடு தெளிவாகவே புரியும்.
குடும்பம், அரசியல் உள்ளிட்ட சமூகத்தின் மற்ற தளங்களில் பெண் எப்படி, ஆணின் சிந்தனைகளை உள்வாங்கி அதை செயல்படுத்தும் கருவியாக இருக்கிறாளோ அதைப்போலவே ஊடகப்பெண்ணும் செயல்படுகிறாள். அவளை அப்படியே வைத்திருப்பதில்தான் ஆணாதிக்கத்தின் இடம் தக்கவைத்துக் கொள்ளப்படுகிறது. இப்படி சிந்தனை மழுங்கடிக்கப்பட்ட பெண்களே பாலியல் ரீதியிலான சுரண்டலுக்கும் ஆளாகிறார்கள். அறிவையும் உணர்வையும் அடிப்படையாகக் கொண்ட பணியில் உடல் முன்னிறுத்தப்படுகிறது. வழமையாக பெண்ணின் உடல் முன்னிறுத்தப்படும்போது கட்டமைக்கப்படும் அதிகாரம் இங்கேயும் நிகழ்கிறது. உடல் அதிகாரத்தை கட்டுக்குள் வைத்திருக்க நினைக்கும் ஆணின் செயல்பாடு ஒரு பெண்ணோடு நின்று விடுவதில்லை. அது ஒரு தொடர்கதை.

குறுஞ்செய்தியோடு ஆரம்பிக்கும்,பிறகு உடல் சமிக்ஞைகள், இரட்டை பொருள்தரும் பேச்சு, தான் நினைத்தால் எதுவும் செய்ய முடியும் என்று அதிகாரத்தை காட்டுவது எதற்கும் வளையவில்லை எனில் பிரச்சினை ஆரம்பிக்கும். அடிமையைவிட கேவலமாக நடத்துவார்கள், அல்லது அலுவலக மேசையைப்போல அசையாத பொருளாக வைத்திருப்பார்கள். வளைந்து கொடுத்தால் பதவி உயர்வுகளும் இன்னபிற அங்கீகாரங்களும் தேடிவரும். அதிகாரத்தை கை கொண்டவனின் வழி இதுவெனில் இயலாமையில் துடித்துக்கொண்டிருக்கும் அவனுக்கு கீழ உள்ளவர்களின் பணி சுற்றி உள்ள பெண்கள் குறித்து அவதூறுகள் சொல்வதும் கிசுகிசுக்களை புனைவதும்தான். ஊடகங்களில் தங்களை ப்ரோ பெமினிஸ்டு(Pro-Femenist)களாக காட்டிக்கொள்ளும் பலரது முழு நேர பணியே இதுதான்.
இத்தகைய சுரண்டலையும் அவதூறுகளையும் சகிக்க முடியாத எந்த பெண்ணும், அவள் அறிவு ரீதியாக பலமானவளாக இருந்தபோதும் அவளது முடிவு ஊடகத்தை விட்டு ஒதுங்குவதாகத்தான் இருக்கும். ஒதுங்குதலும் ஒதுக்குதலும் இயல்பாக நடந்தேறியபின் ஆணாதிக்கம் எக்காளமிட்டுச் சிரிக்கும்!

(“புரட்சிகர பெண்கள் விடுதலை மையம்” வெளியிடவிருக்கும் பெண்கள் தின சிறப்பிதழுக்காக எழுதிய கட்டுரையின் ஒருபகுதி )

Follow

Get every new post delivered to your Inbox.