jump to navigation

குப்பை மேட்டில் ஓர் வேடந்தாங்கல்! மார்ச் 2, 2010

Posted by மு.வி.நந்தினி in அரசியல், சதுப்பு நிலம், சுற்றுச்சூழல், செங்கால் நாரை, பள்ளிக்கரணை, வெள்ளப்பெருக்கு.
Tags: , ,
1 comment so far

சென்னை, வேளச்சேரியிலிருந்து தாம்பரம் செல்லும் சாலையில் இருக்கிறது பள்ளிக்கரணை சதுப்பு நிலம் என்று சொல்லப்படும் பிரமாண்டமான குப்பைமேடு!  சென்னையின் குப்பைகளைக் கிண்டிப் பசியாற பல ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்திலிருந்து வந்திருக்கிறது பெலிக்கன் பறவை. விரையும் வாகன இரைச்சல்களுக்கு இடையே இன்னும் பல நூறு வெளிநாட்டுப் பறவைகள் திடுக்கிட்டுத் தவிக்கின்றன. காகத்தைத் தவிர, வேறு பறவையைப் பார்க்க முடியாதசென்னை நகரத்துக்குள் விதவிதமான வண்ணத்திலும் வடிவத்திலும் வித்தியாசமான பறவைகள் எப்படி வந்தன? குப்பைமேட்டில் இவற்றுக்கு என்ன வேலை?
”வேடந்தாங்கலைவிட இரண்டு மடங்கு முக்கியத்துவம் வாய்ந்தது பள்ளிக்கரணை!” என்கிறார் கடந்த பத்து ஆண்டுகளாக பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தின் பல்லுயிர் பெருக்கம் குறித்து ஆய்வுகளை மேற்கொண்டு வரும் டாக்டர் ஜெயஸ்ரீ வெங்கடேசன்.
”கோணமூக்கு உள்ளான், ஊசிவால் வாத்து, சாம்பல் தலை ஆள்காட்டி, மஞ்சள் வாலாட்டி, சோழக் குருவி, நீர் தாழைக் கோழி, நாமக் கோழி, தாமிர இலைக் கோழி, அரிவாள் மூக்கன், செந்நீலக் கொக்கு, கானான் கோழி, பவளக் கொத்தி என உள்நாட்டு, வெளிநாட்டுப் பறவைகள் வந்து போகும் இடம் இது. இங்கே வளர்ந்து நிற்கிற கோரைப் புல், இயற்கையான பயோஃபில்டர். வேண்டாததை உறிஞ்சிவிட்டு, நல்லதை அப்படியே அரணாகப் பாதுகாக்கும். பறவைகள் இதில்தான் கூடு கட்டி வாழும். ஆனால், குப்பைகளைக் கொட்டிக் கொட்டி நச்சு நிலமாக்கிவிட்டார்கள். ஆமை, மீன் போன்ற உயிரினங்கள் மாசுபட்ட நீரிலும் வாழப் பழகிவிட்டன. ஆனால், அதைப் பிடித்து உண்கிற ஏழை மனிதனுக்குத்தான் புதுப்புது வியாதிகள் வருகின்றன” என்கிறார் சூழலியல் ஆர்வலரான திருநாரணன்.
”1970-களின் தொடக்கத்தில், வேளச்சேரியில் இருக்கும் என் தாத்தா வீட்டுக்கு வருவேன். பேருந்தில் வரும்போது சைதாப்பேட்டை முடிகிற இடம்தான் கடைசி நிறுத்தம். அங்கே தொடங்கி நங்கநல்லூர் ஆஞ்சநேயர் கோயில் வரைக்கும் கண்ணுக்கு எட்டிய தூரம் மட்டும் தண்ணீர்தான் இருக்கும். ஏரிக் கரையில் நடந்தபடியே நீரில் மூழ்கி இரை தேடிக்கொண்டு இருக்கும் விதவிதமான பறவைகளை ரசித்தது இன்னும் நினைவில் இருக்கிறது.
தென்னிந்தியாவிலேயே பள்ளிக்கரணை சதுப்பு நிலம், ரொம்பவும் ஸ்பெஷலான பகுதி. சதுப்பு நிலமென்றால் ஆறு அடிக்கும் குறைவாகத் தண்ணீர் இருக்கும், உயிர் வளம் நிறைந்த குழைவான மண்ணுடன் இருக்கும். மற்ற இடங்களில் உள்ள சதுப்பு நிலத்தில் உப்புத்தன்மை இருக்கும். ஆனால், பள்ளிக்கரணை ஒரு பக்கம் நல்ல தண்ணீர் உள்ள சதுப்பு நிலமாகவும் இன்னொரு பக்கம் உப்புத்தன்மை கலந்த சதுப்பு நிலமுமாகவும் இருக்கிறது. 114 வகையான பறவைகள், 46 வகையான மீன்கள், 29 வகையான புல் வகைகள், ஆமை, தவளை வகைகள், பாம்புகள், பட்டாம்பூச்சிகள் என வளமான பல்லுயிர் சூழல் நிறைந்த பகுதி. 2002-ல் இருந்து இந்தப் பகுதியைப் பாதுகாக்கப்பட்ட வனப் பகுதியாக மாற்ற வேண்டுமெனப் பல போராட்டங்கள் நடத்தினோம். அதன் விளைவாக இப்போதுதான் சதுப்பு நிலத்தின் ஒரு பகுதியைப் பாதுகாக்கப்பட்ட வனப் பகுதியாக மாற்றியிருக்கிறார்கள்” என்றவர், இவ்வளவு வளமிக்க பள்ளிக்கரணை சதுப்பு நிலம் பாழான கதையைச் சொல்ல ஆரம்பித்தார்.


”சென்னை நகரம் விரிவடைந்துகொண்டே போனபோது, வட சென்னைப் பகுதி கிட்டத்தட்ட ஆந்திர எல்லையைத் தொட்டுவிட, தென் சென்னையின் மீது அனைவரின் கவனமும் திரும்பியது. வெள்ளைக்காரன் காலத்திலேயே ‘புறம்போக்கு மேய்ச்சல் நிலம்’ என அரசாங்க ஆவணங்களில் குறிப்பிடப்பட்ட பள்ளிக்கரணை சதுப்பு நிலத் தைச் சீரழிக்கும் பணி அப்போது மும்முரமாக ஆரம்பித்துவைக்கப்பட்டது. ‘புதுசா காலனி போடணுமா… பட்டா போடணுமா… பள்ளிக் கரணையில் போடலாம்’ என்கிற அளவுக்கு ஆக்கிரமிப்புகள் அதிவேகமாக நடந்தன. இது எல்லாமே அரசாங்கத்தின் ஆதரவோடுதான் நடந்தது. உண்மையில் பள்ளிக்கரணையைச் சீரழித்ததே அரசாங்கம்தான்.
பெருங்குடியில் குப்பை கொட்டுவதற்கு என்று ஒதுக்கப்பட்ட நிலத்தை தனியார் கல்லூரிகளுக்கும் அடுக்குமாடிக் குடியிருப்புகள் கட்டவும் கொடுத்துவிட்டு, வளமான தண்ணீர் உள்ள பகுதியில் எந்தவித ஒழுங்கும் இல்லாமல் இஷ்டப்படி குப்பை கொட்டிக்கொண்டு இருக்கிறது சென்னை மாநகராட்சி. ஏறக்குறைய 5 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் இருந்த சதுப்பு நிலத்தில், இப்போது உயிர்ப்போடு இருப்பது 420 ஹெக்டேர் மட்டும்தான். ஆக்கிரமிப்புகள் போக மீதியிருக்கிற 132 ஹெக்டேர் அளவுக்கு குப்பைகளைக் கொட்டிப் பாழடித்து வைத்திருக்கிறார்கள்.

சென்ற மாதம் ஏதோ ரசாயனத்தைக் கொட்டியதால் இந்தப் பகுதி தண்ணீர் முழுக்க சிவப்பு நிறமாக மாறிவிட்டது; கூடவே சகிக்க முடியாத நாற்றம் வேறு. மக்கும் குப்பை, மக்காத குப்பை என எல்லாமே ஒன்றாகக் கொட்டி அமுக்கிவைத்திருக்கிறார்கள். குப்பை பொறுக்குகிறவர்கள் டயர் போன்ற பொருட்களில் இருக்கும் இரும்பைப் பிரித்தெடுக்க நெருப்பு வைத்துக் கொளுத்திவிடுகிறார்கள். அந்த நெருப்பு எல்லா இடங்களுக்கும் பரவி, ஏரியாவே எப்போதும் புகை மண்டலமாகக் காட்சியளிக்கிறது. ஒரு லட்சம் பேர் ஒரே இடத்தில் அமர்ந்து புகை விடுவதற்குச் சமமான அளவு, புற்றுநோய் உண்டாக்கும் டயாக்சின் உள்பட நச்சு வாயுக்கள், இந்தக் குப்பைகள் எரிக்கப்படுவதால் வெளியாகிறது. அரசாங்கத்திடம் இந்தப் பிரச்னையை எத்தனையோ முறை எடுத்துச் சொல்லிவிட்டோம். இன்னும் நடவடிக்கைதான் இல்லை!” என்கிறார் டாக்டர் ஜெயஸ்ரீ.
தற்போது பள்ளிக்கரணையில் குப்பைமேட்டில் குப்பை பொறுக்குகிறவர்களுக்குத் தடை விதித்திருக்கிறது ஒக்கியம் நகராட்சி. ஆனாலும் நூறு சிறுவர்களுக்கு மேல் குப்பை பொறுக்க தினமும் வந்துகொண்டுதான் இருக்கிறார்கள் என்கிறார் குப்பை மேட்டில் காவல் காக்கும் அரசு ஊழியர் ஒருவர். அந்தப் பகுதி யைக் கடக்கும்போதே நுனி நாசிவரை நாற்றம் ஏறுகிறபோது, அதிலேயே உழலும் குப்பை பொறுக்குகிற சிறுவர்களின் உடல் நலனுக்கு யார் பொறுப்பாவார்கள் என்று தெரியவில்லை.
குண்டூசி குத்துமளவுக்குக்கூட இடம் தெரியாமல் மொய்த்துக்கொண்டு இருக்கும் ஈக்களோடு நாள் முழுக்கக் காவலில் இருக்கும் அரசாங்க ஊழியர்களின் நிலைமையும் பரிதாபம்தான்.
”மாநகராட்சி இப்போது கொடுங்கையூரிலும் பெருங்குடியிலும் மட்டுமே குப்பை கொட்டுகிறது. இந்தக் குப்பைகளிலிருந்து உரம், மின்சாரம் தயாரிக்கும் திட்டம் தொடங்கப்பட்டு இருக்கிறது. கூடிய விரைவில் பெருங்குடியில் நடைமுறைப் படுத்தப்பட உள்ளது” என்கிறார் சென்னை மாநகர மேயர் மா.சுப்பிரமணியன்.

சென்னையின் நீர்வளம் குறையவோ கூடவோ காரணம் பள்ளிக்கரணை சதுப்பு நிலம் பாதுகாக் கப்படுவதில்தான் இருக்கிறது என்கிறார்கள் சூழலியலாளர்கள். இன்னொரு அதிர்ச்சியானவிஷ யமும் தெரிய வந்தது. 2005-ல் சென்னையில் ஏற் பட்ட வெள்ளப்பெருக்குக்குக் காரணம்பள்ளிக்கரணைச் சதுப்பு நிலம் பாழடிக்கப்பட்டதுதான்!

”சென்னையின் ஒட்டுமொத்த மழைநீருக்கும் வடிகாலாக இருப்பது பள்ளிக்கரணைச் சதுப்பு நிலம்தான். ஒரு பக்கம் நீரைத் தேக்கிவைத்துக் கொண்டு, இன்னொரு பக்கம் சிறிது சிறிதாக மீதியிருக்கிற நீர் ஒக்கியம் மடுவுக்குச் செல்கிறது. அந்த மடுவிலிருந்து பக்கிங்காம் கால்வாய் வழியாகக் கடலுக்குள் செல்கிறது. அந்த வழியாகத் தான் கடல் தண்ணீரும் உள்ளே வரும். ஆனால், ஒக்கியம் மடுவு இருந்த இடத்தை முற்றிலுமாக அடைத்துவிட்டது ஒரு தனியார் பொறியியல் கல்லூரி. தண்ணீரைத் தேக்கிவைக்கும் இடத்திலும் குப்பைகளைக் கொட்டி சின்னச் சின்ன மலை களை உருவாக்கிவிட்டார்கள். பிறகு எப்படி வெள்ளம் வடியும்? வெள்ளப்பெருக்கு வராமல் இருக்கும்?
ஒட்டுமொத்தமாக எல்லாக் குற்றச்சாட்டுக்களையும் அரசாங்கத்தின் மீது மட்டுமே சொல்லி விட முடியாது. நம்முடைய வீட்டைச் சுத்தமாக வைத்திருந்தால் போதும் என்று அத்தனை குப்பைகளையும் வீதியில் சேர்க்கிற நாமும்தான் குற்றவாளிகள். எத்தனை பேர் மக்கும் குப்பை, மக்காத குப்பை என்று வீட்டிலேயே தரம் பிரித்து அனுப்புகிறோம்?! நாமே தவறுக்குப் பிள்ளையார் சுழி போட்டுவிட்டு, எல்லாம் பாழான பிறகு உச்சுக்கொட்டுவதில் என்ன பயன்?” – நாளைய சந்ததி கேட்கப்போகும் கேள்வியை இப்போதே கேட்கிறார் டாக்டர் ஜெயஸ்ரீ!

நன்றி : காட்டுயிர் புகைப்படக்கலைஞர் ஸ்ரீராம்

நம்மைச் சுற்றி 1000 போபால்கள்! பெப்ரவரி 26, 2010

Posted by மு.வி.நந்தினி in கடலூர் சிப்காட், கொடுங்கையூர், சமுதாயச் சுற்றுச்சூழல் கண்காணிப்புக் குழு, சுற்றுச்சூழல், தொழிற்சாலை கழிவுகள், போபால்.
Tags: , , ,
add a comment

“நள்ளிரவில் கனவுகளோடு தூங்கிக் கொண்டிருந்த ஆயிரக்கணக்கான உயிர்களைப் பலிவாங்கி, லட்சக்கணக்கானவர்களை முடமாக்கிய போபால் விபத்து நடந்து 22 வருடங்கள் ஓடிவிட்டன. அவர்களுக்குக் கிடைக்க வேண்டிய நீதியோ முறையான நிவாரணங்களோ கிடைக்கவில்லை. இத்தனை பேரை காவு வாங்கிய குற்றவாளியாகக் கருதப்படுபவர்கள் இன்னும் சொகுசு வாழ்க்கையில் தான் திளைக்கிறார்கள். உலகம் அறிந்து நடந்த இவ்வளவு பெரிய விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நீதி கிடைக்கவில்லையே?  இன்னும் நம்மைச் சுற்றி 1000 போபால்கள் இருக்கின்றன!” என்கிறார் சென்னையில் இயங்கும் சமுதாயச் சுற்றுச்சூழல் கண்காணிப்புக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் ஸ்வேதா நாராயணன்.

”கடலூர் மாவட்டத்திலுள்ள சிப்காட் வளாகத்தில் பெருமளவில் காற்று மாசு நிறைந்து இருக்கிறது. அழுகிய முட்டையின் நாற்றம், ரப்பர் எரிக்கும் போது வரும் மணம், அழுகிய உடம்பின் நாற்றம், நெயில் பாலிஷ் வாசனை என மாசுபட்ட காற்றிலிருந்து ஏராளமான சாம்பிள்கள் எடுத்திருக்கிறோம். அத்தனையும் சிப்காட்டிலுள்ள ஒவ்வொரு கம்பெனியும் வெளிவிடும் மாசுக்கள்.

இந்தப் பகுதியில் வசிப்பவர்களுக்கு தொடர்ந்து சளி, ஆஸ்துமா என சுவாசம் தொடர்பான பாதிப்புகள் அதிகம். இதில் இன்னொரு அவலம்…சிப்காட் பகுதியில் வாழும் பெண்களுக்கு திருமணம் நடைபெறுவது சவாலான விஷயமாகிவிட்டது. பெண்கள் வயதுக்கு வருவது தள்ளிப்போவது முதல், மாதவிடாய் காலத்தில் அதிக ரத்தப்போக்கு, கருச்சிதைவு, குழந்தையின்மை என்று அவர்களின் வாழ்க்கையில் கோர விளையாட்டை ஆடிக்கொண்டிருக்கின்றன.

இந்தப் பகுதியின் ஒவ்வொரு அணுவிலும் கலந்துவிட்ட விஷ வேதிப் பொருட்கள் சிப்காட்டில் மட்டுமல்ல, மேட்டூரில் உள்ள சன்மார் ஆலை, சென்னைக்கு அருகில் அங்கீகரிக்கப்படாத குப்பை எரிக்கும் இடமாக மாறிக் கொண்டிருக்கும் கொடுங்கையூர், கேரளாவில் உள்ள காசர்கோடு எண்டோசல்பான் ஆலை என்று ஆபத்தை அடுத்த தலைமுறைக்கு விதைத்துக் கொண்டிருக்கும் இவற்றின் ஹிட் லிஸ்ட் நீண்டுகொண்டே இருக்கிறது.

சென்னை கொடுங்கையூரில் குப்பைகளை எரிப்பதால் அருகில் வசிக்கும் 5 லட்சம் பேர் புற்றுநோயால் பாதிக்கப்படும் அபாயம் இருப்பதாக ஒரு ஆய்வறிக்கை கூறுகிறது. சன்மார் ஆலை வெளியிடும் ரசாயனத்தால் மேட்டூரைச் சுற்றியுள்ள விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. பல இடங்களில் நிலத்தடி நீரின் நிறமே மாறிவிட்டது. அந்தப் பகுதிகளில் மக்கள் தண்ணீரைச் சேமித்து வைக்கப் பயன்படுத்தும் புதிய பாத்திரங்கள் ஒரு வாரத்திற்குள் பழுப்பு நிறத்துக்கு வந்துவிடும். இந்தப் பகுதிகளில் வசிப்பவர்களுக்கு பிறக்கும் குழந்தைகள் உடல் குறைபாடுகளுடனோ, மூளை வளர்ச்சி அற்றவர்களாகவோ பிறக்கிறார்கள். இதைத்தான் அந்தந்த பகுதியில் வசிக்கும் தன்னார்வம் மிக்க புகைப்படக் கலைஞர்களை வைத்து பதிவு செய்திருக்கிறோம்.

இந்த இடங்களில் எந்த வகையில் பாதிப்பு இருக்கிறது என்பதை ஆவணமாக அரசுக்கு கொடுக்கப் போகிறோம். நியாயமான கோரிக்கைகளுக்காகப் போராடவும் தயாராக இருக்கிறோம்” என்கிறார் ஸ்வேதா.

சமுதாயச் சுற்றுச்சூழல் கண்காணிப்புக்குழுவினர் ’1000 போபால்கள்’ என்ற பெயரில் தொழிற்சாலைகளிலிருந்து வெளியே வரும் கழிவுகள் எந்த அளவு மக்களையும் சுற்றுச்சூழலையும் பாதிக்கிறது என்பதை புகைப்படமாக்கி காட்சியமைத்திருந்த போது ‘குங்குமம்’ இதழில் எழுதியது.

மனிதனோடு தோன்றிய உயிரினம்… பெப்ரவரி 20, 2010

Posted by மு.வி.நந்தினி in காட்டுயிர், சுற்றுச்சூழல், தியடோர் பாஸ்கரன், பிந்து ராகவன், லடாக், வரையாடுகள்.
Tags: , ,
add a comment

அழிந்துவரும் இந்திய வனஉயரினங்களின் பட்டியலில் வரையாடும் ஒன்று. இந்தியாவில் மேற்கு தொடர்ச்சி மலைகள், இமயமலை தொடர்களில் மட்டுமே வரையாடுகள் வாழுகின்றன. இந்த இரண்டு பகுதிகள்தான் வரையாடுகள் வாழத் தேவையான சூழல் உள்ளதாக காட்டுயிர் ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கிறார்கள். வரையாடுகள் குறித்து ஆராய்ச்சிகள்கூட குறைவாகத்தான் நடந்துகொண்டிருக்கின்றன. இன்னும் சில பத்தாண்டுகளில் இந்த உயிரினத்தை வனவிலங்கு காட்சியகங்களில்கூட பார்க்க முடியாமல் போகலாம்.

சூழலியல் எழுத்தாளர் தியடோர் பாஸ்கரன் தன்னுடைய எழுத்தில் வரையாடுகள் குறித்து பதிவு செய்திருக்கிறார். சென்னையைச் சேர்ந்த பிந்து ராகவன் என்பவர் வரையாடுகள் குறித்து ஆராய்ந்து வருவதாக அவர் எழுதியதன் அடிப்படையில், பிந்து ராகவனை சந்தித்தேன். கால்நடை மருத்துவரான பிந்து ராகவன். கேரளத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர். தற்சமயம் கணவருடன் சென்னையில் வசிக்கிறார். கணவரும் கால்நடை மருத்துவர், பாம்புகள் குறித்து ஆராய்ந்து வருகிறார். இருவரும் டேராடூனில் இருக்கும் காட்டுயிர் ஆராய்ச்சி நிறுவனத்தில் படித்தவர்கள். படிக்கிற காலத்தில் லடாக் வரையாடு குறித்து சிறப்பு ஆராய்ச்சி செய்தவர் பிந்து. பிறகு, அதையே தொடர்ந்து லடாக் வரையாடுகளுக்கு ஏற்படும் தொற்று நோய்கள் என்கிற தலைப்பில் ஆராய்ந்து வருகிறார்.
“மனிதன் தோன்றிய காலத்தில் வரையாடுகளும் தோன்றிவிட்டன என்பதுதான் இவற்றை ஆராய காரணம். உயரமான பனிமலைச் சிகரங்களைக் கொண்டது லடாக். வரையாடுகள் இத்தகைய சூழலில்தான் வாழும். பாறைகளுக்கு நடுவே முளைத்திருக்கும் தாவரங்களை உண்டு வாழக்கூடியவை இவை. ஆடுகளைப் போல இருக்கும் இதன் உருவமும் செங்குத்தான பாறைகளில் ஏறுவதற்கு ஏற்ப உடல்வாகும் கொண்டது. பாறை இடுக்குகளில் வசிக்கும் இவை, பனிக்காலங்களில் மலை அடிவாரங்களுக்கு வரும். மலை அடிவாரங்களில் வசிக்கும் மக்கள் வளர்க்கும் ஆடு, மாடுகளுடன் இவை சேர்ந்து கொள்ளும். இப்படி சேரும்போது வீட்டு விலங்குகளுக்கு வரக்கூடிய தொற்றுநோய்கள், வரையாடுகளுக்கும் பரவும். தோலுக்காகவும் இறைச்சிக்காகவும் வேட்டையாடப்பட்டு வேகமாக அழிந்துவரும் வரையாடுகள், தொற்றுநோய்க்கு ஆளாகியும் அழிந்துவருகின்றன. இதுகுறித்த ஆராய்ச்சியில் இருக்கிறேன்” என்கிற பிந்து, நூறு வருடங்களுக்கு முன் வரையாடுகளின் எண்ணிக்கை 20 ஆயிரத்திற்கும் அதிகமாக இருந்ததாகவும் தற்போது 2 ஆயிரம் வரையாடுகள் தான் இருக்கின்றன என்கிறார். இவை மலை அடிவாரத்திற்கு வரும் பனிக்காலங்கள்தான் ஆராய்ச்சி செய்வதற்கு உகந்த காலம் என்கிறார் இவர்.
“வரையாடுகள் வேகமாக ஓடக்கூடியவை. இவற்றை பின்தொடர்ந்து போகும்போது சில சமயம், இருட்டிவிடும். தங்கியிருக்கிற இடத்துக்குச் செல்ல முடியாது. பக்கத்தில் மக்கள் வசிக்கிற இடங்களைத் தேடிப் போவேன். விருந்தாளி போல அந்த மக்கள் என்னை உபசரிப்பார்கள். பொதுவாக இந்த பகுதிகளில் தீவிரவாதிகள் நடமாட்டம் அதிகம் என்று சொல்வார்கள். ஆனால் நான் ஒரு போதும் அப்படிப்பட்டவர்களை சந்தித்ததில்லை” என்கிறார் பிந்து.
தன் கணவர் ராகவன், மற்றும் சில நண்பர்களுடன் இணைந்து நிழிகிறிணி என்கிற அமைப்பை நடத்திவருகிறார். பள்ளி, கல்லூரிகளில் சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது இந்த அமைப்பு.

நன்றி : தினகரன் வசந்தம்
13.5.2007

”இயற்கையைக் காப்பாற்றுவதற்காக மக்கள் ஒன்று சேர வேண்டும்!” பெப்ரவரி 16, 2010

Posted by மு.வி.நந்தினி in காட்டுயிர், சுற்றுச்சூழல், பறவைகள், பாம்புகள், போராட்டம், முதலைகள், ரோமுலஸ் விட்டேகர், ஸ்டீவ் இர்வின்.
Tags: , , ,
3 comments

ரோமுலஸ் விட்டேகர்இந்தியாவின் ஸ்டீவ் இர்வின். ஆனால், இருவருக்கும் ஒரு வித்தியாசம் உண்டு. இவர், ஸ்டீவ் இர்வினைப் போல முதலைகளையும் பாம்புகளையும் வைத்து வேடிக்கை காட்டும் சாகசக்காரர் அல்ல. அவற்றைக் காப்பாற்ற வந்த காட்ஃபாதர்! சென்னை, கிண்டி பாம்புப் பண்ணையும் கிழக்கு கடற்கரைச் சாலையில் உள்ள முதலைப் பண்ணையும் இந்த அமெரிக்கர் உருவாக்கியவை. கிட்டத்தட்ட அழிந்தேவிட்ட சில அரிய வகை முதலைகளும் பாம்புகளும் உயிரோடு இருப்பது இவருடைய பண்ணைகளில்தான். ஆக்ரோஷமான முதலைகளிடம் அத்தனை பரிவு காட்டும் இவருக்கு மனிதர்கள் மீதுதான் கொஞ்சம் கோபம்! முதலைகள் பற்றி உங்கள் தாத்தா பாட்டியிடம் கேட்டுப் பாருங்கள். அவ்வளவு கதை சொல்வார்கள். ஆனால், நாமோ மிருகக்காட்சிச் சாலைகளில்தான் முதலைகளைப் பார்க்கிறோம். இன்று ஆறுகளில் முதலைகளே இல்லை என்று சொல்லலாம். மனிதனுக்கும் முதலைகளுக்கும் நடந்தயார் பெரியவன்?’ போட்டியில் முதலைகள் பாவம், தோற்றுப் போய்விட்டன. மீன்களையே சாப்பிடும் மீன்கள் இருக்கின்றன. அந்த மீன்களை மட்டும்தான் முதலைகள் சாப்பிடும். முதலைகள் அழிக்கப்பட்டதால் மீன்களைச் சாப்பிடுகிற மீன்கள் அதிகமாகிவிட்டன.எனவே, மற்ற மீன் இனங்கள் குறைந்துவிட்டன. இயற்கையின் சங்கிலித் தொடரில் ஒரு கண்ணியை உருவினாலும் பாதிப்பு எல்லோருக்கும்தான்!

வட இந்திய ஆறுகளில் மட்டுமே வாழ்ந்தகரியால்இன முதலைகள் அவற்றின் தோலுக்காக மிச்ச சொச்சம் இல்லாமல் வேட்டையாடப்பட்டன. தென்னிந்தியாவில் முதலைகளின் முக்கியத்துவம் தெரியாமல், அவை பயங்கரமானவை என்ற காரணத்துக்காகவே அழிக்கப்பட்டுவிட்டன. ‘பயங்கரமானதுஎன்று வர்ணிக்கப்படும் எந்தவொரு உயிரினமும் உண்மையில் பயங்கரமானது அல்ல. தன்னைத் தற்காத்துக்கொள்ளவே தாக்குகின்றன. முதலை அற்புதமான குணம்கொண்டது. மனிதர்களைப் போல் தாய்மை குணமுள்ள உயிரினம் அது. முட்டையிடும் சமயத்தில் அதை நெருங் கவே முடியாது. தன் முட்டையை யாராவது களவாடுகிறார்கள்என்று தெரிந்துவிட்டால், எவ்வளவு வேக மாகப் போனாலும் துரத்தி வந்து பிடித்துவிடும்.

மீன்களின் பெருக்கத்துக்குக் காரணமாக இருப்பதால் முதலைகள், மீனவர்களின் நண்பன். அதுபோல பாம்புகள், விவசாயிகளுக்கு நண்பன். விளைவதில் சரிபாதி விளைபொருள்களை வீணாக்கும் அத்தனை எலிகளையும் நம்மால் ஒழிக்க முடியாது. வயல்வெளி எலிகளை ஒழிக்க அரசாங்கம் எத்த னையோ கோடிகளைக் கொட்டிக் கொடுக்கிறது. ஆனால், பாம்புகள் சர்வசாதாரணமாக ஆயிரக்கணக்கான எலிகளை ஒழித்துவிடும். நாம் அதனைச் சீண்டாதவரை அது நம்மை எந்தவிதத்திலும் துன்புறுத்தாது. ஆனால், அந்தப் பண்பு நம்மிடம் இல்லையே!

பாம்புகளிலேயே மிக மிக சுவாரஸ்யமானது ராஜ நாகம். 13 அடி அழகான ராட்சசன்! பாம்புகளிலேயே ராஜ நாகம் மட்டும்தான் கூடு கட்டி முட்டைகளை வைக்கும். மலைக் காடுகளில்தான் வசிக்கும். மேற்கு வங்காளத்தில் இருக்கும் சுந்தர வனக் காடுகள், மேற்குத் தொடர்ச்சி மலைக் காடுகள் என இந்தியாவில் இரண்டு இடங்களில் மட்டுமே ராஜ நாகங்கள் வாழ்ந்து வருகின்றன. இப்போது மேற்குத் தொடர்ச்சி மலைகளில் வாழும் ராஜ நாகங்கள் பற்றி ஒரு ஆவணப் படம் எடுத்துக்கொண்டு இருக்கிறேன்.” இதுவரை எந்தப் பாம்பும் உங்களைக் கடித்ததில்லையாஎன்று கேட்டால், தன் வலது ஆள் காட்டி விரலைத் தடவிக்கொண்டு சிரிக்கிறார். ”இருபது வயதில் அமெரிக்க பாலைவனத்தில் வாழக்கூடியராட்டல் ஸ்னேக்பற்றிய ஆராய்ச் சிக்காகப் போயிருந்தேன். கொஞ்சம் அலட்சியமாக ஒரு பாம்பைப் பிடித்துவிட்டேன். அது தன்னை தற்காத்துக்கொள்ள என் வலது கை ஆள்காட்டி விரலைக் கடித்துவிட்டது. அந்த விரலில் நரம்புகள் துண்டிக்கப்பட்டு, உணர்ச்சியே இல்லாமல் போய்விட்டது. அந்த பாம்பு மேல தப்பு இல்லை. தப்பு என் மேல்தான்!” என்பவர் தொடர்ந்துநான் பிறந்தது நியூயார்க். ஏழு வயதில் அம்மாவோடு இந்தியா வந்தேன். பாம்பு பிடிக்க ஆரம் பித்தது நான்கு வயதில். என் ஆர்வத்தைப் புரிந்துகொண்டு பாம்புகள் பற்றிய புத்தகங்களைப் படிக்கக் கொடுத்து என்னை ஊக்கப்படுத்தினார் அம்மா. பாம்பு, முதலைகளைத் தேடி இந்தியா முழுக்கத் திரிந்திருக்கிறேன். தமிழ் நாட்டின் சூழல் எனக்கேற்றது போல இருந்ததால், இங்கேயே தங்கிவிட்டேன். இயற்கை சூழலைக் காப்பாற்றுவது குறித்து எந்த அக்கறையும் நம்மில் பலருக்குக் கிடையாது. முக்கால் பங்கு காடுகள் அழிந்து போய், தொழிற்சாலைகளாகவும் பொறியியல் கல்லூரிகளாகவும் நிற்கின்றன. சுதந்திரப் போராட்டத்துக்கு இந்திய மக்கள் ஒன்று சேர்ந்தது போல, இயற்கையைக் காப்பாற்றுவதற்காக மீண்டும் மக்கள் ஒன்று சேர வேண்டும். இயற்கையைச் சமநிலைப்படுத்துகிற உயிரினங்களைக் காப்பாற்றினால் போதும்உலகம் சூடாவது பற்றியும் கவலைப்பட வேண்டாம், பசுமைப் புரட்சி செய்ய மண்டையை உடைத்துக்கொள்ளவும் வேண்டாம்!” என்கிறார் ரோமுலஸ், ஆதங்கமும் வருத்தமும் தோய்ந்த குரலில்.

வெளிர் சிவப்பு ஓவியம்! பெப்ரவரி 16, 2010

Posted by மு.வி.நந்தினி in ஃபிளெமிங்கோ, அண்ணாமலைச்சேரி, கழிமுகப்பகுதி, காட்டுயிர், சுற்றுச்சூழல், பறவைகள், பூநாரை.
Tags: , , ,
add a comment

அண்ணாமலைச்சேரி…! சென்னை பழவேற்காடு சாலையோரம், கடல் நீர் கால் தழுவும் கழிமுகப் பகுதி. காடு, நிலம், கடல், கழிமுக நீர் என நாலா பக்கமும் விதவிதமாக விரிந்துகிடக்கிறது இயற்கை. குட்டிக் குட்டி மணல் திட்டுகள் நிறைந்த நீர்ப்பரப்பு இதன் சிறப்பு. இதுதான் பூநாரைகளைக் கூட்டம்கூட்டமாக வசீகரித்து வரவழைக்கிறது. அமாவாசை, பௌர்ணமி நேரங்கள் தவிர்த்து கழிமுகப் பகுதிக்குக் கடல் நீர் குறைவாக வரும் நேரங்களில் பூநாரைகள் நூற்றுக்கணக்கில் இரை தேடுவதைப் பார்க்கலாம்.

வெள்ளை கேன்வாஸில் வெளிர் சிவப்பு நிறத்தில் வரைந்த ஓவியத்தில், திருஷ்டிக்காகக் கறுப்பு மை இட்டது போல அத்தனை அழகாக இருக்கிறது ஃபிளெமிங்கோ எனப்படும் பூநாரை!

தமிழகத்துக்கு ஏப்ரல் மாத விருந்தாளிகள் இந்தப் பூநாரைகள். ”இங்கே வரக்கூடிய பறவைகளிலேயே ரொம்ப அழகானது பூநாரைகள்தான். மொத்தம் ஐந்து வகையான இனங்கள் இருக்கு. நம்ம ஊருக்கு கிரேட்டர், லெஸ்ஸர்னு இரண்டு இனங்கள் வரும்.

பரிணாம வளர்ச்சியில் நாரைக்கும் வாத்துக்கும் இடைப்பட்ட இனம் இது. நாலரை அடி வரைக்கும் வளரும். ஒரே இரவில் 600 கி.மீ தூரம் பயணப்படும். இன்னொரு சுவாரஸ்யமான சங்கதிமனிதர்களுக்கு முன்பே பூமியில பிறந்தவை பூநாரைகள். அதாவது, 50 மில்லியன் ஆண்டுகளாக இந்தப் பூமியில இருப்பவை!” என பூநாரைப் பற்றிய தகவல்களை அடுக்கிக்கொண்டே போகிறார் திருநாரணன். சூழலியல் ஆர்வலரான இவர், சென்னைக்கு வருகை தரும் பறவைகளைத் தொடர்ந்து கவனித்து வருபவர்.பெரும்பாலும் உப்புநீர் உள்ள பகுதிகளில்தான் பூநாரைகள் வசிக்கும். குஜராத்திலிருந்து குளிர் காலத்தில் கிளம்பி வரும் பறவைகள், வெயில் காலம் முடியும் நேரத்தில் முட்டை வைப்பதற்காக மீண்டும் குஜராத் போகும். களிமண்ணில் உருளையான கூடு செய்து, அதில்தான் முட்டை வைக்கும். அதிகபட்சம் ரெண்டு முட்டைகள் வைக்கும். குஞ்சு பொரித்து, வளர்ந்து, பறக்க ஆரம்பிக்கிற நேரத்தில் அங்கேயிருந்து கிளம்பிடும். தமிழ்நாட்டில் பழவேற்காடு, கழிவெளி, கோடியக்கரை, சாத்தான்குளம், செய்யூர் போன்ற பகுதிகளில் பூநாரைகளைப் பார்க்கலாம்.பறக்கத் துவங்கும் காலத்தில் வெள்ளையும் கறுப்புமாக இருக்கும். வளர வளரத்தான் வெளிர் சிவப்பு நிறமாக மாறும். ‘பீடா கரோட்டின்உள்ள உணவுகளை அதிகம் எடுத்துக்கொள்வதுதான் இதன் வெளிர் சிவப்பு நிறத்துக்குக் காரணம். பாசி, இறாலை விரும்பிச் சாப்பிடும். குச்சிக் கால்களுடன் ஆழம் குறைவான இடத்தில் மணிக்கணக்காக நின்று இரை தேடும். எப்போதும் கூட்டமாகத்தான் இருக்கும். ஒரு பக்கத்திலிருந்து இன்னொரு பக்கத்துக்கு வரிசையாக அத்தனை அழகாக நடந்து போகும். இவை கூட்டமாகப் பறப்பதைப் பார்த்தால், வானத்தில் கோலம் போட்டது மாதிரியே இருக்கும். சில வருடங்களுக்கு முன்பு வரை லட்சக்கணக்கில் வந்து கொண்டு இருந்த பூநாரைகள் இப் போது பத்தாயிரமாகக் குறைந்து விட்டதாக சொல்கிறார்கள். இந்தப் பகுதியில் விற்பனைக்காக இறால் பிடிப்பது அதிகரித்து வருகிறது. அளவுக்கு மீறி பூநாரைகளின் உணவில் நாம் கை வைக்கிறோம். பகிர்ந்து உண்ணுதல் வேண்டும் என்று சொல்கிற நாமே இப்படிச் செய்தால் என்ன நியாயம்?” என்கிறார் திரு நாரணன்.புலிகள் இருக்கும் காடுதான் நல்ல வளமான காட்டின் அடையாளம் என்று சொல்வதைப் போல, பூநாரைகள் வசிக்கும் இடத்தை வளமான கழிமுகப்பகுதிக்கு அடையாளமாகச் சொல்கிறார்கள் சூழலியல் அறிஞர்கள். பூநாரைகள் வசிக்கும் இடத்தில் மற்ற பறவையினங்களும் அதிகமாக இருக்குமாம். அண்ணாமலைச்சேரி பகுதியில் இருநூறுக்கும் அதிகமான பறவையினங்கள் இருப்பதாகப் பதிவு செய்திருக்கிறது மும்பை இயற்கை வரலாறு அறக்கட்டளை. நீர்க்காகம், கூழைக்கடா, நத்தைகொத்தி நாரை, கடல் ஆலா, அரிவாள் மூக்கன், உப்பு உல்லான், நாரை, கொக்கு இனங்கள் என நிறைய வகைகளை இங்கே பார்க்க முடிகிறது. பழவேற்காட்டிலிருந்து 5 கி.மீ தூரத்தில் இருக்கிறது அண்ணாமலைச்சேரி. அங்கிருந்து படகுப் போக்குவரத்து வசதி உள்ளது. சில இடங்களில் மட்டுமே ஆழம் அதிகமாக இருக்கும். ஆழம் குறைவான இடங்களில் படகிலிருந்து இறங்கி, பறவைகள் உள்ள இடத்தின் அருகில் சென்றும் பார்க்கலாம். சித்திரை வெயிலைத் தவிர்க்க அதி காலையிலேயே விசிட் அடிப்பது நல்லது.

பறவைகளே! எங்கு இருக்கிறீர்கள்?’ என்ற கேள்விக்குஇங்கே இருக்கிறோம்!’ என்று கோரஸாகப் பதில் சொல்கின்றன இந்தப் பறவைகள். அண்ணாமலைச்சேரிக்கு ஒரு தடவைபறந்துதான் பாருங்களேன்!

பறவைகள்தான் இவருடைய உலகம்! பெப்ரவரி 5, 2010

Posted by மு.வி.நந்தினி in சுற்றுச்சூழல், செங்கால் நாரை, பறவைகள், பால் பாண்டி, environment.
Tags: , ,
6 comments

திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள கூந்தன்குளம் பறவைகள் சரணாலயம் பரப்பளவிலும் உயிர்சூழலிலும் வேடந்தாங்கலைவிட பெரியது. கூந்தன்குளத்தில் மற்றுமொரு சிறப்பு…இங்கு வலசை வரும் பறவைகளுக்கும் ஊர் மக்களுக்கும் உள்ள உறவு. பல கிலோமீட்டர் கடந்து வீடு தேடி விருந்துக்கு வரும் பறவைகளை கூந்தன்குளம் மக்கள் உபசரிக்கும் விதம் உலகமக்களுக்கெல்லாம் பாடம்! அனைத்திலும் உச்சமாக பால் பாண்டி என்ற தனிமனிதரின் பங்களிப்பு பிரமிப்பு ரகம். கூந்தன்குளம் மக்களுக்கு வலசை வரும் பறவைகள் விருந்தாளிகள் என்றால், பால் பாண்டிக்கு பெற்றெடுத்த பிள்ளைகள்! வலசை வரும் பறவைகள் கூடு கட்டி, குஞ்சு பொறிக்கும் சமயத்தில் கூட்டிலிருந்து தவறி விழுவது இயல்பு. கால் ஒடிந்து, உடலில் காயம்பட்ட இளம் குஞ்சுகளை எடுத்து காப்பாற்றி குணமாக்கும் அரிய பணியைத்தான் கிட்டத்தட்ட முப்பத்தைந்து வருடங்களாக செய்துவருகிறார் பால் பாண்டி.

“பறவைகளோடு பறவையாக பிறந்து, வளர்ந்தது கூந்தன்குளத்துலதான். சின்ன வயதிலேயே பறவைகள் மேல அன்பு நிறைய. கூட்டிலிருந்து தவறி விழுகிற பறவை குஞ்சுகளை எடுத்து, காப்பாத்திவிடுவேன். பத்தாவது வரைக்கும் படிப்பு. வேலை தேடி குஜராத்துக்குப் போனேன். ஆனா ஞாபகம் முழுக்க ஊர் பற்றிதான். ஒருகட்டத்தில் இனி முடியாதுன்னு ஊருக்கே திரும்பிட்டேன். குஞ்சுகளை எடுத்து காப்பாத்தறது, அதுகளுக்கு மீன் பிடிச்சு போடறதுன்னு பறவைகள்தான் என் உலகம்னு மாறிப்போச்சு. பிறகு படிப்படியா கூந்தன்குளத்துக்கு வருகிற பறவைகள் ஒவ்வொன்றையும் கவனிக்க ஆரம்பிச்சேன். பறவை எப்படி கூடுகட்டும்? எத்தனை முட்டைகள் வைக்கும்? எத்தனை நாள் அடைகாக்கும்? குஞ்சுகளுக்கு எப்படி உணவளிக்கும்னு ஒவ்வொரு விஷயத்தையும் கூர்ந்து கவனிச்சேன். அப்போ ஊருக்கு வந்த பறவையியல் ஆராய்ச்சியாளர் ராபர்ட் கிரப் என்கிறவர் பறவைகள் பற்றி சலீம் அலி எழுதின புத்தகத்தை கொடுத்து அறிவியல் ரீதியா தெரிஞ்சிக்க உதவினார்” என்கிற பால்பாண்டியின் பணிகளைப் பார்த்த தமிழக வனத்துறை, சரணாலய உதவியாளராக்கி இருக்கிறது.

“கூந்தன்குளத்துக்கு கூழக்கடா, பூநாரை, கரண்டிவாயன், நீர்காக்கை(மூன்று வகை), செங்கால்நாரை, பாம்புதாரா, செண்டுவாத்து, புல்லிமூக்கு வாத்து, நத்தை கொத்திநாரை, அரிவாள் மூக்கன்(மூன்று வகை), நாமக்கோழி,. கானாங்கோழி, சாம்பல்நாரை, சாரை நாரை, முக்குலிப்பான், சம்புகோழி, பட்டைத்தலை வாத்து என 174 வகையான பறவைகள் வருது. சைபீரியாவிலிருந்து ஏராளமான வாத்து வகைகள் வரும். மற்ற பறவைங்க எல்லாம் குஜராத் போன்ற இந்திய பகுதிகளிலிருந்து வருகிறவைதான். பூநாரை ஆயிரக்கணக்கில் வரும். அதோட வெளிர்சிவப்பு நிறமும் உயரமும் கொள்ளை கொள்ளும் அழகு! ஊருக்கு நடுவுல இருக்கிற இந்த குளமும் குளத்தை சுற்றி வளர்ந்திருக்கிற மரங்களும்தான் பறவைகளின் வாழ்விடம். 35 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள கருமேனி ஆத்துல இருந்து குளத்துக்கு தண்ணீர் வருது. தை அமாவாசைக்கு வரும் பறவைகள் ஆடி அமாவாசை முடிந்ததும் கிளம்பிப்போகும். சீஸன் நேரத்துல ஊர்பக்கம் வந்தா மூக்கைப்பொத்திக்கிட்டுதான் நடமாட முடியும். காரணம் பறவைகளோட எச்சம்தான். பறவைகள் அந்த அளவுக்கு கூட்டம் கூட்டமாக வரும். பறவைகள் எச்சமிடுகிற குளத்து தண்ணீரை ஊர்மக்கள் விவசாயத்திற்கு காலங்காலமாக பயன்படுத்திட்டு வர்றாங்க. அவங்க நம்பிக்கை பொய்க்காம மூணு மேனி மகசூல் நிச்சயமா கிடைக்குது” என்கிறார் பால் பாண்டி.

கூட்டியிலிருந்து தவறி விழும் பறவை குஞ்சுகளுக்கு கால்நடை மருத்துவத்தில் கற்றுக்கொண்ட முறைப்படி சிகிச்சை அளிக்கிறார் பால் பாண்டி. இவரின் சூழலியல் ஆர்வம் பறவைகளோடு நின்றுவிடவில்லை. கூந்தன்குளத்தைச் சுற்றி ஆயிரம் மரங்களுக்கு மேல் நட்டு, வளர்த்திருக்கும் பெருமை அவரையும் அவருடைய மனைவி வள்ளித்தாயையும் சேரும்.

“அரச மரம், ஆலாமரம், நவ்வா மரம், புளிய மரம், அத்தி, வேம்பு, வாகை, மருதம், இலுப்பை, தூங்குமூஞ்சி, புங்கன், புங்கை, வாசாமடக்கி, அழகுகொண்டை, கருவேலம் என பறவைகள் கூடுகட்டும் மரங்களாகப் பார்த்து நட்டு, நீர் ஊற்றி, பராமரித்து நானும் என் மனைவியும் தோப்பாக்கி இருக்கிறோம். நான் இந்த அளவுக்கு பறவைகளுக்காக அர்ப்பணிப்போட பணிசெய்ய காரணம் என் மனைவி வள்ளித்தாய்தான். என்னைவிட அவரோட அர்ப்பணிப்பு பெரியது. பறவைகளுக்காக தன் உயிரையே துறந்தவர் வள்ளித்தாய். கூட்டிலிருந்து தவறி விழுகிற இளம்குஞ்சுகள் நெஞ்சில் அடிபட்டதால வாயில் ரத்தம் கக்கும். நாம வாயில் தண்ணீர் வைச்சு வேகமாக பறவை குஞ்சுகளுக்கு செலுத்தணும். அப்படி செலுத்தும்போது இரத்தம் வெளியேறி, அதுகளால சுவாசிக்க முடியும். இப்படி தொடர்ந்து என் மனைவி செய்து செய்துதான் பறவை வைரஸ் தாக்கி, இருதய வால்வு செயல்படாம போச்சு. முதல் முறை ஆபரேஷன் நடந்து பிழைச்சுக்கிட்டாங்க. இரண்டாவது தாக்கினப்போ ஆபரேஷன் நடந்தும் இறந்துட்டாங்க” பால் பாண்டியின் கண்கள் கலங்குகின்றன. பால் பாண்டி - வள்ளித்தாய் தம்பதியின் காதலும் இவர்களுக்கு பறவைகள் மேல் இருக்கும் காதலும் கூந்தன்குளம் வரும் ஆராய்ச்சியாளர்களுக்கு வியப்பூட்டும் விஷயங்கள். இவர்கள் குறித்து ஆவணப்படங்கள் எடுக்கப்பட்டுள்ளன. இந்த தம்பதியின் பணியைப் பாராட்டி கேரள அரசு முதல்கொண்டு பல சுற்றுச்சூழல் அமைப்புகள் விருது கொடுத்து கவுரவித்துள்ளன. ஆனாலும் பால் பாண்டியின் வாழ்க்கைத் தரம் அரசாங்கம் தரும் சொற்ப வரும்படியில் தான் தொடர்கிறது.

“2500 ரூபாய் சம்பளத்தை வச்சிக்கிட்டு நானும், பிள்ளைகள் நாலு பேரும் வாழ்க்கை நடத்திக்கிட்டு இருக்கோம். நிரந்தர வேலை இல்லை. மனைவியோட ஆபரேஷன் செலவுக்காக மகளிர் சுயஉதவிக்குழுவில் வாங்கின பணத்தையே இன்னும் திருப்பித்தர முடியலை. என் மனைவியும் என் போல வேலை பார்த்துட்டு இருந்தா. அவ போனதுக்குப் பிறகு, பென்சன் தந்திருக்கலாம். அது கிடைக்கிறமாதிரி தெரியலை, மனைவியோட வேலையை என் குடும்பத்தில் யாருக்காவது கொடுக்கலாம். பொருளாதார ரீதியான கவலை இருந்தாலும் அடுத்து இந்தப் பறவைகளை யார் பார்த்துக்குவாங்க என்கிற கவலைதான் பெரிதாக இருக்கு. நிறைய பேர் கூந்தங்குளத்துக்கு ஆராய்ச்சிக்காக வர்றாங்க. இங்கிருந்து ஏராளமான விஷயங்களை கத்துக்கிட்டு போறாங்க. அரசாங்க உத்தியோகத்திலிருந்து ஓய்வு பெற இன்னும் ஏழு வருடங்கள் இருக்கு. அதற்குள் என்னைப்போல பத்து பேரை கூந்தன்குளத்துக்கு உருவாக்கி தந்துடணும். ஆனா கடந்துபோன இருபத்தியேழு வருஷத்துல அப்படியொருத்தரையும் பார்க்க முடியலை” ஆதங்கத்தோடு தன்னை கடந்து செல்லும் பறவைக் கூட்டத்தைப் பார்க்கிறார் பால் பாண்டி.

பறவைகள் பலவிதம்…ஒவ்வொன்றுக்கும் தனிகுணம்!

றவை நோக்கராக பறவைகளின் இயல்புகளை கூர்ந்து நோக்கிவரும் பால் பாண்டியன், சில பறவைகள் தனிச்சிறப்புகளை பகிர்ந்துகொள்கிறார்…

ன்றுகூடி வாழும் குணமுடையது கூழக்கடா. பறவையின் எடை ஏழிலிருந்து எட்டு கிலோவரை இருக்கும். இரண்டு முட்டைகள் இடும். பத்தொன்பது நாட்கள் அடைகாக்கும். முட்டையிலிருந்து வெளிவரும் குஞ்சுகள் ரோமம் இல்லாமல் குரங்கு குட்டிகளைப்போல இருக்கும்.

செங்கால் நாரை அழகிலும் அறிவிலும் சிறந்த பறவை. வீட்டுப் பறவைகளைப் போல மனிதர்களோடு பழகும் குணமுடையது. முட்களை வைத்து கூடுகட்டி, இளம்தளிர்களால் மெத்தை அமைக்கும். மீன்தான் பிரதான உணவு. குஞ்சுகளை குளிப்பாட்டும். வெயிலில் குடை போல தன் சிறகை விரித்து குளிப்பாட்டிய குஞ்சுகளை நிறுத்தி குளிர்போக வைக்கும்.

லகு கரண்டிபோல் உள்ளதால் கரண்டிவாயன் என பெயர் இந்தப்பறவைக்கு. உடல் பால் போல வெண்மையாக இருக்கும். நான்கு முட்டை இடும். முட்டையிடும் காலத்தில் கழுத்துப் பகுதியில் தோன்றும் மஞ்சள் நிற வளையம் அழகிலும் அழகு!

படம் உதவி:ஆர்.ஆர்.சீனிவாசன்

“அடித்து துரத்தும் வரலாறு இடதுசாரிகளுக்கு புதிதல்ல…” April 4, 2009

Posted by மு.வி.நந்தினி in 18785444, அமிதவ் கோஷ், இடதுசாரிகள், சமூகம், சிங்கூர், சுற்றுச்சூழல், தஸ்லிமா நஸ்ரின், நந்திகிராம், போராட்டம், விருது.
Tags: , ,
3 comments

amitav1

ஒரு எழுத்தாளர் குறித்து அறிந்து கொள்ள வேண்டுமானால் அவருடைய எழுத்தை நிச்சயமாகப் படித்தாக வேண்டும். எழுத்தாளர் குறித்து மற்றவர்கள் தரும் விமர்சனம், மேலதிக தகவல்கள் அந்த எழுத்தாளரின் அறிமுகத்தை தருமேயன்றி அவையே இறுதியான மதிப்பீடுகளாக முடியாது. நம்முடைய சுய அனுபவத்தின் மூலமாகவே எழுத்தாளர் குறித்த மதிப்பீட்டினை பெற முடியும் என்பது என் கருத்து. குறிப்பாக ஊடகவியலாளர்களுக்கு இது மிகவும் அவசியம். தமிழில் எழுதும் எழுத்தாளர்களை நேர்காணல் செய்யும் அவர்கள் எழுதிய குறைந்தது இரண்டு புத்தகங்களையாவது படித்துவிட்டுத்தான் பேசுவது என்கிற வழக்கத்தை வைத்திருக்கிறேன். (வெகுஜன ஊடகங்களில் விரிவான நேர்காணலுக்கு சாத்தியம் இல்லை என்பதால் இந்த அளவுகோல்) அமிதவ் கோஷ் தன்னுடைய SEA OF POPPIES’ நாவலின் சென்னை வெளியீட்டுக்காக வந்திருப்பதாக பென்குயின் பதிப்பகத்தின் சென்னை பொறுப்பாளர் என்னை அழைத்திருந்தார். அவர் சொல்லித்தான் அமிதவ் கோஷ் என்கிற எழுத்தாளர் இருக்கிறார் என்பதே தெரியும். அமிதவ் குறித்த தகவல்களை இணையத்தின் மூலம் அறிந்துகொண்டபோது அவர் இந்திய - ஆங்கிய எழுத்தாளர்களில் குறிப்பிடத்தகுந்த ஆளுமை என்பது புரிந்தது. அவருடைய எழுத்துகளை படிக்க ஆர்வம் கொண்டபோதும் என்னுடைய ஆங்கில போதாமையின் காரணமாக குறைந்த கால அவகாசமே இருந்த நிலையில் SEA OF POPPIES’ நாவலில் ஆசிரியர் குறிப்பும் மதிப்புரையுமே படிக்க முடிந்தது. அதனாலேயே நாவல் குறித்து அதிகம் கேட்காமல் நந்திகிராம், சிங்கூர் பிரச்சினை, மகாஸ்சுவேதா தேவி என்று வேறுவேறு விஷயங்கள் குறித்து கேள்விகள் தயாரித்துக்கொண்டேன். அமிதவ் உடனான பேட்டி என்னளவில் திருப்தி கொடுத்தது, அவருடனான சந்திப்பு பிரமிப்பை அளித்தது. அவருடைய படைப்புகளை படிக்க முயன்று கொண்டிருக்கிறேன். அமிதவ் கோஷின் டிரைலாஜி நாவலான SEA OF POPPIES’ புக்கர் பரிசுக்கு இறுதிப் பட்டியல் வரை தேர்வானது. இந்த ஆண்டு புக்கர் பரிசு அமிதவுக்குத்தான் என்று எழுத்தாளர் வட்டாரங்களில் எதிர்பார்ப்பும் இருந்தது. இறுதி நிமிடத்தில் அர்விந்த் அடிகாவுக்கு புக்கர் கிடைத்தது. கடந்த ஜூலையில் பதிவு செய்த பேட்டி இது. சுருக்கமாகவே நான் பணியாற்றிய இதழில் வெளியானது. அவர் பேசியபோது எடுத்த குறிப்புகள் எதுவும் என்னிடம் இல்லை என்பதால் இதழில் வெளியான பேட்டியையே இங்கு கொடுத்திருக்கிறேன். நந்திகிராம் நில ஆக்கிரமிப்பு விவகாரத்தில் இடதுசாரிகள் நடந்துகொண்ட விதம் குறித்து அமிதவ்விடம் கேட்டபோது மக்களை அடித்து துரத்துவது இடதுசாரிகள் ஏற்கனவே செய்ததுதான் என்பதை அறிந்துகொள்ள முடிந்தது. ஒரு வரலாற்று உண்மையை சொன்னதற்காகவே அமிதவ் கோஷின் இந்த பேட்டியை மீள் பிரசுரம் செய்கிறேன்.அமிதவ் கோஷ்வங்காளம் உருவாக்கிய இந்தியாவின் சிறந்த நாவலாசிரியர்களில் ஒருவர். மனதில் நினைப்பதைப் பளிச் என்று பேசுகிற படைப்பாளி. அமிதவ் கோஷின் ஒரு புத்தகத்துக்காக பதிப்பகங்கள் தரும் தொகை கிட்டத்தட்ட அரைக் கோடி! அமெரிக்காவில் வசிக்கும் அமிதவ், பென்குயின் பதிப் பகம் பதிப்பித்திருக்கும்சீ ஆஃப் பாப்பிஸ்‘ (Sea of poppies) என்ற புதிய நாவலின் வெளியீட்டுக்காக சென்னை வந்து இருந்தார்.

”வங்காள விரிகுடாவின் கடற்கரையிலிருந்து சைனாவுக்கு ஓபியம் கொண்டுசெல்வதுதான் பிரிட்டிஷார் ஆண்ட காலத்தில் கொடிகட்டிப் பறந்த கடல் வாணிபமாக இருந்தது. பீகாரின் பல பகுதிகளில் இதற்காகவே கண்ணுக்கு எட்டிய தூரமெல்லாம் ஓபியம் செடிகள் வளர்க்கப்பட்டன. ஓபியம் செடிகளிலிருந்து பூக்கும் பூக்கள்தான் பாப்பி! நீல நிறத்தில் பூத்துக்கிடக்கும் இந்த பூக்களைப் பார்க்கும்போது நிலத்தில் கடல் முளைத்தது போல இருக்கும். அங்கிருந்துதான் ‘சீ ஆஃப் பாப்பிஸ்’ என்ற தலைப்பு கிடைத்தது” வார்த்தைகளை நிதானமாக, அழுத்தமாகப் பேசுகிறார் அமிதவ்.

”மேற்கு வங்கத்தில் நடக்கும் பிரச்னைகளை எப்படிப் பார்க்கிறீர்கள்? இடதுசாரி அரசு நடந்துகொள்ளும் விதம் சரிதானா?”

”கோவாவில் எனக்கு வீடு இருக்கிறது. கொல்கத்தாவில் உள்ளதைப் போல கோவாவிலும் சில பிரச்னைகள் ஒரே மாதிரியாக இருக்கின்றன. ஆனால், அரசின் அணுகுமுறையில் நிறைய வித்தியாசம் இருக்கிறது. இதே ‘செஸ்’ விவகாரத்தை கோவாவில் பள்ளி ஆசிரியர்களாகவும் சாதாரண கூலிகளாகவும் இருப்பவர்கள் கையில் எடுத்துப் போராடுகிறார்கள். அங்கே மக்கள் போராட்டம் வென்றிருக்கிறது. நிலங்களைக் கையகப் படுத்தும் திட்டம் கை விடப்பட்டு இருக்கிறது. மேற்கு வங்க அரசு தன்னுடைய கொள்கை களை மக்கள் மேல் திணிக்கப் பார்க்கிறது. சிங்கூர், நந்திகிராம் பகுதிகளில் நடக்கும் போராட்டத்தால் நூற்றுக்கணக்கான உயிர்கள் பலியாகிக்கொண்டு இருக்கின்றன. மாநிலத்தின் வளர்ச்சியைத் தவறான முறையில் செயல்படுத்தப் பார்க்கிறது வங்க அரசு. வங்கப் போர் நடந்த காலத்தில் அகதிகளாக சுந்தரவனக் காடுகளில் குடியேறினார்கள் வங்க தேச மக்கள். சுற்றுச் சூழல் பாதுகாப்பு என்ற காரணம் சொல்லி, இதே வழிமுறையில் அவர்களை அடித்துத் துரத்தியே கொன்று குவித்த வரலாறு இடதுசாரி அரசுக்கு உண்டு!”

”எழுத்தாளரும் சமூகப் போராளியுமான மகாஸ்வேதா தேவி, ‘நரேந்திர மோடியைவிட மோசமானவர் புத்ததேவ்’என்று சொல்லி இருக்கிறார். இது குறித்து உங்களுடைய பதில் என்ன?”

”மகாஸ்வேதாதேவி மூத்த எழுத்தாளர். அவர் இப்படியரு கருத்தைச் சொல்லும்போது நிறைய சிந்தித்திருக்க வேண்டும். இந்திய வரலாற்றில் மிகவும்மோச மான மத தாக்குதலை நிகழ்த்தியவர் நரேந்திர மோடி. அவரோடு புத்ததேவை ஒப்பிடுவது சரியல்ல. மேற்கு வங்கத்துக்குப் பொருந்தாத முன்னேற்றக் கொள்கையை எடுத்ததுதான் புத்ததேவ் அரசு செய்த மாபெரும் தவறு. முப்பது ஆண்டு காலமாக ஒரே கட்சி ஆட்சியில் இருப்பதன் விளைவுதான் இது. கருத்துச் சுதந்திரம் என்ற பெயரில் நினைத்ததை எல்லாம் சொல்லக் கூடாது. கருத்துச் சொல்வதிலும் சில கட்டுப்பாடுகள் தேவை. மகாஸ்வேதா தேவியைப் போல தஸ்லிமா நஸ்ரினுக்கும் இது பொருந்தும். சொல்லத் தேவை இல்லாத சில கருத்துக்களைச் சொல்லி, இப்போது ஐரோப்பிய கலாசாரத்துக்கு பொருந்திப்போக முடியாமல் தவித்துக்கொண்டு இருக்கிறார் தஸ்லிமா!”

16/7/08

புலிகளுக்காக ஒரு பயணம்… பெப்ரவரி 13, 2009

Posted by மு.வி.நந்தினி in ஊடகம், காட்டுயிர், சுற்றுச்சூழல், சுற்றுலா, தெப்பக்காடு, பந்திப்பூர், பழங்குடிகள், புலிகள் சரணாலயம், போராட்டம், மசினிகுடி, முதுமலை, யானைகள் சரணாலயம்.
2 comments

முதுமலை/புலிமேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளுக்கு செல்ல வேண்டும் என்கிற ஆவல் நெடுநாட்களாக இருந்தது. வெறுமனே பொழுதை போக்கிவிட்டு வரவும் ஆர்வம் இல்லை. நேரமும் சரிவர ஒத்துழைக்கவில்லை. நேரம் கனிந்து வந்தபோது, முதுமலையை  சுற்றியுள்ள பகுதிகளை புலிகள் சரணாயமாக அறிவித்ததை ஒட்டி அப்பகுதிகளில் வாழும் மக்கள் (பழங்குடிகள்) எதிர்ப்பு தெரிவிப்பதாக செய்தி வெளியானது.

காட்டுயிர்/சுற்றுச்சூழல்  பாதுகாப்பு சார்ந்து இயங்கும் நண்பர்களிடம் விசாரித்தபோது “நீங்களே நேரில் சென்று பாருங்கள்” என்று பீடிகை போட்டது முதுமலைக்குச் செல்லும் ஆவலுக்கு தூபம் இட்டது.
சமீப காலமாக மனிதனுக்கு கானக உயிர்களுக்குமான இருப்பு சார்ந்த போராட்டம் வலுத்து வரும் சூழலை ஒட்டி ஒரு ஆவணப்படத்தை உருவாக்கும் முயற்சி குறித்து நண்பர்கள் பேசிக்கொண்டிருந்தோம். அதற்கான களஆய்வுப் பணிகளைத் தொடங்க இது சரியான தருணமென முதுமலைக்குச் செல்லும் பயணப்பணிகளைத் தொடங்கினோம். எல்லோருக்கும் ஒரே நேரத்தில் விடுப்பு கிடைக்காத சூழ்நிலையில் நானும் லிசியும் மைசூர் வழியாக கடந்த திங்கள் முதுமலைக்கு பயணப்பட்டோம்.

மைசூரிலிருந்து ஊட்டி செல்லும் சாலையில் 90 கி.மீட்டரில் இருக்கிறது முதுமலை யானைகள் சரணாலயம். அருகிலேயே பந்திப்பூர் புலிகள் சரணாலயம். இரண்டும் ஒரே காடுதான், முன்னது தமிழகப்பகுதியிலும் பின்னது கர்நாடகப்பகுதியிலும் இருக்கிறது. பந்திப்பூரை புலிகள் சரணாலயமாக அறிவித்தது 1973ல். நமக்கு இப்போதுதான் புலிகளின் முக்கியத்துவம் தெரிந்திருக்கிறது. அதற்கும் எதிர்ப்புகள்…
முதுமலை தெப்பக்காட்டிலிருந்து 10 கி.மீ தொலைவில் மசினிகுடி என்ற ஊர். அவ்வூர் மக்கள்தான் புலிகள் சரணாலயத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவிப்பதாக கூறினார்கள். காட்டுப்பகுதியை கடந்து செல்லும்போது அதன் வனப்பு எங்களை லயிக்க வைத்தது. கூடவே நகரத்தை விஞ்சும் வகையில் நொடிக்கு ஒருதரம் கடந்து போன வாகனங்களைப் பார்க்க சாவு மணி அடிப்பதைப்போன்றதொரு உணர்வுதான் ஏற்பட்டது.

மூன்று நாட்கள் முதுமலையின் சில கிராமங்களைக் கண்டோம். முடிநதமட்டும் அனைத்து தரப்பு மக்களையும் சந்தித்தோம். 20,30 ஆண்டுகளுக்கு முன் பிழைப்புக்காக அப்பகுதிகளில் குடியேறி அம்மண்ணின் வளத்தை உறிஞ்சி,இன்று சகல வசதிகளுடனும் வாழும் ஒரு சிலரின் எதிர்ப்புதான் ஊடகங்களால் பழங்குடிகளின் போராட்டமாக திரிக்கப்பட்டுள்ளது (அல்லது) ஊடகங்களுக்கு திரித்து சொல்லப்பட்டுள்ளது. புலிகள் சரணாலயம் ஆக்கப்பட்டால் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்படும், அதனால் சுற்றுலாவை நம்பிருக்கும் தங்களுடைய சுரண்டல் தொழில் பாதிக்கப்படும் என்பதுதான் இந்தப்போராட்டங்களின் காரணம்.

பழங்குடி பெண்களுடன் லிசி
ஆனால் இப்போதும் யானை கலக்கிவிட்டுச் சென்ற குட்டை நீரையே குடிநீராக குடித்து வாழும் பழங்குடிகளின் மன்றாடல் என்னவோ யானையும் புலியுமாவது அதனுடைய உரிமையை அனுபவிக்கட்டும் எங்களை வேறு இடங்களில் குடியமர்த்துங்கள் என்பதாக இருக்கிறது…

விரிவாக சொல்ல வேண்டிய விஷயமிது, சுருக்கமாக தந்திருக்கிறேன்.

Follow

Get every new post delivered to your Inbox.