கல்லறை இருக்கிறது- கல்வெட்டு மட்டுமே காணவில்லை பெப்ரவரி 10, 2010
Posted by மு.வி.நந்தினி in ஆதவன் தீட்சண்யா, தோழர் கே.டானியல், புதுவிசை.Tags: ஆதவன் தீட்சண்யா, தோழர் கே.டானியல்
add a comment
ஆதவன் தீட்சண்யா
எழுத்தாளர் தோழர் கே.டானியல் அவர்களின் கல்லறையை கண்டுவர முடியாத என் ஆதங்கத்தை நண்பர்கள் பலரும் தங்களது வலைப்பூக்களிலும் இணையதளங்களிலும் வெளியிட்டிருந்தார்கள். தீக்கதிர் நாளிதழும் வெளியிட்டிருந்தது. இன்னும் சில நண்பர்கள் இந்தக் கட்டுரை வேறுசில இணையதளங்களில் வெளியிடப்பட்டிருக்கிறதே என்று புருவத்தை உயர்த்தி தமது தளத்தில் வெளியிட முடியாதென உதட்டைப் பிதுக்கியிருந்தனர். எல்லாவற்றுக்கிடையிலும் டானியலின் கல்லறை பலரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறது. டானியல் கல்லறை குறித்த விசயம் இப்போது அந்த சுடுகாட்டில் மண்டியுள்ள புதர்களை சுத்தப்படுத்தும் வேலையை கிளப்பிவிட்டிருக்கிறது. பிப்ரவரி 2 ம் தேதி வாக்கில் ஊருக்குப் போகவிருப்பதாகவும் அப்போது இதுகுறித்து விசாரிப்பதாகவும் தோழர் மார்க்ஸ் தெரிவித்ததையடுத்து ‘இடுகாடு முழுவதும் மண்டிக்கிடக்கும் முட்புதருக்குள் டானியலின் கல்லறை சேதமின்றி இருக்கிறது தோழரே, நீங்கள்தான் சரியாய் தேடிப்பார்த்திருக்க தவறிவிட்டீர்கள் என்று மார்க்ஸ் சொல்ல வேண்டுமேன்று விரும்புகிறேன்…’ என்று முந்தைய கட்டுரையில் குறிப்பிட்டிருந்தேன். நான் விரும்பி எதிர்பார்த்த அந்த தகவல் கிடைத்திருக்கிறது. டானியலின் கல்லறை என்னவானது என்று பார்த்தறியுமாறு தன்னிடம் அ.மார்க்ஸ் தெரிவித்ததன் பேரில் பொ.வேல்சாமி தஞ்சை இடுகாட்டுக்குப் போய் பார்த்துவிட்டு 08.02.10 அன்று அங்கிருந்து என்னை தொடர்பு கொண்டார். டானியலின் கல்லறை அவ்விடத்தில் இருப்பதாகவும் ஆனால் கல்லறையின் மீதிருந்த கல்வெட்டை யாரோ பெயர்த்தெடுத்துள்ளதால்தான் உங்களால் அடையாளம் காண முடியாமல் போயிருக்கிறது என்றும் தெரிவித்தார். ஆறுமாதங்களுக்கு முன்பும்கூட அந்த கல்வெட்டு இருந்ததாகவும், வேண்டுமென்றே ( அதாவது வேண்டாமென்று) பெயர்த்தெடுப்பதைப் போலிருப்பதாகவும், கல்வெட்டு இருந்த இடத்தில் தாறமாறாக சிமெண்ட் பூசப்பட்டிருப்பது ஏனென்று தெரியவில்லை என்றும் வருத்தப்பட்டார். கல்லறையுள்ள பகுதியை யாரோ சிலதினங்களுக்கு முன்பு செதுக்கி சுத்தப்படுத்தியிருப்பதாகவும் கூறினார். எப்படியாயினும் தனது நண்பர் செல்வபாண்டியன் மூலமாக மீண்டும் புதிதாக கல்வெட்டு பதிக்க ஏற்பாடு செய்திருப்பதாக தெரிவித்துள்ளார். டானியல் கல்லறையை அடையாளம் காட்டியமைக்காக அ.மார்க்ஸ்- பொ.வேல்சாமி ஆகியோருக்கு நன்றி. காணவில்லை- டானியல் கல்லறை என்ற எனது முந்தைய கட்டுரையிலுள்ள கீழ்க்காணும் தகவல் பிழைகளுக்கு வருந்துகிறேன்.
1. கல்லறை எழுப்பியதில் அ.மார்க்ஸ், பொ.வேல்சாமி ஆகியோரது பங்களிப்பு குறித்து விடுபட்டிருந்தது. ‘டானியலின் கல்லறையை மக்கள் கலைஇலக்கியக் கழகம் கட்டியெழுப்பியிருந்ததாக தோழர்கள் சிலர் கூறினார்கள். அ.மார்க்ஸூக்கும், பொ.வேலுசாமிக்கும் இதில் கூடுதல் பங்களிப்பு இருந்திருக்கிறது…’ என்ற திருத்தத்தை கவின்மலர் மூலமாக நிச்சாமம்.காம், உயிர்மெய்.காம் உள்ளிட்ட தளங்களுக்கும் அனுப்பிவைத்தேன். சிலர் அந்த திருத்தங்களை வெளியிட்டுள்ளனர்.
2. மக்கள் கலைஇலக்கியக் கழகம் கல்லறையை எழுப்பியது என்ற குறிப்பும் பிழையானது. அந்த அமைப்பு இதனோடு யாதொருவகையிலும் தொடர்புபடவில்லை. உடன் வந்த தோழர்கள் சொன்ன இந்த தகவலை தோழர்.மார்க்ஸ் போன்றவர்களிடம் கேட்டு தெளிவுபடுத்திக் கொள்ளாமல் நானும் குறிப்பிட்டிருக்கக்கூடாது. உண்மையில் தானும் தனது சகோதரர்களுமே இக்கல்லறையை எழுப்பியதாக பொ.வேல்சாமி 08.02.10 அன்று என்னிடம் தெரிவித்தார்.
3. டானியல் பற்றிய வி.டி.இளங்கோவன் கட்டுரையில் வெண்மணிக்குப் போய்விரவேண்டும் என்ற அவரது விருப்பம் நிறைவேறவில்லை என்பதான தொனி இருந்ததை வைத்து அதை அவ்வாறே குறிப்பிட்டிருந்தேன். டானியல் வெண்மணிக்கு சென்று வந்திருக்கிறார் என்ற தகவலை கரவைதாசனிடம் வி.டி.இளங்கோவன் குறிப்பிட்டிருக்கிறார்.
இலங்கை இப்போது… December 17, 2009
Posted by மு.வி.நந்தினி in அரசியல், இன உணர்வு, இலங்கை தமிழர், சமூகம், சூரியகதிர், தீட்சண்யா, புதுவிசை, போராட்டம்.5 comments
தமிழ் இலக்கிய சூழலில் சமூகத்தின் மீது அக்கறையும் கரிசனமும் கொண்டு எழுதிவரும் படைப்பாளிகளில் முக்கியமானவர் ஆதவன் தீட்சண்யா. அதிகார வர்க்கத்தின் மீது தயங்காமல் விமர்சனம் வைக்கக்கூடியவர். சிறுகதை, கவிதை, கட்டுரை என இயங்கிவரும் ஆதவன், புதுவிசை என்கிற கலாச்சாரக் காலண்டிதழின் ஆசிரியராகவும் செயல்படுகிறார். இவர் எழுதி ‘பூஜ்ஜியத்திலிருந்து துவங்கும் ஆட்டம்‘, ‘தந்துகி‘ என இரு கவிதை நூல்களும் ‘எழுதவேண்டிய நாட்குறிப்பின் கடைசிப் பக்கங்கள்‘, ‘இரவாகிவிடுவாதலேயே சூரியன் இல்லாமல் போய்விடுவதில்லை‘ என இரு சிறுகதை நூல்களும் வெளியாகியுள்ளன. மலையக மற்றும் இலங்கை தமிழர்களின் வாழ்நிலை குறித்து அறிய சமீபத்தில் இலங்கை சென்று வந்திருக்கிறார் ஆதவன். ‘சூரியகதிர்‘ மாதமிருமுறை இதழுக்காக மின்னஞ்சலில் அனுப்பிய கேள்விகளுக்கு ஆதவனின் பதில்…
# முகாம்களுக்குச் செல்லும் வாய்ப்பு கிடைத்ததா?
யாழ்ப்பாணம் செல்வதே எனக்கு பெரும்பாடாகிவிட்டது. யாழ்ப்பாணத்திற்கு முதல்முறையாக செல்பவர் விமானத்தில்தான் சென்றாக வேண்டும். விமான டிக்கெட் பெறவேண்டுமானால் பாதுகாப்புத்துறை அமைச்சகத்தின் அனுமதிக் கடிதம் இருந்தால் மட்டுமே சாத்தியம். இந்த ஏற்பாடுகளை தோழர்கள் ரங்கனும் அந்தனிஜீவாவும் செய்துகொடுத்தபோதும், எனக்கு 19ம் தேதிதான் டிக்கெட் கிடைத்தது. 22ம் தேதி நாடு திரும்பவேண்டிய நிலையிலிருந்ததால் முகாம் எதற்கும் செல்ல முடியவில்லை. ஆனால் முகாம்களில் இருந்து சமீபத்தில் விடுவிக்கப்பட்டவர்கள் சிலரை சந்தித்து அவர்களது துயரங்களை கேட்டறிய முடிந்தது. நான் தங்கியிருந்த விடுதியின் சமையல்காரரின் குடும்பம் 1996ல் யாழ்ப்பாணத்திலிருந்து வன்னிக்கு குடிபெயர்ந்திருக்கிறது. மீன்பிடித்தொழில் அவர்களுக்கு. போர் உக்கிரமடைந்த நிலையில் காடுகளுக்குப் போகிறார்கள் புலிகளோடு. நிலவறைகளில் பதுக்கம். ராணுவம் அழித்து நொறுக்கி வரவர இவர்கள் மூட்டைமுடிச்சுகளோடு பத்துக்கும் மேற்பட்ட இடங்களுக்கு ஓடியோடிப்போய் பதுங்க வேண்டியிருந்திருக்கிறது. நடந்துவர முடியாத நோயாளிகள் வயோதிகர்கள் அங்கவீனர்களை அப்படியப்படியே பங்கருக்குள் கைவிட்டுவிட்டு ஓடியுள்ளனர். கைவிடப்படப்பட்ட அந்த பங்கர்களுக்குள் ஒருவேளை யாராவது உயிர் பிழைத்திருந்தாலும் கூட ஒருவருக்கும் தெரியப்போவதில்லை. இனி புலிகளை நம்பி உயிரையும் போக்கிக்கொள்வதில் அர்த்தமில்லை. எனவே படகேறித் தப்பித்து நேவியிடம் சரண். பின் முகாமில் வதிந்து ஆகஸ்டில் விடுவிப்பு. இப்போது அவர்களின் பிரச்னை, வீடு. வன்னிக்குப் போன அவர்களின் ஒரு குடும்பம் இப்போது ஐந்தாக பெருகி யாழ்ப்பாணம் திரும்பி நடுத்தெருவில் நிற்கிறது. தொழிலுக்குச் செல்ல படகோ வலையோ இல்லை. பணம் நகை எதுவும் மிஞ்சவில்லை. அவற்றை விற்றுத்தான் கடைசிநாட்களில் சீவித்திருக்கிறார்கள். எல்லாமும் தோற்றாகிவிட்டது. தெரிந்த தொழிலுக்கு அவர்களால் திரும்ப முடியவில்லை. நீர்மேலிருந்தவர் நெருப்புக்குள் கரிபடுகிறார். முகாம்களிலிருந்து விடுவிக்கப்படுகிறவர்களுக்கு எந்த வாழ்வாதாரமும் இல்லை. முப்பது ரூபாய்கு ஒரு டீ விற்கிற நாட்டில், அரசு கொடுக்கிற சிறுதொகையை வைத்துக்கொண்டு அந்த மக்கள் எப்படி மீண்டெழ முடியும்?
# இலங்கை தமிழர்களின் நிச்சயமான வாழ்வாதாரம் குறித்து பேசாதநிலை தமிழகத்தில் நிலவிக்கொண்டிருக்கிறது. தமிழர்களின் வாழ்வாதாரம் குறித்து ஏதேனும் முன்னெடுப்புகள் இலங்கையில் (அரசு அல்லாத) புலம்பெயர்ந்த இடங்களில் நடக்கிறதா?
அ.) ஐரோப்பா அல்லது பிறநாடுகளில் அடைக்கலம் புகுந்த இலங்கைத் தமிழர்களில் பெரும்பாலோர் ஐந்தாறு ஆண்டுகளில் அங்கு பொதுசமூகத்தோடு இணைந்து வாழவும் குடியுரிமை பெறவும் முடிகிறது. ஆனால் கால்நூற்றாண்டு காலமாய் தமிழ்நாட்டின் அகதிகள் முகாமில் வதியும் இலங்கைத்தமிழர்கள் இன்றளவும் அகதிகள்தான் என்பதை எமது புதுவிசையில் தொடர்ந்து எழுப்பிவந்தோம். வவுனியா முகாமைப் பார்க்கப்போன நாடாளுமன்ற உறுப்பினர்களில் எத்தனைபேர் தமிழ்நாட்டிலுள்ள முகாம்களுக்கு சென்றிருப்பார்கள் என்பது தெரியவில்லை. அண்டி வந்தவர்களையே ஆதரிக்காத இந்த தமிழ்நாட்டு சமூகம் இலங்கைக்குப் போய் என்னத்த கிழிக்கப்போகிறது? கழுத்துநரம்பு புடைக்க ராஜபக்சேவையும் சிங்களவர்களையும் இங்கு வசைபாடித் திரிவதால் அங்குள்ள தமிழர்களுக்கு நன்மையேதும் விளையப் போவதில்லை.
ஆ) புலம்பெயர் நாடுகளின் புலி ஆதரவாளர்களைப் பொறுத்தவரை மாற்றுக்கருத்தாளர்கள் எல்லோரையும் சிறுமைப்படுத்துவதன் மூலம் இலங்கையில் அமைக்கமுடியாத தனி ஈழத்தை இணையத்திலாவது அமைத்தே தீர்வோம் என்று மும்முரமாய் பாடுபட்டுக் கொண்டுள்ளனர். ஒரு இருபதாண்டுகள் கழித்து தனிஈழப் போராட்டம் பற்றி அறிந்துகொள்ளும் தரவுகளை இணையத்தில் தேடும் ஒருவருக்கு அங்கு ஏற்பட்டுள்ள இழப்புகள், தோல்விகள் எதற்கும் புலிகள் அமைப்போ தலைமையோ பொறுப்பல்ல என்ற மாயத்தோற்றத்தை உருவாக்கும் அதிரடியான அறிக்கைகளையும் இட்டுக்கட்டப்பட்ட ஆவணங்களையும் இணையத்தில் உலவவிடுவதோடு இவர்கள் பணி நிறைவு பெறுகிறது. எனவே இவங்கையில் தமிழர்கள் படும் துயரங்கள் அவர்களுக்கு ஒரு பொருட்டல்ல. ஏனெனில் அவர்கள் ஒரு பாதுகாப்பான வாழ்க்கையை எட்டிவிட்டவர்களாக இருக்கிறார்கள்.
இ.) யாழ்ப்பாணத்தில் பெரியபெரிய பதாகைகளையும் கொடிகளையும் கட்டிக்கொண்டு தொண்டு நிறுவனங்கள் என்கிற ஃபண்டு நிறுவனங்களின் குளிரூட்டப்பட்ட வாகனங்கள் பறக்கின்றன. மாளிகை போன்ற பெரிய வீடுகள்தான் அவற்றின் அலுவலகங்கள். அரசியல்ரீதியான பிரச்னைகளை இந்த அமைப்புகள் கொடுக்கும் சோற்றுருண்டைகள் தீர்த்துவைக்க முடியாது. ஒருசில அமைப்புகளைத் தவிர மற்றவற்றுக்கு சுனாமி கொள்ளை போல இதுவும் ஈழமக்களின் பெயரால் கொள்ளையடிக்கும் வாய்ப்புதான்.
ஈ) புலம்பெயர்ந்து வெளிநாடுகளிலும் கொழும்பிலும் வாழக்கூடிய பொன்னாலைக்கட்டியான் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர்கள் தங்களுக்குள் ஒரு குழுவை அமைத்து நிதிதிரட்டி போரினால் முற்றிலும் அழிந்துபோன தங்கள் ஊரை மீள கட்டியெழுப்புவதாக அந்த குழுவின் நிர்வாகி மருத்துவர்.ஞானகுமரன் தெரிவித்தார். இம்மாதிரியான முயற்சிகளும் அங்கொன்றும் இங்கொன்றுமாக நடக்கின்றன.
உ) புலம்பெயர்ந்தவர்களில் ஒரு சிறுகுழு இப்போதைய சூழலைப் புரிந்துகொண்டு செயலாற்றவேண்டிய தளங்களை கண்டறிய முயற்சிக்கிறது. ராணுவரீதியில் பலவீனமாக இருந்த பல்வேறு நேரங்களில் அரசியல் தீர்வு, சமஸ்டிமுறை என்றெல்லாம் புலிகள் பேசியதைதான் இவர்களும் முன்வைக்கிறார்கள். அதற்காக துரோகிகள், அரசாங்கத்தின் கைக்கூலிகள் என்று தூற்றப்படுகிறார்கள். எனினும் அரசியல் உரிமைகளை அடையும் சக்திகள் இலங்கை தமிழ்ச் சமூகத்தின் மத்தியிலிருந்துதான் உருவாக முடியும் என்பதை உணர்ந்து அதற்கான தொடர்புகளை மேற்கொண்டுள்ள இந்த சிறுபகுதியினர் நம்பிக்கையளிக்கின்றனர்.
# விடுதலைப் புலிகள் இனி… விடுதலைப் புலிகள் குறித்து இலங்கையில் வாழும் தமிழர்களின் நிலை என்ன-? அடுத்தக்கட்ட போருக்கு தயாராவோம் என்று இங்கிருந்து கிளம்பும் கோஷங்களுக்கு இலங்கை வாழ் தமிழர்களின் ரியாக்ஷன் எப்படி இருக்கு…
பிரபாகரன் மீண்டும் வருவாராமே என்று அங்குள்ளவர்களிடம் கேட்டால், வரட்டுமே.. வந்து என்ன செய்யப் போகிறார்… இத்தனை ஆயிரம் போராளிகளையும் இவ்வளவு ஆயுதங்களையும் பெருந்தொகையான பணத்தையும் வைத்துக்கொண்டே ஒன்றும் செய்ய ஏலாதவர் இனி வந்து என்ன செய்யப் போகிறார் என்று எதிர் கேள்வி கேட்கிறார்கள். ஒருவேளை வந்தால் அவரும் ஒரு இணையதளத்தையோ பிளாக்கையோ அமைத்துக்கொண்டு அட்டைக்கத்திதான் வீசமுடியமேயன்றி ஆயுதத்தை தூக்கமுடியாது என்கிறார்கள்.யாழ்ப்பாணம் நாவலர் அரங்கில் நடைபெற்ற சந்திப்பின்போது ஒரு அன்பர் சொன்னார்- தமிழர்கள் மானஸ்தர்கள், ஆளப்பிறந்தவர்கள், அவர்கள் தனித்துவமானவர்கள், பிற இனத்தோடு சேர்ந்து வாழ முடியாதவர்கள், தனிநாட்டுக்கு குறைவான எதிலும் அவர்கள் திருப்தி கொள்ள முடியாது என்றெல்லாம் உங்கள் தமிழ்நாட்டுத் தலைவர்கள் பேசுவது உண்மையென்றால், தனி தமிழ்நாட்டுக்காக போராட வேண்டியதுதானே? அதை விட்டுவிட்டு இவர்களது வீராப்புக்கும் வெத்துச் சவடாலுக்கும் ஏன் எங்கள் உயிரையும் வாழ்வையும் பணயம் வைக்கிறார்கள்? என்று.வவுனியா முகாமிலிருந்து விடுவிக்கப்பட்டு வந்துகொண்டிருக்கும் 1280 பேரை அழைத்துப்போக யாழ்ப்பாண நூலகத்தினருகில் உள்ள துரையப்பா ஸ்டேடியத்தின் வாயிலில் காத்திருந்த ஒரு கூட்டத்திடம் உரையாடிக் கொண்டிருந்தோம். ஒரு மீனவப்பெண் சொன்னார்- எத்தனை இம்சை… இன்னொரு தடவை ஆயுதம் போராட்டம்னு எவனாச்சும் சொன்னா தும்புக்கட்டையாலயே ( துடைப்பம்) அடிச்சு சாத்திப்புடுவேன். போரை எதிர்கொண்ட எளிய மக்களின் மனநிலை இதுதான்.
# இலங்கை தமிழர்கள் வாழ்வுரிமைக்காக நம்மைப் போன்ற வெளியில் இருக்கும் தமிழர்கள் என்ன செய்ய வேண்டும்? (அல்லது) இலங்கை தமிழர்கள் நம்மிடம் எதை எதிர்பார்க்கிறார்கள்?
வாயை மூடிக்கொண்டிருந்தால் போதும், அதுவே நீங்கள் செய்யும் பேருதவி என்பதுதான் அவர்கள் நமக்கு விடுக்கும் வேண்டுகோள். காடு அதிர்கிறது மீண்டும் எழுகிறது என்றெல்லாம் வீராவேசமாக இங்குள்ள பத்திரிகைகள் வெளியிடும் பரபரப்பு செய்திகள் கண்டு அவர்கள் பதறுகின்றனர். இப்படியான செய்திகள், தனது ராணுவ கெடுபிடிகளை நீட்டித்துக்கொள்ள அரசாங்கத்துக்கு உதவும் என்று கண்டிக்கின்றனர். ஒருவேளை அரசாங்கத்துக்கு இப்படி மறைமுகமாக உதவுவதுதான் இவர்களது உள்நோக்கமோ என்றும் சந்தேகிக்கிறார்கள். ஏற்கனவே இணையதளங்களிலும் யூடியூப்களிலும் வெளியிடப்பட்ட வீரதீர புகைப்படங்களையும் வீடியோக்காட்சிகளையும் வைத்துக்கொண்டு ஒவ்வொரு தமிழனையும் உற்றுஉற்று பார்த்து சந்தேகிக்கும் ராணுவத்தாருக்கு உதவும் பொறுப்பற்ற பேச்சுகளையும் அறிக்கைகளையும் நிறுத்தச் சொல்லுங்கள் என்ற அவர்களது வேண்டுகோள் நம் தமிழ்த்தேச தலைவர்களின் இதயங்களை தைக்கவேயில்லை. இந்திய அரசாங்கம் ஏன் தமிழர்களை ஆதரிக்கவில்லை? இலங்கையின் ஒடும் வாகனங்கள் டாடாவும் லேலண்டும். இருசக்கர வாகனமென்றால் பஜாஜ், ஹீரோ ஹோண்டா, டி.வி.எஸ். தொலைத்தொடர்பில் ரிலையன்சும் ஏர்டெல்லும். நாடு முழுதும் இந்தியன் ஆயில் கார்ப்பரேசனின் பெட்ரோல் நிலையங்கள். அங்கிருந்த பெரிய சிமெண்ட் ஆலை இப்போது பிர்லாவிடம். நாட்டின் பொருளாதாரத்தில் பிரதான பங்கு வகிக்கும் தேயிலைத் தோட்டங்கள் இந்தியருக்கு சொந்தம். இவையன்றி இலங்கையின் அன்றாடப் பயன்பாட்டில் புழங்கும் பொருட்களில் 90 சதமானவை இந்திய தயாரிப்புகள். தமிழர்கள் என்ற சிறுபான்மையினரை ஆதரித்து இலங்கை என்கிற இவ்வளவு பெரிய சந்தையை இழக்க இந்திய முதலாளிகளும் வர்த்தக நிறுவனங்களும் தயாரில்லை. இவர்களது சந்தை நலனுக்கு பாதிப்பில்லாத ஒரு அணுகுமுறையைதான் சோனியா, வாஜ்பாய், கருணாநிதி, ஜெயலலிதா என்று யார் ஆண்டாலும் கடைபிடிப்பார்கள்.
# மலையகத்தமிழர்கள் வாழ்நிலை என்னவாக உள்ளது?
இலங்கைக்குப் போய் திரும்பியிருக்கிறேன் என்றதும் எல்லோரும் யாழ்ப்பாண தமிழர்களைப் பற்றிதான் விசாரிக்கிறார்கள். ஆனால் இலங்கையில் ரயில்பாதை அமைக்கவும் பாலங்கள் கட்டவும் துறைமுகம் தோண்டவும் காப்பி தேயிலைப் போன்ற பெருந்தோட்டங்களில் வேலைசெய்யவும் 19 ம் நூற்றாண்டின் தொடக்கம் முதல் தமிழ்நாட்டிலிருந்து பிரிட்டிஷ்காரர்களால் பிடித்துச் செல்லப்பட்டு இன்று மலையகத்தமிழர் என்றழைக்கப்படும் நமது முன்னோர்களைப் பற்றி ஒருவரும் விசாரிப்பதேயில்லை. அவர்களும் தமிழர்கள். அவர்களது பூர்வீகம் என்ற இந்த தமிழ்நாட்டில் அவர்களுக்காக ஒரு கைப்பிடி மண்ணும் இல்லை. இருநூறாண்டுகளாக எஸ்டேட்டுகள் என்ற திறந்தவெளி சிறைச்சாலைக்குள்ளும் அனேக இடங்களில் முள்வேலிக்குள்ளும் அடைக்கப்பட்ட வாழ்க்கைதான் அவர்களுடையது. கடும் உழைப்புச் சுரண்டலுக்கு இன்றளவுக்கும் ஆளாகியிருப்பவர்கள். 83 வன்செயலின்போது சிங்களவர்களாலும் ராணுவத்தாலும் கடும் ஒடுக்குமுறைக்கு ஆளானவர்கள். பல்லாயிரக்கணக்கான அடி உயரத்திலுள்ள மலைகளுக்கு தாங்களே பாதையமைத்து மேலேறிப் போனவர்களில் பலர் இன்னும் சமதளத்திற்கு இறங்கவேயில்லை. உயரங்களிலும் சிகரங்களிலும் வசித்தாலும் அவர்களது வாழ்க்கை அதலபாதாளத்தில்தான். ஒருவேளை மலையகத்தமிழர்களில் 87 சதமானவர்கள் தலித்துகள் என்பதோ, டாலரும் பவுண்ட்சும் இல்லாத கூலித்தமிழர்கள் என்பதோ அல்லது பரபரப்பாக கவனிக்கப்படாது என்பதாலோ அவர்களைப் பற்றி தமிழ்த்தேசியவாதிகளோ, இனமானக் காவலர்களோ, ஊடகங்களோ பேசுவதேயில்லை. இலங்கையின் மலையகத்தமிழர் பற்றி மட்டுமல்ல, உலகம் முழுவதும் தமது காலனிகளாயிருந்த 40 நாடுகளுக்கு பிரிட்டிஷ், பிரான்ஸ் ஆட்சியாளர்கள் தமிழ்நாட்டு மக்களை பிடித்துப்போயிருக்கிறார்கள். தென்னாப்பிரிக்காவுக்கு இந்தியர் அழைத்துச் செல்லப்பட்டதன் (?) 150வது ஆண்டு விழாவை வெட்கங்கெட்டு கொண்டாடிக் கொண்டிருக்கிற இந்த நேரத்திலாவது 40 நாடுகளுக்கும் புலம் பெயர்த்து கொண்டுபோகப்பட்ட தமிழர் நலன் குறித்த விவாதம் தொடங்கப்பட வேண்டும். இல்லையானால் ஈழத்தமிழருக்காக வடிக்கப்படும் கண்ணீரை கபடம் நிறைந்ததென்றே வரலாறு குறித்துக் கொள்ளும்.
நன்றி : சூரியகதிர்
சிற்றிதழ்களை ஏன் படிக்க வேண்டும்..? மே 7, 2009
Posted by மு.வி.நந்தினி in உன்னதம், சிற்றிதழ் அறிமுகம், புதுவிசை.Tags: இந்துத்துவம், உன்னதம், சாதியின் அரசியல், சிற்றிதழ், சிற்றிதழ் அறிமுகம், தலித்தியம், நடராசா சுசீந்திரன், புதுவிசை, பெண்ணியம்
11 comments
வெகுஜன பத்திரிகைகள் மூலமாகத்தான் எனக்கு சிற்றிதழ்கள் அறிமுகமானது. கல்லூரி படிப்பை முடிக்கும் வரையில் பெயர்களை மட்டுமே அறிந்து வைத்திருந்தேன். தினமணி இதழில் சில நாள் பயிற்சியின் நண்பனாகிப்போன தனபால் சிங், புக்லேண்ட்டுக்கு அழைத்துப்போய் சிற்றிதழ் உலகத்தை காண்பித்தவன். தொடக்க காலங்களில் சிற்றிதழ்கள் படிக்கும்போது என்ன இப்படியெல்லாம் எழுதுகிறார்கள் என்று தோன்றியதுண்டு. (ஆரம்பகால சிற்றிதழ் வாசகர் அத்தனை பேருக்கும் இந்த அனுபவம் இருக்கும் என நினைக்கிறேன்) பிறகு படிக்கப்படிக்க எண்ணத்தில் தெளிவு வந்தது. நான் பத்திரிகை பணியை ஆரம்பித்தது பெண்கள் பத்திரிகை நிருபராகத்தான். அப்போது என்னுடைய சிற்றிதழ் படிக்கும் பழக்கம் சக ஊழியர்களிடையே கேலிக்குரிய விஷயமாக இருந்தது. சமையல் குறிப்பு எழுதுவதற்கு எதற்கு இலக்கியம் படிக்க வேண்டும்? மற்றவர்கள் குறித்து எனக்குத் தெரியாது… என்னுடைய எழுத்தும் சிந்தனையும் மேம்பட்டதற்கு சிற்றிதழ்களின் பங்கு கணிசமானது.
சில வருடங்களுக்கு முன்பு பல நல்ல படைப்புகளைத் தாங்கி வந்த சிறுபத்திரிகைகள், இன்று இடைநிலை பத்திரிகைகளாக வளர்ந்துள்ளன. வரவேற்கத் தகுந்த மாற்றம்தான் எனினும் இந்த பத்திரிகைகள் சில சமயம், ஆங்கில பதிப்பகங்கள் மாதந்தோறும் வெளியிடும் புக்லெட்டுகளைப் போல இருக்கின்றன். இந்த பத்திரிகையில் இன்னின்னார்தான் எழுதுவார் என ஆரம்ப கட்ட வாசகனுக்கும் புரிந்துவிடும் அளவுக்கு, திரும்பதிரும்ப ஒருசிலரே எழுதுகிறார். பத்திரிகைகளே பதிப்பகம் நடத்துவது காரணமாக இருந்தாலும் ஒரே வகையான எழுத்துகளைப் படிக்க அலுப்புத் தட்டுகிறது. சில இதழ்களை படிப்பதையே நிறுத்திவிட்டேன்.
இடைநிலை விட்ட இடத்தை நிரப்பும் விதமாக புதுவிசை, உன்னதம் போன்ற இதழ்கள் காத்திரமான பொருட்செறிவுடன் வருகின்றன. தலித்தியம், பெண்ணியம், மொழிபெயர்ப்பு, புதிய எழுத்தாளர்களின் படைப்புகள் என எதிர்பார்ப்புகள் வீண்போகாத அளவுக்கு விஷயங்களைத் தாங்கி வருகின்றன. இதுபோன்ற இதழ்களுக்கு பொருளாதார பின்புலம் என்று சொல்லிக்கொள்ள பெரிதாக ஒன்றுமில்லை என்பது குறிப்பிடத்தகுந்தது. உன்னதம் இதழைக் கொண்டுவர கெளதமசித்தார்த்தன் நிலங்களை விற்றுவிட்டதாக கேள்வி. ஆதவன்தீட்சண்யாவும் தன் கைகாசிலேயே செய்கிறார், சில சமயம் நண்பர்கள் உதவக்கூடும். புதுவிசை காலாண்டு இதழாக வந்து கொண்டிருக்கிறது. உன்னதம் பண இருப்பைப் பொறுத்து…
இந்த இதழ் உன்னதம் (ஏப்ரல் 09) சாதியும் அரசியலும் சிறப்பு இதழாக வந்திருக்கிறது. சாதி குறித்த தற்கால இருப்பை அறிந்து கொள்ள படித்தாகவேண்டிய இதழ்.
உன்னதம்ஆலந்தூர் அஞ்சல்
கவுந்தப்பாடி-638455
ஈரோடு மாவட்டம்
புதுவிசை (ஏப்ரல் – ஜூன் 09) நடராசா சுசீந்திரனின் விரிவான நேர்காணலும் கோ.ரகுபதி எழுதிய தலித் மீதான வன்முறையில் இந்துத்துவம் என்ற கட்டுரையும் முக்கியமானவை.
புதுவிசை
பி-2 டெலிகாம் குடியிருப்பு
ஓசூர்-635109
தொலைபேசி: 04344 244933

