சிற்றிதழ்களை ஏன் படிக்க வேண்டும்..? மே 7, 2009
Posted by மு.வி.நந்தினி in உன்னதம், சிற்றிதழ் அறிமுகம், புதுவிசை.Tags: இந்துத்துவம், உன்னதம், சாதியின் அரசியல், சிற்றிதழ், சிற்றிதழ் அறிமுகம், தலித்தியம், நடராசா சுசீந்திரன், புதுவிசை, பெண்ணியம்
10 comments
வெகுஜன பத்திரிகைகள் மூலமாகத்தான் எனக்கு சிற்றிதழ்கள் அறிமுகமானது. கல்லூரி படிப்பை முடிக்கும் வரையில் பெயர்களை மட்டுமே அறிந்து வைத்திருந்தேன். தினமணி இதழில் சில நாள் பயிற்சியின் நண்பனாகிப்போன தனபால் சிங், புக்லேண்ட்டுக்கு அழைத்துப்போய் சிற்றிதழ் உலகத்தை காண்பித்தவன். தொடக்க காலங்களில் சிற்றிதழ்கள் படிக்கும்போது என்ன இப்படியெல்லாம் எழுதுகிறார்கள் என்று தோன்றியதுண்டு. (ஆரம்பகால சிற்றிதழ் வாசகர் அத்தனை பேருக்கும் இந்த அனுபவம் இருக்கும் என நினைக்கிறேன்) பிறகு படிக்கப்படிக்க எண்ணத்தில் தெளிவு வந்தது. நான் பத்திரிகை பணியை ஆரம்பித்தது பெண்கள் பத்திரிகை நிருபராகத்தான். அப்போது என்னுடைய சிற்றிதழ் படிக்கும் பழக்கம் சக ஊழியர்களிடையே கேலிக்குரிய விஷயமாக இருந்தது. சமையல் குறிப்பு எழுதுவதற்கு எதற்கு இலக்கியம் படிக்க வேண்டும்? மற்றவர்கள் குறித்து எனக்குத் தெரியாது… என்னுடைய எழுத்தும் சிந்தனையும் மேம்பட்டதற்கு சிற்றிதழ்களின் பங்கு கணிசமானது.
சில வருடங்களுக்கு முன்பு பல நல்ல படைப்புகளைத் தாங்கி வந்த சிறுபத்திரிகைகள், இன்று இடைநிலை பத்திரிகைகளாக வளர்ந்துள்ளன. வரவேற்கத் தகுந்த மாற்றம்தான் எனினும் இந்த பத்திரிகைகள் சில சமயம், ஆங்கில பதிப்பகங்கள் மாதந்தோறும் வெளியிடும் புக்லெட்டுகளைப் போல இருக்கின்றன். இந்த பத்திரிகையில் இன்னின்னார்தான் எழுதுவார் என ஆரம்ப கட்ட வாசகனுக்கும் புரிந்துவிடும் அளவுக்கு, திரும்பதிரும்ப ஒருசிலரே எழுதுகிறார். பத்திரிகைகளே பதிப்பகம் நடத்துவது காரணமாக இருந்தாலும் ஒரே வகையான எழுத்துகளைப் படிக்க அலுப்புத் தட்டுகிறது. சில இதழ்களை படிப்பதையே நிறுத்திவிட்டேன்.
இடைநிலை விட்ட இடத்தை நிரப்பும் விதமாக புதுவிசை, உன்னதம் போன்ற இதழ்கள் காத்திரமான பொருட்செறிவுடன் வருகின்றன. தலித்தியம், பெண்ணியம், மொழிபெயர்ப்பு, புதிய எழுத்தாளர்களின் படைப்புகள் என எதிர்பார்ப்புகள் வீண்போகாத அளவுக்கு விஷயங்களைத் தாங்கி வருகின்றன. இதுபோன்ற இதழ்களுக்கு பொருளாதார பின்புலம் என்று சொல்லிக்கொள்ள பெரிதாக ஒன்றுமில்லை என்பது குறிப்பிடத்தகுந்தது. உன்னதம் இதழைக் கொண்டுவர கெளதமசித்தார்த்தன் நிலங்களை விற்றுவிட்டதாக கேள்வி. ஆதவன்தீட்சண்யாவும் தன் கைகாசிலேயே செய்கிறார், சில சமயம் நண்பர்கள் உதவக்கூடும். புதுவிசை காலாண்டு இதழாக வந்து கொண்டிருக்கிறது. உன்னதம் பண இருப்பைப் பொறுத்து…
இந்த இதழ் உன்னதம் (ஏப்ரல் 09) சாதியும் அரசியலும் சிறப்பு இதழாக வந்திருக்கிறது. சாதி குறித்த தற்கால இருப்பை அறிந்து கொள்ள படித்தாகவேண்டிய இதழ்.
உன்னதம்ஆலந்தூர் அஞ்சல்
கவுந்தப்பாடி-638455
ஈரோடு மாவட்டம்
புதுவிசை (ஏப்ரல் – ஜூன் 09) நடராசா சுசீந்திரனின் விரிவான நேர்காணலும் கோ.ரகுபதி எழுதிய தலித் மீதான வன்முறையில் இந்துத்துவம் என்ற கட்டுரையும் முக்கியமானவை.
புதுவிசை
பி-2 டெலிகாம் குடியிருப்பு
ஓசூர்-635109
தொலைபேசி: 04344 244933
லக்ஷ்மணானந்தா கொலையை துப்பு துலக்கினார் குருசாமி! ஏப்ரல் 13, 2009
Posted by மு.வி.நந்தினி in அரசியல், இந்துத்துவம், ஒரிசா, கந்தமால், பழங்குடிகள், பா.ஜ.க. வேட்பாளர், லக்ஷ்மணானந்தா கொலை.Tags: இந்துத்துவம், கந்தமால், பா.ஜ.க. வேட்பாளர், லக்ஷ்மணானந்தா கொலை
8 comments

ஒரிசாவில் இந்துத்துவம் - பின்னணி
ஒரிசாவின் கந்தமால் மாவட்டம் ‘இந்துத்துவ‘ தீவிரவாதத்திற்கு உதாரணமாகும் சிறப்புத் தகுதி உடையது. காலங்காலமாக சமூகத்தில் ஒடுக்கப்பட்டு வாழும் தலித்துகளும் பழங்குடிகளும் இம்மாவட்ட மக்கள். கிறித்துவ மிஷனரிகள் தலித், பழங்குடிகள் மத்தியில் பணியாற்றிவருகிறார்கள். விளைவாக மதமாற்றங்களும் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. பழங்குடிகள் கிறித்துவர்களாக மாறும்போது பழங்குடிகளுக்குண்டான அரசாங்க உரிமைகள் அத்தனையும் கிடைக்கும் என்பதும் தலித்துகள் கிறித்துவர்களாக மாறும் தலித்துகளுக்குரிய உரிமைகள் இல்லை, அதனால் மிஷனரிகள் பிரத்யேக உரிமைகளை தலித்துகளுக்குப் பெற்றுத்தர முயற்சித்தார்கள் என்பதும் இங்கு தலித்-பழங்குடிகளிடையே புகைச்சல் ஏற்பட்டதன் பின்னணி. இதை ஆர்.எஸ்.எஸ், விஷ்வ ஹிந்து பரிஷத், பா.ஜ.க போன்ற இந்துத்துவ சக்திகள் பயன்படுத்திக் கொண்டன. இந்த புகைச்சலை ஊதிப்பெரிதாக்கிள எரிய விட்டு வேடிக்கைப் பார்க்க ஆரம்பித்தன். 1994 முதல் தலித்-பழங்குடி மோதல் கிறித்துவர்கள்-இந்துக்கள் இடையேயான மோதலாக உருவெடுத்தது. விஷ்வ ஹிந்து பரிஷத்,ஆஸ்ரமங்கள் என்ற பெயரில் கந்தாஸ் பழங்குடி இன மக்களை வன்முறையாளர்களாக இந்துத்துவ ரவடிகளாக மாற்றத் தொடங்கியது. இதில் முக்கியமானவர் லக்ஷ்மாணனந்தா சாமியார் 1960களிலே கர சேவை செய்வதற்காக கந்தமால் மாவட்டத்தில் ஆசிரமம் அமைத்தவர். கிறித்துவத்துக்கு மாறும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிராக பழங்குடி மக்களை இந்துத்துவ விஷத்தை ஊட்டி ஏவி விட்டுக்கொண்டிருந்தவர். கிறித்துவதுக்கு மதம் மாறிய தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி மக்களை ‘தாய்‘ மதத்திற்கு திருப்புவதுதான் பல பத்தாண்டுகளாக இவர் செய்து வந்த குறிப்பிடத்தகுந்த மற்றொரு வேலை!
கிறிஸ்துமசுக்கு முன் தினமான டிசம்பர் 24, 2007ல் சதாரணமாக இருதரப்பினருக்கிடையே ஆரம்பித்த வாய்ச்சண்டை கிறித்துவ தலித்துகளுக்கு எதிராக பெரும் கலவரமாக வெடித்தன் பின்னணியில் லக்ஷ்மணானந்தா சாமியார் இருந்ததாக கைகாட்டுகிறார்கள். சர்ச்சுகளுக்கு முன்பு தலித் கிறித்துவர்கள் உயிரேடு கொலுத்தப்பட்டது, கிராமம் கிராமமாக கிறித்துவர்களின் வீடுகள்,இருந்த சுவடே தெரியாமல் அடித்து நொறுக்கப்பட்டது, குழந்தை,பெண்கள் உள்பட பல கிறித்துவர்கள் தேடிக் கொல்லப்பட்டது என வன்முறைகள் ‘இந்துத்துவ‘ தீவிரவாதிகளால் திட்டமிட்டு கட்டவிழ்க்கப்பட்டன. (தலையில் காவித்துணி கட்டி, இரண்டு கைகளும் வாள் ஏந்தி விண்ணை அதிரவைக்கும்படி கூவிக்கொண்டு வன்முறையை காட்டிய ஒரு ‘காவித்தொண்ட‘ரின் புகைப்படம் அத்தனை நாளிதழ்களின் முதல் பக்கத்தில் வந்தது நினைவிருக்கலாம்!) பா.ஜ.க ஆதரவோடு ஆட்சியை அலங்கரித்துக்கொண்டிருந்த நவீன் பட்நாயக் அரசு வன்முறையை தடுத்து நிறுத்தும் நோக்கில் எதுவும் செய்யவில்லை, கைகட்டி வேடிக்கைப் பார்த்தது. அந்த தாக்குதலின் போது சேதமான வீடுகள்கூட இன்னும் அங்கே சீரமைக்கப்படவில்லை.
லக்ஷ்மணானந்தா கொலையை துப்பு துலக்கினார் குருசாமி!
கடந்த வாரம் என்னுடைய தோழியை சந்திப்பதற்காக எத்திராஜ் கல்லூரிக்குச் சென்றிருந்தேன். தோழியை பார்க்க நேரமெடுத்ததில் எதிரே இருந்த ஷாப்பிங் காம்ளக்ஸ்சுக்குள் நுழைந்து பராக்கு பார்த்துக்கொண்டிருந்தபோதுதான் அந்த அடுக்கி வைக்கப்பட்டிருந்த ஜெராக்ஸ் காப்பிகள் கண்ணில் பட்டன. ‘லக்ஷ்மணானந்த படுகொலை - யார் கொலையாளி?’ தலைப்பில் எஸ்.குருமூர்த்தி துக்ளத் பத்திரிகையில் எழுதிய கட்டுரையின் நகல்கள் அவை. அந்தக்கடைக்காரர் காவித்தொண்டர் போலும் இலவச விநியோகம் செய்துகொண்டிருந்தார்.
ஆகஸ்ட் 2008ல் லக்ஷ்மணானந்தா என்ற விஷ்வ ஹிந்து பரிஷத் சாமியார் சுட்டுக்கொலை செய்யப்பட்டதை ஆராய்ந்து எழுதியிருக்கிறார் குருசாமி. கட்டுரையின் சாரம் லக்ஷ்மணானந்தா, ஒரிசாவில் ஆற்றிய தொண்டுகள், அப்பாவியான அவரை கிறித்துவ தீவிரவாத அமைப்புகளும் மாவோயிஸ்டுகளும் சேர்ந்து தீர்த்துக்கட்டினர் என்பதே. அவர் துணைக்கு அழைத்திருந்தது ஒரிசா முன்னாள் டி.ஜி.பி. அசோக் சாகு என்பவரை.
” ‘இந்த(கந்தமால்) தாக்குதலில் ஈடுபட்டவர்கள் எல்லோரும் புதிதாக மதம்மாறிய கிறிஸ்தவர்கள்‘ என்று ஒரிஸ்ஸாவின் முன்னாள் கூடுதல் டி.ஜி.பி. அசோக் சாகு என்பவர் தன்னுடைய கட்டுரையில் எழுதியிருக்கிறார்” என்று தன் கட்டுரையில் குறிப்பிட்டு..

வேட்பாளரைக் காணவில்லை!
இந்துத்துவ தீவிரவாதிகளுக்கு பா.ஜ.கவில் தனித்த இடம் உண்டு. நான்கு சிறுபான்மையினரை வெட்டிக்கொன்றால் அல்லது 40 சிறுபான்மையினர் வீடுகள் நாசமா போகக்காரணமாக இருந்தால் இந்தா புடி எம்.பி சீட்டு என்று வெளியே சொல்லப்படாத சட்டம் இருக்கும்போல. போன மாதம்தான் குஜராத் கலவரத்தில் தேடப்பட்டு வந்த மோடி அமைச்சரவையின் உயர் கல்வித்துறை அமைச்சர் போலீசில் சரணடைந்தார். இப்போது கந்தமால் தொகுதி வேட்பாளர் அசோக் சாகுவைத் தேடுகிறது மாநில போலீஸ். எம்.பி ஆகி அமைச்சர் ஆவதற்குள் விதி விளையாடிவிட்டது. முன்னாள் விஷ்வ ஹிந்து தொண்டரும் ஐபிஎஸ் படித்தவருமான அசோக் சாகு, ஒரிசாவின் குருசாமி! தேடித்தேடி ‘கிறித்துவ‘ பயங்கரவாதம், ‘முஸ்லிம்‘ தீவிரவாதம் என்றெல்லாம் கட்டுரை எழுதுவார். (சங்க் பரிவார் இணைய தளத்தில் இவருடைய கட்டுரைகள் படிக்கக் கிடைக்கும்) எழுதுவதோடு, காவித்தொண்டாற்றுவதோடு நிறுத்திக்கொண்டிருக்கலாம். எம்.பி.சீட்டுக்கு ஆசைப்பட்டு தேர்தல் களத்தில் இறங்கிவிட்டார். போதாத காலம்… தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் இவர் பேசிய ‘எழுச்சியூட்டும் பேச்சு‘(‘லக்ஷ்மணானந்தா சாமிகளை கொன்றது யார்? கொலை செய்தவனுக்குத் தெரியுமா இதற்கு பயங்கரமான பின்விளைவுகள் ஏற்படும் என்று?’) தேர்தல் ஆணைய விதிகளின்படி சர்ச்சைக்குரிய பேச்சாகிவிட்டது. மூன்று பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து கைது செய்ய காவல்துறை காத்திருக்க அப்ஸ்கான்ட் ஆகிவிட்டார் அசோக் சாகு!
இப்படிப்பட்ட மதிப்பிற்குரியவர் எழுதிய கட்டுரைகளைத் தோண்டித்துருவி ஆராய்ந்து கந்தமால் மக்களின் ரட்சகர்களாக காவித்தொண்டர்களை முன்னிறுத்த கட்டுரை எழுதியிருக்கிறார் குருசாமி. அப்பட்டமான மத படுகொலைகளுக்குப் பின்னணியில் இருக்கும் உண்மையை மூடிமறைக்கப் பார்க்கிறது காவித்துணி. இப்போதைக்கு அது கிழிந்து தொங்கிக்கொண்டிருக்கிறது!