jump to navigation

இலங்கை தமிழர் பிரச்சினையில் இந்திய தமிழர்களின் சாகச மனோநிலை மே 1, 2009

Posted by மு.வி.நந்தினி in ஆயுதப் போராட்டம், இன உணர்வு, இலங்கை தமிழர், ஊடகம், போர்ச்சூழல், விடுதலைப் புலிகள்.
Tags: , ,
add a comment

குடிக்கத் தண்ணி வேணும் என்று இறைஞ்சிய அந்தப் பெரியவரின் முகம் இன்னும் எனக்கு நினைவிலிருக்கிறது. வேகு நேரம் முன்வாசல் கதவுகளைத் தட்டிக்கொண்டிருந்தவருக்கு அந்த வீட்டினர் வேண்டா வெறுப்பாக தண்ணீர் கொடுத்ததற்கும் அவர் சென்று பின் வீட்டை நோட்டம் வீட்டுப்போய் திருட வருவார்கள்என தகவல் சொன்னதற்கும் காரணம் இருந்தது. அவர் இலங்கை தமிழர் என்பதுதான் அந்தக்காரணம். சணல் பையை தோல்களில் மாட்டி நிராதரவாதிக்கான அத்தனை தகுதியோடும் முகாமில் அரசாங்கம் தரும் அரிசியை வாங்கக் கிளம்பிக்கொண்டிருந்த இலங்கை தமிழனை திருடன்என முத்திரையிட்டது இந்திய(?) தமிழன்..100 சதவீதம் சுத்த தமிழ் ரத்தத்தில் பிறந்த தமிழன்! இது நானே நேரில் கண்டது. இலங்கை அகதிகளாக இங்கே தஞ்சம் புகுந்திருக்கும் தமிழர்கள் குறித்தான கண்ணோட்டம் இப்படித்தான் இருக்கிறது. பல்வேறு ஊடகங்களில் தாங்கள் இம்மண்ணில் பட்ட அவமானங்களை அவமதிப்புகளை அகதி முகாமில் இருக்கும் தமிழர்கள் பதிவு செய்திருக்கிறார்கள். அகதி முகாம்களில் இல்லாது தனியாக வீடு எடுத்து தங்கியிருக்கும் சற்றே வசதி படைத்த இலங்கை தமிழர்கள் மீது இந்த கண்ணோட்டம் இல்லை. இலங்கை போரால் மாய்பவர்களும், மாய்வதை மறுத்து அகதியாகவாவது பிழைத்துக் கொள்ளலாம் என திருட்டுப் படகு ஏறுபவர்களும் யார்? விமானத்தில் பறக்க காசில்லாதவர்கள், வறியவர்கள். பொருளாதார பின்புலம் மிக்கவர்கள் வெளிநாடுகளுக்குப் பயணப்பட்டு கடைநிலை மக்களாகவேனும் வாழ்க்கையை நடத்துகிற சூழல் வாய்த்திருக்கிறது, சில ஆண்டுகள் உழைத்தால் வசதிகள், மதிப்புகளும் தேடிவருகின்றன. ஆனால் வறியவர்களின் நிலை என்ன? உறவுகளையும் உடைமைகளையும் இழந்து ஏதுமற்றமற்றவர்களாக இறுதிவரை போரிட்டு உங்களுக்கு தனி ஈழம் பெற்றுத்தருவார்கள் நீங்கள் தமிழர் என்று சொல்லிக்கொண்டு, இந்தியாவிலும் புலம் பெயர்ந்த இடங்களிலும் கேக் வெட்டிக் கொண்டாடுவீர்கள்? இலங்கை தமிழருக்கு ஆதரவு என்ற பெயரில் விடுதலைப் புலிகளுக்கு புழக்கடை வழியாக பண உதவி செய்துகொண்டு புலம்பெயர் நாடுகளில் வாழம் எத்தனைப் பேர் தங்கள் வாரிசுகளை ஆயுதம் தூக்கிப் போராட அனுப்பி வைப்பீர்கள்? வாய்க்கிழிய வீர வசனம் பேசுகிற இந்திய தமிழர்களாகிய நீங்கள், திருட்டுப் படகு ஏறிப்போய் இலங்கை ராணுவத்துடன் நேருக்கு நேர் போரிட வேண்டியதுதானே? இவ்வளவு பேசுகிற நீங்கள் அகதிகளாக இந்தியாவுக்கு வரும் இலங்கைத் தமிழரை எப்படி நடத்துகிறீர்கள்? போர்ச்சூழலில் கணவனை இழந்து கைம்பெண்களாகவும் பெற்றோரை இழந்து அநாதைகளாய் நிற்கும் குழந்தைகளை நீங்கள் நினைத்துப்பார்த்ததுண்டா? குறைந்தபட்சம் அகதி முகாம்களுக்காவது சென்றதுண்டா? இலங்கையில் நடந்துகொண்டிருக்கும் போர் நூற்றாண்டை எட்டினாலும்கூட பரவாயில்லை என்னும் தோணியில் வெளிப்படும் சிலரின் கருத்துகள் ஆழ்மன வன்மைத்தான் காட்டுகின்றன. இதற்கு தமிழ் இன உணர்வு என முலாம் பூசுவது வறியர்களை சுரண்டிப் பிழைக்கும் ஈனச் செயலன்றி வேறில்லை. 37 முத்துக்குமாரர்களின் தற்கொலைக்கு காரணமானதும் இதுதான்.

சிங்கள அரசியல்வாதிகள்தான் இனவெறியர்களாக தமிழர்களை கொன்று குவிக்கிறார்கள் எனில் தமிழன் இன்னொரு தமிழனை கொல்வதை எந்த வகையில் சேர்ப்பது

 

? அப்பாவித் தமிழர்களை கேடயமாகப் பயன்படுத்துவதும், மீறிச் செல்பவர்களை இரக்கமில்லாமல் சுட்டுக்கொல்வதும் இன சுத்திகரிப்புச் செயலா? இதையெல்லாம் மறைத்துவிட்டு நீங்கள் யாருக்காக போரை நிறுத்து என்று கூவிக்கொண்டிருக்கிறீர்கள்? தமிழ் ஊடகங்களில் இத்தகைய வமர்சனங்கள் வெளிவற வாய்ப்பே இல்லை. புலிகள் ஆதரவு இணைய தளங்கள் கொடுக்கும் செய்திதான் இவர்களுடைய செய்தி மூலங்கள். பிறகு எப்படி நியாயமான செய்திகள் தெரிய வரும்? ‘நேற்று நடந்த சண்டையில் 50 புலிகள் இறந்துவிட்டனர்என்கிற செய்தி பலரை தூக்கி வாரிப்போடுகிறது. உடனே செய்தி வெளியிட்ட ஊடகத்திடம் எப்படி நீங்கள் இந்த செய்தியை வெளியிடலாம் என்கிறார்கள். சமீபத்தில் புலிகள் ஆயுதங்களை கீழே போட்டு அமைதிப்பேச்சுக்கு வரவேண்டும் என்று அமெரிக்கா விட்டிருந்த அறிக்கையை வெளியிட்டதற்காக குறிப்பிட்ட அந்த ஊடகத்திற்கு தமிழகத்தின் மூத்த புலிகள் ஆதரவாளரிடமிருந்து தொலைபேசி அழைப்பு போயிருக்கிறது. இந்த ஆதரவாளர்களின் நிலையெல்லாம் புலிகள் பலியாகிறார்களே என்கிற கரிசனம் அல்ல.. புலிகள் இல்லையென்றால் ஒட்டுமொத்த போராட்டமே இல்லை, புலிகள் எந்த நிலையிலும் தங்கள் நிலையை விட்டு கீழிறங்கி வரக்கூடாது என்று இவர்களாக கட்டமைக்கும் ஹீரோயிசம்தான் பின்னணி காரணங்கள். இலங்கையில் ஆயுதம் தாங்கிய போராட்டம் 1970க்கு முன்பிருந்தே நடந்துகொண்டிருக்கிறது. 1970களுக்குப் பிறகு பெரிய அளவில் பரவியது என ஈழப்போராட்த்தின் முன்னோடிகளில் ஒருவரான, மறைந்த சி.புஷ்பராஜா பதிவு செய்திருக்கிறார். சக போராளிக்குழுக்களை எப்படி திட்டமிட்டு விடுதலைப் புலிகள் அழித்தார்கள் என்பதையும் சி.புஷ்பராஜா தன்னுடைய ஈழப்போராட்டத்தில் எனது சாட்சியம் என்ற நூலில் விரிவாகவே பேசியிருக்கிறார்.

என்னுடைய நோக்கம் விடுதலைப் புலிகளை விமர்சிப்பதல்ல, அதற்கான நேரமும் இதுவல்ல என்று எனக்குத் தெரியும். வெறுமனே போர் நிறுத்தத்தை மட்டுமே எத்தனை காலத்துக்கு பேசுவீர்கள் என்ற ஆதங்கத்தின் அடிப்படையிலே நிரந்தர அமைதிக்கான வழிகள் குறித்து பேசுங்கள் என எழுதினேன். உலகில் நடக்கும் எந்தவொரு போராட்டத்தையும் மற்றொரு போராட்டத்துடன் ஒப்பிட முடியாது. நேளாப சூழலுடன் இலங்கை சூழலை ஒப்பிடவில்லை. அதிலிருந்து கற்க விஷயங்கள் உண்டு என்பதையே வலியுறுத்துகிறேன். புதிய புத்தகம் பேசுது இதழுக்கு அளித்த நேர்காணலில் அ.மார்க்ஸ் இதை தெளிவாக சொல்லியிருக்கிறார். கீற்றுவில் வெளியான அவருடைய நேர்காணலைப் படிக்க இங்கே சொடுக்கவும்.

ஈழத்தமிழர் போராட்டத்தையும் இன்னல்களையும் மலிவான அரசியலுக்காகப் பயன்படுத்தும் தமிழக அரசியல்வாதிகளைப்போல சாகச மனநிலையில் அணுகும் பெருங்கும்பல்கள் தமிழகத்திலும் புலம்பெயர்ந்த இடங்களில் இருக்கிறது என்ற ஷோபா சக்தியின் கூற்றை இங்கே நினைவுபடுத்துகிறேன்

 

உங்கள் சாகச மனோநிலைக்கு இன்னும் பல அப்பாவிகளை பலியாக்க விரும்புகிறீர்கள். ஈழத்தமிழர்களின் அடிப்படை மனிதாபிமான பிரச்சினைகளை ஏன் பார்க்க மறுக்கிறீர்கள்? இனப்படுகொலையைவிட இதுதான் கொடியது!

இறுதியாகஎனக்கும் போதாமைகள் இருக்கலாம். ஆனால் அடிப்படைக்கூட தெரியாமல் எழுத எப்போதும் நான் முயற்சித்தது கிடையாது. தெரியாத விஷயங்களை எழுதுவதும் கிடையாது. தமிழனாக அல்லது இலங்கை தமிழனாக பிறந்து வாழந்தால் மட்டுமே இலங்கை தமிழர் பிரச்சினை குறித்து பேச தகுதியாக நீங்கள் வரையறுத்து வைத்திருக்கலாம். ஆனால் பேசுவது மனிதாபிமான அடிப்படையில். அதற்கு மனிதன் என்பதைவிட வேறு எந்த தகுதிகளும் தேவையில்லை!

இலங்கை தமிழர் பிரச்சினையும் சுரணையற்ற மனிதர்களை உற்பத்தி செய்யும் கல்விக்கூடங்களும்! மார்ச் 5, 2009

Posted by மு.வி.நந்தினி in அரசியல், இலங்கை தமிழர், கல்விக்கூடங்கள், குழந்தைகள், சமூகம், சுகிதா, தமிழ், தீட்சண்யா, மாறுவேடப்போட்டி.
Tags: ,
7 comments

20071112503903012க பத்திரிகையாளரும் என்னுடைய தோழியுமான சுகிதா,இரண்டு வாரங்களுக்கு முன் நண்பர்கள் எல்லோரையும் தன் மகள் தீட்சண்யாவின் பள்ளி ஆண்டுவிழாவைக் காண வருமாறு அழைத்திருந்தார். மழலையர் பள்ளியில் படித்துக்கொண்டிருக்கும் இரண்டரை வயது தீட்சண்யா மறுவேடப்போட்டியில் கலந்துகொள்ளப்போவதாகக் கூறி,நேரில் வந்து அவளை உற்சாகப்படுத்தும்படி சொல்லியிருந்தார். சுகிதா இது போன்ற போட்டிகளிலெல்லாம் விருப்பம் அற்றவர். மாறுவேடப்போட்டி என்று பெயரிருந்தாலும் கலந்துகொள்ளும் அனைத்து குழந்தைகளும் வெற்றிப்பெற்றவர்களாகவே கருதப்படுவர் என பள்ளியின் நிர்வாகத்தரப்பு உறுதியாகச் சொன்னதன் பேரில் தீட்சண்யாவின் பெயரை பதிவு செய்திருக்கிறார். மாறுவேடப்போட்டி என்றதும் தங்களுடைய குழந்தைகளை திருவள்ளுவர், விவேகானந்தர் போன்று வேடமிட்டு மழலைத் தத்துவங்களை உளற வைப்பதிலும் கடவுளர் வேடமிட்டு மத விஷத்தை பிஞ்சிலே ஆழப்பதிய வைக்கும் பெற்றோர்களுக்கு மத்தியில், சுகி ரொம்பே விலகி நின்று சிந்தித்து விட்டார். போர்ச்சூழல் குழந்தைகளை எவ்வகையில் பாதிக்கிறது என்பதை சக பெற்றோருக்கும் விழா பார்வையாளர்களுக்கும் உணர்த்த, தன் குழந்தையை இலங்கை போரில் பாதிக்கப்பட்ட குழந்தையைப்போன்று வேடமிடப்போவதாக எங்களிடன் சொல்லியிருந்தார். அவருடைய முயற்சிக்கு நேரில் வாழ்த்துக்கூற நண்பர்கள் கிளம்பினோம். சாலிக்கிராமத்தில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் ஆண்டுவிழா களைகட்டியிருந்தது. சரியாக நாங்கள் உள்ளே நுழைந்த நேரம் தீட்சண்யா மேடையை விட்டு இறங்கிக் கொண்டிருந்தார். எப்போதும் உற்சாகத்தோடு பார்த்து பழகிய சுகியின் முகத்தில் அன்றுதான் முதல்முறையாக சோர்வைக் கண்டேன். தீட்சண்யா மேடையேறியதைக் காணாவிட்டாலும் மற்ற குழந்தைகளின் மழலைப்பேச்சுக்களை சிறுது நேரம் கேட்டுக்கொண்டிருந்தோம். வழக்கம்போல ஓளவையார்,திருவள்ளுவர்,விவேகானந்தர்,முருகன்,சிவன்,கூடவே உலக அழகி வேடமிடப்பட்ட குழந்தைகள்…அதற்கு மேல் எங்களுக்கு பொறுமையில்லை. எல்லோருக்கும் பரிசு என்று சொல்லியிருந்த .பள்ளி நிர்வாகம் 6 குறளை ஒப்பித்த ஒரு குழுந்தைக்கு முதல் பரிசு என்று அறிவித்தது. அடுத்தடுத்த பரிசுகளும் இப்படியாக நீதிபோதனை,ஆன்மிக குப்பைகளை ஒப்பித்த குழந்தைகளுக்கு அறிவித்துக்கொண்டிருந்தபோது தோழியின் வீட்டுக்குப்போக நாங்கள் ஆட்டோ பிடித்துக்கொண்டிருந்தோம்.தோழியின் முக வாட்டத்திற்கான காரணமும் எங்களுக்கு புரிந்துபோனது.

நடந்ததை சொல்ல ஆரம்பித்தார் சுகி…விழா நிகழ்ச்சியை தொகுத்துக் கொண்டிருந்த தொகுப்பாரிடம் இலங்கையில் நடக்கும் பிரச்சினை குறித்து இரண்டு வரி அறிமுகத்தை தமிழில் பேசுமாறு சொல்லியிருக்கிறார் தோழி. மீண்டும் மீண்டும் வலியுறுத்தியும் அவர் ஆங்கிலத்திலேயே பேசியிருக்கிறார். நிர்வாகத் தரப்பில் கூறப்பட்ட காரணம் ,அடுத்து இலங்கை தமிழர் மீதான தாக்குதலை,குழந்தைகள் மீதான தாக்குதலை நிறுத்துங்கள் என்று எழுதிக்கொண்டு போயிருந்த பதாகையை மேடையில் வைக்க அனுமதி மறுத்திருக்கிறது கல்விச் சான்றோர்கள் நிரம்பிய அந்த மேடை! இதுகுறித்து விழாவுக்கு வந்திருந்த “தமிழ்” பெற்றோர் எவருக்கும் எந்த புகாரும் இல்லை,வருத்தமுமில்லை. தோழி தனி ஒருவராக மன்றாடிவிட்டு எதுவும் நிகழாத சூழலில் குழந்தையோடு மேடையிலிருந்து இறங்கியிருக்கிறார்.

கல்விக்கூடங்கள் எனும் மூளை மழுங்கடிக்கப்பட்ட மனித உற்பத்தி சாலைகளில் இதுபோன்ற முற்போக்கான சிந்தனைகளுக்கு ஆதரவை எதிர்ப்பார்ப்பது நம் தவறுதான். ஒருபுறம் இலங்கை தமிழருக்காக இங்கிருந்து குரல்கொடுக்கும் தமிழர்களையும் இன்னொரு புறம் எங்கே எது நடந்தால் என்ன என் குழந்தை தங்கிலீஷ் படித்து அமெரிக்கா போனால் சரியென்று கிடக்கிற தமிழர்களையும் ஒருசேர பார்க்க முடிகிறது. இதில் யாரைக்குற்றம் சொல்லியும் பலனில்லை. ஏற்கனவே சமுதாயத்தில் ஊன்றப்பட்டு வேறோடியிருக்கிற ஒரு பிரச்சினைக்கு ஒருவரியில் தீர்ப்பு சொல்லிவி்ட முடியாது. ஆனாலும் குறைந்தபட்ச சமூக சிந்தனைகூட நம் கல்விக்கூடங்களுக்கு ஏன் இல்லாமல் போய்விட்டது என்கிற கேள்வியும் நம்முன் எழத்தான் செய்கிறது…