இறுதியாக… நன்றி! மே 2, 2009
Posted by மு.வி.நந்தினி in ஊடகம்.Tags: ஊடகம்
10 comments
நான் வலைத்தளத்தில் எழுத ஆரம்பித்தது எனக்காக மட்டுமே. எந்வொரு ஊடகத்திலும் குறிப்பிட்ட அந்த ஊடகத்தின் கருத்துக்கும் சட்ட திட்டங்களுக்கும் கட்டுப்பட்டே எழுத வேண்டி இருக்கிறது. அது இங்கே இருக்காது என்பதாலேயே தொடர்ந்தேன். தமிழ்மணமும் ஒரு ஊடக நிறுவனமே என்பது எனக்கு இப்போதுதான் தெரிந்தது. குறைந்தபட்சம் முன் அறிவிப்பை கொடுத்துவிட்டாவது என்னுடைய பதிவை நீக்கியிருக்கலாம். எனினும் என்னை நட்சத்திர பதிவராக தேர்ந்தெடுத்தமைக்கு நான் நிறைவான நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இலங்கை தமிழர் பிரச்சினையில் இந்திய தமிழர்களின் சாகச மனோநிலை மே 1, 2009
Posted by மு.வி.நந்தினி in ஆயுதப் போராட்டம், இன உணர்வு, இலங்கை தமிழர், ஊடகம், போர்ச்சூழல், விடுதலைப் புலிகள்.Tags: இன உணர்வு, இலங்கை தமிழர், ஊடகம்
add a comment
“குடிக்கத் தண்ணி வேணும்“ என்று இறைஞ்சிய அந்தப் பெரியவரின் முகம் இன்னும் எனக்கு நினைவிலிருக்கிறது. வேகு நேரம் முன்வாசல் கதவுகளைத் தட்டிக்கொண்டிருந்தவருக்கு அந்த வீட்டினர் வேண்டா வெறுப்பாக தண்ணீர் கொடுத்ததற்கும் அவர் சென்று பின் ‘வீட்டை நோட்டம் வீட்டுப்போய் திருட வருவார்கள்‘ என தகவல் சொன்னதற்கும் காரணம் இருந்தது. அவர் இலங்கை தமிழர் என்பதுதான் அந்தக்காரணம். சணல் பையை தோல்களில் மாட்டி நிராதரவாதிக்கான அத்தனை தகுதியோடும் முகாமில் அரசாங்கம் தரும் அரிசியை வாங்கக் கிளம்பிக்கொண்டிருந்த இலங்கை தமிழனை ‘திருடன்‘ என முத்திரையிட்டது இந்திய(?) தமிழன்..100 சதவீதம் சுத்த தமிழ் ரத்தத்தில் பிறந்த தமிழன்! இது நானே நேரில் கண்டது. இலங்கை அகதிகளாக இங்கே தஞ்சம் புகுந்திருக்கும் தமிழர்கள் குறித்தான கண்ணோட்டம் இப்படித்தான் இருக்கிறது. பல்வேறு ஊடகங்களில் தாங்கள் இம்மண்ணில் பட்ட அவமானங்களை அவமதிப்புகளை அகதி முகாமில் இருக்கும் தமிழர்கள் பதிவு செய்திருக்கிறார்கள். அகதி முகாம்களில் இல்லாது தனியாக வீடு எடுத்து தங்கியிருக்கும் சற்றே வசதி படைத்த இலங்கை தமிழர்கள் மீது இந்த கண்ணோட்டம் இல்லை. இலங்கை போரால் மாய்பவர்களும், மாய்வதை மறுத்து அகதியாகவாவது பிழைத்துக் கொள்ளலாம் என திருட்டுப் படகு ஏறுபவர்களும் யார்? விமானத்தில் பறக்க காசில்லாதவர்கள், வறியவர்கள். பொருளாதார பின்புலம் மிக்கவர்கள் வெளிநாடுகளுக்குப் பயணப்பட்டு கடைநிலை மக்களாகவேனும் வாழ்க்கையை நடத்துகிற சூழல் வாய்த்திருக்கிறது, சில ஆண்டுகள் உழைத்தால் வசதிகள், மதிப்புகளும் தேடிவருகின்றன. ஆனால் வறியவர்களின் நிலை என்ன? உறவுகளையும் உடைமைகளையும் இழந்து ஏதுமற்றமற்றவர்களாக இறுதிவரை போரிட்டு உங்களுக்கு தனி ஈழம் பெற்றுத்தருவார்கள் நீங்கள் தமிழர் என்று சொல்லிக்கொண்டு, இந்தியாவிலும் புலம் பெயர்ந்த இடங்களிலும் கேக் வெட்டிக் கொண்டாடுவீர்கள்? இலங்கை தமிழருக்கு ஆதரவு என்ற பெயரில் விடுதலைப் புலிகளுக்கு புழக்கடை வழியாக பண உதவி செய்துகொண்டு புலம்பெயர் நாடுகளில் வாழம் எத்தனைப் பேர் தங்கள் வாரிசுகளை ஆயுதம் தூக்கிப் போராட அனுப்பி வைப்பீர்கள்? வாய்க்கிழிய வீர வசனம் பேசுகிற இந்திய தமிழர்களாகிய நீங்கள், திருட்டுப் படகு ஏறிப்போய் இலங்கை ராணுவத்துடன் நேருக்கு நேர் போரிட வேண்டியதுதானே? இவ்வளவு பேசுகிற நீங்கள் அகதிகளாக இந்தியாவுக்கு வரும் இலங்கைத் தமிழரை எப்படி நடத்துகிறீர்கள்? போர்ச்சூழலில் கணவனை இழந்து கைம்பெண்களாகவும் பெற்றோரை இழந்து அநாதைகளாய் நிற்கும் குழந்தைகளை நீங்கள் நினைத்துப்பார்த்ததுண்டா? குறைந்தபட்சம் அகதி முகாம்களுக்காவது சென்றதுண்டா? இலங்கையில் நடந்துகொண்டிருக்கும் போர் நூற்றாண்டை எட்டினாலும்கூட பரவாயில்லை என்னும் தோணியில் வெளிப்படும் சிலரின் கருத்துகள் ஆழ்மன வன்மைத்தான் காட்டுகின்றன. இதற்கு தமிழ் இன உணர்வு என முலாம் பூசுவது வறியர்களை சுரண்டிப் பிழைக்கும் ஈனச் செயலன்றி வேறில்லை. 37 முத்துக்குமாரர்களின் தற்கொலைக்கு காரணமானதும் இதுதான்.
? அப்பாவித் தமிழர்களை கேடயமாகப் பயன்படுத்துவதும், மீறிச் செல்பவர்களை இரக்கமில்லாமல் சுட்டுக்கொல்வதும் இன சுத்திகரிப்புச் செயலா? இதையெல்லாம் மறைத்துவிட்டு நீங்கள் யாருக்காக போரை நிறுத்து என்று கூவிக்கொண்டிருக்கிறீர்கள்? தமிழ் ஊடகங்களில் இத்தகைய வமர்சனங்கள் வெளிவற வாய்ப்பே இல்லை. புலிகள் ஆதரவு இணைய தளங்கள் கொடுக்கும் செய்திதான் இவர்களுடைய செய்தி மூலங்கள். பிறகு எப்படி நியாயமான செய்திகள் தெரிய வரும்? ‘நேற்று நடந்த சண்டையில் 50 புலிகள் இறந்துவிட்டனர்‘ என்கிற செய்தி பலரை தூக்கி வாரிப்போடுகிறது. உடனே செய்தி வெளியிட்ட ஊடகத்திடம் எப்படி நீங்கள் இந்த செய்தியை வெளியிடலாம் என்கிறார்கள். சமீபத்தில் புலிகள் ஆயுதங்களை கீழே போட்டு அமைதிப்பேச்சுக்கு வரவேண்டும் என்று அமெரிக்கா விட்டிருந்த அறிக்கையை வெளியிட்டதற்காக குறிப்பிட்ட அந்த ஊடகத்திற்கு தமிழகத்தின் மூத்த புலிகள் ஆதரவாளரிடமிருந்து தொலைபேசி அழைப்பு போயிருக்கிறது. இந்த ஆதரவாளர்களின் நிலையெல்லாம் புலிகள் பலியாகிறார்களே என்கிற கரிசனம் அல்ல.. புலிகள் இல்லையென்றால் ஒட்டுமொத்த போராட்டமே இல்லை, புலிகள் எந்த நிலையிலும் தங்கள் நிலையை விட்டு கீழிறங்கி வரக்கூடாது என்று இவர்களாக கட்டமைக்கும் ஹீரோயிசம்தான் பின்னணி காரணங்கள். இலங்கையில் ஆயுதம் தாங்கிய போராட்டம் 1970க்கு முன்பிருந்தே நடந்துகொண்டிருக்கிறது. 1970களுக்குப் பிறகு பெரிய அளவில் பரவியது என ஈழப்போராட்த்தின் முன்னோடிகளில் ஒருவரான, மறைந்த சி.புஷ்பராஜா பதிவு செய்திருக்கிறார். சக போராளிக்குழுக்களை எப்படி திட்டமிட்டு விடுதலைப் புலிகள் அழித்தார்கள் என்பதையும் சி.புஷ்பராஜா தன்னுடைய ஈழப்போராட்டத்தில் எனது சாட்சியம் என்ற நூலில் விரிவாகவே பேசியிருக்கிறார்.
என்னுடைய நோக்கம் விடுதலைப் புலிகளை விமர்சிப்பதல்ல, அதற்கான நேரமும் இதுவல்ல என்று எனக்குத் தெரியும். வெறுமனே போர் நிறுத்தத்தை மட்டுமே எத்தனை காலத்துக்கு பேசுவீர்கள் என்ற ஆதங்கத்தின் அடிப்படையிலே நிரந்தர அமைதிக்கான வழிகள் குறித்து பேசுங்கள் என எழுதினேன். உலகில் நடக்கும் எந்தவொரு போராட்டத்தையும் மற்றொரு போராட்டத்துடன் ஒப்பிட முடியாது. நேளாப சூழலுடன் இலங்கை சூழலை ஒப்பிடவில்லை. அதிலிருந்து கற்க விஷயங்கள் உண்டு என்பதையே வலியுறுத்துகிறேன். புதிய புத்தகம் பேசுது இதழுக்கு அளித்த நேர்காணலில் அ.மார்க்ஸ் இதை தெளிவாக சொல்லியிருக்கிறார். கீற்றுவில் வெளியான அவருடைய நேர்காணலைப் படிக்க இங்கே சொடுக்கவும்.
. உங்கள் சாகச மனோநிலைக்கு இன்னும் பல அப்பாவிகளை பலியாக்க விரும்புகிறீர்கள். ஈழத்தமிழர்களின் அடிப்படை மனிதாபிமான பிரச்சினைகளை ஏன் பார்க்க மறுக்கிறீர்கள்? இனப்படுகொலையைவிட இதுதான் கொடியது!
இறுதியாக…எனக்கும் போதாமைகள் இருக்கலாம். ஆனால் அடிப்படைக்கூட தெரியாமல் எழுத எப்போதும் நான் முயற்சித்தது கிடையாது. தெரியாத விஷயங்களை எழுதுவதும் கிடையாது. தமிழனாக அல்லது இலங்கை தமிழனாக பிறந்து வாழந்தால் மட்டுமே இலங்கை தமிழர் பிரச்சினை குறித்து பேச தகுதியாக நீங்கள் வரையறுத்து வைத்திருக்கலாம். ஆனால் பேசுவது மனிதாபிமான அடிப்படையில். அதற்கு மனிதன் என்பதைவிட வேறு எந்த தகுதிகளும் தேவையில்லை!
சிபிகாவின் ரெண்டாவது பிரசவம்! மே 6, 2008
Posted by மு.வி.நந்தினி in environment.Tags: ஊடகம், cat, home
6 comments
நாடோடிகளைப் போன்றதொரு வாழ்க்கைதான் சென்ற ஆண்டுவரை எங்களுக்கு வாய்த்திருந்தது. நான் கனவிலும் நினைத்துப்பார்க்கவில்லை, எங்களுக்கென்றே ஒரு வீடு கிடைக்குமென்று. 2006ல்தான் எங்களுடைய பூர்வீகத்துக்கு நாங்கள் திரும்பினோம். அப்போதும் வாடகை வீடுதான். எந்த திட்டமிடலும் இல்லாமல் ஏதோ அற்புதம் நடந்தமாதிரி வீடு கட்டுமளவு நிலம் வாங்கினோம். அது விளைநிலம். மனைபோட்டு விற்றிருக்கிறார்கள். அலுவலக வேலைக்கு செல்பவராக இருக்கும் என் அம்மாவும் வியாபாரியாக இருக்கும் என் அப்பாவும் இன்னமும் விவசாயிகள்தான்! அந்த நிலத்தில் உடனடியாக வீடு கட்டாமல், கத்தரி, மிளகாய், வெங்காயம் என சில காய்கறிகளை நட்டிருந்தார்கள். காலை நேரத்தில் என் அப்பா செடிகளுக்கு தண்ணீர் ஊற்றுவார்; மாலை அலுவலகத்திலிருந்து திரும்பியவுடன் என் அம்மா செடிகளை கொத்தி சீராக்குவார். இதற்குள் என் அப்பாவுக்கு மாடு வளர்க்கும் ஆசையும் வந்துவிட்டது. ஒரு எருமை கன்றையும் ஒரு பசுங்கன்றையும் வாங்கி விட்டிருந்தார். கூடவே நான்கு கோழிகளும் வளர்த்து வந்தார். திருப்புமுனையாக நாங்கள் குடியிருந்தவீட்டின் சொந்தக்காரர் தன்னுடைய சொந்த தேவையின் காரணமாக வீட்டை காலி செய்ய சொல்லிவிட்டார். பதினைந்தே வீடுகள் இருந்த அந்த கிராமத்தில் வாடகைக்கு வீடு கிடைத்ததே பெரிய விஷயம். இதில் இன்னொரு வீடு கிடைப்பது சாத்தியமே ஆகாத விஷயம் என்பதால் வீடு கட்டுவதுதான் சரியான தீர்வென முடிவெடுத்தோம். பூக்களுக் பிஞ்சுகளுமாக இருந்த செடிகளை கண்ணீரோடு பிடிங்கி எறிந்ததாக அம்மாவும் அப்பாவும் தொலைபேசியில் சொன்னார்கள். நான் பக்கத்தில் இல்லாதபோது அந்தச் செடிகள்தான் அவர்களுக்கு பெரிய ஆறுதலாக இருந்திருக்கும் என்று நினைக்கிறேன். சில காலம் பக்கத்தில் இருந்த ஒற்றை அறை கொண்ட குடிசையில் அப்பா அம்மா இருந்தார்கள். எப்படியோ இழுத்து இழுத்து ஓராண்டு ஆகியது நாங்கள் வீடு கட்டி முடிக்க. இப்போது எங்கள் வீட்டு தோட்டத்தில் சில வாழை மரங்களும் சில காய்கறி, பூ செடிகளும் உள்ளன. எப்போதும்போல நீர் ஊற்றும் பொறுப்பு என் அப்பாவுடையது. பராமரிக்கும் பொறுப்பு அம்மாவுக்கு. எருமையை அப்பா விற்றுவிட்டார். பசுங்கன்று வளர்ந்து சினையாக இருக்கிறது. அடுத்த மாதம் கன்று ஈனும் என்று சொல்லியிருக்கிறார் அப்பா.
எங்கள் வீட்டில் செல்லப்பிள்ளையாக சிபிகா(பூனைதான்)சுற்றித்திரிந்து கொண்டிருக்கிறாள். என்னைவிட அவள்மேல்தான் பாசம் அதிகம்!(எனக்கு பொறாமை பொறாமையா இருக்கும்) மாட்டுப்பாலும் கருவாடுமாக ராஜ உபசாரம்தான். குட்டி எலியை மட்டும்தான் பிடித்து திண்பாள். அதையும் பிடித்துக்கொன்டு வந்து அப்பா அம்மாவுக்கு காட்டி அதனுடன் கொஞ்சம் ஓடிப்பிடித்து விளையாடிவிட்டுத்தான் ருசிப்பாள். தொலைபேசி மணி அடித்து வீட்டில் யாரும் இல்லையென்றால், எங்கே இருக்கிறார்களோ அங்கே போய் அழைத்துக்கொண்டு வருவாள். அம்மணிக்கு தற்போது ரெண்டாவது பிரசவம் நடந்திருக்கிறது; நார்மல் டெலிவரி..!
நான் இல்லாத குறையை தீர்த்துக்கொண்டிருக்கிறார்கள் இவர்கள். பெற்றோரை பிரிந்திருக்கும் குற்ற உணர்வு ஆட்கொள்ளும் போதும், வெறுமையோடு தனித்திருக்கும்போது என்னுடைய களைப்பை போக்குகிறது இவர்களுடைய நினைப்பு. பசுக்களையும் எருமைகளையும் நாய்களையும் பூனைகளையும் வளர்க்காமல் போயிருந்தால் நிச்சயம் சரிபாதியளவு மனிதர்கள் மனநோயாளிகளைப்போல்தான் திரிந்திருக்கக்கூடுமோ என நினைக்கத்தோன்றுகிறது. ரெண்டு மாதங்களுக்கு ஒரு முறையேனும் நான் நட்டு வைத்த செடிகளை பார்க்கவும் என் வருகையை எதிர்ப்பார்த்திருக்கும் பசு, சிபிகா, கோழிகளை காணவும் வாய்க்காமல் போயிருந்தால் சென்னை வீதிகளில் பைத்தியமாகத்தான் நான் அலைந்திருப்பேன்.
யானையும் பலாமரமும் கூடவே சாதியும April 16, 2008
Posted by மு.வி.நந்தினி in environment.Tags: ஊடகம், கிராமம, intro
11 comments
இருபதாண்டுகளுக்கு முன்பு வரைக்கும் என் கிராமம் தன் சுயமான அடையாளத்துடனே இருந்தது. சுனை நீரை தேக்கி வைத்திருக்கும் பாறைகளும் புதர் படிந்த காடுகளும் சூழ இருந்தது என் கிராமம். ஜுலை மாதங்களில் வானம் பார்த்த பூமியெங்கும் போர்த்தப்பட்டிருக்கும் மஞ்சள் நிற கடுகு பூக்கள் அழகோ அழகு! நீர் வளம் நிறைந்த இடத்தில்கூட அவ்வளவு செழிப்பாக ராகி பயிர் வளர்ந்து நான் பார்த்ததில்லை. இந்த பூமியில் எதைப்போட்டாலும் அது பல மடங்காகி வீடு வந்து சேரும். பலாமரங்களும் பேரிச்சம் மரங்களும் தேக்கு மரங்களும் என் கிராமத்தை இன்னும் வசீகரமாக்கிக் கொண்டிருந்தனர். பக்கத்திலே காடு என்பதால் பலா பழங்களை ருசிக்க யானைகள் எங்கள் வீடுகளுக்கு அருகேயே வந்துவிடும். சற்று தூரத்தில் பலாபழங்களை ருசி பார்த்துக்கொண்டிருக்கும் யானைகளை விரட்ட தீப்பந்தம் ஏந்தியபடி கும்பலாக செல்வார்கள். இதில் ஆச்சர்யமான விஷயம் என்னவென்றால், இப்படி யானைகள் குடியிருப்பு பகுதிகளுக்கு வரக்கூடும் என்று முன்னோர் அறிந்திருந்த படியால் கிராமத்தை பள்ளமான பகுதியில் அமைநத்திருந்தார்கள். கிராமத்துக்குள் நுழைய செங்குத்தாக கீழ்நோக்கி இறங்கி வர வேண்டியிருக்கும். இதேபோல நிலக்கடலை அறுவடையாகும் நேரத்தில் முள்ளம்பன்றிகள் வந்து ருசி பார்த்து, நாங்கள் விளையாட இரண்டு முட்களை தன் உடம்பிலிருந்து உதிர்த்துவிட்டு போகும்.
தமிழகடத்தில் இருந்தாலும் எங்கள் ஊரில் கன்னட மொழி பேசுபவர்கள்தான் வசித்தோம். இரண்டொரு தமிழ் குடும்பத்தினரும் கன்னடமே பேசினார்கள். அய்யந்தாம் வகுப்பு வரை இருந்த பள்ளியிலும் கன்னட மொழி வழிக்கல்விதான் சொல்லித்தரப்பட்டது. அதனால் தமிழ் படிக்க நான் நான்கைந்து கிலோ மீட்டர் தூரத்தில் இருந்த பள்ளிக்கு செல்ல வேண்டியிருந்தது. என்னோட எனக்கு அடுத்த வகுப்பில் படித்துக்கொண்டிருந்த என் நண்பர்களும் வருவார்கள். பெட்ரோல், டீசல் வாசனை நுகர்ந்திராத அந்த மண் சாலையில் நாங்கள் விளையாடிய படிய காட்டுச்செடியில் கனிந்திருக்கும் பழங்களை பறித்து சாப்பிட்டுக்கொண்டு பள்ளி போய் சேருவோம். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு புது ஒற்றையடி பாதையை கண்டுபிடித்துக்கொண்டு சாகச பயணம் செய்வோம். மாம்பழ சீசன் என்றால் சொல்லவே வேண்டாம்.. வழி நெடுக விதவிதமான மாம்பழங்கள் மரங்களிலிருந்து பழுத்து விழுந்து கிடக்கும். விருப்பம் போல அள்ளித் திண்று, மாடுகள் தண்ணீர் குடிக்க வெட்டி வைத்திருக்கும் குளங்களில் கை கழுவுவோம். அந்த காலத்தை நினைத்தாலே இனிக்கிறது!
எங்களுடைய ஒவ்வொரு வீட்டிலும் தோட்டம் இருக்கும். காப்பிச்செடிகளும் செர்ரி மரங்களும் டேரியாவும் டிசம்பர் பூக்களும் பீன்ஸ் செடியும் சிவப்பு, வெள்ளை கொய்யா, சப்போட்டா பழ மரங்களுமாக நிறைந்திருக்கும்.
இவையெல்லாவற்றை எங்கள் கிராமத்தில் இருந்த சாதி முழுங்கிக்கொண்டிருந்தது. கன்னட லிங்காயத்துகளுக்கென தனி வீதியும், இடைநிலை சாதிகளுக்கென தனி வீதியும் தலித்துகளுக்கு தனி வீதியுமாக சாதியின் கனகச்சிதமான அடையாளத்தோடு இருந்தது எங்கள் கிராமம். ஊருக்கு நடுவே இருந்த கிணற்றில் இடைநிலை சாதிக்காரர்களும் லிங்காயத்துகளுமே தண்ணீர் எடுக்கும் ஏகபோக உரிமையைக் கொண்டிருந்தார்கள். தலித்துகள் ஊருக்கு வெளியே இருந்த ஏரியில் தண்ணீர் எடுத்துக்கொண்டிருந்தார்கள். தலித்துகளுக்கு அவரசமாக தண்ணீர் தேவைப்பட்டால் கிணற்றை பயன்படுத்தும் உரிமை பெற்றவர்கள் கிணற்றிலிருந்து தண்ணீர் இறைந்து ஊற்றுவார்கள். நான் கிராமத்தில் வசித்த பத்தாண்டுகாலமும் இந்த எழுதப்படாத விதி எந்த சந்தர்ப்பத்திலும் மீறப்படாமல் இருந்தது.
இடைநிலை சாதிக்காரர்கள் லிங்காயத்துகளின் சமையலறைக்கும் பூஜை அறைக்கும் செல்ல அனுமதிக்கப்படவில்லை. தலித்துகளுக்கான அனுமதியோ எல்லோர் வீடுகளிலும் வாசல் படியோடு நின்றுவிட்டது.
சாதி படிநிலைக்கு ஏற்றபடி தன்னைவிட உயர்சாதியை சேர்ந்தவரை ‘சாமி’ என்றுதான் விளிப்பார் கீழ்சாதி என்று கருதப்பட்டவர். கன்னடர், தெலுங்கர், மராத்தி, தமிழர் என்று பல மொழியினர் சேர்ந்து வசித்த என் கிராமம் திட்டம்போட்டு உருவாக்கியதைப்போல முழுக்க முழுக்க சாதியத்தால் உண்டாக்கப்பட்டிருந்தது. கிராமத்தை விட்டு வந்து 15 வருடங்கள் ஆகிறது. சாதியத்தை உடைக்கும் முயற்சிகள் ஏதேனும் நடந்ததா என்பது பற்றி தெரியவில்லை. சாதி படிநிலை ஒழிந்துபோன என் கிராமத்தை தரிசிக்கவே விரும்புகிறேன். ஆனால் எனக்கு தெரியும் நான் வரும்போது காபி கொடுக்க எனக்காக அங்கே தனியாக ஒரு கோப்பையை எடுத்து வைத்திருப்பார்கள் என்று…