யானையும் பலாமரமும் கூடவே சாதியும

இருபதாண்டுகளுக்கு முன்பு வரைக்கும்  என் கிராமம் தன் சுயமான அடையாளத்துடனே இருந்தது. சுனை நீரை தேக்கி வைத்திருக்கும் பாறைகளும் புதர் படிந்த காடுகளும் சூழ இருந்தது என் கிராமம். ஜுலை மாதங்களில் வானம் பார்த்த பூமியெங்கும் போர்த்தப்பட்டிருக்கும் மஞ்சள் நிற கடுகு பூக்கள் அழகோ அழகு! நீர் வளம் நிறைந்த இடத்தில்கூட அவ்வளவு செழிப்பாக ராகி பயிர் வளர்ந்து நான் பார்த்ததில்லை. இந்த பூமியில் எதைப்போட்டாலும் அது பல மடங்காகி வீடு வந்து சேரும்.  பலாமரங்களும் பேரிச்சம் மரங்களும் தேக்கு மரங்களும் என் கிராமத்தை இன்னும் வசீகரமாக்கிக் கொண்டிருந்தனர். பக்கத்திலே காடு என்பதால் பலா பழங்களை ருசிக்க யானைகள் எங்கள் வீடுகளுக்கு அருகேயே வந்துவிடும். சற்று தூரத்தில் பலாபழங்களை ருசி பார்த்துக்கொண்டிருக்கும் யானைகளை விரட்ட தீப்பந்தம் ஏந்தியபடி கும்பலாக செல்வார்கள். இதில் ஆச்சர்யமான விஷயம் என்னவென்றால், இப்படி யானைகள் குடியிருப்பு பகுதிகளுக்கு வரக்கூடும் என்று முன்னோர் அறிந்திருந்த படியால் கிராமத்தை பள்ளமான பகுதியில் அமைநத்திருந்தார்கள். கிராமத்துக்குள் நுழைய செங்குத்தாக கீழ்நோக்கி இறங்கி வர வேண்டியிருக்கும். இதேபோல நிலக்கடலை அறுவடையாகும் நேரத்தில் முள்ளம்பன்றிகள் வந்து ருசி பார்த்து, நாங்கள் விளையாட இரண்டு முட்களை தன் உடம்பிலிருந்து உதிர்த்துவிட்டு போகும்.
தமிழகடத்தில் இருந்தாலும் எங்கள் ஊரில் கன்னட மொழி பேசுபவர்கள்தான் வசித்தோம். இரண்டொரு தமிழ் குடும்பத்தினரும் கன்னடமே பேசினார்கள். அய்யந்தாம் வகுப்பு வரை இருந்த பள்ளியிலும் கன்னட மொழி வழிக்கல்விதான் சொல்லித்தரப்பட்டது. அதனால் தமிழ் படிக்க நான் நான்கைந்து கிலோ மீட்டர் தூரத்தில் இருந்த பள்ளிக்கு செல்ல வேண்டியிருந்தது. என்னோட எனக்கு அடுத்த வகுப்பில் படித்துக்கொண்டிருந்த என் நண்பர்களும் வருவார்கள். பெட்ரோல், டீசல் வாசனை நுகர்ந்திராத அந்த மண் சாலையில் நாங்கள் விளையாடிய படிய காட்டுச்செடியில் கனிந்திருக்கும் பழங்களை பறித்து சாப்பிட்டுக்கொண்டு பள்ளி போய் சேருவோம். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு புது ஒற்றையடி பாதையை கண்டுபிடித்துக்கொண்டு சாகச பயணம் செய்வோம். மாம்பழ சீசன் என்றால் சொல்லவே வேண்டாம்.. வழி நெடுக விதவிதமான மாம்பழங்கள் மரங்களிலிருந்து பழுத்து விழுந்து கிடக்கும். விருப்பம் போல அள்ளித் திண்று, மாடுகள் தண்ணீர் குடிக்க வெட்டி வைத்திருக்கும்   குளங்களில் கை கழுவுவோம். அந்த காலத்தை நினைத்தாலே இனிக்கிறது!
எங்களுடைய ஒவ்வொரு வீட்டிலும் தோட்டம் இருக்கும். காப்பிச்செடிகளும் செர்ரி மரங்களும் டேரியாவும் டிசம்பர் பூக்களும் பீன்ஸ் செடியும் சிவப்பு‍, வெள்ளை கொய்யா, சப்போட்டா பழ மரங்களுமாக நிறைந்திருக்கும்.
இவையெல்லாவற்றையும் எங்கள் கிராமத்தில் இருந்த‌ சாதி  முழுங்கிக்கொண்டிருந்தது. கன்னட லிங்காயத்துகளுக்கென தனி வீதியும், இடைநிலை சாதிகளுக்கென தனி வீதியும் தலித்துகளுக்கு தனி வீதியுமாக சாதியின் கனகச்சிதமான அடையாளத்தோடு இருந்தது எங்கள் கிராமம். ஊருக்கு நடுவே இருந்த கிணற்றில் இடைநிலை சாதிக்காரர்களும் லிங்காயத்துகளுமே  தண்ணீர் எடுக்கும் ஏகபோக உரிமையைக் கொண்டிருந்தார்கள். தலித்துகள் ஊருக்கு வெளியே இருந்த ஏரியில் தண்ணீர் எடுத்துக்கொண்டிருந்தார்கள். தலித்துகளுக்கு அவரசமாக தண்ணீர் தேவைப்பட்டால் கிணற்றை பயன்படுத்தும் உரிமை பெற்றவர்கள் கிணற்றிலிருந்து தண்ணீர் இறைந்து ஊற்றுவார்கள். நான் கிராமத்தில் வசித்த‌ பத்தாண்டுகாலமும் இந்த எழுதப்படாத விதி எந்த சந்தர்ப்பத்திலும் மீறப்படாமல் இருந்தது.
இடைநிலை சாதிக்காரர்கள் லிங்காயத்துகளின் சமையல‌றைக்கும் பூஜை அறைக்கும் செல்ல அனுமதிக்கப்படவில்லை. தலித்துகளுக்கான அனுமதியோ எல்லோர் வீடுகளிலும் வாசல் படியோடு நின்றுவிட்டது.
சாதி படிநிலைக்கு ஏற்றபடி தன்னைவிட உயர்சாதியை சேர்ந்தவரை  ‘சாமி’ என்றுதான் விளிப்பார் கீழ்சாதி என்று கருதப்பட்டவர். கன்னடர், தெலுங்கர், மராத்தி, தமிழர் என்று பல மொழியினர் சேர்ந்து வசித்த என் கிராமம் திட்டம்போட்டு உருவாக்கியதைப்போல முழுக்க முழுக்க சாதியத்தால் உண்டாக்கப்பட்டிருந்தது. கிராமத்தை விட்டு வந்து 15 வருடங்கள் ஆகிறது. சாதியத்தை உடைக்கும் முயற்சிகள் ஏதேனும் நடந்ததா என்பது பற்றி தெரியவில்லை. சாதி படிநிலை ஒழிந்துபோன என் கிராமத்தை தரிசிக்கவே விரும்புகிறேன். ஆனால் எனக்கு தெரியும் நான் வரும்போது காபி கொடுக்க எனக்காக அங்கே தனியாக ஒரு கோப்பையை எடுத்து வைத்திருப்பார்கள் என்று…

11 thoughts on “யானையும் பலாமரமும் கூடவே சாதியும

  1. வலைப்பதிவுக்கு வந்ததற்கு வாழ்த்துகள் நந்தினி.
    உங்களுக்கு தர்மபுரி மாவட்டம்னு நினைக்கிறேன். இப்படியே இருந்துவிடாது காலமும் வாழ்வும்.

    //எனக்கு தெரியும் நான் வரும்போது காபி கொடுக்க எனக்காக அங்கே தனியாக ஒரு கோப்பையை எடுத்து வைத்திருப்பார்கள் என்று…//

    மாற்றம் வந்தே தீரும். நம்புவோம்.

  2. கிராம வாழ்வை அசைப் போடுவதில் வரும் அலாதி இன்பம் வேறு எதிலும் கிடைக்காது என்பது என்னைப் போன்ற கிராமத்தான்களுக்கும் உங்களைப் போன்ற கிராமத்தினிகளுக்கும் நன்றாகவே தெரியும்.
    கிராமங்கள் இயற்கையின் மடியில் அழகாக கிடக்கும் அதே வேளையில்… தீண்டாமை என்னும் முள்படுக்கையும் அதே மடியில் விழுவதை வெறும் வர்ணனையாகவே எடுத்துக்கொள்ள முடியாது.
    நந்தினியின் கிராமத்தின் அழகை அந்தத் தீண்டாமை அசிங்கப்படுத்துகிறது. அதனை எதிர்த்து பேனாக்காரர்கள் நடத்தும் ஆயுதப்படையில் சேர்ந்து கொள்வோம்.
    ‍ஆரா

  3. இத்தகைய படிநிலைகளை உருவாக்கித் தந்தவர்கள், ”நாங்களா தலித்து வாயில் மூத்திரத்தை பெய்தோம், மலத்தை திணித்தோம்” என்று சாமர்த்தியமாக தப்பித்துக்கொள்கிறார்கள்.

    குற்றம் செய்வது மட்டுமே தண்டணைக்கு உரியது என்று கூறி வருகிறார்கள். குற்றத்தைத் தூண்டியவர்கள் இப்போது நல்ல பிள்ளை வேஷம் போடுகிறார்கள்.

  4. \\கன்னட லிங்காயத்துகளுக்கென தனி வீதியும், இடைநிலை சாதிகளுக்கென தனி வீதியும் தலித்துகளுக்கு தனி வீதியுமாக சாதியின் கனகச்சிதமான அடையாளத்தோடு இருந்தது எங்கள் கிராமம். ஊருக்கு நடுவே இருந்த கிணற்றில் இடைநிலை சாதிக்காரர்களும் லிங்காயத்துகளுமே தண்ணீர் எடுக்கும் ஏகபோக உரிமையைக் கொண்டிருந்தார்கள். தலித்துகள் ஊருக்கு வெளியே இருந்த ஏரியில் தண்ணீர் எடுத்துக்கொண்டிருந்தார்கள். தலித்துகளுக்கு அவரசமாக தண்ணீர் தேவைப்பட்டால் கிணற்றை பயன்படுத்தும் உரிமை பெற்றவர்கள் கிணற்றிலிருந்து தண்ணீர் இறைந்து ஊற்றுவார்கள்\\

    இது இன்றும் நடந்து கொண்டு தான் இருக்கிறதா?

  5. பாரதி சார் இனிமே உங்களுக்கு ரெண்டு வேளையும் டீ வாங்கித்தர்றதா முடிவு பண்ணிட்டேன்.
    வருகைக்கு நன்றி ஆடுமாடு. எல்லாமே மாறும் என்றுதான் நினைக்கிறோம். ஆனால் இந்தியாவில் சாதி ஒழிய பல பல நூறாண்டுகள் ஆகும் என்றே தோன்றுகிறது. சாதி தன்னுடைய நவீன முகங்களோடு புது புது அவதாரம் எடுத்தபடியேதான் இருக்கிறது.
    எழுதுவதில், எழுத்தில்கூட சாதி உண்டு ஆரா.
    விஜய்கோபால்சாமியின் ஆதங்கமே என்னுடையதும்.
    பொதுக்கிணற்றில் தண்ணீர் எடுக்கும் உரிமை இன்னும் மறுக்கப்படுகிறாதா என்பது குறித்து எனக்கு தெரியவில்லை. கிராமத்திற்கு சென்று 15 வருடங்களாகிறது சக்தி.
    சுந்தரபுத்தன் என் கிராமத்தின் பெயரை சொல்ல விரும்பவில்லை. தற்போது இந்த கிராமம் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருக்கிறது என்று நினைக்கிறேன்.

  6. hi nandhini,
    great to discover your blog…
    oru innocence-la aarambichu, ipdi oru realism-la mudichirukenga…
    after a long time, i have read something which is so honest..
    what you say about your village is true of so many Indian villages ..
    (Peyar sollatiyum it is not a problem)
    please keep writing more…
    🙂

  7. //சாதி படிநிலை ஒழிந்துபோன என் கிராமத்தை தரிசிக்கவே விரும்புகிறேன். ஆனால் எனக்கு தெரியும் நான் வரும்போது காபி கொடுக்க எனக்காக அங்கே தனியாக ஒரு கோப்பையை எடுத்து வைத்திருப்பார்கள் என்று…//

    உணர்ச்சிகரமான இந்த வரிகள்.. உங்கள் பதிவின் ஆழ்ந்த உணர்வைச் சொல்கிறது. சாதி என்பது ஒரு உடற்கூறாக மாறிவிட்ட இந்திய சமூகத்தில் அதனை ஒவ்வொருவர் உடலிலிருந்தும் பிய்த்தெறிய வேண்டிய நிலையில்தான் இன்னுமும் நாம் இருக்கிறோம் என்பது வேதனையான ஒன்றுதான். எளிமையான எழுத்த நடையில் கதைக்கான கூறுகளுடன் எழுதப்பட்டுள்ளது. நீங்கள் கதைகள் அல்லது புனைவுகள் எழுதுவீர்களா?

  8. Hi nandhini! Ur blog pg is so good… Wt a wonderful and great feelings. Realy its mirade story. This event hide two things 1. In this modern world we get lot of thing … But we lost our soul (village life) as a village girl i felt wt we missed and wt we going to miss… 2. Still we are breeze Religion power.. Both going to important place in universe but you explain in innocent way…. Keep rocking like tìs nandhi…… We are expecting lot from you…..

  9. யானை தன் தலையில் மண்போடுவது போல் எவ்வளவு வேதனைகளை நாம் எமக்காக சேமிக்கின்றோம், உருவாக்கி வைத்திருக்கின்றோம்!! நீதியற்ற செயல்களே பெரும் வேதனை என்பதும் பாவம் என்பதையும் புறந்தள்ளி அதையே பெருமை மதிப்பு கெளரவம் என்று இயல்பாக வாழப்பழக்கப்பட்ட நிலை எல்லாவற்றையும் விட வேதனையானது.

    இவ்வாறன உங்கள் படைப்புகள் இந்த நிலமை மாற நிச்சயம் அடித்தளமாக அமையும். கால நீட்சியில் இதன் பலன் தெரியும்.

  10. நீங்கள் உடன் உங்களின் நண்பர்கள் கூடவே பெற்றோர்களும்

    நீங்களும், உங்களின் நண்பர்களும் பள்ளி செல்லும்போது ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு புது ஒற்றையடி பாதையை கண்டுபிடித்து, சாகச பயணம் செய்தீர்கள். அது ஒருபுறமிருக்க..
    உங்களின் பெற்றோர்கள் மற்றும் நண்பர்களின் பெற்றோர்கள் (அவர்களும்) சாதி என்னும் ஆயுதத்தை கையில் வைத்திருந்தார்களா? இல்லையா? என்பது பற்றி எங்களுக்கு தெரியாது.
    கடந்தகாலத்தை நாம் அறிவோம். இது நிகழ்காலம். இப்போது நாமும் நம் நண்பர்களும்தான் பயணிக்கிறோம். ஒற்றுமை பாதையில் பயணம் செய்வதும்,
    கோப்பை விவகாரத்திலும், நடைமுறை வாழ்வியலில் சாதியெனும் ஆயுதமென எல்லாமே நாமும் நம் நண்பர்கள் நம்மை சுற்றியிருப்பவர்களும் தான். இது நமக்கான காலம்.
    ” நீங்க பதினஞ்சி வருசமா ஊருக்கும் போல. இப்போ உங்க ஊருல சாதிங்கிற ஆயுதம் உடஞ்சிதாங்கிறதும் உங்களுக்கு தெரியாது. ” சாதி படிநிலை ஒழிந்துபோன கிராமத்தை தரிசிக்கவே நாம் விரும்புகிறோம். இப்போது கிராமத்திற்கு பயணப்படுங்கள் அவர்கள் அருந்தும் கோப்பையிலேயே உங்களுக்கும் தருவர். இப்போது கோப்பையில் இருப்பது அமுதமாகக்கூட இருக்கலாம்.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.