நாடோடிகளைப் போன்றதொரு வாழ்க்கைதான் சென்ற ஆண்டுவரை எங்களுக்கு வாய்த்திருந்தது. நான் கனவிலும் நினைத்துப்பார்க்கவில்லை, எங்களுக்கென்றே ஒரு வீடு கிடைக்குமென்று. 2006ல்தான் எங்களுடைய பூர்வீகத்துக்கு நாங்கள் திரும்பினோம். அப்போதும் வாடகை வீடுதான். எந்த திட்டமிடலும் இல்லாமல் ஏதோ அற்புதம் நடந்தமாதிரி வீடு கட்டுமளவு நிலம் வாங்கினோம். அது விளைநிலம். மனைபோட்டு விற்றிருக்கிறார்கள். அலுவலக வேலைக்கு செல்பவராக இருக்கும் என் அம்மாவும் வியாபாரியாக இருக்கும் என் அப்பாவும் இன்னமும் விவசாயிகள்தான்! அந்த நிலத்தில் உடனடியாக வீடு கட்டாமல், கத்தரி, மிளகாய், வெங்காயம் என சில காய்கறிகளை நட்டிருந்தார்கள். காலை நேரத்தில் என் அப்பா செடிகளுக்கு தண்ணீர் ஊற்றுவார்; மாலை அலுவலகத்திலிருந்து திரும்பியவுடன் என் அம்மா செடிகளை கொத்தி சீராக்குவார். இதற்குள் என் அப்பாவுக்கு மாடு வளர்க்கும் ஆசையும் வந்துவிட்டது. ஒரு எருமை கன்றையும் ஒரு பசுங்கன்றையும் வாங்கி விட்டிருந்தார். கூடவே நான்கு கோழிகளும் வளர்த்து வந்தார். திருப்புமுனையாக நாங்கள் குடியிருந்தவீட்டின் சொந்தக்காரர் தன்னுடைய சொந்த தேவையின் காரணமாக வீட்டை காலி செய்ய சொல்லிவிட்டார். பதினைந்தே வீடுகள் இருந்த அந்த கிராமத்தில் வாடகைக்கு வீடு கிடைத்ததே பெரிய விஷயம். இதில் இன்னொரு வீடு கிடைப்பது சாத்தியமே ஆகாத விஷயம் என்பதால் வீடு கட்டுவதுதான் சரியான தீர்வென முடிவெடுத்தோம். பூக்களுக் பிஞ்சுகளுமாக இருந்த செடிகளை கண்ணீரோடு பிடிங்கி எறிந்ததாக அம்மாவும் அப்பாவும் தொலைபேசியில் சொன்னார்கள். நான் பக்கத்தில் இல்லாதபோது அந்தச் செடிகள்தான் அவர்களுக்கு பெரிய ஆறுதலாக இருந்திருக்கும் என்று நினைக்கிறேன். சில காலம் பக்கத்தில் இருந்த ஒற்றை அறை கொண்ட குடிசையில் அப்பா அம்மா இருந்தார்கள். எப்படியோ இழுத்து இழுத்து ஓராண்டு ஆகியது நாங்கள் வீடு கட்டி முடிக்க. இப்போது எங்கள் வீட்டு தோட்டத்தில் சில வாழை மரங்களும் சில காய்கறி, பூ செடிகளும் உள்ளன. எப்போதும்போல நீர் ஊற்றும் பொறுப்பு என் அப்பாவுடையது. பராமரிக்கும் பொறுப்பு அம்மாவுக்கு. எருமையை அப்பா விற்றுவிட்டார். பசுங்கன்று வளர்ந்து சினையாக இருக்கிறது. அடுத்த மாதம் கன்று ஈனும் என்று சொல்லியிருக்கிறார் அப்பா.
எங்கள் வீட்டில் செல்லப்பிள்ளையாக சிபிகா(பூனைதான்)சுற்றித்திரிந்து கொண்டிருக்கிறாள். என்னைவிட அவள்மேல்தான் பாசம் அதிகம்!(எனக்கு பொறாமை பொறாமையா இருக்கும்) மாட்டுப்பாலும் கருவாடுமாக ராஜ உபசாரம்தான். குட்டி எலியை மட்டும்தான் பிடித்து திண்பாள். அதையும் பிடித்துக்கொன்டு வந்து அப்பா அம்மாவுக்கு காட்டி அதனுடன் கொஞ்சம் ஓடிப்பிடித்து விளையாடிவிட்டுத்தான் ருசிப்பாள். தொலைபேசி மணி அடித்து வீட்டில் யாரும் இல்லையென்றால், எங்கே இருக்கிறார்களோ அங்கே போய் அழைத்துக்கொண்டு வருவாள். அம்மணிக்கு தற்போது ரெண்டாவது பிரசவம் நடந்திருக்கிறது; நார்மல் டெலிவரி..!
நான் இல்லாத குறையை தீர்த்துக்கொண்டிருக்கிறார்கள் இவர்கள். பெற்றோரை பிரிந்திருக்கும் குற்ற உணர்வு ஆட்கொள்ளும் போதும், வெறுமையோடு தனித்திருக்கும்போது என்னுடைய களைப்பை போக்குகிறது இவர்களுடைய நினைப்பு. பசுக்களையும் எருமைகளையும் நாய்களையும் பூனைகளையும் வளர்க்காமல் போயிருந்தால் நிச்சயம் சரிபாதியளவு மனிதர்கள் மனநோயாளிகளைப்போல்தான் திரிந்திருக்கக்கூடுமோ என நினைக்கத்தோன்றுகிறது. ரெண்டு மாதங்களுக்கு ஒரு முறையேனும் நான் நட்டு வைத்த செடிகளை பார்க்கவும் என் வருகையை எதிர்ப்பார்த்திருக்கும் பசு, சிபிகா, கோழிகளை காணவும் வாய்க்காமல் போயிருந்தால் சென்னை வீதிகளில் பைத்தியமாகத்தான் நான் அலைந்திருப்பேன்.