ஊடகப்பெண்களை சமையலறைக்கு துரத்தும் அராஜக ஆணாதிக்க கும்பல்!

சமீபத்தில் ஐந்தாண்டுகள் பத்திரிகையாளராக பணியாற்றிய அனுபவமுள்ள ஒரு பெண் பத்திரிகையாளர், தன்னுடைய பணியினை ராஜினாமா செய்யும் பொருட்டு மும்முரமாக இருந்தார். இன்னொரு நிறுவனத்திலிருந்து தற்சமயம் பணியாற்றிக்கொண்டிருந்த நிறுவனத்தில் சேர்ந்து மூன்று மாதங்களே கழிந்திருந்த நிலையில்,அவருடைய ராஜினாமா சக ஊழியர்கள் மத்தியில் துப்பறிவதற்கும் விவாதிப்பதற்கும் உரிய விஷயமாக இருந்தது.
“என்னுடைய வருங்கால கணவருக்கு நான் வேலைக்குப் போவது பிடிக்கவில்லை” என்று தன்னுடைய நிலையை அவர் கூறியபோது ஆத்திரம் பொத்துக்கொண்டு வந்தது என்னவோ உண்மைதான். அதற்கு பின்னணியில் இருக்கும் நிதர்சனத்தை உணர்ந்தபோது அவர் எடுத்த முடிவும் சரி என்று தோன்றியது. தீர்க்கமான சிந்தனையோடு செயல்பட்டவராக இல்லாதபோதும், நேர்மையானவராகவும் பணியில் அக்கறை காட்டுபவராகவும் இருந்த அவருடைய இருப்பு முக்கியமானதாகவே கருதமுடியும். அவர் பத்திரிகையாளராக தொடர்ந்து இயங்கியிருக்கும் வேளையில், காலம் அவரது சிந்தனையையும் செயலையும் கூர்த்தீட்டியிருக்கலாம்.
ஆனால் அவர் ஒரு பெண் என்பதாலேயே பணியிடங்களில் அவருக்கு ஏற்பட்ட மோசமான அனுபவங்களும் நிலை குலையச் செய்த கிசுகிசுக்களும் அவரை திருமணத்தின் பெயரில் பத்திரிகை துறையிலிருந்தே வெளியேறும் முடிவை நோக்கி தள்ளியிருக்கின்றன. இன்று அவர் பத்திரிகை துறையிலிருந்தே ஒதுங்கிப்போய் விட்டார். இது ஏதோ தனிப்பட்ட ஒருவரைச் சார்ந்த நிகழ்வாக நினைத்து ஒதுக்கிவிட முடியாது. கனவுகளோடும் நம்பிக்கையோடும் ஊடகத்துறைக்குள் காலடி எடுத்து வைக்கும் பல பெண்கள் அவநம்பிக்கையோடு வெளியேறியதன் பின்னணியை விவாதத்திற்கு உட்படுத்துவதும் பதிவு செய்வதும் உடனடியாக செய்தாக வேண்டிய பணியாகும். பத்திரிகையாளராக ஐந்தாண்டு கால அனுபவத்திலும் தமிழ் ஊடகங்களில் சகபணியாளர்கள் எதிர்கொண்ட, எதிர்கொள்ளும் பாலியல் ரீதியான அவதூறுகளை அத்துமீறல்களை எழுதுவது மற்ற எல்லாவற்றையும்விட அவசியமானதாகவே கருதுகிறேன்.

ஒரு பெண் பத்திரிகையாளர் மாற்றுச் சிந்தனையும் அரசியல் ரீதியிலான புரிதலும் உள்ளவராக இருந்தாலும் தமிழ் ஊடகங்களில் சமையல் குறிப்பு எழுதுவதற்கும் நடிகைகளின் ஆடை,அணிகலங்களை சிலாகிப்பதற்கும்தான் பணிக்கப்படுவார். அதிகபட்சமாக அரசியல்வாதிகளின் மனைவிகளை பேட்டி காணும் வாய்ப்பு கிட்டலாம்! பெண்ணின் பணிகளாக ஆணாதிக்கத்தால் உருவான இச்சமூகம் ஆண்டாண்டு காலமாக சொல்லிவரும் சமையல், வீட்டுப்பராமரிப்பு, குழந்தை வளர்ப்பு போன்றவற்றின் மெருகேற்றப்பட்ட வடிவங்கள் இவை. சமூகம் எப்படி இதையெல்லாம் மீறி வரக்கூடாது என்கிறதோ, அதையேதான் ஆணாதிக்க சிந்தனை பீடித்த ஊடகவாதிகளும் (அரசியல்-புலனாய்வு இதழ்களில் “பாதுகாப்பு” என்ற காரணம் காட்டி பெண்கள் அத்தகைய இதழ்களில் பணியாற்ற மறுக்கப்படுவதை இந்த பின்னணியில் வைத்துப்பார்க்க வேண்டும்) ஊடக பெண்களிடம் எதிர்ப்பார்க்கிறார்கள். இதை எதிர்க்கும் பெண் ஆசிரியர் குழுவால் திட்டமிட்டு ஒதுக்கப்படுவார். ஒருகட்டத்தில் மனஉளைச்சலுக்கு ஆளாகி பத்திரிகை துறையிலிருந்து ஒதுங்கிவிடுவார்.
கடந்த எட்டு ஆண்டுகளில் எதிர்ப்பார்ப்பும் நம்பிக்கையும் ஊட்டும்படியான மாற்றுச்சிந்தனையோடு ஒன்றிரண்டு கட்டுரைகளோடு காணாமல்போன பத்திரிகையாளர்கள் குடும்பம் என்னும் நான்கு சுவர்களுக்குள் முடங்கிப்போயிருப்பதை கண்கூடாகப்பார்க்க முடிகிறது.
இது ஒருபுறம் இருக்க சுயசிந்தனையும் ஊடகம் குறித்த புரிதலும் இல்லாத பெண்களுக்கு தமிழ் ஊடகங்களில் சிறப்பான வரவேற்பு கிடைப்பதையும் பார்க்க முடிகிறது. ஆண்களைப்போல சிந்திப்பதற்கும் ஆண்களின் ரசனைக்கேற்ப தங்களுடைய எழுத்தை வடிவமைத்துக்கொள்ளவும் இந்தப் பெண்கள் பழக்கப்படுத்தப்படுகிறார்கள். சராசரி வாசகனும்கூட எழுதியவர் ஒருபால் விருப்பம் கொண்டவரோ என்று நினைக்கும் அளவுக்கு பெண் உடல் குறித்த கிளர்ச்சியூட்டும் வர்ணனைகள் வரும்படி அவர்கள் பயிற்றுவிக்கப்படுவார்கள். தமிழ் மாத,வார,நாளிதழ்களைப் படிக்கும் எவருக்கும் இந்த முரண்பாடு தெளிவாகவே புரியும்.
குடும்பம், அரசியல் உள்ளிட்ட சமூகத்தின் மற்ற தளங்களில் பெண் எப்படி, ஆணின் சிந்தனைகளை உள்வாங்கி அதை செயல்படுத்தும் கருவியாக இருக்கிறாளோ அதைப்போலவே ஊடகப்பெண்ணும் செயல்படுகிறாள். அவளை அப்படியே வைத்திருப்பதில்தான் ஆணாதிக்கத்தின் இடம் தக்கவைத்துக் கொள்ளப்படுகிறது. இப்படி சிந்தனை மழுங்கடிக்கப்பட்ட பெண்களே பாலியல் ரீதியிலான சுரண்டலுக்கும் ஆளாகிறார்கள். அறிவையும் உணர்வையும் அடிப்படையாகக் கொண்ட பணியில் உடல் முன்னிறுத்தப்படுகிறது. வழமையாக பெண்ணின் உடல் முன்னிறுத்தப்படும்போது கட்டமைக்கப்படும் அதிகாரம் இங்கேயும் நிகழ்கிறது. உடல் அதிகாரத்தை கட்டுக்குள் வைத்திருக்க நினைக்கும் ஆணின் செயல்பாடு ஒரு பெண்ணோடு நின்று விடுவதில்லை. அது ஒரு தொடர்கதை.

குறுஞ்செய்தியோடு ஆரம்பிக்கும்,பிறகு உடல் சமிக்ஞைகள், இரட்டை பொருள்தரும் பேச்சு, தான் நினைத்தால் எதுவும் செய்ய முடியும் என்று அதிகாரத்தை காட்டுவது எதற்கும் வளையவில்லை எனில் பிரச்சினை ஆரம்பிக்கும். அடிமையைவிட கேவலமாக நடத்துவார்கள், அல்லது அலுவலக மேசையைப்போல அசையாத பொருளாக வைத்திருப்பார்கள். வளைந்து கொடுத்தால் பதவி உயர்வுகளும் இன்னபிற அங்கீகாரங்களும் தேடிவரும். அதிகாரத்தை கை கொண்டவனின் வழி இதுவெனில் இயலாமையில் துடித்துக்கொண்டிருக்கும் அவனுக்கு கீழ உள்ளவர்களின் பணி சுற்றி உள்ள பெண்கள் குறித்து அவதூறுகள் சொல்வதும் கிசுகிசுக்களை புனைவதும்தான். ஊடகங்களில் தங்களை ப்ரோ பெமினிஸ்டு(Pro-Femenist)களாக காட்டிக்கொள்ளும் பலரது முழு நேர பணியே இதுதான்.
இத்தகைய சுரண்டலையும் அவதூறுகளையும் சகிக்க முடியாத எந்த பெண்ணும், அவள் அறிவு ரீதியாக பலமானவளாக இருந்தபோதும் அவளது முடிவு ஊடகத்தை விட்டு ஒதுங்குவதாகத்தான் இருக்கும். ஒதுங்குதலும் ஒதுக்குதலும் இயல்பாக நடந்தேறியபின் ஆணாதிக்கம் எக்காளமிட்டுச் சிரிக்கும்!

புத்தகக்காட்சியில் கண்டெடுத்த இன்காக்கள்!

கடந்த நான்கு வருடங்களாக தனிமையில் புத்தகக் காட்சிக்கு  செல்லும் எனக்கு , இந்த ஆண்டு நண்பர்கள் கிடைத்தார்கள் .புதிய நண்பர்கள், பழைய நட்புகளையும் புத்தகக்காட்சியில் புதுப்பித்துக் கொள்ள முடிந்தது மகிழ்சியைக் கொடுத்தது. இந்த ஆண்டு புனைவுகள் சார்ந்த புத்தகங்கள் என்னை அதிகம் கவரவில்லை. என் மன விருப்பம் சார்ந்து அபுனைவு புத்தகங்களையே வாங்கினேன்.

1.°இந்திய ஆர்க்கிட்டுகள்°
ஆர்க்கிட்டுகள் (தமிழில் = வாடா மலர்) குறித்து முனைவர்.ஏ,எஸ்.ராகவன் எழுதி ,டாக்டர்.கா.ஞா.சண்முகவேலு மொழிபெயர்த்தது

2. °நமது சுற்றுச்சூழல்°
லாயிக் பதே அலி  எழுதி எஸ்.விநாயகம் மொழிபெயர்த்தது

3. °இந்தியப் பாம்புகள்°
டாக்டர்.ரோமுலஸ் விட்டேகர் , தமிழில் = டாக்டர்.ஓ.எஸ்.ஹென்றி பிரான்சிஸ்

இவை மூன்றும் ° நேஷனல் புக் டிரஸ்டி°ன்  வெளியீடுகள்.

4. °மச்சு பிச்சு°
தென் அமெரிக்காவின் பெரு நாடடில் கோலோச்சி இருந்த நாகரிகமான °இன்கா°க்களின் கட்டிய எழுப்பிய °மச்சு பிச்சு ° குறித்த சுருக்கமான அறிமுகத்தை தரும் வகையில் சே குவேரா, பாப்லோ நெருதா போன்ற ஆளுமைகள் எழுதிய கட்டுரைகளின் மொழிபெயர்ப்பு இச்சிறு நூல்.

மற்ற மூன்று நூல்களைவிட என்னை உடனே படிக்கத்தூண்டி வசீகரித்தது °மச்சு பிச்சு°.  எட்டு வருடக் காத்திருப்பு அதன் பின்னணியில் இருக்கிறது  என்பதுதான் காரணம். பள்ளி இறுதி ஆண்டு படித்துக்கொண்டிருந்தபோது  °இன்காக்கள்° குறித்த ஆவணப்படம் ஒன்றை நேஷனல் ஜியோகிராபிக் சேனலில் கண்டேன். அறைகுறையாக மட்டுமே அப்போது என்னால் புரிந்துகொள்ள முடிந்தது. எனக்கிருந்த தகவல் தொடர்புகள் அக்காலக்கட்டங்களில் மிகவும் குறைவு. இன்னுமங சொல்லப்போனால் இல்லவே இல்லை என்றும் சொல்லலாம். இன்காக்கள் குறித்து முழுமையாக அறிய ஆழ்மன விருப்பமாக அதை மாற்றிக்கொண்டதுதான் அப்போதைக்கு என்னால் செய்ய முடிந்தது.
உலக அதிசயங்களின் பட்டியலில் °மச்சு பிச்சு° பெயர் அடி பட்டபோதும் இன்கா நிர்மாணித்த நகரம் இது என்பது என் கவனத்தில் வரவில்லை. எப்படியோ இன்காக்களை புத்தகக்காட்சியில் கண்டெடுத்து விட்டேன்!
இன்காககள் குறித்து தனியே ஒரு பதிவிட இருக்கிறேன்.

°மச்சு பிச்சு° விடியல் பதிப்பக வெளியீடு
தொடர்புக்கு
விடியல் பதிப்பகம்
11, பெரியார் நகர்
மசக்காளி பாளையம் (வடக்கு)
கோவை =641015
0422=2576772

புத்தகக் காட்சியில் வாங்கிய மற்ற புத்தகங்கள் குறித்து இன்னொரு பதிவுல் எழுதுகிறேன்.

கடந்துபோன ஆண்டு குறித்து சில நினைவுகள்…

உற்சாகத்தோடு ஆரம்பமாகி அமைதியாக முடிந்துபோனது 2008! குங்குமம் இதழில் எழுதிய தொடர் கட்டுரைகள் புத்தகமானது முதல் மகிழ்ச்சி; அடுத்து ஆனந்தவிகடன் இதழில் சேர அழைப்பு வந்தது,அரசியலிலிருந்து சமூக பிரச்னைகளை எல்லாம் எழுதி கிழித்து விடலாம் என நினைத்தது இரண்டாவது மகிழ்ச்சி(அது முடியாமல் போனது முதல் துயரம் 🙂 ! )இப்படி ஒவ்வொரு மகிழ்ச்சியாக தேடி வந்துகொண்டிருந்த வேளையில், எப்படியோ என்னை எல்லோரும் ‘தோற்றுப்போனவள்’ என்று ஒப்புக்கொண்டதுதான் பெரும் மகிழ்ச்சியாக நினைக்கிறேன்! ஆனபோதும் தோற்றுப்போனவளாக இதே திமிர்தனத்தோடு அடுத்த ஆண்டையும் எதிர்கொள்ளப்போவதை நண்பர்கள் பொறுத்தாள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்…

(மன்னிக்கவும் இதுபோன்ற மொக்கை பதிவை இனி இடமாட்டேன் 🙂 )