மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளுக்கு செல்ல வேண்டும் என்கிற ஆவல் நெடுநாட்களாக இருந்தது. வெறுமனே பொழுதை போக்கிவிட்டு வரவும் ஆர்வம் இல்லை. நேரமும் சரிவர ஒத்துழைக்கவில்லை. நேரம் கனிந்து வந்தபோது, முதுமலையை சுற்றியுள்ள பகுதிகளை புலிகள் சரணாயமாக அறிவித்ததை ஒட்டி அப்பகுதிகளில் வாழும் மக்கள் (பழங்குடிகள்) எதிர்ப்பு தெரிவிப்பதாக செய்தி வெளியானது.
காட்டுயிர்/சுற்றுச்சூழல் பாதுகாப்பு சார்ந்து இயங்கும் நண்பர்களிடம் விசாரித்தபோது “நீங்களே நேரில் சென்று பாருங்கள்” என்று பீடிகை போட்டது முதுமலைக்குச் செல்லும் ஆவலுக்கு தூபம் இட்டது.
சமீப காலமாக மனிதனுக்கு கானக உயிர்களுக்குமான இருப்பு சார்ந்த போராட்டம் வலுத்து வரும் சூழலை ஒட்டி ஒரு ஆவணப்படத்தை உருவாக்கும் முயற்சி குறித்து நண்பர்கள் பேசிக்கொண்டிருந்தோம். அதற்கான களஆய்வுப் பணிகளைத் தொடங்க இது சரியான தருணமென முதுமலைக்குச் செல்லும் பயணப்பணிகளைத் தொடங்கினோம். எல்லோருக்கும் ஒரே நேரத்தில் விடுப்பு கிடைக்காத சூழ்நிலையில் நானும் லிசியும் மைசூர் வழியாக கடந்த திங்கள் முதுமலைக்கு பயணப்பட்டோம்.
மைசூரிலிருந்து ஊட்டி செல்லும் சாலையில் 90 கி.மீட்டரில் இருக்கிறது முதுமலை யானைகள் சரணாலயம். அருகிலேயே பந்திப்பூர் புலிகள் சரணாலயம். இரண்டும் ஒரே காடுதான், முன்னது தமிழகப்பகுதியிலும் பின்னது கர்நாடகப்பகுதியிலும் இருக்கிறது. பந்திப்பூரை புலிகள் சரணாலயமாக அறிவித்தது 1973ல். நமக்கு இப்போதுதான் புலிகளின் முக்கியத்துவம் தெரிந்திருக்கிறது. அதற்கும் எதிர்ப்புகள்…
முதுமலை தெப்பக்காட்டிலிருந்து 10 கி.மீ தொலைவில் மசினிகுடி என்ற ஊர். அவ்வூர் மக்கள்தான் புலிகள் சரணாலயத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவிப்பதாக கூறினார்கள். காட்டுப்பகுதியை கடந்து செல்லும்போது அதன் வனப்பு எங்களை லயிக்க வைத்தது. கூடவே நகரத்தை விஞ்சும் வகையில் நொடிக்கு ஒருதரம் கடந்து போன வாகனங்களைப் பார்க்க சாவு மணி அடிப்பதைப்போன்றதொரு உணர்வுதான் ஏற்பட்டது.
மூன்று நாட்கள் முதுமலையின் சில கிராமங்களைக் கண்டோம். முடிநதமட்டும் அனைத்து தரப்பு மக்களையும் சந்தித்தோம். 20,30 ஆண்டுகளுக்கு முன் பிழைப்புக்காக அப்பகுதிகளில் குடியேறி அம்மண்ணின் வளத்தை உறிஞ்சி,இன்று சகல வசதிகளுடனும் வாழும் ஒரு சிலரின் எதிர்ப்புதான் ஊடகங்களால் பழங்குடிகளின் போராட்டமாக திரிக்கப்பட்டுள்ளது (அல்லது) ஊடகங்களுக்கு திரித்து சொல்லப்பட்டுள்ளது. புலிகள் சரணாலயம் ஆக்கப்பட்டால் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்படும், அதனால் சுற்றுலாவை நம்பிருக்கும் தங்களுடைய சுரண்டல் தொழில் பாதிக்கப்படும் என்பதுதான் இந்தப்போராட்டங்களின் காரணம்.
ஆனால் இப்போதும் யானை கலக்கிவிட்டுச் சென்ற குட்டை நீரையே குடிநீராக குடித்து வாழும் பழங்குடிகளின் மன்றாடல் என்னவோ யானையும் புலியுமாவது அதனுடைய உரிமையை அனுபவிக்கட்டும் எங்களை வேறு இடங்களில் குடியமர்த்துங்கள் என்பதாக இருக்கிறது…
விரிவாக சொல்ல வேண்டிய விஷயமிது, சுருக்கமாக தந்திருக்கிறேன்.