அங்கீகாரம் அவசியமா?

இயலாமையிலும் மனச்சோர்விலும் நாட்களைக் கடத்திக்கொண்டிருந்த என்னிடம்,”உங்களுக்கு விருது கொடுக்கப்போகிறோம்” என்று ஈஸ்வர சந்தானமூர்த்தி சொன்னபோது ஆச்சரியமாகத்தான் இருந்தது. நகைச்சுவையாக இருக்குமென்று நினைத்தேன். நான்கைந்து மாதங்களுக்கு முன் ஒரு சாதாரண விஷயத்திற்கு சந்தானமூர்த்தியிடம் கடுமையாக பேசியது அந்த நேரம் பார்த்து நினைவுக்கு வந்து தொலைத்தது! 🙂 பழிவாங்குகிறாரோ?!
அவர் சொன்னது உண்மைதான் என்று புரிய 10 நிமிடங்களானது. தருமபுரி இலக்கியம்பட்டி அருகே பயங்கரவாத அரசியலால் எரித்துக்கொல்லப்பட்ட கோகிலவாணி,காயத்ரி,ஹேமலதா மூவரின் பெயரில் உருவாக்கப்பட்ட விருது, வருடந்தோறும் வெவ்வேறு துறைகளில் உள்ள மூன்று பெண்களுக்கு வழங்குவதாக சொன்னார். செயல்முறை கல்வி கற்றலை சிறப்பாக செய்துகொண்டிருக்கும் சென்னை வில்லிவாக்கத்தைச் சேர்ந்த சுடர்ஒளி உள்ளிட்ட 25 பேர் ஆசிரியர் குழுவுக்கும் நிராதரவற்ற சிறுவர்களின் கல்விக்காகவும் நல்வாழ்க்கைக்காகவும் உழைத்துக்கொண்டிருக்கும் தனி மனுஷியான ஷெரினுக்கும் ஊடகத்தில் சில நல்ல கட்டுரைகள் எழுதியதற்காக எனக்கும் இந்த வருடம் அங்கீகாரம் தரப்போகிறோம் என்றார் நண்பர்.    அவர்களின் உழைப்போடு நான் போட்டியிட முடியாது. ஆனாலும் எதிர்காலத்தில் நான் எதையாவது செய்யவேண்டும் என்ற உறுதியோடு தொடர்ந்து இயங்குவதற்கான உந்துசக்தியாக இந்த அங்கீகாரம் அமையக்கூடும் என்ற ரீதியிலேயே நான் ஒப்புக்கொண்டேன்.
காலம்காலமாக வன்முறை கட்டவிழ்க்கப்படும் போதெல்லாம் முதல் இலக்காக பெண்கள் பலியாக்கப்படுவதின் சமீப கால குறியீடாக மாறிப்போன அந்த மூன்று பெண்கள் கொல்லப்பட்ட நினைவு தினம் நேற்று கடந்து போனது. அக்கொடூரத்தின் மீதான கண்டனத்தை மீண்டும் பதிவு செய்யும் நோக்கத்தின் ஊடாக எங்களின் அங்கீகரிப்பும் நடந்தது. அதில் பங்கெடுக்க திரளான நண்பர்கள் வந்திருந்தது நம்பிக்கையை அளித்தது.
நான் வீழும்போதெல்லாம் உற்சாகமூட்டிவரும் என் நண்பர்களுடன் இந்த அங்கீகாரத்தை பகிர்ந்து கொண்டதை சிறந்ததொரு தருணமாக கருதுகிறேன். தொடர்ந்து நிராகரிப்புக்கு உள்ளாகும் என்னைப் போன்றவர்களுக்கு இதுபோன்ற அங்கீகாரங்கள் அவசியமானவைதான். இல்லையேல் நாங்கள் காணாமல்போய்விடுவோம், எங்கள் இருப்பு அழிக்கப்பட்டுவிடும்…

4 thoughts on “அங்கீகாரம் அவசியமா?

 1. வாழ்த்துக்கள் நந்தினி…

  உங்கள் நண்பர் வட்டத்தில் நானும் இருப்பதாகவே இந்த விநாடி வரை நம்பி வந்தேன். ஆனால், அப்படி இல்லையோ என்று இந்த விநாடியிலிருந்து தோன்ற ஆரம்பித்திருக்கிறது.

  செய்தி தெரிந்திருந்தால் விழாவுக்கு கண்டிப்பாக வந்திருப்பேன். நீங்கள் விருது பெறுவதை மகிழ்ச்சியுடன் கண்டிருப்பேன்.

  பரவாயில்லை. ‘தொடர்பு கொள்ளும் எல்லையில் நான் இல்லையோ என்னவோ?’

  அதனால் என்ன? பதிவின் வழியாக பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

  நிச்சயம் பல உயரங்களை தொடுவீர்கள். தொட வேண்டும் என்பதுதான் விருப்பமும்…

  மனசார வாழ்த்துகிறேன் தோழி…

  தோழமையுடன்
  (சொல்லலாமல்லவா?)
  பைத்தியக்காரன்

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.