இலங்கை தமிழர் பிரச்சினையும் சுரணையற்ற மனிதர்களை உற்பத்தி செய்யும் கல்விக்கூடங்களும்!

20071112503903012க பத்திரிகையாளரும் என்னுடைய தோழியுமான சுகிதா,இரண்டு வாரங்களுக்கு முன் நண்பர்கள் எல்லோரையும் தன் மகள் தீட்சண்யாவின் பள்ளி ஆண்டுவிழாவைக் காண வருமாறு அழைத்திருந்தார். மழலையர் பள்ளியில் படித்துக்கொண்டிருக்கும் இரண்டரை வயது தீட்சண்யா மறுவேடப்போட்டியில் கலந்துகொள்ளப்போவதாகக் கூறி,நேரில் வந்து அவளை உற்சாகப்படுத்தும்படி சொல்லியிருந்தார். சுகிதா இது போன்ற போட்டிகளிலெல்லாம் விருப்பம் அற்றவர். மாறுவேடப்போட்டி என்று பெயரிருந்தாலும் கலந்துகொள்ளும் அனைத்து குழந்தைகளும் வெற்றிப்பெற்றவர்களாகவே கருதப்படுவர் என பள்ளியின் நிர்வாகத்தரப்பு உறுதியாகச் சொன்னதன் பேரில் தீட்சண்யாவின் பெயரை பதிவு செய்திருக்கிறார். மாறுவேடப்போட்டி என்றதும் தங்களுடைய குழந்தைகளை திருவள்ளுவர், விவேகானந்தர் போன்று வேடமிட்டு மழலைத் தத்துவங்களை உளற வைப்பதிலும் கடவுளர் வேடமிட்டு மத விஷத்தை பிஞ்சிலே ஆழப்பதிய வைக்கும் பெற்றோர்களுக்கு மத்தியில், சுகி ரொம்பே விலகி நின்று சிந்தித்து விட்டார்.போர்ச்சூழல் குழந்தைகளை எவ்வகையில் பாதிக்கிறது என்பதை சக பெற்றோருக்கும் விழா பார்வையாளர்களுக்கும் உணர்த்த, தன் குழந்தையை இலங்கை போரில் பாதிக்கப்பட்ட குழந்தையைப்போன்று வேடமிடப்போவதாக எங்களிடன் சொல்லியிருந்தார். அவருடைய முயற்சிக்குநேரில் வாழ்த்துக்கூற நண்பர்கள் கிளம்பினோம். சாலிக்கிராமத்தில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் ஆண்டுவிழா களைகட்டியிருந்தது. சரியாக நாங்கள் உள்ளே நுழைந்த நேரம் தீட்சண்யா மேடையை விட்டு இறங்கிக் கொண்டிருந்தார். எப்போதும் உற்சாகத்தோடு பார்த்து பழகிய சுகியின் முகத்தில் அன்றுதான் முதல்முறையாக சோர்வைக் கண்டேன். தீட்சண்யா மேடையேறியதைக் காணாவிட்டாலும் மற்ற குழந்தைகளின் மழலைப்பேச்சுக்களை சிறுது நேரம் கேட்டுக்கொண்டிருந்தோம். வழக்கம்போல ஓளவையார்,திருவள்ளுவர்,விவேகானந்தர்,முருகன்,சிவன்,கூடவே உலக அழகி வேடமிடப்பட்ட குழந்தைகள்…அதற்கு மேல் எங்களுக்கு பொறுமையில்லை. எல்லோருக்கும் பரிசுஎன்று சொல்லியிருந்த .பள்ளி நிர்வாகம் 6 குறளை ஒப்பித்த ஒரு குழுந்தைக்கு முதல் பரிசு என்று அறிவித்தது. அடுத்தடுத்த பரிசுகளும் இப்படியாக நீதிபோதனை,ஆன்மிக குப்பைகளை ஒப்பித்த குழந்தைகளுக்கு அறிவித்துக்கொண்டிருந்தபோது தோழியின் வீட்டுக்குப்போக நாங்கள் ஆட்டோ பிடித்துக்கொண்டிருந்தோம்.தோழியின் முக வாட்டத்திற்கான காரணமும் எங்களுக்கு புரிந்துபோனது.

நடந்ததை சொல்ல ஆரம்பித்தார் சுகி…விழா நிகழ்ச்சியை தொகுத்துக் கொண்டிருந்த தொகுப்பாரிடம் இலங்கையில் நடக்கும் பிரச்சினை குறித்து இரண்டு வரி அறிமுகத்தை தமிழில் பேசுமாறு சொல்லியிருக்கிறார் தோழி.மீண்டும் மீண்டும் வலியுறுத்தியும் அவர் ஆங்கிலத்திலேயே பேசியிருக்கிறார். நிர்வாகத் தரப்பில் கூறப்பட்ட காரணம் ,அடுத்து இலங்கை தமிழர் மீதான தாக்குதலை,குழந்தைகள் மீதான தாக்குதலை நிறுத்துங்கள் என்று எழுதிக்கொண்டு போயிருந்த பதாகையை மேடையில் வைக்க அனுமதி மறுத்திருக்கிறது கல்விச் சான்றோர்கள் நிரம்பிய அந்த மேடை!இதுகுறித்து விழாவுக்கு வந்திருந்த “தமிழ்” பெற்றோர் எவருக்கும் எந்த புகாரும் இல்லை,வருத்தமுமில்லை. தோழி தனி ஒருவராக மன்றாடிவிட்டு எதுவும் நிகழாத சூழலில் குழந்தையோடு மேடையிலிருந்து இறங்கியிருக்கிறார்.

கல்விக்கூடங்கள் எனும் மூளை மழுங்கடிக்கப்பட்ட மனித உற்பத்தி சாலைகளில் இதுபோன்ற முற்போக்கான சிந்தனைகளுக்கு ஆதரவை எதிர்ப்பார்ப்பது நம் தவறுதான். ஒருபுறம் இலங்கை தமிழருக்காக இங்கிருந்து குரல்கொடுக்கும் தமிழர்களையும் இன்னொரு புறம் எங்கே எது நடந்தால் என்ன என் குழந்தை தங்கிலீஷ் படித்து அமெரிக்கா போனால் சரியென்று கிடக்கிற தமிழர்களையும் ஒருசேர பார்க்க முடிகிறது. இதில் யாரைக்குற்றம் சொல்லியும் பலனில்லை. ஏற்கனவே சமுதாயத்தில் ஊன்றப்பட்டு வேறோடியிருக்கிற ஒரு பிரச்சினைக்கு ஒருவரியில் தீர்ப்பு சொல்லிவி்ட முடியாது. ஆனாலும் குறைந்தபட்ச சமூக சிந்தனைகூட நம் கல்விக்கூடங்களுக்கு ஏன் இல்லாமல் போய்விட்டது என்கிற கேள்வியும் நம்முன் எழத்தான் செய்கிறது…

7 thoughts on “இலங்கை தமிழர் பிரச்சினையும் சுரணையற்ற மனிதர்களை உற்பத்தி செய்யும் கல்விக்கூடங்களும்!

 1. தந்தை பெரியார் அவர்கள் சொல்லிய மூளையில் இடப்பட்ட

  விலங்கால் நாம் ஆயுள் கைதிகளாக இல்லைப் பரம்பரைக் கைதிகளாய் இருக்கின்றோம்.

  பார்ப்பனீயம் பார்ப்பனரைவிட பார்ப்பனர்களாக நடிக்க விரும்பும்

  தமிழர்களிடம் எய்ட்ஸ் நோயாய் பரவி தமிழினத்தை அழித்துக்

  கொண்டுள்ளது.ஒவ்வொரு தமிழனும் கிருத்தவர்கள் தினமும்

  பைபிள் படிப்பது போல திருக்குறள் குடும்பமாகப் படிக்க

  வேண்டும்.

 2. உங்கள்ளுக்கு ஈழ தமிழர் பால் மட்டும் தான் கருணை போல, ஏன் பாலஸ்தீனத்தில், போஸ்னியா வில், செர்பியா வில், அல்ஜீரியா வில், கொசாவா வில், ஈராக்கில், ஆப்கானில் குழந்தைகள் கொல்லபடவே இல்லையா? ஈழ தமிழர்களின் குழந்தைகள் தான் குழந்தைகளா? மேற் சொன்ன இடத்தில் பாதிக்க பட்ட குழந்தைகள், குழந்தைகள் இல்லையா என்ன? உங்களுக்கு இருக்கும் மொழி பற்றோ வெறியோ தானே உங்களை ஈழ தமிழருக்கு ஆதரவாக பேச சொல்கிறது. இதில் உங்களுக்கோ உங்கள் தோழிக்கோ மனிதாபிமானம் சிறிதும் இருப்பதாக தெரியவில்லையே?

  // இலங்கையில் நடக்கும் பிரச்சினை குறித்து இரண்டு வரி அறிமுகத்தை தமிழில் பேசுமாறு சொல்லியிருக்கிறார் தோழி. மீண்டும் மீண்டும் வலியுறுத்தியும் அவர் ஆங்கிலத்திலேயே பேசியிருக்கிறார். நிர்வாகத் தரப்பில் கூறப்பட்ட காரணம் ,நிகழச்சிக்கு வந்திருக்கும் ‘தமிழ்‘ பெற்றோர்கள் தங்களுடைய ஆங்கில புலமை மீது சந்தேகப்படக்கூடும் என்பதும் அதன்மூலம் தங்களுடைய அடுத்த ஆண்டு மாணவர் சேர்க்கை பாதிப்படும் என்பதும்தான்! //

  ஏன் தமிழில் கூறினால் என்ன ஆங்கிலத்தில் கூறினால் என்ன எந்த மொழியில் கூறினால் என்ன உணர்வு ஒன்றகாத்தானே இருக்க முடியும்? தன் குழ்ந்தையை ஆங்கில வழி பள்ளியில் சேர்த்த உங்கள் தோழி ஏன் தன் குழ்ந்தையை தமிழ் வழி பள்ளியில் சேர்க்க தோன்றவில்லை? உங்கள் மேல் குற்றத்தை வைத்துக்கொண்டு ஏன் அடுத்தவர் மீது பழி போடுகிறிர்கள்?

  // அடுத்து இலங்கை தமிழர் மீதான தாக்குதலை,குழந்தைகள் மீதான தாக்குதலை நிறுத்துங்கள் என்று எழுதிக்கொண்டு போயிருந்த பதாகையை மேடையில் வைக்க அனுமதி மறுத்திருக்கிறது கல்விச் சான்றோர்கள் நிரம்பிய அந்த மேடை! இதுகுறித்து விழாவுக்கு வந்திருந்த “தமிழ்” பெற்றோர் எவருக்கும் எந்த புகாரும் இல்லை,வருத்தமுமில்லை. //

  பள்ளி நிர்வாகம் மறுத்ததற்கு விழாவை காண வந்த பெற்றோர்கள் எப்படி பொருப்பாவார்கள்? இலங்கை தமிழர் என்பதற்கு பதிலாக ” ஸ்டாப் த வார் ஆன் இன்னொசென்ட் சிவிலியன்ஸ் எவ்ரி வேர் இன் திஸ் வேர்ல்ட் ” என்று போர்டு ஐ வைக்க வேண்டியது தானே? இது உங்கள் தோழியின் தமிழ் தமிழர் என்ற குறுகிய மனப்பாங்கை தான் காட்டுகிறது.

  தோழி செய்ததில் சிறிது கூட அர்த்தம் இல்லை இங்கு தமிழ் நாட்டில் தமிழனுக்கே ஆயிரம் பிரச்சனைகள் 1) விலைவாசி 2) பாதுகாப்பின்மை 3) வேலை இழப்பு 4) மின்சார வெட்டு 5) நாடாளுமன்ற தேர்தல் – அதில் வோட்டு போடுபவர்க்கு கட்சிகளிடம் எவ்வளவு கிடைக்கும் பிரியானி ஸ்ல்பேட்டா கிடைக்குமா ………. இதில் அவர்கள் இலங்கை தமிழர் மீதான தாக்குதலுக்கா கவலை படப்போறாங்க?

  ராஜா பக்ஷே வுக்கு எதிராக பேசியதால் லசந்த கொல்லப்பட்டார். கருணாவின் பேட்டியை வெளியிட்டதால் தினமலர் அலுவலகலத்தில் குண்டு வீசப்பட்டது. அந்த பதாகையை வைத்து இருந்தால் நாளை அந்த பள்ளி இயங்கி கொண்டு இருக்கும் போது பிள்ளைகள் இருக்கிறார்கள் என்று கவலை படாமல் யாராவது குண்டு வீசுவார்கள், தேவையா அந்த பள்ளி நிர்வாகத்திற்கு? இல்லையேல் பள்ளி நிர்வாகத்தினரை அரசியல் வாதிகள் கைது செய்து சிறையில் அடைத்து இருப்பார்கள் இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக.

  எதை எதை எந்த இடத்தில் பேச வேண்டுமோ அந்த இடத்தில் தான் பேச வேண்டும். போயும் போயும் ஒரு பள்ளி ஆண்டு விழாவில் தானா இந்த பிரச்சினையை பற்றி பேச வேண்டும். உங்கள் தோழி எந்த உண்ணாவிரத / மனித சங்கிலி / கை எழுத்து வேட்டை போராட்டத்தில் கலந்து கொண்டார்?

  // திருவள்ளுவர், விவேகானந்தர் கடவுளர் வேடமிட்டு மத விஷத்தை பிஞ்சிலே ஆழப்பதிய வைக்கும் பெற்றோர்களுக்கு மத்தியில் //
  // ஓளவையார்,திருவள்ளுவர்,விவேகானந்தர்,முருகன்,சிவன்,கூடவே உலக அழகி வேடமிடப்பட்ட குழந்தைகள் நீதிபோதனை,ஆன்மிக குப்பைகளை //

  ஆன்மிகம் குப்பயல்ல தோழி உங்களுக்கு கடவுள் நம்பிக்கை இல்லை என்பதற்காக அடுத்தவரின் நம்பிக்கைகளை எப்படி நீங்கள் குப்பை என்று சொல்லலாம். நீதி போதனை உங்களுக்கு ஆன்மிக குப்பையா? உங்களுக்கு என்ன வேடந்தான் குழந்தைகள் போட்டு வர வேண்டும் என்று விரும்புகிறீர்கள்?

  திருவள்ளுவரும், ஓளவையாரும், விவேகானந்தரும், என்ன குப்பைகளையா கூறிவிட்டு சென்று இருக்கிறார்கள்? உங்கள் எண்ணம் ஈடேறவில்லை என்பதற்காக எல்லோரையும் குறை கூறுவது எவ்விதத்தில் சரி? இதே இயேசு வேடமோ, அன்னை தெரேசா வேடமோ போட்டால் ஒன்றும் கூறியிருக்க மாட்டீர்கள். இந்து மதம் என்றல் மஹா கேவலம் இல்லையா?

  10 வயது உட்பட்ட குழந்தைகளுக்கு வன்முறையின் சுவட்டை கூட காண்பிக்க கூடாது. வித்யாசமாக செய்கிறேன் ஈழ தமிழனுக்கு ஆதரவாக பேசுகிறேன் என்று தமிழ் மொழி வெறியையும் வன்முறை பற்றிய செய்தியையும் தன் குழ்ந்தையின் மனதில் உங்கள் தோழி விதைத்து விட்டார்.

  ஈழ தமிழருக்காக ஆக்க பூர்வமாக எதாவது செய்யுங்கள் முத்துக்குமார் போல் உங்கள் தோழி போல் அல்ல.

 3. நந்தினி உங்களின் ப்திவிற்கு பாண்டியன் என்ற மத்திய தரவர்க்க இன்றைய பிரதிநிதி ஒரு பின்னூட்டம் பொட்டிருந்ததைக் கண்டேன். ஈழத்துக்காக பேசுவட்தையும் போர் வெறிக்கு எதிராகப் பேசுவதையும் இனவெரியாக பார்க்கிற பண்ணாடைகள். சிதமப்ரம் நடராஜர் கோவிலை அரசுடமை ஆக்கினால் வரிந்து கட்டிக் கொண்டு நீதிமன்றத்தை நாடுவது இனவெறியா தேசப்பற்றா என்று பாண்டியன் சொல்ல வேண்டும். நான் காஸாவிலும், ஈராக்கிலும், ஆப்கானிலும், கொசோவாவிலும் கொல்லபப்ட்டும் குழந்தைகளுக்காகவும் பேசுகிறோம். ஆனால் பல நேரங்களில் அதையும் இஸ்லாமிய இனவெறியோடு முடிச்சுப் போட்டு கொச்சைபப்டுத்திய்வர்கள். ஈழம் என்றால் தமிழ் இன வெறி என்கிறார்கள்.

  போரால் பாதிக்கப்பட்ட குழந்தை மாதிரி ஒரு குழந்தை வேடமிடுகிறது என்றால் அந்தக் குழந்தையின் பெற்றோருக்கு இந்த சமூகத்தின் பால் உள்ள அக்கறையை இரக்கத்தை நாம் பாராட்டியாக வேண்டால். அவ்வையார் மாதிரி விவேகானந்தன் மாதிரி வேஷமிட்டால் உனக்கெல்லாம் அதிகப்பிரசங்கித்தனமாக தெரியாது ஆனால் ஒரு ஈழக் குழந்தை போல வேட மிட்டால் அது அதிகப்பிரசங்கித்தனமாக தெரிகிறதா?

  பள்ளிகளில் நடக்கும் மாறு வேடப் போட்டிகளில் சங்கர்ராமன் கொலை புகழ் ஜேயேந்திரன் மாதிரி வேடமிட்டு குழந்தைகள் மேடைக்கு அவ்ருகிறது. அதை நம்ம அம்பிகள் கன்னத்தில் போட்டு கொஞ்சுவாள். ஆனால் பெரியார் மாதிரி வேடமிட்டு மேடைக்குப் போனால் ஏற்றுக் கொள்ள மருத்த சூழல் எல்லாம் உண்டு. பார்ப்பனீயத்தை எழுச்சி கொண்ணு அடக்கும் படியான உழைக்கும் மக்கள் உண்ர்வுகள் இங்கு எழ வேண்டும்.

 4. பின்னூட்டமிட்டமைக்கு நன்றி தமிழன்,பாண்டியன்,ஓர்மைகள். அவரவர் அளவில் புரிதல்களோடு கருத்துக்களை பின்னூட்டமிட்டிருக்கிறீர்கள். இது குறித்து இன்னும் விரிவாக என்னால் பேச இயலாத சூழலில் இருக்கிறேன். இங்கே எந்தக்கருத்தை சொல்லப்போனாலும் ஆதரவு அல்லது எதிர்ப்பு என்கிற இரண்டுக்குள் மட்டுமே அடக்கப்படுகிற நிலைமை இருக்கிறது.மூன்றாவதாக ஒன்று இருக்கக்கூடுமென யாரும் உணருவதாகத் தெரியவில்லை.
  என் தோழி சுகிதா மீது நண்பர் பாண்டியன் வைத்திருக்கும் விமர்சனத்திற்கு அவரே வந்து பின்னூட்டமிடுவார்.

 5. வணக்கம். மீள்வருகை மகிழ்ச்சியளிக்கிறது.

  இப்பதிவைப் படித்த உடன் இரண்டு விதமான சிந்தனைகள் தோன்றியது. நம்முடைய பிள்ளைகளை ஏன் இது போன்ற பள்ளிகளில் சேர்க்க வேண்டும். சேர்த்தாலும் அங்கே ஏன் இது போன்ற முயற்சிகளை (அவற்றின் தரம் தெரிந்தும்) செய்ய வேண்டும்? என்று.

  நன்றாக யோசித்துப் பார்த்தால் வேறு விதமாகவும் தோன்றுகிறது. நம்முடைய குழந்தைகளைத் தமிழ்ப் பள்ளிகளில் சேர்ப்பது என்பது ஊருக்கு வெளியே வாழும் தலித் மக்கள் தங்களுக்காக ஒரு கினறு வெட்டிக் கொள்வது போன்றதே. ஏன் தலித் மக்களாக இருந்துகொண்டு பொதுக் கினற்றில் நீர் எடுக்கக் கூடாது என்பது போலவே, ஏன் ஆங்கில வழிப் பள்ளியில் தமிழுணர்வுடன் படிக்கவைக்கக் கூடாது என்றும் யோசிக்க வேண்டியிருக்கிறது.

  இப்படிப்பட்ட பள்ளியிலும் மாந்த நேய உணர்வுடன் முயற்சி செய்து பார்த்த உங்கள் தோழிக்கு எனது பாராட்டுக்களைத் தெரிவிக்கவும்.

  _________________________________________________
  10 வயது உட்பட்ட குழந்தைகளுக்கு வன்முறையின் சுவட்டை கூட காண்பிக்க கூடாது. வித்யாசமாக செய்கிறேன் ஈழ தமிழனுக்கு ஆதரவாக பேசுகிறேன் என்று தமிழ் மொழி வெறியையும் வன்முறை பற்றிய செய்தியையும் தன் குழ்ந்தையின் மனதில் உங்கள் தோழி விதைத்து விட்டார்.
  _________________________________________________

  ஈழத்தில் பத்து மாதத்திற்கு உட்பட்ட குழந்தைகள் கூட செத்து மடிகின்றன. அதனால்தான் தன் குழந்தையை தமிழீழக் குழந்தையாக ஒப்பனை செய்து அழைத்துச் சென்றிருக்கிறார். இது தமிழ் வெறி என்றால் தமிழ் வெறி என்ற பெயருடனேயே இருந்துவிட்டுப் போகட்டும். எவ்விதத்திலும் மறுப்பதற்கில்லை.

 6. ஓர்மைகள் கருத்தோடு நான் ஒத்துப் போகிறேன். பாண்டியன் போன்ற பழமைவாதிகளின் குப்பைகளை கருத்துரிமை என்ற பெயரில் நாம் அனுமதிக்கத் தேவையில்லை என்றே நினைக்கிறேன்.

  //தோழி செய்ததில் சிறிது கூட அர்த்தம் இல்லை இங்கு தமிழ் நாட்டில் தமிழனுக்கே ஆயிரம் பிரச்சனைகள் 1) விலைவாசி 2) பாதுகாப்பின்மை 3) வேலை இழப்பு 4) மின்சார வெட்டு 5) நாடாளுமன்ற தேர்தல் – அதில் வோட்டு போடுபவர்க்கு கட்சிகளிடம் எவ்வளவு கிடைக்கும் பிரியானி ஸ்ல்பேட்டா கிடைக்குமா ………. இதில் அவர்கள் இலங்கை தமிழர் மீதான தாக்குதலுக்கா கவலை படப்போறாங்க// என்று கரன்ட் கட் பற்றிக் கவலைப்படும் பாண்டியன்,

  ”பாலஸ்தீனத்தில், போஸ்னியா வில், செர்பியா வில், அல்ஜீரியா வில், கொசாவா வில், ஈராக்கில், ஆப்கானில் குழந்தைகள் கொல்லபடவே இல்லையா?” என்று கேட்டிருப்பது விந்தையிலும் விந்தை. இதிலிருந்தே பாண்டியர்களின் பொதுப்புத்தி விளக்கமாகப் புரிந்துவிடுகிறது. சுகிதாவுக்கும், நந்தினிக்கும் பாண்டியர்கள் புத்திமதி சொல்லவேண்டிய அவசியமில்லை. அதை அவர்களின் வீட்டுக்குள் மட்டும் வைத்துக்கொள்ளட்டும்.

 7. //கல்விக்கூடங்கள் எனும் மூளை மழுங்கடிக்கப்பட்ட மனித உற்பத்தி சாலைகளில் இதுபோன்ற முற்போக்கான சிந்தனைகளுக்கு ஆதரவை எதிர்ப்பார்ப்பது நம் தவறுதான். ஒருபுறம் இலங்கை தமிழருக்காக இங்கிருந்து குரல்கொடுக்கும் தமிழர்களையும் இன்னொரு புறம் எங்கே எது நடந்தால் என்ன என் குழந்தை தங்கிலீஷ் படித்து அமெரிக்கா போனால் சரியென்று கிடக்கிற தமிழர்களையும் ஒருசேர பார்க்க முடிகிறது. இதில் யாரைக்குற்றம் சொல்லியும் பலனில்லை. ஏற்கனவே சமுதாயத்தில் ஊன்றப்பட்டு வேறோடியிருக்கிற ஒரு பிரச்சினைக்கு ஒருவரியில் தீர்ப்பு சொல்லிவி்ட முடியாது.//

  ஆகக் கடைசியாக என்னதான் சொல்ல வருகிறீர்கள்?

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.