பகுதி-1
ஒருவரின் ஒழுக்க மீறலை அல்லது ஒழுக்க சீலத்தை சுட்டும்போது, அவர் சார்ந்துள்ள மதத்தோடு பொறுத்தி பேசுவது இயல்பான விஷயமாக இங்கே இருக்கிறது. ‘இஸ்லாமிய‘ தீவிரவாதி என்ற சொல்லாடலும் ‘பார்ப்பான் உயர்ந்தவன்‘ என்கிற எண்ணமும் இதற்கு உதாரணங்களாகக் கொள்ளலாம். உயர்ந்த நல்லோழுக்கங்களையும் அன்பையும் சகோதரத்துவத்தையும் இன்னபிற நல்லனவற்றையும் வலியுறுத்துவதாக சொல்லப்படும் அனைத்து மதங்களைச் சேர்ந்த தீவிர பற்றாளர்களும்கூட அடிப்படையில் மனிதர்களே! மதங்களால் புனிதர்களாகப்படும் எல்லோருக்குமே புனிதத்திற்கு எதிரிடையான பக்கமும் இருக்கிறது என்பதற்கு வரலாற்றிலும் நிகழ்காலத்திலும் ஏராளமான உதாரணங்களை நாம் பார்த்துவருகிறோம். மதத்தால் புனிதராக்கப்பட்டவருக்குள் எப்படி சராசரியான மனித இயல்புகள் இருக்கிறதோ, அதுபோலவே இஸ்லாம், கிறித்துவம், இந்து என உலக மதங்கள் அத்தனையிலும் பெண் ஒடுக்குதலும் அவள் இரண்டாம் பாலினமாகக் கருதப்படுவதும் இருக்கிறது.
கருணையும் குரூரமும் மனித இயல்பானால், பெண் மீதான ஒடுக்குதல் என்பது ஆணாதிக்கச் சிந்தனை, இச்சமூகத்திற்கு இயல்பென செயற்கையாக உருவாக்கிக் கொடுத்திருக்கும் கொடை. அது வழிவழியாக இச்சமூகத்ததில் பெண் ஒடுக்கப்பட வேண்டியவள் என்பதை ஆணுக்கும் ஒடுக்கப்பட பிறந்தவர்கள் என்பதை பெண்ணுக்கும் போதிக்கிறது. இந்தியாவில், ஈரானில், அமெரிக்காவில் எங்கு பிறந்தாலும் காலச்சாரங்களும் நாடுகளும் வேறுபட்டிருந்தாலும் பெண், ஒடுக்குதலுக்கு ஆளாக வேண்டியவள் தான்! இது குறித்து பெண்ணிய சிந்தனையோடு கூடிய ஆய்வுகளும் கட்டுரைகளும் இலக்கிய பதிவுகளும் உலகம் முழுவதும் சொல்லிக்கொண்டிருக்கின்றன. அந்த வகையில் எகிப்து பெண்ணிய எழுத்தாளரான நவ்வல் எல் சதாவியின் எழுத்துகளை மதிப்பு மிக்க ஆவணங்களாக கருத முடியும்.
நீண்ட மாதங்களுக்கு முன் ஒரு இலக்கிய பத்திரிகையில் நவ்வல் எல் சதாவி குறித்த கட்டுரையை வாசித்தபோது, அவர் மீது ஒருவகை ஈர்ப்பு உண்டானது. நவ்வல் எல் சதாவி குறித்த மேலதிக விவரங்களை அவருடைய இணைய தளத்தில் படித்து அறிந்தேன். சில கட்டுரைகளையும் அங்கே படிக்க முடிந்தது. கட்டுரை, சிறுகதை, நாவல் என பன்முகத் தன்மையோடு ஏராளமாக எழுதியிருக்கும் அவருடைய எழுத்துகளைப் படிக்க ஆர்வம் மேலிட்டது. குறிப்பாக
Women at point zero
நாவலை படிக்க விரும்பினேன். புத்தகக் கடைகளில் விசாரித்தபோது அப்போதைக்கு இருப்பில் இல்லை என்று கூறி, வேண்டுமானால் தருவித்து தருவதாக பதில் வந்தது. அழைப்பு எண்ணை தந்துவிட்டு வந்த நேரம், எண்ணையே மாற்ற வேண்டியதாகிவிட்டது. நேரில் சென்றும் விசாரிக்கவில்லை. அதோடு வேறுவேறு வேலைகளில் கவனம் கொள்ள எதேச்சையாக தி.நகர் புக் லேண்டில் Women at point zero-ன் தமிழ் பெயர்ப்பாக ‘சூன்யப் புள்ளியில் பெண்‘ நாவலை புத்தகமாகப் பார்த்தேன். ஆங்கிலத்தில் படித்திருந்தால் ஒரே மூச்சில் படித்திருக்க முடியுமா என்று தெரியாது. தமிழில் கிடைத்ததால் விரைந்து முடித்தேன். லதா ராமகிருஷ்ணனின் மொழிபெயர்ப்பு இது. மூல மொழியில் படிக்காததால் மொழிபெயர்ப்பு குறித்து பேசுவது சரியாக இருக்காது.
1974 ல் நவ்வல் எல் சதாவி அரசியல் கைதியாக சிறையில் இருந்தபோது அங்கு சந்தித்த ஃபிர்தவுஸ் என்ற பெண்ணின் வாழ்க்கை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்ட நாவல் இது. நாவல் குறித்து பேசுவதற்கு முன் நவ்வல் எல் சதாவி குறித்து சில குறிப்புகளைத் தர விரும்புகிறேன். நவ்வல் எல் சதாவியின் அப்பா சுதந்திரப் போராட்ட வீரர். கல்வி அமைச்சகத்தில் பணியாற்றியவர். பெண் இரண்டாம் பட்சமாக ஒதுக்கப்படுவதை தன் குடும்பத்திலிருந்தே ஆரம்பிக்கும் அனுபவத்தின் வாயிலாக உணர்கிறார் நவ்வால். தன் சகோதரனைவிட தான் படிப்பிலும் இன்னபிற விஷயங்களிலும் முதன்மையானவராக இருந்தபோதும் சகோதரனுக்கு தன் குடும்பத்தினரிடம் கிடைக்கும் சலுகையும் அன்பும் (இந்த விஷயம் நம்முடைய குடும்பங்களுக்கு இப்போதும் பொருந்திப்போவதை கவனிக்க) இவருக்கு கிடைப்பதில்லை. அடிப்படையில் ஒரு பெண் எதிர்கொள்ளும் குடும்ப, சமூக பிரச்சினைகளை நவ்வால் எதிர்கொண்டபோதிலும் உளவியல் மருத்துவம் படிக்க வைக்கும் அளவுக்கு அவருடைய குடும்பத்தினர் கல்வியின் அவசியத்தை உணர்ந்தவர்களாக இருந்திருக்கிறார்கள்.
உளவியல் மருத்துவராக குடும்ப வன்முறைகளால் பாதிக்கப்பட்ட பலதரப்பட்ட பெண்களை சந்திக்கும்போது அவருக்குள் பெண்ணிய சிந்தனை கிளர்ந்து எழுந்துள்ளது, எழுதத் தொடங்கியிருக்கிறார். ஆய்வு நோக்கில் அவர் எழுதிய கட்டுரைகள், நாவல்கள் மத அடிப்படைவாதத்தை கேள்விக்குட்படுத்துவதாகவும் அரசுகளை விமர்சிப்பதாகவும் இருந்த காரணத்தினால் அரசியல் கைதியாக ஒரு வருடம் சிறையில் அடைக்கப்படுகிறார். அங்கே எழுதவதற்கு மறுக்கப்படுகிறது. கழிப்பறையில் பயன்படுத்தும் டிஷ்யூ பேப்பரில் ஐப்ரோ பென்சிலைக் கொண்டு எழுதுகிறார். சிறையிலிருந்து விடுதலையான பின்பும் அடிப்படைவாதிகளிடமிருந்தும் அரசிடமிருந்தும் தொடர்ந்துகொண்டிருந்த அச்சுறுத்தல் காரணமாக அமெரிக்காவில் குடியேறியிருக்கிறார் நவ்வால். அவருடைய எழுத்துப் பயணம் சற்றே அசுவாசத்தோடு தொடர்ந்து கொண்டிருக்கிறது.
இன்னும் ஆணாதிக்கம் இருக்கத்தான் செய்கிறது. இருந்தாலும் கடந்த காலம் போல் இப்போது இல்லை. நிறைய மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. மூலமொழியில் படிக்காவிடாலென்ன, தமிழில் படித்ததிலிருந்து ஒரு சில மேற்கோள்களைக் காட்டியிருக்கலாம்.
//கழிப்பறையில் பயன்படுத்தும் டிஷ்யூ பேப்பரில் ஐப்ரோ பென்சிலைக் கொண்டு எழுதுகிறார்.//
எழுதுவற்கே இப்படி கஷ்டப்பட்டார் எனில், அதைப் பாதுகாக்க எவ்வளவு போராடியிருப்பார்… வாவ்.
நன்றி உழவன். மாற்றங்கள் மேம்போக்காகத் தெரியகிறதே அன்றி அடிப்படையான விஷயங்களில் எல்லாம் பழைய கதையே தான் தொடர்ந்து கொண்டிருக்கிறது.
//மூலமொழியில் படிக்காவிடாலென்ன, தமிழில் படித்ததிலிருந்து ஒரு சில மேற்கோள்களைக் காட்டியிருக்கலாம்//
கட்டுரையின் ஒரு பகுதிதான் இது. அடுத்த பகுதியில் நிச்சயம் மேற்கோள்களுடன் எழுதுகிறேன்.
அநேகமாக தங்களிடம் ஒரு மடிக்கணிணியும் இனையதள இனைப்பும் இருக்கும் என்று தெரிகிறது. மேலும், நீங்கள் நிறைய ஆங்கில நாவல்கள் படித்துக்கொண்டிருப்பதும் விளங்குகிறது. ” நவ்வல் எல் சதாவி” பற்றி ஜவ்வு மாதிரி இழுக்காமல் சுருக்கமாக கொடுத்ததற்கு நன்றி. சதாவியின் ஹேர் ஸ்டைலை வைத்துப் பார்க்கும்போது எதிர்காலத்தில் நீங்களும் அவரைப்போலவே அறியப்படுவீர்கள் என்பதும் தெளிவாகிறது.
அன்புள்ள நண்பிக்கு வணக்கம்,
நீங்கள் பெண்களின் உரிமை என்று எதை சொல்கிறீர்கள்? உரிமை எப்படி உங்களுக்கு கிடைக்க கிடைக்க வேண்டும் என நினைக்கிறீர்கள் என்பதை தயவுசெய்து சொல்லுங்கள். பின்பு எனது கருத்தை சொல்கிறேன்.
அவதிப்படும் பெண்கள் இல்லாமல் இல்லை. முக்கியமாக வட மாநில பெண்கள்களின் நிலமை… எனக்கு என்ன தோனுதுன்னா, அடிமைப் பட்டுக் கிடக்கும் பெண்களுக்கு பேச வாய்ப்பு கிடைப்பதில்லை..
பேசுவதும் இல்லை…