அந்தரங்கத்தை பகிரலாமா?

வணக்கம் நேயர்களே!

இது டிஜிட்டல் யுகம்…

இன்னிக்கு செல்போனும் கம்ப்யூட்டரும் நுழையாத இடமே இல்ல..

அதுவும் கேமரா செல்போனுக்கு இளசுங்க மத்தியில இருக்கிற மவுசே தனிதான்!

கைக்குள்ள அடக்கமா பதுங்கியிருக்கிற இந்த கேமரா செல்போன் சமீபகாலமா ஆளையே விழுங்கிற பூதமா உலா வந்துட்டு இருக்கு…

வெளியே வராதா பல தற்கொலை சம்பவங்களுக்கு காரணமாவும் மாறிக்கிட்டு இருக்கு…

பலரோட வாழ்க்கையே கேள்விக்குறியாகி மனநோயாளிகளா திரிஞ்சுக்கிட்டு இருக்காங்க..

நேயர்களே..

இதைப்பத்தி தான் நாம இன்னிக்கு நிஜம் நிகழ்ச்சியில் பார்க்கப் போறோம்…

இந்தத் தகவல்கள் உங்களுக்கு புதுசா இருக்கும்..

அவ்வளவு ஏன் இந்த விஷயத்துல நீங்களும்கூட பாதிக்கப்பட்டிருக்கலாம்…

சரி…வாங்க நிகழ்ச்சிக்குப் போகலாம்…

பரபரப்புக்குப் பெயர்போன சென்னை வடபழனியில் உள்ள அந்த குறிப்பிட்ட தெருவில் புனிதா&அரவிந்த் காதல்… தெரு அறிந்த ரகசியம்!

பள்ளியில் ஆரம்பித்த காதல், கல்லூரி வரை நீண்டு திருமணத்திற்கு வந்து நின்றது.

ஆரம்பத்தில் முரண்டு பிடித்த பெற்றோர் பிள்ளைகளின் உறுதியைப் பார்த்து திருமணத்திற்கு நாள் குறித்தார்கள்.

அதுவரை இடைவெளிவிட்டு பழகிவந்த காதல் ஜோடி…

திருமணம் தான் ஆகப்போகிறதே இன்னும் எதற்கு இடைவெளி என நினைக்க…

வீட்டில் யாரும் இல்லாத நாளில் இந்த ஜோடி உற்சாகப்பட்டது.

புனிதாவுக்கே தெரியாமல் தங்களது உற்சாகத்தை செல்போனில் பதிவு செய்தான் அரவிந்த்.

பதிவு செய்ததை புனிதாவுக்கு போட்டு காட்டி ஆச்சரியப்படுத்தினான்.

இருவரும் குதூகலப்பட்டு அப்போதே அதை செல்போனிலிருந்து அழித்துவிடவும் செய்தார்கள்.

சில மாதங்களுக்குப் பிறகு, புதிதாக பலான சிடி ஒன்று சிக்கியிருப்பதாக நண்பர்களிடமிருந்து அரவிந்துக்கு அழைப்பு வந்திருக்கிறது.

கும்பலாக நண்பர்கள் சூழ்ந்திருக்க பலான சிடி ஓட ஆரம்பித்த சில நிமிடங்களில் அரவிந்துக்கு வியர்த்து கொட்ட ஆரம்பித்தது.

தானும் தன்னுடைய வருங்கால மனைவியும் தனிமையில் இருந்த அந்த நிமிடங்கள் விடியோவாக ஓடிக்கொண்டிருந்தது அரவிந்தின் எதிரில்…

கதறலோடு நிறுத்தச் சொன்னான் அரவிந்தன்.

ஆனால் அந்தப் பகுதி முழக்க விநியோகம் ஆகியிருந்தது அவனுடைய அந்தரங்கம்…

அரவிந்த் அடுத்து என்ன செய்வது என்று சுதாரிப்பதற்குள்…விஷயம் தீவிரமாகிவிட்டிருந்தது.

புனிதாவுக்கு அந்தத் தெரு ஆண்களிடமிருந்து வேண்டாத தொல்லைகள் வர ஆரம்பித்தன.

வெளியில் தலைகாட்ட முடியாத நிலைமை வர… அரவிந்தும் புனிதாவும் அந்த மோசமான முடிவை நோக்கி தள்ளப்பட்டார்கள்.

ஆம்…புனிதாவும் அரவிந்தும் தற்கொலை செய்துகொண்டார்கள்.

அதிர்ச்சியில் உறைந்துபோனது குடும்பமும் நட்பும்…

தனிப்பட்ட சந்தோஷத்திற்காக செல்போனில் அந்தரங்கமாக எடுத்த வீடியோ வெளியானது எப்படி-?

அரவிந்தின் நண்பர்கள் விசாரணையில் இறங்க, திடுக்கிடும் அந்த உண்மை வெளிவந்தது…

செல்போனிலிருந்து வேறு படங்களை பிரிண்ட் போட அருகிலிருந்த போட்டோ ஸ்டுடியோவில் மெமரிகார்டை கொடுக்க…

அவர்கள், அந்த படத்தோடு அந்தரங்கமாக எடுத்த படங்களையும் காபி செய்து, சிடி ஆக்கி விற்றுவிற்றார்கள்.

அரவிந்தின் நண்பர்கள் இதைக் கண்டுபிடித்து அந்த ஸ்டுடியோவை  அடித்து நொறுக்கி விட்டார்கள்…

ஆனாலும் திரும்பிப்போன இரண்டு உயிர்களும் குடும்ப மானமும் திரும்பி வராது தானே-?

சரி…அரவிந்தும் புனிதாவும் அழித்துவிட்டதாக நம்பியது… சிடி ஆனது எப்படி-?

அறிவியல் கதைகளில் வரும் டைம் மெஷினில் நிகழ்காலத்திலிருந்து இறந்தகாலத்துக்கு போவதுபோல அழித்துவிட்ட படங்களை, வீடியோவை திரும்பப் பெற முடியுமா?

முடியும் என்கிறது நவீன தொழிற்நுட்பம்…

எப்படி?

தொழிற்நுட்பத்தை ஆக்க சக்தியாவும் அழிவு சக்தியாவும் பயன்படுத்தறது நம்ம கையல தான் இருக்கு…

நாம அல்ப சந்தோஷப்பட்டு சில விஷயங்களை செஞ்சி…

அது சில வேண்டாத நபர்கள்கிட்ட போகும்போது அதுவே அழிவு சக்தியா மாறிடுது..

அரவிந்த்&புனிதாவுக்கு நடந்தது இதற்கு உதாரணமா போயிடுச்சி…

வீட்டுல ஆளுக்கு ஒரு காமிரா செல்போன் வச்சிருக்க இந்த தொழிற்நுட்ப யுகத்துல இதுபோன்ற குற்றங்கள் அதிகரிச்சிட்டே வருது…

அழிஞ்சிட்டதா உறுதிப்படுத்தப்பட்ட அந்தரங்க படங்கள் இணைய தளங்கள்ல, சிடிக்கள்ல உலவுவது பலரோட வாழ்க்கையையே திசை மாத்திடுது…

கல்லூரி பெண்கள்லேர்ந்து திருமணமாகி இரண்டு குழந்தைக்கு தாயான பெண்கள் வரை இந்த பிரச்சினை பலரை பாதிக்குது…

வாங்க அதுல பாதிக்கப்பட்ட சிலரை சந்திக்கலாம்…

ஸ்ருதி கோவையில் உள்ள ஒரு தனியார் கல்லூரி மாணவி.

வெளியூரிலிருந்து வந்து ஹாஸ்டலில் தங்கிப் படிக்கிறார்…

தன்னுடைய 20வது பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஹாஸ்டல் தோழிகளோடு அறைகுறை ஆடையில் போட்ட ஆட்டத்தை செல்போன் கேமராவில் படமாக்கி சந்தோஷப்பட்டார்…

பார்த்து..பார்த்து சந்தோஷப்பட்டு வேண்டாமென அழித்துவிட்டு மற்ற படங்களை பிரிண்ட் போட கொடுக்க…

பிரிண்டுக்குப் போன இடத்தில் அழிந்துவிட்டவை உயிர்பெற்று பலான படங்களாக உலகம் முழுக்க இமெயிலில் உலாவந்துகொண்டிருக்க…

இறுதியில் ஸ்ருதிக்கும் வந்து சேர்ந்தது.

அதிர்ச்சியில் உறைந்துபோன ஸ்ருதி, தற்கொலைக்கு முயன்றார்.

ஸ்ருதிக்கு நடந்தது இப்படியிருக்க…கீதாவுக்கு நடந்தது எந்தவொரு பெண்ணும் நினைத்துப் பார்க்க முடியாதது.

கட்டிய கணவனே கயவனாக மாறிய கதை கீதாவுடையது…

ஏதோ ஆசைக்காகத்தான் அந்தரங்கத்தை படமெடுக்கிறார் என கீதா நினைக்க…

பார்த்துவிட்டு, அழித்துவிட்டதாக சொன்னான் கணவன்.

தோழி மூலம் தன்னைப்போல ஒரு பெண்ணின் அந்தரங்கமான படங்கள் நெட்டில் உலாவருவதாக தெரியவர…

நம்ப முடியாமல் திகைக்கத்துப்போனார் கீதா…

கீதா தைரியத்தோடு இதை எதிர்கொண்டு போலீசுக்குப்போனார்.

போலீஸ் விசாரணையில் வெளிவந்த தகவல் கீதாவுக்கு பேரிடியாய் இருந்தது.

அந்தப்படங்களை வெளிவிட்டு காசு பார்த்ததே அவர் கணவன்தான் என்பதே அந்தத் தகவல்…

செத்துப்போனதை உயிர்த்தெழ வைக்கும் தொழிற்நுட்பம் மூலம் இன்னும் எத்தனையோ முகம் தெரியாத பெண்களின் வாழ்க்கை… சீரழிந்து போயிருக்கிறது…

இதில் யாரை குறை சொல்வது…

அல்ப சந்தோஷத்துக்காக அந்தரங்கத்தை படமெடுக்க அனுமதிக்கும் இவர்களையா?

அல்லது… மற்றவர்களின் அந்தரங்கத்தை விற்று பிழைக்கும் அநாகரிகவாதிகளையா?

இந்த தொழிற்நுட்பம் எப்படி வேலை செய்கிறது?

இதுபோன்ற அந்தரங்க அத்துமீறல்களிலிருந்து தப்பிப்பது எப்படி…

இடைவேளைக்குப் பிறகு பதில்கள்…

அடுத்தவங்கள குறை சொல்றது…

அடுத்தவங்க என்ன செய்யறாங்கன்னு பார்க்கிறது…

இதெல்லாம் மனிதருக்குள் இருக்கிற சில குரூர புத்திகள்..

இதை வச்சித்தான் சில விஷமிகள், பலரோட வாழ்க்கையில விளையாடிட்டு இருக்காங்க…

இந்த விஷமிகளை வளரவிடாமல் தடுக்கிறது நம்ம கைலதான் இருக்கு.

தொழிற்நுட்பத்தை கையாலத் தெரிஞ்சிருக்கிற நமக்கு… அதனால வர்ற தீங்கை தடுக்கவும் தெரிஞ்சிருக்கணும்.

எப்படி-?

வாங்க தெரிஞ்சிக்கலாம்…

செல்போன், டிஜிட்டல் கேமாராக்கள், ஐ போன்கள், கம்ப்யூட்டர்கள், லேப்டாப்களில் பதியப்பட்டு அழிக்கப்படும் எந்தவொரு தகவலையும் டேட்டா ரெகவரி சாப்ட்வேர்கள் மூலம் திரும்ப எடுக்க முடியும்.

இந்த சாப்ட்வேர்கள் இலவசமாகவே இணைய தளங்களில் கிடைக்கின்றன…

டேட்டா ரெகவரி சாப்ட்வேர் மூலம் அழித்துவிட்ட படங்களை சுலபமாக எடுத்து அதை நெட்டில் உலவ விட்டும் சிடிக்களாக போட்டும் காசு பார்த்துவிடுகிறார்கள்.

இளம்பெண்கள், மணமான தம்பதிகள், காதலர்கள் ஆகியோர் அந்தரங்க திருடர்களின் டார்கெட்.

திருடுபோகும் செல்போன்கள், சர்வீசுக்குத் தரும் செல்போன்களிலும் அந்தரங்கப் படங்களைத் திருடி எடுக்கிறார்கள்.

இதுபோன்ற குற்றங்கள் அதிகமாக நடக்கும் இடம் என்று பாதிக்கப்படும் பலர் கைகாட்டுவது ஸ்டுடியோக்களைத்தான்…

தொலைந்துபோன தகவல்களைத் திரும்பப்பெற கண்டுபிடிக்கப்பட்டது டேட்டா ரெகவரி சாப்வேர்.

இப்போதோ அது, சிலரின் வாழ்க்கையையே புரட்டிப்போடும் விதத்தில் சமூக விரோதிகளின் கையில் சிக்கி சின்னாபின்னப் படுகிறது…

மேலும் பலரின் வாழ்க்கை சீரழிவதை தடுத்து நிறுத்த முடியுமா-?

சைபர் கிரைம் போலீசுக்கு இதைச் செய்யும் சக்தி இருக்கிறதா-?

நாளுக்குநாள் டிஜிட்டல் தொழிற்நுட்பம் வளர்ந்துகொண்டே போகிறது…

அதனால வரும் பிரச்சினைகளும் அதிகரித்துக்கொண்டேதான் இருக்கின்றன…

நம்முன் இருக்கும் கேள்வியெல்லாம் பிரச்சினைக்கு சாதகமாக இருக்கிறோமா…

அல்லது…தொழிற்நுட்பத்தை சாதகமாகப் பயன்படுத்தப் போகிறோமா…என்பதுதான்!

கேள்வியையும் பதிலையும் நீங்களே முடிவு செய்யுங்கள்…

நாணயத்தோடு ரெண்டு பக்கங்கள் மாதிரி எல்லா கண்டுபிடிப்புகளுக்கும் எல்லா விஷயத்துக்கும் இரண்டு பக்கங்கள் இருக்கு…

மோசமான பக்கத்தைப் பார்த்து பயந்துபோறதுல அர்த்தமே இல்ல…

எச்சரிக்கையா நடந்துக்கறதுதான் புத்திசாலித்தனம்…

ஏன்னா நம்ம கைக்குள்ள அடங்கியிருக்கிற செல்போன் நம்மையே அடக்கி ஆள நாம் எப்போவும் அனுமதிக்கக்கூடாது…

சன் நியூஸ் தொலைக்காட்சியில் வெளியான ‘நிஜம்’ என்ற க்ரைம் தொடருக்கும் நான் எழுதிய ஸ்கிரிப்ட்