கல்லறை இருக்கிறது- கல்வெட்டு மட்டுமே காணவில்லை

ஆதவன் தீட்சண்யா

எழுத்தாளர் தோழர் கே.டானியல் அவர்களின் கல்லறையை கண்டுவர முடியாத என் ஆதங்கத்தை நண்பர்கள் பலரும் தங்களது வலைப்பூக்களிலும் இணையதளங்களிலும் வெளியிட்டிருந்தார்கள். தீக்கதிர் நாளிதழும் வெளியிட்டிருந்தது. இன்னும் சில நண்பர்கள் இந்தக் கட்டுரை வேறுசில இணையதளங்களில் வெளியிடப்பட்டிருக்கிறதே என்று புருவத்தை உயர்த்தி தமது தளத்தில் வெளியிட முடியாதென உதட்டைப் பிதுக்கியிருந்தனர். எல்லாவற்றுக்கிடையிலும் டானியலின் கல்லறை பலரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறது. டானியல் கல்லறை குறித்த விசயம் இப்போது அந்த சுடுகாட்டில் மண்டியுள்ள புதர்களை சுத்தப்படுத்தும் வேலையை கிளப்பிவிட்டிருக்கிறது. பிப்ரவரி 2 ம் தேதி வாக்கில் ஊருக்குப் போகவிருப்பதாகவும் அப்போது இதுகுறித்து விசாரிப்பதாகவும் தோழர் மார்க்ஸ் தெரிவித்ததையடுத்துஇடுகாடு முழுவதும் மண்டிக்கிடக்கும் முட்புதருக்குள் டானியலின் கல்லறை சேதமின்றி இருக்கிறது தோழரே, நீங்கள்தான் சரியாய் தேடிப்பார்த்திருக்க தவறிவிட்டீர்கள் என்று மார்க்ஸ் சொல்ல வேண்டுமேன்று விரும்புகிறேன்…’ என்று முந்தைய கட்டுரையில் குறிப்பிட்டிருந்தேன். நான் விரும்பி எதிர்பார்த்த அந்த தகவல் கிடைத்திருக்கிறது. டானியலின் கல்லறை என்னவானது என்று பார்த்தறியுமாறு தன்னிடம் .மார்க்ஸ் தெரிவித்ததன் பேரில் பொ.வேல்சாமி தஞ்சை இடுகாட்டுக்குப் போய் பார்த்துவிட்டு 08.02.10 அன்று அங்கிருந்து என்னை தொடர்பு கொண்டார். டானியலின் கல்லறை அவ்விடத்தில் இருப்பதாகவும் ஆனால் கல்லறையின் மீதிருந்த கல்வெட்டை யாரோ பெயர்த்தெடுத்துள்ளதால்தான் உங்களால் அடையாளம் காண முடியாமல் போயிருக்கிறது என்றும் தெரிவித்தார். ஆறுமாதங்களுக்கு முன்பும்கூட அந்த கல்வெட்டு இருந்ததாகவும், வேண்டுமென்றே ( அதாவது வேண்டாமென்று) பெயர்த்தெடுப்பதைப் போலிருப்பதாகவும், கல்வெட்டு இருந்த இடத்தில் தாறமாறாக சிமெண்ட் பூசப்பட்டிருப்பது ஏனென்று தெரியவில்லை என்றும் வருத்தப்பட்டார். கல்லறையுள்ள பகுதியை யாரோ சிலதினங்களுக்கு முன்பு செதுக்கி சுத்தப்படுத்தியிருப்பதாகவும் கூறினார். எப்படியாயினும் தனது நண்பர் செல்வபாண்டியன் மூலமாக மீண்டும் புதிதாக கல்வெட்டு பதிக்க ஏற்பாடு செய்திருப்பதாக தெரிவித்துள்ளார். டானியல் கல்லறையை அடையாளம் காட்டியமைக்காக .மார்க்ஸ்பொ.வேல்சாமி ஆகியோருக்கு நன்றி. காணவில்லைடானியல் கல்லறை என்ற எனது முந்தைய கட்டுரையிலுள்ள கீழ்க்காணும் தகவல் பிழைகளுக்கு வருந்துகிறேன்.

1. கல்லறை எழுப்பியதில் .மார்க்ஸ், பொ.வேல்சாமி ஆகியோரது பங்களிப்பு குறித்து விடுபட்டிருந்தது. ‘டானியலின் கல்லறையை மக்கள் கலைஇலக்கியக் கழகம் கட்டியெழுப்பியிருந்ததாக தோழர்கள் சிலர் கூறினார்கள். .மார்க்ஸூக்கும், பொ.வேலுசாமிக்கும் இதில் கூடுதல் பங்களிப்பு இருந்திருக்கிறது…’ என்ற திருத்தத்தை கவின்மலர் மூலமாக நிச்சாமம்.காம், உயிர்மெய்.காம் உள்ளிட்ட தளங்களுக்கும் அனுப்பிவைத்தேன். சிலர் அந்த திருத்தங்களை வெளியிட்டுள்ளனர்.

2. மக்கள் கலைஇலக்கியக் கழகம் கல்லறையை எழுப்பியது என்ற குறிப்பும் பிழையானது. அந்த அமைப்பு இதனோடு யாதொருவகையிலும் தொடர்புபடவில்லை. உடன் வந்த தோழர்கள் சொன்ன இந்த தகவலை தோழர்.மார்க்ஸ் போன்றவர்களிடம் கேட்டு தெளிவுபடுத்திக் கொள்ளாமல் நானும் குறிப்பிட்டிருக்கக்கூடாது. உண்மையில் தானும் தனது சகோதரர்களுமே இக்கல்லறையை எழுப்பியதாக பொ.வேல்சாமி 08.02.10 அன்று என்னிடம் தெரிவித்தார்.

3. டானியல் பற்றிய வி.டி.இளங்கோவன் கட்டுரையில் வெண்மணிக்குப் போய்விரவேண்டும் என்ற அவரது விருப்பம் நிறைவேறவில்லை என்பதான தொனி இருந்ததை வைத்து அதை அவ்வாறே குறிப்பிட்டிருந்தேன். டானியல் வெண்மணிக்கு சென்று வந்திருக்கிறார் என்ற தகவலை கரவைதாசனிடம் வி.டி.இளங்கோவன் குறிப்பிட்டிருக்கிறார்.