​போலி​யோவும் எய்ட்ஸும்தான் ஒழிக்கப்பட​ ​வேண்டிய ​நோய்களா?

”மருத்துவம் என்பது உயிர்காக்கும் சேவை! மனித உயிர்களை மூலதனமாக்கி மருத்துவத்தை வியாபாரமாக்கும் வித்தையைத்தான் பல மருத்துவர்கள் செய்துவருகிறார்கள். நம்முடைய அரசுகளும் இந்த வியாபாரத்தின் கூட்டு ​கொள்​ளையர்கள் என்பதுதான் அவலம். அதனால்தான் ஆண்டுதோறும் கிட்டத்தட்ட மூன்றரை லட்சம் பேர் உயிரிழக்கக் காரணமான தொழுநோய் பற்றி கண்டுகொள்ளாமல், வெறுமனே 864 பேரை மட்டுமே பாதிக்கும் (உயிரிழப்பு அல்ல!) போலியோவுக்கு அதிகமாக நிதி ஒதுக்குகிறார்கள். போலியோ வந்துவிட்டால் குணப்படுத்த முடியாது என்று மக்கள் மேல் உள்ள அக்கறையில் அப்படிச் செய்யவில்லை. வெட்ட வெளிச்சமாகச் சொல்லப்போனால் போலியோவுக்குக் கிடைக்கும் பன்னாட்டு தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் நிதியும் சொட்டு மருந்து தயாரிக்கும் மருந்து கம்பெனிகள் மூலம் கிடைக்கும் கமிஷன் தொகையும்தான் காரணம்!” மருத்துவத்துறையில் நடக்கும் சுரண்டல்களை ஆதாரத்தோடு அடுக்கிக்கொண்டே போகிறார் மருத்துவர் புகழேந்தி. மருத்துவத்துறை கார்ப்பொரேட் மயத்தால் மக்களை சுரண்டி பைகளை நிரப்பிக்கொண்டிருக்கும் சூழலில் பத்து ரூபாய்க்கு மருத்துவம் செய்துகொண்டிருக்கிறார் மருத்துவர் புகழேந்தி. கடந்த 18 ஆண்டுகளாக கல்பாக்கம் அருகே இருக்கும் வாயலூர் கிராமத்தில் பார்த்துக்கொண்டிருக்கிறார் இவர். மக்கள் நலனுக்கு எதிரான மருத்துவ திட்டங்களை பின்பிளைவுகள் பற்றி கவலையில்லாமல் விமர்சிக்கும் ஒரே மருத்துவர் இவர் மட்டுமே!

”மத்திய பட்ஜெட்டில் எய்ட்ஸ், போலியோ போன்ற நோய்களை கட்டுப்படுத்த சென்ற ஆண்டைவிட இந்த ஆண்டு கூடுதலாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதாக அறிவித்திருக்கிறார்கள். அந்த அறிவிப்பிலேயே எய்ட்ஸ் நோயாளிகளின் எண்ணிக்கை 53 லட்சத்திலிருந்து 25 லட்சத்திற்கு குறைந்திருப்பதாக சொல்கிறார்கள். நோயாளிகளின் எண்ணிக்கை குறைந்திருக்கும் பட்சத்தில் எதற்காக சென்ற ஆண்டைவிட அதிகமாக நிதி ஒதுக்க வேண்டும்? அரசு தந்திருக்கும் கணக்கின்படி பார்த்தாலும் எப்படி ஒரு வருடத்தில் லட்சக்கணக்கில் நோயாளிகளின் எண்ணிக்கை குறைந்துவிடும்? அத்தனை பேரும் இறந்திருக்க வேண்டும் அல்லது தவறான புள்ளிவிவரம் அரசுக்கு கொடுக்கப்பட்டிருக்க வேண்டும்.
போலியோவில் நடந்ததுபோல்தான் எய்ட்ஸிலும். எய்ட்ஸ் தடுப்புக்காக பரிந்துரைக்கப்படும் சிரிஞ்ச், காண்டம், இரத்தப் பரிசோதனை போன்றவற்றால் பயனடையும் மருந்து தயாரிக்கும் பன்னாட்டு நிறுவனங்களின் மீதும் கார்ப்பொரேட் மருத்துவமனைகள் மீதும் அரசுகளுக்கு உள்ள கரிசனமே அதிக நிதி ஒதுக்கீட்டுக் காரணம்!
காண்டமை பயன்படுத்துங்கள், ஊசியை ஒரே ஒருமுறை மட்டும் உபயோகியுங்கள் என்று சொல்பவர்கள், அறுவை சிகிச்சையின்போது பயன்படுத்தும் கருவிகள் மூலம் பரவும் எய்ட்ஸ் பற்றி ஏன் எந்த எச்சரிக்கையையும் மக்களுக்கு சொல்வதில்லை?

நமது மேன்மைக்குரிய நீதிமன்றங்களும்கூட இதே வழியில் சிந்திப்பதுதான் நமக்கு வேதனையாக இருக்கிறது. தைராய்டு வருவதாக சொல்லி, அயோடின் கலக்காத சாதாரண உப்பை தடை செய்ய உத்தரவு போடுகிறது நீதிமன்றம். கேன்சர் போன்ற உயிர்கொல்லி நோயை உண்டாக்கும் பீடி, சிகரெட், மதுபானங்களை தடை செய்ய நீதிமன்றங்கள் ஏன் உத்தரவு போடுவதில்லை-? மது, சிகரெட் பாக்கெட்டுகளின் மேல் எச்சரிக்கை வாசகம் அச்சடிக்கப்பட்டிருப்பதுபோல, அயோடின் கலக்காத உப்பு பாக்கெட்டுகளின் மீதும் எச்சரிக்கை வாசகம் அச்சடித்து விற்க அனுமதித்திருக்கலாம். அப்படி எதுவும் செய்யவில்லை. அயோடின் கலந்த உப்புக்கு பெரிய அளவில் மார்க்கெட்டை பிடித்து வைத்திருக்கும் டாடா போன்ற நிறுவனங்கள் பலனடைவதைத்தான் அரசு விரும்புகிறது” என்று அரசின் தகிடுதத்தங்களை அடுக்கிக்கொண்டே போன மருத்துவர் புகழேந்தி சற்றே இடைநிறுத்தினார். பெண்களுக்கான நலத்திட்டங்களின் இப்படித்தானா? என்கிற கேள்விக்கு புகழேந்தியின் பதில்…

”பொதுவான நோய்களைத்தவிர பெண்களுக்கென்றே தனிப்பட்ட சில மருத்துவ பிரச்னைகளும் உள்ளன. உலகில் சத்துக்குறைவால் பாதிக்கப்படும் நான்கில் மூன்று பெண்கள் இந்தியாவைச் சேர்ந்தவர்கள். இதனால் பிரசவத்தின்போது தாயும் குழந்தையும் உயிரிழப்பது அதிகமாக நிகழ்கிறது. நம்முடைய ஆணாதிக்க குடும்பச்சூழலையும் இதற்கு காரணமாகக்கூற முடியும். இரத்தசோகையால் பாதிக்கப்படும் பெண்களும் இந்தியாவில்தான் அதிகம்! இரண்டரை கோடி பெண்கள் கர்ப்பபையில் தோன்றும் ஃபைபிராய்டு கட்டிகளால் ஆண்டுதோறும் பாதிக்கப்படுகிறார்கள். இருந்தும் பெண்களுக்கான திட்டங்கள் அரசுகளால் மேற்கொள்ளப்படாமலேயே உள்ளன” என்கிறார்.

”ஒவ்வொரு தனிமனிதனுடைய நலனிலும் அக்கறை செலுத்தவேண்டியது அரசின் கடமை. அரசோ, தனிநபர் ஒருவருக்கு செய்யும் மருத்துவச் செலவு 15 சதவீதம் மட்டுமே. மீதி 85 சதவீத மருத்துவ செலவுகளை மக்களே பார்த்துக்கொள்கிறார்கள்.
வருடந்தோறும் போடப்படும் பட்ஜெட்டில் 2 சதவீதத்துக்குள்தான் மருத்துவநிதி ஒதுக்கப்படுகிறது. உலக சுகாதார நிறுவனம் நிர்ணயித்துள்ள குறைந்தபட்ச நிதியான 5 சதவீதத்தைக்கூட எட்டவில்லை” என்றவர், அடுத்து சொன்ன விஷயம் நம் ஆட்சியாளர்களின் நிஜ சொரூபங்களை வெட்டவெளிச்சமாக்குகிறது.

”வயிற்றுப்போக்கு, நிமோனியா போன்ற நோய்களுக்கு குறைந்தது 5 லட்சம் பேர் வருடந்தோறும் பலியாகிறார்கள். போலியோ உள்ளிட்ட தண்ணீர் மூலம் பரவும் அத்தனை நோய்களையும் வராமல் தடுக்க முடியும். மருத்துவ விஞ்ஞானிகள் மூளையை குழப்பி கண்டுபிடித்த வாயில் நுழையாத மருந்துகளால் அல்ல. பாதுகாக்கப்பட்ட தண்ணீரால்! நம் அரசியல்வாதிகளுக்கு தண்ணீரில் போதிய வருமானம் இல்லை என்று நன்றாக​​வே தெரியும்!” மருத்துவர் புகழேந்தி ஆட்சியாளர்களை நன்கு புரிந்து வைத்திருக்கிறார்.

“ஆங்கிலத்தில் எழுதியிருந்தால் நோபல் பரிசு கிடைத்திருக்கும்!” – அசோகமித்திரன்

அப்போது எனக்கு இலக்கியத்தின் மீது பேரார்வம். தேடித்தேடி இலக்கியங்களை வாசித்துக்கொண்டிருந்தேன். பத்திரிகை தொழில் காரணமாக இலக்கியத்தின் மீது ஆர்வம் வந்ததா? அல்லது இலக்கிய ஆர்வத்தை என் தொழிலுக்கு பயன்படுத்திக் கொண்டேனா? எனத் தெரியவில்லை. ஆனால் இலக்கியம் படிப்பதையும், அதைப் பற்றி எழுதுவதையும் மிகவும் விரும்பியே செய்தேன். ஆரம்ப நிலை வாசகி என்பதால் எழுத்தாளர்களைத் தேடிப் போவதும் விருப்பமாய் இருந்தது. எழுத்துக்கும் நிஜத்துக்கும் நிறைய வித்தியாசங்களை பலரிடம் கண்டேன். உடைந்த பிம்பங்கள் குறித்து எனக்கு வருத்தமும் இல்லை, வியப்பும் இல்லை! நானும் என்னுடன் வந்திருந்த புகைப்படக்காரரும் என்ன ஜாதி என்று அசோகமித்திரன் கேட்டதையும் அதே மனநிலையில் தான் எதிர்கொண்டேன். சில கட்டுரைகள், சில சிறுகதைகள் தவிர அசோகமித்திரனை அதிகம் படித்ததில்லை. கட்டாயம் படிக்கவேண்டும் என்று வாங்கி வைத்திருக்கும் அவருடைய நாவல்கள், சிறுகதைகள் தொகுப்புகள் புரட்டப்படாமல் கிடக்கின்றன. அந்த புத்தகங்களைப் பார்க்கும்போதெல்லாம் நான் பிறந்த கிராமத்தில் வீட்டுக்குள் எங்களை அனுமதிக்காத லிங்காயத்து ‘சாமி’களை, அசோகமித்திரன் நினைவு படுத்திக்கொண்டே இருக்கிறார். பிரபல பத்திரிகை ஒன்றில் பணியாற்றியபோது எடுத்த பேட்டி இது. சுவாரஸ்ய குறைவு காரணமாக பேட்டி பிரசுரமாகவில்லை. பேட்டியில் சுவாரஸ்யத்தைக் கூட்டச் சொல்லி ஆசிரியர் குழு பலமுறை சொல்லியும் அதை செயல்படுத்த முடியாமைக்கான காரணங்களில் என் ஜாதி குறித்த அசோகமித்திரனின் கேள்விக்கு நிச்சயம் இடம் உண்டு. பழைய காகிதங்களுக்கு நடுவே இருந்த இந்த பேட்டியை கீழித்துப் போட மனம் வரவில்லை. பிரசுரிக்கிறேன்…

”முதுமையை என்னால் கொண்டாட முடியவில்லை. இறக்கி வைக்க முடியாத மாபெரும் சுமையாக இருக்கிறது. அதை இறக்கி வைக்கும் காலத்தைத்தான் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்” என்கிறார் அசோகமித்திரன். அறிமுகம் தேவையில்லாத தமிழ் இலக்கிய உலகின் மூத்த ஆளுமை.

”என்னுடைய இளமை பருவத்தில் செகந்திராபாத்திலிருந்து சென்னை வந்தேன். ஜெமினி ஸ்டுடியோவில் மக்கள் தொடர்பு அதிகாரியாக வேலை. அப்போதிருந்தே எழுதிக்கொண்டிருக்கிறேன். ‘நாடகத்தின் முடிவு’ நான் எழுதிய முதல் சிறுகதை. அந்த வேலையிலிருந்து விலகி முழு நேர எழுத்தாளனாகி அரை நூற்றாண்டுக்கும் மேலாகிவிட்டது. இடையே இருபத்தி மூன்று ஆண்டுகள் கணையாழி ஆசிரியராக இருந்தேன். எல்லாமே அனுபவம்தான். வாழ்க்கையில் எல்லாவிதமான அனுபவங்களையும் கடந்துவர வேண்டியிருக்கிறது. அந்த அனுபவங்களே படைப்புகளாகின்றன”

”தமிழ் இலக்கிய சூழல் தற்போது எப்படியுள்ளது?”

”தமிழ் ஜொலிக்கிற காலம் இது. நிறைய படைப்பாளிகள் எழுத வந்திருக்கிறார்கள். நிறைய புத்தகங்கள் வெளிவருகின்றன. என்னால் முடிந்தவரை எல்லா படைப்பாளிகளையும் படைப்புகளையும் வாசிக்கிறேன். ஒரு காலத்தில் தீவிர எழுத்தை சிற்றிதழ்களில்தான் பார்க்க முடியும். இன்று வெகுஜன பத்திரிகைளே தீவிர எழுத்துக்களை தேடிப்பிடித்து பிரசுரிக்கின்றன. சிற்றிதழ்களின் தேவையும் குறைந்துவிட்டதாகவே தோன்றுகிறது. நிறைய படைப்புகள் வெளிவந்தாலும் சமகாலத்தில் ஒரு படைப்பு சிறந்தது என்று சொல்லிவிட முடியாது. அப்படி கொண்டாடப்பட்ட எத்தனையோ படைப்புகள் காலப்போக்கில் காணாமல் போயிருக்கின்றன. கல்கி எழுதிய போது இதெல்லாம் எழுத்தா என்ற கடுமையான விமர்சனம் வைக்கப்பட்டிருக்கிறது. இன்று அவருடைய எழுத்து கொண்டாடப்படுகிறது. அதனால் ஒரு படைப்பு சிறந்ததா? இல்லையா? என்பதை பத்து, இருபது வருடங்கள் கழித்துதான் தெரிந்துகொள்ள முடியும்”

”சமீப காலங்களில் நீங்கள் எதைப்பற்றி பேசினாலும் அது சர்ச்சைக்குரியதாகிறதே?”

”நிஜத்தை பதிவு செய்வதில் எனக்கு விருப்பம் அதிகம். எழுத்தைப் போலவே தான் நானும் நிஜமாகவே இருக்க விரும்புகிறேன். எனக்கு இறை நம்பிக்கை உண்டு. மனிதர்களிடம் பகிர்ந்துகொள்ள முடியாத மனக்கஷ்டங்களை கடவுளிடம் மட்டுமே பகிர்ந்துகொள்ள முடியும் என்று திடமாக நம்புகிறேன். இதில் எந்தவித போலித்தனத்தையும் காட்டவில்லை. அதுபோலவே சில சமயம் எதார்த்தமாக சொல்லிப்போகிற வார்த்தைகள் சர்ச்சைகள் ஆகிவிடுகின்றன. ஒரு கலைஞன் மீது சொல்லப்படுகிற இப்படிப்பட்ட அவதூறுகள் எவ்வளவு தூரம் அந்த கலைஞனையும் அவனுடைய குடும்பத்தையும் பாதிக்கிறது என்பது பற்றி யாரும் கவலைப்படுவதில்லை. ஆனாலும் இந்த அவதூறுகள் எல்லாம் உண்மையான வாசகனையோ, படைப்பையோ ஒருபோதும் பாதிப்பதில்லை.”

”ஆங்கிலத்தில் எழுத ஆரம்பித்தவர் நீங்கள். அதை விட்டுவிட்டு தமிழிலேயே தொடர்ந்து இயங்குவது பற்றி வருத்தம் உண்டா?”

”தமிழின் வசீகரம் என்னை ஆட்கொண்டதால் ஆங்கிலத்தில் எழுதுவதை விட்டுவிட்டேன். ஒரு முறை வி.எஸ்.நைபால் என்னிடம் பேசிக்கொண்டிருந்தபோது ஆங்கிலத்தில் தொடர்ந்து எழுதியிருந்தீர்களானால் நிச்சயமாக உங்களுக்கும் நோபல் பரிசு கிடைத்திருக்கும் என்றார். ஆனால் எனக்கு தமிழில் எழுதுவதில் வருத்தம் ஒன்றும் இல்லை. எழுத்தை மட்டுமே பார்த்துக்கொண்டிருந்ததால் குடும்பத்தை சரியாக கவனிக்க முடியவில்லை என்கிற மனக்குறை இப்போது அழுத்துகிறது. சில தீர்க்கமான முடிவுகளை நான் எந்தவித பலாபலன்களையும் எதிர்பார்க்காமல்தான் எடுக்கிறேன்.”

படங்கள் நன்றி : அவுட்லுக்

“நாங்கள் (பார்ப்பனர்கள்) யூதர்களைப் போல் வாழ்கிறோம்” என்கிற அசோகமித்திரனின் அவுட்லுக் கட்டுரைக்காக போடப்பட்ட சித்திரங்கள் இவை.

கதைக்கான முடிவு உங்களிடமே – புதுமையான புத்தக அனுபவம்!

து வீடியோ கேம்ஸ் காலம். குழந்தைகளை மட்டுமல்லாது, முப்பதுகளைத் தொட்ட இளைஞர்களையும் கவர்ந்த பிளே ஸ்டேஷன் என்னும் வீடியோ கேம்ஸ் பாணியில் உருவாக்கப்பட்டதே ‘தி எனிமி ஆஃப் மை எனிமி'(The Enemy of my enemy)-யின் கதைக்களம். அதாவது கதையின் அடுத்த அடுத்த கட்டங்களை வாசகர்களே முடிவு செய்வார்கள். முடிவும் வாசகரின் விருப்பத்தைப் பொறுத்தது. தி எனிமி ஆஃப் மை எனிமி முதல் பாகத்தின் கதை இதுதான்…சூரிய தேவதை பூமியில் ஓர் அழகிய இளம் பெண்ணாக அவதரிக்கிறாள். அவள் எடுக்கும் அசாதாரண முடிவால் ஜப்பான் நகரம் சிற்பமாக உறைந்துபோய்விடுகிறது. அதோடு அந்நகரம் மட்டும் எப்போதும் பகலாகவும் உலகின் மற்ற இடங்கள் எப்போதும் இரவாகவும் இருக்கும்படி சபிக்கப்படுகிறது. இதை கதையின் நாயகனான ஜப்வாலா  நினைத்தால் மட்டுமே மாற்ற முடியும். சாகச நாயகனான ஜப்வாலாவின் அடுத்தடுத்த நகர்வுகளை தீர்மானித்து, உலகுக்கு ஒளியேற்றி வைக்கவேண்டிய பொறுப்பு வாசகரிடமே.


முதல் பாகத்தில் உலகத்துக்கு ஒளியேற்றி வைக்க பாடுபடும் ஜப்வாலா, இரண்டாம் பாகத்தில் ஒண்ணு, ரெண்டு, மூணு, நாலு, அஞ்சு என்ற பெயர் கொண்ட பப்பூன்களை தேடிப் பயணிக்கிறார். அன்டார்டிகாவில் இருக்கும் உலகத்தையே கைக்குள் வரவழைக்கும் சக்தி படைத்த மந்திர மையைத் தேடிப்போகும் பப்பூன்களை கண்டுபிடித்து ஜப்வாலாவிடம் ஒப்படைக்கும் பணி வாசகருடையது.


புதுமையான கதை சொல்லும் யுத்தியின் மூலம் முடிவில்லா கற்பனை உலகத்துக்கு அழைத்துச்செல்கிறது தி எனிமி ஆஃப் மை எனிமி – பாகம் 1 மற்றும் 2. எளிய ஆங்கில நடையில் எழுதியிருக்கிறார் புத்தக ஆசிரியர் அன்சுமணி ருத்ரா. இந்தியாவில் வெளியாகும் முதல் மல்டிபிளேயர் கேம்புக் என்னும் அறிமுகத்தோடு வந்திருக்கும் இந்த புத்தகம், குழந்தைகளுக்கான கதையும் புதிர் விளையாட்டும் கொண்ட டபுள் ட்ரீட்.

The Enemy of my enemy
Banana Republic – The Enemy of my enemy 2

விலை : ரூ. 90
ஆசிரியர் : Anshumani Ruddra
வெளியீடு : Scholastic India