ஓரினச் சேர்க்கை: ஒரு சமூக குற்றமா?

தென்னிந்திய ஃபேஷன் உலகில் தனக்கென ஒரு தனி இடத்தை உருவாக்கியிருப்பவர் சுனில் மேனன்… தன்னை ஓரினச் சேர்க்கையாளராக வெளிப்படையாக அறிவித்து, அதனாலேயே பல போராட்டங்களையும் சந்தித்தவர்.
”கட்டுக்கோப்பான கேரளக் குடும்பம் என்னுடையது. பள்ளி செல்லும் காலத்திலேயே என்னுள் இருக்கும் பெண் தன்மையை உணர ஆரம்பிச்சுட்டேன். ஆனாலும், என்னை வெளிப்படுத்திக்கொள்ள முடியாத சூழல். கவனத்தைப் படிப்பின் மீது முழு மூச்சாகத் திருப்பினேன். விலங்கியலில் பட்டப்படிப்பு முடிச்சதும், மானுடவியலில் மாஸ்டர்ஸ் படிக்கிறதுக்காக சென்னை வந்தேன். பிறகு, அதிலேயே ரிசர்ச் பண்ணிட்டு இருந்தேன். அப்போதான் உலக சுகாதார மையத் திலிருந்து, ஆண் ஓரினச் சேர்க்கையாளர்கள் மத்தியில் பணிபுரியும் வாய்ப்பு எதிர்பாராமல் வந்தது. அவர்களிடம் ஹெச்.ஐ.வி. பற்றிப் பிரசாரம் செய்யணும்கிறதுதான் எனக்கு இடப்பட்ட வேலை. 15 வருஷத்துக்கு முன்னாடி ஓரினச்சேர்க்கைங்கிறது அதிர்ச்சிகரமான விஷயமா இருந்தது. சமூகத்துக்குள் ஓரினச்சேர்க்கையாளர்கள் தங்களை அப்படி வெளிப்படையாகச் சொல்லிக்கொள்ள முடியாத நிலைமை இருந்தது. நானும் அவங்கள்ல ஒருத்தனா இருந்ததால, அப்படியானவங்களைத் தேடிக் கண்டுபிடிச்சு, ரிசர்ச் பண்றதுக்கு வசதியா இருந்தது. அப்போதான் எனக்கான சுதந்திரத்தை உணர்ந்தேன். ஓரினச்சேர்க்கையாளன்னு வெளிப்படையா அறிவிச்சுக்கிட்டேன்!” – அஸ்ஸாம் டீயை உறிஞ்சியபடி, சில நொடிகள் இடைவெளிவிட்டுத் தொடர்கிறார் சுனில்.
”ஆண் ஓரினச் சேர்க்கையாளர்கள் பத்தின ப்ராஜெக்ட் செய்து முடிச்ச பிறகு சில வருடங்கள் இடைவெளி விழுந்தது. அப்போதான் எனக்குள் இருந்த ஃபேஷன் ஆர்வத்தை வெளிப்படுத்த சந்தர்ப்பம் கிடைச்சுது. ஃபேஷன் கொரியோகிராஃபி படிச்சேன். எய்ட்சுக்கு நிதி திரட்டுவதற்காக ஒரு ஃபேஷன் ஷோ நடத்தினப்போ, கொரியோகிராஃபி பண்றதுக்கு எனக்கு வாய்ப்புக் கிடைச்சுது. அதுதான் என்னோட முதல் ஷோ! இதுதான் நான் சாதிக்கப்போற இடம்னு அப்போதே தீர்மானிச்சுட்டேன். ரொம்ப அழகா டிசைன் செய்த ஒரு டிரஸ்ஸைக் கடையில் அடுக்கி வெச்சிருந்தா யாரும் கண்டுக்க மாட்டாங்க. அதையே ஒரு மாடலுக்குப் போட்டு கிளாமரா வெளிப்படுத்தினா, பார்க்கிறவங்க உடனே அதை வாங்க நினைப்பாங்க. ஒரு ஃபேஷன் ஷோவோட முழுப் பொறுப்பும் ஃபேஷன் கொரியோகிராஃபரோடதுதான். மாடலைத் தேர்ந்தெடுக்கிறது, ஹேர் ஸ்டைல், ஸ்டேஜ்ல என்ன மியூஸிக் போடணும்னு எல்லாத்தையும் நான்தான் முடிவு செய்வேன். பொதுவா ஃபேஷன், மாடலிங் தொடர்பான இடங்கள்ல ஆண் வேலை பார்ப்பது பல நேரங்கள்ல சங்கடத்தைக் கொடுக்கும். ஆனா, என்னைப் போல உள்ளவங்களுக்கு ரொம்பவும் பொருத்தமான இடம் இதுதான். நீங்க எவ்வளவு தூரம் கிரியேட் டிவ்வா இருக்கீங்கன்னுதான் இங்கே பார்ப்பாங்க. ஒரு பேங்க்லயோ, ஐ.டி. கம்பெனியிலேயோ என்னால இவ்வளவு சுதந்திரமா வேலை பார்த்திருக்கவே முடியாது. புறம் பேசியே என்னை அவமானப்படுத்தியிருப்பாங்க! கடவுளோட ஆசீர்வாதத்தில் நான் தப்பிச்சுட்டேன்.
தென்னிந்திய ஃபேஷன் உலகத்தில் இன்னிக்கு எனக்குனு ஓர் இடம் இருக்கு. இதுக்கு மூன்று பேர் முக்கியக் காரணம். ஃபேஷன் டிசைனர் ரெஹானே, என் ஃபேஷன் குரு பிரசாத் பித்தப்பா, இந்தியாவோட நம்பர் ஒன் ஃபேஷன் கொரியோகிராஃபர் என்னோட தோழி அட்சலா சச்தேவ்… இவங்க இல்லைன்னா நான் உருவாகியிருக்கவே முடியாது!” என்று நெகிழ் கிறார் சுனில்.
”ஆண் ஓரினச் சேர்க்கையாளனா இருந்துக்கிட்டு சமூகத்துல மதிக்கக்கூடிய இடத்துக்கு வர்றது அவ்வளவு சுலபமான விஷயம் இல்லை! இப்போ எனக்கு ஒரு கௌரவமான வேலை இருக்கு. வாழ்க்கை இருக்கு. ஆனா, என்னைப் போல உள்ள மத்தவங்க நிலைமையைச் சொல்லவே தேவையில்லை. சென்னைல இருக்கிற பெரும்பாலான ஆண் ஓரினச் சேர்க்கையாளர்கள் வறுமைக்கோட்டுக்குக் கீழே இருக்கிறவங்கதான். அவங்களையும் அறியாமல் வெளிப்படுகிற பெண்தன்மையால் எங்கேயும் வேலை பார்க்க முடியாம முடங்கிக் கிடக்கிறாங்க. அவங்களுக்குத் தெரிகிற மாற்று வழி பாலியல் தொழில்தான்! அதுல இருக்கிற ஆபத்துகள் தெரியாம போய் விழுந்துடறாங்க. அவங்களை மீட்பதற்காக ‘சகோதரன்’ங்கிற அமைப்பைத் தொடங்கினேன். இப்போ எங்க அமைப்புக்கு சர்வதேச அளவுல விருதும் அங்கீகாரமும் கிடைச்சிருக்கு.
இன்னிக்கு இருக்கிற இளைய தலைமுறையைச் சேர்ந்தவங்ககிட்ட ஓரினச்சேர்க்கையாளர்கள் பற்றின புரிதல் வர ஆரம்பிச்சிருக்கு. ஓரினச் சேர்க்கைங்கிறதை ஒரு சமூக குற்றமா அவங்க பார்க்கிறதில்லை. அந்தப் பக்குவம் எல்லாத் தரப்பிலும் வரணும்!”