அம்மாவின் டைரி…

பகுதி 1

அந்த ஊரில் முதல்முதலாக எஸ்.எஸ்.எல்.சி. படித்த பெண் நான்தான்.

எங்கள் கிராமம் ஒரு பசுமை நிறைந்த கிராமம். ஆறுகள், மலைகள் எங்கள் கிராமத்தைச் சுற்றி இருக்கும். அப்படிப்பட்ட கிராமத்தில் ஓர் ஏழ்மையான குடும்பத்தில் நான் இரண்டாவது பெண்ணாகப் பிறந்தேன். எனக்கு ஒரு அக்கா, இரண்டு தம்பிகள் இருக்கிறார்கள். அப்பாவும் அம்மாவும் மிகவும் வறுமையான நிலையில் இருந்தாலும் எங்களை பள்ளியில் சேர்த்துப் படிக்க வைத்தார்கள். படிப்பு அறிவு இல்லாத அப்பா, அம்மா. எங்களை ஊக்குவிக்கக்கூட ஆள் இல்லை. ஏதோ எங்களால் முடிந்த வரைக்கும் படித்து வந்தோம். அந்த ஊரில் எத்தனையோ பணக்கார குடும்பங்கள் இருந்தன. ஆனால் யாரும் நிறைய படிக்கவில்லை. அந்த ஊரில் முதல்முதலாக எஸ்.எஸ்.எல்.சி. படித்த பெண் நான்தான். எங்கள் குடும்பம் ஏழ்மையான நிலையில் இருந்தாலும் சந்தோஷம் இருந்தது. அந்த இளம் வயதில் துள்ளித் திரிந்து கொண்டிருந்தோம்.
விவசாய வேலைகளை செய்து என்னுடைய படிப்புக்குத் தேவையான புத்தகம். பேனாக்களை வாங்கிப் படித்தேன். என்னுடைய கிராமத்தில் எட்டாம் வகுப்பு வரைதான் பள்ளிக்கூடம். அதன் பிறகு, 4 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கிராமத்திற்கு நடந்து சென்று படித்து வந்தேன். என்னுடைய பள்ளி பருவத்தில் நல்ல நண்பர்கள் இருந்தார்கள். ஆனாலும் எஸ்.எஸ்.எல்.சி. முடித்து மேற்கொண்டு படிக்க முடியவில்லை. பின் திருமணம் செய்ய ஏற்பாடு செய்தனர்.
எனக்கு வரப்போகிற கணவர் எப்படிப்பட்டவர் என்று யாரும் விசாரிக்கவில்லை. திருமணம் ஆனால் சரி என்று கட்டி வைத்துவிட்டார்கள். அவர் ஒரு பஸ் கண்டக்டர். திருமணமும் நடந்தது.
திருமணம் ஆகி ஒரு நாள் கூட ஆகவில்லை. நீங்கள் தனிக்குடித்தனம் போங்கள் என்று எங்களைத் தனியாக அனுப்பிவிட்டார் மாமியார். எங்கள் தனிக்குடித்தனத்துக்கு எந்த பொருளையும் அவர் தரவில்லை. உணவுப்பொருள்கூட தரவில்லை. எனக்கு படிப்பு மட்டும்தான் தெரியும். வெளி அனுபவங்கள் எதுவும் தெரியாது. என்ன செய்ய முடியும்? ஏதோ அப்பா, அம்மா சிறு உதவிகள் மட்டும் செய்தார்கள். நான் கூலி வேலைக்குச் சென்று குடும்பம் நடத்தினேன். என்னால் அந்தக் கடினமான வேலைகளைச் செய்ய முடியாமல் அளவிடமுடியாத கண்ணீர் வடித்தேன். எப்படியோ கஷ்டப்பட்டு ஒரு அங்கன்வாடி டீச்சராக வேலைக்குச் சேர்ந்தேன்.
குடும்ப பொறுப்புகள் எல்லாம் நான்தான் பார்க்க வேண்டிய சூழ்நிலை. என்னுடைய கணவர், சம்பாதித்த பணத்தையெல்லாம் குடிப்பது,  ஆடிவிட்டு, அதற்கு மேல் கடன் வாங்கி செலவு செய்துவிட்டுத்தான் வீட்டுக்கு வருவார். கேட்டால் பலவிதமான பொய்களைச் சொல்லி ஏமாற்றிக் கொண்டுவருவார். இப்படி பத்து ஆண்டுகள் சென்றது. அதன் பிறகு, எனக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது.
(தொடரும்)

3 thoughts on “அம்மாவின் டைரி…

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.