அம்மாவின் டைரி-2

எனக்கு திருமணமாகி 10 ஆண்டுகள் கழித்து ஒரு பெண் குழந்தை பிறந்தது. அப்போதாவது என் கணவர் திருந்துவார் என்று நினைத்திருந்தேன். அவர் மேலும் அதிகமாக செலவு செய்ய ஆரம்பித்தார். என்னுடைய 3 மாத பிரசவ கால விடுப்பு முடிந்து வேலைக்குச் சேர்ந்தேன். அப்போது கைக் குழந்தையை வைத்திருக்கிறேனே என்றுகூட பார்க்காமல் எங்களை விட்டுவிட்டு ஊர்ஊராக சீட்டாடிக்கொண்டு திரிந்தார். நான் என்னுடைய 3 மாத கைக்குழந்தையைத் தூக்கிக் கொண்டு நான்கு கிலோ மீட்டர் தூரம் நடந்து வேலைக்குப் போவேன். அப்போது பட்ட கஷ்டங்களை அளவிட முடியாது. ஆனால் என்னுடைய குழந்தையைப் பார்த்து சந்தோஷப்படுவேன்.
நான் வேலை பார்த்து வந்தது கன்னடம், தெலுங்கு மொழி பேசும் மக்கள் அதிகம் வாழும் பகுதியில். அங்கு தமிழ் பள்ளிக்கூடம் இல்லை. நாங்கள் வசித்த கிராமத்திலிருந்து 2 கிலோ மீட்டர் தொலைவில் இருந்த மற்றொரு கிராமத்தில் இருந்த ஆரம்ப பள்ளியில்தான் என் மகளை சேர்த்து படிக்க வைத்தேன். தினமும் காலையில் என்னுடைய குழந்தையை விட்டுவிட்டு, மாலை 4 மணிக்கு போய் அழைத்து வருவேன்.
நான் வேலை செய்த கிராமத்து மக்கள் மிகவும் நல்லவர்கள். எனக்குத் தேவையான உதவிகளைச் செய்து வந்தனர். இந்த நேரத்தில் என்னுடைய பள்ளி ஆயாக்களை குறிப்பிட்டு சொல்கிறேன்.
என்னுடைய வேலைகளை சரியாக செய்து ஊர் மக்களுக்கு பல நன்மைகளைச் செய்தேன். அந்த ஊர் மக்களுக்கு தமிழ் பேச தெரியாது. தமிழ் படித்தவர்களும் கிடையாது. அதனால் நான் கஷ்டம் எதுவும் பார்க்காமல் அந்த ஊரைச் சேர்ந்த படிக்கிற பிள்ளைகளுக்கு தமிழ் பேச, எழுத கற்றுக் கொடுத்தேன். அதனால் அந்த ஊர் மக்கள் என் மீது பாசமாக இருந்தனர். அந்த ஊரில் நடைபெறும் அனைத்து விசேஷங்களுக்கும் என்னை அழைத்துச் செல்வார்கள். இப்படி 16 வருஷங்கள் அந்த ஊரில் வேலை செய்தபிறகு, எனக்கு பதவி உயர்வு கிடைத்தது.
அங்கன்வாடி டீச்சராக இருந்து, மேற்பார்வையாளராக பதவி உயர்வு பெற்றேன். பயிற்சிக்காக கோயம்புத்தூர் சென்றபோதுதான் என்னுடைய கணவருக்கு உடல்நிலை மிகவும் மோசமாக இருந்தது.

(தொடரும்)

2 thoughts on “அம்மாவின் டைரி-2

  1. அம்மாவின் டைரி 2 படித்த உடன் கோபத்துடன் ஒரு விசயம் எழுத தொடங்கும் போது முழுவதும் படித்துவிட்டு பிறகு பேசிக்கொள்வோம் என்றுக் காத்திருக்கிறேன்.
    வாழ்க வளமுடன்.
    கொச்சி தேவதாஸ்

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.