அம்மாவின் டைரி – 3

அங்கன்வாடி டீச்சராக இருந்து, மேற்பார்வையாளராக பதவி உயர்வு பெற்று, கோயம்புத்தூருக்கு பயிற்சிக்காக சென்றிருந்தபோது என் கணவருக்கு உடல்நிலை மிகவும் மோசமாகிவிட்டிருந்தது. ஆபரேஷன் செய்யாமல் விட்டால் உயிருக்கு ஆபத்து என்று சொல்லிவிட்டார்கள். கோயம்புத்தூரிலே மருத்துவமனையில் சேர்த்து அவரைக் காப்பாற்றி கூட்டிவந்தேன். பயிற்சி முடிந்ததும் சேலத்தில் பணி. அலுவலகத்துக்கு அருகிலேயே ஒரு வீடு பார்த்து குடி போனோம். சேலத்தில் வந்து என் கணவர் எந்த வேலைக்கும் செல்லவில்லை. என் சம்பள பணத்தை எல்லாம் வாங்கி நண்பர்களுடன் சேர்ந்து செலவு செய்துவிட்டு பலவித பொய்களை பேசுவார். இப்படி என்னுடைய வாழ்க்கையில் பணம் சேர்க்க முடியாமல் வாழ்ந்து கொண்டிருந்தேன்.

பல ஊர்களுக்கு மாற்றலாகி, அலுவலக ரீதியாகவும் நான் பல கஷ்டங்கள் பட்டேன். அத்தனை கஷ்டங்கள் பட்டாலும் அலுவலகப் பணிகளை சரியாகவே செய்தேன்.
பின் என்னுடைய மகள் பிளஸ் டூ படித்துவிட்டு பொறியாளராகவோ அல்லது நல்ல வேலைக்குத்தான் செல்வேன் என்று அடம் பிடித்தாள். நான் பணத்திற்கு என்ன செய்வேன்? நண்பர்களோ, உறவினர்களோ யாரும் உதவி செய்ய முன்வரவில்லை. என்னுடைய கணவரும் எந்த முயற்சியும் எடுக்கவில்லை. ஏதோ என்னால் முடிந்தவரைக்கும் பணம் சேர்த்து பின் சென்னை கல்லூரியில் சேர்த்து மகளை படிக்க வைத்தேன். பின் படிப்பை முடித்து என் மகள் தன்னுடைய திறமையை வைத்து ஒரு பணியில் சேர்ந்து வேலைப் பார்த்து வருகிறாள். என்னுடைய கணவர் இப்பவும் பலவித பொய்களைச் சொல்லி பணத்தை என்னிடமிருந்து வாங்கி வருகிறார். என்னுடைய கணவருக்குத் தெரியாமல் எந்த பணத்தையும் என்னால் சேமிக்க முடியவில்லை. என்னுடைய வாழ்க்கையில் நான் பட்ட கஷ்டங்கள் பல கோடி, இத்தனையையும் என்னுடைய மகளுக்காக தாங்கி வாழ்ந்து கொண்டு வருகிறேன். நான் வேலையிலிருந்து ஓய்வு பெற்று விட்டேன். என்னுடைய மகளும் திருமணம் செய்து கொண்டு பல்லாண்டு வாழ வேண்டும் என்று என்னுடைய சோகக் கதையை முடிக்கிறேன்.
இப்படிக்கு,
சி. விஜயம்.