ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் – முட்டாள் மாணவன்

1

பாரம்பரியமிக்க யூத குடும்பம் அது. அந்த குடும்பத்தின் தலைவர் ஹெர்மன் ஐன்ஸ்டீன், பொறியியல் படித்து வியாபாரம் செய்து கொண்டிருந்தார். அவருடைய மனைவி பாலின், பியானோ வாசிப்பதில் கைதேர்ந்தவர். பெற்றோர்களால் பார்த்து நடத்தப்பட்ட திருமணமானாலும் ஹெர்மன், பாலினுடைய இல்வாழ்க்கை நல்லபடியாகவே போய்க்கொண்டிருந்தது. அதற்கு சாட்சியாக ஒரு ஆண் குழந்தையும் பிறந்தது.
பாலின் அந்த குழந்தையை மிகவும் நேசித்தார். அவன் தன்னை அம்மா என அழைக்கும் காலத்திற்காக ஆவலோடு காத்திருந்தார். அவன் பேச ஆரம்பித்ததும் தான் கற்றுவைத்திருக்கும் அத்தனை இசை அறிவையும் அவனுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டும், அவனை பெரிய இசைக்கலைஞனாக்கிவிட வேண்டும் என்று துடித்தது அந்த இளம்தாயின் மனது. ஆனால்… அவனுக்கு இரண்டு வயது ஆனபோதும் பேச்சுவரவில்லை. அப்படியே பேசினாலும் மற்ற குழந்தைகளைப்போல அம்மா, அப்பா என்று வார்த்தைகளை முழுதாக உச்சரிக்கத் தெரியாது. அ, ப், பா என ஒற்றை வார்த்தைகளை மட்டுமே உச்சரிப்பான்.
நாட்கள் மாதங்களாகி, வருடங்களான பின்னும் இது மாறவில்லை. சுற்றியிருப்பவர்களின் கிண்டலும் கேலியும் அந்த இளம் தம்பதியை வாட்டி எடுத்தது. அவர்கள் வீட்டில் வேலை செய்த பெண்ணும்கூட “உங்களுக்கு முட்டாள் குழந்தை பிறந்திருக்கிறது” என்று பரிகாசம் செய்தாள்.
ஒருவழியாக அந்தத்தாயின் தொடர் முயற்சி வெற்றி பெற்றது. மூன்று வயதில் குழந்தை பேச ஆரம்பித்தான். எப்படி தெரியுமா-? தான் என்ன பேச வேண்டும் என்று மனதுக்குள்ளேயே வார்த்தைகளை கோர்வையாக்கிக் கொள்வான். அப்போது சத்தமே வராமல் அவன் உதடுகள் மட்டும் அசையும். பிறகு மனதுக்குள் பேசியதை எல்லோருக்கும் கேட்கும்படி சத்தமாக பேசுவான்.
இப்படியொரு வித்தியாசமான குணத்துடன் பள்ளிக்குப் படிக்கப்போன அந்தச் சிறுவனை ஆசிரியர்களும் மற்றவர்களும் அடிமுட்டாள் என தூற்றினார்கள். விளையாட்டிலும் உடற்பயிற்சி வகுப்புகளிலும் அந்தச் சிறுவனுக்கு சிறிதும் விருப்பம் இருக்கவில்லை. எந்த விஷயத்தையும் நத்தை வேகத்தில் செய்வதைப் பார்த்து இவன் எப்படி வாழப்போகிறனோ? என்று கவலைப்பட்டார்கள் ஹெர்மனும் பாலினும் ஆனால் தீர்க்கதரிசனம் மிக்க அவன் கண்கள் சாதாரணமானவன் இல்லை என்று சொல்லிக் கொண்டே இருந்தன. அவனுடைய 26வது வயதில் உலகமே ஒப்புக்கொண்டது அவன் ஒப்பற்ற மேதை என்று. அவன்தான் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்!

ஒரு முட்டாள் அதிமேதாவியான கதை ஐன்ஸ்டீனுடையது. நூறு ஆண்டுகள் கடந்த பின்னும் ஐன்ஸ்டீன் தந்த சார்பியல் தத்துவத்தை மீறிய இன்னொரு கோட்பாடு உருவாக்கப்படவில்லை. இன்னமும் மக்கள் மத்தியில் உயிர்ப்புடன் இருக்கும் இருபதாம் நூற்றாண்டின் ஒரே விஞ்ஞானி ஐன்ஸ்டீன் மட்டுமே!

ஆல்பர்ட் ஐன்ஸ்டீன், ஜெர்மனி வட்டேம்பர்க் நகரை ஒட்டியுள்ள உல்ம் என்னும் இடத்தில் 1879ஆம் ஆண்டு மார்ச் மாதம் 14ந் தேதி பிறந்தார். ஐன்ஸ்டீனுக்கு ஒரு வயதாக இருந்தபோது, அவரது குடும்பம் ஜெர்மனியின் மற்றொரு நகரமான முனிச்சுக்கு குடிபெயர்ந்தது-. ஐன்ஸ்டீன் அப்பாவும் சித்தப்பாவும் சேர்ந்து எலக்ட்ரிக் உபகரணங்கள் தயாரிக்கும் கம்பெனி ஒன்றை முனிச் நகரின் புறநகரில் ஆரம்பித்தார்கள். ஐன்ஸ்டீனுக்கு ஒரு தங்கை பிறந்தாள், பெயர் மாஜா.
சிறுவயது ஐன்ஸ்டீனுக்கு யூதமத போதனைகள் மிகவும் முக்கியமாக சொல்லித்தரப்பட்டன. கூடவே இசைப் பிரியையான அம்மாவின் விருப்பப்படி வயலினும் சொல்லித்தரப்பட்டது. முனிச் நகரில் அப்போது யூத மத பள்ளிகள் சரியான கல்வியை தராதபடியால், ஒரு கத்தோலிக்க பள்ளியில் ஐன்ஸ்டீன் ஆரம்ப கல்வி கற்க வேண்டியிருந்தது. 70 பேர் படித்த பள்ளியில் இவர் மட்டுமே யூதர். அதனாலேயே சக மாணவர்களால் இவர் ஒதுக்கப்பட்டார். அதோடு அந்தப் பள்ளியில் பெரும்பாலான நேரங்களில் மத கருத்துக்களையே சொல்லிக்கொண்டிருந்தார்கள். பின்னாளில் மத நம்பிக்கையற்றவராக ஐன்ஸ்டீன் மாற இந்த சம்பவங்கள் முக்கிய காரணமாக இருந்ததாக சொல்லப்படுவதுண்டு.
ஏற்கனவே பேசுவதில் குறைபாடு கொண்டிருந்ததோடு, மதரீதியாக ஒதுக்கப்பட்டவராக இருந்தாலும் ஆரம்ப படிப்பில் அவர்தான் முதன்மை மாணவராக வருவார்.
பெற்றோர் மகிழ்ச்சியில் ஆழ்ந்திருந்த அந்த சமயத்தில் ஐன்ஸ்டீன் திடீரென்று காய்ச்சலில் படுத்த படுக்கையானார். “கடவுளே! என் குழந்தையை குணமாக்கு என்று சதா வேண்டியபடியே இருந்தார் அம்மா. மருந்து, மாத்திரைகள் கொடுத்தும் பழைய ஐன்ஸ்டீனை அவர்களால் மீட்க முடியவில்லை. அப்போது சிறுவன் ஐன்ஸ்டீனை உற்சாகப்படுத்த அப்பா ஹெர்மன் கொடுத்த பொருள்தான் ஒரு மாமேதையை உருவாக்குவதற்கு அடித்தளத்தை அமைத்துக்கொடுத்தது…

தள்ளுபடி விலையில் ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் The evolution of physics வாங்க  இங்கே க்ளிக்கவும்.

5 thoughts on “ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் – முட்டாள் மாணவன்

  1. அறிவியல் பாடம் மட்டுமல்லாது அறிவியல் அறிஞர்களின் வரலாறுகளும் மாணவர்களுக்கு இதுபோல் சுவையாக சொல்லிக் கொடுக்கப் பட வேண்டும்

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.