நீங்கள் எதற்காக தங்கத்தை வாங்குகிறீர்கள்?

தங்கத்தின் மீது இந்தியர்களுக்கு இருக்கும் மோகம் அதீதமானது. இந்த அதீத மோகம்தான் சமீப வருடங்களில் ஆபத்தாகவும் மாறியிருக்கிறது. தினசரிகளைப் புரட்டினால் குறைந்தது ஒரு செய்தியாவது (பதிவு செய்யப்பட்டது, பதிவு செய்யப்படாதவை ஏராளமானவை) தங்கத்தை மையமாக வைத்து நடந்த குற்றமாக இருக்கும்.

நகைக்காக கழுத்து அறுத்துக் கொலை, ஓடும் பஸ்ஸில் நகை பறிப்பு, பூட்டியிருந்த வீட்டை உடைத்து கிலோ கணக்கில் தங்கம் கொள்ளை என குற்றங்களின் வகைகள் நீளும். இதில் கொள்ளையடிப்பவரோ, குற்றத்தை தடுக்க முடியாத அரசு காவல்துறையோ குற்றவாளிகள் அல்ல. அதீத மோகத்தில் தங்கத்தை வாங்கிக் குவிக்குப்பவர்கள்தான் குற்றவாளிகள்.

நீங்கள் எதற்காக தங்கத்தை வாங்குகிறீர்கள்? சில சுயபரிசோதனை கேள்விகள்…
1. லாபமான சேமிப்பு
நீங்கள் வாங்கியபோது ஒரு கிராம் தங்க ஆபரணத்தின் விலை ரூ. 2500 ஆக வைத்துக்கொள்ளுங்கள். வாங்கிய ஒரு மாதத்தில் விற்றால் உங்களுக்கு ரூ. 2400 கிடைப்பது கூட கஷ்டம்தான், ஆக.. உங்களுக்குத்தான் நட்டம்,. பதிளைந்து வருடத்துக்கு முன்பு கிராம் ரூ. 500க்கு வாங்கினேன். இப்போ ரூ. 2900 விற்கிறது என்று நீங்கள் பெருமை பேசினால் பணவீக்கத்தை தெரிந்து கொள்ளுங்கள். உண்மை உங்களுக்குப் புரியும்.
2. பெண்ணின் திருமணத்துக்காக சேமிக்கிறேன்
எதற்காக உங்கள் பெண் தங்கம் அணியவேண்டும்? ‘ஆத்திர அவசரத்துக்கு அவளுக்கு உதவுமே’ என்பது பெற்றோரின் வாதம். ஐயா, உங்கள் பெண் பிள்ளைகளை படிக்க வைத்து, சுயமாக சிந்திப்பதற்கும் கடினமான சூழ்நிலைகளை சமாளிப்பதற்கும் கற்றுக்கொடுங்கள். ஆத்திர அவசரத்துக்கு தங்க நகைகளை அடகு வைப்பதை அல்ல.
3. அந்தஸ்தின் அடையாளம்
தங்கத்தைப் போலவே, பளபளக்கும் தங்க முலாம் பூசி, தங்க கரைசலில் முக்கியெடுத்த ஆபரணங்கள் வகைவகையாக கடைகளில் கிடைக்கின்றன. அவற்றில் அசல் தங்க ஆபரணங்கள் போலவே நுணுக்கமான வேலைப்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன. அவற்றை அணிந்தால் நீங்கள் ஏன் இதையெல்லாம் அணிந்திருக்கிறீர்கள் என்று யாரும் உளவு பார்த்து கண்டுபிடிக்கப்போவதில்லை. தங்க நகைகள் அணிந்தாலும் தங்க முலாம் பூசிய நகை அணிந்தாலும் ஒரேவிதமாகத்தான் மதிக்கப்படுவீர்கள். உங்கள் அந்த அந்தஸ்து உங்கள் செய்கைகளில் வெளிப்பட வேண்டும். நீங்கள் அணிந்து கொள்ளும் நகைகளில் அல்ல. நீங்கள் அணிந்துகொள்ளும் நகைகள் மூலமாக அந்தஸ்து வரும் என்றால், ஜாக்கிரதை நீங்கள் ஒரு கிராம் தங்கத்துக்காகக்கூட கொல்லப்படலாம்.
தங்கத்தை ஏன் வாங்குகிறீர்கள் என்பதற்கு மேலே சொல்லப்படும் காரணங்களை இந்தியர்கள் காலம்காலமாக சொல்லிவருகிறார்கள். இதற்கு பின்னே ஏராளமான விஷயங்கள் இருப்பதை நாம் ஆராய வேண்டியிருக்கிறது.
1. தங்கத்தைத் தவிர நமக்கு சேமிப்பு முறைகள் எதுவும் தெரியாது.
உண்மையிலும் உண்மை. பெரும்பாலான இந்தியர்களின் ஒரே முக்கிய சேமிப்பு தங்கம் வாங்குவது மட்டுமே. பொதுத்துறை வங்கிகளில் சேமிப்பதோ, அல்லது பொதுத்துறை வங்கிகளை பயன்படுத்திக்கொள்வதோ மூன்றில் இரண்டு பகுதி இந்திய மக்களுக்கு இன்னும் எட்டாக்கனியாகவே இருக்கிறது. வங்கிகளின் கடுமையான நடைமுறைகள் ஒருபக்கம், இன்னொரு பக்கம் இன்றுவரை பணம் இருக்கும் நடுத்தர, மேல்தட்டு வர்க்கத்தின் பயன்பாட்டுக்கு மட்டுமே வங்கிகள் என்ற நிலை. ஏதோ ஒரு வங்கிக்குப் போய் சிடுமூஞ்சி வங்கி அதிகாரியின் கடுமையான பேச்சுக்களுக்கிடையே அவர்தரும் புரிந்துகொள்வதற்கு சிக்கலான படிவத்தைப் பூர்த்தி செய்து கொடுத்து, அவர் வரச்சொன்ன ஒரு நாளில் மீண்டும் வந்து அவரைப் பார்த்து வங்கியின் கணக்குப் புத்தகத்தை வாங்கி, தொடர் வைப்பு கணக்கு ஒன்றை ஆரம்பிப்பதற்குள் நமக்கு ‘ச்சீ’ என்றாகிவிடும். இதைவிட, ‘வாங்க.. வாங்க’ என வாய்நிறைய சிரிப்போடு வரவேற்கும் நகைக்கடைக்காரர் எவ்வளவு உயர்வானவர்.

இப்போதெல்லாம் நம்ம ஃபேவரைட் ஸ்டார் சூர்யா, நேற்றைய ஃபேவரைட் மாதவன், கடந்த பத்தாண்டின் ஃபேவரைட் ஸ்டார் பிரபு என வீட்டுக்கே வந்து கைப்பிடித்து நகைக்கடைகளுக்கு அழைத்துச் செல்கிறார்களே… அப்போ தங்க நகை வாங்கித்தானே ஆகணும்.

இந்த அக்கப்போர்களையெல்லாம் பார்த்து ‘நாம் மட்டும் சளைத்தவர்களா என்ன?’ என்று பொதுமக்களுக்கு வங்கி பயன்பாட்டினை எளிமையாக்க வேண்டிய பணிகளை விட்டுவிட்டு தங்கக் கட்டிகளை கூவிக்கூவி விற்கின்றன வங்கிகள். அட்சய திருதியைக்கு தங்கத்தை விற்பதற்கு இவர்கள் செய்யும் விளம்பரச் செலவு, பொதுத்துறை வங்கிகளிடம் விஜய் மல்லையா வாங்கிய கடனைவிட அதிகமாக இருக்கக்கூடும்.
2. ஏறிக்கொண்டிருக்கும் தங்கத்தின் விலை
2000ம் ஆண்டுவரை மிதமான விலையில் (கிராம் ரூ 500க்கு) விற்றுக் கொண்டிருந்த தங்கம், பாய்ச்சலாக கிராம் 2900க்கு விற்க என்ன காரணம்? இந்த அதீத விலையேற்றம் இந்தியாவில் மட்டும்தான் என்கிறது ஒரு பொருளாதார ஆய்வு. ஆக இது இந்திய முதலாளிகளின் கொள்ளை வணிகம் என்பது தெளிவாகிறது. இதற்கு ஊழல் அரசுகள் உடந்தை.

மிஸ்டர் பொதுஜனத்துக்கு ஒரு கேள்வி…
நீங்கள் அணுஉலைக்கு எதிராக போராடியிருக்கிறீர்களா? அல்லது கருத்து சொல்லியிருக்கிறீர்களா? அல்லது அதுபற்றி ஏதாவது தெரியுமா?
மத்திய அரசு தங்கத்தின் இறக்குமதி வரியை அதிகரித்தபோது என்னமாக குரல் கொடுத்தீர்கள்., தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு 10 ரூபாய் ஏறினாலும் உங்கள் வீட்டில் அடுப்பு எரிவதில்லை. அது எப்படி வீதியில் இறங்கி போராடத்தொடங்கிவிடுகிறீர்கள்? பெட்ரோல் விலை ஏறினாலும்கூட நீங்கள் கவலைப்படுவதில்லை. இந்த போராட்ட குணத்தை உசிப்பிவிடுவது நகைக்கடைக்காரா? இல்லை நகைகளை உங்கள் வீட்டுக்கே வந்து விற்கும் ஃபேவரைட் ஸ்டார்களா?

மிஸ்டர் பொதுஜனம்,
அணுஉலை நாளை உங்கள் சந்ததியையே இல்லாமல் ஆக்கிவிடும். சொல்லுங்கள் நீங்கள் எதற்காக போராட போகிறீர்கள்? உங்கள் சந்ததிகளின் வாழ்வுக்காகவா, அல்லது நீங்கள் கழுத்தறுபட்டு சாவதற்காகவா? உங்கள் முடிவு உங்கள் கையில்.

தங்கம் பற்றிய என் பதிவுகள் தொடரும்.

 

5 thoughts on “நீங்கள் எதற்காக தங்கத்தை வாங்குகிறீர்கள்?

  1. //தங்கத்தின் மீது இந்தியர்களுக்கு இருக்கும் மோகம் அதீதமானது//
    இது வேறா? தங்கம், அரங்கேற்றம் என்று ஆடம்பரங்களுக்கே பணத்தை அநியாயமா செலவிட தயாராக இருக்கிறார்கள் தமிழர்கள், இந்தியர்கள்.
    //எதற்காக உங்கள் பெண் தங்கம் அணியவேண்டும்?//
    அருமையான கேள்வி.

  2. //2000ம் ஆண்டுவரை மிதமான விலையில் (கிராம் ரூ 500க்கு) விற்றுக் கொண்டிருந்த தங்கம், பாய்ச்சலாக கிராம் 2900க்கு விற்க என்ன காரணம்? இந்த அதீத விலையேற்றம் இந்தியாவில் மட்டும்தான் என்கிறது ஒரு பொருளாதார ஆய்வு. ஆக இது இந்திய முதலாளிகளின் கொள்ளை வணிகம் என்பது தெளிவாகிறது. இதற்கு ஊழல் அரசுகள் உடந்தை.//

    I won’t agree on this… I am not sure people are verifying the gold rate around the world… . There could be + or – and there will be a small difference. But basically it represents the stability of the economy. If the people feel the economy is not good they will start investing in Gold and the price will go up. Now even in India as well a lot people investing in Gold they are all well educated.

    Before publishing something the columnist needs to very the worthiness of the content.

  3. தங்கம் வாங்குவதில் தொடக்கம் எல்லாவற்றிலுமே அப்பாவி பாமரமக்கள் நிலையிலேயே பெரும்படிப்பு படித்தவர்களும் இருப்பதே இந்தியாவின் மிக பெரிய துரதிஷ்டம்.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.