பாம்புகளோடு யானைகளும் புலிகளும் சாகடிக்கப்பட வேண்டியவைதான்!

தமிழில் விவசாயம், தொழிற்நுட்பம், மேலாண்மை குறித்த எழுத்துக்கள் ரொம்பவே குறைவு. இப்போதுதான் அவற்றையெல்லாம் எழுத ஆரம்பித்திருக்கிறார்கள். இந்தத் துறைகளில் தமிழ் பத்திரிகைகள் வருவதும் அங்கொன்றும் இங்கொன்றுமாக இருக்கிறது. பொருளாதார ரீதியிலான பலவீனம் காரணமாக இந்தப் பத்திரிகைகள் பெரிய அளவில் வாசகர்களை சென்று சேருவதில்லை. இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள நினைத்த விகடன் கொண்டுவந்ததுதான் ‘பசுமை விகடன்’.
தரமான கட்டுரைகளுடன் இயற்கை விவசாயம் குறித்து சூழலியல் நோக்கில் தொடர்ந்து எழுதிவருகிறது பசுமை விகடன். தொடர்ச்சியாக இல்லாவிட்டாலும் அவ்வப்போது ‘பசுமை விகடன்’ வாங்கிப் படிக்கும் வாசகி நான்.

தற்போது கடைகளில் இருக்கும் இதழில் பதினைந்து அடி நீளமுள்ள ராஜநாகத்தை அடித்துக் கொன்றதாக அப்பையா நாயக்கர் என்ற விவசாயியை வனத்துறையினர் கைது செய்துவிட்டதாக இதில் ஒரு செய்தி. ‘மரத்தடி மாநாடு’ என்ற தொடரில் (விவசாயம் சார்ந்த நல்லது கெட்டதுகளை அரட்டை பாணியில் சொல்லும் பகுதி) இதில் வரும் ஏரோட்டி என்ற கதாபாத்திரம் இந்த செய்தியை சொல்வதோடு, ‘‘ஏதோ கடத்தலுக்காக அடிச்சுக் கொன்னுருந்தா ஜெயில்ல போடறதுல தப்பில்ல.. பாவம், பயந்துபோய் அடிச்சவறுக்கும் அதே கதியா?’’ என்றுநொந்துபோய் சொல்வதாக முடித்திருக்கிறார்கள்.

மேற்கு தொடர்ச்சி மலைத்தொடரை ஒட்டியுள்ள ஒரு கிராமத்திலிருந்து மீட்ட ஆண் ராஜநாகத்துடன் காட்டுயிர் ஆய்வறிஞர் ரோமுலஸ் விட்டேகர்.

அடர்ந்த வனங்களில் மட்டுமே வாழும் ‘ராஜநாகம்’ இந்திய மண்ணுக்கே உரித்தான அரிய வகை உயிரினம். கிட்டத்தட்ட அழிந்துகொண்டிருக்கும் நிலையில் இருக்கிறது. இன்னும் பத்தாண்டுகளில் காட்சியகங்களில் மட்டுமே இது வாழும். அரிதாகிக் கொண்டிருக்கும் உயிரினம் என்பதால்தான் இதைக் கொல்லவோ, உயிரோடு வைத்திருக்கோ தடை விதித்து சட்டம் இயற்றி இருக்கிறது வனத்துறை. ‘‘பயந்துபோய் அடிச்சவறுக்கும் இதே கதியா?’’ என்று இந்தப் பத்தியை எழுதியவர் கேட்டிருப்பது இது குறித்து அவருக்கு உள்ள போதாமைக்காட்டுகிறது. இப்படியொரு போதாமையில்தான் எல்லா கட்டுரைகளும் எழுதப்படுகிறதா என்கிற சந்தேகமும் நமக்கு வருகிறது. நம்முடைய கவலையெல்லாம் லிவசாயிகள் மத்தில் நல்லதொரு மதிப்பைப் பெற்றிருக்கிற பத்திரிகை, அவர்களுக்கு தவறான வழிகாட்டியாக மாறிவிடக்கூடாது என்பதுதான். கோவை, நீலகிரி மாவட்டங்களில் யானைகளுக்கும் விவசாயி (காட்டை ஆக்கிரமித்து விவசாயம் செய்பவர்கள்)களுக்கும் உள்ள பிரச்னை அவ்வப்போது செய்தியாகிறது. தன் விவசாய பூமிக்குள் யானை புகுந்துவிடாமல் இருக்க,. மின்சார கம்பிகளில் வேலிகட்டி, யானைகளை பலியிடுவதை நியாயப்படுத்த முடியுமா?
அல்லது தன் இடம் பறிபோகும்போது வழியில்லாமல் குடியிருப்புகளில் புகுந்துவிடும் புலிகளை கொன்றுவிட்டு, ‘என் இடத்தில் வந்துவிட்டது’ என்று சொல்லலாமா? 15 அடி நீள பாம்பைக் கொன்றது சரியென்றால், 11 அடி நீளமுள்ள புலிகளைக் கொல்வதும் யானைகளைக் கொல்வதும் சரிதான்!

படங்கள் நன்றி : KING COBRA RESEARCH STATION, WESTERN GHATS 

2 thoughts on “பாம்புகளோடு யானைகளும் புலிகளும் சாகடிக்கப்பட வேண்டியவைதான்!

  1. ஆக அரிய இன நாகத்தை காக்க விலை மதிப்பில்லாத மனித உயிரை பலி கொடுக்கலாம் என்று சொல்கிறீர்கள்.நல்ல தீர்வு.

    • ரொம்பவும் மேலோட்டமாக புரிந்து கொண்டிருக்கிறீர்கள் நண்பரே… மனித உயிர் மட்டுமல்ல, இந்த உலகத்தில் உள்ள ஒவ்வொரு உயிரினத்தின் உயிரும் உயர்வானதுதான். இந்த உலகத்தில் மனிதர்கள் வாழ்வதற்காக மட்டுமே வாழ்ந்துவிட முடியாது. எல்லா உயிரினங்களும் உயிர் சங்கிலியால் பிணைக்கப்பட்டவை. பாம்பாகட்டும் புலியாகட்டும் நாம் ஆரோக்கியமான சூழலில் வாழ்கிறோம் என்பதை உரக்கச் சொல்லிக் கொண்டிருப்பவை. இயற்கையோடு ஒன்றி வாழ்ந்த வாழ்க்கை முறையைத் தொலைத்துவிட்டு பாம்புகளை இப்படி தேடித் தேடி அழித்ததால்தான் இன்று விளையும் 20 சதவீகிதத்திற்கும் அதிகமான தானியங்கள் எலிகளால் வீணாக்கப்படுகின்றன. வயல்களில் விளைச்சலைத் தின்னும் எலிகள்தான் பாம்புகளின் உணவு. விவசாயிகளுக்கு நண்பனாக இருக்கும் பாம்புகளை அழித்துவிட்டு, எலிகளை அழைத்து விருந்து வைக்க விரும்புகிறீர்கள்! விளைவையும் சந்தியுங்கள்…

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.