தப்பிய வடகிழக்கு பருவமழை – இடம் மாறிய பூநாரைகள்!

படம்

நளினமும் அழகும் மிக்க பறவையினங்களில் ஒன்று பூநாரை! சென்னைக்கு அடுத்துள்ள பழவேற்காடு பகுதி பூநாரைகளுக்கு ரொம்பவும் பிடித்த இடம்.  இது ஒரு சூழலியல் சுற்றுலா தளமும்கூட. கடலை ஒட்டியிருக்கும் கழிமுகப் பகுதிகளில் கிடைக்கும் பாசியும் இறாலும் அதிகப்படியாக கிடைப்பதால் இந்தப் பகுதியில் சீசனின்போது ஆயிரக்கணக்கான பூநாரைகளின் அணிவகுப்பைப் பார்க்கலாம்.
பொதுவாக பூநாரைகளின் சீசன் ஏப்ரல் மாதத்துக்கு மேல்தான் ஆரம்பிக்கும். இந்த ஆண்டு ஜனவரி மாதத்திலேயே பூநாரைகள் வரத் தொடங்கிவிட்டதாகச் சொல்கிறார் சூழுலியல் செயல்பாட்டாளர் திருநாரணன். தி நேச்சர் டிரஸ்ட் என்ற தன்னார்வ தொண்டு அமைப்பை நிறுவி பல்வேறு சூழலியல் சார்ந்த பணிகளைச் செய்துவரும் இவர், அதன் ஒரு பகுதியாக பழவேற்காடு போன்ற பகுதிகளில் களஆய்வு மேற்கொள்கிறார்.
‘‘வருடா வருடம் பழவேற்காடு பகுதிகளில் எங்கள் அமைப்பு சார்பாக களஆய்வு செய்து வருகிறோம். இந்த ஆண்டு நாங்கள் ஆய்வில் கவனித்த விஷயம்…ஜனவரியிலேயே பூநாரைகளை அதிக அளவு பார்க்க முடிந்ததுதான். பழவேற்காடு ஆந்திர_தமிழக எல்லையில் அமைந்திருக்கும் பகுதி. வழக்கமாக நவம்பரில் வரத்தொடங்கும் பூநாரைகள் ஆந்திர மாநில எல்லைகளான சூலூர்பேட்டை, தடா பகுதிகளில் இருக்கும். அங்கு தண்ணீர் வற்றத் தொடங்கியது. தமிழகத்தின் அண்ணாமலைச் சேரி, பொன்னேரி பகுதிகளுக்கு வரத்தொடங்கும். இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை பொய்த்துப்போனதால் ஆந்திர எல்லையோர நீர்நிலைகள் வற்றிப்போய், இப்போதே தமிழக பகுதிகளுக்குள் வர ஆரம்பித்துவிட்டன.

படம்

இப்படி மழை தவறி பெய்வது அல்லது சரியான மழை பொழியாதது தொடர்ந்தால் வரும் காலங்களில் பூநாரைகள் இந்தப் பகுதிகளுக்கு வருவதை நிறுத்திவிடும் வாய்ப்பும் இருக்கிறது’’ என்நு எச்சரிக்கை மணி அடிக்கிறார் திருநாரணன்.

படங்கள் : தி நேச்சர் டிரஸ்ட்

 

தொடர்புடைய பதிவுகள்

வெளிர் சிவப்பு ஓவியம்!

சிலந்திகளின் படையெடுப்பு பருநிலை

மாற்றத்தின் அறிகுறி?!

One thought on “தப்பிய வடகிழக்கு பருவமழை – இடம் மாறிய பூநாரைகள்!

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.