சென்னையில் குயில் கூவும் காலம் : புகைப்படப் பதிவு

DSCN0914

சிறு வயதில் காகம் போல கருமையாக இருந்த ஒன்றைக் காட்டி இதுதான் குயில் என்று யாரோ சொல்லியிருக்கிறார்கள். ஆனால் காகத்துக்கும் குயிலுக்குமான வித்தியாசம் எனக்குத் தெரிந்ததில்லை. குயிலின் குக்கூ ஓசையை மட்டும் கேட்டதுண்டு. சென்னை வந்தபிறகும் மரங்களடந்த பகுதிகளில் குயிலோசையைக் கேட்டதுண்டு. ஆனால் குயிலைப் பார்த்ததில்லை. காட்டுயிர் எழுத்தாளர் முகமது அலி ஆண்குயில்தான் இனிமையான குக்கூ ஓசையை எழுப்பும், பெண் குயிலின் குரல் அவ்வளவு இனிமையாக இருக்காது. ஆனால் பொதுபுத்தியில் இனிமையாகப் பாடும் பெண் பாடகிகளுக்கு ‘சின்னக்குயில்’ என்று உவமை சொல்வார்கள் என்று எழுதியிருந்தார். கடந்த ஒரு மாதமாக நான் போகும் வழியெங்கும் குயில்களின் குக்கூ ஓசையை கேட்கிறேன். முதல்முதலாக பெண் குயில் ஒன்றை கோட்டூர்புரம் பகுதியில் பார்த்தேன். பழுப்பு நிறத்தில் ஆங்காங்கே வெள்ளைப் புள்ளிகளோடு ரொம்பவும் அழகாக இருந்தது. உருவத்தில் பெரிதாகவும் இருந்தது. ஆனால் படம் பிடிக்க முடியவில்லை. அன்றிலிருந்து எனக்கு குயிலை படம் பிடிக்க வேண்டும் என்கிற ஆர்வம் தொற்றிக்கொண்டது.

DSCN0912

குயில்கள் பெரும்பாலும் அடர்த்தியான கிளைகளைக் கொண்ட பெரிய மரங்களில்தான் அமர்ந்து கூவுகின்றன. போக்குவரத்து நெரிசல் மிக்க அண்ணாசாலையில், ஈகா திரையரங்கம் அருகே குயிலோசையைக் கேட்கிறேன். அவற்றை என்னிடம் இருக்கும் குறைந்த வசதிகள் கொண்ட புகைப்படக் கருவியில் தெளிவாக படம் பிடிப்பது சாத்தியமில்லாது. ஆனாலும் எப்போதாவது குயில்கள் என் புகைப்படக் கருவியின் விழித்திரைக்கு அருகில் வரும் என்று காத்திருக்கிறேன். இன்று காலை இரண்டு ஆண் குயில்களைப் பார்த்தேன். கண்கள் சிவப்பாகவும், மூக்கு வெளுத்த பச்சை நிறத்திலும் உடல் கருமையாக இருந்த அந்த இரண்டு குயில்களையும் ஓரளவு என் புகைப்படங்களில் பதிவாக்க முடிந்தது. சென்னை, கோட்டூர்புரத்தில் கிளைகள் அடர்ந்த அந்த தூங்கு மூஞ்சி மரத்தின் உச்சியில் இரண்டும் அமர்ந்திருந்தன. அருகில் ஒரு காக்கை வந்து அமர்ந்தது. இரண்டு குயில்களும் ஏதோ சொல்ல, அந்த காகம் அங்கிருந்து கிளம்பி விட்டது. நான் ஐந்து நிமிடங்கள் அவற்றைப் பார்த்துவிட்டு வந்துவிட்டேன். வந்த சில நிமிடங்களில் இரண்டும் ஓசை எழுப்ப ஆரம்பித்தன. இது குயில்களின் இனப்பெருக்க காலம், துணை தேடி கூவுகின்றன அந்த இரண்டும்.

DSCN0915

6 thoughts on “சென்னையில் குயில் கூவும் காலம் : புகைப்படப் பதிவு

  1. ரொம்ப வருஷமா கோட்டூர்புரத்தில் இருக்கும் எனக்கு இங்கே குயில் கூவுவதை கேட்டு ரசிக்க தோன்றவில்லை.. இனி அண்ணாந்து பார்த்துக்கொண்டு காதை தீட்டிக் கொண்டே செல்ல வைத்துவிட்டீர்கள். நன்றாக இருந்தது தங்கள் பதிவு. நன்றி.
    மகேஷ்.

  2. நான் குயிலை இப்படி அருகில் கண்டதில்லை. பார்க்க, படமெடுக்க வேண்டுமென்கிற ஆவலை ஏற்படுத்தி விட்டது உங்கள் அழகான பகிர்வு.

  3. கோவையில் எங்கள் மாமியார் வீட்டுக்கு அருகில் உள்ள மரத்தில் பாடும் குயில்களை வீடியோ எடுத்தோம் ஆனால் இவ்வளவு அழகாய் எடுக்கவில்லை..
    குயில் அழகு.

  4. சோலைத் தருக்களிலே வாழும் குயிலே, காலை நிலவொளியில் பாடு்ம் குயிலே.. குவந்தைகள் பாட்டு ஞாபகம் வந்தது.

  5. பிங்குபாக்: காகங்களும் குயில்களும்கூட சென்னையில் வசிக்கின்றன! | மு.வி.நந்தினி

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.