”பெண்கள் இல்லையேல் புரட்சி இல்லை!”

”தெருவுக்கு ஒரு டீக்கடை இருப்பது போல பெண்கள் அமைப்புகளும் இன்று பெருகிவிட்டன. ஆனால், பெண்கள் தினத்தன்று கோலப் போட்டிகளும் சமையல் போட்டிகளுமே கோலாகலமான கொண்டாட்டமாக இருக்கும் அளவுக்குத்தான் சமூகத்தின் ‘பரந்து விரிந்த’ பார்வை இருக்கிறது. ஆண்களுக்குச் சமமான ஊதியமும் வேலையும் தரப்பட வேண்டும் என்பதற்காக கிளாரா ஜெட்கின் தலைமையில் மார்ச்- 8-ல் நடந்த புரட்சியை நினைவுகூரும் தினம்தான் பெண்கள் தினம். ஆனால், அதை தங்கள் பொருட்களைச் சந்தைப்படுத்தலுக்குரிய தினமாக்கி, பெண்களை இன்னமும் பின்னுக்கு இழுக்கும் கொடுமையை என்னவென்று சொல்வது?

33 சதவிகித இடஒதுக்கீட்டைக்கூடப் பெற்றுத் தர முடியாத ஓட்டுக் கட்சிகளால் ஒருபோதும் பெண் விடுதலையைப் பெற்றுத் தர முடியாது.

பெண்கள் இல்லையேல் புரட்சி இல்லை
புரட்சி இல்லையேல் பெண் விடுதலை இல்லை!’

இதுதான் எங்களின் முழக்கம். சமூகத்தில் சுரண்டப்பட்டுக்கொண்டு இருக்கும் ஒவ்வொரு பெண்ணுக்குள்ளும் உறைந்துபோயிருக்கும் போர்க் குணத்தைத் தட்டி எழுப்புவதுதான் எங்கள் முதல் பணி. இதன் சாத்திய சதவிகிதத்தை வரும்காலம்தான் தீர்மானிக்கும்!” புரட்சி முழக்கமிடுகிறார்கள் பத்மாவதி, ரீட்டா, கீதா.

நக்ஸலைட்டுகள் என்ற முத்திரையோடு ‘பொடா’ சட்டத்தில் கைதாகி, இரண்டரை வருட சிறைவாசத்துக்குப் பிறகு ஜாமீனில் வெளிவந்தவர்கள் ‘புரட்சிகரப் பெண்கள் விடுதலை மையம்’ என்ற அமைப்பைத் தொடங்கி நடத்தி வருகிறார்கள். அமைப்பின் செயலாளராக இருக்கும் பத்மாவதி அடித்தட்டு பெண்களிடையே அடிப்படைப் பிரசாரங்களை மேற்கொண்டு வருகிறார்.

‘எனக்குப் பூர்வீகம் ஆந்திரா. சென்னையில் என் பெரியப்பா வீட்டுக்கு படிப்பதற்காக வந்தேன். பெரியப்பாவுக்கு கம்யூனிஸ சிந்தனைகளில் ஆர்வம். அவரது இடதுசாரி சிந்தனைகளால் ஈர்க்கப்பட்டேன். ஐ.டி.ஐ. படிக்கும்போதிருந்து நேரடியான இயக்கப் போராட்டங்களில் கலந்துகொண்டேன். கம்யூனிஸத்தை, சோஷலிசத்தைச் சொல்கிற இயக்கங்களில்கூட பெண்களுக்குச் சமமான உரிமைகள் கிடைப்பதில்லை. இயக்கத்தில் உள்ளவர்கள் அவரவர்களுடைய வேலையை அவரவர்களே பார்த்துக்கொள்ள வேண்டும். ஆனால், ஆண்கள் மட்டும் ஆணாதிக்கச் சிந்தனையில் இருந்து விடுபடாதவர்களாக புலம்பலோடுதான் அவர்களுடைய வேலைகளைச் செய்வார்கள். செயல்பட வேண்டிய தளங்களிலேயே மாற்றம் தேவை என்று சிந்தித்துக்கொண்டு இருந்த சமயத்தில்தான் நக்ஸலைட்கள் என்ற நற்சான்றிதழ்!

பொடா சட்டத்தின் அகோர வெறியை அத்தனை நெருக்கத்தில் எதிர்கொண்டது தகிக்க முடியாததாக இருந்தது. சிறையில் இருந்த காலங்களிலும் எங்கள் சிந்தனையை மழுங்கவிடாமல் இருந்ததன் விளைவாகத்தான் பெண்களுக்காகப் போராடும் இந்த அமைப்பை உருவாக்கினோம்” என்கிறார் பத்மாவதி.

கணவருடைய கம்யூனிஸ சிந்தனையில் ஈர்க்கப்பட்டு இயக்கச் செயல்பாடுகளில் இணைந்தவர் வாழப்பாடியைச் சேர்ந்த ரீட்டா. திருமணமான சில மாதங்களிலேயே பொடா வாசம்!

”கைதாகிச் சிறைக்குப் போன பல மாதங்களுக்குப் பிறகுதான் நாங்கள் ஏன் கைது செய்யப்பட்டோம் என்ற விவரத்தையே எங்களுக்குத் தெரியப்படுத்தினார். எத்தனை விமர்சனங்கள் இருந்தாலும் சிறை நல்லதொரு ஆசான். அது எங்களுக்குப் பல விஷயங்களைக்கற்றுக் கொடுத்தது. தளராத தன்னம்பிக்கையையும், உலராத ஊக்கத்தையும் எங்களுக்குள் ஊட்டின பொடா நாட்கள்!” என்கிறார் ரீட்டா.

சேலத்தைச் சேர்ந்த கீதாவும் தன் கணவர் மூலம் இயக்கத்தில் இணைந்தவர். ”தலித் என்பதால் தனிக் கோப்பையில் தேநீர் வழங்கியவர்களிடம் சின்ன வயதிலேயே நான் சண்டைக்குப் போனதுண்டு. கலப்புத் திருமணம் செய்துகொள்வதை லட்சியமாகவே வைத்திருந்து, அப்படியே செய்தும் காட்டினேன். எனக்குப் போராடும் துணிவு இருந்தது. போராடினேன். போராடிக்கொண்டு இருக்கிறேன். துணிவு இருந்தும் அறியாமையில் தவிக்கும் பெண்களை விழிக்க வைக்க வேண்டும் என்பதுதான் என் இப்போதைய லட்சியம்!” எனும் கீதா, இரண்டு குழந்தைகளுக்குத் தாய்.

”பெண்களின் சமூகச் சமத்துவத்துக்காகப் போராட வந்த எங்களுக்குப் பெண்களின் உரிமைகளை மீட்டுத் தருவது முதன்மையான விஷயமாகப்பட்டது. அதை உரக்கச் சொல்லத்தான் பெண்கள் தினத்தில் புரட்சிப் பாடகர் கத்தார் தலைமையில் ஒரு பொதுக் கூட்டத்தை ஏற்பாடு செய்திருந்தோம். ஒன்றுமே இல்லாத விஷயத்துக்காகப் பத்திரிகை அலுவலகத்தைக் கொளுத்தியவர்களால் கெட்டுப் போகாத சட்டம் – ஒழுங்கு எங்களால் கெட்டுப்போய்விடும் எனப் பயந்து, பொதுக் கூட்டத்துக்குத் தடை விதித்தது தமிழக அரசு.

ஆணாதிக்கம் என்ற வார்த்தையைப் பயன்படுத்தினாலே, ‘நாங்கள் ஆண்களுக்கு எதிரானவர்கள்’ என்று குற்றம்சாட்டுகிறார்கள். நாங்கள் பெண்ணியவாதிகளும் அல்ல, ஆண்களுக்கு எதிரானவர்களும் அல்ல, நாங்கள் கோருவது எல்லாம் ஆண்களுக்குச் சமமான வாழ்க்கையை, சுதந்திரத்தை. அதை முன்னெடுக்கத்தான் தோழர்களாகிய ஆண்களையும் துணைக்கு அழைக்கிறோம்!” – ஒரே குரலில் முழங்குகிறார்கள் மூவரும்!

ஆனந்த விகடன் 01-10-08 இதழில் நான் எழுதி வெளியானது

காகங்களும் குயில்களும்கூட சென்னையில் வசிக்கின்றன!

நான் சென்னைவாசியாகி பனிரெண்டு ஆண்டுகளாகின்றன. இதுநாள்வரை சென்னையின் அடர்த்தியான கான்கிரீட் காடுகள் வெளியிடும் வெப்ப பெருமூச்சை மட்டுமே உணர்ந்துக்கொண்டிருந்தேன். அதுவும் கோடைகால வெக்கை தாங்க முடியாத அவஸ்தையாக இருந்தது. ஆனால் இத்தனை வருடங்களில் இல்லாத கோடையின் அற்புதத்தை இந்த ஆண்டு அனுபவிக்க நேர்ந்தது. என்னுடைய புகைப்படக்கருவியும் நான் வேலைப்பார்த்த அலுவலகம் அமைந்திருந்த கோட்டூர்புரமும் என்னை இந்த அற்புத அனுபவத்துக்குத் தள்ளின. புகைப்படக்கருவியின் மேல் இருந்த ஆவலில் அலுவலக இடைவேளைகளில் கோட்டூர்புரத்தின் தெருக்களெங்கும் அடர்ந்திருக்கும் கொன்றை, புங்கன், பீநாரீ, தூங்கு மூஞ்சி, கருவாகை, அரச மரங்களை படம் பிடிக்கத்தொடங்கியபோது தென்பட்டன கூடுகளின் கட்டுமானத்தில் கவனம் செலுத்திக் கொண்டிருந்த காகங்கள்.

காகங்கள் ஒழுங்கற்ற வடிவத்தில் கூடுகளை அமைப்பதாக படித்திருக்கிறேன். ஆனால் அந்த ஒழுங்கற்ற வடிவத்திலும் ஒரு நேர்த்தி இருந்தது, சிறந்த கட்டுமானம் தெரிந்தது. தன் கூட்டின கட்டுமானத்துக்குத் தேவையான சுள்ளிகளை தேர்ந்தெடுப்பதிலும் ஒரு ஒழுங்கு தெரிந்தது. சற்றே நேரான பிறகு வளைந்து நேரான சுள்ளிகளை தேர்ந்தெடுத்து கவட்டைபோல் இருந்த மரக்கிளைகளில் கூடுகளை அமைத்துக்கொண்டிருந்தன காகங்கள். இதில் வியப்புக்குரிய இன்னொரு செயலையும் கண்டேன். மின்கம்பங்களில், போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலைகளின் ஓரத்தில் அமைந்திருந்த ஒற்றைக் கிளைகளில்கூட காகங்கள் கூடுகளை அமைத்துக்குக் கொண்டிருந்தன. சென்னை ஐசிஎஃப் சிக்னல் கம்பத்தை உரசிக்கொண்டிருந்த ஒரு சிறிய மரத்தின் கிளையில் காகம் ஒன்று கூடமைத்திருந்தது. மாலை நேரங்களில் போக்குவரத்து நெரிசலில் நிற்கும்போது அந்த கூட்டுக்கு சொந்தக்கார காகம் அங்கே அமர்ந்திருப்பதைப் பார்க்கலாம். அந்தி சாயும் அவ்வேளையில் வானத்தின் வெளிர் சிவப்புடம் துளிர்க்கும் மரக்கிளையில் கூடுகட்டி, முட்டையிடும் எத்தனிப்பில் இருக்கும் அந்த காகத்தைக் காண்பது எனக்கு அற்புதம் நிகழ்ந்த கணமாக இருந்தது.

Kotturpuram

போக்குவரத்து நெரிசலுக்குப் பெயர்பெற்ற சென்னை அண்ணாசாலையின் மையப்பகுதியில் கிளைகளெல்லாம் வெட்டப்பட்டு ஆதாரமாக நின்ற ஒற்றைக்கிளையின் நுனியில் காகம் ஒன்று கூடமைத்திருக்கிறது. அந்தக் கிளை சாலையின் மையப்பகுதிவரை நீண்டிருக்கும். கூடுகள் அமைக்க அருகிலேயே எண்ணற்ற மரங்கள் இருந்தும் எப்போதும் வாகனங்கள் வந்துபோகும் சாலையில் கூடமைத்து, முட்டையிட்டு, குஞ்சு பொரிக்கப்போகும் காகத்தின் செயல் ஆராய்ச்சிக்குரியது. அதுபோலவே கோட்டூர்புரம் பாலத்தின் நடுவே அமைந்த ஒரு மின்கம்பத்தில் ஒரு காகம் கூடமைத்திருக்கிறது. மரங்களுக்கு குறைவில்லாத சுற்றுப்புறத்தைவிட்டுவிட்டு மின்கம்பத்தில் கூடமைக்கும் தேவை காகத்திற்கு ஏன் ஏற்பட்டது? இதுவும் ஆராய்ச்சிக்குரியதுதான்.
இப்படி அலுவலகம் செல்லும் வழியெங்கும் இருக்கும் மரங்களில் கூடுகளை கவனிப்பது, ஒரு தினசரி வாடிக்கையாகிவிட்டது எனக்கு. காகங்களுக்கு அடுத்தபடியாக குயில்கள் என் கவனத்தை ஈர்க்க ஆரம்பித்தன. குயில் கூவும் ஓசையைக் கேட்டிருக்கிறேன். இந்த கோடையில்தான் குயிலை இனம் கண்டேன். சிவப்பு கண்களும் வெளிர் பச்சை மூக்குமாக கருத்த பளப்பளப்பான மேனியுடன் இருந்தது குயில். இது ஆண் குயில். நாம் எப்போது சிலாகிக்கும் ’கூக்கூ’ என்று ஒலிக்கும் குரல் ஆண் குயிலுடையது. பெண் குயிலைக் காண்பது பெரும் பாக்கியம். அதை நான் பெற்றேன். பழுப்பு மேனியில் வெண்புள்ளிகள் பதித்து ஆண் குயிலைவிட உருவத்தில் சற்றே பெரிதாக இருந்தது . பெண் குயில் அழகானது, ஆனால் குரல் வளம் அவ்வளவு இனிமை கிடையாது. இனிமையாகப் பாடும் பெண் பாடகிகளுக்கு குயில் அடைமொழி கொடுக்கும் நம்மவர்களின் அறியாமை அப்போது நினைவுக்கு வந்தது.

மாலை நேரங்களில் நான் வேலைப் பார்த்த அலுவலகத்துக்கு எதிரே இருந்த வேப்ப மரத்தின் பழங்களை உண்டபடியே அந்த இணை குயில்கள் கொஞ்சிக் கொண்டிருக்கும். பெண் குயில் ஆட்கள் நடமாட்டம் அதிகமாக இருந்தால் கண்களில் தட்டுப்படாது. யாரும் இல்லாத பொழுதைப் பார்த்து வெளியே வரும், அதுவரை மர உச்சியில், இலைகள் அடர்ந்த பகுதியில் அமர்ந்திருக்கும். ஆண் குயில் பாட்டிசைத்து தன் தேவையை உணர்த்தி, பெண் குயிலை வரவழைக்கும். இப்படி பாட்டிசைக்கும் குயிலின் ஓசையை சென்னையின் எல்லாப் பகுதிகளிலுமே கேட்க முடிகிறது. முட்டி மோதும் வாகனங்களின் இரைச்சலுக்கிடையே கேட்கும் குயிலோசை ஓர் மாறுபட்ட அனுபவம்.

Asian koel female

இப்போதெல்லாம் எனக்கு சென்னையின் போக்குவரத்து நெரிசலை பற்றியோ, வதைக்கும் வெக்கையைப் பற்றியோ யாதொரு குறையும் இல்லை. தூரத்தில் ஒலிக்கும் குயிலோசையும் மரங்கள்தோறும் காணக்கிடைக்கும் காகங்களின் கூடுகளும் என்னை அற்புத அனுபவத்துக்குள் தள்ளுகின்றன. என்னுடைய அற்புத அனுபவத்தின் கனவெல்லாம் இன்னும் ஓராயிரம் மரங்களை வளர்த்து காடாக்க வேண்டும் என்பதில் இருக்கிறது.

தகவலை சரிபார்க்க உதவிய புத்தகங்கள்:
தென் இந்திய பறவைகள் : ரிச்சர்ட் கிரமிட், டிம் இன்ஸ்கிப்
பறவைகள் அறிமுகக் கையேடு : ப. ஜெகநாதன், ஆசை
ஃபாரெஸ்ட் ட்ரீஸ் ஆஃப் வெஸ்டர்ன் கட்ஸ் : எஸ்.ஜி.நெகின்ஹால்

தொடர்புடைய பதிவு

சென்னையில் குயில் கூவும் காலம் : புகைப்படப் பதிவு

இலக்கிய உலகின் மர்ம யோகி!

சிறகிலிருந்து பிரிந்த
இறகு ஒன்று
காற்றின் தீராத பக்கங்களில்
ஒரு பறவையின் வாழ்வை
எழுதிச் செல்கிறது

ன் கவிதையைப் போலவே காற்றின் திசை வழி பறந்து, எங்கெங்கெல்லாமோ வாழ்ந்து, எப்படியோ முடிந்துபோன வாழ்க்கை கவிஞர் பிரமிளுடையது. இலக்கிய உலகின் மர்மயோகி. சுடும் விமர்சனங்களுக்குச் சொந்தக்காரர். அவருடைய விமர்சனங்களின் தாக்கத்தைத் தாக்குப்பிடிக்கமுடி யாமல் பிரமிளின் படைப்பாற்றல் குறித்து இலக்கியப் பரப்பில் போதுமான விவாதங்கள் நிகழாமலேயே இருக்கின்றன. ஏப்ரல் 20ல் தொடங்கும் பிரமிளின் 70வது பிறந்த தினத்தைக் கொஞ்சம் விமரிசையாகக் கொண்டாட இருக்கிறார் அவரது நண்பர் காலசுப்ரமணியம். பிரமிளின் புத்தகங்களை மறுபதிப்பு செய்யவும் அவரது ஓவியங்களைக் கண்காட்சிப்படுத்தவும் முயற்சிகள் நடக்கின்றன.

Piramil

அதுவரை தமிழில் வந்துகொண்டு இருந்த கவிதைகளிலிருந்து மாறுபட்டு, பல பரிமாணங்களைக் கொண்டதாக இருந்தன பிரமிளின் கவிதைகள். நெருப்பைத் தீண்ட அஞ்சுவதைப் போல இலக்கியவாதிகள் அவரை நெருங்கத் தயங்கினார்கள்என்கிறார் காலசுப்ரமணியம்.

 

இலங்கை திரிகோணமலையின் ஏழைக் குடும்பத்தில் பிறந்தவருக்குப் பள்ளி இறுதி வரைதான் படிப்பு சாத்தியப்பட்டது. ஆனால், அங்கிருந்தபடியே அவர் தமிழ்நாட்டு இலக்கிய நடப்புகளை அறிந்துகொண்டு இருக்கிறார். 19 வயதிலேயே இலக்கிய இதழ்களில் அவர் படைப்புகள் பிரசுரமாகத் தொடங்கின. ஓவியத்தின் மீதிருந்த ஆர்வத்தால், ‘லண்டன் ஸ்கூல் ஆஃப் ஆர்ட்ஸ்ல் ஓவியம் கற்றிருக்கிறார். ஒரே உறவான அம்மாவும் இறந்த பிறகு, இந்தியா வந்த பிரமிள், மதுரை, சென்னை, டெல்லி எனச் சுற்றியலைந்துவிட்டு சென்னையிலேயே தங்கிவிட்டார். பிரான்சுக்குச் செல்ல வேண்டும் என்ற நோக்கத்துடன் இந்தியா வந்தவருக்கு அது இறப்பு வரை சாத்தியப்படவில்லை.

’’காசுக்காக எழுதமாட்டேன்’’ என்று பிடிவாதமாக இருந்தார். நண்பர்களின் உதவியில்தான் வாழ்ந்தார். ஜோதிடத்திலும் நியூமராலஜியிலும் அதிகமான நம்பிக்கை. அடிக்கடி பெயரை நியூமராலஜிப்படி மாற்றிக்கொண்டே இருப்பார். தர்மு சிவராம், டி.அஜித்ராம் பிரேமிள், பிரமிள் என அவர் மாற்றிக்கொண்ட பெயர்களின் பட்டியல் நீளமானது

 

 Piramil's painting

அபாரமான விமர்சனப் பார்வை உடையவர். போலித்தனமான இலக்கியவாதிகளை எப்போதும் விமர்சித்தபடியே இருப்பார். பலருக்கும் புரிபடாமல் இருந்த மௌனியின் எழுத்து எப்படிப்பட்டது என்று இவர் எழுதிய கட்டுரைதான், மௌனியைப் பலருடைய வாசிப்புக்குக் கொண்டுசென்றது. இவருடைய ‘கடலும் வண்ணத்துப்பூச்சியும்’, ‘கண்ணாடியுள்ளிருந்து’ கவிதைகள் அபாரமான வீச்சு உடையவை. ஒரு மாத காலம் காய்ச்சலால் அவதிப்பட்டவரை நண்பர்கள் மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தினார்கள். அப்போதுதான் அவருக்குப் புற்றுநோய் இருப்பது தெரிந்தது. வீரியமான பிரமிள் விரலசைக்க முடியாமல் செயலிழந்து கிடந்தார். எந்த சிகிச்சையும் பலனளிக்காமல் தனது 56வது வயதில் இறந்தார். இறப்புக்குப் பிறகும் கவனிக்கப்படாத கலைஞன் பிரமிள்!” வருத்தத்தோடு முடித்தார் காலசுப்ரமணியம்.

ஆனந்த விகடன் 23-04-08 இதழில் நான் எழுதிய கட்டுரை…

 

 

 

 

நாங்கள் கவிதாசரண்!

சென்னை, திருவொற்றியூரில், குண்டும் குழியுமான சாலைகளைக் குலுங்கிக் கடந்தால், டி.கே.எஸ். நகரில் இருக்கிறது ‘கவிதாசரண்’ என்ற பெயர்ப் பலகை சுமந்த அந்த இலக்கியவாதியின் வீடு.

என்ன செய்வதென்று புரியாமல் முதுமையைத் தனிமையில் கழிக்கும் பெரும்பாலான தம்பதிகள் மத்தியில், இந்த இலக்கியத் தம்பதிகளின் கதை வேறுபட்டது. வாழ்க்கையையே சமூக நோக்கத்துக்காக மாற்றிக்கொண்டு, ‘கவிதாசரண்’ என்ற பத்திரிகையை கொண்டுவருகிறார்கள் இவர்கள்.

Untitled-1 copy

”ஊர் பேரைச் சொன்னா சாதி என்னனு தெரியவரும், அதனால ஊர் பேர் வேண்டாமே! ஊரில் முதல் பட்டதாரி நான். கிட்டத்தட்ட 25 ஆண்டுகள் கணித ஆசிரியராக இருந்தேன். சின்ன வயதிலேயே புரட்சி பேசியவன். சாதியைத் தூக்கிப் பிடிக்கிற கிராமத்தில் புரட்சி பேச, என்னைக் கொலை செய்கிற அளவுக்குப் பிரச்னையானதால் சென்னைக்கு வந்து விட்டேன். காரணம், பயம் இல்லை… வெறுப்பு!

பணியிடத்திலேயும் சக ஆசிரியர்களுக்காக, மாணவர்களுக்காக நிர்வாகத்தை எதிர்த்துப் போராட வேண்டிய சூழல். இன்னொரு பக்கம் இலக்கியவாதியாகவும் இயங்கிட்டு இருந்தேன். எங்களுடையது கலப்பு மணம். ஒரே மகன். கல்லூரிக்குப் போக, பள்ளித் தேர்வை எழுதிட்டுக் காத்திருந்தவன், மூளைக் காய்ச்சல் வந்து இறந்துவிட்டான். திடீர்னு ஒரு திகைப்பு, வலி, துயரம்… அதற்குப் பிறகு நாங்கள் வகுத்துக்கொண்டதுதான் இந்த வாழ்க்கை.

பொதுவா, ஒவ்வொருத்தரோட மிச்சமா, கனவா, அவங்க பிள்ளைகள்தான் காலத்துக்கும் தொடர்ந்து வருவாங்க. ஆனா, எங்களோட தொடர்ச்சியா இந்த சமூகத்துக்கு நாங்க தர நினைச்சது ‘கவிதாசரண்’ பத்திரிகையை!” – சொல்லிவிட்டு சற்றே நிதானிக்கிறார் கவிதாசரண்.

”அப்போ தொடங்கின புது வாழ்க்கையில் எங்க பேரையும் புதிதாக

மாற்றிக்கொண்டோம். நான் திரு கவிதாசரண். என் துணைவி, திருமதி கவிதாசரண். இலக்கியத்தை மையப்படுத்தி வந்த இதழை, சூழ்நிலை தான் சமூக மாற்றத்தைப் பேசுகிற இதழாக மாற்றியது. தலித்தியம் என்ற தனித்த அடையாளம் உருவாகாமல் இருந்த காலகட்டத்திலேயே, அதைப் பற்றிய பேச்சைத் துவக்கிவைத்தது எங்கள் இதழ்தான். சாதிக்கு எதிராக எங்களால் களத்தில் போராட முடியவில்லை என்பதால்தான் எழுத்தைத் தேர்ந்தெடுத்தோம்!” என்கிற கவிதாசரண், சமீபத்தில் கால்டுவெல்லின் ஒப்பிலக்கண நூலை மிக நீண்ட வருடங்களுக்குப் பிறகு மறுபதிப்பு செய்திருக்கிறார். தமிழைத் திராவிட மொழிகளின் தாயாக முதன்முதலில் நிரூபித்த ஆய்வு நூல் இது.

”எங்களுக்கென்று சொந்தமாக இருப்பது இந்த வீடு மட்டும்தான். இதை அடமானம் வெச்சுதான் கால்டு வெல் புத்தகத்தைக் கொண்டுவந்தேன். திராவிடம், திராவிடம் என்று மூச்சுக்கு மூச்சு பேசுகிற அரசாங் கங்கள் செய்கிற வேலையை நான் செய்திருக்கேன். ஒருவேளை நான் அவங்களை விமர்சிக்கலைன்னா, அவங்களே உதவியிருக்கக்கூடும். ஆனா, விமர்சிக்கிறதுக்காகத்தானே நான் பத்திரிகை தொடங்கினதே!” கம்பீரமும் நம்பிக்கையுமாகப் பேசுகிறார் கவிதாசரண்!