சென்னை, திருவொற்றியூரில், குண்டும் குழியுமான சாலைகளைக் குலுங்கிக் கடந்தால், டி.கே.எஸ். நகரில் இருக்கிறது ‘கவிதாசரண்’ என்ற பெயர்ப் பலகை சுமந்த அந்த இலக்கியவாதியின் வீடு.
என்ன செய்வதென்று புரியாமல் முதுமையைத் தனிமையில் கழிக்கும் பெரும்பாலான தம்பதிகள் மத்தியில், இந்த இலக்கியத் தம்பதிகளின் கதை வேறுபட்டது. வாழ்க்கையையே சமூக நோக்கத்துக்காக மாற்றிக்கொண்டு, ‘கவிதாசரண்’ என்ற பத்திரிகையை கொண்டுவருகிறார்கள் இவர்கள்.
”ஊர் பேரைச் சொன்னா சாதி என்னனு தெரியவரும், அதனால ஊர் பேர் வேண்டாமே! ஊரில் முதல் பட்டதாரி நான். கிட்டத்தட்ட 25 ஆண்டுகள் கணித ஆசிரியராக இருந்தேன். சின்ன வயதிலேயே புரட்சி பேசியவன். சாதியைத் தூக்கிப் பிடிக்கிற கிராமத்தில் புரட்சி பேச, என்னைக் கொலை செய்கிற அளவுக்குப் பிரச்னையானதால் சென்னைக்கு வந்து விட்டேன். காரணம், பயம் இல்லை… வெறுப்பு!
பணியிடத்திலேயும் சக ஆசிரியர்களுக்காக, மாணவர்களுக்காக நிர்வாகத்தை எதிர்த்துப் போராட வேண்டிய சூழல். இன்னொரு பக்கம் இலக்கியவாதியாகவும் இயங்கிட்டு இருந்தேன். எங்களுடையது கலப்பு மணம். ஒரே மகன். கல்லூரிக்குப் போக, பள்ளித் தேர்வை எழுதிட்டுக் காத்திருந்தவன், மூளைக் காய்ச்சல் வந்து இறந்துவிட்டான். திடீர்னு ஒரு திகைப்பு, வலி, துயரம்… அதற்குப் பிறகு நாங்கள் வகுத்துக்கொண்டதுதான் இந்த வாழ்க்கை.
பொதுவா, ஒவ்வொருத்தரோட மிச்சமா, கனவா, அவங்க பிள்ளைகள்தான் காலத்துக்கும் தொடர்ந்து வருவாங்க. ஆனா, எங்களோட தொடர்ச்சியா இந்த சமூகத்துக்கு நாங்க தர நினைச்சது ‘கவிதாசரண்’ பத்திரிகையை!” – சொல்லிவிட்டு சற்றே நிதானிக்கிறார் கவிதாசரண்.
”அப்போ தொடங்கின புது வாழ்க்கையில் எங்க பேரையும் புதிதாக
மாற்றிக்கொண்டோம். நான் திரு கவிதாசரண். என் துணைவி, திருமதி கவிதாசரண். இலக்கியத்தை மையப்படுத்தி வந்த இதழை, சூழ்நிலை தான் சமூக மாற்றத்தைப் பேசுகிற இதழாக மாற்றியது. தலித்தியம் என்ற தனித்த அடையாளம் உருவாகாமல் இருந்த காலகட்டத்திலேயே, அதைப் பற்றிய பேச்சைத் துவக்கிவைத்தது எங்கள் இதழ்தான். சாதிக்கு எதிராக எங்களால் களத்தில் போராட முடியவில்லை என்பதால்தான் எழுத்தைத் தேர்ந்தெடுத்தோம்!” என்கிற கவிதாசரண், சமீபத்தில் கால்டுவெல்லின் ஒப்பிலக்கண நூலை மிக நீண்ட வருடங்களுக்குப் பிறகு மறுபதிப்பு செய்திருக்கிறார். தமிழைத் திராவிட மொழிகளின் தாயாக முதன்முதலில் நிரூபித்த ஆய்வு நூல் இது.
”எங்களுக்கென்று சொந்தமாக இருப்பது இந்த வீடு மட்டும்தான். இதை அடமானம் வெச்சுதான் கால்டு வெல் புத்தகத்தைக் கொண்டுவந்தேன். திராவிடம், திராவிடம் என்று மூச்சுக்கு மூச்சு பேசுகிற அரசாங் கங்கள் செய்கிற வேலையை நான் செய்திருக்கேன். ஒருவேளை நான் அவங்களை விமர்சிக்கலைன்னா, அவங்களே உதவியிருக்கக்கூடும். ஆனா, விமர்சிக்கிறதுக்காகத்தானே நான் பத்திரிகை தொடங்கினதே!” கம்பீரமும் நம்பிக்கையுமாகப் பேசுகிறார் கவிதாசரண்!
என்ன ஒரு மனமொத்த தம்பதிகள்! வாழ்க்கையில் தாங்கள் இழந்ததை ‘கவிதாசரண்’ பத்திரிக்கையின் வாயிலாக சமூக மாற்றத்தைக் கொண்டு வருவதன் மூலம் பெற நினைக்கிறார்களே! பாராட்ட வேண்டிய ஒன்று.
மிகப்பெரிய விஷயத்தை செய்துவிட்டு இத்தனை பணிவாக இருக்கும் இவர்களிடமிருந்து நாம் கற்க வேண்டியது ஏராளம்.
கவிதாசரண் தம்பதியருக்கு வணக்கங்கள்.
இப்படித்தான் வாழ வேண்டும்…
கவிதாசரண் தம்பதியருக்கு வாழ்த்துக்கள்…
நன்றி…
I read this……Best wishes to all of you.
Vetha.Elangathilakam.