காகங்களும் குயில்களும்கூட சென்னையில் வசிக்கின்றன!

நான் சென்னைவாசியாகி பனிரெண்டு ஆண்டுகளாகின்றன. இதுநாள்வரை சென்னையின் அடர்த்தியான கான்கிரீட் காடுகள் வெளியிடும் வெப்ப பெருமூச்சை மட்டுமே உணர்ந்துக்கொண்டிருந்தேன். அதுவும் கோடைகால வெக்கை தாங்க முடியாத அவஸ்தையாக இருந்தது. ஆனால் இத்தனை வருடங்களில் இல்லாத கோடையின் அற்புதத்தை இந்த ஆண்டு அனுபவிக்க நேர்ந்தது. என்னுடைய புகைப்படக்கருவியும் நான் வேலைப்பார்த்த அலுவலகம் அமைந்திருந்த கோட்டூர்புரமும் என்னை இந்த அற்புத அனுபவத்துக்குத் தள்ளின. புகைப்படக்கருவியின் மேல் இருந்த ஆவலில் அலுவலக இடைவேளைகளில் கோட்டூர்புரத்தின் தெருக்களெங்கும் அடர்ந்திருக்கும் கொன்றை, புங்கன், பீநாரீ, தூங்கு மூஞ்சி, கருவாகை, அரச மரங்களை படம் பிடிக்கத்தொடங்கியபோது தென்பட்டன கூடுகளின் கட்டுமானத்தில் கவனம் செலுத்திக் கொண்டிருந்த காகங்கள்.

காகங்கள் ஒழுங்கற்ற வடிவத்தில் கூடுகளை அமைப்பதாக படித்திருக்கிறேன். ஆனால் அந்த ஒழுங்கற்ற வடிவத்திலும் ஒரு நேர்த்தி இருந்தது, சிறந்த கட்டுமானம் தெரிந்தது. தன் கூட்டின கட்டுமானத்துக்குத் தேவையான சுள்ளிகளை தேர்ந்தெடுப்பதிலும் ஒரு ஒழுங்கு தெரிந்தது. சற்றே நேரான பிறகு வளைந்து நேரான சுள்ளிகளை தேர்ந்தெடுத்து கவட்டைபோல் இருந்த மரக்கிளைகளில் கூடுகளை அமைத்துக்கொண்டிருந்தன காகங்கள். இதில் வியப்புக்குரிய இன்னொரு செயலையும் கண்டேன். மின்கம்பங்களில், போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலைகளின் ஓரத்தில் அமைந்திருந்த ஒற்றைக் கிளைகளில்கூட காகங்கள் கூடுகளை அமைத்துக்குக் கொண்டிருந்தன. சென்னை ஐசிஎஃப் சிக்னல் கம்பத்தை உரசிக்கொண்டிருந்த ஒரு சிறிய மரத்தின் கிளையில் காகம் ஒன்று கூடமைத்திருந்தது. மாலை நேரங்களில் போக்குவரத்து நெரிசலில் நிற்கும்போது அந்த கூட்டுக்கு சொந்தக்கார காகம் அங்கே அமர்ந்திருப்பதைப் பார்க்கலாம். அந்தி சாயும் அவ்வேளையில் வானத்தின் வெளிர் சிவப்புடம் துளிர்க்கும் மரக்கிளையில் கூடுகட்டி, முட்டையிடும் எத்தனிப்பில் இருக்கும் அந்த காகத்தைக் காண்பது எனக்கு அற்புதம் நிகழ்ந்த கணமாக இருந்தது.

Kotturpuram

போக்குவரத்து நெரிசலுக்குப் பெயர்பெற்ற சென்னை அண்ணாசாலையின் மையப்பகுதியில் கிளைகளெல்லாம் வெட்டப்பட்டு ஆதாரமாக நின்ற ஒற்றைக்கிளையின் நுனியில் காகம் ஒன்று கூடமைத்திருக்கிறது. அந்தக் கிளை சாலையின் மையப்பகுதிவரை நீண்டிருக்கும். கூடுகள் அமைக்க அருகிலேயே எண்ணற்ற மரங்கள் இருந்தும் எப்போதும் வாகனங்கள் வந்துபோகும் சாலையில் கூடமைத்து, முட்டையிட்டு, குஞ்சு பொரிக்கப்போகும் காகத்தின் செயல் ஆராய்ச்சிக்குரியது. அதுபோலவே கோட்டூர்புரம் பாலத்தின் நடுவே அமைந்த ஒரு மின்கம்பத்தில் ஒரு காகம் கூடமைத்திருக்கிறது. மரங்களுக்கு குறைவில்லாத சுற்றுப்புறத்தைவிட்டுவிட்டு மின்கம்பத்தில் கூடமைக்கும் தேவை காகத்திற்கு ஏன் ஏற்பட்டது? இதுவும் ஆராய்ச்சிக்குரியதுதான்.
இப்படி அலுவலகம் செல்லும் வழியெங்கும் இருக்கும் மரங்களில் கூடுகளை கவனிப்பது, ஒரு தினசரி வாடிக்கையாகிவிட்டது எனக்கு. காகங்களுக்கு அடுத்தபடியாக குயில்கள் என் கவனத்தை ஈர்க்க ஆரம்பித்தன. குயில் கூவும் ஓசையைக் கேட்டிருக்கிறேன். இந்த கோடையில்தான் குயிலை இனம் கண்டேன். சிவப்பு கண்களும் வெளிர் பச்சை மூக்குமாக கருத்த பளப்பளப்பான மேனியுடன் இருந்தது குயில். இது ஆண் குயில். நாம் எப்போது சிலாகிக்கும் ’கூக்கூ’ என்று ஒலிக்கும் குரல் ஆண் குயிலுடையது. பெண் குயிலைக் காண்பது பெரும் பாக்கியம். அதை நான் பெற்றேன். பழுப்பு மேனியில் வெண்புள்ளிகள் பதித்து ஆண் குயிலைவிட உருவத்தில் சற்றே பெரிதாக இருந்தது . பெண் குயில் அழகானது, ஆனால் குரல் வளம் அவ்வளவு இனிமை கிடையாது. இனிமையாகப் பாடும் பெண் பாடகிகளுக்கு குயில் அடைமொழி கொடுக்கும் நம்மவர்களின் அறியாமை அப்போது நினைவுக்கு வந்தது.

மாலை நேரங்களில் நான் வேலைப் பார்த்த அலுவலகத்துக்கு எதிரே இருந்த வேப்ப மரத்தின் பழங்களை உண்டபடியே அந்த இணை குயில்கள் கொஞ்சிக் கொண்டிருக்கும். பெண் குயில் ஆட்கள் நடமாட்டம் அதிகமாக இருந்தால் கண்களில் தட்டுப்படாது. யாரும் இல்லாத பொழுதைப் பார்த்து வெளியே வரும், அதுவரை மர உச்சியில், இலைகள் அடர்ந்த பகுதியில் அமர்ந்திருக்கும். ஆண் குயில் பாட்டிசைத்து தன் தேவையை உணர்த்தி, பெண் குயிலை வரவழைக்கும். இப்படி பாட்டிசைக்கும் குயிலின் ஓசையை சென்னையின் எல்லாப் பகுதிகளிலுமே கேட்க முடிகிறது. முட்டி மோதும் வாகனங்களின் இரைச்சலுக்கிடையே கேட்கும் குயிலோசை ஓர் மாறுபட்ட அனுபவம்.

Asian koel female

இப்போதெல்லாம் எனக்கு சென்னையின் போக்குவரத்து நெரிசலை பற்றியோ, வதைக்கும் வெக்கையைப் பற்றியோ யாதொரு குறையும் இல்லை. தூரத்தில் ஒலிக்கும் குயிலோசையும் மரங்கள்தோறும் காணக்கிடைக்கும் காகங்களின் கூடுகளும் என்னை அற்புத அனுபவத்துக்குள் தள்ளுகின்றன. என்னுடைய அற்புத அனுபவத்தின் கனவெல்லாம் இன்னும் ஓராயிரம் மரங்களை வளர்த்து காடாக்க வேண்டும் என்பதில் இருக்கிறது.

தகவலை சரிபார்க்க உதவிய புத்தகங்கள்:
தென் இந்திய பறவைகள் : ரிச்சர்ட் கிரமிட், டிம் இன்ஸ்கிப்
பறவைகள் அறிமுகக் கையேடு : ப. ஜெகநாதன், ஆசை
ஃபாரெஸ்ட் ட்ரீஸ் ஆஃப் வெஸ்டர்ன் கட்ஸ் : எஸ்.ஜி.நெகின்ஹால்

தொடர்புடைய பதிவு

சென்னையில் குயில் கூவும் காலம் : புகைப்படப் பதிவு

11 thoughts on “காகங்களும் குயில்களும்கூட சென்னையில் வசிக்கின்றன!

 1. மிகவும் அருமையான பதிவு. சென்னை இயற்கை வளமற்ற பகுதி இல்லை, ஒரு காலத்தில் குயில்கள், மயில்கள், மான்கள், புழைகள், வயல்கள் நிறைந்த பகுதியாக இருந்து, வந்தவரின் தேவைகளுக்காய் தன்னையே அழித்துக் கொண்டு நிற்கும் தேவதை சென்னை. சென்னையின் அழகியலின் எச்சங்களை நுங்கம்பாக்கம், கிண்டி, மற்றும் எம் சி சி கல்லூரி வளாகம் முதலியவற்றில் காணலாம். கோட்டூர் புரம் மரங்கள் சூழ்ந்த இடம், அங்கும் நிறைய விலங்குகளைக் காணலாம். என்ன மிச்சம் மீதி இயற்கையை காக்கவோ, காணவோ, நம்மவர்களுக்கு நேரமில்லை, மனமுமில்லை.. 😦

 2. ரொம்பவும் அனுபவித்து எழுதியிருக்கிறீர்கள் நந்தினி.

  காகங்கள், காகத்தின் கூடுகள் என்று எத்தனை விஷயங்களைக் கூர்ந்து கவனித்திருக்கிறீர்கள்! பாராட்டுக்கள்!

  உங்கள் அற்புதக் கணங்களை எங்களுடன் பகிர்ந்து கொண்டதற்கும் நன்றி!

  மிகவும் கூர்மையான பார்வை உங்களுக்கு. பார்த்தவற்றுடன் நிறுத்தாமல் பல புத்தகங்களையும் படித்து உங்கள் அவதானிப்பு சரிதானா என்றும் பார்த்து தொகுத்திருக்கும் விதம் உங்கள் உழைப்பை காட்டுகிறது.

  இதுவரை குயிலை பார்த்ததே இல்லை. உங்கள் புகைப்படத்தின் மூலமே பார்த்தேன்.

  எங்கள் ஊரிலும் குயிலோசை தினமும் கேட்கும். இனி குயிலோசையுடன் உங்கள் கட்டுரையும் நினைவுக்கு வரும்.

 3. // இனிமையாகப் பாடும் பெண் பாடகிகளுக்கு குயில் அடைமொழி கொடுக்கும் நம்மவர்களின் அறியாமை அப்போது நினைவுக்கு வந்தது.// ரொம்பவும் ரசித்தேன்.

  இதைப்பற்றி நீங்கள் எழுதியிருந்த இன்னொரு பதிவிற்கும் இங்கேயே இணைப்பு கொடுங்கள்.

 4. அனுபவித்து இரசித்து எழுதியிருக்கிறீர்கள் பதிவை…உங்கள் கனவு நனவாக வாழ்த்துக்கள்…நானும் தினமும் எங்கள் வீட்டினருகில் கூவும் குயிலுடன் போட்டி போட்டுக் கூவுவேன்… அது இன்னம் பலமாகக் கூவும்…போட்டிக்கு ஆள் வந்து விட்டது எனும் நினைப்பா எனத் தெரியவில்லை…

 5. //என்னுடைய அற்புத அனுபவத்தின் கனவெல்லாம் இன்னும் ஓராயிரம் மரங்களை வளர்த்து காடாக்க வேண்டும் என்பதில் இருக்கிறது.//

  கனவு நனவாகட்டும் சகோதரி …!

 6. பிங்குபாக்: தமிழில் இயற்கை எழுத்தின் தொடர்ச்சி… | மு.வி.நந்தினி

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.