தருமபுரி-சென்னை சாலையில் கடந்த 13 வருடங்களாக பயணித்துக்கொண்டிருக்கிறேன். முன்பு போரூர் வரைக்கும்கூட வயல்களைக் காணமுடிந்தது. இப்போது தருமபுரியைச் சுற்றியிருந்த விளைநிலங்கள்கூட துண்டுபோடப்பட்டுள்ளன, வீட்டுமனைகளுக்காக. சென்னையானது திருப்பத்தூர் வரை நீண்டுவிட்டது. சாலையோரங்களில் வீட்டுமனை வாங்குவது இன்று லாபகரமான முதலீட்டு வழியாகிவிட்டது. இதில் வர்க்கபேதம் இல்லாமல், தினப்படி சம்பளம் வாங்குபவர்களில் ஆரம்பித்து லட்சங்களில் சம்பளம் வாங்குபவர்கள் வரை அத்தனை பேரின் முதலீட்டு விருப்பமும் இதுவாகத்தான் இருக்கிறது. ரியல் எஸ்டேட் நிறுவனங்களால் ஊதி பெருக்கப்பட்ட இந்த லாபகரமான முதலீட்டு மாயை விரைவில் உடையும். லாபத்தை நோக்கியிருக்கும் முதலீட்டாளர்கள் நட்டத்தை ஈடுகட்ட இப்போதே வேறுவழிகளை தேடிவைத்துக்கொள்வது நல்லது.
எங்கள் ஊரை ஒட்டியுள்ள விளைநிலங்களும் வீட்டுமனைகளாக மாறும் எத்தனிப்பில் இருக்கின்றன. வறட்சி என்ற காரணம் போதும் விளைநிலங்களைத் துண்டு போட. ஊரில் இருக்கும் மக்களெல்லாம் புதுமனைகளில் குடிபுகுந்துவிட்டால் இந்த விளைநிலங்களை நம்பியிருக்கும் இந்த மைனாக்களும் தவிட்டுக் குருவிகளும் செண்பகப் பறவைகளும் பனங்காடைகளும் எங்கே போகும்?
விளைநிலங்களெல்லாம் துண்டுபோடப்படுவதால் கிராமங்களில் பல்லுயிர்ச்சூழல் மெதுமெதுவாக காணாமல் போய்க்கொண்டிருக்கிறது. ஏரிகளுக்கு தண்ணீர் வரும் வழிகளெல்லாம் அடைக்கப்படுகின்றன. ஏரிகளைச் சுற்றியிருந்த மரங்கள் வெட்டப்பட்டு அவற்றில் வாழ்ந்துவந்த மடையான்களும் உண்ணிகொக்குகளும் திசைதெரியாமல் பறந்துகொண்டிருக்கின்றன. சமீபத்தில் பழந்தமிழர் உணவு என்ற புத்தகத்தைப் படித்தேன். அதில் பிரபல எழுத்தாளர் ஒருவர் மடையான் வலசை வருவதாக எழுதியிருந்தார். கொக்கு, மடையான் கறி எவ்வளவு ருசியாக இருக்கும் என நாக்கைச் சப்புக்கொட்டி எழுதியிருந்த அவர், மடையான் நம்ம ஊர் ஏரிக்கரை மரத்தில் இருக்கும் என்பதைக்கூட அறியாமல் இலக்கியம் படைத்துக்கொண்டிருக்கிறார்! பாவம், இந்த மடையான்கள்…
இந்த ரியல் எஸ்டேட் மாயை நிச்சயம் உடைக்கப் பட வேண்டும். இதைக் கட்டுபடுத்த அரசு தக்க நடவடிக்கை எடுக்கப் பட வேண்டும்.
சிறந்த வழிகாட்டல்.