விநாயகர் சதுர்த்தியும் துரத்தியடிக்கடிக்கப்படும் யானைகளும்

விநாயகர் சதுர்த்தி நாடெங்கிலும் வெகுவிமர்சையாகக் கொண்டாடப்படுகிறது. இத்தனை வருடங்களாக எங்கள் தெருவில் தோன்றாத பிள்ளையார், இந்த ஆண்டு கோலாகலமாக வீற்றிருக்கிறார். உபயம் இந்து முன்னணி. என்னுடைய இந்தப் பதிவு அதைப்பற்றியதல்ல. யானைகளை துரத்தியபடி யானை தலையைத் தாங்கி நிற்கும் ஒரு கடவுளை வணங்கும் நம்மைப் பற்றிய சுயவிமர்சனம் இந்தப் பதிவு. யானைக் கடவுளை வணங்கும்படி எனக்கு குழந்தைப் பருவத்தில் சொல்லித்தரப்பட்டது. யானைக் கடவுளுக்கான விழாவை நான் பிறந்த ஊரில் விமர்சையாகவே கொண்டாடுவார்கள். ஆனாலும் பிரத்யேகமான கவர்ச்சியோ, உறவோ யானை கடவுள் மேல் எனக்கு ஏற்பட்டதில்லை. யானைகள் மேலும் அப்படித்தான். அது என்னோடு வாழும் ஒன்றாகவே பட்டது. அதன் பேரில் வியப்பும் இல்லை, ஈர்ப்பும் இல்லை. யானைகள் வந்து செல்லும் வழித்தடத்தில்தான் எங்களுடைய பள்ளிப் பயணம் இருக்கும். யானை தின்றுவிட்டுப்போன பலாப்பழங்களை சேகரிப்பது என்னுடைய பால்ய கால ஆர்வமாக இருக்கும். காட்டு யானைகளை பால்ய வயதில் நேரில் பார்த்த நினைவு எனக்கு இல்லை. வளரும் பருவத்தில் தெருவில் பிச்சையெடுத்துக்கொண்டிருந்த யானைகளைப் பார்த்திருக்கிறேன். சமீபகாலத்தில்தான் சத்தியமங்கலம் வனப்பகுதியில் மூங்கில் கிளைகளை ஒடித்துக்கொண்டிருந்த ஒரு யானைக் கூட்டத்ததைப் பார்த்தேன்.

யானைக்கும் எனக்குமான தொடர்பு நான் ஏழுமாத கருவாக இருந்தபோதிலிருந்து ஏற்பட்டது. என்னை கர்ப்பத்தில் சுமந்திருந்த அம்மா, விறகுகட்டுகளை தலையில் தூக்கி சுமந்தபடி அந்திவேளையில் வீடு திரும்பியபோது யானையைப் பார்த்து அலறி விழுந்ததாகவும் அப்போது இடுப்பில் ஏற்பட்ட வலி இப்போதும் இருக்கிறது என்று என் அம்மா இறக்கும்வரை சொல்லிக்கொண்டிருந்தார். நான் பிறந்தது யானைகள் நடமாட்டம் உள்ள, சூழலியல் மொழியில் சொல்லப்போனால் யானை வழித்தடத்தின் மேல் அமைந்த ஒரு ஊரில். இப்போது கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ளது அந்த ஊர். இந்த ஊர் குறித்து நான் எழுதிய இந்தப் பதிவில் படிக்கலாம். சுற்றிலும் காடு, சிறிது பண்படுத்தப்பட்ட விவசாய நிலம், அதை நம்பிருந்தனர் அந்த ஊர் மக்கள். 25 ஆண்டுகளுக்கு முன்புவரை மண்சாலைகள்தான். ஐந்து ஆண்டுகளுக்கு முன் அந்த ஊருக்குச் சென்று வந்திருந்த அம்மா, தார்ச்சாலைகள் போடப்பட்டு பேருந்து போக்குவரத்து வசதியும் செய்திருப்பதாக சொன்னார். இதேபோல அந்த வனப்பகுதியில் இருந்த மற்ற ஊர்களுக்கும் போக்குவரத்து வசதிகள் செய்யப்பட்டிருக்கும், மின்கம்பங்கள் அமைக்கப்பட்டிருக்கும், கட்டடங்கள் பெருகியிருக்கும் (இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பே அந்த ஊரில்  யானைகள் வந்து செல்லும் பலாமரக்காட்டை அழித்து குடியிருப்புகள் கட்டப்பட்டன), மக்களும் பெருகியிருப்பார்கள். ஆனால் யானைகள்?

யானைகள் கிராமங்களுக்குள் புகுந்து அட்டகாசம் செய்வதாக செய்திகளில் அதிகம் அடிபடும் பகுதியாக இப்போது இந்தப் பகுதி மாறியிருக்கிறது. வெட்கமே இல்லாமல் அது எப்படி மனிதர்களால் மட்டும் பொய்யை மெய்யாக்க முடிகிறது? யானைகளின் வாழ்விடங்களுக்குள் புகுந்து அட்டகாசம் செய்வதென்னவோ நாம்தான். வாழ்விடங்களைப் பிடிங்கிக்கொண்டு அகதிகளாக துரத்தியடிக்கப்படும் இந்த உயிர்களின் மேல் ஏன் நமக்கு எந்த கரிசனமும் வருவதில்லை? மக்களுக்கு அடிப்படை வசதிகள் கிடைப்பதில் எனக்கு மாற்றுக்கருத்தும் இல்லை. ஆனால் அந்த மக்களுக்கு நம்மோடு சகஉயிரியாக இருக்கும் காட்டுயிர்களின் மேல் அக்கறை இல்லாமல் இருக்கிறதே என்பதே என்வேதனை. இதற்கெல்லாம் காரணகர்த்தாக்களாக அரசுகளைத்தான் கைகாட்ட வேண்டியிருக்கிறது. ஒருபக்கம் வெறுமனே கண்துடைப்புக்காக கொண்டுவரப்படும் வனத்துறை சட்டங்கள், இன்னொரு பக்கம் வனத்தை ஒட்டியுள்ள நிலப்பரப்பை அசுரவேகத்தில் ஆக்கிரமிப்பு செய்வது. இரண்டும் முறைகேடு மிகுந்த இந்த அரசுகளின் அவலட்சணமான முகங்கள்.

Elephant family

மேற்குத் தொடர்ச்சி மலையில் ஒரு யானை குடும்பம்

வனத்தை ஒட்டியுள்ள பகுதிகளை பழங்குடிகளைத் தவிர, புதிய குடியேறிகள் பயன்படுத்துவதை தடுக்கும் சட்டங்கள் இருந்தும் அதை நடைமுறைப்படுத்துவதில் தொடக்கம் முதலே அரசுகள் கண்டுகொள்ளவில்லை. அடுத்தது காட்டுயிர் நடமாட்டம், குறிப்பாக யானை வழித்தடங்களை அறிவியல் ரீதியாகக் கண்டறிந்து அந்த வழித்தடங்களில் உள்ள குடியிருப்புகள் அப்புறப்படுத்துதல், விவசாய நிலங்களை கையகப்படுத்தும் பணிகளைச் செய்யவில்லை. அடுத்தது வனத்துறைக்குச் சொந்தமான ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களை கையகப்படுத்தியிருக்கும் ஆன்மிக நிறுவனங்கள், தனியார் கல்வி நிறுவனங்கள், சுற்றுலா நிறுவனங்களை கண்டுகொள்ளாமல் விட்டிருப்பது. அரசுகளின் ஆதரவோடு நடக்கும் சூழலியல் சார்ந்த மிகப்பெரிய முறைகேடு, ஊழல் இதுவாகத்தான் இருக்கும். யானை உள்ளிட்ட காட்டுயிர்களின் அழிவுக்கு அடித்தளமாக இருக்கும் இந்த பிரச்னைகளை களையாமல் ஊருக்குள் நுழையும் காட்டு யானைகளை விரட்ட கும்கி யானைகளாக்கப் போவதாக 6 காட்டுயானைகளைப் பிடித்து பயிற்சி அளித்துக்கொண்டிருக்கிறது தமிழக அரசு. அரசன் எவ்வழியோ மக்களும் அவ்வழியே…

படம் நன்றி : தி நேச்சர் டிரஸ்ட்

12 thoughts on “விநாயகர் சதுர்த்தியும் துரத்தியடிக்கடிக்கப்படும் யானைகளும்

 1. தரமான பதிவு..சமூக அவலங்கள் சுனாமியைவிட வேகமாக வனப்பகுதியை அழித்துக்கொண்டிருக்கிறது…மக்கள் பெருக்கமும் ஒரு காரணமாக இருக்கிறது..என்ன செய்ய..நம்மால் கோபப்பட மட்டுமே முடியும்…அந்த விநாயகந்தான் காப்பாத்தனும்….

 2. // ஒருபக்கம் வெறுமனே கண்துடைப்புக்காக கொண்டுவரப்படும் வனத்துறை சட்டங்கள், இன்னொரு பக்கம் வனத்தை ஒட்டியுள்ள நிலப்பரப்பை அசுரவேகத்தில் ஆக்கிரமிப்பு செய்வது. இரண்டும் முறைகேடு மிகுந்த இந்த அரசுகளின் அவலட்சணமான முகங்கள். //

  சரியான கருத்து… அருமையான பதிவு

 3. மிகவும் வலிமையான எழுத்துக்களால் உங்கள் கருத்தை பதிந்திருக்கிறீர்கள், நந்தினி, பாராட்டுக்கள். எனது முகநூல், g+, வேர்ட்ப்ரஸ் தளங்களில் பகிர்ந்திருக்கிறேன்.

 4. யானையை மட்டுமா நாம் விரட்டியடித்துக் கொண்டிருக்கிறோம்.புலி,சிட்டுக் குருவிகள், தேனீக்கள் … என்று பெரிய லிஸ்ட் நீளும்.
  மிகவும் உபயோகரமான பதிவு.அரசு யோசிக்குமா……

 5. வனங்களையும், நதியின் படுகைகளையும் அழித்து நாம் குடியேறிவிட்டு விலங்குகளையும், இயற்கையையும் குற்றம் கூறிக்கொண்டிருக்கிறோம். எல்லாவிதத்திலும் நாமும் நமது அரசாங்கமும் காரணகர்த்தாக்களாக ஆகிவிட்டு பாவம் விலங்குகளை குற்றம் சொல்லி என்ன பயன்…..

  நல்ல கட்டுரை. பாராட்டுகள்.

 6. காடுகளை பாதுகாக்கவும் விலங்குகளை காக்கவும் இனி அரசோ மக்களோ தவற விட்டால் …ஒரு குடம் நீருக்காக கூட வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்ய வேண்டி வரும் மக்களிடத்த்தில் விழிப்புணர்ச்சி வர அந்த யானைக்கடவுள் அருள் புரிய வேண்டும் …

 7. அரசும், வனத்துறையும்,இந்த மக்களில் இருந்து வந்தவர்கள் தானே, மக்களின் பண்பாடும், அறியாமையும் நீங்காத வரையில் இதற்கான தீர்வு இல்லை.இது போன்ற எத்தனை கட்டுரைகள் எழுதினாலும்,பாராட்டுகள் கிடைக்கும் ஆனால் நோக்கத்திற்கான பலன் கிடைக்குமா? நம் மக்களின் பண்பாட்டு குறைபாடுகளையும், கருத்தியல் அறியாமைகளையும் அறிவார்ந்த முறையில் கேள்விக்கு உட்படுத்தும் திராணியும்,தைரியமும் நம்மிடம் இல்லை.ஆகவே இயற்கையும், காட்டுயிர்களும் விரைந்து அழிந்து தான் போகும், தடுக்க யாராலும் முடியாது.குற்றமும்,எதையும் கொடூரமாக அழிக்கும் உளவியலும் வாழும் நம் சமூக மக்களிடம் இருக்கும் போது, குறைகளை,அறிவியல் மீதும்,அரசு மீதும் சாட்டி விட்டு தப்பிக்கும் மனநிலையில் தான் நாம் அனைவரும் இருக்கின்றோம். “யானைகள் கோயில்களில் இருந்தால் பக்தி,காட்டில் இருந்தால் வில்லன்”, இந்த நிலைக்கான காரணத்தை வெளிப்படுத்தும் துணிச்சலும்,அறிவார்ந்த தைரியமும் நம்மிடம் இல்லை.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.