’’பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறை ஒருவகையான போர்தந்திரம்’’

குங்குமம் வார இதழில் நிருபராக பணியாற்றிய 2007ல் ஒரு புகைப்படக் கண்காட்சியை ஒட்டிய கட்டுரைக்காக சுசித்ரா விஜயனை சந்தித்தேன். போர் பாதித்த ஆப்பிரிக்க பகுதிகளில் வசித்த சிறுவர்களைப் பற்றி பதிவு அந்தப் புகைப்படக் கண்காட்சி. புகைப்படங்களை எடுத்தவர் சுசித்ரா. ஐநாவின் போர் குற்றப்பிரிவில் யுகோஸ்லோவியா, ருவாண்டா நாடுகளில் பணியாற்றியபோது எடுத்த படங்கள் அவை. தெளிவான சிந்தனையும் அரசியல் பார்வையும் கொண்ட பெண். எளிமையானவர். அவருடைய புகைப்படங்களே புதிய மொழியைப் பேசின. சுசித்ரா இங்கிலாந்தில் பாரிஸ்டர் பட்டம் பெற்றவர். தற்போது மனித உரிமைக்கான வழக்கறிஞராக பணியாற்றுகிறார். எழுத்தாளர், அரசியல் விமர்சகர் என்பவை இவருடைய வெவ்வேறு முகங்கள்.

selects_o
தற்போது பார்டர் லேண்ட்ஸ் என்கிற பெயரில் இந்தியாவை ஒட்டியுள்ள பாகிஸ்தான், சீனா, நேபாளம், பர்மா, பூடான், வங்காளதேசம் எல்லைப் பகுதிகளில் அந்தப் பகுதி மக்களின் வாழ்க்கைச்சூழலை ஆவணப்படுத்தும் முயற்சியில் இறங்கியிருக்கிறார்கள். இந்த ஆவணப்படுத்தலுக்காக பிரபல நிதி திரட்டு தளமான கிக்ஸ்டார்டர் மூலம் நிதி திரட்டிக் கொண்டிருக்கிறார். ஆர்வம் உள்ளவர்கள் இந்தச் சூட்டியில் சென்று உதவுங்கள்.

IMG_2550

ஒரு வார இதழுக்காக சுசித்ராவுடனான உரையாடலின் ஒரு பகுதி கீழே…

நீங்கள் வெவ்வேறு நாடுகளில் வசித்திருக்கிறீர்கள். அந்த சமூகங்களில் பெண்கள் எப்படி நடத்தப்படுகிறார்கள்? முக்கியமாக இங்கிலாந்திலும் ஆப்பிரிக்க நாடுகளிலும்.

பெண்கள் எப்படி நடத்தப்படுகிறார்கள் என்பது அவர்கள் எங்கே இருக்கிறார்கள் என்பதைப் பொறுத்ததல்ல, அவர்கள் யாரால் எப்படி நடத்தப்படுகிறார்கள் என்பதே முக்கியம். சமூகத்தைக் கடந்து, தனிப்பட்ட முறையில் பெண்கள் எப்படி நடத்தப்படுகிறார்கள் என்பதையே சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது. குடும்ப வன்முறைகள்தான் உலகம் முழுக்க உள்ள பெண்களை அதிகம் பாதிப்புக்குள்ளாக்குகிறது. இதில் வேறுபடும் ஒரே விஷயம், வெவ்வேறு நாடுகளில் உள்ள பொது சமூகம், பெண்களுக்கு எதிரான குடும்ப வன்முறைகளை எப்படி பார்க்கிறது என்பதாக இருக்கிறது.

போர், பெண்களின் வாழ்க்கைச்சூழலில் எத்தகைய மாற்றங்களை, பாதிப்புகளை ஏற்படுத்துகிறது?

ஆயுதமேந்திய போராட்டங்களின்போது பெண்கள் பல்வேறு பாதிப்புகளை சந்திக்கிறார்கள். அமைதிக் காலங்களில் சந்தித்த பாலின பாகுபாடுகளின் நீட்சியாகவே போராட்டக்காலங்களிலும் பெண்களுக்குக் கெதிரான குற்றங்கள் அரங்கேறுகின்றன. ஏனெனில் சமூகத்தில் பெண்களுக்குரிய இடம் மறுக்கப்படுகிறது, முக்கிய முடிவுகளை எடுக்கும் பணிகளிலிருந்து அவர்கள் தள்ளியே வைக்கப்படுகிறார்கள். அவர்கள் எப்போதும் பாதிக்கப்படுபவர்களாகவே இருக்கிறார்கள். அவர்களுடைய அனுபவங்கள், பங்களிப்புகள் தெரிந்தே மறுக்கப்படுகின்றன. பிரச்னைக்குரிய நாடுகளிலும் பிரச்னை ஓய்ந்த நாடுகளிலும் இதே நிலைதான். ஆயுதமேந்திய போராட்டங்களில் பெண்களைவிட ஆண்கள் அதிகமளவில் ஈடுபடுகிறார்கள். பராமரித்தல், மருத்துவ பணிகள், தொழிற்சாலை மற்றும் விவசாயப் பணிகள், குழந்தை வளர்ப்பு போன்றவை பெண்களுக்குரிய பணிகளாக மாறிவிடுகின்றன. இந்தப் பணிகளுக்கு எப்போதும் ஊதியமும் கிடைப்பதில்லை, அங்கீகாரமும் கிடைப்பதில்லை. இவற்றைத் தவிர, போராட்டக்களங்களில் உதவியாளர்களாக, செவிலியர்களாக, சமைப்பவர்களாக, பாலியல் தொழிலாளிகளாகவும் இருக்கிறார்கள்.
பிரச்னைக்குரிய பகுதிகளில் பெண்களும் பெண்களை சார்ந்திருப்பவர்களும் மருத்துவ உரிமைகள் மறுக்கப்பட்டவர்களாகவே இருக்கிறார்கள். குறிப்பாக பிரச்னைக்குரிய அரசாங்கங்கள் கர்ப்பத்தடைக்கான மருத்துவ நிதியின் பெரும்பாலான பகுதி போருக்காக பயன்படுத்துகிறது. ஆயுதமேந்திய போராட்டப் பகுதிகளில் முறையான மருத்துவ, உளவியல் தொடர்பான உதவிகள் மறுக்கப்படுகின்றன. இதனால் பாதிக்கப்படுபவர்கள் வீட்டை சார்ந்திருக்கும் பெண்கள்தான். பிரச்னைக்குரிய பகுதியில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறை ஒருவகையான போர்தந்திரமாகவே கையாளப்படுகிறது. 1994ம் ஆண்டு மட்டும் ருவாண்டாவில் 5 லட்சம் பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாகியிருக்கிறார்கள். இதுதவிர, பெண்களை அவர்கள் சார்ந்த குடும்ப ஆண்களின் முன்பே பாலியல் வல்லுறவு செய்வதும் நடந்திருக்கிறது.
பல சமூகங்களில் போர்களின்போது எதிரி வீட்டுப் பெண்களை வல்லுறவுக்கு உள்ளாக்குவது பாரம்பரியமிக்க செயலாகவே கருதப்படுகிறது. பெண்களை குழந்தைகளை கடத்தி, அவர்களை பாலியல் அடிமைகளாக நடத்துவதுடன், ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு இடம்பெயரும்போது தங்களுடைய உடைமைகளை சுமக்கவும் பயன்படுத்திக்கொள்கிறார்கள். இந்த சூழலில் மாட்டிக்கொள்ளும் பெண்கள் வலுக்கட்டாயமாக எச்ஐவி தொற்றுக்கு ஆளாகிறார்கள். வன்முறையான போராட்டச்சூழல் பெண்களை தங்கள் வீடுகளை விட்டு விரட்டியடிக்கிறது, தங்களுக்கு பாதுகாப்பான சொர்க்கத்தைத் தேடும் அவர்களுக்கு, புதைக்குழிகளே காத்திருக்கின்றன.
அகதி முகாம்களில் இருக்கும் பல பெண்கள், தங்களை பாலியல் வன்முறைகளிலிருந்து காப்பாற்ற தங்கள் வீட்டு ஆண்கள் ஆயுதமேந்த வேண்டும் என்கிறார்கள். ஆனால், அதிகாரத்தில் இருக்கிறவர்கள், தொண்டு நிறுவனங்கள் உள்பட தங்கள் நடுநிலைமைகளை தக்கவைத்துக்கொள்ள எப்போதும் கண்களை மூடிக்கொள்கிறார்கள்.

நீங்கள் பெண்ணியவாதியா?

நான் பெண்ணியவாதில்லை. பெண்ணுக்குரிய உரிமைகள் எனக்கு மறுக்கப்பட்டதில்லை. நான் வளர்க்கப்பட்ட சூழல் அப்படி. நானும் என் தங்கையும் பெண்கள் என்பதைக் கடந்து வளர்க்கப்பட்டோம். பாகுபாடுகளோடுகூடிய சூழலை நாங்கள் இதுவரை உணர்ந்ததில்லை.

One thought on “’’பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறை ஒருவகையான போர்தந்திரம்’’

  1. பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறை நல்ல சொல்லாடல் .அருமை இதை எவ்வாறு இல்லாமல் செய்வது .?? பெண்களுக்கு ஆதரவான பாலியல் இன்முறை இதை பெண்களே முன்வைக்கலாமே .பெண்களே! இதை சரியான கோணத்தில் யோசித்து பாருங்கள் .தவறு எங்கே இருந்து வருகிறது என்று உங்களுக்கு புரியும்

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.