சூழலியல் பாதுகாப்பு என்று பேச ஆரம்பித்தாலே பலர் கவலைப்படுவது காணாமல்போன சிட்டுக்குருவிகள் பற்றித்தான். ஏனெனில் சிட்டுக்குருவிகள் நம்மோடு தன் வாழ்விடத்தைப் பகிர்ந்துகொண்ட உயிரினம். நாம் அதை செல்லப்பிராணியாக வளர்க்கவில்லை என்றாலும் நம் வீட்டின் ஒரு பகுதியிலேயே அதுவும் குடியிருக்கும், நம் உண்ணும்போது இடும் உணவுப் பருக்கைகளை ஆர்வத்தோடு கொத்தித் திண்ணும், நம்மோடு விளையாடும். இதெல்லாம் 15 வருடங்களுக்கு முந்தைய நிலை. இன்று சிட்டுக்குருவிகள் நம்முடனான உறவை துண்டித்துக்கொண்டன. நம்முடன் இருக்கும் சிலவற்றையும் தேடிப்பார்க்க வேண்டியிருக்கிறது. நகரங்களில் மட்டுமல்ல, கிராமங்களில்கூட இதே நிலைதான். என் குழந்தைப் பருவத்தில் சிட்டுக்குருவிகளை கூட்டாமாகத்தான் பார்த்திருக்கிறேன். இணைகளாகத் திரியும், ஆனால் நிறைய இணைகளை ஒரே இடத்தில் காணமுடியும். இப்போது ஒரு இணையை மட்டுமே பார்க்கிறேன். சிட்டுக்குருவிகள் பற்றிய செய்திகளைப் படிக்கும்போதெல்லாம் நான் வாழும் இடங்களில் அவற்றைத் தேடிப் பார்ப்பதுண்டு. நெருக்கடி மிகுந்த சென்னை சூளைமேடு பகுதியில் சில சிட்டுக்குருவிகளைப் பார்த்திருக்கிறேன். என் வீட்டின் அருகே இருக்கிறதா என்று நோக்கும்போது ஒரு இணை சிட்டுக்குருவிகள் என் கண்களில் பட்டன. சிட்டுக்குருவிகளின் கீச்சொலி காலை நேரங்களில் கேட்கும். என் வசிப்பிடத்தை குறுக்கும் நெடுக்குமாக அவை கடந்து போகும். சாலையை ஒட்டியுள்ள தெருமுனையில் அவை மாலை நேரங்களில் மேய்ந்துகொண்டிருக்கும். அவற்றின் கூடுகள் நெரிசல்மிக்க அந்த கட்டடப் பகுதியில் எங்கு அமைந்திருக்கிறது என கண்டறியமுடியவில்லை. அவ்வவ்போது முருங்கை மரத்திற்கு அவை வந்துபோகும், வெயில் நேரங்களில் கொய்யா மரத்தில் அமர்ந்திருப்பதைப் பார்த்திருக்கிறேன். இவற்றைத் தவிர நிற குறைபாடுடன் உள்ள ஒரு சிட்டுக்குருவியையும் சமீபத்தில் பார்த்தேன்.
நம்மோடு வாழ்ந்த சிட்டுக்குருவி காணாமல் போக என்ன காரணம் என பல கோணங்களில் விதாவதங்களும் ஆய்வுகளும் நடந்துவருகின்றன. செல்போன் கோபுரங்களால் வெளியிடப்படும் மின்காந்த அலைகளே சிட்டுக்குருவிகள் அழியக்காரணம் என்றார்கள். சிலர் சிறுதானியங்களை நாம் பயன்படுத்துவதை நிறுத்தியதன் விளைவே, அவற்றை உண்ட சிட்டுக்குருவிகளின் அழிவுக்கு வழிகோலியது என்றார்கள். மனிதப்பெருக்கத்தின் விளைவாக, நாட்டில் இருந்த சிட்டுக்குருவிகள் எல்லாம் காட்டுக்குத் திரும்பிவிட்டன என்கிறார் காட்டுயிர் எழுத்தாளர் ச. முகமது அலி. காலச்சூழலுக்கு ஏற்ப தன் வசிப்பிடத்தை மாற்றிக்கொண்டன சிட்டுக்குருவிகள் என்கிறார் அவர்.
வகைப்பாட்டியலின் தந்தை கார்ல் லின்னேயஸ், 1758ம் ஆண்டு வெளியிட்ட முதல் பட்டியலில் இடம் பிடித்த உயிரினங்களில் சிட்டுக்குருவியும் ஒன்று.
அறிவியல் பெயர்: Passer domesticus
ஆங்கிலப் பெயர்: House Sparrow
உணவு : தானியங்கள், புழு பூச்சிகள்
வாழிடம்: புல் நிறைந்த இடங்கள், விவசாய நிலங்கள், மனிதர்களின் வசிப்பிடங்கள்
ஆண்-பெண் உருவ வேறுபாடு: ஆண் குருவிக்கு மேல் சிறகில் அடர் பழுப்பு மற்றும் கருமையான பட்டைகள் இருக்கும், பெண் குருவி, வெளிர் பழுப்பு நிற சிறகுகளை மேல்புறத்தில் கொண்டிருக்கும்.
உடலமைப்பு: எடை – 24லிருந்து 38 கிராம்.
அருமையான பதிவு நந்தினி இதைப் பற்றி நானும் ஒரு கவிதை எழுதியுள்ளேன் முடிந்தபோது படிக்கவும்
Good one. height can not be 14cm. Pls check…
தவறை சுட்டிக்காட்டியமைக்கு நன்றி விஜயகுமார். சரியான தகவலை விரைவில் எழுதுகிறேன்.