இரவு கொண்டாட்டத்தை முதலில் விடுங்கள்!

உமா சக்தியின் முகநூல் குறிப்பைப் பார்த்து எனக்கு முதலில் வியப்பு ஏற்பட்டது. தமிழின் முதன்மையான ஒரு ஊடகத்தை கேள்வி கேட்கும் துணிவு இவருக்கு எப்படி வந்தது என்பதே காரணம். உமாவைப் பற்றி குடும்பம், குழந்தை, கவிதை என மென்மையான விஷயங்களே எழுதுவதாக சிலர் விமர்சித்ததுண்டு. இதைப்பற்றி உமாவும் எழுதியிருந்தார். முரண்பாடு இதில்தான் இருக்கிறது. உள்ளூர் விவகாரத்திலிருந்து உலக விவகாரம் வரை  போராடும் ஊடக போராளிகள் எல்லாம் தேவையான நேரத்தில் மட்டும் எனக்கும் இதற்கும் எந்த தொடர்புமே இல்லை என்கிறமாதிரி கள்ள மெளனம் சாதிக்கும்போது உமாவிடம் இருக்கும் துணிவை பாராட்டியே ஆக வேண்டும். ஆக முற்போக்கு என்பது வார்த்தையில் இல்லை, செயலில்தான் இருக்கிறது. இதை தெரியபடுத்திய இன்னொரு சந்தர்ப்பம் இது.

பேப்பர் கட்டுகளை கரைத்து குடித்துவிட்டு இந்த முற்போக்கு பத்திரிகையாளர்கள் விடும் ஏப்பம் பல நேரங்களில் எரிச்சலை ஏற்படுத்துவண்டு. என்னுடைய அனுபவத்தில் இப்படியொரு சம்பவம். ஒரு காட்சி ஊடகத்தில் பணியில் சேர்ந்திருந்த புதிது. அப்போது அறிமுகமானார் அவர். முற்போக்குவாதி, பெரியாரிஸ்ட், கம்யூனிஸ்ட் இப்படி பெரிய லிஸ்ட்டுடன்தான் தன்னை காட்டிக்கொள்வார். நான், அவர், உடன் பணியாற்றிய இரண்டு தோழிகள் நண்பர்களானோம். நாங்கள் பணியாற்றிய அந்த நிறுவனத்தில் அந்த உயரதிகாரியின் ஆட்டம் அதிகமாக இருந்த காலகட்டம் அது. அவரை திட்டி தீர்க்கவே நாங்களெல்லாம் ஒன்று கூடினோம். வாரத்தின் ஏதோ ஒரு நாள் மயிலை பார்க்கில் கூடி இதுபோன்ற பிரச்னைகளை பேசி தீர்வு காண வேண்டும் என்பது எங்கள் திட்டம். முதல் நாள் வந்தது அந்த முற்போக்குவாதியைத் தவிர, எங்கள் மூவருக்கும் ஊடகங்களில் இருக்கும் இதுபோன்ற அதிகாரிகளுக்கு எதிராக ஏதாவது செய்ய வேண்டும் என்கிற கோபம் அதிகமாக இருந்தது. மூவரில் நானும் இன்னொரு தோழியும் படிக்கும் பழக்கம் உள்ளவர். இன்னொரு தோழிக்கு அந்த பரிட்சையம் எதுவும் இல்லை. ஆனால் எங்கள் இருவரைவிட அவருக்கு அந்த அதிகாரியின் மேல் கோபம் அதிகம். இதில் எங்கள் மூவருக்கும் அந்த அதிகாரிக்கும் நேரடியாக எந்த அச்சுறுத்தலும் இருந்ததில்லை. அந்த அதிகாரியால் பாதிப்புக்குள்ளான எங்களுடன் பணியாற்றிய சக தோழிகளின்மேல் எங்களுக்கு இருந்த அக்கறையாலும் எங்களுக்கும் இதுபோன்ற நிலைமை ஏற்படலாம் என்கிற அச்சத்தாலும் நாங்கள் கோபம் கொண்டோம். முதல் நாளும் வந்தது, முற்போக்கின் முகமூடி சாரி முகவரி, கையில் பெரியாரின் புத்தகத்தோடு வந்திருந்தார். அந்தக் காலத்தில் சுயமாரியாதை பெண்கள் இயக்கம் இருந்தது. அவர்கள் பெண்ணடிமைத்தனம் உள்ளிட்ட பெண்களை பாதிக்கும் பிரச்னை பற்றி பேசினார்கள். அதுபோல நாமும் ஒரு இயக்கத்தைத் தொடங்க வேண்டும் என்றார். சிறிது நேரம் தான் கையில் கொண்டுவந்திருந்த புத்தகத்திலிருந்து சில பக்கங்களை எல்லோருமாகப் படித்தோம். பிறகு, எங்களுடைய பேச்சு அலுவலகத்தில் அந்த அதிகாரியின் நடத்தைப் பற்றி திரும்பியது. இவரைப் போன்றவர்கள்தான் ஆர்வமாக பணியாற்ற வரும் பெண்களை மீண்டும் வீட்டுக்குள்ளே திருப்பி அனுப்பிக் கொண்டிருக்கிறார். இதைப் பற்றி பேசுவது, தீர்வு காண்பதுதான் இப்போதைய முதல் தேவை என்றேன் நான். இரண்டு தோழிகளும் இதையே உறுதிப்படுத்தினார்கள். ஆனால் முற்போக்கு தோழிக்கு அதெல்லாம் பெரிய பிரச்னையாகவே தெரியவில்லை. அதைப் பற்றி பேசுவதைக்கூட அவர் விரும்பவில்லை. நான்கைந்து வாரங்கள் இதே பாணியில் தொடர்ந்தது. ஒருகட்டத்தில் முற்போக்கு தோழி அந்த அதிகாரிக்கு சொம்பு தூக்கி என்பதை தெரிந்துகொண்டு சுயமரியாதை இயக்கத்துக்கு பெரிய வணக்கத்தை வைத்துவிட்டோம்.
இதை இப்போது சொல்லக் காரணம், ஊடகம் தொடர்பான சிக்கல்களை, பிரச்னைகளை எழுதும்போதெல்லாம் முற்போக்கு என்று காட்டிக்கொள்ளும் பெண்களெல்லாம் மெளனம் காக்கிறார்கள். அலுவலகத்தில் உள்ள பிரச்னைகளைப் பேசினால் தாங்கள் பணியாற்றும் நிறுவனத்தில் தங்களுக்கு ஏதாவது பாதிப்பு வரும் என்பதற்காக மெளனம் காக்கிறார்கள் என்று குறுக்கிவிட முடியாது. இதை இப்படி சொல்லலாம் பச்சையான கள்ளத்தனம்! பச்சையான சுயநலம்! அந்த வகையில் உமா சக்தியின் வெளிப்படைத் தன்மையை நான் வரவேற்கிறேன். அவரை நான் கவிஞராகவோ, எழுத்தாளராகவோ, முற்போக்குவாதியாகவோ பார்க்கவில்லை. சாதாரண உழைக்கும் பெண்ணாக பார்க்கிறேன்.10 மணி வரை வேலைப்பார்த்துவிட்டு அம்பத்தூர், தாம்பரம், அரக்கோணம் என புறநகர் தாண்டி அகால நேரங்களில் வீடு திரும்பும் பெண்களை நினைத்துப் பாருங்கள். அடடா இரவு எத்தனை ஏகாந்தமானது என்று சொன்னால் அடிக்க கை ஓங்குவார்கள். ஒருபக்கம் பசியும் இன்னொரு பக்கம் நாள்முழுக்க உழைத்தன் களைப்பும்தான் அவர்களிடம் தெரியும். இரவு 12 மணிக்கு அரை டவுசர் போட்டுக்கொண்டு மவுண்ட் ரோடில் டீ குடிக்க முடிந்தால் அதுதான் பெண்சுதந்திரம் என்று நினைக்கிறீர்கள்போல. அல்லது பாலியல் துன்புறுத்தலுக்கு ஆட்பட்ட பெண்ணைப் பற்றி எழுதுவதும் பாலியல் சுதந்திரம் பற்றி பேசுவதுதான் பெண்ணியம் அதை எல்லாம் பேசினால்தான் உங்களை முற்போக்கு என்று ஏற்றுக்கொள்வார்கள் என்று வரையறை வைத்திருக்கிறீர்களா? எதுவாகவோ வைத்துக்கொள்ளுங்கள் உழைக்கும் பெண்களின் அன்றாட பிரச்னையை பேசாதவரை உங்களுடைய முற்போக்கு பெண்ணிய சிந்தனையெல்லாம் பாதுகாப்பாக புத்தகங்களுக்குள்தான் அடக்கமாக இருக்கும். தன்னுடன் பணியாற்றும் சக தோழியின் பிரச்னையை பேசாத, எழுதாத உங்களுடைய பேனா உலக பெண்களை எப்படி உய்வித்து விட முடியும்? உமா சக்தி எழுதி மூன்று நாட்களாகிவிட்டது, அது வெறுமனே ஒரு முகநூல் குறிப்பாக மட்டுமே போய்விட்டது, போய்விடும். பத்திரிகையாளர்களுக்கு என்று நான்கைந்து சங்கங்கள் இருப்பதாக அறிகிறேன். எனக்குத் தெரிந்து இந்த சங்கங்களில் எல்லாம் கல்யாண விழாவும் காதணி விழாவும்தான் நடக்கிறது. ஊடக முதலாளிகளிடம் வாலாட்டும் இவர்களிடம் பெண் பத்திரிகையாளர்களின் பாதுகாப்புக்காக என்ன செய்தீர்கள் என்றா கேட்க முடியும்?

அரசு மருத்துவமனைகளை ஏன் வெறுக்கிறீர்கள்?

பிரபா கர்ப்பமானபோது அவருடைய வயது 24. கர்ப்பத்தை உறுதி செய்த பிறகு, அவருடைய உயரம்-எடையை(பாடி மாஸ் இன்டெக்ஸ்) கணக்கிட்டபோது, அவர் இருக்க வேண்டிய இயல்பான அளவைவிட குறைவான எடையைக் கொண்டிருந்தார். உயர் நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த பிரபா, சத்து குறைபாடுடன் இருந்தார். அவரை பரிசோதித்து அவருக்கும் அவர் கருவில் வளரும் குழந்தைக்குமாக சத்து மாத்திரைகள், தினசரி உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டிய உணவுகள் குறித்து அவருக்கு எடுத்துச்சொன்னார். கர்ப்பத்தின் ஒவ்வொரு கட்ட பரிசோதனையிலும் பிரபா சத்துள்ள உணவுகளை எடுத்துக் கொண்டது தொ¢ந்தது, கருவில் இருந்த குழந்தையும் ஆரோக்கியமாக வளர்ந்தது. எட்டாவது மாதத்தின் முடிவில் பிரபா நன்றாகவே பருத்திருந்தார், எடை கூடியதின் காரணமாக அவருக்கு கால்களில் நீர் கோர்த்துக் கொள்வது உள்ளிட்ட சிறு பிரச்னைகள் இருந்தன. பிரசவ வலி கண்டு அவரை மருத்துவமனையில் அனுமதித்தார்கள். குழந்தையின் எடை கூடுதலாக இருந்ததின் காரணமாக, பிரபாவால் இயல்பாக பிரசவிக்க முடியவில்லை. அறுவை சிகிச்சை செய்து குழந்தையை வெளியே எடுத்தார்கள். தாயும் சேயும் நலமாக இருக்கிறார்கள். பிரபா, இப்போது இயல்பான எடையைவிட 20 கிலோ கூடுதலாக இருக்கிறார்.
நீங்கள் இதுவரை படித்த பிரபாவின் பிரசவ கால அனுபவம், உங்களுடைய வாழ்க்கையிலும் நடந்ததாக இருக்கலாம். அல்லது உங்கள் குடும்பத்தில் யாருக்கேனும் நடந்திருக்கலாம். குறைந்தது உங்களுக்குத் தெரிந்து இதுபோல் நான்கு பெண்களுக்காவது இப்படிப்பட்ட பிரசவ அனுபம் நிகழ்ந்திருக்கும். சுகப்பிரசவம் என்பது இப்போது ஆச்சரியத்திற்குரிய ஒன்றாகிப் போன நிலையில் சிசேரியன் பிரசவம் இயல்பானதாகவிட்டது. இதிலென்ன தவறு என்பது உங்களுடைய அடுத்த கேள்வியாக இருக்கும். இதோ சில விஷயங்களைச் சுட்டிக்காட்டுகிறோம்.

  1. குழந்தைப் பெற்றுக்கொள்ளும் முன் பிரபா,தன்னுடைய உடல் எடை, ஆரோக்கிய நிலவரத்தைத் தெரிந்துகொள்ளாமல் கர்ப்பம் தரித்தது. இதற்கு அவருடைய கணவர் அல்லது துணைவரும் காரணமாக அமைந்தது.
  2.  மகப்பேறு மருத்துவர் பிரபாவின் உடல் எடை, குழந்தை வளர்ச்சி இரண்டையும் கருத்தில் கொண்டு சரிவிகித உணவுகள், தேவையான ஊட்டச்சத்து மாத்திரைகள் பரிந்துரைக்காமல் அபரிவிதமான வளர்ச்சியைத் தரும் மாத்திரைகள், உணவுகளைப் பரிந்துரைத்தது. இயல்பாக வீட்டு வேலைகளைக்கூட செய்ய பரிந்துரைக்காமல் நன்றாக ஓய்வெடுத்துக்கொள்ளும்படி பரிந்துரைத்து.
  3. கர்ப்பத்தின் அடுத்தடுத்த கட்ட பரிசோதனைகளிலேயே அளவுக்கு மீறிய உடல் எடையை கண்டுபிடித்துவிட முடியும். ஆனால் பெரும்பாலான மருத்துவர்கள் அதைச் செய்வதில்லை.
  4. கர்ப்பத்திற்குப் பிறகு, பிரபாவின் உடலமைப்பே மாறிவிட்டது. கூடுதலான உடல் எடையால் அவரால் இயல்பாக வீட்டு வேலைகளைச் செய்ய முடிவதில்லை. இது பின்னாளில் அவருக்கு ஒபிசிட்டி, சர்க்கரை, இரத்த அழுத்தம் போன்ற பாதிப்புகளையும் ஏற்படுத்தக்கூடும். சிசேரியன் பிரசவத்தின்போது முதுகுத்தண்டில் செலுத்தப்படும் மயக்க மருந்து, தலைவலியை ஏற்படுத்தக்கூடியது. மேலும் இதனால் பிரசவத்திற்குப் பிறகு, இயல்பான நாட்களில் பளுமிக்க பொருட்களைத் தூக்கும்போது முதுகுத்தண்டில் கடுமையான வலி ஏற்படும்.
  5. சிசேரியன் பிரசவத்தின்போது கர்ப்பப்பையை கிழித்தே, குழந்தை வெளியே எடுக்கப்படுகிறது. இதனால் அடுத்து கர்ப்பம் தரிக்கும்போது பிரசவம் மிகவும் சிக்கலாகி விடும். இன்னோரு முக்கியமான தகவல் சுகப்பிரசவத்தைவிட சிசேரியன் பிரசவத்தில் இரத்த இழப்பு அதிகமாக இருக்கும். சில நேரங்களில் பிரசவத்தின்போது ஏற்படும் அதிகளவு ரத்தப்போக்கால் பிரசவித்த பெண் மோசமான உடல்நல பிரச்னைகளை சந்திக்க வேண்டியிருக்கும். அதில் உயிரிழப்பதும் அடங்கும்.
  6. சிசேரியன் மூலம் பிரசவித்த பெண்ணுக்கு, சிசேரியன் காயங்கள் சரியாகி இயல்பு நிலைக்கு திரும்ப குறைந்தது 3 மாதங்கள் ஆகும். இதனால் ஆரம்ப கட்ட தாய் சேய் பிணைப்பு பாதிக்கப்படுகிறது.

சிசேரியன் பிரசவம் எந்த சூழ்நிலையில் அறிமுகப்படுத்தப்பட்டது?
கடந்த நூற்றாண்டில் பிரசவத்தின்போது நிகழ்ந்த தாய் சிசு மரணங்களை குறைப்பதற்கு மருத்துவ ரீதியாக கைக்கொடுத்ததுதான் சிசேரியன் பிரசவ வழிமுறை. இந்தியா போன்ற மக்கள் தொகை மிக்க, ஏழ்மையான நாடுகளில் சத்து முறைபாட்டாலும் சிறு வயது திருமணங்களாலும் ஏற்படும் பிரசவ கால உயிர் இழப்புகளை குறைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் வளர்ந்த நாடுகளில் சிசேரியன் பிரசவத்தை ஒரு சொகுசான பிரசவ முறையாக அரசு சாராத மருத்துவர்கள் பொதுமக்களிடம் அறிமுகப்படுத்தினர். அது பெண்களை வசீகரித்தது. வலியில்லாமல், நிமிடங்களில் பிரசவம் முடிந்தது. அந்தப் போக்கையே இந்த பத்தாண்டுகளில் இந்தியா, பிரேசில், அர்ஜென்டினா போன்ற வளரும் நாடுகளில் உள்ள தனியார் மருத்துவமனைகள் பின்பற்றத்தொடங்கின.
ஒரு முரண்பாடான உண்மை என்னவெனில் ஏழ்மைமிக்க, மருத்துவ வசதிகளற்ற பெண்களின் பிரசவ கால இழப்பை தவிர்ப்பதற்காக கையாளப்பட்ட சிசேரியன் பிரசவ வழிமுறை, இன்று பணம் படைத்த நடுத்தர, மேல்தட்டு பெண்களுக்கே பயன்படுகிறது. இந்த உண்மைக்கு ஆதாரமாக இருக்கின்றன அரசு மகப்பேறு மருத்துவமனைகள். அரசு மருத்துவமனைகளில் நடக்கு பிரசவங்களில் 90க்கும் அதிகமான சதவிகிதம் சுகப்பிரசவங்களே நடக்கின்றன. பிரசவகால இறப்பை தவிர்க்கும் பொருட்டே அரசு மருத்துவமனைகள் சிசேரியன் பிரசவங்களைச் செய்கின்றன. ஆனால் இங்கே பிரசவம் பார்த்துக்கொள்பவர்கள் பெரும்பாலும் கீழ்த்தட்டு மக்களே. இதுகுறித்து சென்னையில் உள்ள மகப்பேறு மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர் ஒருவரிடம் பேசியபோது…
’’நடுத்தர மக்கள், அரசு மருத்துவமனைகளில் இருக்கும் கூட்ட நெரிசலைப் பார்த்து,நாம் ஏன் வரிசையில் நிற்க வேண்டும் என்று தனியார் மருத்துவமனைகளுக்குச் செல்கின்றனர். அவர்கள் சொல்லும் இன்னொரு காரணம், அரசு மருத்துவமனைகளில் சுகாதாரம் குறைவு என்பது. ஒரு நாளைக்கு நூற்றுக்கணக்கில் அரசு மருத்துவமனைகளுக்கு நோயாளிகள் வருகிறார்கள். அவர்கள் செய்யும் அசுத்தங்களைச் சுத்தம் செய்வதற்கு போதுமான துப்புறவு பணியாளர்களை நியமிப்பதில்லை. அதேபோல் அரசு மருத்துவமனைகள் அதிகமாக இருந்தால் கூட்ட நெரிசலைத் தவிர்க்கலாம். இதைச் செய்தால் அரசு மருத்துவமனைகளைத் தேடி எல்லாவிதமான மக்களும் வருவார்கள். மருத்துவம் நேர்மையோடு நடக்கும். இங்கே இன்னொரு தகவலைச் சொல்கிறேன். எங்களுக்கு வரும் சிசேரியன் கேஸில் பலவை தனியார் மருத்துவமனைகளால் முடியாது என இறுதி நேரத்தில் சொல்லப்பட்டு வருபவைதான். முடியாது என்று தனியார் மருத்துவமனைகள் கைவிரிக்கும் சிக்கலான பிரசவங்களைக் கையாளும் மருத்துவ உபகரணங்கள், மருத்துவர்கள் அரசு மருத்துவமனைகளில் இருக்கிறார்கள்” என்கிறார்.
சிசேரியன் பிரசவம் அதிகமாக நடக்க என்ன காரணம்?
சிசேரியன் பிரசவங்கள் அதிகரிக்க மருத்துவ ரீதியான காரணங்கள் மிகக்குறைவாகவே இருக்கின்றன என்கிறார்கள் மருத்துவ ஆய்வறிஞர்கள். அதில் சில காரணங்கள் கருவில் இருக்கும் சிசுவின் ஆபத்தான நிலைமை, 30 வயதுகளுக்கு மேல் கர்ப்பம் தரிக்கும்போது, கர்ப்பம் தரித்த பெண் அதிக உடல் பருமனோடு இருக்கும்போது. 10 சதவிகிதத்துக்கு குறைவான எண்ணிக்கையிலே இப்படிப்பட்ட பிரசவங்கள் நடக்கின்றன. சமூகக் காரணங்கள்தான் முக்கிய பங்கு வகிப்பதாகச் சொல்கிறது உலக சுகாதார அமைப்பு. அதில் சில காரணங்கள்…
1. சிசேரியன் பிரசவம் குறித்த விழிப்புணர்வு இல்லாமை : ஒருவகையில் இதை மருத்துவ விழிப்புணர்வு இல்லாமை என்றுகூட சொல்லலாம். மருத்துவ விழிப்புணர்வு என்பது தன்னுடலின் ஆரோக்கிய நிலையில் தொடங்கி, கர்ப்பம் தரிக்க திட்டமிடுதல், கர்ப்பகால கவனிப்புகள், பிரசவம், பிரசவத்திற்குப் பிறகு தன்னுடல் எப்படி இருக்கும் என்பது பற்றி சரியாக தெரிந்து கொள்வது.
2. சுகப்பிரசவத்தின்போது ஏற்படும் வலி பற்றி பயம் : சென்ற தலைமுறை வரை நம்முடைய தாய்கூட நம்மை சுகப்பிரசவத்தில்தானே பெற்றெடுத்தார். நம் பாட்டி அல்லது நமக்குத் தெரிந்த பாட்டி ஆறு குழந்தைகளை பெற்றெடுத்த அனுபவத்தையெல்லாம் நாம் கேட்டிருப்போம். நமக்கென்று வரும்போது மட்டும் நாம் ஏன் பயப்பட வேண்டும்?
3. மூடநம்பிக்கை : குறிப்பிட்ட நேரத்தில் குழந்தை பிறந்தால், அது நல்ல யோகம் என்று சில மேல்தட்டு மக்களிடம் ஜோதிட மூட நம்பிக்கை நிலவிக்கொண்டிருக்கிறது. அடிப்படையே இல்லாத இதுபோன்ற கருத்துகளை நம்பி ஒரு பெண்ணின் உடல் ஆரோக்கியத்தை கெடுப்பது எந்த விதத்தில் யாருக்கும் யோகம் என்பதை சிந்தியுங்கள்.
4. சுகப்பிரசவம் மறுக்கப்படுதல் : இது பல பணத்தாசை பிடித்த தனியார் மருத்துவமனைகளின் திட்டமிட்ட சதி. பிரசவத்திற்காகச் செல்லும் பெரும்பாலான பெண்களுக்கு தனியார் மருத்துவமனைகள் தரும் பரிசு இது. பயப்படத் தேவையில்லாத காரணம் காட்டி பிரசவ வலியுடன் இருக்கும் பெண்ணையும் அவருடைய குடும்பத்தையும் சிசேரியன் பிரசவத்திற்கு தள்ளுகின்றனர் இந்த மருத்துவர்கள். கருவில் இருக்கும் ஒரு குழந்தையின் எடை, இந்த மாத்தில் இவ்வளவு இருக்கிறது என்று நன்றாகத் தெரிந்துவிடுகிறது. குழந்தையின் எடை அதிகமாக இருந்தால் சுகப்பிரசவம் ஆவதில் பிரச்னை இருக்கும் என்பதை மறைத்துவிட்டு இன்னும் அதிக எடை கூட மாத்திரைகளைப் பரிந்துரைக்கிறார்கள் மருத்துவர்கள்.

2006ன் புள்ளிவிவரத்தின்படி இந்திய அளவில்(1989-2006)தனியார் மருத்துவமனைகளில் பதிவு செய்யப்பட்ட பிரசங்களில் 30.2 சதவிகிதம் சிசேரியன் பிரசவங்கள் நடந்துள்ளன. கர்ப்பகால கவனிப்புகளுக்கு வரும் ஒரு பெண்ணுக்கு திட்டமிட்டே தாய் சேய் இருவரின் உடல் எடை கூடும் மருந்துகளை பரிந்துரைப்பதும் இதற்கு காரணமாக கூறுகிறார்கள் பாதிக்கப்பட்டவர்கள். சென்னையில் தனியார் மருத்துவமனைகளில் பிரசவம் பார்த்துக் கொள்வதற்கு மட்டும் ரூபாய் 30 ஆயிரம் முதல் 1 லட்சம் வரை கட்டணம் செலுத்த வேண்டியிருக்கிறது. இதுதவிர கர்ப்பகால கவனிப்புகளுக்கென சில ஆயிரங்கள் செலவழிக்க வேண்டியிருக்கும்.
தமிழகத்தில் படித்த, நகரங்களில் வசிக்கும் பெண்களிடையேதான் சிசேரியன் பிரசவம் அதிகம் நடப்பதாக 2006ன் புள்ளிவிபரம் ஒன்று கூறுகிறது. இந்த புள்ளிவிபரத்தின்படி சிசேரியன் பிரசவங்களில் 26 சதவிகிதம் நகரங்களிலும் 17 சதவிகிதம் கிராமங்களிலும் நடந்திருக்கிறது. அதே புள்ளிவிவரப் பட்டியலில் வருடத்திற்கு வருடம் சிசேரியன் பிரசவங்கள் அதிகரித்து வருவதும் தெரிகிறது. 1992-93ம் ஆண்டில் 7.1 சதவிகிதமும் 1997-1998ம் ஆண்டில் 17.5 சதவிகிதம் 2005-2006ம் ஆண்டில் 23 சதவிகிதமாகவும் சிசேரியன் பிரசவங்கள் அதிகரித்திருக்கின்றன.
குறிப்பு : புள்ளிவிவரங்கள் Sancheeta Ghosh என்பவரின் ஆய்வறிக்கையில் இருந்து எடுத்தாளப்பட்டது.

அரசு மருத்துவமனைகள் மீது எனக்கும் சில குற்றச்சாட்டுகள் உண்டு. அதற்காக தனியார் மருத்துவமனைகளை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. என்னுடைய பிரசவம் அரசு மருத்துவமனையில் நடந்தது. அதுபற்றியும் இங்கே எழுதியிருக்கிறேன். எனக்குத் தெரிந்த பெண்கள் கர்ப்பம் தரிக்கும்போது அரசு மருத்துவமனைக்கு செல்லுமாறு அறிவுறுத்துகிறேன்.  அரசு மருத்துவமனைகள் என்றாலே முகம் சுழிக்கும் பொதுபுத்தியை கொஞ்சமாவது மாற வேண்டும் என்பது என் விருப்பம்.

பெண்களுக்கான இதழ் எப்படி இருக்க வேண்டும்?

பெண்கள் இதழில் பணியாற்றிய அனுபவத்தை இந்தப் பதிவில் எழுதியிருந்தேன். அந்த பதிவிற்கு நிறைய பேர் ஆதரவு தெரிவித்திருந்தார்கள். குறிப்பாக பதிவுலகில் இயங்கும் பெண்கள். நான் எதிர்பாராதது இது. நான் யூகித்த விஷயத்தை சரி என்று சொல்வதுபோல் இருந்தது இந்த பெண்களுடைய கருத்துக்கள். அந்தப் பதிவின் தொடர்ச்சியாக பெண்களுக்கான ஒரு இதழ் எப்படி இருக்க வேண்டும் என்று யோசித்ததில் சிலவற்றை இங்கே பகிர்ந்து கொள்கிறேன். நான் பணியாற்றிய பெண்கள் இதழில் என்னை சலிப்பு தட்ட வைத்த விஷயங்களே இதை எழுதத் தூண்டின.

2011ன் கணக்கெடுப்பின்படி  தமிழகத்தில் கிட்டத்தட்ட 2 கோடியே 38 லட்சம் படித்த பெண்கள் இருக்கிறார்கள். பெண்கள் இதழ்கள் இதுவரை சென்றடைந்தது இரண்டரை லட்சம் பெண் வாசகர்களை மட்டும்தான். மேலே சொன்ன புள்ளிவிவரத்துடன் ஒப்பிடும்போது இது மிகமிகக் குறைவான எண்ணிக்கை. இதன் பின்னணியில் ஏராளமான காரணங்கள் இருக்கலாம், அதில் ஒன்று பெண்கள் இதழ்கள் ஒரு குறிப்பிட்ட வட்டத்துக்குள்ளே அடைபட்டிருப்பது.

’நாங்கள் அரசியல் பேசுவோம்’
சென்ற நூற்றாண்டில் ‘அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு’ என்று சொல்லி பெண்களை வீட்டுக்குள்ளே பூட்டிவைத்ததைப் போன்றதே, இன்றைய பெண்களுக்கு அரசியல் தேவையில்லை என்று சொல்வதும். வாக்காளர்களில் சரிக்குப் பாதியாய் (2.5 கோடி பெண் வாக்காளர்கள்) இருக்கும் பெண்களுக்கு அரசியல் வேண்டாம் என்று பெண்கள் இதழ்கள் நிராகரிப்பது பெண்களின் வளர்ச்சியை முடக்கிப்போடக்கூடியது. அரசால் இயற்றப்படும் சட்டங்கள், திட்டங்கள் அனைத்தும் சரிபாதியாக இருக்கும் பெண்களுக்குமானவை. ஆண்களால் முன்மொழியப்பட்டு, விவாதிக்கப்பட்டு, நடைமுறைப்படுத்தும் சட்டதிட்டங்களை அறியும் உரிமைக்கூடவா பெண்களுக்குக் கிடையாது? மக்களாட்சியின் நான்காவது தூணாக சொல்லப்படும் பத்திரிகைகள், முன்னேறிக்கொண்டிருக்கும் பெண் சமூகத்துக்கு செய்யும் துரோகமாகவே இதுபடுகிறது. அரசியலின் தூய்மை காக்கப்பட வேண்டுமானால் பெண்களின் அரசியல் பங்களிப்பு அதிகப்பட வேண்டும். அதற்கொரு தூண்டுகோளாக, அரசியல் குறித்த நேர்மறையான பார்வையை பெண்களுக்கு இந்த இதழ்கள் தரவேண்டும்.

பணிபுரியும் பெண்கள்
படித்த, படிக்காத என அனைத்து தரப்பு பெண்களும் இன்று பணிக்குச் செல்ல ஆரம்பித்திருக்கிறார்கள். பணிபுரிவதன் மூலம் கட்டுப்பெட்டியான வாழ்க்கைச் சூழலிலிருந்து பெண்கள் விடுதலையை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறார்கள். குடும்ப அமைப்பிலும், குடும்பத்தை அடுத்துள்ள சமூகத்திலும் பணிபுரியும் பெண்களுக்கு பல சவால்கள் முன்நிற்கின்றன. குடும்ப பொறுப்புகளை நிர்வகிப்பது, அலுவலகச் சூழலில் தன் திறமையை நிரூபிப்பது என இருவகையான நெருக்குதல்களை இன்றைய பெண்கள் சமாளிக்க வேண்டியிருக்கிறது. இதுவரை ஆண்கள்தான் அதிகார மையமாக இருந்தார்கள், இப்போது அதிகாரம் பெண்களின் கைகளுக்கும் கிடைத்திருக்கிறது. பணிபுரியும் இடத்தில் தனக்கு மேலதிகாரியாக ஒரு பெண் வரும்போது கலாசார ரீதியாக ஆணாதிக்கம் கொண்ட ஒரு சமூகத்தில் அது சலசலப்புகளையும் சர்ச்சைகளையும் உருவாக்கிவிடுகிறது. குடும்பத்திலும் அது எதிரொலிக்கிறது. மேலதிகாரியாக இருக்கும் பெண்ணுக்கு மட்டுமல்ல, அலுவலகத்தில் கடைநிலை ஊழியராக பணியாற்றும் ஒரு பெண்ணுக்கும் இதேநிலைதான். இது குறித்த சொல்லாடல்களை, தீர்வுகளை, புரிதல்களை, ஆலோசனைகளை சொல்வது பெண்கள் இதழ்களிம் கடமை. பணிபுரியும் பெண்களை பெரும்பாலான வாசகர்களாகக் கொண்டிருக்கும் பெண்கள் பத்திரிகைகள் ஏன் இவர்களை கண்டுகொள்வதில்லை? ஒரு கணிப் பொறியாளரும் ஒரு பள்ளி ஆசிரியரும் சமையல் குறிப்பை மட்டுமா எதிர்பார்ப்பார்கள்? அவர்களிடம் பகிர்ந்து கொள்ள, கேள்வி கேட்க நிறைய விஷயங்கள் உண்டு.

இலக்கியம்

தமிழ் இதழ்கள், நவீன இலக்கியங்களை ஏன் புறந்தள்ளுகின்றன என்கிற கேள்வி ஆய்வுக்குரியது. ஒரு மொழியை அடுத்தக்கட்ட வளர்ச்சி நோக்கி இட்டுச் செல்பவை இலக்கியங்கள். இலக்கியத்தை புறக்கணித்தது இன்றைக்கு தாய்மொழியின் சொற்பிரயோகத்தை குறைத்து, வேற்றுமொழி கலப்பை அதிகமாக்கிவிட்டது. மொழிக்காகவும் செழுமையான இலக்கியங்கியங்களை வாசகர்களுக்கு தரவும் நவீன இலக்கியங்களுக்கு இடமளிக்க வேண்டும். அங்கீகாரம் இல்லாமல் சிறு பத்திரிகை அளவிலே முடங்கிப் போய்விட்ட இலக்கியப் பெண்களை பொதுவாசகர்களுக்கு அறிமுகப்படுத்த வேண்டும்.

சொல்வளம் மிக்க நம் இலக்கியங்கள் குறித்த ஆய்வுகள், வெறுமனே பேப்பர் கட்டுகளாக பல்கலைக்கழகங்களின் வெளிச்சம் நுழையா அறைகளில் அடைந்துகிடக்கின்றன. ரசிப்பிற்கும் விவாதத்திற்கும் உரிய ஆய்வுகளை வெளியிடுவது இன்றைய தலைமுறை பெண்களுக்கு  தொன்மையான நம் இலக்கியங்கள் குறித்து மதிப்பான பார்வையை ஏற்படுத்தும். அதோடு, இலக்கியங்கள் ஊடாக சொல்லப்படும் கருத்துக்களை விவாதத்திற்கு உட்படுத்தவும் செய்யலாம். அதுபோல பெண்கள் இதழ்கள் எவற்றிலும் புத்தக விமர்சனங்கள் இருப்பதில்லை, புத்தக அறிமுகங்கள்கூட வருவதில்லை. பெண்கள் புத்தகங்களையே விரும்புவதில்லையா? இது உண்மையென்றால் பெரும்பாலான பதிப்பகங்களுக்கு மூடுவிழா நடத்தவேண்டியிருக்கும். அப்படியானால் ஏன் பெண்கள் இதழ்கள் புத்தகவிமர்சனங்களை வெளியிடுவதில்லை? அறியாமை என மீண்டும் ஒருமுறை சொல்லவேண்டியிருக்கிறது.

சுற்றுச்சூழல்
நாளைய தலைமுறையை உருவாக்கும் பொறுப்பில் உள்ள பெண்களுக்கு சூழலியல் அறிவு தேவை. அதை நுட்பமான திட்டமிடலுடன் நாம் செய்ய வேண்டும். காக்கை குருவிகளுடன் நாம் இந்த புவியை பகிர்ந்துகொண்டு வாழ்கிறோம் என்கிற உண்மையை பெண்களுக்கு உணர்த்த வேண்டும். தற்சார்பு பொருளாதாரத்தின் ஒரு படியாக தங்கள் தேவைகளுக்கு தாங்களே உணவுப் பொருட்களை உற்பத்தி செய்துகொள்ளும் வாழ்க்கைமுறைக்கு அவர்களை தூண்ட வேண்டும்.

உணவு
உணவின்றி அமையாது உலகு. பெண்கள் சமையல் கட்டிலிருந்து விடுதலை பெற வேண்டும் என்று சொல்வதன் பொருள், பெண்கள் இனி சமைக்கவே கூடாது என்பதல்ல. உணவு எப்படி ஆண்,பெண் இருவருக்கும் பொதுவானதோ, அதுபோலவே சமைப்பதும் பொதுவானதாக ஆக்கப்பட வேண்டும். இன்னும் சில பத்தாண்டுகளில் இது நம் இல்லங்களில் சாத்தியப்படும். மாற்றத்தின் துவக்கத்தில் இருக்கும் இந்த நேரத்தில் சமையலை,பெண்களுக்கும் பெண்களைச் சார்ந்திருக்கும் ஆண்களுக்குமாய் சொல்லித் தருவோம்.
ஓர் ஆணித்தரமான உண்மை, இன்றைய பெண்கள் இதழ்களின் விற்பனை சமையல் குறிப்புகளை மட்டுமே நம்பியிருக்கிறது. சமையல் குறிப்புகளைத் தாங்கிவரும் 32 பக்க இணைப்புகள் தருவதை நிறுத்தினால் பெண்கள் இதழ்களின் விற்பனை அதளபாதாளத்துக்குச் சென்றுவிடும். இதழின் விற்பனையே சமையல் குறிப்புகளால்தான் நடக்கிறது எனும்போது அதையாவது இந்த இதழ்கள் துல்லியத்தன்மையோடு, புதுமையான முறையில் தரலாம். இதழ்களில் வெளியாகும் சமையல் குறிப்புகள் அனைத்தும் ஏற்கனவே வெளியான அதே இதழிலிருந்து எடுக்கப்பட்டதாகவோ, அல்லது வேறு இதழ்களிலிருந்து எடுக்கப்பட்டவையாக இருக்கின்றன. இது இதழாசியர்களுக்கும் வெளிப்படையாகத் தெரிந்தே நடக்கிறது. அளவீடுகள் துல்லியமாக இல்லாத, சமைப்பதற்கு கால கணக்கீடு சொல்லப்படாத இந்தச் செய்முறை குறிப்புகளை வைத்துக்கொண்டு, யூகமான சமையலைத்தான் செய்ய முடியும்.

அடுத்து, ஒவ்வொரு பகுதிக்கும் ஒரு குறிப்பிட்ட உணவுப் பழக்கம் உண்டு. அந்தப் பகுதியில் கிடைக்கும் விளைப்பொருட்கள், தட்பவெப்பம் போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டது இந்த உணவுப் பழக்கம். அவற்றைப் பற்றிய ஆய்வோ, அறிவோ இல்லாமல் எல்லோருக்கும் ஒரு பொதுவான உணவுப் பழக்கத்தை பரிந்துரைக்கின்றன இந்த இதழ்கள். இதனால் பாரம்பாரியமான உணவுக் குறிப்புகள் அழிவதோடு, நம் மண்ணின் தானியங்களும் அழிவைச் சந்திக்கின்றன. நம்முடைய உடலும் உணவு சார்ந்த பலவகை நோய்களுக்கு ஆளாகிறது.

நிதி மேலாண்மை
பெண்கள் சிக்கனமானவர்கள், வீட்டு பட்ஜெட் போடுவதில் சிறந்தவர்கள் என்கிற பொதுக்கருத்துகள் இங்கே உண்டு. வீட்டின் தலைவனான ஆண், அன்றாட செலவுகளுக்கு தரும் பணத்தை சிக்கனமான, திட்டமிட்டு பயன்படுத்தக்கூடியவர்கள் என்பதாக இந்த பொதுக்கருத்துகள் ஏற்பட்டிருக்கலாம். மற்றபடி இவர்களை பொருளாதார அறிவு மிக்கவர்களாக கொள்ள முடியாது. ஒரு வீட்டின் வசதிகளைப் பெருக்கும் செலவுகள், எதிர்கால பொருளாதார தேவைகள் என பெரிய அளவிலான, முக்கியமான நிதி திட்டமிடல் ஆண்களாலேயே செய்யப்படுகின்றன. இன்றைய பெண்கள் பணமீட்டுபவர்களாக இருக்கிறார்கள். தேவைகள், எதிர்கால திட்டங்கள் குறித்து இன்றைய பெண்களுக்கு விசாலமான பார்வை ஏற்பட்டிருக்கிறது. ஆனால் நிதி மேலாண்மையில் நிறைய கற்றல் தேவைப்படுகிறது.

நடைமுறைச் செய்திகளையொட்டிய கட்டுரைகள்
பத்திரிகைகள் காலத்தின் கண்ணாடி என்று சொல்வதுண்டு. ஆனால் பெண்களுக்கான இதழ்கள் சமூக பொருளாதார மாற்றங்கள் குறித்த எந்த பதிவுகளையும் செய்வதில்லை. உதாரணத்துக்கு, இப்போது மீண்டும் பெண்சிசுக்கொலை அதிகரித்துவருகிறது. இந்த செய்தி பெண்கள் இதழ்களின் கரிசனத்துக்கும் பார்வைக்கும் படாமலேயே இருக்கிறது. பெண்களுக்கு எதிரான குற்றங்களின் எண்ணிக்கை கூடிக்கொண்டே போவதாக புள்ளிவிவரங்கள் சுட்டுகின்றன. இன்றைய தலைமுறைக்காக இயங்கும் ஒரு இதழ் பெண்களின் வாழ்வியலை கேள்விக்குட்படுத்தும் விஷயங்களுக்காகவும் குரல்கொடுக்க வேண்டும்.

நுகர்வு வழிகாட்டி
அளவுக்கதிகமாக நுகர்வது இன்றைக்கு மேட்டிமைக்குரிய வாழ்வியலாகிவிட்டது. பெண்களை கண்மூடித்தனமாக நுகரத் தூண்டுவதில் பெண்கள் இதழ்களின் பங்கு அதிகம். நுகர்வு தவிர்க்க முடியாதது என்றாகிவிட்டபோது, நுகர்வின் அளவைச் சொல்வது சமூகத்தின் மீது அக்கறையுள்ள ஓர் ஊடகத்தின் பணி. உண்ணும் உணவிலிருந்து உடுத்தும் உடை, உறங்கும் உறைவிடம், அதை அலங்கரிக்கும் பொருட்கள் என எது நல்ல நுகர்வு என்பதை சொல்ல வேண்டும்.

கலை
ஓவியம், சிற்பம், சினிமா, நாடகம், நடனம், இசை, நாட்டுப்புற கலை என கலைத்தொழில் செய்யும் பெண்கள் விருதுபெறும்போது மட்டுமே இங்கே கவனிக்கப்படுகிறார்கள். இதில் சினிமா கலைஞர்களைத் தவிர மற்ற கலைஞர்கள் பற்றி செய்திகள் நான்கு வரிகளோடு முடிந்துவிடுகின்றன. விருதுபெற்றவர்கள்தான் திறமைசாலிகள் என்கிற கருத்து வலுக்கட்டாயமாக இந்த இதழ்களால் திணிக்கப்படுகிறது. அதோடு விருது பெறாத திறமையான பல கலைஞர்களுக்கு அங்கீகாரம் இல்லாமல் போகிறது.

மருத்துவம்
பெண்கள் இதழ்களில் வரும் பெரும்பாலான மருத்துவ கட்டுரைகள் பீதியை உண்டாக்குபவையாக இருக்கின்றன. சில சமயம் மூடநம்பிக்கையை வளர்ப்பவையாகவும் உள்ளன. நவீன மருத்துவத்தை ஆதாரமே இல்லாமல் எதிர்ப்பதும் பாரம்பரிய மருத்துவத்துவ முறைகளை கண்மூடித்தனமாக ஆதரிப்பதும் தற்போது பெண்கள் இதழ்களின் டிரெண்டாக இருக்கிறது. எந்தவித ஆய்வுத்தன்மையும் இவ்வகையான கட்டுரைகளில் இருப்பதில்லை. மாறிவரும் வாழ்க்கைமுறையில் நம் உடலின் தன்மையும் மாறுபடுகிறது, நோய்களும் புதிது புதிதாக உருவாகின்றன. பல ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த ஒரு மருத்துவமுறையால், நவீன காலத்து நோய் குணமாகிறதென்றால் அதற்கான ஆதாரம், ஆய்வுமுறை உள்ளிட்டவைகளோடு கூடிய மருத்துவ ஆவணமாகத்தான் கட்டுரை எழுதப்பட வேண்டும். நவீன மருத்துவம் குறித்த கட்டுரைகளில், மருந்துகள் நோயைக் கட்டுப்படுத்தக்கூடியவையா அல்லது நோயை முழுமையாக குணமாக்கக்கூடியவையா என்கிற விவரங்கள் இடம்பெற வேண்டும்.

அறிவியல், தொழிற்நுட்பம்
அமெரிக்கா அல்லது இங்கிலாந்தில் வளரும் ஒரு இந்தியப் பெண்ணால் புதுமையாக சிந்திக்கவும் கண்டுபிடிப்புகளை நிகழ்த்தவும் முடிகிறது. இங்கே இருக்கும் பெண்களால் சிந்தனை அளவில்கூட செயல்பட முடிவதில்லை. பெரும்பாலும் சொன்னதைச் செய்யும் கிளிப்பிள்ளைகளாவே இருக்கிறார்கள். இந்நிலைக்கு அறிவியல் பார்வை இல்லாத சமூக அமைப்பு முதன்மையான காரணம். நம்முடைய ஊடகங்களும் இதில் அடக்கம். அறிவியலில் புரிதல், ஆர்வம் ஏற்படாதவரை புதிய புதிய கண்டுபிடிப்புகளை நகலெடுப்பவர்களாகவே நாம் இருப்போம்.

வரலாறு
உலகெங்கிலும் இதுவரை எழுதப்பட்ட 90 சதவிகித வரலாறு ஆண்களால், ஆண்களைப் பற்றி எழுதப்பட்டவை. ஒடுக்கப்பட்ட பெண் சமூகத்தின் வரலாறும் மறக்கடிக்கப்பட்டுள்ளது. கிடைக்கும் 10 சதவிகித வரலாற்றில் பெரும்பாலும் அரசிகள் பற்றி மிகைச் சித்திரங்களாகவே உள்ளன. வரலாற்றின் மூலைமுடுக்குகளில் தேடினால் சாதாரண பெண்ணின் வரலாறும் அகப்படலாம். இதன் மூலம் புதிய வரலாறு எழுதப்படலாம். வரலாற்றுப் பெண்களின் வாழ்க்கையிலிருந்து பாடங்களைக் கற்றுக்கொள்ள இன்றைய பெண்களுக்கு ஒரு வாய்ப்பையும் ஏற்படுத்தித்தரலாம்.

குழந்தை வளர்ப்பு
மனிதக் குழந்தைகள் தாயின் அரவணைப்பில் வளரும்போது சிறந்த செயல்திறனோடு வளர்கிறார்கள் (அதனால் ஆண்களுக்கு குழந்தை வளர்ப்பில் பங்கில்லை என்பது இதன் பொருள் அல்ல.) என்பது அறிவியல் ரீதியாக நிரூபிக்கப்பட்ட உண்மை. பெண்கள் இதழ்கள் சொல்லும் மேலோட்டமான குழந்தை வளர்ப்பு முறைகளால் நல்ல அம்மாக்களையோ, அவர்கள் மூலமாக நல்ல குழந்தைகளையோ உருவாக்க முடியாது. இன்றைய நடைமுறைக்கு ஏற்றபடி, நிபுணர்களைக் கொண்டு சிறந்த செயல்திட்டத்தை உருவாக்கி அதை நம் இதழின் வாயிலாக சொல்லித் தரவேண்டும். பள்ளி வகுப்புகள் முடிந்து வீட்டிற்குத் திரும்பும் பிள்ளைகளுக்கு மீண்டும் பள்ளிப் பாடங்களைத்தான் பெரும்பாலான பெற்றோர் சொல்லித்தருகிறார்கள். கதைகள், பாடல்கள் மூலமாக அறத்தை போதிக்கும் குழந்தை வளர்ப்பு முறை இன்று காணாமல் போய்விட்டது. பெற்றோரைவிட மேம்பட்டவர்களாக உள்ள இன்றைய குழந்தைகளின் திறமைகள் மதிப்பெண்களுக்குள் குறுக்கப்படுகின்றன. மேம்பட்ட குழந்தைகளை வளர்க்க மேம்பட்ட முறை தேவைப்படுகிறது.
90களில் கூட்டுக்குடும்பமாக வசிப்பது பிரச்னைக்குரியதாக இருந்தது. அன்றைய காலக்கட்டத்தில் தனிக்குடும்பங்கள் விருப்பத்திற்குரிய தேர்வாக இருந்தன. அன்று பெரும்பாலான பெண்கள் பணிக்குச் செல்லவில்லை. அதனால் குழந்தைகளை வளர்ப்பதில் பெரிதாக பிரச்னைகள் எதுவும் இல்லை. இன்று ஒரு குடும்பத்தில் உள்ள ஆணும் பெண்ணும் பணிக்குச் செல்பவர்களாக இருக்கிறார்கள். குழந்தைகளை வளர்ப்பது சிக்கலான விஷயமாகிவிட்டது. இந்த சிக்கலை தீர்த்து வைக்கக்கூடிய ஆலோசனைகளை இதழ் முன்வைக்க வேண்டும்.

உறவு மேம்பாடு
ஒரு குடும்பத்தின் ஆதாரமாக இருக்கும் பெண்ணைச் சுற்றிய எல்லா உறவுகளும் இங்கே சொல்லப்படுகின்றன. இன்றைய சூழல் முந்தைய நூற்றாண்டில் இருந்த மாமியார், நாத்தனார் பிரச்னைகளை ஓரங்கட்டிவிட்டது. இன்றைய பெண்களுக்கு ஏற்படும் உறவு சிக்கல் தன் துணையுடனானது. தவறாக புரிந்துகொள்ளப்பட்ட சுதந்திரத்தன்மை அல்லது இன்னமும் கலாசாரத்தால் பிணைக்கப்பட்ட அடிமைத்தன்மை இந்த இரண்டும் இன்றைய பெண்களுக்கு சிக்கலை ஏற்படுத்துகின்றன. இதுவரை பெண்கள் இதழ்கள் முன்வைத்த ஆண், பெண் உறவு மேம்பாடு படுக்கையறை தொடர்புடையதாகவே இருந்திருக்கிறது. 40 ஆண்டுகளுக்கு முன் இருந்த பெண்களின் வாழ்வியலுக்கு இது மிகவும் பொருந்திப்போகும். இன்றைய பெண்கள் அறிவில் மேம்பட்டவர்கள். தன் துணையிடம் தனக்கு என்ன தேவையிருக்கிறது என்று அவர்களுக்கு வெளிப்படையாகவே கேட்கத் தெரியும். இன்றைய பெண்களின் பிரச்னை அவர்களுடைய உளவியல் சார்ந்ததாகவே இருக்கிறது. அதை சுட்டிக்காட்டி, அதன் மூலம் அவர்களைச் சுற்றியுள்ளவர்களின் உறவை மேம்படுத்த வேண்டும்.

பராமரிப்பு குறிப்புகள்
பெண்கள் இதழ்களின் மொழியில் பராமரிப்பு என்பது அலங்கரிப்பது, தூய்மையாக்குவது என்பதாக இருக்கிறது. மற்றபடி வீட்டின் மேம்பட்ட வேலைகளான கணிப்பொறி,குளிர்சாதனங்கள் உள்ளிட்ட இயந்திரங்களை பராமரிப்பது ஆண்களுடையதாகிறது. அதாவது இவற்றைப் பராமரிப்பது பெண்களின் அறிவுக்கு எட்டாத செயலாகவும் மேம்பட்ட விஷயங்களுக்காக ஆண்களையே நம்பியிருக்க வேண்டும் என்று சொல்வதுபோலவும் இருக்கிறது. இதை உடைத்து வீடு முதல் அலுவலகம் வரை பராமரிப்பு தொடர்பான அத்தனை தகவல்களையும் சொல்லித்தர வேண்டும்.

சட்டம்
பெண்கள் இதழ்களால் கையாளப்படும் சட்டப் பக்கங்கள் குடும்ப வன்முறை தடுப்புச் சட்டம், வரதட்சணை தடுப்புச் சட்டம் போன்ற ஊடகங்களால் பிரபலமாக்கப்பட்ட சில சட்டங்களைப் பற்றியே திரும்ப திரும்ப நிரப்பப்படுகின்றன. வீட்டைத்தாண்டிய வெளியில் தேவைப்படும் சட்டபாதுகாப்பு குறித்து இவர்கள் கண்டுகொள்வதே இல்லை. சமஉரிமையை நிலைநாட்டவும் அதிகபட்ச பாதுகாப்பை வழங்கவுமான சட்டங்கள் பற்றி பெண்கள் அறிய வேண்டும்.

ஆன்மிகம்
பொதுவாக எல்லா மதங்களுமே அறத்துடன் வாழுங்கள் என்பதைத்தான் சொல்கின்றன. நேரடியாக இதைச் சொல்லாமல் பூஜைகள், நோன்புகள் வழியாக இதை வலியுறுத்தின. ஆனால் இன்றைய பெண்களுக்கு தேவைப்படுவது இன்ஸ்டன்ட் ஆன்மிகம். சுற்றிவளைத்து இது செய்தால் இது விளையும் என்று சொல்வதைவிட நேரடியான முறையிலே அறத்தைச் சொல்லிக்கொடுப்போம். அறத்தோடு செயல்படுபவர்களால் ஆன்மவொளியைப் பெற முடியும். அதைத்தான் நம் இதழின் ஆன்மிகமாகச் சொல்ல வேண்டும். மதம்சார்பற்ற ஆன்மிகமாக இது இருக்கும். இன்றைய தலைமுறை விரும்புவதும் அதுதான்.

 

நிலவுடன் ஒரு மாலை…

இன்று மாலை என்னை நிலவுடன் வசீகரித்த வானம்

DSCN2407

DSCN2408

’’புரட்சியெல்லாம் எப்படீம்மா ஒரு நாள்ல பண்ண முடியும்?’’

கிட்டத்தட்ட ஒன்பது வருடங்களுக்கு முன்பு இப்போது பிரபலமாக இருக்கும் ஒரு பெண்கள் இதழில் நிருபராக பணியாற்ற நேர்முகத் தேர்வுக்காக அழைக்கப்பட்டிருந்தேன். ஏற்கனவே அந்த இதழின் ஆசிரியர் என்னுடைய எழுத்துத் திறனையும் நிருபராக பணியாற்றுவதற்கான மற்ற திறன்களையும் சோதித்து என்னை பணிக்குத் தேர்வு செய்திருந்தார். ஆனால் அலுவல் ரீதியாக என்னை முறைப்படி நேர்முகமாகத் தேர்வு செய்யும் பொருட்டு அலுவலகத்துக்கு அழைத்திருந்தார். நானும் அவர் சொன்ன நேரத்தில் சென்றிருந்தேன். ஆசிரியர் என்னை அந்த இதழ் குழுமத்தின் மேனேஜிங் டைரக்டர் அறைக்கு அழைத்துச் சென்று என்னை மேனேஜிங் டைரக்டருக்கு அறிமுகப்படுத்தினார். மேனேஜிங் டைரக்டர் என்னை சோதிக்கும் விதமாக, ‘‘நிருபர் என்ற முறையில், எங்கே இந்த இதழின் ஆசிரியரை பேட்டி எடுங்கள், பார்க்கலாம்?’’ என்றார்.
எதிர்பாராத விதமாக ஆசிரியருக்கும் எனக்கும் சிறு அதிர்வைக் கொடுத்தது, அவரின் இந்த வினவல். அடுத்த சில நொடிகளில் ஒரு நிருபராக கேள்விகளை மனதுக்குள் தயாரித்துக் கொண்டு, ஆசிரியரை பேட்டி காண தயாரானேன். முழுவதுமாக நினைவில்லை என்றாலும் அந்த பேட்டி அப்போது ரொம்பவே சுவாரஸ்யமாக இருந்தது. அதில் மறக்க முடியாத ஒரு கேள்வியும் பதிலும்…
‘‘பெண்கள் இதழ் என்றாலே சமையல், வீட்டுப் பராமரிப்பு என்றாகிவிட்டது. ஏன் இதைத் தாண்டி பெண்களுக்குச் சொல்ல வேறு எதுவும் இல்லையா?’’ இது என் கேள்வி…
‘‘எடுத்த உடனேயே பெண்களுக்கு புரட்சிகரமான விஷயங்கள் சொன்னால், அவர்களால் ஏற்றுக்கொள்ள முடியாது. நம்பிக்கைகளை உடைக்கும்படி உண்மைகளைச் சொன்னால் ‘இது நமக்கான இதழ் இல்லை’ என்று நம்மை விட்டுப் போய்விடுவார்கள். மெதுமெதுவாகத்தான் அவர்களை சமையல் கட்டிலிருந்து வெளியே கொண்டு வரவேண்டும்’’ இது ஆசிரியரின் பதில்…
அந்த சமயத்தில் இந்த பதில் மிகச் சரியாகவே பட்டது. ஆனால் ஆசிரியர் சொன்னபடி, அந்த இதழின் உள்ளடக்கம் 12 ஆண்டுகளாக சமையல்கட்டையும் வீட்டையுமே சுற்றிக் கொண்டிருக்கிறது. அதை விட்டு வெளியேறவில்லை. தமிழில் விற்பனையாகும் அரை டஜன் பெண்கள் இதழ்களில் அது இரண்டாவது இடத்துக்கு வந்துவிட்டது. பெண்கள் சமூக ரீதியாக எவ்வளவோ முன்னேற்றங்களை கண்டுவிட்ட பிறகும் 80களில் இருந்த பெண்களின் வாழ்வியலைச் சொல்வதுபோல் இருக்கிறது இந்த இதழின் உள்ளடக்கம்.
ஏதோ ஒரு இதழை குறைவுகூறுவதுபோல் தோன்றலாம். உண்மையில் அட்டையை அகற்றிவிட்டால் எல்லா பெண்கள் இதழ்களின் உள்ளடக்கமும் ஒன்றுதான். இது முழுக்க, முழுக்க வியாபாரமாகக்கூட இருக்கலாம். ஆனால் மாறிவரும் காலகட்டத்துக்கு இவை பொருந்தி வரும், இந்த இதழ்கள் நிலைத்திருக்கும் என்று சொல்ல முடியாது. ஏனெனில் இதழ்களைக் காட்டிலும் சக்தி வாய்ந்த, மக்களின் வாழ்வியலில் வேகமாக மாற்றங்களை உண்டாக்கிக் கொண்டிருக்கும் தொலைக்காட்சி, இணையம் போன்ற ஊடகங்கள் இங்கே ஆழமாக வேரூன்றி வருகின்றன. அவற்றின் அசுர வளர்ச்சியில் இந்த அரதப் பழசான உள்ளடக்கம் காணாமல் போய்விடும்!

பெண்கள் இதழ்கள் தங்களை புதுப்பித்துக் கொள்வதில் மிக மிக பின்தங்கியிருக்கின்றன. பத்தாண்டுகளுக்கு முன்பு நகரத்தில் வாழ்ந்த ஒரு 40 வயது பெண்ணின் வாழ்க்கை முறையோடு, இன்று 40களில் இருக்கும் ஒரு பெண்ணின் வாழ்க்கை முறையை ஒப்பிட முடியாது. முந்தைய தலைமுறையில் திருமணமான பெண்களுக்கு மாமியாருடனான சிக்கல்கள் அதிகம், ஆனால்  இன்றைய திருமணமான பெண்களின் சிக்கல்கள் முற்றிலும் வேறுபட்டவை. இன்றைய பெண்களுக்கு பண்டிகை நாட்களை கொண்டாடுவதற்கு நேரம் இல்லை, அல்லது அவ்வளவு பொறுமை இல்லை. இன்னமும் நீட்டி முழக்கி ஆன்மிகத்தை பூஜைகளுக்குள்ளும் விரதங்களுக்கும் அடைத்துக்கொண்டிருக்கும் பெண்கள் இதழ்களின் அறியாமையை என்ன சொல்வது?  ஒருபுறம் பெண்கள் சுதந்திரத்தை சுவாசிக்கிறார், இன்னொரு புறம் வீடுகளில் ஆரம்பித்து பணியாற்றும் இடங்கள் வரை பல அத்துமீறல்களுக்கும் துன்புறுத்தல்களுக்கும் ஆளாகிறார்கள். இதைப்பற்றியெல்லாம் தமிழில் வெளிவரும் எந்த பெண்கள் இதழும் கண்டுகொள்வதில்லை. இவர்களைப் பொறுத்தவரை பெண்கள் எல்லாம் சுபிட்ஷமாகவே இருக்கிறார்கள். பெண்கள் இரவுநேர பணிகளுக்குப் போவதை ஏற்றுக் கொண்ட இந்த சமூகம், இரவில் ஒரு பெண் தனியாக பயணம் செய்வதை விவாதத்திற்குரியதாக பார்க்கிறது. இந்த முரண்பாட்டை எடுத்துச் சொல்லும் ஊடகங்களோ, முக்கியமாக பெண்களுக்காக உள்ள இதழ்கள் எங்களுக்கும் இதற்கும் ஒரு தொடர்பும் இல்லை என்பதுபோல் மெளனிக்கின்றன. சமூகப் பிரச்னைகளை பொதுவெளியில் பேசி, அந்தப் பிரச்னையை தீர்வை நோக்கி செலுத்தும் வல்லமைமிக்க இந்த ஊடகங்களின் மெளனம் பெண் சமூகத்தைப் பீடித்திருக்கும் மிகப்பெரிய நோய். பெண்களை பாதிக்கும் அரசியல், சமூக பிரச்னைகளை மட்டுமல்ல பெண்களை உயர்த்தக்கூடிய நல்லவற்றைக்கூட இந்த இதழ்கள் பேசுவதில்லை.

பொதுவாக பெண்கள் இதழ்களில் பணியாற்றுபவர்களை இரண்டாம்பட்சமான இதழாளர்களாகவே மற்ற இதழாளர்கள் நினைப்பதுண்டு. சமையல், வீடு பராமரிப்பு, அழகு குறிப்பு இதைத் தவிர இவர்களுக்கு வேறு எதுவுமே எழுதத் தெரியாது என்கிற நினைப்புதான் காரணம். ஒருவகையில் இது உண்மையும்கூட.. தொடர்ந்து பெண்கள் பத்திரிகைகளில் அரைபட்டுக்கொண்டிருக்கும் இந்த விஷயங்களைத் தவிர, இவர்களுக்கு வேறு எதுவும் யோசிக்கத் தெரியாது. சமூக பொருளாதார ரீதியில் முன்னேறிக்கொண்டிருக்கும் பெண் சமூகத்துக்கு இதுபோன்ற இதழ்களே ஒரு முட்டுக்கட்டைதான்.

இதுபோன்ற ஒரு இதழில் பணியாற்ற நேர்வதே ஒரு சாபம்தான். இதில் தினக்கூலியாக வேலைப்பார்த்தால் எப்படியிருக்கும்? இந்த தினக்கூலி அனுபவங்களை பிறிதொரு தருணத்தில் பகிர்கிறேன்.