“சிட்டுக்குருவிகளால் நமக்கென்ன பயன்?’’

DSCN2026

கடந்த சிட்டுக்குருவிகள் தின(மார்ச் 20)த்தின்போது என்னுடன் பணியாற்றிய சக பத்திரிகையாளர் ஒருவர், செய்தித்தாள்களில் சிட்டுக்குருவிகள் பற்றி வந்திருந்த செய்திகளைப் படித்துவிட்டு “சிட்டுக்குருவிகளை காப்பாற்ற வேண்டும் என்று எல்லோரும் சொல்கிறார்களே, சிட்டுக்குருவிகளால் நமக்கென்ன பயன்?” என்றார். ஒரு பத்திரிகையாளராக அவருக்கு இருந்த அறியாமை என்பதைவிட ஒரு குழந்தையின் தாயான அவருக்கு இருக்கும் அறியாமையை நினைத்து நான் பயம் கொண்டேன். காக்கைக்கும் குருவிக்கும் புன்னைக்கும் அன்னமும் தேனும் இட்ட தமிழ் பெண்கள் என்ன ஆனார்கள்?  சூழலுக்கும் நமக்குமான பந்தம் அறுபட்டது எப்போது? இப்படி துளைக்கும் கேள்விகளுக்கு விடை தேடுவதைவிட, சூழலியல் குறித்த ஆக்கப்பூர்வமான கல்வியை நம் பெண்களுக்கு புகட்டுவது அவசியமானதாகத் தெரிகிறது.

ஏற்கனவே விவசாய நிலங்களெல்லாம் மனைகளாக விற்பனைக்கு வந்துவிட்டன. நாளை ஆளாப்போகும் தலைமுறை, அகோர பசியோடு விவசாய நிலங்களை விழுங்கக்கூடும். அதைத் தடுக்க வேண்டுமானால், நாளைய தலைமுறையை உருவாக்கும் பொறுப்பில் உள்ள பெண்களுக்கு சூழலியல் அறிவு தேவை. அதை நுட்பமான திட்டமிடலுடன் நாம் செய்ய வேண்டும். காக்கை குருவிகளுடன் நாம் இந்த புவியை பகிர்ந்துகொண்டு வாழ்கிறோம் என்கிற உண்மையை பெண்கள் உணர வேண்டும்.

அந்த வகையில் எனக்கு சூழலியல் குறித்த தூண்டுதலை ஏற்படுத்தியது சூழலியல் எழுத்தாளர் தியடோர் பாஸ்கரனின் எழுத்துக்கள்தான். சூழலியல் குறித்த புரிதல் ஏற்படவேண்டும் என்றால் நிச்சயம் அவருடைய புத்தகங்களை படியுங்கள்.

5 thoughts on ““சிட்டுக்குருவிகளால் நமக்கென்ன பயன்?’’

 1. சிட்டுக்குருவியன்றல்ல! அத்தனை உயிராலும் இன்னுமொரு உயிருக்குப் பயனுண்டு.
  அது இயற்கையின் நியதி.
  ஆனாலென்ன இன்றைய மனிதனே அத்தனைக்கும் விரோதியாகிவிட்டான்.
  நம் முன்னோரை நான் குறை கூறேன். அவர்கள் செவ்வனே யாவற்றையும் நம்மிடம் தந்தார்கள்.
  நாம் நமது எதிர்காலத் தலைமுறைக்கு , அவற்றையெல்லாம் விட்டு வைக்கவில்லை ,கொடுக்கவில்லை.
  உங்கள் நண்பியை டிஸ்கவரி, நசனல் யீயோகிரவி பார்க்கச் சொல்லுங்கள்.

 2. காக்கை ,குருவி எங்கள் ஜாதி என்றான் அப்பன் பாரதி

  நுகர்வு வெறியால் இயற்கை உடன் ஆனா பந்தம் தொடந்து அறுபட்டுகொண்டே வருகிறது .

  நுகர்வை குறைக்காமல் இயற்கை உடன் இணைந்து வாழாமல் எந்த உயிர் அழிவதையும் தடுக்க முடியாது

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.