’’புரட்சியெல்லாம் எப்படீம்மா ஒரு நாள்ல பண்ண முடியும்?’’

கிட்டத்தட்ட ஒன்பது வருடங்களுக்கு முன்பு இப்போது பிரபலமாக இருக்கும் ஒரு பெண்கள் இதழில் நிருபராக பணியாற்ற நேர்முகத் தேர்வுக்காக அழைக்கப்பட்டிருந்தேன். ஏற்கனவே அந்த இதழின் ஆசிரியர் என்னுடைய எழுத்துத் திறனையும் நிருபராக பணியாற்றுவதற்கான மற்ற திறன்களையும் சோதித்து என்னை பணிக்குத் தேர்வு செய்திருந்தார். ஆனால் அலுவல் ரீதியாக என்னை முறைப்படி நேர்முகமாகத் தேர்வு செய்யும் பொருட்டு அலுவலகத்துக்கு அழைத்திருந்தார். நானும் அவர் சொன்ன நேரத்தில் சென்றிருந்தேன். ஆசிரியர் என்னை அந்த இதழ் குழுமத்தின் மேனேஜிங் டைரக்டர் அறைக்கு அழைத்துச் சென்று என்னை மேனேஜிங் டைரக்டருக்கு அறிமுகப்படுத்தினார். மேனேஜிங் டைரக்டர் என்னை சோதிக்கும் விதமாக, ‘‘நிருபர் என்ற முறையில், எங்கே இந்த இதழின் ஆசிரியரை பேட்டி எடுங்கள், பார்க்கலாம்?’’ என்றார்.
எதிர்பாராத விதமாக ஆசிரியருக்கும் எனக்கும் சிறு அதிர்வைக் கொடுத்தது, அவரின் இந்த வினவல். அடுத்த சில நொடிகளில் ஒரு நிருபராக கேள்விகளை மனதுக்குள் தயாரித்துக் கொண்டு, ஆசிரியரை பேட்டி காண தயாரானேன். முழுவதுமாக நினைவில்லை என்றாலும் அந்த பேட்டி அப்போது ரொம்பவே சுவாரஸ்யமாக இருந்தது. அதில் மறக்க முடியாத ஒரு கேள்வியும் பதிலும்…
‘‘பெண்கள் இதழ் என்றாலே சமையல், வீட்டுப் பராமரிப்பு என்றாகிவிட்டது. ஏன் இதைத் தாண்டி பெண்களுக்குச் சொல்ல வேறு எதுவும் இல்லையா?’’ இது என் கேள்வி…
‘‘எடுத்த உடனேயே பெண்களுக்கு புரட்சிகரமான விஷயங்கள் சொன்னால், அவர்களால் ஏற்றுக்கொள்ள முடியாது. நம்பிக்கைகளை உடைக்கும்படி உண்மைகளைச் சொன்னால் ‘இது நமக்கான இதழ் இல்லை’ என்று நம்மை விட்டுப் போய்விடுவார்கள். மெதுமெதுவாகத்தான் அவர்களை சமையல் கட்டிலிருந்து வெளியே கொண்டு வரவேண்டும்’’ இது ஆசிரியரின் பதில்…
அந்த சமயத்தில் இந்த பதில் மிகச் சரியாகவே பட்டது. ஆனால் ஆசிரியர் சொன்னபடி, அந்த இதழின் உள்ளடக்கம் 12 ஆண்டுகளாக சமையல்கட்டையும் வீட்டையுமே சுற்றிக் கொண்டிருக்கிறது. அதை விட்டு வெளியேறவில்லை. தமிழில் விற்பனையாகும் அரை டஜன் பெண்கள் இதழ்களில் அது இரண்டாவது இடத்துக்கு வந்துவிட்டது. பெண்கள் சமூக ரீதியாக எவ்வளவோ முன்னேற்றங்களை கண்டுவிட்ட பிறகும் 80களில் இருந்த பெண்களின் வாழ்வியலைச் சொல்வதுபோல் இருக்கிறது இந்த இதழின் உள்ளடக்கம்.
ஏதோ ஒரு இதழை குறைவுகூறுவதுபோல் தோன்றலாம். உண்மையில் அட்டையை அகற்றிவிட்டால் எல்லா பெண்கள் இதழ்களின் உள்ளடக்கமும் ஒன்றுதான். இது முழுக்க, முழுக்க வியாபாரமாகக்கூட இருக்கலாம். ஆனால் மாறிவரும் காலகட்டத்துக்கு இவை பொருந்தி வரும், இந்த இதழ்கள் நிலைத்திருக்கும் என்று சொல்ல முடியாது. ஏனெனில் இதழ்களைக் காட்டிலும் சக்தி வாய்ந்த, மக்களின் வாழ்வியலில் வேகமாக மாற்றங்களை உண்டாக்கிக் கொண்டிருக்கும் தொலைக்காட்சி, இணையம் போன்ற ஊடகங்கள் இங்கே ஆழமாக வேரூன்றி வருகின்றன. அவற்றின் அசுர வளர்ச்சியில் இந்த அரதப் பழசான உள்ளடக்கம் காணாமல் போய்விடும்!

பெண்கள் இதழ்கள் தங்களை புதுப்பித்துக் கொள்வதில் மிக மிக பின்தங்கியிருக்கின்றன. பத்தாண்டுகளுக்கு முன்பு நகரத்தில் வாழ்ந்த ஒரு 40 வயது பெண்ணின் வாழ்க்கை முறையோடு, இன்று 40களில் இருக்கும் ஒரு பெண்ணின் வாழ்க்கை முறையை ஒப்பிட முடியாது. முந்தைய தலைமுறையில் திருமணமான பெண்களுக்கு மாமியாருடனான சிக்கல்கள் அதிகம், ஆனால்  இன்றைய திருமணமான பெண்களின் சிக்கல்கள் முற்றிலும் வேறுபட்டவை. இன்றைய பெண்களுக்கு பண்டிகை நாட்களை கொண்டாடுவதற்கு நேரம் இல்லை, அல்லது அவ்வளவு பொறுமை இல்லை. இன்னமும் நீட்டி முழக்கி ஆன்மிகத்தை பூஜைகளுக்குள்ளும் விரதங்களுக்கும் அடைத்துக்கொண்டிருக்கும் பெண்கள் இதழ்களின் அறியாமையை என்ன சொல்வது?  ஒருபுறம் பெண்கள் சுதந்திரத்தை சுவாசிக்கிறார், இன்னொரு புறம் வீடுகளில் ஆரம்பித்து பணியாற்றும் இடங்கள் வரை பல அத்துமீறல்களுக்கும் துன்புறுத்தல்களுக்கும் ஆளாகிறார்கள். இதைப்பற்றியெல்லாம் தமிழில் வெளிவரும் எந்த பெண்கள் இதழும் கண்டுகொள்வதில்லை. இவர்களைப் பொறுத்தவரை பெண்கள் எல்லாம் சுபிட்ஷமாகவே இருக்கிறார்கள். பெண்கள் இரவுநேர பணிகளுக்குப் போவதை ஏற்றுக் கொண்ட இந்த சமூகம், இரவில் ஒரு பெண் தனியாக பயணம் செய்வதை விவாதத்திற்குரியதாக பார்க்கிறது. இந்த முரண்பாட்டை எடுத்துச் சொல்லும் ஊடகங்களோ, முக்கியமாக பெண்களுக்காக உள்ள இதழ்கள் எங்களுக்கும் இதற்கும் ஒரு தொடர்பும் இல்லை என்பதுபோல் மெளனிக்கின்றன. சமூகப் பிரச்னைகளை பொதுவெளியில் பேசி, அந்தப் பிரச்னையை தீர்வை நோக்கி செலுத்தும் வல்லமைமிக்க இந்த ஊடகங்களின் மெளனம் பெண் சமூகத்தைப் பீடித்திருக்கும் மிகப்பெரிய நோய். பெண்களை பாதிக்கும் அரசியல், சமூக பிரச்னைகளை மட்டுமல்ல பெண்களை உயர்த்தக்கூடிய நல்லவற்றைக்கூட இந்த இதழ்கள் பேசுவதில்லை.

பொதுவாக பெண்கள் இதழ்களில் பணியாற்றுபவர்களை இரண்டாம்பட்சமான இதழாளர்களாகவே மற்ற இதழாளர்கள் நினைப்பதுண்டு. சமையல், வீடு பராமரிப்பு, அழகு குறிப்பு இதைத் தவிர இவர்களுக்கு வேறு எதுவுமே எழுதத் தெரியாது என்கிற நினைப்புதான் காரணம். ஒருவகையில் இது உண்மையும்கூட.. தொடர்ந்து பெண்கள் பத்திரிகைகளில் அரைபட்டுக்கொண்டிருக்கும் இந்த விஷயங்களைத் தவிர, இவர்களுக்கு வேறு எதுவும் யோசிக்கத் தெரியாது. சமூக பொருளாதார ரீதியில் முன்னேறிக்கொண்டிருக்கும் பெண் சமூகத்துக்கு இதுபோன்ற இதழ்களே ஒரு முட்டுக்கட்டைதான்.

இதுபோன்ற ஒரு இதழில் பணியாற்ற நேர்வதே ஒரு சாபம்தான். இதில் தினக்கூலியாக வேலைப்பார்த்தால் எப்படியிருக்கும்? இந்த தினக்கூலி அனுபவங்களை பிறிதொரு தருணத்தில் பகிர்கிறேன்.

16 thoughts on “’’புரட்சியெல்லாம் எப்படீம்மா ஒரு நாள்ல பண்ண முடியும்?’’

 1. இன்றைய தமிழ் பெண்ணிதழ்கள் பற்றி மிகச் சரியாகச் சொல்லியிருக்கிறீர்கள். எனக்கும் ஒரு அனுபவம். ஒரு பெண்ணிதழ் ஆசிரியருக்கு தொலைபேசியபோது, ‘என்ன எழுதுவீர்கள்? சமையல் குறிப்பா? அழகுக் குறிப்பா? கோலமா? என்ற கேள்விதான் முதலில் வந்தது. எனக்கு ரொம்பவும் கோபம். ஏன் ஸார், பெண் என்றால் வேறு எதுவும் எழுதக் கூடாதா?’ என்றவுடன், ‘கோவிச்சுக்காதீங்க, பொதுவா இந்த விஷயங்களைத்தான் எழுதுவார்கள்…’ என்றார்.

  பெண்களுக்கு நடக்கும் அத்துமீறல்கள் பற்றி பெண்களே பேச விரும்புவதில்லையே. என்ன செய்ய?

  உங்கள் எழுத்துக்களின் வீரியம் ரொம்பவும் பிடித்திருக்கிறது, தொடர்ந்து எழுதுங்கள்.

  • உங்கள் அனுபவத்தை பகிர்ந்துகொண்டதோடு என்னையும் ஊக்குவித்திருக்கிறீர்கள். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ரஞ்சனி.

 2. புத்தகத்தை எடுத்த உடனே சமையல் குறிப்பா. பெண் என்பவளுக்கு அதுவும்
  வேண்டிதானே இருக்கிரது. உங்கள் அநுபவமும், நேர்காணல் கேள்வியும் மிக்க நன்றாக உள்ளது. ரொம்ப அனுபவித்துப் படித்தேன். இளைய தலைமுறை, சிந்தித்திருப்பது அருமை. செயலிலும் தெரிகிரது உண்மை.
  எழுத்து வன்மை இருந்தால் எதையும் எழுதலாம். விஷயங்கள் மனதில் பதியும்படி எழுதுகிராய். மகிழ்ச்சி எழுதுங்கள்.படிக்கிறோம். அன்புடன்

  • நன்றி காமாட்சி அம்மா. சமையல் குறிப்பு எழுதுவதில் எனக்கு எந்த தகுதிக்கு குறைவும் இல்லை. அதிலும் ஒரு ரசனை, நேர்த்தி, உண்மை இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன். ஆனால் இதெல்லாம் பெண்கள் ஊடகங்களில் சாத்தியமில்லை. உதாரணத்தோடு சொல்கிறேன். ஒரு சமையலுக்கு நீங்கள் காய்கறிகளை எப்படி வெட்டுவது என்பதிலிருந்து, குழம்பை எவ்வளவு நேரம் கொதிக்க வைக்க வேண்டும் என்பதுவரை அனுபவக் குறிப்பாக எழுதினீர்கள் என்றால் நிச்சயம் அதெல்லாம் வெட்டப்பட்டு, வெறுமனே என்னென்ன தேவை, எப்படி செய்வது என்கிற ரெடிமேட் குறிப்பாக உயிர் இல்லாமல், உண்மையில்லாமல் பிரசுரமாகும்.
   என்னைப் பொறுத்தவரை சமையல் குறிப்பு எழுதுவதையும் அதற்குரிய வடிவத்தோடு எழுத வேண்டும். அதுபோன்ற சாயலை உங்கள் குறிப்புகளில் பார்க்கிறேன்.

  • கேட்க இனிமையாக இருக்கிறது. பெண்கள் என் கருத்தை ஏற்றுக்கொண்டது என்னுடைய புரிதல் சரியானது என்பதை உறுதிபடுத்துகிறது. நன்றி மகாலட்சுமி.

 3. எழுத்தில் உள்ள வீரியத்தைப் பார்க்கும் போது தங்களை இரு கரம் கூப்பி
  வணங்கத் தோன்றுகிறது. பெண்ணினத்தின் பெருமையை, துணிச்சலை,
  சாதனைகளை அவர்களுக்கு எதிராக நிகழ்த்தப்படும் வன்முறைகளைத்
  துணிந்து எழுதும் பெண் பத்திரிகையாளர்கள் (பத்திரிகைகள்) வளர வேண்டும்.
  அடுப்பங்கரையில் முடங்கிக் கிடந்த காலங்களை வென்றுலகில் சாதனை
  படைக்கும் பெண்ணினத்தின் பெருமையைச் சொல்லி சொல்லி எமது
  வம்சம் தழைக்க வேண்டும் அதற்கு உங்களைப் போன்றோர் முன் வர
  வேண்டும் என்று வாழ்த்தி வணங்கிச் செல்கின்றேன் அருமைத் தோழியே.

 4. Pingback: பெண்களுக்கான இதழ் எப்படி இருக்க வேண்டும்? | மு.வி.நந்தினி

 5. பெண்கள் இதழ் இன்னும் முன்னேறாமல இருக்க காரணம் மிக எளிமை இன்னும் ஆண் ஆதிக்கம் எல்லா இடத்திலும் இருந்து கொண்டு தான் இருக்கிறது இங்கு ஆண் ஆதிக்கம் என்பது குறியீடு அவளவே,அவர்கள் பெண்களை மீண்டும் மீண்டும் பழைய நிகழ்வில் அமிழ்த்தி அவளை சமயல் கட்டிலும் நகை ஆசையிலும் மூழ்கடித்து எல்லா சமூக பிரச்சனைகளில் இருந்து தள்ளி வைக்க செய்ய படும் நிகழ்வு தான் பெண்கள் இதழ்களின் இன்றய பணிகள்

 6. Pingback: ஒரு பொம்மலாட்டக்காரரின் அறிவுரை… | மு.வி.நந்தினி

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.