அரசு மருத்துவமனைகளை ஏன் வெறுக்கிறீர்கள்?

பிரபா கர்ப்பமானபோது அவருடைய வயது 24. கர்ப்பத்தை உறுதி செய்த பிறகு, அவருடைய உயரம்-எடையை(பாடி மாஸ் இன்டெக்ஸ்) கணக்கிட்டபோது, அவர் இருக்க வேண்டிய இயல்பான அளவைவிட குறைவான எடையைக் கொண்டிருந்தார். உயர் நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த பிரபா, சத்து குறைபாடுடன் இருந்தார். அவரை பரிசோதித்து அவருக்கும் அவர் கருவில் வளரும் குழந்தைக்குமாக சத்து மாத்திரைகள், தினசரி உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டிய உணவுகள் குறித்து அவருக்கு எடுத்துச்சொன்னார். கர்ப்பத்தின் ஒவ்வொரு கட்ட பரிசோதனையிலும் பிரபா சத்துள்ள உணவுகளை எடுத்துக் கொண்டது தொ¢ந்தது, கருவில் இருந்த குழந்தையும் ஆரோக்கியமாக வளர்ந்தது. எட்டாவது மாதத்தின் முடிவில் பிரபா நன்றாகவே பருத்திருந்தார், எடை கூடியதின் காரணமாக அவருக்கு கால்களில் நீர் கோர்த்துக் கொள்வது உள்ளிட்ட சிறு பிரச்னைகள் இருந்தன. பிரசவ வலி கண்டு அவரை மருத்துவமனையில் அனுமதித்தார்கள். குழந்தையின் எடை கூடுதலாக இருந்ததின் காரணமாக, பிரபாவால் இயல்பாக பிரசவிக்க முடியவில்லை. அறுவை சிகிச்சை செய்து குழந்தையை வெளியே எடுத்தார்கள். தாயும் சேயும் நலமாக இருக்கிறார்கள். பிரபா, இப்போது இயல்பான எடையைவிட 20 கிலோ கூடுதலாக இருக்கிறார்.
நீங்கள் இதுவரை படித்த பிரபாவின் பிரசவ கால அனுபவம், உங்களுடைய வாழ்க்கையிலும் நடந்ததாக இருக்கலாம். அல்லது உங்கள் குடும்பத்தில் யாருக்கேனும் நடந்திருக்கலாம். குறைந்தது உங்களுக்குத் தெரிந்து இதுபோல் நான்கு பெண்களுக்காவது இப்படிப்பட்ட பிரசவ அனுபம் நிகழ்ந்திருக்கும். சுகப்பிரசவம் என்பது இப்போது ஆச்சரியத்திற்குரிய ஒன்றாகிப் போன நிலையில் சிசேரியன் பிரசவம் இயல்பானதாகவிட்டது. இதிலென்ன தவறு என்பது உங்களுடைய அடுத்த கேள்வியாக இருக்கும். இதோ சில விஷயங்களைச் சுட்டிக்காட்டுகிறோம்.

  1. குழந்தைப் பெற்றுக்கொள்ளும் முன் பிரபா,தன்னுடைய உடல் எடை, ஆரோக்கிய நிலவரத்தைத் தெரிந்துகொள்ளாமல் கர்ப்பம் தரித்தது. இதற்கு அவருடைய கணவர் அல்லது துணைவரும் காரணமாக அமைந்தது.
  2.  மகப்பேறு மருத்துவர் பிரபாவின் உடல் எடை, குழந்தை வளர்ச்சி இரண்டையும் கருத்தில் கொண்டு சரிவிகித உணவுகள், தேவையான ஊட்டச்சத்து மாத்திரைகள் பரிந்துரைக்காமல் அபரிவிதமான வளர்ச்சியைத் தரும் மாத்திரைகள், உணவுகளைப் பரிந்துரைத்தது. இயல்பாக வீட்டு வேலைகளைக்கூட செய்ய பரிந்துரைக்காமல் நன்றாக ஓய்வெடுத்துக்கொள்ளும்படி பரிந்துரைத்து.
  3. கர்ப்பத்தின் அடுத்தடுத்த கட்ட பரிசோதனைகளிலேயே அளவுக்கு மீறிய உடல் எடையை கண்டுபிடித்துவிட முடியும். ஆனால் பெரும்பாலான மருத்துவர்கள் அதைச் செய்வதில்லை.
  4. கர்ப்பத்திற்குப் பிறகு, பிரபாவின் உடலமைப்பே மாறிவிட்டது. கூடுதலான உடல் எடையால் அவரால் இயல்பாக வீட்டு வேலைகளைச் செய்ய முடிவதில்லை. இது பின்னாளில் அவருக்கு ஒபிசிட்டி, சர்க்கரை, இரத்த அழுத்தம் போன்ற பாதிப்புகளையும் ஏற்படுத்தக்கூடும். சிசேரியன் பிரசவத்தின்போது முதுகுத்தண்டில் செலுத்தப்படும் மயக்க மருந்து, தலைவலியை ஏற்படுத்தக்கூடியது. மேலும் இதனால் பிரசவத்திற்குப் பிறகு, இயல்பான நாட்களில் பளுமிக்க பொருட்களைத் தூக்கும்போது முதுகுத்தண்டில் கடுமையான வலி ஏற்படும்.
  5. சிசேரியன் பிரசவத்தின்போது கர்ப்பப்பையை கிழித்தே, குழந்தை வெளியே எடுக்கப்படுகிறது. இதனால் அடுத்து கர்ப்பம் தரிக்கும்போது பிரசவம் மிகவும் சிக்கலாகி விடும். இன்னோரு முக்கியமான தகவல் சுகப்பிரசவத்தைவிட சிசேரியன் பிரசவத்தில் இரத்த இழப்பு அதிகமாக இருக்கும். சில நேரங்களில் பிரசவத்தின்போது ஏற்படும் அதிகளவு ரத்தப்போக்கால் பிரசவித்த பெண் மோசமான உடல்நல பிரச்னைகளை சந்திக்க வேண்டியிருக்கும். அதில் உயிரிழப்பதும் அடங்கும்.
  6. சிசேரியன் மூலம் பிரசவித்த பெண்ணுக்கு, சிசேரியன் காயங்கள் சரியாகி இயல்பு நிலைக்கு திரும்ப குறைந்தது 3 மாதங்கள் ஆகும். இதனால் ஆரம்ப கட்ட தாய் சேய் பிணைப்பு பாதிக்கப்படுகிறது.

சிசேரியன் பிரசவம் எந்த சூழ்நிலையில் அறிமுகப்படுத்தப்பட்டது?
கடந்த நூற்றாண்டில் பிரசவத்தின்போது நிகழ்ந்த தாய் சிசு மரணங்களை குறைப்பதற்கு மருத்துவ ரீதியாக கைக்கொடுத்ததுதான் சிசேரியன் பிரசவ வழிமுறை. இந்தியா போன்ற மக்கள் தொகை மிக்க, ஏழ்மையான நாடுகளில் சத்து முறைபாட்டாலும் சிறு வயது திருமணங்களாலும் ஏற்படும் பிரசவ கால உயிர் இழப்புகளை குறைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் வளர்ந்த நாடுகளில் சிசேரியன் பிரசவத்தை ஒரு சொகுசான பிரசவ முறையாக அரசு சாராத மருத்துவர்கள் பொதுமக்களிடம் அறிமுகப்படுத்தினர். அது பெண்களை வசீகரித்தது. வலியில்லாமல், நிமிடங்களில் பிரசவம் முடிந்தது. அந்தப் போக்கையே இந்த பத்தாண்டுகளில் இந்தியா, பிரேசில், அர்ஜென்டினா போன்ற வளரும் நாடுகளில் உள்ள தனியார் மருத்துவமனைகள் பின்பற்றத்தொடங்கின.
ஒரு முரண்பாடான உண்மை என்னவெனில் ஏழ்மைமிக்க, மருத்துவ வசதிகளற்ற பெண்களின் பிரசவ கால இழப்பை தவிர்ப்பதற்காக கையாளப்பட்ட சிசேரியன் பிரசவ வழிமுறை, இன்று பணம் படைத்த நடுத்தர, மேல்தட்டு பெண்களுக்கே பயன்படுகிறது. இந்த உண்மைக்கு ஆதாரமாக இருக்கின்றன அரசு மகப்பேறு மருத்துவமனைகள். அரசு மருத்துவமனைகளில் நடக்கு பிரசவங்களில் 90க்கும் அதிகமான சதவிகிதம் சுகப்பிரசவங்களே நடக்கின்றன. பிரசவகால இறப்பை தவிர்க்கும் பொருட்டே அரசு மருத்துவமனைகள் சிசேரியன் பிரசவங்களைச் செய்கின்றன. ஆனால் இங்கே பிரசவம் பார்த்துக்கொள்பவர்கள் பெரும்பாலும் கீழ்த்தட்டு மக்களே. இதுகுறித்து சென்னையில் உள்ள மகப்பேறு மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர் ஒருவரிடம் பேசியபோது…
’’நடுத்தர மக்கள், அரசு மருத்துவமனைகளில் இருக்கும் கூட்ட நெரிசலைப் பார்த்து,நாம் ஏன் வரிசையில் நிற்க வேண்டும் என்று தனியார் மருத்துவமனைகளுக்குச் செல்கின்றனர். அவர்கள் சொல்லும் இன்னொரு காரணம், அரசு மருத்துவமனைகளில் சுகாதாரம் குறைவு என்பது. ஒரு நாளைக்கு நூற்றுக்கணக்கில் அரசு மருத்துவமனைகளுக்கு நோயாளிகள் வருகிறார்கள். அவர்கள் செய்யும் அசுத்தங்களைச் சுத்தம் செய்வதற்கு போதுமான துப்புறவு பணியாளர்களை நியமிப்பதில்லை. அதேபோல் அரசு மருத்துவமனைகள் அதிகமாக இருந்தால் கூட்ட நெரிசலைத் தவிர்க்கலாம். இதைச் செய்தால் அரசு மருத்துவமனைகளைத் தேடி எல்லாவிதமான மக்களும் வருவார்கள். மருத்துவம் நேர்மையோடு நடக்கும். இங்கே இன்னொரு தகவலைச் சொல்கிறேன். எங்களுக்கு வரும் சிசேரியன் கேஸில் பலவை தனியார் மருத்துவமனைகளால் முடியாது என இறுதி நேரத்தில் சொல்லப்பட்டு வருபவைதான். முடியாது என்று தனியார் மருத்துவமனைகள் கைவிரிக்கும் சிக்கலான பிரசவங்களைக் கையாளும் மருத்துவ உபகரணங்கள், மருத்துவர்கள் அரசு மருத்துவமனைகளில் இருக்கிறார்கள்” என்கிறார்.
சிசேரியன் பிரசவம் அதிகமாக நடக்க என்ன காரணம்?
சிசேரியன் பிரசவங்கள் அதிகரிக்க மருத்துவ ரீதியான காரணங்கள் மிகக்குறைவாகவே இருக்கின்றன என்கிறார்கள் மருத்துவ ஆய்வறிஞர்கள். அதில் சில காரணங்கள் கருவில் இருக்கும் சிசுவின் ஆபத்தான நிலைமை, 30 வயதுகளுக்கு மேல் கர்ப்பம் தரிக்கும்போது, கர்ப்பம் தரித்த பெண் அதிக உடல் பருமனோடு இருக்கும்போது. 10 சதவிகிதத்துக்கு குறைவான எண்ணிக்கையிலே இப்படிப்பட்ட பிரசவங்கள் நடக்கின்றன. சமூகக் காரணங்கள்தான் முக்கிய பங்கு வகிப்பதாகச் சொல்கிறது உலக சுகாதார அமைப்பு. அதில் சில காரணங்கள்…
1. சிசேரியன் பிரசவம் குறித்த விழிப்புணர்வு இல்லாமை : ஒருவகையில் இதை மருத்துவ விழிப்புணர்வு இல்லாமை என்றுகூட சொல்லலாம். மருத்துவ விழிப்புணர்வு என்பது தன்னுடலின் ஆரோக்கிய நிலையில் தொடங்கி, கர்ப்பம் தரிக்க திட்டமிடுதல், கர்ப்பகால கவனிப்புகள், பிரசவம், பிரசவத்திற்குப் பிறகு தன்னுடல் எப்படி இருக்கும் என்பது பற்றி சரியாக தெரிந்து கொள்வது.
2. சுகப்பிரசவத்தின்போது ஏற்படும் வலி பற்றி பயம் : சென்ற தலைமுறை வரை நம்முடைய தாய்கூட நம்மை சுகப்பிரசவத்தில்தானே பெற்றெடுத்தார். நம் பாட்டி அல்லது நமக்குத் தெரிந்த பாட்டி ஆறு குழந்தைகளை பெற்றெடுத்த அனுபவத்தையெல்லாம் நாம் கேட்டிருப்போம். நமக்கென்று வரும்போது மட்டும் நாம் ஏன் பயப்பட வேண்டும்?
3. மூடநம்பிக்கை : குறிப்பிட்ட நேரத்தில் குழந்தை பிறந்தால், அது நல்ல யோகம் என்று சில மேல்தட்டு மக்களிடம் ஜோதிட மூட நம்பிக்கை நிலவிக்கொண்டிருக்கிறது. அடிப்படையே இல்லாத இதுபோன்ற கருத்துகளை நம்பி ஒரு பெண்ணின் உடல் ஆரோக்கியத்தை கெடுப்பது எந்த விதத்தில் யாருக்கும் யோகம் என்பதை சிந்தியுங்கள்.
4. சுகப்பிரசவம் மறுக்கப்படுதல் : இது பல பணத்தாசை பிடித்த தனியார் மருத்துவமனைகளின் திட்டமிட்ட சதி. பிரசவத்திற்காகச் செல்லும் பெரும்பாலான பெண்களுக்கு தனியார் மருத்துவமனைகள் தரும் பரிசு இது. பயப்படத் தேவையில்லாத காரணம் காட்டி பிரசவ வலியுடன் இருக்கும் பெண்ணையும் அவருடைய குடும்பத்தையும் சிசேரியன் பிரசவத்திற்கு தள்ளுகின்றனர் இந்த மருத்துவர்கள். கருவில் இருக்கும் ஒரு குழந்தையின் எடை, இந்த மாத்தில் இவ்வளவு இருக்கிறது என்று நன்றாகத் தெரிந்துவிடுகிறது. குழந்தையின் எடை அதிகமாக இருந்தால் சுகப்பிரசவம் ஆவதில் பிரச்னை இருக்கும் என்பதை மறைத்துவிட்டு இன்னும் அதிக எடை கூட மாத்திரைகளைப் பரிந்துரைக்கிறார்கள் மருத்துவர்கள்.

2006ன் புள்ளிவிவரத்தின்படி இந்திய அளவில்(1989-2006)தனியார் மருத்துவமனைகளில் பதிவு செய்யப்பட்ட பிரசங்களில் 30.2 சதவிகிதம் சிசேரியன் பிரசவங்கள் நடந்துள்ளன. கர்ப்பகால கவனிப்புகளுக்கு வரும் ஒரு பெண்ணுக்கு திட்டமிட்டே தாய் சேய் இருவரின் உடல் எடை கூடும் மருந்துகளை பரிந்துரைப்பதும் இதற்கு காரணமாக கூறுகிறார்கள் பாதிக்கப்பட்டவர்கள். சென்னையில் தனியார் மருத்துவமனைகளில் பிரசவம் பார்த்துக் கொள்வதற்கு மட்டும் ரூபாய் 30 ஆயிரம் முதல் 1 லட்சம் வரை கட்டணம் செலுத்த வேண்டியிருக்கிறது. இதுதவிர கர்ப்பகால கவனிப்புகளுக்கென சில ஆயிரங்கள் செலவழிக்க வேண்டியிருக்கும்.
தமிழகத்தில் படித்த, நகரங்களில் வசிக்கும் பெண்களிடையேதான் சிசேரியன் பிரசவம் அதிகம் நடப்பதாக 2006ன் புள்ளிவிபரம் ஒன்று கூறுகிறது. இந்த புள்ளிவிபரத்தின்படி சிசேரியன் பிரசவங்களில் 26 சதவிகிதம் நகரங்களிலும் 17 சதவிகிதம் கிராமங்களிலும் நடந்திருக்கிறது. அதே புள்ளிவிவரப் பட்டியலில் வருடத்திற்கு வருடம் சிசேரியன் பிரசவங்கள் அதிகரித்து வருவதும் தெரிகிறது. 1992-93ம் ஆண்டில் 7.1 சதவிகிதமும் 1997-1998ம் ஆண்டில் 17.5 சதவிகிதம் 2005-2006ம் ஆண்டில் 23 சதவிகிதமாகவும் சிசேரியன் பிரசவங்கள் அதிகரித்திருக்கின்றன.
குறிப்பு : புள்ளிவிவரங்கள் Sancheeta Ghosh என்பவரின் ஆய்வறிக்கையில் இருந்து எடுத்தாளப்பட்டது.

அரசு மருத்துவமனைகள் மீது எனக்கும் சில குற்றச்சாட்டுகள் உண்டு. அதற்காக தனியார் மருத்துவமனைகளை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. என்னுடைய பிரசவம் அரசு மருத்துவமனையில் நடந்தது. அதுபற்றியும் இங்கே எழுதியிருக்கிறேன். எனக்குத் தெரிந்த பெண்கள் கர்ப்பம் தரிக்கும்போது அரசு மருத்துவமனைக்கு செல்லுமாறு அறிவுறுத்துகிறேன்.  அரசு மருத்துவமனைகள் என்றாலே முகம் சுழிக்கும் பொதுபுத்தியை கொஞ்சமாவது மாற வேண்டும் என்பது என் விருப்பம்.

Advertisements

7 thoughts on “அரசு மருத்துவமனைகளை ஏன் வெறுக்கிறீர்கள்?

  1. கட்டுரையில் சொல்லப்பட்டிருப்பவை மிகவும் சரி.

    சுகப்பிரசவம் அந்த நேர வலி. ஆனால் ஆயுளுக்கும் சுகம்.

    சிசேரியன் கண நேர சுகம். பிறகு ஆயுள் முழுவதும் தொந்தரவு.

    இதை பலரும் உணர்வதே இல்லை.

    எங்கள் உறவினர்களில் மூன்று பெண்கள் சில மாதங்களுக்கு முன்பு அரசு மருத்துவமனையில் சுகப்பிரசவமாகத்தான் குழந்தை பெற்றனர். அதே நேரம் மருத்துவர், செவிலியர், பெற்றோர் கவனக்குறைவால் அதீத தாமதத்தால் ஒரு பெண் இறந்தும் விட்டார். இதுவும் 3 மாதத்துக்கு முன்புதான் நடைபெற்றது.

    தனியார் மருத்துவமனைகளில் தரப்படும் மருந்துகள் கர்ப்பிணிகளின் உடல் நலம் காக்க என்று சற்று கூடுதலான பவரில் இருப்பதும் சிசேரியனுக்கு முக்கிய காரணம் என்று சொல்லப்படுகிறது.

    ஆனால் குழந்தை உருவானது முதல் சரியான முறையில் அரசு மருத்துவமனையை பயன்படுத்தி அங்கே தரப்படும் மருந்துகளை உரிய முறையில் உட்கொண்டால் அவை கர்ப்பிணிகளுக்கும், அவர்கள் வயிற்றில் வளரும் குழந்தைகளுக்கும் நன்மையே செய்யும்.

  2. //குழந்தையின் எடை அதிகமாக இருந்தால் சுகப்பிரசவம் ஆவதில் பிரச்னை இருக்கும் என்பதை மறைத்துவிட்டு இன்னும் அதிக எடை கூட மாத்திரைகளைப் பரிந்துரைக்கிறார்கள் மருத்துவர்கள்.//

    இவர்கள் வைத்தியர்களா? சண்டாளர்களா?

    நம் மக்களும் தனியார் மருத்துவமனை செல்வதை , செல்வச் செருக்குடன் கூடிய பெருமையாகவல்லா கருதுகிறார்கள்.

  3. மிகவும் சரி நந்தினி பெருமைக்காக தனியார் மருத்துவமனைக்குப் போய்விட்டு பின்னால் நிறைய அனுபவிக்கிறோம் இதை அனுபவத்தில் உணர்ந்தவள் நான் அருமையான உபயோகமான பகிர்வு பாராட்டுக்கள்

  4. மிக சிறந்த பதிவு சகோ

    பணவெறியில் இன்றைய தனியார் மருத்துவ மனைகள் சிசேரியன் பிரசவ முறையை பின்பற்றுகிறது என்பதை மறுப்பதற்கு இல்லை என்றாலும் மக்களிடம் பணம் அதிகரித்து விட்டதும் ஒரு காரணம் என்பதே எனது எண்ணம் இதற்கு மிக சிறந்த உதாரணம் எனது ஊர் ,நான் பிறந்தது எங்கள் ஊர் அரசு மருத்துவ மணியில் .ஆனால் அப்போது என் ஊர் இப்போது இருக்கும் அளவுக்கு செழிப்பு இல்லை ஆனால் இப்போது பணம் அதிகம் இருக்கும் ஊர் எனது ஊர் அதனால் பணம் இல்லாதவர்களை தவிர வேறு யாரும் அரசு மருத்தவ மனையை ஏறெடுத்தும் பார்ப்பது இல்லை

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.