இரவு கொண்டாட்டத்தை முதலில் விடுங்கள்!

உமா சக்தியின் முகநூல் குறிப்பைப் பார்த்து எனக்கு முதலில் வியப்பு ஏற்பட்டது. தமிழின் முதன்மையான ஒரு ஊடகத்தை கேள்வி கேட்கும் துணிவு இவருக்கு எப்படி வந்தது என்பதே காரணம். உமாவைப் பற்றி குடும்பம், குழந்தை, கவிதை என மென்மையான விஷயங்களே எழுதுவதாக சிலர் விமர்சித்ததுண்டு. இதைப்பற்றி உமாவும் எழுதியிருந்தார். முரண்பாடு இதில்தான் இருக்கிறது. உள்ளூர் விவகாரத்திலிருந்து உலக விவகாரம் வரை  போராடும் ஊடக போராளிகள் எல்லாம் தேவையான நேரத்தில் மட்டும் எனக்கும் இதற்கும் எந்த தொடர்புமே இல்லை என்கிறமாதிரி கள்ள மெளனம் சாதிக்கும்போது உமாவிடம் இருக்கும் துணிவை பாராட்டியே ஆக வேண்டும். ஆக முற்போக்கு என்பது வார்த்தையில் இல்லை, செயலில்தான் இருக்கிறது. இதை தெரியபடுத்திய இன்னொரு சந்தர்ப்பம் இது.

பேப்பர் கட்டுகளை கரைத்து குடித்துவிட்டு இந்த முற்போக்கு பத்திரிகையாளர்கள் விடும் ஏப்பம் பல நேரங்களில் எரிச்சலை ஏற்படுத்துவண்டு. என்னுடைய அனுபவத்தில் இப்படியொரு சம்பவம். ஒரு காட்சி ஊடகத்தில் பணியில் சேர்ந்திருந்த புதிது. அப்போது அறிமுகமானார் அவர். முற்போக்குவாதி, பெரியாரிஸ்ட், கம்யூனிஸ்ட் இப்படி பெரிய லிஸ்ட்டுடன்தான் தன்னை காட்டிக்கொள்வார். நான், அவர், உடன் பணியாற்றிய இரண்டு தோழிகள் நண்பர்களானோம். நாங்கள் பணியாற்றிய அந்த நிறுவனத்தில் அந்த உயரதிகாரியின் ஆட்டம் அதிகமாக இருந்த காலகட்டம் அது. அவரை திட்டி தீர்க்கவே நாங்களெல்லாம் ஒன்று கூடினோம். வாரத்தின் ஏதோ ஒரு நாள் மயிலை பார்க்கில் கூடி இதுபோன்ற பிரச்னைகளை பேசி தீர்வு காண வேண்டும் என்பது எங்கள் திட்டம். முதல் நாள் வந்தது அந்த முற்போக்குவாதியைத் தவிர, எங்கள் மூவருக்கும் ஊடகங்களில் இருக்கும் இதுபோன்ற அதிகாரிகளுக்கு எதிராக ஏதாவது செய்ய வேண்டும் என்கிற கோபம் அதிகமாக இருந்தது. மூவரில் நானும் இன்னொரு தோழியும் படிக்கும் பழக்கம் உள்ளவர். இன்னொரு தோழிக்கு அந்த பரிட்சையம் எதுவும் இல்லை. ஆனால் எங்கள் இருவரைவிட அவருக்கு அந்த அதிகாரியின் மேல் கோபம் அதிகம். இதில் எங்கள் மூவருக்கும் அந்த அதிகாரிக்கும் நேரடியாக எந்த அச்சுறுத்தலும் இருந்ததில்லை. அந்த அதிகாரியால் பாதிப்புக்குள்ளான எங்களுடன் பணியாற்றிய சக தோழிகளின்மேல் எங்களுக்கு இருந்த அக்கறையாலும் எங்களுக்கும் இதுபோன்ற நிலைமை ஏற்படலாம் என்கிற அச்சத்தாலும் நாங்கள் கோபம் கொண்டோம். முதல் நாளும் வந்தது, முற்போக்கின் முகமூடி சாரி முகவரி, கையில் பெரியாரின் புத்தகத்தோடு வந்திருந்தார். அந்தக் காலத்தில் சுயமாரியாதை பெண்கள் இயக்கம் இருந்தது. அவர்கள் பெண்ணடிமைத்தனம் உள்ளிட்ட பெண்களை பாதிக்கும் பிரச்னை பற்றி பேசினார்கள். அதுபோல நாமும் ஒரு இயக்கத்தைத் தொடங்க வேண்டும் என்றார். சிறிது நேரம் தான் கையில் கொண்டுவந்திருந்த புத்தகத்திலிருந்து சில பக்கங்களை எல்லோருமாகப் படித்தோம். பிறகு, எங்களுடைய பேச்சு அலுவலகத்தில் அந்த அதிகாரியின் நடத்தைப் பற்றி திரும்பியது. இவரைப் போன்றவர்கள்தான் ஆர்வமாக பணியாற்ற வரும் பெண்களை மீண்டும் வீட்டுக்குள்ளே திருப்பி அனுப்பிக் கொண்டிருக்கிறார். இதைப் பற்றி பேசுவது, தீர்வு காண்பதுதான் இப்போதைய முதல் தேவை என்றேன் நான். இரண்டு தோழிகளும் இதையே உறுதிப்படுத்தினார்கள். ஆனால் முற்போக்கு தோழிக்கு அதெல்லாம் பெரிய பிரச்னையாகவே தெரியவில்லை. அதைப் பற்றி பேசுவதைக்கூட அவர் விரும்பவில்லை. நான்கைந்து வாரங்கள் இதே பாணியில் தொடர்ந்தது. ஒருகட்டத்தில் முற்போக்கு தோழி அந்த அதிகாரிக்கு சொம்பு தூக்கி என்பதை தெரிந்துகொண்டு சுயமரியாதை இயக்கத்துக்கு பெரிய வணக்கத்தை வைத்துவிட்டோம்.
இதை இப்போது சொல்லக் காரணம், ஊடகம் தொடர்பான சிக்கல்களை, பிரச்னைகளை எழுதும்போதெல்லாம் முற்போக்கு என்று காட்டிக்கொள்ளும் பெண்களெல்லாம் மெளனம் காக்கிறார்கள். அலுவலகத்தில் உள்ள பிரச்னைகளைப் பேசினால் தாங்கள் பணியாற்றும் நிறுவனத்தில் தங்களுக்கு ஏதாவது பாதிப்பு வரும் என்பதற்காக மெளனம் காக்கிறார்கள் என்று குறுக்கிவிட முடியாது. இதை இப்படி சொல்லலாம் பச்சையான கள்ளத்தனம்! பச்சையான சுயநலம்! அந்த வகையில் உமா சக்தியின் வெளிப்படைத் தன்மையை நான் வரவேற்கிறேன். அவரை நான் கவிஞராகவோ, எழுத்தாளராகவோ, முற்போக்குவாதியாகவோ பார்க்கவில்லை. சாதாரண உழைக்கும் பெண்ணாக பார்க்கிறேன்.10 மணி வரை வேலைப்பார்த்துவிட்டு அம்பத்தூர், தாம்பரம், அரக்கோணம் என புறநகர் தாண்டி அகால நேரங்களில் வீடு திரும்பும் பெண்களை நினைத்துப் பாருங்கள். அடடா இரவு எத்தனை ஏகாந்தமானது என்று சொன்னால் அடிக்க கை ஓங்குவார்கள். ஒருபக்கம் பசியும் இன்னொரு பக்கம் நாள்முழுக்க உழைத்தன் களைப்பும்தான் அவர்களிடம் தெரியும். இரவு 12 மணிக்கு அரை டவுசர் போட்டுக்கொண்டு மவுண்ட் ரோடில் டீ குடிக்க முடிந்தால் அதுதான் பெண்சுதந்திரம் என்று நினைக்கிறீர்கள்போல. அல்லது பாலியல் துன்புறுத்தலுக்கு ஆட்பட்ட பெண்ணைப் பற்றி எழுதுவதும் பாலியல் சுதந்திரம் பற்றி பேசுவதுதான் பெண்ணியம் அதை எல்லாம் பேசினால்தான் உங்களை முற்போக்கு என்று ஏற்றுக்கொள்வார்கள் என்று வரையறை வைத்திருக்கிறீர்களா? எதுவாகவோ வைத்துக்கொள்ளுங்கள் உழைக்கும் பெண்களின் அன்றாட பிரச்னையை பேசாதவரை உங்களுடைய முற்போக்கு பெண்ணிய சிந்தனையெல்லாம் பாதுகாப்பாக புத்தகங்களுக்குள்தான் அடக்கமாக இருக்கும். தன்னுடன் பணியாற்றும் சக தோழியின் பிரச்னையை பேசாத, எழுதாத உங்களுடைய பேனா உலக பெண்களை எப்படி உய்வித்து விட முடியும்? உமா சக்தி எழுதி மூன்று நாட்களாகிவிட்டது, அது வெறுமனே ஒரு முகநூல் குறிப்பாக மட்டுமே போய்விட்டது, போய்விடும். பத்திரிகையாளர்களுக்கு என்று நான்கைந்து சங்கங்கள் இருப்பதாக அறிகிறேன். எனக்குத் தெரிந்து இந்த சங்கங்களில் எல்லாம் கல்யாண விழாவும் காதணி விழாவும்தான் நடக்கிறது. ஊடக முதலாளிகளிடம் வாலாட்டும் இவர்களிடம் பெண் பத்திரிகையாளர்களின் பாதுகாப்புக்காக என்ன செய்தீர்கள் என்றா கேட்க முடியும்?

9 thoughts on “இரவு கொண்டாட்டத்தை முதலில் விடுங்கள்!

  1. #உமா சக்தியின் முகநூல் குறிப்பைப் பார்த்து எனக்கு முதலில் வியப்பு ஏற்பட்டது.#
    உங்களுக்கு வியப்பு ஏற்படுத்திய முகநூல் குறிப்பை எங்களுக்கு நீங்கள் தராதது எனக்கு வியப்பை தருகிறது ,அதை இணைத்தால் உங்கள் பதிவு முழுமை பெறும்,அதைப் படிக்காத நாங்களும் படிக்க ஏதுவாக இருக்குமே ,செய்வீர்களா ?

  2. #இரவு கொண்டாட்டத்தை முதலில் விடுங்கள்!#
    ஐந்த தலைப்பு சம்பந்தமாக அவரும் ,நீங்களும் எதையும் எழுதியதாக தெரிய வில்லை .பாலியல் சுதந்திரம் என நினைத்துகொண்டு சில பெண்கள் செய்யும் தவறுகள் ,மற்ற பெண்கள் மீதும் ஆண்வர்க்கத்தின் ஏளனப் பார்வை விழுவதற்கு காரணமாகி விடுவதை சொல்ல வந்து இருப்பீர்கள் என நம்புகிறேன் !

  3. நீங்கள் எழுதிய அத்தனையும் உண்மை தான்.

    உங்கள் வாழ்வின் நிகழ்வு வழியாக பெண் எப்படி எல்லாம் ஒடுக்க படுகிறாள் கபட வேட தாரிகள் மூலம் என்பதை பதிந்து இருக்கிறீர்கள் .நான் எப்போதும் நினைப்பது உண்டு எழுத்து ஒரு தவம் அது ஒடுக்க படுகிறவனுக்கு அதரவாக எழுத பட வேண்டும் என்று அப்படி எழுத பாட்டால் தான் அது எழுத்து இல்லை என்றால் குப்பை ,ஏனோ ஒடுக்க படுகிறவருக்கு அதரவாக எல்லாம் அவளவு எளிதாக எழுத்தை எழுதுவது நடந்து விடுவது இல்லை , மேலும் முதலாளித்துவ சமூகத்தில் அறத்திற்கு இடம் இல்லை என்பதை மீண்டும் மீண்டும் நிரூபிக்கும் சம்பவங்கள் தொடந்து கொண்டே இருக்கிறது ,லாபம் மட்டுமே குறிக்கோள் ,பெண் உரிமை சர்பாக எழுத பட்டு வெகு ஜன பத்திரிக்கை பிரசிகரிக்க படும் எழுத்துகள் எல்லாம் லாபம் வேண்டி மட்டுமே என்பது இங்கு நிதர்சனமாக இருக்கிறது .அவர்கள் ஒருபுறம் பெண்ணை நுகர்வு பொருள் என்று சொல்ல ரீலக்ஸ் என்ற பக்கத்தையும் பெண் அதரவுக்கு வேண்டி பெண் தளத்தையும் நடத்துவது அவர்கள் முழு பொய்யர்கள் ,இங்கு எந்த பத்திரிக்கைகும் சமூகம் சமத்துவம் ஆக வேண்டும் என்ற எண்ணம் இல்லை

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.