சிட்டுக்குருவிகளுக்கு நன்றி

DSCN2547

நினைவு தெரிந்து நான் பார்த்த முதல் பறவை சிட்டுக்குருவி. நூறாண்டு பழமையான அரை உருளை ஓடுகள் வேயப்பட்ட நாங்கள் வசித்த வீட்டின் வாசலருகே மெல்லிய புற்களால் கூடு கட்டியிருந்தன அந்தக் குருவிகள். அந்தத் தெருவில் இருந்த அத்தனை வீட்டிக்குள்ளும் சிட்டுக்குருவிகளின் கீச்கீச் சத்தம் ஏதோ ஒரு வேளையில் கேட்டுக்கொண்டிருக்கும். குழந்தைகளான எங்களோடு அவையும் கூக்குரல் இட்டு விளையாடிக் கொண்டிருக்கும். அவற்றை நாங்கள் ஒருபோதும் துன்புறுத்தும் நோக்கத்தில் அணுகியதில்லை. அவற்றின் உணவுக்கு குறையே வந்ததில்லை. கேழ்வரகு, கம்பு, சோளம்தான் அந்நிலத்தின் பிரதான பயிர்களாக இருந்தன. நிலத்தில், வீடுகளில் சிதறிய ஏன் மாடுகள் உண்டு சிதறிய கேழ்வரகு, சோள தட்டைகளிலிருக்கும் தானியங்களையும் கொத்தித் தின்னும் சிட்டுக்குருவிகள்.

பிறகு, வெவ்வேறு ஊர்களுக்கு பயணப்பட்டோம். கிராமத்தை விட்டு பேரூரில் குடியேறினோம். பள்ளிக்குச் செல்லும்போது தேன்கனிக்கோட்டை பேருந்து நிலைய நடைபாதைகளில் சில சிட்டுக்குருவிகளைப் பார்த்ததாக நினைவு. பெரிய ஊரின் வாழ்க்கை கவனத்தை வெவ்வேறு திசைகளில் திருப்பி விடுகிறது. கட்டடங்களினூடே மக்கள் நிறைந்திருந்த அந்த ஊரிலும் சிட்டுக்குருவிகள் ஜீவித்திருக்கும், நான்தான் அவற்றை கவனத்தில் நிறுத்தும் சூழலில் இல்லை.

பிறகு சேலத்திற்கு குடிபெயர்ந்தபோது தோட்டத்தை ஒட்டியிருந்த அந்த ஓட்டு வீட்டினுள் சிட்டுக்குருவிகள் கூடு கட்டியிருந்தன. ஒற்றை அறையான அதில் எங்களுடன் சில காலம் இருந்தன. பிறகு பென்னாகரம் சந்தை வெளியில் சிதறிய தானியங்களை தின்று கொண்டிருந்த சிட்டுக்குருவிகளை கடந்து போயிருக்கிறேன். சென்னையின் கல்லூரி நாட்களில் கான்கிரீட் காடாக மாற்றப்படாத சோளிங்கநல்லூரில் ஹாஸ்டல் பால்கனியில் சிட்டுக்குருவிகள் வந்ததுண்டு.

பணியில் சேர்ந்த ஆரம்ப நாட்களில் முழுக்க பணியிலே இருந்தது கவனம். பிறகு வெறுமை சூழ்ந்திருந்த அந்த நாட்களில் சூளைமேட்டின் சந்தடிமிக்க தெருவில் சிட்டுக்குருவிகள் மேய்ந்து கொண்டிருந்ததைப் பார்த்தேன். எனக்கென ஒரு குடும்பம் அமைந்துவிட்ட பிறகு, இப்போது சிட்டுக்குருவிகளும் அதில். தினம் தினம் என்னோடும் என் குழந்தையோடும் அவை உறவாடுகின்றன. ஒரே ஒரு முருங்கை மரம் காணாமல் போன சிட்டுக்குருவிகளை வரவழைத்திருக்கிறது. என் இனிமையான நாட்களை திரும்பிருக்கின்றன. சிட்டுக்குருவிகளுக்கு நன்றி. இன்று உங்களை நினைவுகூரும் நாள், சிட்டுக்குருவிகள் நாள்!

வேலைக்குச் செல்லும் பெண்களின் அசாதாரண தருணமும் ராமலட்சுமியின் சிறுகதையும்

நான் பார்க்கும் பெரும்பாலான பெண்கள் திருமணத்திற்குப் பிறகு அல்லது குழந்தை பேறுக்குப் பிறகு வேலைக்குப் போவதை விரும்புவதில்லை. அல்லது அவர்கள் சார்ந்த குடும்பத்தில் இருப்பவர்கள் வேலைக்குப் போகவேண்டாம் என்று வற்புறுத்தி அவர்களை போக விடுவதில்லை. இந்த இரண்டு காரணங்களையும் என் விஷயத்தில் நடக்காமல் பார்த்துக் கொண்டேன். எப்போதும் நான் வேலைக்குப் போவேன் என்று திருமணத்திற்கு முன்பே என் வீட்டாரிடம் உறுதியாக சொல்லியிருந்தேன். அதன்படி திருமணமாகி, கர்ப்பம் தரித்திருந்த ஒன்பது மாதங்கள் வரை வேலைக்குச் சென்றேன். வேலையிலிருந்து விலகிய ஒரு வாரத்தில் எனக்கு பிரசவமானது. குழந்தை பேற்றுக்கு பிறகு, 3 மாதங்கள் வரை விடுப்பு கேட்டிருந்தேன். இன்னும் சிறிது காலம் குழந்தைக்கு அருகிலேயே இருக்க வேண்டிய தேவை இருந்தது. விடுப்பை மேலும் 2 மாதங்களுக்கு நீட்டிக்க கேட்டேன். அலுவலகத்தில் ஒத்துழைத்தார்கள்.
குழந்தைக்கு அருகில் இருந்த 5வது மாதத்தில் குழந்தைக்கு மாற்று உணவுக்கு பழக்கினேன். குழந்தையும் ஒத்துழைத்தான். அருகருகிலேயே உறவுகள் அமைந்துவிட்டதால் குழந்தையைப் பார்த்துக்கொள்ள ஆள் தேடும் தேவை ஏற்படவில்லை. அவர்களே மாற்றி மாற்றி குழந்தையை பார்த்துக்கொண்டார். குழந்தையை விட்டு வேலைக்குப் போகிறோமே என்கிற செயற்கையாக உருவாக்கப்பட்ட குற்ற உணர்ச்சி எல்லாம் எனக்கு உண்டாகவில்லை. எனக்கென்றும் என் குடும்பத்திற்கென்றும் நான் வேலைக்குப் போகும் தேவையிருந்தது. இதில் குற்றவுணர்ச்சி கொள்ள ஏதும். இந்த குற்றவுணர்ச்சி பற்றி ஏராளமான பெண்கள் என்னிடம் கேட்டதுண்டு. அப்படி எதுவும் இல்லை, என் குழந்தை நான் அருகில் இருந்திருந்தால் இவ்வளவு விஷயங்களை கற்றுக்கொண்டிருக்க மாட்டான். அவன் தன்னைச் சுற்றியுள்ள சமூகத்தை உன்னிப்பாக பார்க்கிறான், அதிலிருந்து அவன் யாரும் சொல்லிக்கொடுக்காமலே கற்கிறான் என்று அவர்களிடம் பேசுவேன். அது அவர்களுக்கு உகந்த பதில் அல்ல, அவர்கள் எதிர்பார்ப்பது என் செய்வது என் தலை எழுத்து என்கிற புலம்பலைத்தான்.
உறவுகள் இருந்தார்கள் அதனால் அவர்களிடம் குழந்தையை விட்டுப்போவதில்லை என்ன பிரச்னை இருக்கப்போகிறது எனக்கேட்கலாம். சிலதை சொல்லிவிடுகிறேன். காலையில் நானும் கணவரும் அலுவலகம் கிளம்புவதற்கு முன் குழந்தைக்கு நாள்முழுக்கத் தேவைப்படும் உணவு, இயற்கை உபாதைகளை கழிக்க வைத்து குளிப்பாட்டுவது என எல்லா ஏற்பாடுகளையும் செய்துவிடுவோம். குழந்தை பராமரிப்பு நிலையங்களில் எப்படி எல்லா தயாரிப்புகளோடு கொண்டுபோய் விடுவோம் அப்படித்தான் எல்லாமும் நடக்கும். உறவுக்கு தனிப்பட்ட வேலைகள் இருக்கும், அவர்களை எதிர்பார்ப்பது நியாமற்றது. குழந்தையை பார்த்துக்கொள்வதே பெரிய உதவிதானே. ஆகவே, குழந்தை பராமரிப்பு நிலையங்களில் இருக்கும் சிக்கல் இங்கேயும் இருப்பது இயற்கையானதே. குழந்தைக்கு காய்ச்சல் என்றால் நாம்தான் அலுவலகத்துக்கு விடுப்பு போட்டு பார்த்துக்கொள்ள வேண்டும். பச்சிளம் குழந்தைகளுக்கு காய்ச்சல் என்பது அவ்வப்போது வருவது இயல்பானதே. ஆனால் நம் உறவுகளும் சில சமயம் நம்முடன் வேலை பார்ப்பவர்களும் ஏற்படுத்தும் பீதி, அவஸ்தையான ஒன்று.

adai fb-500x416

இந்த அவஸ்தையை அப்படியே படம் பிடித்து காட்டுகிறது. ராமலக்ஷ்மியின் அடை மழை சிறுகதை தொகுப்பில் இருக்கும் ஈரம் கதை. கதை நாயகியின் உணர்வுகள் என்னுடையதை பிரதிபலிக்கின்றன. சில சம்பவங்களைத் தவிர, ஒருவகையில் இது என் கதை, பிரசவித்து கைக்குழந்தையை வீட்டில் விட்டு அலுவலகம் செல்லும் பெண்களின் வலி இந்தக் கதை.
குழந்தையை தவிக்க விட்டுவிட்டு அலுவலகம் போவது சரியா என சென்டிமெண்ட் கேள்விகளைக் கேட்காமல், ஒரு அசாதாரண தருணத்தில் குழந்தைக்கு தாயின் அருகாமை தேவைப்படும் தருணத்தில் அந்தப் பெண்ணைச் சுற்றியுள்ள உலகம் அவளை எப்படி அழுத்துகிறது என்பதை சொல்கிறது இந்தச் சிறுகதை. பெண்கள் வேலைக்குப் போகக்கூடாது என்பது அல்ல இப்போதுள்ள பிரச்னை, ஒரு பெண்ணைச் சுற்றியிருக்கும் நபர்கள் அவளுக்கு தரும் ஒத்துழைப்பு எப்படிப்பட்டது என்பதே இந்தக் காலக்கட்டத்தில் வேலைக்குச் செல்லும் பெண்கள் சந்திக்கும் மிகப்பெரிய சவால். இப்படியொரு சிந்தனையை தூண்டுதலை ஏற்படுத்தியிருக்கிறது ஈரம். வேலைக்குப் போகும் பெண்களைக் கொண்ட குடும்பத்தில் இருக்கும் ஆண்கள் அவசியம் படிக்க வேண்டிய சிறுகதை இது.
அடைமழை தொகுப்பில் இருக்கும் 13 சிறுகதைகளும் வெவ்வேறு மனிதர்களின் உணர்களை, கலாச்சாரத்தை, வாழ்க்கையை சொல்கின்றன. வசந்தா, பொட்டலம்  சிறுகதைகளில் அடித்தட்டு பெண்களின் அடக்கப்பட்ட வாழ்க்கையை அழுத்தமான சித்தரித்திருக்கிறார் ராமலக்ஷ்மி.
ராமலக்ஷ்மியின் கதை மாந்தர்கள், கதைக்களம் பெண்களுடையது மட்டுமல்ல. அவர் ஆண்கள், பெண்கள் என எல்லோருடைய உணர்வுகளையும் தன் எழுத்தில் பிரதிபலிக்கிறார். வலிந்து திணிக்காத இயல்பான எழுத்து இவருடையது. முதல் தொகுப்பிலேயே நம்பிக்கைக்குரிய எழுத்து அவரிடமிருந்து வெளிப்படுகிறது. வாழ்த்துக்கள்.

நூல் : அடைமழை
ஆசிரியர் : ராமலக்ஷ்மி
கிடைக்குமிடம்:
அகநாழிகை புத்தக உலகம்,
390, அண்ணா சாலை,
KTS வளாகம், முதல் தளம்,
சைதாப்பேட்டை, சென்னை – 15.
தபாலில் வாங்கிட:
இணையத்தில் வாங்கிட:
இலைகள் பழுக்காத உலகம்:
அடை மழை

சும்மாதான் இருக்கிறேன்

வீட்டிலிருக்கும் பெண்களுக்கான வேலைப் பளுவை தற்சமயம் உணர்கிறேன். வீட்டிலிருக்கும் பெண்களை சும்மாதான் இருக்கிறார் என்று சொல்வது எவ்வளவு அபத்தமானதாக இருக்கிறது. பணிக்குச் சென்ற நாட்களில் இத்தனை வேலைப் பளுவை அனுபவித்ததில்லை. அது ஒருவகையான வாழ்க்கையாக இருந்தது, இது வேறுவகையானதாக இருக்கிறது. இதுபற்றி விரிவாக எழுத வேண்டும். இதை ஏன் சொல்ல வந்தேன் என்றால், தொடர்ந்து எழுத வேண்டும் என்று ஒவ்வொரு நாளும் திட்டமிடுகிறேன். நாளின் முடிவில் சாத்தியப்படாமல் போய்விடுகிறது. கிடைக்கும் நேரத்தில் நிறையதை படிப்பதற்கு செலவிடுகிறேன். அது ஒரு காரணம். மக்களவைத் தேர்தல், உக்ரைன் பிரச்னை, தற்சமயம் படித்துக்கொண்டிருக்கும் ராமலட்சுமியின் அடைமழை, ரிவர்பெண்ட்டின் பற்றி எரியும் பாக்தாத்(மொழிபெயர்ப்பு கவிதா முரளிதரன்), ஜெயந்தி சங்கரின் படைப்புகள் பற்றி எழுத உத்தேசித்திருக்கிறேன். பெண்கள் தினத்தை ஒட்டி 4 பெண்களுக்காக புதிய தொடர் ஒன்றை எழுத இருந்தேன். அதுவும் தள்ளிப்போய்விட்டது.

அறத்தின் மேல் நம்பிக்கை கொள்ள வைத்த சவுக்கு!

சவுக்கு தளம் தடை செய்யவேண்டும் என்கிற அறிவிலித்தனமான உத்தரவு வந்த வேகத்தில் குப்பைத்தொட்டிக்குள் போய்விட்டது. அது அப்படித்தான் போகும். ஆனால் ஊடகத்தை முடக்கும் அளவுக்கு நீதித்துறை சிலரின் கைபாவையாக மாறியிருப்பது அதிகாரத்தின் உச்சக்கட்டம். வாய்கிழிய அறம் பேசும் ஊடகங்கள் செய்ய வேண்டிய வேலையை செய்திருக்கிறது சவுக்கு. ஒரு வலைத்தளம் மிகப்பெரிய ஊழலின் முக்கியமான ஆதாரத்தை வெளிக்கொண்டு வந்திருப்பது இந்திய ஊடக வரலாற்றில் இதுவே முதல்முறை. இணைய ஊடகத்தில் இதை முக்கியமான வரலாற்று நிகழ்வு என்றே சொல்லலாம்.

சமீபத்தில் அறம் பேசும் சில பத்திரிகையாளர்களால் நான் வேலையிழந்து நெருக்கடிக்கு உள்ளானேன். மிகவும் சோர்வான தருணம் அது. அறப் புரட்சியாளர்களுக்கு சத்தியமாக நான் நல்லதையும் செய்யவில்லை, கெட்டதையும் செய்யவில்லை. நான் வேலையில் இருக்கக்கூடாது, அல்லது எனக்கு வேலை கிடைக்கக்கூடாது என்பதில் அவர்கள் ஏன் இத்தனை காழ்ப்போடு இருக்கிறார்கள் என்று சத்தியமாக இதுவரை எனக்குத் தெரியவில்லை. இந்த அறம் பேசும் ஊடகக்காரர்களை சவுக்கு தோலுரித்துப் போட்டது! இங்கே இன்னொன்றை தெளிவுபடுத்த விரும்புகிறேன். அந்தக் கட்டுரைகளில் நான் எந்த இடத்திலும் வரவில்லை. எந்தவிதமான தகவல்களும் சவுக்கு நான் தந்ததில்லை. ஆனால் நான் நேரடியாக கண்டவற்றை அப்படியே எழுதியிருந்தார்கள் சவுக்கில். என்னைப் போல் பாதிக்கபட்டவர்களின் குரலாக அது இருந்தது.

நான் சோர்ந்து போகும்போதெல்லாம் எனக்கு நம்பிக்கை அளித்தவர்கள் வினவு தோழர்கள். இப்போது சவுக்கும் அதில் இணைந்து கொண்டுள்ளது. சவுக்கின் பணி தொடர வேண்டும். எந்தவித சமரசங்களுக்கும் அதில் அது இசைந்துகொடுக்கக்கூடாது. ஊடகத்தின் எதிர்காலம் என்பது அச்சு ஊடகத்திலோ, காட்சி ஊடகத்திலோ இல்லை அது இணையத்தில்தான் இருக்கிறது. சமரசங்களுக்கு இசைந்து கொடுக்காத ஊடகமாக சவுக்கு வளர வேண்டும் என்று இந்த தருணத்தில் விருப்பம் தெரிவிக்கிறேன்.