அறத்தின் மேல் நம்பிக்கை கொள்ள வைத்த சவுக்கு!

சவுக்கு தளம் தடை செய்யவேண்டும் என்கிற அறிவிலித்தனமான உத்தரவு வந்த வேகத்தில் குப்பைத்தொட்டிக்குள் போய்விட்டது. அது அப்படித்தான் போகும். ஆனால் ஊடகத்தை முடக்கும் அளவுக்கு நீதித்துறை சிலரின் கைபாவையாக மாறியிருப்பது அதிகாரத்தின் உச்சக்கட்டம். வாய்கிழிய அறம் பேசும் ஊடகங்கள் செய்ய வேண்டிய வேலையை செய்திருக்கிறது சவுக்கு. ஒரு வலைத்தளம் மிகப்பெரிய ஊழலின் முக்கியமான ஆதாரத்தை வெளிக்கொண்டு வந்திருப்பது இந்திய ஊடக வரலாற்றில் இதுவே முதல்முறை. இணைய ஊடகத்தில் இதை முக்கியமான வரலாற்று நிகழ்வு என்றே சொல்லலாம்.

சமீபத்தில் அறம் பேசும் சில பத்திரிகையாளர்களால் நான் வேலையிழந்து நெருக்கடிக்கு உள்ளானேன். மிகவும் சோர்வான தருணம் அது. அறப் புரட்சியாளர்களுக்கு சத்தியமாக நான் நல்லதையும் செய்யவில்லை, கெட்டதையும் செய்யவில்லை. நான் வேலையில் இருக்கக்கூடாது, அல்லது எனக்கு வேலை கிடைக்கக்கூடாது என்பதில் அவர்கள் ஏன் இத்தனை காழ்ப்போடு இருக்கிறார்கள் என்று சத்தியமாக இதுவரை எனக்குத் தெரியவில்லை. இந்த அறம் பேசும் ஊடகக்காரர்களை சவுக்கு தோலுரித்துப் போட்டது! இங்கே இன்னொன்றை தெளிவுபடுத்த விரும்புகிறேன். அந்தக் கட்டுரைகளில் நான் எந்த இடத்திலும் வரவில்லை. எந்தவிதமான தகவல்களும் சவுக்கு நான் தந்ததில்லை. ஆனால் நான் நேரடியாக கண்டவற்றை அப்படியே எழுதியிருந்தார்கள் சவுக்கில். என்னைப் போல் பாதிக்கபட்டவர்களின் குரலாக அது இருந்தது.

நான் சோர்ந்து போகும்போதெல்லாம் எனக்கு நம்பிக்கை அளித்தவர்கள் வினவு தோழர்கள். இப்போது சவுக்கும் அதில் இணைந்து கொண்டுள்ளது. சவுக்கின் பணி தொடர வேண்டும். எந்தவித சமரசங்களுக்கும் அதில் அது இசைந்துகொடுக்கக்கூடாது. ஊடகத்தின் எதிர்காலம் என்பது அச்சு ஊடகத்திலோ, காட்சி ஊடகத்திலோ இல்லை அது இணையத்தில்தான் இருக்கிறது. சமரசங்களுக்கு இசைந்து கொடுக்காத ஊடகமாக சவுக்கு வளர வேண்டும் என்று இந்த தருணத்தில் விருப்பம் தெரிவிக்கிறேன்.

2 thoughts on “அறத்தின் மேல் நம்பிக்கை கொள்ள வைத்த சவுக்கு!

 1. அன்று
  டெகல்ஹா.கொம்
  இன்று
  சவுக்கு.கொம்
  நாளை
  எனது.கொம்
  இப்படித் தான்
  உண்மையை உரைக்கும்
  ஊடகங்களைத் தலைநிமிர வைப்போம்!

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.