முதல் வாசக கடிதம்!

மின்னஞ்சலில் இப்படியொரு கடிதத்தைப் பார்த்தேன். என் புத்தகத்துக்கு வந்த முதல் வாசகக் கடிதம்…
//இன்று நூலகத்திற்குச் சென்றிருந்த நான்,  எனக்கான ஒரு நூலைத் தேர்ந்தெடுக்க என்னற்ற புத்தகங்களைக் கையில் தாங்கியபடி நின்றிருந்தேன். அவ்வேளையில் சட்டென உங்களின் ”நான்” என்ற புத்தகம் என் கண்ணில் பட்டது. உங்களின் வகையே மற்ற எல்லா நூலின் வகைகளிலும் மாறுபட்டு இருந்ததே காரணம். பிறகு வீட்டில் நுழைந்த உடனே வாசிக்கத் தொடங்கி சில மணி நேரங்களிலேயே வாசித்து முடித்து விட்டேன்.
பதிப்புரையில் குறிப்பிடப் பட்டிருந்ததைப் போன்று படைப்பாளியின் மொழியிலேயே அவர்களைப் புரிந்து கொள்ள பெரு வாய்ப்பாக இந்நூல் எனக்கு அமைந்திருந்தது. நாம் இன்று பார்க்கும் பரவலான பரிச்சமிக்க எழுத்தாளர்கள் கூட தங்களின் தொடக்க காலத்தில் மிக எளிமையாகவே பங்களின் படைப்பு உலகில் அடியெடுத்து வைத்திருக்கின்றனர் என்பது என்னைப் போன்ற எழுத்தார்வம் மிக்கனுக்கு நம்பிக்கை அளிப்பதாக இருந்தது. குறிப்பாக பிரளயன் அவர்கள் வெற்றி குறித்த கருத்து என் மனதில் உள்ள கருத்தை அப்படியே பிரதியெடுத்தது போன்று இருந்தது.
ஆக உங்களின் இம்முயற்சி நல்ல பலனைத் தொடர்ந்து சமூகத்தில் ஏற்படுத்தும் என்ற நம்பிக்கையுடன்
க.சம்பத் குமார்.//
நான் தொடராக வந்தபோது நிறைய பேர் வாழ்த்து சொன்னார்கள், நன்றாக இருக்கிறது என்றார்கள். இந்தத் தொடரை புத்தகமாகக் கொண்டு வரலாம் என திரு. காவ்யா சண்முகசுந்தரம் கேட்டார். மிகுந்த தயக்கத்துடனே ஒத்துக்கொண்டேன். அட்டை வடிவமைப்பு,உள்ளடக்க வடிவமைப்பை கார்ட்டூனிஸ்ட் முருகு செய்துகொடுத்தார். பிழைகள்கூட சரிபார்க்கப்படாமல் அவசர அவசரமாக 2008 புத்தக சந்தைக்கு தயாரானது. புத்தகம் அச்சாகி 10 பிரதிகள் கொடுத்தார்கள். பிறகு மீண்டும் 10 பிரதிகள் வேண்டும் என்று பெற்றுக்கொண்டதோடு சரி. பிறகு எத்தனை புத்தகங்கள் விற்பனையானது, புத்தகத்தைப் படித்த வாசகர் யாராவது தொடர்பு கொண்டார்களா என்பது பற்றித் தெரிந்து கொள்ள பதிப்பகத்தை தொடர்பு கொள்ளவேயில்லை. எழுத்தாளர்கள் பேசியதை வெட்டி, ஒட்டுதலுடன் கட்டுரையாக்கியது மட்டுமே என் பணியாக இருந்தது என்பதால் இந்தப் புத்தகம் குறித்து பெருமிதம் கொள்ள ஒன்றுமில்லை. என் எழுத்தாக்கத்தில் வெளிவந்த கட்டுரைகள் புத்தகமாகியிருக்கிறது என்றுதான் இதைப் பற்றி நினைத்திருந்தேன். மேலே உள்ள கடிதம் அந்த எண்ணத்தை சற்று அசைத்திருக்கிறது. ஏதோ ஒரு வாசகனை, இந்தப் புத்தகத்தில் உள்ள எழுத்தாளர்கள் வாசிக்கத் தூண்டியிருக்கிறார்கள் என்பதை அறிய உற்சாகம் அடைந்தேன்.
நன்றி நண்பரே!