தமிழில் இயற்கை எழுத்தின் தொடர்ச்சி…

DSCN0286

கொன்றை மலர், சென்னை கோட்டூர் புரத்தில்.

தமிழில் இயற்கை தொடர்பான எழுத்தைப் படிக்கும் பரவசத்துக்கு இணையாக வேறு எந்த வகையான எழுத்திலும் நான் உணர்ந்ததில்லை. எந்த வகையான எழுத்தையும் நான் குறைத்து மதிப்பிடவில்லை. ஒவ்வொரு எழுத்துக்கும் ஒரு உணர்வு. நான் பரவசத்தை இயற்கை எழுத்தில் அடைகிறேன்.

நேற்று காட்டுயிர் ஆராய்ச்சியாளர் ப. ஜெகநாதன் அவர்களின் வலைப்பதிவை நானும் என் குழந்தை கோசியும் பார்த்தோம். நான் படித்தேன், அவன் பதிவின் ஊடாக இருந்த காட்டுயிர் புகைப்படங்களை ரசித்தான். தமிழில் காட்டுயிர் எழுத்தாளர்கள் விரல்விட்டு எண்ணக்கூடிய அளவிலே இருக்கிறார்கள். அதில் நிச்சயம் ப. ஜெகநாதன் குறிப்பிடத்தகுந்தவராக கொள்ளலாம். இவருடைய பறவைகள் பற்றிய நூலான பறவைகள் :அறிமுகக் கையேடு (க்ரியா வெளியீடு, மற்றொரு ஆசிரியர் ஆசை) நூலை படித்திருக்கிறேன். அப்போதுதான் இவரைத் தெரிந்துகொண்டேன். தமிழகத்தில் காணப்படும் பறவைகளின் தமிழ் பெயர்கள், அவற்றின் தோற்றம், பொதுவான இயல்புகளை படங்களோடு வெளியிட்டிருக்கும் அந்த நூல் பறவைகள் பற்றி அறிதலில் ஆர்வமிருப்பவர்கள் சிறந்த ஆரம்ப நிலை வழிகாட்டி. என் குழந்தைக்கு பறவைகள் பற்றிச் சொல்லித்தரவும் இதைத்தான் நான் பயன்படுத்துகிறேன். தமிழில் இப்படியொரு நூல், இதை விரிவுபடுத்திய அடுத்தடுத்த நூல்கள் நிறைய வரவேண்டும். அந்த வகையில் க்ரியாவும் ப.ஜெகநாதன் மற்றும் ஆசை ஆகியோர் பாராட்டுக்குரியவர்கள்.

நான் குறிப்பிடவந்தது பா.ஜெகநாதன் இயற்கையை ரசனையோடு எழுதக்கூடிய கட்டுரையாளராகவும் இருக்கிறார் என்பதே. கடந்த 4 ஆண்டுகளாக பல்வேறு பத்திரிகைகளில் அவ்வவ்போது எழுதிவந்திருக்கிறார். எனக்குத்தான் தெரியவில்லை. இயற்கை எழுத்தைப் பொறுத்தவரையில் இயற்கையின் மீது அன்பு கொண்ட ஒருவரால் மட்டுமே சிறந்த எழுத்தை உருவாக்க முடியும். அந்தவகையில் ப.ஜெகன்நாதனின் எழுத்தில் இயற்கை மீதான அன்பு பல கட்டுரைகளில் புலப்படுகிறது. கோடையில் பூத்துக்குலுங்கும் கொன்றை மரங்களை நம்மில் எத்தனை பேர் ரசிக்கப் பழகியிருக்கிறோம். கொன்றை பற்றிய ஒரு கட்டுரைக்கு பொன் என கொன்றை மலர் என கவித்துமாக தலைப்பு வைத்திருக்கிறார். பல கடினமான வாழ்க்கைச் சூழல்களை நான் இந்தக் கொன்றை மலர்களிடம் தொலைத்திருக்கிறேன். இதன் பெயரே ஒரு கவிதைப்போலத்தான் எனக்குத் தெரிகிறது. இயற்கை எழுத்து என்பது வெறுமனே ரசிப்பது மட்டுமல்ல, அதன் அறிவியல் தன்மையையும் பேச வேண்டும். அதையும் செய்கின்றன இவருடைய எழுத்துக்கள். இயற்கை எழுத்தின் மேல் ஆர்வமுள்ளவர்கள் இவருடைய வலைதளத்திற்குச் சென்று கட்டாயம் படியுங்கள். நேற்றும் இன்றும் நானும் என் குழந்தையும் இவருடைய வலைதளத்திற்குச் சென்று ரசித்தோம்.

…………………………………………………………………………………………………………………………………………………………………………….

ர்ப்ப்பை வாய் புற்றுநோய் சோதனைக்காக பன்னாட்டு நிறுவனங்கள் இந்தியப் பெண்களை பயன்படுத்துவதாக வினவில் இன்று படித்தேன். இதுகுறித்து 2010ல் மருத்துவர் புகழேந்தி கொடுத்த தகவலின் அடிப்படையில் அப்போது நான் பணியாற்றிய இதழில் இந்த கட்டுரையை எழுதியிருந்தேன். அப்போது ஆந்திரா, குஜராத் போன்ற மாநிலங்களில் பழங்குடியினப் பெண்களை இந்த சோதனைக்காக பயன்படுத்தியிருந்தார். அந்த சோதனையில் 3 பெண்கள் தடுப்பு மருந்து உட்கொண்டு பரிதாபதாக உயிரிழந்தார்கள். அந்த சமயத்தில் அதைப் பற்றி சில மாற்று இதழ்களில் கட்டுரைகள் வந்தன. ஆனால் இப்படி இந்தியப் பெண்கள் சோதனை எலிகளாக்கப்படுவது நிறுத்தப்படவில்லை. இப்போது தமிழகம்வரை இந்த சோதனைக்களம் விரிவுபடுத்தப்பட்டிருக்கிறது. இதைக் கண்டிக்க, இதைத் தடுத்த நிறுத்த ஏன் யாரும் அக்கறை காட்டவில்லை. அரசியல் கட்சிகள், சமூக ஆர்வலர்களுக்கு இதெல்லாம் பெரிய பிரச்னையாகப் படவில்லையா? நாளை நம் வீட்டுப் பெண்ணும் சோதனை எலியாக்கப்படலாம் என்பதை இவர்கள் உணர்வார்களா?

7 thoughts on “தமிழில் இயற்கை எழுத்தின் தொடர்ச்சி…

 1. ஒரு அருமையான, பயனுள்ள தளத்தை அறிமுகப்படுத்தியிருக்கிறீர்கள் நந்தினி. நானும் திரு ஜகந்நாதன் அவர்களின் வலைத்தளம் சென்று பல கட்டுரைகளைப் படித்தேன். படிக்கும்போது ஒரு வியப்பான இத்தனை நாள் எனக்குத் தெரியாத தகவல் ஒன்றும் கிடைத்தது.
  த ஹிந்துவில் (ஆங்கிலம்) My husband and other animals என்ற தலைப்பில் கட்டுரைகள் எழுதும் திருமதி ஜானகி லெனின் பற்றியும் அறிந்தேன். இவர் சென்னையில் பாம்பு பண்ணை அமையக் காரணமாக இருந்த திரு ரோமுலஸ் விட்டேகர் என்பவரின் மனைவி என்றும் அறிந்தேன். இந்தக் கட்டுரைகள் புத்தகமாக இப்போது வந்திருக்கிறது என்ற தகவலும் தெரிந்துகொண்டேன்.
  நிச்சயம் படிக்க வேண்டிய புத்தகம் இது.

  • பகிர்வுக்கு நன்றி ரஞ்சனி. My husband and other animals தவறாமல் படிப்பதுண்டு. ப.ஜெகநாதனின் எல்லா பதிவுகளுமே எனக்கு தகவல் களஞ்சியமாகத்தான் தெரிகின்றன.

 2. ஆராய்ச்சிக்காக தங்கள் உயிரை பணயம் வைக்கும் பெண்கள் பற்றி எழுதியிருக்கிறீர்கள். வெளிநாடுகளில் நடக்கும் பல ஆராய்ச்சிகளில் இந்திய மனிதர்கள் – ஆண் பெண், குழந்தைகள் ஈடுபடுத்தப்படுவது வருத்தத்திற்குரிய செய்தி. இந்தியர்களின் ஏழ்மையை பயன்படுத்தி அவர்களை பலிகடா ஆக்குகிறார்கள்.

  • ஏழைகளை மட்டுமல்ல, பிரபல தனியார் மருத்துவமனைகளும்கூட தங்களிடம் வரும் நோயாளிகளை வெளிநாட்டு மருந்து நிறுவனங்களுக்கு சோதனைகளுக்காக விற்பனை செய்கின்றன. அரசாங்கம் தலையிட்டு இத்தகைய முறைகேடுகளை தடுத்து நிறுத்தும்வரை நாம் விழிப்பாக இருப்பது நல்லது. நம்மைச் சுற்றியிருப்பவர்களுக்கும் இந்த விழிப்புணர்வை ஏற்படுத்தலாம்.

 3. பழங்குடிப் பெண்களை மருத்துவ ஆராய்ச்சிக்குப் பயன்படுத்தி வருவது உடனடியாகத் தடுத்து நிறுத்தப்பட வேண்டிய ஒன்று.

  • கருத்துக்கு நன்றி ராமலக்ஷ்மி. மக்களிடம் இதுபற்றி தொடர்ந்து எதிர்ப்பு கிளம்புவதை பார்த்தாவது அரசு இதுபோன்ற நடைமுறைகளை தடுத்து நிறுத்த வேண்டும்.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.