சமீப மழை நாளில் தோட்டத்து கீரைகளின் ஊடே பொன்னிறத்தில் மின்னிய அந்த சிறிய வண்டினைக் கண்டேன். முதலில் நெற்றியில் வைக்கும் பொட்டாக இருக்குமா என்று கையில் எடுத்து பார்க்கையில் இறக்கையை விரித்து தன்னை இனம்காட்டிக் கொண்டது அந்த வண்டு! பொதுவான பார்வைக்குள் விரியாமல் இருக்கும் பூச்சிகளின் உலகத்தை காண அன்று முதல் ஆர்வம் ஏற்பட்டது.
காண்பதை புகைப்படத்தில் பதிவு செய்வது எனக்குப் பிடித்த ஒன்று. கிட்டத்தட்ட ஒரு மாத கால மழையில் எங்கள் வீட்டுத் தோட்டத்தில் இதுவரை கவனித்திராத பூச்சிகள் சிலவற்றைக் கண்டேன். நினைவு தெரிந்ததிலிருந்தே பார்த்துக் கொண்டிருக்கும் வீட்டுச் சிலந்தியைக்கூட ஆர்வத்தோடு பார்க்கும்போது ரசிக்க முடிந்தது! வீட்டுச் சிலந்திகளில் எத்தனை வகைகள்…
ஒரு காலைப் பொழுதில் என்னைக் கடந்துபோன ஒரு வண்ணத்துப்பூச்சியின் வண்ணக்கோடுகளைக் கண்டு வியந்துவிட்டேன். இறக்கையின் மேலே கருப்பு வெள்ளையில் நீள் கோடுகள். விரிந்திருக்கும் கீழ் இறக்கையில் மஞ்சள், ஆரஞ்சு, சிவப்பு நிற கலவை. இறக்கையின் விளிம்பில் கருப்பு வெள்ளையில் கிடைமட்டக் கோடுகள். அத்தனை நேர்த்தியான வண்ணக்கலவையை தேர்ந்த ஆடை வடிவமைப்பாளர்களால்கூட உருவாக்க முடியாது! ஆனால் படமாக்கத்தான் முடியவில்லை. அதன் வேகத்துக்கு என்னால் ஈடுகொடுக்க முடியவில்லை.
தொடர்ந்து இவற்றையெல்லாம் புகைப்படத்தில் பதிவு செய்யலாம் என இருக்கிறேன். புகைப்படத்தில் பதிவு செய்யும் ஆர்வத்தை தூண்டிய காட்டுயிர் ஆராய்ச்சியாளர் ப. ஜெகநாதன் அவர்களுக்கு நன்றி சொல்ல விரும்புகிறேன்.