என் சிறு வயது பண்டிகைகாலங்கள் குறித்து மறக்க முடியாத நினைவலைகள் என்று எதுவும் இல்லை. பால்யத்தில் வெவ்வேறு ஊர்களில் வசிக்க நேர்ந்தது ஒரு காரணமாக இருக்கலாம். ஆனால் ஒரு வார கொண்டாட்டமாக பாட்டியுடன் இருந்த காலத்தில் என் அம்மாவின் ஊரில் கொண்டாடிய பொங்கல் நினைவுகள் எனக்குள் உண்டு. பக்கத்து ஊரில் மாடு விரட்டு போட்டி நடந்ததும் அதைக் காண திரண்டிருந்த மக்கள் வெள்ளத்தைப் பார்த்து மனதில் பயம் ஏற்பட்டதும் நினைவுக்கு வருகிறது. மற்றபடி இயற்கைக்கு நன்றி சொல்லும் திருநாளாகவோ புத்தாண்டாகவோ பொங்கல் என் வாழ்நாளில் இனித்ததில்லை. பொங்கல் மட்டுமல்ல எனக்கு எந்த பண்டிகை கொண்டாட்டத்திலும் ஆர்வம் கிடையாது. ஆனால் என் மகன் பொங்கல் போன்ற இயற்கையோடு தொடர்புபடுத்தப்படும் பண்டிகையை தெரிந்துகொள்ள வேண்டும் என்று விரும்பினேன். வலுக்கட்டாயமாக கடந்த 2 மூன்று ஆண்டுகள் சென்னையில் விறகடுப்பில் பொங்கலிட்டேன்! (விறகு அடுப்பில் பொங்கல் என்பதற்குத்தான் இந்த ஆச்சரியக்குறி) சூரிய பகவான் என் வாழ்க்கையில் மிகப் பெரிய ஆச்சரியங்களை நிகழ்த்தி விடவில்லைதான். ஆனாலும் எதையாவது கொண்டாட வேண்டுமே என்கிற சுய உந்துதல் காரணமாக பொங்கலை பொங்கிவிட நினைத்தேன். இப்படியாக இந்த ஆண்டும் பொங்கலிட நினைத்திருந்த நேரத்தில் என்னை வழக்கு வா வா என்று அழைத்தது. பாழடைந்து கொண்டிருக்கும் வீட்டின் ஒட்டடை அடிக்கவும் கரையான் புற்று எவ்வளவு தூரம் கிளம்பியிருக்கிறது என்று பார்க்கவும் கிளம்பியே ஆக வேண்டும் என்று தீர்மானித்தேன். மாமனாரிடம் ராசியாகிவிட்டபடியால் மாப்பிள்ளையும் வருகிறேன் என்றார், கூடவே மகனும்.
இறுதி நேர பயண முடிவால் தனியார் பேருந்தில் இருக்கை கிடைக்கவில்லை. நான் எப்போதும் அரசு பேருந்து பயணம் செய்பவள். போனோமா, வந்தோமா கதைதான். முதன் முறையாக அரசு பேருந்தில் செல்ல முன்பதிவு செய்து 11 மணிக்கு வரவேண்டிய பேருந்துக்காக 12.30 வரை காத்திருந்து, ஏகப்பட்ட கடுங்கோபத்துக்கு ஆளாகி என் மகனின் வால்த்தனங்களை இனியும் சகிக்க முடியாது என்கிற நிலையில் விசாரித்துப்பார்த்தால் அப்படியோரு பேருந்தே விடவில்லையாம். நிலையத்தில் இருந்த ஒரு அதிகாரி ஈயோடிக்கொண்டிருந்த ஒரு பேருந்தில் ஏற்றிவிட்டார். நினைத்துக் கொண்டேன், எப்போதுமே என் ஃபார்முலாதான் சரி… வந்தோமா..போனோமா…
குளிர் வாட்டியெடுக்க காலை 9 மணிக்குத்தான் ஊர் போய் சேர்ந்தோம். வழக்கம்போல் வீடு மேற்சொன்ன ஒட்டடை, கரையான் புற்று வர்ணனைகளோடுதான் இருந்தது. வசிக்கும் வீட்டை சுத்தமாக வைத்துக்கொள்ள ஏன் இந்த ஆண்களுக்கு (இந்திய ஆண்களுக்கு) எப்போதும் ஒரு பெண் தேவைப்படுகிறாள்? கேட்டால் தினமும் சுத்தம் செய்கிறேன் என சத்தியம் செய்கிறார் என் அப்பா.
என் அப்பாவுக்கு கேஸ் சிலிண்டரில் சமைக்க பயம். அம்மா இறந்த பிறகு கேஸ் சிலிண்டர்களை யாருக்காவது கொடுத்து விடுகிறார். எல்லாமே விறகு அடுப்பில்தான். நாங்கள் சென்ற பிறகு சிலிண்டர் வந்தது, பற்ற வைத்தால் கேஸும் வந்தது. அலறியடித்து மூடி வைத்துவிட்டோம். பனிக்கு குளிர்காய்ந்தபடியே சமைத்து உண்டோம். எனக்கு புகை சேர்ந்த உணவுகளில் அதிக விருப்பம் உண்டு. குறிப்பாக சுட்ட மாமிசம் மகிழ்ந்து உண்ணுவேன். அது இருக்கட்டும் விறகு அடுப்பில் சமைப்பதால் சூழல் பாதிக்கிறது என்கிறார்கள். வேறு வழியே இல்லாமல் அவசியதுக்காக அன்றாடம் பிழைக்க இதை பயன்படுத்துவோரே இங்கு அதிகம். அவசியமே இல்லாமல் அல்லது பகட்டை ஆடம்பரத்தைக் காட்ட வீட்டுக்கு இரண்டு கார், இரண்டு பைக் பயன்படுத்துகிறார்கள். இதனால் ஏற்படும் சூழலியல் மாசு ஏன் கணக்கில் கொள்ளப் படுவதில்லை. மாசுவிலும் இப்படிப்பட்ட நவீன மாசுவுக்குத்தான் மதிப்பா?
என் ஊர்க்கதைக்கு வருகிறேன்…மாமனார், மருமகன், பேரன் எல்லோரும் இம்முறை இன்பமாக இருந்தார்கள். முதன்முறையாக ஊரில் யாரும் எங்களை சாதிப் பேர் சொல்லி செல்லமாகவோ, கோபமாகவோ வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு தொடுக்கலாமா என்று யோசிக்கும் அளவுக்கு திட்டவில்லை! பாட்டாளிகளின் மண்ணில் இவ்வளவு விரைவில் ஓர் சமூகப் புரட்சி சாத்தியமென்று சத்யமாக நான் நேரம் விரயம் செய்து கனவுகூட காணவில்லை!
- கோசியின் செல்ஃபி
- கோசியின் செல்ஃபி
- கோழிக்கறி தயார்..
- கோசியும் பப்பியும்
- கோசியும் அப்பாவும்
- அதிகாலை காஃபி
- வயல்காட்டை சுற்றிப்பார்க்கும் சென்னைவாசிகள்