ஒரு கூடு, இரண்டு பறவைகள்!

தலைப்பைப் பார்த்ததும் ஏதோ காதல் கவிதை(பிப்ரவரி மாதம் ஆயிற்றே)க்கான தலைப்பென்று நினைக்கலாம். இல்லை, இது இரண்டு பறவைகளின் இருப்பிடப் பிரச்னை குறித்து! கடந்த பொங்கலின் போது கிராமத்து வீட்டருகே உள்ள தோட்டத்தில் கண்ட இந்தக் காட்சிகளை படம் பிடித்தோம். ஒரு பட்டுப்போன தென்னை மரத்தில் இருந்த பொந்தில் கூடமைத்து தங்கியிருந்த மைனாவின் வீட்டை ஆக்ரமித்துக் கொண்டது ஒரு கிளி. முதல் அதிகாலையில் பார்த்தபோது சில மைனாக்கள் இருந்த அந்த கூட்டில் சற்றே வளர்ந்திருந்த மைனா குஞ்சு ஒன்றும் இருந்தது. அந்த மைனா பெற்றோர் இல்லாத சமயத்தில், பகல் நேரங்களில் வெளியே வந்து அருகில் இருக்கும் மரக் கிளைகளில் அமர்ந்து கொண்டிருக்கும். இந்த நேரத்தில் அந்தக் கூட்டை ஆக்ரமித்துக் கொண்டது கிளி ஒன்று. கூடு பறிபோனதைப் பார்த்த மைனா குஞ்சு, கிளியிடம் போராடிப் பார்த்தது, கிளி விடுவதாக இல்லை. கிளி முட்டையிடும் காலத்தில் இருந்திருக்கலாம், கூட்டை வெகு நாட்கள் நோட்டம் விட்டு, சமயத்தில் கூட்டைப் பிடித்துக் கொண்டது. மைனா செய்வதறியாது அருகில் இருந்த தென்னை மரக் கிளையில் அமர்ந்து கொண்டிருந்தது. கிளி, மைனா இல்லாத நேரத்தில் கூட்டை விட்டுப் பறந்து அருகில் இருந்த வயலில் காய்ந்த சோளத்தை தின்றுவிட்டு மீண்டும் கூட்டுக்குள் அடங்கியது. கூடு, அருகிலேயே உணவுக்கு வசதி என கிளியின் தேர்வு எனக்கு வியப்பைத் தருகிறது. அடுத்தடுத்த நாட்களில் மைனா குடும்பம் தன் வீட்டைக் கைப்பற்ற முயற்சித்தும் இறுதிவரை கிளி விட்டுத் தருவதாக இல்லை. உண்மையில் கிளிகள்தான் அந்த பட்டுப்போன தென்னையில் முதன்முதலாக குடியேறி இருந்தன. எனவே கிளி ஆக்ரமித்தது என்று சொல்வதைவிட மீண்டும் தன் இடத்தைக் கைப்பற்றிக் கொண்டது என சொல்லலாம். மைனா குஞ்சும் தனியே வாழும் அளவில் வளர்ந்திருந்தது, எனவே அது ஒரு புது வீட்டை தேடிக் கொண்டிருக்கும்!

DSCN0265

DSCN0436

DSCN0508

DSCN0509

DSCN0439

DSCN0559படங்கள்: சண்முகசுந்தரம், நந்தினி

 

7 thoughts on “ஒரு கூடு, இரண்டு பறவைகள்!

  1. வணக்கம் நந்தினி! நாங்கள் எங்கள் வீட்டில் கூடு கட்டிய புறா குடும்பத்தை விரட்ட மனம் இல்லாமல் , அது குஞ்சு பெற்று , அது பறக்கும் வரை இருந்து விட்டு போகட்டும் என்று விட்டு விட்டோம்.. அது அந்த இடம் முழுக்க எச்சங்கள் ஆக்கியதையும் சகித்து கொண்டு அதை பெரிது பண்ணாது அவ்வப்பொழுது சுத்தம் செய்து கொண்டோம். முட்டையில் இருந்து குஞ்சு வெளி வந்து , பறக்கவும் ஆரம்பித்தது.. ஆனால் புறா குடும்பத்துக்கோ அவ்விடத்தில் இருந்து கிளம்ப மனமில்லை! விரட்டிய எங்களை திரும்ப விரட்டியது புறாக்கள்.. நாங்கள் புறாவின் வீட்டில் இருக்கிறோமா இல்லை புறா எங்கள் வீட்டில் இருக்கிறதா என்ற சந்தேகமே வந்து விட்டது! உங்களின் இந்த பதிவை படித்தவுடன் எங்களை விரட்டிய புறாக்கள் என் நியாபகத்திற்கு வந்து ஓடியது! வழக்கம் போல் அழகாக எடுக்கப்பட்ட புகைப்படங்கள்.. நன்றி!

  2. பாவம் பறவைகள்! அவைகளுக்குக் கூடு பற்றாக்குறை! இருக்கும் வெகுசில கூடுகளுக்குப் போராட வேண்டியிருக்கிறது. வலுவுள்ளது பிழைத்துக்கொள்கிறது. நல்ல வேளையாக மைனா குஞ்சு வளர்ந்து விட்டதால் பிரச்சினையில்லை. இல்லையேல் காக்காவுக்கு உணவாயிருக்கும். பொந்துக்குள் இருந்து எட்டிப்பார்க்கும் படங்கள் அழகோ அழகு! நான் வாசலில் போர்டிகோவில் அட்டை பெட்டிகள் பலவற்றை ஓட்டை போட்டுச் சிட்டுக்குருவிகள் குடித்தனம் நடத்தத் தொங்க விட்டிருக்கிறேன். இது வரை ஏழெட்டு முறை குஞ்சு பொரித்து வெளிவந்திருக்கின்றன. ஏதோ நம் சக உயிருக்கு நம்மால் முடிந்த உதவி! நட்புடன் கலையரசி

      • அன்பு நந்தினி,
        உங்களது இயற்கை எழுத்து என்ற பதிவு என்னை மிகவும் கவர்ந்தது. அதில் நீங்கள் குறிப்பிட்டிருந்த ப.ஜெகநாதனின் பறவைகள் கையேட்டைப் புத்தக காட்சியில் வாங்கிப் பறவைகள் பற்றித் தெரியாத விபரங்கள் தெரிந்து கொண்டேன். நல்ல புத்தகத்தைச் சிபாரிசு செய்த உங்களுக்கு என் முதல் நன்றி.
        தற்போது என் ஊஞ்சல் தளத்தில், ‘பறவை கூர் நோக்கல்-1 கரிச்சான்,’ (Bird Watching) என்ற பதிவைத் துவங்கியுள்ளேன். இக்கையேட்டின் துணையோடு பறவைகளுடனான என் நேசத்தை வெளிப்படுத்தும் பதிவு.
        அதற்கான இணைப்பு:- http://unjal.blogspot.in/2015/02/bird-watching-1.html
        உங்களுக்கு நேரம் கிடைக்கும் போது, அவசியம் என் தளத்துக்கு வந்து உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ள அன்புடன் அழைக்கின்றேன்.
        நட்புடன்,
        ஞா.கலையரசி

  3. தலைப்பு அருமை புகைப்படங்கள் வெகு அருமை. என் பெண்ணின் வீட்டின் பால்கனியில் உள்ள ஜன்னல் அருகில் புறா ஒன்று கூடு கட்டி கடந்த இரு வருடங்களாக வாழ்ந்து வருகிறது எல்லா இடங்களும் அடுக்கு மாடி கட்டிடங்கள் வந்தால் பறவைகள் தான் எங்கு கூடு கட்டும்? நம் வீட்டில் வாடகை இல்லாமல் இருந்துவிட்டுப் போகட்டுமே

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.