தமிழில் உயிரியல் புத்தகங்கள் உண்டா?

சமீபகாலமாக சூழலியல் சார்ந்தும் புத்தகங்கள் வருகின்றன. பெரும்பாலானவை மொழிபெயர்ப்புகளாக இருக்கின்றன. மொழிபெயர்ப்புகள் வருவதில்லை தவறு ஏதும் இல்லை. ஆனால் நம்முடைய சூழல் சார்ந்து, நம்முடைய வாழிடம் சார்ந்த அனுபவங்களை ஒட்டிய சூழலியல் பதிவுகள் மிகவும் குறைவாகவே உள்ளன. விரல்விட்டு எண்ணத்தக்க அளவிலேயே சூழலியல் எழுத்தாளர்கள் இங்கே எழுதுகிறார்கள்.  அப்படியெனில் இங்கே சூழலியல் சார்ந்து குறைவானவர்கள்தான் இயங்குகிறார்களா என்கிற கேள்வி எழலாம். ஏராளமானவர்கள் இருக்கிறார்கள்… சூழலியல் சார்ந்து இயங்கும் உயிரியாளர்கள், களப்பணியாளர்கள், ஆர்வலர்கள் போன்றோர் ஆங்கிலத்தின் ஊடாகவே எல்லாவற்றையும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறார்கள்.  அவர்கள் பயன்படுத்தும் ஆய்வு மாதிரிகள், கையேடு, மூலங்கள் என அனைத்தையும் ஆங்கிலத்தின் வழியாக பெறுகிறார்கள் . அந்தப் பாதையை ஒட்டியே ஆங்கிலத்தின் வழியாகவே தங்கள் பதிவுகளை செய்கிறார்கள். இறுதியில் பாடப் புத்தகங்களில் மட்டுமே மதிப்பெண்களுக்காக தாவரவியலையும் விலங்கியலையும் படிக்கிறோம். நம் வாழ்வியலை விட்டு அகன்றுவிடும் எதுவுமே இப்படி வழக்கொழிந்துதான் போகும். சங்க இலக்கியங்களில் பதிவு செய்யப்பட்ட சூழலியலின் தொடர்ச்சி எப்போது அறுபட்டது என்கிற கேள்வி இப்போது எனக்குத் தோன்றுகிறது. இதுகுறித்து ஆய்வு செய்யும் நேரத்தில் இரண்டு சூழலியல் கட்டுரைகளை தமிழில் எழுதிவிடலாம் என்பதால் இதைக் கைவிடுவதே உசிதம்.

சமீபத்தில் ஒரு நண்பகல் வேளையில் எங்கள் வீட்டின் தொட்டிச் செடியில் வழக்கத்துக்கு மாறான சிலந்தியைக் கண்டேன்.  வெள்ளை உடலின் பழுப்பு ரேகை ஓடிய தடம் அந்தச் சிலந்தியை மிக அழகான சிலந்தியாகக் காட்டியது. அதை தொந்திரவுக்கு உள்ளாக்காமல் சில புகைப்படங்கள் எடுத்துக் கொண்டேன். சில வாரங்கள் கழித்து மீண்டும் ஒரு நண்பகல் வேளையில் அதே இடத்தில் அதே வகையான சிலந்தியைக் கண்டேன். அங்கே இதே வடிவத்தை ஒத்த, முழு உடலும் பழுப்பில் அமைந்த வேறொரு சிலந்தியைக் கண்டேன். அதியும் புகைப்படங்களில் பதிவு செய்து கொண்டேன்.

இந்த சிலந்திகள் வீட்டில், ஏற்கனவே தோட்டத்தில் பார்த்த சிலந்திகளைப் போன்று இல்லை என்பதால் அவற்றைக் குறித்து தெரிந்து கொள்ள விரும்பினேன். இணையத்தின் வழியாக தகவல்களைப் பெற முடியவில்லை. ஆங்கிலத்தில்கூட இந்திய சிலந்திகள் பற்றி போதிய பதிவுகள் இல்லை என தெரிந்தது. இதுவரை இந்திய சிலந்திகள் பற்றி ஒரே ஒரு புத்தகம்தான் வந்துள்ளது. அதுவும் 2009ல் தான் வெளியாகியிருக்கிறது. அந்தப் புத்தகத்தின் பெயர் Spiders of India. இதற்கு முன் தொகுப்பு நூல்களில் சிலந்திகள் இடம்பெற்றிருந்திருக்கலாம். சிலந்தி பற்றி ஆய்வுகள் நடந்திருக்கின்றன, ஆனால் சிலந்திகள் பற்றிய முழுமையான நூல் இது ஒன்றுதான். நான் தேடியவரை இது ஒன்றுதான். இந்தப் புத்தகமும் அதைத்தான் சொல்கிறது.

spider of India

கொச்சின் சேக்ரட் ஹார்ட் கல்லூரியைச் சேர்ந்த ஆய்வாளர் P.A. Sebastian மற்றும் கேரள வேளாண்பல்கலைக் கழகத்தின் முன்னாள் துணை வேந்தர் K.V. Peter எழுதிய இந்த நூல் இந்திய சிலந்திகள் குறித்த முழுமையான தகவல்களைத் தருகிறது. மொத்தம் 734 பக்கங்கள். இந்தியாவில் பதிவு செய்யப்பட்ட 1520 வகையான சிலந்திகளின் விவரங்கள் இதில் பெறலாம். விவரங்கள் முழுமையானவை அல்ல, இந்திய சிலந்திகள் பற்றிய ஆரம்ப நூல் என்பதால் எல்லா விவரங்களையும் எதிர்பார்க்க முடியாதுதான். பின் இணைப்பில் பல சிலந்தி வகைகளின் வண்ணப்படங்கள் தரப்பட்டுள்ளன. சிலந்திகளின் பரிணாம வளர்ச்சியிலிருந்து சிலந்தி வலைப் பின்னல் அமைப்பு, சிலந்தி வலை நூலின் தொழிற்நுட்பம், உடல் அமைப்பு என அடிப்படைத் தகவல்களை இந்த நூலில் பெறலாம்.  சிலந்திகள் பற்றிய ஆய்வில் இருப்பவர்கள், ஆர்வலர்களுக்கு உகந்த நூல். விலை ரூ. 1000லிருந்து ரூ. 1500க்குள் அமேசானில் வாங்கலாம்.

DSCN2046

Oxyopes lineatipes

 

DSCN2098

Oxyopes shweta

 

நான் கண்ட சிலந்திகளின் பெயர்கள் Oxyopes shweta, Oxyopes sunandae, Oxyopes lineatipes. புல்வெளிகள், சிறிய புதர்களில் வாழும் இவை. இவற்றில் ஆணைவிட பெண் இனங்கள் சற்று பெரிதானவை. இந்தியா, சீனாவை வாழிடமாகக் கொண்டவை. இதில் Oxyopes sunandae  இந்தியாவை மட்டும் வாழிடமாகக் கொண்டது, அழிந்துவரும் உயிரினமாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. உடல் பகுதி வெளிர் பச்சை நிறத்தி அமைந்த Oxyopes lineatipes சிலந்தி இந்தியா, சீனாவிலிருந்து பிலிப்பைன்ஸ், ஜாவா, சுமத்ரா வரை பரவியுள்ளன என்கிறது இந்த நூல். ஒரு கிளையை அல்லது இலையை சுற்றி மெல்லிய வலைகளைப் பின்னி, தங்களுடைய இரைகளை இவை பிடிக்கின்றன. பகல் வேளைகளில் இந்த சிலந்திகள் இரை தேடும், அதனால் அந்த நேரங்களில் இவற்றைக் காணலாம்.

அழிந்துவரும் உயிரினம் ஒன்று எனக்கு அருகிலேயே உள்ளதை தெரிவித்தது இந்தப் புத்தகம். ஒரு சில தொட்டிச் செடிகள் இவற்றை வாழ வைத்திருக்கின்றன. செடிகள் வெட்டி, ஒழுங்கு செய்யும்போது இனி இவைகளைப் பற்றியும் கவனம் கொள்வேன்.

 

 

 

 

பார்ப்பனர் என சுட்டுவதுகூட சினிமா விமர்சகர் பரத்வாஜ் ரங்கனுக்கு கொந்தளிப்பை ஏற்படுத்துகிறது!

சமீபத்தில் கல்யாண் ஜுவல்லரியின் அச்சு விளம்பரம் ஒன்றில் அரச கமீரத்துடன் அமர்ந்திருக்கும் ஐஸ்வர்யாவுக்கு ஒரு சிறுவன் குடை பிடிப்பதாக சித்தரிக்கப்பட்டிருந்தது. சிறுவர் பணிக்கு அமர்த்தப்படுவது ஒழிக்கப்பட்ட இந்த காலத்தில் இப்படியான விளம்பரங்கள் அதை ஊக்குவிப்பதாக அமையும் என சமூக ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்தனர். அந்த விளம்பரத்தின் நுண்ணிய அரசியலே குடை பிடிக்கும் சிறுவன் கறுப்புத் தோலுடயவான சித்தரித்ததில்தான் இருந்தது. அதையும் சுட்டிக் காட்டி ஊடகங்களில் விமர்சனம் எழுந்த பிறகு. ஐஸ்வர்யா தன்னுடைய பங்கை விளக்கினார். நகைக்கடை நிறுவனம், வேறு வழியில்லாமல் மன்னிப்புக் கேட்டது. பிரச்னை முடிந்துவிட்டது! ஆனால் என்னால் அந்த விளம்பரத்தை அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியாது. அதில் இருந்த சிறுவன், என் மகனை நினைவு படுத்தினான். அரச குமாரிக்கு குடை பிடிக்கும் சிறுவனாக என் மகனை ஒரு கணம் நினைத்துப் பார்த்தபோது, என் மனம் வலித்தது. நிச்சயம் இந்த விளம்பரத்தை வடிவமைத்தவர்கள், எம்மைப் போன்ற கறுப்பினத்தவராக இருந்திருக்க முடியாது. வெள்ளைத் தோலில், சாதியின் உச்சியில் நிற்பதாக பரவசம் கொள்ளும் பார்ப்பன மேட்டிக்குடிகளாகத்தான் இருக்க முடியும்.

நூறாண்டுகளுக்கு முன் உங்களுக்கு குடை பிடித்ததை, சமத்துவ சமூகம் நிலை நாட்டப்பட்டுவிட்டதாக சொல்லப்படும் இந்த நூற்றாண்டிலும் நினைவு படுத்தி எங்களை இழிவு படுத்துகிறீர்கள் மிஸ்டர் பரத்வாஜ். ஆனால் மனிரத்னம்  இயக்கிய ’ஓ காதல் கண்மணி’ படத்தில் பார்ப்பனர்கள் வாழ்க்கை சித்தரிக்கப்பட்டுள்ளது என்கிற ஒற்றைவரியை சினிமா விமர்சகர்கள் சொல்லும்போது அது உங்களுக்குள் கொந்தளிப்பை ஏற்படுத்துகிறது. உடனே தமிழ் சினிமாவில் வர்க்கமும் சாதியும் என்று கட்டுரை எழுதுகிறீர்கள். உங்கள் கொந்தளிப்புக்கு களம் அமைத்துக் கொடுக்கிறது தி இந்து.  உங்களுடைய பல சினிமா விமர்சனங்களில் பிற்போக்குத்தனமான போக்குகளை சுட்டி எழுதுவீர்கள், பெண்களைப் பற்றிய மோசமான சித்தரிப்புகளையும் நீங்கள் கோடிட்டி காட்டுவீர்கள். உங்கள் மீது மதிப்பிருந்தது. ஆனால் தி இந்துவின் நடுப்பக்கத்தில் நீங்கள் எழுதிய கட்டுரை, உங்களுடைய பார்ப்பன ஒரிஜினை, பார்ப்பன மேலாதிக்கத்தை அருமையாக எனக்கு உணர்த்திவிட்டது மிஸ்டர் பரத்வாஜ்! தமிழ் சினிமாவில் பார்ப்பனர்கள் கேலிக்குரியவர்களாக சித்தரிக்கப்படுகிறார்கள், பார்ப்பன பின்னணியில் கதைக்களம் அமைவது சினிமாக்காரர்களுக்குப் பிடிக்கவில்லை. ’ஓ காதல் கண்மணி’யில் முக்கிய கதாபாத்திரங்கள் பார்ப்பனர்களாக சித்தரிக்கப்படுவதில் என்ன தவறு இருக்கிறது, இறுதியாக வர்க்கமும் சாதியும் சினிமாவில் சாதியைக் காட்டுவதாலோ, சினிமா விமர்சனத்தில் அதை சுட்டுவதலோ அழிந்துவிடுவதில்லை என்று முடிகிறீர்கள்.

இதில் ஒரு முத்தை சுட்டிக்காட்ட விரும்புகிறேன்…அந்தக் கட்டுரையில் வேலையில்லா பட்டதாறி படத்தைப் பற்றியும் எழுதியிருக்கிறீர்கள். தனுஷுக்கு அருண் சுப்ரமணியன் என்கிற பார்ப்பன வில்லன்  வெகுஜெனங்களை திருப்தி படுத்துவதற்காக தேவைப்படுகிறார் என்றும் இதனால்தான் நம் கதாநாயகர்கள் ஒழுங்காக படிக்காதவர்களாக இருந்தும், ஆங்கிலம் பேசத் தெரியாதவர்களாக, ப்ளூ காலர் வேலைக்குச் செல்பவர்களாக காட்டப்படுகிறார்கள் என்றும் கட்டுரையின் ஒரு பத்தியில் வருகிறது. (ஆனால் அந்தப் படத்தில் தனுஷ் ஒயிட் காலர் வேலை செய்பவராகக் காட்டப்படுகிறார்..) நீங்கள் பார்ப்பனர் அல்லாதவர் மீது எத்தகைய காழ்ப்பில் இருக்கிறீர்கள் என்பதை கோடிட்டு காட்டும் வரிகள் இவை. அதாவது இடஒதுக்கீடுக்கு எதிரான கருத்தை வலியுறுத்துகிறீர்கள். ஆமாம் எங்களால் ஆங்கிலம்  பேச முடியாது, அல்லது சரிவர பேச முடியாது,  பள்ளி- கல்லூரிகளில் சராசரியாக 60 சதவீத மதிப்பெண் பெறுவதே எங்கள் தலைமுறையினருக்கு பெரிய சாதனையாக இருக்கும். ஏனெனில் என் அம்மா-அப்பா எட்டாம் வகுப்பை தாண்டாதவர்கள், என் தாத்தாவுக்கு படிக்கத் தெரியாது, என் தாத்தாவின் தாத்தாவின் வரலாறே எனக்குத் தெரியாது(வரலாறு எழுதுமளவுக்கு எழுத்தறிவு எங்கள் பரம்பரைக்கே கிடையாது!). இப்படியிருக்க என்னால் ஆங்கிலம் பேசவோ, 90 சதவீத மதிப்பெண் பெறவோ நிச்சயம் முடியாது. அதற்காக எங்களை கீழானவர்கள் என்று நீங்கள் வலியுறுத்துவதை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது. காலம்காலமாக எங்களை சிறுமைப் படுத்தினீர்கள். இப்போதும் அதிகார மையங்களில் அமர்ந்து எங்களை சிறுமைப்படுத்திக் கொண்டுதான் இருக்கிறீர்கள், இதற்கு எதற்கு முற்போக்கு வேடம்? உங்கள் வேடம் களைந்தது மிஸ்டர் பரத்வாஜ்!

 

பதிப்புக்கு பின் மேம்படுத்தியது: திரு. பரத்வாஜ் ரங்கன் ,  ‘ஓ கா. க’ படத்தின் விமர்சனத்தில் படத்தின் பார்ப்பன பின்னணியை சுட்டிக்காட்டியபோது, ஏன் படத்திற்கு பார்ப்பன முத்திரையை தருகிறீர் என விமர்சனத்திற்கு கருத்திட்டவர்கள் சுட்டிக் காட்டியதாகவும் அதற்காகத்தான் நடுப்பக்கக் கட்டுரையை எழுதியதாகவும் என்னுடைய கமெண்ட் பதிவுக்கு பதிலளித்து தன்னுடைய வலைப்பதிவில் சுட்டிக்காட்டியுள்ளார்.

முதலாவதாக நான் நாளிதழில்தான் கட்டுரையைப் படித்தேன், தி இந்துவின் இணையதளத்திலோ, திரு. ரங்கனின் வலைப்பதிவிலோ அல்ல. அதனால் விமர்சனத்துக்கு எத்தகைய எதிர்வினை வந்தது என்பது எனக்குத் தெரியாது. அதோடு, திரு. ரங்கனின் விமர்சனத்தை இந்துவில் படித்தேன். அவர் சுட்டிக்காட்டியிருக்கும் விமர்சன வரிகளில் ஆட்சேபத்துக்கு இடமில்லை. பார்ப்பனர் வாழ்வியலை படமாக்குவது குறித்தும் அதை ரசிப்பது குறித்தும் எனக்கு எந்த காழ்ப்பும் இல்லை.

திரு. ரங்கன் சுட்டிக்காட்டியது போன்றே மற்ற விமர்சகர்களும் ’ஓ. கா. க’வின் பார்ப்பன பின்னணி குறித்து சுட்டிக்காட்டியிருக்கிறார்கள் என்பதை இங்கே நினைவுபடுத்த விரும்புகிறேன்.

எல்லாவற்றுக்கும் மேலாக சினிமா விமர்சனத்துக்கு வந்த விமர்சனத்துக்காக திரு. பரத்வாஜ் ரங்கனுக்கு தி இந்துவின் நடுப்பக்கத்தில் கொதித்தெழுந்து எழுத வேண்டிய தேவை ஏன் ஏற்பட்டது? அவர் வழக்கமாக எழுதும் மெட்ரோ பிளஸ் பத்தியிலேயே அதை எழுதியிருக்கலாமே! அவர் கொடுத்த முக்கியத்துவம், கட்டுரையில் இருக்கும் நுண் அரசியல் அல்லது பார்ப்பனர்களின் பிரதிநிதியாக அவர்களின் உளவியலை பிரதிபலிக்கும் கருத்துகளுக்கு என்னுடைய கருத்தை பதிந்திருக்கிறேன். அதோடு நாம் மதிக்கும் ஒருவரிடமிருந்து இப்படியான கருத்துக்கள் வருவது அதிர்ச்சியானதும்கூட!

சினிமாக்களில் பார்ப்பனர் சித்தரிப்பு பற்றி தனி கட்டுரையே எழுதலாம். அதில் பாஸிட்டிவ்வான சித்தரிப்புகள்தான் அதிகமாக இருக்கும். அதையே ஒடுக்கப்பட்ட/ கீழ்சாதிகள் பற்றி எடுத்துக் கொள்ளுங்கள்…பெரும்பாலானவை நெகட்டிவ்வான சித்தரிப்புகள்தான். திரு.ரங்கனுக்கு ஏற்பட்ட ஒரிரு சம்பவங்களை வைத்து எல்லாருமே பார்ப்பனர்களை வெறுக்கிறார்கள் என்கிற முடிவுக்கு வந்துவிடக் கூடாது. அவர் சுட்டும் ஒரு சம்பவத்திலேகூட பெரும்பான்மையான மக்கள் பார்ப்பனர் அல்லாதவர்களாக இல்லாதபோது ‘பார்ப்பனர்களாக’ புரிந்துகொள்ளப்படும் பெயர்களை ஏன் கதாநாயகனுக்கு சூட்ட வேண்டும்? அப்படியான பெயர்கள் வேண்டாம் என மறுப்பதில் என்ன தவறு இருக்கிறது? பார்ப்பனர்களின் வாழ்வியலை பற்றிய கதைக்களம் அமையும்போது அவர் அவராக வருவதில்தான் எதார்த்தம் இருக்கும். அதுபோல பெரும்பான்மை சமூகத்தைச் சேர்ந்தவனாக ஒரு கதாநாயகனை உருவாக்கும்போது அவனுக்குரிய பெயரை வைப்பதுதானே சரி…திரு. ரங்கன் குறிப்பிடுவது போல ஆங்கிலம் பேசத் தெரியாத, பள்ளிக்கூடம் போகாத, டீக் கடையில் வேலை பார்க்கும் கதாநாயகனுக்கு ராகுல் என்று பெயர் வைத்தால் நன்றாகவா இருக்கும்?!

திராவிட அரசியல்வாதிகள் அவர்களுக்கு கூட்டாளியாக விரும்பும் சினிமாக்காரர்கள் பார்ப்பன எதிர்ப்பை திட்டமிட்டு மக்கள் மத்தியில் உருவாக்குகிறார்கள் என்பதும் ஏற்றுக் கொள்ளக்கூடியதல்ல.

குமுதம்-வைரமுத்து-ஜெயகாந்தன்

குமுதம்-வைரமுத்து-ஜெயகாந்தன் சர்ச்சையில் வைரமுத்துவை இந்த அளவுக்கு தூற்ற அவசியமில்லை. காலம்காலமாக ஒரு தொடரை பிரபலமாக்கும் பொருட்டு பிரபலங்களின் பாராட்டை கேட்டு வாங்கிப் போடுவது இதழியலில் இருந்து வருவதுதான். தமிழில் ’அ’ கூட தெரியாத பல நடிகைகள் ஒரு தொடரை பாராட்டி இருப்பார்கள். ஊடக பணிக்குச் சேர்ந்த புதிதில், (2005 ஆக இருக்கலாம்) நடிகை மீனாவின் கையெழுத்தைப் போட்டிருக்கிறேன், ஜெயகாந்தனைப் போல பிரபலங்களும் இதற்கு ஒப்புக்கொள்வார்கள். இந்த முறை இதுபோன்ற பிரபலமாக்கும் உத்தி சர்ச்சையாகி இருக்கிறது. என்னுடைய கேள்வியெல்லாம்…இதற்கு முழுகாரணமும் வைரமுத்து மட்டும்தானா என்பதுதான்!

இதைப் போன்ற நடைமுறைகள் இதழியல் அறத்துக்கு எதிரானவை என்பதில் சந்தேகமில்லை. ஊடக பணிக்குச் சேர்ந்த புதிதில் இதழியல் அறம் குறித்தெல்லாம் தெரிந்து வைத்திருக்கவில்லை.  அறத்தோடு இருக்க வேண்டும் என்றால் எந்த இதழிலும் வேலை பார்க்க முடியாது என்பதும் உண்மை. ஆனாலும் அவரவர் சார்ந்து குறைந்தபட்ச அறத்துடன் நடந்துகொள்ளப் பார்க்கிறோம். சரி, வைரமுத்து விவகாரத்துக்கு வருகிறேன். வைரமுத்து விளம்பரப் பிரியராக, விருதுகளை விலை கொடுத்து வாங்குபவராக இருக்கலாம்.  ‘நானேதான் ஜெயகாந்தனிடன் எழுதிக் கேட்டேன்’ என அவர் சொல்லலாம். ஆனால் ஜெயகாந்தனின் மகன் தீபா, ’அவரால் கையெழுத்துக்கூட போட முடியவில்லை. அதனால் ஏற்கனவே எங்களிடம் இருக்கும் கையெழுத்தின் நகலை பயன்படுத்திக் கொள்கிறோம் என்று சொன்னார்கள்’ என்று குறிப்பிடுகிறார்.  பிரபலங்களின் கையெழுத்து நகலை யார் வைத்திருப்பார்கள்? எனக்குத் தெரிந்து ஊடகங்கள்தான் வைத்திருக்கும்.

படுத்த படுக்கையில் இருக்கும் பிரபலத்தால் கையெழுத்திட முடியாது என்பது தெரிந்தும் தகிடுதத்தங்கள் செய்து இதழில் வெளியிட்டு பிரபலம் தேடிக்கொண்ட குமுதம் தான் இதற்கு முதன்மையான காரணகர்த்தா. குமுதம் மேலுள்ள கரிசனமா அல்லது குமுதத்தின் தேவை தங்களை முன்னிறுத்திக் கொள்ள இப்போதும், எதிர்காலத்திலும் தேவை என்பதாலேயே வைரமுத்து நோக்கியே எல்லா ஏவுகணைகளும் செல்வதை யூகிக்க முடிகிறது. வைரமுத்து மேலிருக்கும் விமர்சனங்களும் இன்னும் சிலரை வைரமுத்துவை மட்டுமே குற்றவாளி ஆக்கி பார்க்க வைக்கிறது.

 

அம்பேத்கரின் 125வது பிறந்த நாளை மிகச் சிறப்பாக கொண்டாடியது யார்?

நாங்கள் மனித மாண்பு காக்கவும், சுயமரியாதைக்காகவுமே போராடுகிறோம். மனிதனை ஒரு முழு மனிதனாக மாற்றுவதற்காக, நாங்கள் எந்தத் தியாகத்தையும் செய்யத் தயாராக இருக்கிறோம். இந்தப் பத்திரிகையாளர்கள், கடந்த நாற்பதாண்டுகளாக என்னை வதைத்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் இன்றுவரை என்னை எவ்வளவு மோசமாக சித்தரிக்கிறார்கள் தெரியுமா? அவர்கள் இனியாவது இந்த முட்டாள்தனத்தைக் கைவிட்டு, நேர்மையுடன் சிந்திக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன். 15.10.1956 அன்று மாபெரும் மதமாற்ற நிகழ்வையொட்டி அம்பேத்கர் ஆற்றிய உரை…

ambedkar_340 ஏப்ரல் 14, அம்பேத்கரின் 125வது பிறந்த நாள். இந்திய சமூகத்தின் மிகச் சிறந்த புரட்சியாரை, அறிவிஜீவியை நாம் எப்படி கொண்டாடி இருக்க வேண்டும்? ஆனால் எப்படி கொண்டாடிக் கொண்டாடி இருக்கிறோம்? திராவிடர் கழகத்திலிருந்து வரும் உண்மை இதழ் தவிர, வெகுஜென, சிறுபத்திரிகை எதுவும் சிறப்பு மலர் அல்லது சிறப்பு கட்டுரையைக்கூட வெளியிட்டதாகத் தெரியவில்லை. முதல் இந்துத்துவ அரசு(!) தவிர்க்க இயலாமல் முழுபக்க விளம்பரத்தில் மங்கிய புகைப்படத்தை வெளியிடுகிறது, அதுவும் அம்பேத்கர் பவுண்டேஷன் என்ற பெயரில்… பார்ப்பன  ஊடகங்கள் அம்பேத்கர் பிறந்த நாளை வழக்கம்போல ’ஒதுங்கியிருந்தே’ கொண்டாடின. ‘ஒதுங்கியிருந்தே’ என்பதை ‘ஒதுக்கி’ என்றும் கொள்ளலாம். முத்துராமலிங்க தேவர், சர்தார் பட்டேல்களை மிகைப்படுத்தி, திரித்து நாயக பிம்பங்களாக நிறுத்தும் பணியை செய்யும் ஊடகங்கள் உண்மையான மக்கள் நாயகனை வெறுமனே மறைந்த அரசியல்வாதியாக, அரசியல் கட்சிகளின் வருடாந்திர நிகழ்வாக பிறந்த நாளில் மாலையிட்டு நினைவுகொள்ளும் சிலையான தலைவராக மட்டுமே முன்நிறுத்துகின்றன. இன்றைய தலைமுறைக்கு அம்பேத்கரை இரட்டடிப்பு செய்து ஊடகங்கள் அறிமுகப்படுத்துகின்றன.

தேவர் ஜெயந்திக்கு வண்ண புகைப்படங்களுடன் மூன்று பக்கங்களில் கவரேஜ் தந்த தினமணி, அம்பேத்கரின் பிறந்த நாளில் புகைப்படத்தைக்கூட பெரியதாக பிரசுரிக்கவில்லை. தலைவர்கள் செலுத்திய அஞ்சலி கருப்பு/வெள்ளையில் செய்தியாகிறது. பாஜக செலுத்திய சம்பிரதாய அஞ்சலி தலித்துகளின் ஓட்டுகளுக்காகத்தான் என்கிற காங்கிரஸின் செய்தி முக்கியத்துவம் பெறுகிறது. தி இந்து (ஆங்கிலம்) அரசியல் கட்சித் தலைவர் செலுத்திய சம்பிரதாய அஞ்சலியைக்கூட கண்டித்து ஓட்டுக்காக ஏன் மாலை போடுகிறீர்கள் என கார்ட்டூன் போட்டு கண்டிக்கிறது. காங்கிரஸ்காரரான சர்தார் வல்லபாய் பட்டேலுக்கு பாஜக அரசு  ரூ. 600 கோடி செலவில் உலகிலேயே மிகப் பெரிய சிலையை நிறுவ அடிக்கல் நாட்டுகிறது. இந்த விலை பட்டேலின் இந்துத்துவ முகத்துக்கு என்பதை மக்கள் அறிவார்கள் என நம்புகிறேன்.

ஆட்சிப் பிடிப்பதில் அடுத்தடுத்த திட்டங்களோடு தயாராக இருக்கும் தமிழகத்தின் மூத்த அரசியல் தலைவர் கருணாநிதி, அம்பேத்கரின் பெயரைக்கூட உச்சரிக்கவில்லை! அவருக்கு இப்போது தேவைப்படுவது ராமானுஜரே, அம்பேத்கர் அல்ல என்பதை நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது. கிரேக்கத்து சிங்கம் வைகோ, கலிங்கப்பட்டியில் அம்பேத்கர் சிலை மாலை அணிவிக்கவில்லை, இதே சிங்கம் முத்துராமலிங்க தேவரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய காட்சி வண்ணப்படங்களுடன் பத்திரிகையில் வெளியானது. திருமாவளவனாவது அம்பேத்கரை நினைவுபடுத்தி ஒரு அறிக்கையாவது விடுவார் என நினைத்தால், மாலை அணிவித்து மரியாதை செய்ததோடு தனக்கும் அம்பேத்கருக்கும் யாதொரும் பந்தமும் இல்லை என்று சொல்லிவிட்டார்.  காங்கிரஸ்காரர்கள் அம்பேத்கரின் 125வது பிறந்த நாளை கொண்டாட பல்வேறு போட்டிகளை நடத்துவோம் என்று அறிக்கை விட்டார்கள். எதிர் நிலையில் நின்று அரசியல் பேசும் பாமக நிறுவனர் ராமதாஸ்கூட தைலாபுரம் தோட்டத்தில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்கிறார்.  யாரெல்லாம் அம்பேத்கரை நினைக்கிறார்கள், பாருங்கள்!

முற்போக்கு  கட்சிகளாக முன்னிறுத்தி முன்னேறியவர்களுக்கு இன்று தேவைப்படுவது சாதி, மதத்தின் அடிப்படையிலான அரசியல் அதிகாரம். தமது அதிகார நலன்களுக்காக இவர்கள் எதையும் செய்யத் துணிவார்கள். தற்போதைய அரசு தலையில்லாத அரசு, ஊழல் அரசு என்பதையும் இது அகற்றப்பட வேண்டும் என்பதையும் மக்களிடம் கொண்டு சேர்க்கும் போது கடந்த கால அரசுகளின் ஆட்சி பற்றியும் முன்னாள் ஆட்சியாளர்களான அவர்கள் ஆட்சியைப் பிடிக்க எப்படிப்பட்ட வேடங்களை தறித்துக்கொண்டிருக்கிறார்கள் என்பதையும்தான் சொல்ல வேண்டும். இதுவே அவராக இருந்தால் எப்படி இருந்திருக்கும்? அவர் எப்போதும் அவர்தான் என்று நிறுவுவதன் மூலம் அறிவுஜீவிகள் என்று சொல்லிக்கொள்பவர்கள் மீண்டும் ஒரு சோதனையை தமிழக மக்கள் மீது திணிக்கப்பார்க்கிறார்கள். உண்மையில் யார்தான் ஆபத்தானவர்கள்…ஊடகங்களா? அரசியல்வாதிகளா? அறிவுஜீவிகளா?