அம்பேத்கரின் 125வது பிறந்த நாளை மிகச் சிறப்பாக கொண்டாடியது யார்?

நாங்கள் மனித மாண்பு காக்கவும், சுயமரியாதைக்காகவுமே போராடுகிறோம். மனிதனை ஒரு முழு மனிதனாக மாற்றுவதற்காக, நாங்கள் எந்தத் தியாகத்தையும் செய்யத் தயாராக இருக்கிறோம். இந்தப் பத்திரிகையாளர்கள், கடந்த நாற்பதாண்டுகளாக என்னை வதைத்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் இன்றுவரை என்னை எவ்வளவு மோசமாக சித்தரிக்கிறார்கள் தெரியுமா? அவர்கள் இனியாவது இந்த முட்டாள்தனத்தைக் கைவிட்டு, நேர்மையுடன் சிந்திக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன். 15.10.1956 அன்று மாபெரும் மதமாற்ற நிகழ்வையொட்டி அம்பேத்கர் ஆற்றிய உரை…

ambedkar_340 ஏப்ரல் 14, அம்பேத்கரின் 125வது பிறந்த நாள். இந்திய சமூகத்தின் மிகச் சிறந்த புரட்சியாரை, அறிவிஜீவியை நாம் எப்படி கொண்டாடி இருக்க வேண்டும்? ஆனால் எப்படி கொண்டாடிக் கொண்டாடி இருக்கிறோம்? திராவிடர் கழகத்திலிருந்து வரும் உண்மை இதழ் தவிர, வெகுஜென, சிறுபத்திரிகை எதுவும் சிறப்பு மலர் அல்லது சிறப்பு கட்டுரையைக்கூட வெளியிட்டதாகத் தெரியவில்லை. முதல் இந்துத்துவ அரசு(!) தவிர்க்க இயலாமல் முழுபக்க விளம்பரத்தில் மங்கிய புகைப்படத்தை வெளியிடுகிறது, அதுவும் அம்பேத்கர் பவுண்டேஷன் என்ற பெயரில்… பார்ப்பன  ஊடகங்கள் அம்பேத்கர் பிறந்த நாளை வழக்கம்போல ’ஒதுங்கியிருந்தே’ கொண்டாடின. ‘ஒதுங்கியிருந்தே’ என்பதை ‘ஒதுக்கி’ என்றும் கொள்ளலாம். முத்துராமலிங்க தேவர், சர்தார் பட்டேல்களை மிகைப்படுத்தி, திரித்து நாயக பிம்பங்களாக நிறுத்தும் பணியை செய்யும் ஊடகங்கள் உண்மையான மக்கள் நாயகனை வெறுமனே மறைந்த அரசியல்வாதியாக, அரசியல் கட்சிகளின் வருடாந்திர நிகழ்வாக பிறந்த நாளில் மாலையிட்டு நினைவுகொள்ளும் சிலையான தலைவராக மட்டுமே முன்நிறுத்துகின்றன. இன்றைய தலைமுறைக்கு அம்பேத்கரை இரட்டடிப்பு செய்து ஊடகங்கள் அறிமுகப்படுத்துகின்றன.

தேவர் ஜெயந்திக்கு வண்ண புகைப்படங்களுடன் மூன்று பக்கங்களில் கவரேஜ் தந்த தினமணி, அம்பேத்கரின் பிறந்த நாளில் புகைப்படத்தைக்கூட பெரியதாக பிரசுரிக்கவில்லை. தலைவர்கள் செலுத்திய அஞ்சலி கருப்பு/வெள்ளையில் செய்தியாகிறது. பாஜக செலுத்திய சம்பிரதாய அஞ்சலி தலித்துகளின் ஓட்டுகளுக்காகத்தான் என்கிற காங்கிரஸின் செய்தி முக்கியத்துவம் பெறுகிறது. தி இந்து (ஆங்கிலம்) அரசியல் கட்சித் தலைவர் செலுத்திய சம்பிரதாய அஞ்சலியைக்கூட கண்டித்து ஓட்டுக்காக ஏன் மாலை போடுகிறீர்கள் என கார்ட்டூன் போட்டு கண்டிக்கிறது. காங்கிரஸ்காரரான சர்தார் வல்லபாய் பட்டேலுக்கு பாஜக அரசு  ரூ. 600 கோடி செலவில் உலகிலேயே மிகப் பெரிய சிலையை நிறுவ அடிக்கல் நாட்டுகிறது. இந்த விலை பட்டேலின் இந்துத்துவ முகத்துக்கு என்பதை மக்கள் அறிவார்கள் என நம்புகிறேன்.

ஆட்சிப் பிடிப்பதில் அடுத்தடுத்த திட்டங்களோடு தயாராக இருக்கும் தமிழகத்தின் மூத்த அரசியல் தலைவர் கருணாநிதி, அம்பேத்கரின் பெயரைக்கூட உச்சரிக்கவில்லை! அவருக்கு இப்போது தேவைப்படுவது ராமானுஜரே, அம்பேத்கர் அல்ல என்பதை நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது. கிரேக்கத்து சிங்கம் வைகோ, கலிங்கப்பட்டியில் அம்பேத்கர் சிலை மாலை அணிவிக்கவில்லை, இதே சிங்கம் முத்துராமலிங்க தேவரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய காட்சி வண்ணப்படங்களுடன் பத்திரிகையில் வெளியானது. திருமாவளவனாவது அம்பேத்கரை நினைவுபடுத்தி ஒரு அறிக்கையாவது விடுவார் என நினைத்தால், மாலை அணிவித்து மரியாதை செய்ததோடு தனக்கும் அம்பேத்கருக்கும் யாதொரும் பந்தமும் இல்லை என்று சொல்லிவிட்டார்.  காங்கிரஸ்காரர்கள் அம்பேத்கரின் 125வது பிறந்த நாளை கொண்டாட பல்வேறு போட்டிகளை நடத்துவோம் என்று அறிக்கை விட்டார்கள். எதிர் நிலையில் நின்று அரசியல் பேசும் பாமக நிறுவனர் ராமதாஸ்கூட தைலாபுரம் தோட்டத்தில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்கிறார்.  யாரெல்லாம் அம்பேத்கரை நினைக்கிறார்கள், பாருங்கள்!

முற்போக்கு  கட்சிகளாக முன்னிறுத்தி முன்னேறியவர்களுக்கு இன்று தேவைப்படுவது சாதி, மதத்தின் அடிப்படையிலான அரசியல் அதிகாரம். தமது அதிகார நலன்களுக்காக இவர்கள் எதையும் செய்யத் துணிவார்கள். தற்போதைய அரசு தலையில்லாத அரசு, ஊழல் அரசு என்பதையும் இது அகற்றப்பட வேண்டும் என்பதையும் மக்களிடம் கொண்டு சேர்க்கும் போது கடந்த கால அரசுகளின் ஆட்சி பற்றியும் முன்னாள் ஆட்சியாளர்களான அவர்கள் ஆட்சியைப் பிடிக்க எப்படிப்பட்ட வேடங்களை தறித்துக்கொண்டிருக்கிறார்கள் என்பதையும்தான் சொல்ல வேண்டும். இதுவே அவராக இருந்தால் எப்படி இருந்திருக்கும்? அவர் எப்போதும் அவர்தான் என்று நிறுவுவதன் மூலம் அறிவுஜீவிகள் என்று சொல்லிக்கொள்பவர்கள் மீண்டும் ஒரு சோதனையை தமிழக மக்கள் மீது திணிக்கப்பார்க்கிறார்கள். உண்மையில் யார்தான் ஆபத்தானவர்கள்…ஊடகங்களா? அரசியல்வாதிகளா? அறிவுஜீவிகளா?

Advertisements

3 thoughts on “அம்பேத்கரின் 125வது பிறந்த நாளை மிகச் சிறப்பாக கொண்டாடியது யார்?

  1. ஆபத்தானவர்கள் ஊடகங்களே. மீண்டும், மீண்டும் செய்திகளை ஒரு சார்பாகவே பிரசுரித்து மக்கள் மனதை மாற்றுகிறார்கள்.

  2. // கடந்த நாற்பதாண்டுகளாக என்னை வதைத்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் இன்றுவரை என்னை எவ்வளவு மோசமாக சித்தரிக்கிறார்கள் தெரியுமா? அவர்கள் இனியாவது இந்த முட்டாள்தனத்தைக் கைவிட்டு, நேர்மையுடன் சிந்திக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்//
    கை விட்டு விட்டால் இத்தனை நாளும் முட்டாளாய் இருந்தது தெரிந்து விடுமே என நினைக்கிறார்களோ என்னவோ?

  3. மிக்க தைரியத்துடன், யாரையும் விட்டு வைக்காமல், நெற்றியில் அடித்தாற்போல், ஓர் அருமையான பதிவு! கிரேக்க சிங்கம், ராமானுஜர்,பட்டேல், தைலாபுர அஞ்சலி ஆகியவற்றைக் கோர்த்த பாங்கும் வெகு அழகு, வாழ்த்துக்கள்!

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.