குமுதம்-வைரமுத்து-ஜெயகாந்தன்

குமுதம்-வைரமுத்து-ஜெயகாந்தன் சர்ச்சையில் வைரமுத்துவை இந்த அளவுக்கு தூற்ற அவசியமில்லை. காலம்காலமாக ஒரு தொடரை பிரபலமாக்கும் பொருட்டு பிரபலங்களின் பாராட்டை கேட்டு வாங்கிப் போடுவது இதழியலில் இருந்து வருவதுதான். தமிழில் ’அ’ கூட தெரியாத பல நடிகைகள் ஒரு தொடரை பாராட்டி இருப்பார்கள். ஊடக பணிக்குச் சேர்ந்த புதிதில், (2005 ஆக இருக்கலாம்) நடிகை மீனாவின் கையெழுத்தைப் போட்டிருக்கிறேன், ஜெயகாந்தனைப் போல பிரபலங்களும் இதற்கு ஒப்புக்கொள்வார்கள். இந்த முறை இதுபோன்ற பிரபலமாக்கும் உத்தி சர்ச்சையாகி இருக்கிறது. என்னுடைய கேள்வியெல்லாம்…இதற்கு முழுகாரணமும் வைரமுத்து மட்டும்தானா என்பதுதான்!

இதைப் போன்ற நடைமுறைகள் இதழியல் அறத்துக்கு எதிரானவை என்பதில் சந்தேகமில்லை. ஊடக பணிக்குச் சேர்ந்த புதிதில் இதழியல் அறம் குறித்தெல்லாம் தெரிந்து வைத்திருக்கவில்லை.  அறத்தோடு இருக்க வேண்டும் என்றால் எந்த இதழிலும் வேலை பார்க்க முடியாது என்பதும் உண்மை. ஆனாலும் அவரவர் சார்ந்து குறைந்தபட்ச அறத்துடன் நடந்துகொள்ளப் பார்க்கிறோம். சரி, வைரமுத்து விவகாரத்துக்கு வருகிறேன். வைரமுத்து விளம்பரப் பிரியராக, விருதுகளை விலை கொடுத்து வாங்குபவராக இருக்கலாம்.  ‘நானேதான் ஜெயகாந்தனிடன் எழுதிக் கேட்டேன்’ என அவர் சொல்லலாம். ஆனால் ஜெயகாந்தனின் மகன் தீபா, ’அவரால் கையெழுத்துக்கூட போட முடியவில்லை. அதனால் ஏற்கனவே எங்களிடம் இருக்கும் கையெழுத்தின் நகலை பயன்படுத்திக் கொள்கிறோம் என்று சொன்னார்கள்’ என்று குறிப்பிடுகிறார்.  பிரபலங்களின் கையெழுத்து நகலை யார் வைத்திருப்பார்கள்? எனக்குத் தெரிந்து ஊடகங்கள்தான் வைத்திருக்கும்.

படுத்த படுக்கையில் இருக்கும் பிரபலத்தால் கையெழுத்திட முடியாது என்பது தெரிந்தும் தகிடுதத்தங்கள் செய்து இதழில் வெளியிட்டு பிரபலம் தேடிக்கொண்ட குமுதம் தான் இதற்கு முதன்மையான காரணகர்த்தா. குமுதம் மேலுள்ள கரிசனமா அல்லது குமுதத்தின் தேவை தங்களை முன்னிறுத்திக் கொள்ள இப்போதும், எதிர்காலத்திலும் தேவை என்பதாலேயே வைரமுத்து நோக்கியே எல்லா ஏவுகணைகளும் செல்வதை யூகிக்க முடிகிறது. வைரமுத்து மேலிருக்கும் விமர்சனங்களும் இன்னும் சிலரை வைரமுத்துவை மட்டுமே குற்றவாளி ஆக்கி பார்க்க வைக்கிறது.

 

9 thoughts on “குமுதம்-வைரமுத்து-ஜெயகாந்தன்

 1. படுத்த படுக்கையில் இருக்கும் பிரபலத்தால் கையெழுத்திட முடியாது என்பது தெரிந்தும் தகிடுதத்தங்கள் செய்து இதழில் வெளியிட்டு பிரபலம் தேடிக்கொண்டது குமுதம் என்றும் அதற்கு வைரமுத்துவைத் தூற்றுவது தவறு என்றும் உங்களின் பதிவிலிருந்து தெரிந்து கொண்டேன். ஆனால் பிரச்சினை என்னவென்று தெரியவில்லை. குமுதம் வெளியிட்டதற்கு வைரமுத்துவை ஏன் தூற்ற வேண்டும்? எல்லோருமே (நான் உட்பட) குமுதம் வாசித்திருக்க மாட்டார்கள் என்பதால் பிரச்சினை என்ன என்பதை ஓரிரு வரிகளில் சொல்லிவிட்டுக் கட்டுரையைத் தொடர்ந்தீர்கள் என்றால் உங்கள் வாதத்தின் நியாயம் புரிவது எளிதாயிருக்கும் நந்தினி!

  • வைரமுத்து, குமுதம் இதழில் ஒரு முக்கியத்துவம் வாய்ந்த தொடர் எழுதிக் கொண்டிருக்கிறார். அது எத்தகைய முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை வினவு தளத்தில் வெளியான இந்தக் கட்டுரையை படித்து தெரிந்து கொள்ளவும். மன்னிக்கவும் தோழி…நான் குமுதம் படிப்பதில்லை…அந்தத் தொடரையும் படித்ததில்லை. இந்தத் தொடருக்கு விளம்பரம் தேடும் பொருட்டே மேற்படி சர்ச்சைகள் எல்லாம்.

 2. மக்கள் மத்தியில் நன்கு பிரபலமான ஒரு நல்ல கவிஞர் வைரமுத்து. இவர் விளம்பரத்திற்காக ஒரு காரியத்தை செய்தார் என்பதை என்னால் ஏற்றுக் கொள்ள இயலவில்லை.

  // காலம்காலமாக ஒரு தொடரை பிரபலமாக்கும் பொருட்டு பிரபலங்களின் பாராட்டை கேட்டு வாங்கிப் போடுவது இதழியலில் இருந்து வருவதுதான். //

  இலக்கிய உலகில் பத்திரிகைகள் மத்தியில் பிரபலங்களின் கையெழுத்தை அவர்களது அனுமதியோடு மற்றவர்கள் பயன்படுத்திக் கொள்ளும் வழக்கத்தை இப்போதுதான் உங்கள் பதிவின் மூலம் தெரிந்து கொண்டேன். இந்த நடைமுறை தெரியாத ஜெயகாந்தன் மகள் தீபா லட்சுமி, கவிஞர் வைரமுத்து விஷயத்தை பெரிதுபடுத்தி விட்டாரோ என்னவோ? தெரியவில்லை. கவிஞர் வைரமுத்து மவுனம் கலைய வேண்டும்.

 3. சுய விளம்பரத்திற்காக அந்தக் கவிஞர் எதை வேண்டுமானாலும் செய்யக்கூடியவர் என்பதை தமிழகம் நன்கு அறியுமே! எனவே, குமுதம் மட்டுமே இதற்குக் காரணம் என்று சொல்லி, கவிஞரிடம் நல்லபெயர் வாங்க முயற்சிக்க வேண்டுமா என்பது கேள்வி.

  கவிஞர் சொல்லியே இம்மாதிரி நடந்திருக்க வாய்ப்புகள் அதிகம் என்றே தோன்றுகிறது. பொதுவாக மற்ற பத்திரிகைகளைப் பற்றி செய்தி வெளியிடாத ஹிந்து பத்திரிகையே இந்த விஷயத்தில் ஒரு செய்தியை வெளியிட்டுள்ளது என்றால் அது முழுக்க முழுக்க உண்மையான செய்தியே என்று நாம் நம்பவேண்டியுள்ளது. ஏனெனில் வைரமுத்துவைவிட ஹிந்து பத்திரிகைக்கு நம்பகத்தன்மை (credibility) அதிகம் அல்லவா?

  அது சரி, கவிஞர் ஏன் மௌனம் சாதிக்கிறார்? ரஜினியும் கமலும் ஏன் வாய்மூடிக் கிடக்கிறார்கள்?

  • கவிஞர் எப்படிப்பட்டவர் என்பதை நான் நன்கு அறிவேன். அவரிடமோ, பிற யாரிடமோ நல்ல பெயர் வாங்க வேண்டும் என்கிற அவசியத்தில் நான் இல்லை. 🙂
   கவிஞர் சொல்லி நடந்திருந்தாலும் முடிவு எடுக்க வேண்டிய இடத்தில் இருப்பது பத்திரிகைதான். தி இந்து இதுபோல பத்திரிகை, ஊடகம் தொடர்பான செய்திகளை பெரும்பாலும் வெளியிட்டுக்கொண்டுதான் இருக்கிறது. இந்தச் செய்தியைப் பொறுத்தவரை, வைரமுத்து சொன்னதைத்தான் பிரசுரித்திருக்கிறது. வைரமுத்து, ஜெயகாந்தனின் கருத்தை வாங்கினேன் என்று சொன்னாலும் அதில் கையொப்பமிட முடியாத சூழலில் ஏற்கனவே பல காலத்துக்கு முன் போட்ட கையெழுத்தை பயன்படுத்தியதில் குமுதத்தின் பங்கு இல்லாமல் அது எப்படி சாத்தியமாகியிருக்கும் என்பதை சிந்தியுங்கள்…
   ஆமாம்… இதற்கெல்லாம் கமலும் ரஜினியும் கருத்து சொல்வார்களா?

 4. வணக்கம் நண்ப்ரே,
  உங்கள் பக்கத்தை என்னால் பார்க்க முடியவில்லை. ஆவன செய்யவும், நன்றி

 5. சகோதரி அவர்களுக்கு, தங்களது இந்த பதிவினை ”கவிஞர் வைரமுத்து – மவுனம் கலைய வேண்டும்” என்ற எனது பதிவினில் மேற்கோளாக காட்டியுள்ளேன். நன்றி.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.